கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

பாஜக அடைந்தது தோல்வியே!

யோகேந்திர யாதவ் ஸ்ரேயஸ் சர்தேசாய் ராகுல் சாஸ்த்ரி
16 Jun 2024, 5:00 am
0

க்களவை பொதுத் தேர்தல் (2024) முடிவுகளை பாஜகவுக்கு எதிரானது என்று சொல்வது நியாயமா? அதுதான் உண்மை என்பது ‘எங்கள் மூவரில்’ ஒருவரான யோகேந்திர யாதவுடைய ஆய்வு முடிவு. 

ஒன்றிய அரசில் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்குப் போதிய உறுப்பினர்கள் இருக்கின்றனர், ஆனால் பாஜக பெரும்பான்மை வலுவை மட்டும் இழக்கவில்லை, மக்களுடைய அங்கீகாரத்தைப் பெறவும் தவறிவிட்டது. அதிக தொகுதிகளில் வென்ற தனிக் கட்சியாக பாஜக இருக்கலாம், எதிர் வரிசையில் இருக்கும் பெரிய கட்சியைவிட அதிக இடங்களைக்கூடப் பெற்றிருக்கலாம், ‘நானூறு இடங்களுக்கும் மேல்…’, ‘50% வாக்குகளுக்கும் அதிகமாக…’ என்று தனக்குத்தானே நியமித்துக்கொண்ட இரண்டு இலக்குகளையுமே அது எட்டத் தவறிவிட்டது; பணபலம், ஊடக பலம், அரசு இயந்திர பலம், ஏன் - தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்பு ஆகிய அனைத்தும் இருந்தும், இவை எதுவும் இல்லாத எதிர்க்கட்சிகளை அதனால் திட்டவட்டமாக வெல்ல முடியவில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்த 37.4% வாக்குகளைவிட, இப்போது வாங்கிய 36.6% மிகச் சிறிய அளவில் சரிவுதானே என்று வாதிடக்கூடும். ஒடிஷா மாநிலத்தில் பாஜக பலமாக நுழைந்திருக்கிறது, கேரளத்தில் எதிர்ப்புகளை லேசாக உடைத்திருக்கிறது, ஆந்திரத்திலும் பஞ்சாபிலும் தன்னுடைய இருப்பை மேம்படுத்தியிருக்கிறது. 

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பாஜக சராசரியாக 10% வாக்குகளைப் பெற்று தனது கால் சுவடுகளைப் பதித்திருக்கிறது. எனவே, பாஜகவுக்குக் கிடைத்திருப்பது வெற்றிதான் என்று அதன் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். முன்பைவிட அதிக பகுதிகளில் பாஜக ஊடுருவியிருக்கிறது என்று ‘சுயேச்சை’யான அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

வழக்கமான கதை அல்ல

மாநில வாரியாக பாஜகவுக்குக் கிடைத்த வாக்கு எண்ணிக்கையை ஆராய்ந்தால், சில மாநிலங்களில் வாக்குகள் குறைந்துள்ளன, சிலவற்றில் அதிகமாகியுள்ளன என்று இதை ஒதுக்கிவிட முடியாது. ஏற்கெனவே ஆட்சியில் இருந்த பாஜகவுக்கு இது எதிரான வாக்கு என்பது உற்றுநோக்கினால் மட்டுமே புரியும். இதற்குக் காரணம், கடந்த முறை பாஜக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் செல்வாக்காக இருக்கவில்லை. 

ஆய்வுக்காக, பாஜகவை இரண்டாகப் பிரிப்போம். ஏற்கெனவே ‘ஆட்சியில் இருந்த பாஜக’, புதிதாக ‘ஆதரவைப் பெற்றுள்ள பாஜக’. ஏற்கெனவே ஆட்சிசெய்த பகுதிகளில் பாஜக வாக்கு இழப்புகளைச் சந்தித்தது, புதிதாக சில மாநிலங்களில் ஆதரவை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது. இப்படிப் புதிய இடத்தில் பெற்றுள்ள ஆதரவு குறுகிய காலம்தான் நீடிக்குமே தவிர, எதிர்காலத்தில் இங்கும் ஆதரவு சரியவே வாய்ப்புகள் அதிகம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?

ப.சிதம்பரம் 09 Jun 2024

356 தொகுதிகளில்…

இதை இப்படிப் பார்ப்போம். மொத்தமுள்ள தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு (356) தொகுதிகளில், மாநிலத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பாஜகதான் செல்வாக்குள்ள கட்சி. இந்தப் பகுதி மஹாராஷ்டிரத்திலிருந்து குஜராத் வரையிலும் பிஹாரிலிருந்து ஜார்க்கண்ட் வரையிலும் செல்கிறது. கர்நாடகம், இமாச்சலம் ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் பாஜகவுக்குச் செல்வாக்குள்ள பகுதிகளே. இங்கு, தான் வென்றிருந்த 271 தொகுதிகளில் 75 தொகுதிகளை இந்தத் தேர்தலில் இழந்துவிட்டது பாஜக.

