கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் தேர்தல் முடிவு

யோகேந்திர யாதவ் ஸ்ரேயஸ் சர்தேசாய் ராகுல் சாஸ்த்ரி
02 Jun 2024, 5:00 am
0

க்களவை பொதுத் தேர்தல் 2024இன் இறுதியும் ஏழாவது கட்டமுமான வாக்குப்பதிவு, ஏழு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் (சண்டீகர்) சேர்த்து 57 தொகுதிகளில் முடிந்துவிட்டது. உத்தர பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் கொளுத்தும் வெயிலில் ஆறு வாரங்களில் கட்டம் கட்டமாக வாக்குப்பதிவு நடந்தன. ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நான்காவது, இறுதியுமான கட்டங்களிலும் பஞ்சாப், இமாசலத்தில் ஒரே நாளிலும் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

ஏழாவது கட்டம் எப்படி? 

ஏழாவது கட்டமானது, பாஜக கடுமையாக வேலை செய்ய வேண்டிய தொகுதிகளைக் கொண்டது. 2019இல் இந்த 57 தொகுதிகளில் 30இல் மட்டும்தான் பாஜக வென்றது. ‘இந்தியா’ கூட்டணியில் இப்போதுள்ள கட்சிகள் 19 தொகுதிகளிலும், எந்த அணியையும் சாராத கட்சிகள் 8 தொகுதிகளிலும் வென்றன. 2019 மக்களவை தேர்தலுக்குப் பிறகு இந்த மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகளைக் கருத்தில் கொண்டால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முன்னுள்ள சவால் பெரியது என்பது புரியும்.

‘இந்தியா’ கூட்டணி இந்தக் கட்டத்தில் மேலும் 12 தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளன. வங்காளம், ஒடிஷா, பஞ்சாப் மாநிலங்களில் பாஜக கூட்டணி அதிகத் தொகுதிகளைப் பெற வாய்ப்பிருக்கிறது. கவனச் சிதறல் இல்லாமல் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காகவே வாராணசி தொகுதி கடைசி கட்டத்தில் சேர்க்கப்பட்டதைப் போலத் தோன்றுகிறது, ஆனால் அவர்கள் விரும்பியபடி இது மிகப் பெரிய வெற்றிகரமான பிரச்சாரமாக அமையவில்லை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மத்திய பிஹாரின் போஜ்பூர் பகுதியில் உள்ள 8 தொகுதிகளைக் கடந்த முறை எளிதாக வெல்ல முடிந்ததைப் போல பாஜகவால் இந்த முறை முடியாது. 2020 சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தால் 6 மக்களவைத் தொகுதிகளில் ‘மகாகட்பந்தன்’, (இந்தியா கூட்டணிக்கு பிஹாரில் முன்னோடி) அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றியது.

இந்த முறை நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்கு வெற்றி கிடைக்காதபடிக்கு, மிகவும் சாமர்த்தியமாக வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறது. இப்போதுள்ள கூட்டணியின்படியே ஜெகனாபாத், பாடலிபுத்திரம், அர்ரா தொகுதிகளை ‘இந்தியா’ கூட்டணி வென்றுவிடும். மேலும் 2% வாக்குகள் கிடைத்தால் ஐந்து தொகுதிகள் அதன் வசமாகிவிடும்.

களம் சொல்வது என்ன? 

களத்திலிருந்து வரும் செய்திகள், ‘இந்தியா’ கூட்டணி இவற்றைக் கைப்பற்றிவிடும் என்றே கூறுகின்றன. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) வேட்பாளர்கள் தேர்வில் முன்னர் கடைப்பிடித்த ‘எம்-ஒய்’ வேட்பாளர் தேர்வு உத்தி - அதாவது முஸ்லிம்கள், யாதவர்கள் மட்டும் என்பது – கைவிடப்பட்டு, அனைத்து சமூகத்தவர்களுக்கும் (ஏ டு இசட்) வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.

வாக்காளர்களில் 7% ஆக இருக்கும் குஷ்வாஹா-தானுக் சமூகத்தவருக்கும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது, இது ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) ராஷ்ட்ரீய லோக் ஜனதா தளம் (ஆர்எல்ஜேடி) கட்சிகளின் வெற்றி வாய்ப்பைக் கணிசமாக பாதிக்கும். தேஜஸ்வி யாதவின் 200க்கும் மேற்பட்ட பிரச்சார பொதுக்கூட்டங்களும், 17 மாதங்கள் அவர் துணை முதல்வராக இருந்தபோது மாநில அரசுத் துறைகளில் அளித்த ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் எல்லா சாதிகளையும் சேர்ந்த இளைஞர்களை அவர் பக்கம் ஈர்த்திருக்கிறது.

