கட்டுரை, அரசியல், வரலாறு, கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

1977: மீண்டும் நினைவுக்கு வருகிறது

ராமச்சந்திர குஹா
18 Apr 2024, 5:00 am
1

2024 பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஆயத்தமாகிவிட்டார்கள் இந்தியர்கள். இதுவரை நடந்துள்ள 17 பொதுத் தேர்தல்களில் இரண்டு மிகவும் முக்கியமானவை. அதில் ஒன்று 1952இல் நடந்த முதலாவது பொதுத் தேர்தல்.

உலக அரங்கில் அன்றைக்கு, ‘இந்தியர்கள் ஏழைகள், மதம் – இனம் -மொழி - சமூக அந்தஸ்து - சாதி போன்றவற்றால் மிகவும் வேறுபட்டவர்கள், கல்வியறிவு அதிகம் இல்லாததால் சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் இல்லாதவர்கள்’ என்றே ‘அரசியல் நோக்கர்கள்’ ஏளனமாகக் கருதினர். ‘எழுத்தறிவு இல்லாதவர்கள் அதிகம் வாழும் நாட்டில், அனைவருக்கும் வாக்குரிமை என்பது சற்றே கிறுக்குத்தனமாகத்தான் இருக்கிறது’ என்று நாட்டுடன் தனது பகுதியைச் சேர்த்துக்கொள்ள கடைசி நேரத்தில் சம்மதம் தெரிவித்த ஒரு ‘மகாராஜா’ இந்தியாவுக்கு அப்போது வந்த அமெரிக்க தம்பதியிடம் அங்கலாய்த்தார்.

மதறாஸ் மாநகரைச் சேர்ந்த ஒரு பத்திரிகை ஆசிரியர், பெரிய புகார்ப் பட்டியலே வாசித்தார்; “முதல் முறையாக கோடிக்கணக்கான மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள், அவர்களில் பலருக்கும் வாக்கு என்றால் என்னவென்றே தெரியாது, ஏன் வாக்களிக்க வேண்டும் என்றும் தெரியாது, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதும் தெரியாது, இந்திய வரலாற்றில் இது மிகப் பெரிய சூதாட்டம் என்று அழைக்கப்படுவதில் வியப்பேதும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். “வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது பெருந்தோல்வி என்பதைப் பண்டிட் நேரு தனது ஆட்சி மூலம் உணரவைப்பார்” என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ கேலியாக சுட்டிக்காட்டியது.

இருந்தும் அந்தச் சூதாட்டம் செயல்பட்டது. வெவ்வேறு விதமான சித்தாந்தங்கள், நோக்கங்கள் கொண்ட அரசியல் கட்சிகளும் தனிமனிதர்களும் தேர்தலில் போட்டியிட்டனர்; வயது வந்த ஆண்களும் பெண்களும் அவற்றைப் புரிந்துகொண்டு இன்று வரை வாக்களித்துவருகின்றனர். முதலாவது பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகத் திகழ்கிறது. அதற்குப் பிறகு 1957, 1962, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் – 1952இல் ஏற்பட்ட பயன்களை மேலும் வலுப்படுத்தின.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நெருக்கடிநிலைக்குப் பிறகு…

இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது பொதுத் தேர்தல், 1977 மார்ச் மாதம் நடந்தது. இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் மக்களுடைய அடிப்படை உரிமைகளையும் முடக்கிவைத்து ‘நெருக்கடிநிலை’யை 1975 ஜூனில் பிரதமர் இந்திரா காந்தி பிறப்பித்த பிறகு இனி இந்தியாவில் வெளிப்படையான, அரசியல் கட்சிகள் போட்டியிடக்கூடிய தேர்தல் என்பதே நடக்காது, சர்வாதிகார ஆட்சி நடக்கும் எண்ணற்ற ஆசிய – ஆப்பிரிக்க நாடுகள் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துவிட்டது என்றே அனைவராலும் முடிவு கட்டப்பட்டது.

