கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

முதல் கட்டம்: ‘இந்தியா’ அணிக்கே ஆதாயம்

யோகேந்திர யாதவ் ஸ்ரேயஸ் சர்தேசாய் ராகுல் சாஸ்த்ரி
24 Apr 2024, 5:00 am
0

நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் முதல் கட்டத்தில், ‘இந்தியா’ அணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கவிருக்கிறது; மொத்தமுள்ள ஏழு கட்டங்களில் முதலாவது கட்டம்தான் பெரியது – 102 தொகுதிகள் – அதாவது மொத்த மக்களவைத் தொகுதிகளில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு. இந்தக் கட்டத்தில் ஆளுங்கூட்டணியைவிட அதிக தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடிப்பதற்கான ஓட்டத்தில், வேகம் பெறக்கூடிய வாய்ப்பு ‘இந்தியா’ கூட்டணிக்கு வாய்த்திருக்கிறது; அதேசமயம், கடுமையான சில சவால்களை அது திறமையாக எதிர்கொண்டால்தான், ஆதாயம் கிடைக்கும்.

மூன்று அம்சங்கள்

மூன்று அம்சங்களால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதலாவதாக, 2019 பொதுத் தேர்தலின் முதல் கட்டத்தின்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் சமநிலையில் இருந்தன. இப்போதுள்ள அரசியல் அணிகள் அடிப்படையில், கடந்த முறை இரு அணிகளும் தலா 49 இடங்களில் வென்றன. அதற்கு முக்கியக் காரணம் தமிழ்நாட்டில் மட்டும் ‘இந்தியா’ கூட்டணி 39 இடங்களிலும் வென்றது.

தேர்தலின் இதர கட்டங்களில் எல்லாம் பாஜக கூட்டணியே அதிக தொகுதிகளில் வென்றதைப் போல அல்லாமல், இந்த முறை முதல் கட்டத்திலேயே எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு சாதகமான நிலை தோன்றியிருக்கிறது.

2019 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் அணிகளில் ஏற்பட்ட மாற்றம், சில சட்டப்பேரவைகளுக்கு நடந்த பொதுத் தேர்தல்களில் கிடைத்த முடிவுகள் அடிப்படையில் பார்த்தால், ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு கூடியிருக்கிறது. மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றிகளை அப்படியே மக்களவைத் தொகுதிகளில் பொருத்திப் பார்த்தால், இது எளிதில் புரியும்.

‘இந்தியா’ கூட்டணி 55 மக்களவைத் தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது, பாஜக கூட்டணிக்கு 42 இடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும். தமிழ்நாட்டிலும் உத்தர பிரதேசத்திலும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுக்குச் சில பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும், ராஜஸ்தானில் 9, மத்திய பிரதேசத்தில் 2 தொகுதிகளில் கூடுதலாக வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தொகுதிகளைத் தக்கவைக்குமா பாஜக? 

சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் முடிவை ஒட்டிய புள்ளி விவரச் சாத்தியக்கூறாக மட்டும் இதை நான் கூறவில்லை, அரசியல் அடிப்படையிலான வெற்றி வாய்ப்புகளைக் கணக்கிட்டே இதைக் கூறுகிறேன். ராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஜாட்டுகள், யாதவர்கள், குஜ்ஜார்கள், மீனா என்ற வேளாண் சமூகங்கள் வாழ்கின்றன. ஒன்றிய அரசுக்கு எதிரான விவசாயப் போராட்டங்களில் இவர்கள் அனைவரும் முழு மனதாக ஈடுபட்டனர்.

இவர்கள் மட்டுமின்றி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினரும் ராஷ்ட்ரீய லோக்தந்த்ரிக் கட்சியினரும்கூட விவசாயிகளுக்கு ஆதரவாகக் களம் கண்டனர். எனவே, இவர்கள் அனைவரும் இணைந்து இத்தேர்தலை எதிர்கொள்வதால் பாஜகவுக்கு முன்பு கிடைத்த தொகுதிகள் குறையும் என்பதுடன், இந்த இழப்பு இந்தத் தேர்தல் வாக்கெடுப்பின் இரண்டாவது கட்டத்திலும் தொடரும்.