சமூக அடுக்கில் கீழ்த்தட்டில் வாழும் மிகவும் வறியவர்களை மோடியால் ஈர்க்க முடியாத நிலையில், அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லிபரேஷன்) கட்சி இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. அந்தக் கட்சியின் மூன்று வேட்பாளர்களும், உறுதிமிக்கத் தொண்டர்களும் இந்தக் கூட்டணிக்கு மாபெரும் பலம்.

உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்தது. 2019 தேர்தலில் பாஜக இவற்றில் 11 தொகுதிகளில் வென்றது. 2022 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது கோரக்பூர், வாராணசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டமன்ற தொகுதிகளை பாஜக கைப்பற்றியது; காஜிப்பூர், கோசி தொகுதிகளுக்குள்பட்ட பேரவைத் தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி அதிக வெற்றிகளைப் பெற்றது.

குர்மிக்களை அதிகம் கொண்ட அப்னா தள் (சோனேலால்), ராஜ்பார் சமூகத்தவருக்கான சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி), கேவாட்-நிஷாத் சமூகத்தவரின் நிஷாத் கட்சி ஆகியவற்றுடன் பாஜக தேர்தல் கூட்டணி வைத்திருந்தாலும், ஏராளமான பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறு சாதிகள் தேசிய ஜனநாயக கூட்டணியைவிட்டு விலகிவிட்டன. அவற்றுக்கெல்லாம் போட்டியிட வாய்ப்பளித்து சமாஜ்வாதி கட்சி தனது சமூக கூட்டணியை விரிவுபடுத்தியிருக்கிறது.

பாஜக கூட்டணியின் 45% வேட்பாளர்கள் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள், ‘இந்தியா’ கூட்டணியோ 27.5% வேட்பாளர்களை மட்டுமே மேல்சாதியிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆறில் ஒரு பங்கு வாக்காளர்கள் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாகத் திரும்பினால்கூட மேலும் 4 மக்களவைத் தொகுதிகளை ‘இந்தியா’ கூட்டணியால் எளிதில் கைப்பற்றிவிட முடியும், பஞ்சாபில் பாஜக அதிக வாக்குகளைப்பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது, ஆனால் தொகுதிகளோ வெற்றியோ சாத்தியமில்லை. விவசாயிகள் போராட்டம்தான், 25 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்த பாஜக – அகாலிதள கூட்டணியை முறித்தது. கிராமப்புறங்களில் சீக்கிய விவசாயிகள் பாஜகவினர் பிரச்சாரம் செய்யக்கூட அனுமதிக்கவில்லை.

இந்துக்களுடைய வாக்குகளைத் தக்கவைத்துக்கொண்டு சீக்கிய பட்டியல் இனத்தவரையும் அரவணைக்கும் பாஜகவின் தந்திரம் எடுபடவில்லை. அத்துடன் காங்கிரஸிலிருந்தும் ஆஆக கட்சியிலிருந்தும் விலகி பாஜகவில் சேர்ந்த தலைவர்கள் மூலம் செய்த முயற்சிகளுக்கும் அதிக பலன் ஏற்படவில்லை. பஞ்சாபில் ஏற்கெனவே வென்ற இரு தொகுதிகளையும் அல்லது ஒரு தொகுதியையாவது பாஜக இழப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.

இந்தியா கூட்டணிக்குள் போட்டி

பஞ்சாபில் முக்கியமான போட்டியே ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ஆஆக கட்சிகளுக்கு இடையில்தான். எல்லாத் தொகுதிகளிலும் நான்கு முனை அல்லது ஐந்து முனைப் போட்டி நடக்கிறது. பஞ்சாபில் இந்து, சீக்கியர்களுக்கு இடையிலான பிளவு பல சமயம் வெளிப்படையாகவும் சில சமயம் மறைமுகமாகவும் வெளிப்படும்.

காங்கிரஸ் ஆஆக கட்சிகளால் மட்டுமே இரு சமூகத்தவரிடமும் ஆதரவைப் பெற முடிகிறது. கடந்த முறை மொத்தமுள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 8, பாஜக -அகாலிதளம் கூட்டணி 4, ஆஆக 1 தொகுதிகளில் வென்றன. பிறகு 2022-ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஆஆக ஐந்தில் நான்கு பங்கு தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது. இது 11 மக்களவைத் தொகுதிகளாகும். அதற்குப் பிறகு ஆஆக அரசு மீது அதிருப்தி அதிகரித்துவிட்டது. மக்களுக்கு நேரடியாகத் தருவதாக சொன்ன பணப்பயன்களை அளிக்க முடியாதபடிக்கு வருவாய் பற்றாக்குறை நிலவுகிறது.