1976ஆம் ஆண்டின் இரண்டாவது பாதி முழுக்க இந்திய வீதிகளில் அரசியல் செயல்பாடுகள் ஏதுமின்றி அமைதியாகவே இருந்தன என்பதை என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தே என்னால் சொல்ல முடியும். இந்திரா காந்தியின் நெருக்கடிநிலை ஆட்சிக்கு அப்போது பெரிய மிரட்டலோ, சவாலோ எங்கிருந்தும் ஏற்படவில்லை; நெருக்கடிநிலையை விலக்க வேண்டிய அவசியமோ, புதிதாக நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட வேண்டிய காரணமோகூட அப்போது ஏதுமில்லை; இருந்தாலும் பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார், நெருக்கடிநிலை அறிவிப்பைத் திரும்பப் பெற்றார் இந்திரா காந்தி.

மூன்று முக்கிய அம்சங்கள்

1977 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக மூன்று அம்சங்களை வரலாற்றாசிரியர்கள் முக்கியத்துவம் தந்து பேசுவார்கள். முதலாவது, அறிவித்தபடி தேர்தல் நடந்தது. இரண்டாவது, தேர்தல் முடிவுகள் அரசியல் கணிப்பாளர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது; எல்லோரும் இந்திரா காந்திதான் பெரும்பான்மை வலுவுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்றே நினைத்திருந்தனர்.

இந்திரா காந்தி மட்டுமே அப்போது மக்களுக்கு நன்கு அறிமுகமான, செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக நாட்டில் இருந்தார். 1971இல் நடந்த வங்கதேச விடுதலைப் போரில் இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி காரணமாக அவர் மிகவும் ஆற்றல் மிக்கத் தலைவராகவே மக்களால் மதிக்கப்பட்டார்.

அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி அப்போது அமைப்புரீதியாக மிகவும் பலமாக, நிதிவளத்துக்கு சிறிதும் குறைவில்லாமல் இருந்தது; காரணம் பெரும்பாலான தொழிலதிபர்கள் அவருடைய நெருக்கடிநிலை ஆட்சிக்கு ஆதரவாகவே இருந்தனர். அதேவேளையில் எதிர்க்கட்சிகள் தேர்தல் செலவுக்குக்கூட பணமில்லாமலும், நெல்லிக்காய் மூட்டைகளைப் போல சிதறியும் கிடந்தன. அதன் தலைவர்களும் தொண்டர்களும் நெருக்கடிநிலை அமலில் இருந்த காலத்தில் நீண்ட காலமாகச் சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வளவு இருந்தும், தேர்தல் கணிப்புகள் தோல்வியுறும் வகையில் காங்கிரஸ் கட்சி தோற்றது, பெரும்பான்மைக்குத் தேவைப்பட்ட இடங்கள் அதற்குக் கிடைக்கவில்லை. பிரதமராக இருந்த இந்திரா காந்தியே தனது தொகுதியில் தோற்றார். சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக ‘காங்கிரஸ் அல்லாத’ இன்னொரு அரசியல் கட்சி புதுதில்லியில் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

சமஸ் | Samas 16 Apr 2024

கூட்டாட்சிக்கு எது நல்லது?

இவ்வாறாக, பொதுத் தேர்தல் நடந்தது – காங்கிரஸ் ஆட்சியை இழந்தது – ஒரே கட்சி ஆளும் நாடு இந்தியா என்ற நிலை மாறியது என்ற குறிப்பிடத்தக்க மூன்று அம்சங்களுடன் நாலாவதாக, காங்கிரஸின் ஆதிக்கத்தை எதிர்க்கட்சிகளின் கூட்டணி – ஒரே கட்சியாக இணைந்ததன் மூலம் – முடிவுக்குக் கொண்டுவந்தன என்பதும் சேர்ந்துகொண்டது.

ஸ்தாபன காங்கிரஸ், பாரதிய ஜன சங்கம், பாரதிய லோகதளம், சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி (பாபு ஜெகஜீவன்ராமின் ஜனநாயகத்துக்கான காங்கிரஸும்கூட) இணைந்து ‘ஜனதா’ என்ற ஒரே பெயரில், ஒரே கட்சியாகத் தேர்தலில் போட்டியிட்டு வென்றன. வெவ்வேறு அரசியல் கொள்கைகள், வழிமுறைகளைப் பின்பற்றும் கட்சிகளாக இருந்தாலும் சர்வாதிகாரத்தை முறியடிக்கவும் ஜனநாயகத்தை மீட்கவும் அந்த நான்கு பெரிய கட்சிகளும் தங்களைக் கரைத்துக்கொண்டு ஒரே அரசியல் இயக்கமாக உருவெடுத்தன.