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல் கட்டத்தில் வடமேற்கில் உள்ள 8 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு முஸ்லிம் வாக்காளர்கள் மிக அதிகம். மாநிலத்தின் பிற பகுதிகளைவிட சமாஜ்வாதி கட்சிக்கு இங்கு ஆதரவு அதிகம். இந்தப் பிரதேசம் விவசாயிகளின் போராட்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

மத்திய பிரதேசத்தின் மகா கோசலப் பகுதி, மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியைப் போலவே காங்கிரஸுக்கு இப்போதும் கோட்டையாகத் திகழும் பிரதேசமாகும். நாட்டின் வடக்கு, மேற்கு மாநிலங்களில் பாஜக இனியும் அதிக வெற்றிபெற முடியாத வகையில், காங்கிரஸ் கட்சியால் இப்பகுதிகளில் இம்முறை தடுத்து நிறுத்திவிட முடியும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இந்தத் தேர்தல் ஏன் முக்கியமானது?

ஸ்வாமிநாத் ஈஸ்வர் 19 Apr 2024

வெற்றி எளிதா?

முதல் கட்டத்தில் இடம்பெற்றுள்ள மேலை அசாம் தொகுதிகளும் வடக்கு வங்காளத்தின் 3 தொகுதிகளும் கடந்த தேர்தலில் பாஜகவால் முழுதாக வெல்லப்பட்டன, இந்த முறை அப்படி வெற்றி கிடைப்பது எளிதல்ல. பாஜகவுக்குச் சரியான போட்டியைத் தர எதிர்க்கட்சிகள் விரும்பினால் இந்தத் தொகுதிகள் மீது அவை கவனம் செலுத்துவது அவசியம்.

வடகிழக்கு மாநிலங்களில் (திரிபுராவில் ஒன்று, மணிப்பூரில் - இரண்டில் ஒன்று) உள்ள எல்லா தொகுதிகளிலும் கடந்த முறையைப் போலவே பாஜக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவே வாய்ப்புகள் உள்ளன; மணிப்பூரில் ஒரு தொகுதியில் இரண்டாவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. மணிப்பூரில் மிகப் பெரிய கலவரம் நடந்த பிறகும்கூட பாஜக கூட்டணிக்கு ஆதரவு நீடிக்கும் என்றே தெரிகிறது.

முதல் கட்டத்தில் தேர்தலைச் சந்திக்கும் தொகுதிகளில் பாதிக்கும் மேல், பாஜக கூட்டணி சார்பில் புதிய வேட்பாளர்கள்தான் நிறுத்தப்பட்டுள்ளனர். ‘இந்தியா’ கூட்டணி தனது வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்த இது நல்ல வாய்ப்பு. ராஜஸ்தானில் முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 11 மக்களவைத் தொகுதிகளில் 9இல் பழைய பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது. அவர்களில் பலர் அதிருப்தியில் இருக்கின்றனர், சிலர் பாஜகவுக்கு எதிராகப் போட்டியிடும் முடிவையும் எடுத்துள்ளனர். இது ‘இந்தியா’ கூட்டணிக்கு வலு சேர்க்கக்கூடும். ‘இந்தியா’ கூட்டணி கடந்த முறை வென்ற 49 உறுப்பினர்களில் 28 பேரை, மீண்டும் களத்தில் இறக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் 38 எம்.பி.க்களில் 18 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.

மொத்த முடிவு: வட இந்திய மாநிலங்களில் 2019 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றிகளைப் பாதுகாத்து, மக்களவைத் தொகுதிகளுக்கு அப்படியே விரிவுபடுத்துவதன் மூலமும் தென்னிந்திய மாநிலங்களில் 2019இல் வென்ற தொகுதிகளை அப்படியே தக்கவைப்பதன் மூலமும் முதல் கட்டத்திலேயே பாஜக கூட்டணியைக் காட்டிலும் 10 முதல் 15 மக்களவைத் தொகுதிகளை ‘இந்தியா’ கூட்டணியால் வென்றுவிட முடியும்.  

அரசியல் களத்தில் வெற்றி வாய்ப்புகள் என்பவை தாம்பாளத்தில் வைத்து எவராலும் சுலபமாகத் தரப்படுபவை அல்ல. அதுவும் நரேந்திர மோடி – அமித் ஷா போன்ற கொடாக்கண்டர்கள் எதிரணியில் இருக்கும்போது அவ்வளவு எளிதில் வெற்றிபெறும்படி எதிராளிகளை விட்டுவிடவும் மாட்டார்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

1977: மீண்டும் நினைவுக்கு வருகிறது

ராமச்சந்திர குஹா 18 Apr 2024

‘இந்தியா’ முன்னுள்ள சவால்கள்

தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணி வென்ற 39 தொகுதிகளையும் அப்படியே தக்கவைப்பது முதல் சவால். ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்தவர்களில் பலருக்கு வாய்ப்பை மறுத்திருப்பதும், கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதிகளை மாற்றிப் பகிர்ந்தளித்திருப்பதும் இதை உணர்ந்துதான் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிரான கட்சிகள் தனித்தனியாக பிரிந்தும் வலிமை இழந்தும் சிதறிவிட்டன.