மாநிலத்தில் இரண்டு தலைமுறைகளாக நிலவும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, படித்த இளைஞர்களுக்கும் மாநில அரசால் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்க முடியவில்லை. காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர், முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் மக்களுடைய ஒட்டுமொத்த ஆதரவைப் பெறும் செல்வாக்கு மிக்க தலைவர் எந்தக் கட்சியிலும் இல்லை. இதனால் அம்ரித்பால் சிங் போன்ற இளம் பிரிவினைவாதிகள் சிறையிலிருந்தே போட்டியிட முடிந்திருக்கிறது. சண்டீகர் தொகுதியில் ஆஆக ஆதரவில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலின்போது, கட்சிக் கட்டளையை சிலர் மீறியதாலும் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சிகளுக்குத் தாவியதாலும் காங்கிரஸ் ஆட்சியே போய்விடும் ஆபத்து ஏற்பட்டது. இப்போது மக்களவை பொதுத் தேர்தல் கட்சிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறது. 2019இல் 4 மக்களவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் இழந்தது.

ஆனால், பிறகு சட்டமன்றத்தில் கிடைத்த வாக்குகளின்படி சிம்லா, ஹமீர்பூர், காங்ரா (ஆஆக ஆதரவால்) தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மண்டி தொகுதியில் 2019 தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோற்றது. பிறகு நடந்த இடைத் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றது. இப்போது முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங்கின் மகன் விக்ரமாதித்திய சிங் போட்டியிடுகிறார். பாலிவுட் நட்சத்திரம் கங்கணாவைக் களம் இறங்கியிருக்கிறது பாஜக.

வங்கமும் ஜார்கண்டும் 

மிகவும் கசப்பான மோதல்கள் நிகழ்ந்த நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் நிறைவடைகிறது. குடியுரிமை திருத்த மசோதா மற்றும் அன்னியர் குடியேற்ற விவகாரம் காரணமாக வாக்காளர்களிடையே மிகப் பெரிய பிளவு மதரீதியாகவும் ஏற்பட்டிருக்கிறது. பாஜகவுக்கு செல்வாக்கு அதிகமுள்ள வட வங்காளத்திலும் ஜங்கள்மஹால் பகுதியிலும் வாக்குப்பதிவு முன்னரே முடிந்துவிட்டது.

திரிணமூல் காங்கிரஸின் கோட்டையாகத் திகழும் கொல்கத்தா மாநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்போது வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திரிணமூல் இங்குள்ள 63 சட்டமன்ற தொகுதிகளில் 62இல் வென்றது. வடக்கு கொல்கத்தா அல்லது தெற்கு கொல்கத்தா மக்களவைத் தொகுதியைக் கைப்பற்ற பாஜக கடுமையாக உழைப்பையும் பணத்தையும் செலவிட்டுள்ளது.

மதரீதியிலும் சித்தாந்தரீதியிலும் மக்களிடையே செல்வாக்குப் பெற பாஜக முயன்றாலும் மம்தா பானர்ஜிக்கே வங்காளிய சமூகம் தொடர்ந்து ஆதரவு அளித்துவருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இளஞைர்களை அதிகம் களமிறக்கி, திரிணமூல் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவுக்குக் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த கட்டத்தில், தனக்கு ஆதரவான பகுதிகளிலேயே மேலும் சில தொகுதிகளை வெல்ல முடியாமல் போனால் பாஜக இழப்பை அதிகப்படுத்திவிடும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிகளை அதிகப்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கிறது. இங்குள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே ‘இந்தியா’ கூட்டணி கடந்த தேர்தலில் வென்றது. 2019 சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளைப் பார்த்தால் 3 தொகுதிகளிலுமே இப்போது ‘இந்தியா’ கூட்டணி வெல்ல முடியும். கோடாவில் பாஜகவின் நிஷிகாந்த் துபே வேட்பாளராக இருந்தாலும் அதையும் வெல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இரண்டு பழங்குடிகள் தொகுதியிலும் கல்பனா சோரன் (சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி) செய்துவரும் துடிப்பான பிரச்சாரத்தால் வெற்றி நிச்சயமாகியிருக்கிறது.