1977 தொடங்கி 2014 வரையிலும் எந்தத் தனிக் கட்சியும் அல்லது கூட்டணியும் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருந்தது இல்லை. அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவது இந்திய ஜனநாயகத்துக்கும் நல்லது. ஒரே கட்சியின் ஆதிக்கத்துக்கு முடிவு ஏற்பட்டுவிட்டதால் பத்திரிகைகள் அச்சமின்றி செயல்பட்டன, மக்களுடைய அமைப்புகளும் சுதந்திரமாகச் செயல்பட்டன, நீதித் துறை தனது இருப்பை வலிமையான தீர்ப்புகள் மூலம் உறுதிப்படுத்தியது.

எப்போதும் போட்டிக்குத் தயாராக பல கட்சிகள் களத்தில் இருப்பதால் - இந்தியாவின் கூட்டாட்சி முறையும் ஆரோக்கியமானது; மாநிலங்கள் தாங்கள் விரும்பிய பொருளாதார, சமூக நலத் திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.

இப்போது நடைபெறும் பொதுத் தேர்தல் இந்தப் போக்கை அப்படியே மாற்றிவிடுமா? பெரும்பாலான தேர்தல் கணிப்பாளர்கள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். நரேந்திர மோடியும் பாஜகவும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவது நிச்சயம் என்கிறார்கள், அப்படியானால் பிறகு என்ன நடக்கும்?

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

சர்வாதிகார மனப்பான்மை

மோடியும் பாஜகவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இனிமேல் பொதுத் தேர்தலே நடக்காது என்று அரசியல் விமர்சகர் பரகால பிரபாகர் கூறியதாகப் பத்திரிகைகளில் பார்த்தேன்.

தனக்கு முன்னால் பிரதமராக இருந்த இந்திரா காந்தியைப் போல, மோடியிடமும் சர்வாதிகார மனப்பாங்கை நானும் பார்க்கிறேன்; அரசியல் அரங்கை தான் மட்டுமே ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஆவலும் அவரிடம் தெரிகிறது. இந்திரா காந்தி காலத்துக்கும் நரேந்திர மோடி காலத்துக்கும் அரசியல் சூழலில் முக்கியமான ஒரு மாற்றம் இருக்கிறது; 1977இல் தமிழ்நாட்டைத் தவிர எல்லா மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாக காங்கிரஸ்தான் இருந்தது (தமிழ்நாட்டிலும் முதல்வராக இருந்தவர் புதுதில்லிக்கு மரியாதை தருபவராகத்தான் இருந்தார்), 2024இல் தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இல்லை, நாட்டின் கிழக்கிலும் வடக்கிலும்கூட முக்கியமான மாநிலங்களில்கூட அதிகாரத்தில் இல்லை.

1975 முதல் 1977 வரை பேசக்கூட முடியாதபடிக்கு இந்திரா காந்தியாலும் காங்கிரஸாலும் எதிர்க்கட்சிகளை அடக்க முடிந்தது, மோடியாலும் பாஜகவாலும் அதை இப்போது நிகழ்த்த முடியாது; மக்களவையில் 370 இடங்களை வென்றுவிட வேண்டும் என்கிற அவர்களுடைய கனவு நனவானால்கூட இது சாத்தியமில்லை. தமிழ்நாடு, கேரளம், வங்கம், தெலங்கானா போன்ற பெரிய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று அரசியல் கட்சிகளின் ஆட்சிதான் நடக்கிறது.