அஇஅதிமுகவின் கூட்டணி பிரிந்துவிட்டது, பாஜக கூட்டணியில் அஇஅதிமுக இல்லை, பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்திருக்கிறது. பாஜகவும் பாமகவும் சேர்ந்திருந்தாலும் ஒன்றின் ஆதரவு வாக்குகள் இன்னொன்றுக்கு அப்படியே முழுதாக மாறுவதில்லை. தினகரனும் ஓ.பன்னீர் செல்வமும் சுயேச்சைகளைப் போலத்தான் அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

பாஜக அணிக்கு கிடைக்கும் வாக்குகள் எண்ணிக்கை கடந்த தேர்தல்களைவிட சற்றே அதிகரிக்கும். அது, அதன் நீண்ட கால அரசியல் பயணத்துக்கு உதவியாக இருக்குமே தவிர இந்தத் தேர்தலில் அதனால் சில தொகுதிகளைக்கூட வெல்ல முடியாது. (நாம் தமிழர் கட்சி நீங்கலாக) தமிழக களத்தில் ‘இந்தியா’ கூட்டணி, பாஜக கூட்டணி, அஇஅதிமுக கூட்டணிதான் முக்கியமானவை.

கடந்த இரண்டரை ஆண்டுக்கால ஆட்சியால் திமுக மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு அதனால் வாக்குகள் குறையக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வாதத்துக்கு ஒப்புக்கொண்டாலும், திமுகவுக்கு எதிரான வாக்குகள் மூன்று அணிகளுக்குப் பிரிந்து செல்வதால், திமுக அணி தோற்காது.

தமிழ்நாட்டைத் தவிர ‘இந்தியா’ கூட்டணிக்கு உண்மையான சவால் எங்கே என்று கேட்டால், பாஜகவை காங்கிரஸ் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்தாக வேண்டிய 45 மக்களவைத் தொகுதிகளில்தான்; கடந்த முறையும் இவற்றில் 36 தொகுதிகளில் இரண்டு கட்சிகள் மட்டுமே நேருக்கு நேர் மோதின. அவற்றில் பாஜக 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வென்றன.

கடந்த முறையைவிட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்றால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் காங்கிரஸ்காரர்கள் முழு வேகத்தில் தேர்தல் வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

‘இந்தியா’ கூட்டணிக்கான கட்டாயம்

அது மட்டுமின்றி, கடந்த பொதுத் தேர்தலில் வென்ற அனைத்துத் தொகுதிகளையும் மீண்டும் வென்றாக வேண்டிய கட்டாயமும் ‘இந்தியா’ அணிக்கு இருக்கிறது. அதில் பல தொகுதிகள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் – அதாவது 5% வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று – வென்றவை. அப்படிக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இழந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைப் பறிக்க, பாஜக கூட்டணி தனி உத்தியே வகுத்திருக்கிறது. பாஜகவும் அதேபோல 5% வாக்கு வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றிபெற்ற தொகுதிகள் 5 உள்ளன. அவற்றில் வாக்கு வித்தியாசத்தை அதிகப்படுத்த பாஜக கடும் முயற்சிகளை மேற்கொள்ளும்.

கடந்த முறையைவிட அதிக தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கு ‘இந்தியா’ கூட்டணிக்கு உண்மையில் எளிதான செயல் அல்ல; காரணம், கூட்டணிக்கு வெளியிலிருந்து மட்டுமல்லாமல் கூட்டணிக்கு உள்ளிருந்தும் பலத்த போட்டிகளை அது எதிர்கொண்டிருக்கிறது. 14 தொகுதிகளில், ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளே ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிடுகின்றன. மேற்கு வங்கத்தின் வடக்கில் உள்ள 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் - இடதுசாரி கட்சிகள் இணைந்து திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராகவே தங்களுடைய வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

அசாமில் 3 தொகுதிகளில் திரிணமூல் – ஆஆக கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணிக்குப் போட்டியாகத் தங்களுடைய வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. லட்சத்தீவில் உள்ள ஒரேயொரு தொகுதியில், பதவியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) உறுப்பினருக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது!