ஒடிஷா

ஒடிஷா மாநிலத்தில் மட்டுமே பாஜக மேலும் சில தொகுதிகளைப் பெற வாய்ப்பிருக்கிறது. இங்கு பிஜு ஜனதா தளம் – பாஜக இடையேதான் கடுமையான போட்டி. தேர்தலுக்கு முன்னால் இரு கட்சிகளும் கூட்டணியே அமைக்கும் அளவுக்கு நெருங்கின. கடலோர ஒடிஷாவில் ஆறு தொகுதிகளில் கடைசி கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. 2019இல் இங்கு 4 தொகுதிகளை பிஜு ஜனதா தளம் வென்றது.

இப்பகுதியில் உள்ள 42 பேரவைத் தொகுதிகளில் 33 பிஜு ஜனதா தளத்துக்குக் கிடைத்தது. எப்படியாவது ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற காங்கிரஸ் கடுமையாக முயற்சித்துவருகிறது. இந்தப் பகுதி வாக்காளர்களுடைய ஒரு தனித்துவம் என்னவென்றால் சட்டமன்றத்துக்கு எந்தக் கட்சிக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களுக்கே மக்களவைக்கும் வாக்களிக்கிறார்கள். 2022இல் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம்தான் அதிக இடங்களில் வென்றது.

இறுதி கட்டத்தில் ஒடிஷாவில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில், முதல்வர் நவீன் பட்நாயக் மீதும் அவருடைய நம்பிக்கைக்குரிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. முதல்வரின் உடல்நிலையில் மர்மம் இருப்பதாக மோடி சந்தேகப்பட்டார். இவற்றுக்கெல்லாம் பிஜு ஜனதா தளம் தக்க பதிலடியும் தந்தது. இருந்தும் மயூர்பஞ்ச் பழங்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக வெல்ல வாய்ப்பிருக்கிறது. இதுதான் குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவின் சொந்த ஊருள்ள தொகுதி.

கடலோர மாவட்ட முற்பட்ட சாதியினருக்கும் பாண்டியன் மீது வெறுப்பு நிலவுவதால் அதுவும் பாஜகவுக்கு வெற்றி தேடித்தரும் என்கிறார்கள். ஒன்றிய அரசுக்கு பாஜகவை ஆதரித்தால் வேலைவாய்ப்புகள் அதிகமாகும் என்று இளைஞர்கள் கருதுகிறார்கள். சட்டமன்ற தேர்தலில் பிஜு ஜனதா தளத்துக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும் ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

இறுதி கட்டத்தில் பாஜக, ‘இந்தியா’ கூட்டணிகளுக்கு வெற்றியை அதிகப்படுத்திக்கொள்ளவும் - அதிகத் தொகுதிகளை இழக்கவும் சம வாய்ப்புகள் இருக்கின்றன. வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வமாக இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரையில் காத்திருப்போம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மாநிலக் கட்சிகளின் செல்வாக்குப் பிரதேசங்கள்
பாஜகவுக்கு இப்போதே 272 நிச்சயமில்லை
முதல் கட்டம்: ‘இந்தியா’ அணிக்கே ஆதாயம்
இரண்டாம் கட்டம்: பாஜகவுக்குப் பிரச்சினைகள்
ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு: பாஜகவுக்கு நெருக்கடி
பாஜகவின் கவலைகளைப் பெருக்கும் ஆறாவது கட்டம்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






கட்டுமானம்அரசனே வெளியேறுகடல் வாணிபக் கப்பல்கள்ஜனநாயக கட்சிபிரிண்ட்எண்ணும்மைஎன்டிஏஉச்ச நீதிமன்றம்பொது அமைதிமாமத ராஜாஉங்கள் பயோடேட்டாசித்தாந்திஷங்கர்ராமசுப்ரமணியன்மாயக் குடமுருட்டிஉபரி நீர்அஞ்சலிக் குறிப்புசமையல் எண்ணெயில் கலப்படமா?மகளிர் இடஒதுக்கீடு எனும் கேலிக்கூத்து!சமையல்காரர்கள்சமமின்மைமூலக்கூறுகளுக்குப் பூட்டுப்போட்டவர்களுக்கு வேதியியலாரன்ஸ் பிஷ்ணோய் சாதி அழிந்துவிடுமா?காந்தி படுகொலை: ஏன் சிரிப்பு வருகிறது?கூட்டாச்சி2ஜி நெட்வொர்க்அதிபர்கள்கடவுள் மறுப்பு‘கிக்’ தொழிலாளர் நிலை: குறைகள் தீருமா?11 பேர் விடுதலை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!