மோடியும் அமித் ஷாவும் அவற்றை என்ன செய்துவிட முடியும்? அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவை பொறுப்பில்லாமல் பயன்படுத்திவிட முடியுமா? அந்த அரசுகள் பெரும்பான்மை வலிமையை இழக்கும் வகையில் அக்கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களில் பலரை விலைக்கு வாங்கிவிட முடியுமா? இரண்டையுமே செய்துவிட அவர்களுக்கு ஆசை இருக்கத்தான் செய்யும்; ஆனால், மோடியின் தலைமையையோ, பாஜகவின் அதிகாரத்தையோ விரும்பாத கோடிக்கணக்கான மக்கள் அவற்றைக் கடுமையாக நிச்சயம் எதிர்ப்பார்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ் | Samas 29 Mar 2024

சிறுபான்மையினரின் நிலை

பாஜகவின் வல்லாதிக்கம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் பரவிவிடவில்லை என்பதால், நெருக்கடிநிலை காலத்தில் இருந்ததைப் போல முழு அளவு சர்வாதிகார ஆட்சிக்கு இப்போது வாய்ப்பில்லை. இதனால் தேவையின்றி பதற்றப்பட வேண்டியதில்லையே தவிர – அப்படி நடக்காது என்று சோம்பலடைந்து செயலற்றுவிடவும் கூடாது. காரணம், பாஜக என்பது மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும், வெறுப்புணர்வு மிக்க இந்துத்துவக் கொள்கையைக் கொண்டுவருகிறது.

நரேந்திர மோடி பிரதமராக இருந்த பத்தாண்டுகளில் மதச் சிறுபான்மையினர் - குறிப்பாக முஸ்லிம்கள் - இந்திய அரசியலில் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். அன்றாட வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் வீதிகளில், சந்தைகளில், பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளில், அரசு அலுவலகங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து பாரபட்சமாகவே நடத்தப்படுகின்றனர்.

பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் முஸ்லிம்களைச் சீண்டி, ஏளனப்படுத்துகின்றனர். அவர்களுடைய செயல்களை பாஜக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் அப்படியே பெரிதாக்குகின்றனர். பள்ளிக்கூட பாடப் புத்தகங்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் மீது வெறுப்பை வளர்க்கும் வகையில் திருத்தி எழுதப்படுகின்றன.

முஸ்லிம்களைக் களங்கப்படுத்துவது தொடரும், ஏன் மேலும் தீவிரமாகக்கூட மாறும் - மோடியும் பாஜகவும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால்.

மூன்றாவது முறையாக பாஜகவுக்கு எளிதாக பெரும்பான்மை வலு கிடைத்துவிட்டால் ஊடகங்கள் மீது பல்வேறு வகையிலும் நெருக்குதல்களை ஏற்படுத்தவும், அரசு ஊழியர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், நீதித் துறையைக் கட்டுக்குள் வைக்கவும், பொது ஒழுங்காற்று அமைப்புகளைத் தங்கள் சொற்படி நடக்க வைக்கவும் மோடிக்கும் அவருடைய கட்சிக்கும் துணிவு மிகுந்துவிடும்; ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் ஆகியவற்றில் இந்துத்துவப் பிரச்சாரம் அதிகரிக்கும், இந்தியக் கூட்டமைப்பின் வலிமை மேலும் குறைக்கப்படும்.

மக்கள்தொகைக்கு ஏற்ப மக்களவையில் மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம் மாற்றியமைக்கப்படும், பாஜக வலுவாக இருக்கும் வட இந்திய மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தரப்பட்டு, பாஜக வலு குறைவாக இருக்கும் தென்னிந்தியா அதற்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி மாற்றப்படும். இந்த அடக்குமுறைகளை எல்லாம் தென்னிந்தியா அப்படியே பணிந்து ஏற்றுக்கொண்டுவிடாது, ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோடியும் பாஜகவும் தங்களுடைய திட்டங்களை ஒவ்வொன்றாக அமல்படுத்துவார்கள்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மோடி ஏன் எம்ஜிஆர் புகழ் பாடுகிறார்?

சமஸ் | Samas 13 Apr 2024

ஏன் இது முக்கியமான தேர்தல்?