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

சமஸ் | Samas 16 Apr 2024

களம் எப்படி இருக்கிறது?

‘இந்தியா’ – பாஜக கூட்டணிகளில் சேராத சிறிய கட்சிகள் பலவும்கூட களத்தில் இருக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி 86 தொகுதிகளில் போட்டியிடுகிறது, இந்த எண்ணிக்கை காங்கிரஸ், பாஜக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையைவிட அதிகம்!

தேர்தலுக்குத் தேர்தல், பகுஜன் சமாஜை ஆதரிக்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது, ஆனால் அந்தக் கட்சி பிற கட்சிகளுக்கு விழக்கூடிய வாக்குகளில் சிலவற்றைத் தங்கள் கட்சிக்குத் திருப்புவதால், பாஜக அல்லாத பிற கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளைப் பறிப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அதிலும் குறிப்பாக உத்தர பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணிக்கு விழ வேண்டிய வாக்குகள்தான் இப்படித் சிதறும்.

பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான ‘வனசித் பகுஜன் அகாடி’ 2019 தேர்தலில் இருந்த அளவுக்கு அரசியல் வலிமையுடன் இப்போது இல்லை என்றாலும், விதர்பா பிரதேசத்தில் ‘இந்தியா’ கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளைக் கணிசமாக அது பிரித்துவிடும். பாஜகவுடன் சேருவது என்ற முடிவை ராஷ்ட்ரீய லோக் தள் எடுத்ததை, அதன் பிரதான ஆதரவாளர்களான ஜாட்டுகளும், முஸ்லிம்களும் விரும்பவில்லை; ஆனாலும் ஜெயந்த் சிங்கின் இந்த முடிவு, ‘இந்தியா’ கூட்டணிக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளைத்தான் நிச்சயம் குறைக்கும்.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய பிறகும் பெரிய உற்சாகக் கொப்பளிப்போ, வண்ணமயமான அணிவகுத்தல்களோ இல்லாமல் ஒருவித மோனத்தில் ஆழ்ந்திருக்கிறது களம். தேர்தல் களம் சூடேறவில்லை. இதனால் வாக்குப்பதிவு அளவு குறைந்துவிடுமா? 2019 தேர்தலின்போது 102 தொகுதிகளில் முதல் கட்டத்தில் சராசரியாக 69.9%தான் வாக்குகள் பதிவாயின. தேசிய சராசரியைவிட 2% அதிகம்.

இந்த முறை, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சராசரிக்கும் குறைவாக வாக்குகள் பதிவானால் அது அடுத்த கட்டங்களில் எதிரொலிக்க வாய்ப்பிருக்கிறது. வாக்களிப்பதில் மக்களுக்குள்ள ஆர்வம் எப்படி என்பதை முதல் கட்டமே காட்டிவிடும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தத் தேர்தல் ஏன் முக்கியமானது?
1977: மீண்டும் நினைவுக்கு வருகிறது
மீண்டும் மோடி: மக்களிடையே அச்சம், விரக்தி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
மோடி ஏன் எம்ஜிஆர் புகழ் பாடுகிறார்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

6






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உற்றுநோக்க ஒரு செய்திஅரசியல் கட்சிகளின் நிலைபுத்தமதம்நயன்தாரா: இந்திய மனச்சாட்சிஊர்வலம்நல்ல பெண்வாக்குக் குவிப்புராணுவத் தலைமைத் தளபதிashok vardhan shetty ias interviewதொழிற்கல்விபாரத ஒற்றுமை யாத்திரைரீவைண்ட்ஒரு முன்னோடி முயற்சிஜெயமோகன் அருஞ்சொல்ரயில்வே அமைச்சர்தேசியக் கொடிராஜராஜ சோழன்அண்ணாமலை அதிரடிஜெயமோகன் பேட்டிசிறிய மாநிலம்வறட்சிநீதிபதி கே.சந்துருநிதியமைச்சரிடம் நாடு என்ன எதிர்பார்க்கிறது?வினோத் காப்ரிஸ்காண்டினேவியன்பிரிட்டிஷ் நாடாளுமன்றம்மாநிலப் பாடத்திட்டம் ராசேந்திரன்: உயர்த்திப் பிடிக்கவேண்டிய உயிர்க்கொடவிருதுதே. தாமஸ் பிராங்கோ

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!