இந்தியாவை ‘50-50’ ஜனநாயகம் என்று குறிப்பிட்டு 2007இல் ஒரு புத்தகம் எழுதினேன். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த பதிப்பில் அதே புத்தகத்தில் இந்தியா ‘30-70’ ஜனநாயகம் என்று ஜனநாயகம் அரிக்கப்படுவதைப் பதிவிட்டேன். மூன்றாவது முறையாக மோடியும் பாஜகவும் வென்றுவிட்டால், இந்த வீழ்ச்சி மேலும் அதிகமாகிவிடும்; நம்முடைய சமூக இழையும், பொருளாதார முன்னேற்றமும், பிறக்கப்போகும் நம்முடைய எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்க்கையும் பலமான பாதிப்புகளையே சந்திக்கும்.

இந்திரா காந்தி 1970களில் சர்வாதிகாரத்துடன் தனது குடும்ப ஆதிக்கத்தைப் பிணைத்தார்; நரேந்திர மோடி இப்போது சர்வாதிகாரத்துடன் இந்துமத பேரினவாதத்தை பிணைக்கிறார். குடும்பக் கட்சிகளின் ஆட்சி மோசமானதுதான் என்றாலும் எண்ணிலடங்காத சங்கப் பரிவாரங்களின் ஆட்சி அதைவிட மோசமானது; நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் பௌத்த பேரினவாதமும், இஸ்லாமியப் பேரினவாதமும் தலைதூக்கிய பிறகு இதைத்தான் உணர்த்துகின்றன. இந்து பேரினவாதம் இவற்றிலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்று நம்புவதற்குக் காரணம் ஏதுமில்லை.

சர்வாதிகாரம் என்பது மனித உணர்வுகளை நசுக்குகிறது, பேரினவாதம் மக்களுடைய இதயங்களையும் மனங்களையும் நச்சுப்படுத்துகிறது. அது விதைக்கும் வெறுப்பும் மதவெறியும் அரசியலில் புற்றுநோய் போல வேகமாகப் பரவுகிறது, தனிநபர்கள் மற்றும் மனித அமைப்புகளின் நாகரிகம், கண்ணியம், கருணை, மனிதாபிமானம் என்று அனைத்தையுமே பறித்துவிடுகிறது. எனவேதான், மதப் பேரினவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோருகிறோம், அதற்கான ஜனநாயக வழிமுறைகள் இப்போதும் நாம் பயன்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன. எனவேதான், 1977க்குப் பிறகு இது ‘முக்கியமான பொதுத் தேர்தல்’ என்கிறேன்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மீண்டும் மோடி: மக்களிடையே அச்சம், விரக்தி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
மோடி ஏன் எம்ஜிஆர் புகழ் பாடுகிறார்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

8






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Bala Bala   29 days ago

கருப்பன் எப்போதும் போல மறுபடி புளுக ஆரம்பிச்சுட்டான். இந்துக்களை மொத்தமாக ஒழித்து மிஷ நரிகளுக்கு வழி விடும் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டான். மீண்டும் அவரே! முடிந்தால் தோற்கடியுங்கள்!

Reply 2 3

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பேட்ரிக் ஒலிவெல்இந்திய வம்சாவழிஆட்டோமகாகாசம்இந்திய ரிசர்வ் வங்கி‘ஈ-தினா’ சர்வேபொறியாளர் மு.இராமநாதன்நாகாநோபல் விருதாளர் அப்துல் ரஸாக் குர்னாநயன்தாரா: இந்திய மனச்சாட்சிஇளம் வயது மாரடைப்புசெல்வந்தர்களின் இந்தியாராமச்சந்திர குஹா நரேந்திர மோடிசாவர்க்கர் அந்தமான் சிறைசமஸ் - கே.அஷோக் வர்தன் ஷெட்டிமக்களவைச் செயலகம்அஞ்ஞானம்நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டிஉழவர் எழுக!எத்தியோப்பியா: பாப் மார்லிக்கு சிலை வைத்த நாடுமணிரத்னத்தின் சறுக்கல்சோழசூடாமணிசேரர்கள்: ஓர் அறிமுகம்மக்கள் நலத் திட்டங்கள்பால் சக்கரியாகிசுமுஉரையாடு உலகாளுகுலமுறைமனுதர்மம்சமஸ் - மெக்காலே

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!