கர்நாடகத்திலிருந்து பிஹார் வரையில் 5% வாக்குகள் பாஜகவுக்கு எதிராகத் திரும்பியுள்ளன. எஞ்சியுள்ள 187 தொகுதிகளில் அந்தந்த மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு எதிரான, முக்கிய கட்சியாகப் போட்டியிட்டது. ஒடிஷாவில் பிஜு ஜனதா தளம், ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ். இந்த மாநிலங்களில்தான் கூடுதலாக 12 இடங்களில் வெற்றிபெற்று தன்னுடைய கௌரவத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. இங்கு பாஜகவுக்கு ஆதரவாக 6% வாக்குகள் கூடுதலாகக் கிடைத்ததால், ஒட்டுமொத்தமாக வாக்குச் சதவீதம் வெகுவாக சரியாமல், 1% சரிவோடு நின்றுவிட்டது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்

காஞ்சா ஐலய்யா 09 Jun 2024

பாஜகவின் ஆதரவு வீழ்ச்சி, மேலோட்டமாகத் தெரிவதைவிட உண்மையில் அதிகம். 2019, 2024 ஆகிய இரண்டு முறையும் பாஜக போட்டியிட்ட 399 தொகுதிகளில் கிட்டத்தட்ட 274 தொகுதிகளில் அதற்குக் கிடைத்த வாக்குகள் குறைந்துவிட்டன. மஹாராஷ்டிரம், ராஜஸ்தான், பிஹார், ஜார்க்கண்ட், ஹரியாணா, இமாச்சலம், பஞ்சாப், ஜம்மு – காஷ்மீரம் ஆகியவற்றில் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குகள் சரிந்துவிட்டன. 20% வாக்கு வித்தியாசத்தில் அது முன்னர் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 151லிருந்து வெறும் 77 ஆக சரிந்துவிட்டது.

காங்கிரஸும் பாஜகவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 215 தொகுதிகளில் கடந்த முறை 90%க்கும் அதிகமான தொகுதிகளில் 21%க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வென்றது. இந்த முறை அது 10% ஆக சரிந்துவிட்டது. 2019 முடிவுடன் ஒப்பிடுகையில் 5% வாக்குகள் பாஜகவுக்கு எதிராகவும் திரும்பிவிட்டன. இது மிகப் பெரிய பின்னடைவு. ராஜஸ்தான் (12%), ஹரியாணா (12%), இமாச்சலம் (13%) என்று பாஜகவுக்கு எதிராக இரட்டை இலக்க சரிவே ஏற்பட்டிருக்கிறது. ராஜஸ்தானிலும் ஹரியாணாவிலும் அதற்கு ஏற்பட்ட சரிவு காரணமாக கணிசமான தொகுதிகளை இழந்திருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மோடி ஏன் அப்படிப் பேசினார்?

அரவிந்தன் கண்ணையன் 02 Jun 2024

உத்தர பிரதேசப் பெருந்தோல்வி

இந்தத் தேர்தலின் மைய முடிவே, உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கும் பெருந்தோல்விதான். உத்தர பிரதேசம் (6.8%). பிஹார் (6.9%) ஜார்க்கண்ட் (7%) என்று அடுத்தடுத்த மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராகத் திரும்பியுள்ள வாக்குகள் அதன் செல்வாக்கு வெகுவாக சரிந்துவிட்டதையே உணர்த்துகிறது. அறிவுக்கூர்மையுடனும் திட்டமிட்டும் அமைக்கப்பட்ட ‘அரசியல் – சமூக கூட்டணி’ காரணமாக, தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது பாஜகவுக்கு. 

பிஹாரில் பாஜகவுக்குக் கடந்த தேர்தலின்போது கிடைத்த 23% அதிக ஆதரவின் பெரும்பகுதியைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்ததாலும், ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டதாலும் அங்கு பெருந்தோல்வியைத் தவிர்க்க முடிந்திருக்கிறது.

கர்நாடகம், அசாம், டெல்லி, உத்தராகண்டில் பாஜகவின் வாக்குகள் சிறிதளவே குறைந்திருக்கிறது. கர்நாடகத்தில் சில பகுதிகளில் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அதிகமானதால் தொகுதிகளை இழந்திருக்கிறது. குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளால் அதிக அளவு வாக்குகளை ஈர்க்க முடியவில்லை.

தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு எதிராக வீசிய அலை, பாஜகவுக்குச் சாதகமாக 15.7% வாக்குகளைக் கொண்டுவந்தது, ஓடிஷாவிலும் கூடுதலாக 7% வாக்குகள் கிடைத்தன. கேரளத்தில் கூடுதலாக – ஆனால் மிதமாக – கிடைத்த 3% அதிக வாக்குகளால் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடிந்திருக்கிறது.

தமிழ்நாட்டிலும் பஞ்சாபிலும் பழைய தோழமைக் கட்சியை இழந்ததால், தனித்துப் போட்டியிட நேர்ந்தது. அதிக தொகுதிகளில் போட்டியிட்டதால் அதிக வாக்குகள் கிடைத்து, வாக்குச் சதவீதமும் அதிகமானதைப் போலத் தெரிகிறது, உண்மையில் அதற்கு ஆதரவு குறைந்துதான் இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் கட்சியைக் கடுமையாக எதிர்த்தது, முன்னர் பெற்ற வாக்குகளில் 1.3% இழந்தது, ஆனால் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அடைந்த தோல்வியிலிருந்து மீள முடியவில்லை.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நாட்டை எப்படி பாதுகாப்பது?

ராமச்சந்திர குஹா 02 Jun 2024

இன்னும் எத்தனை நாள்களுக்கு…

இறுதியாக, இந்தத் தேர்தல் முடிவு குறித்த கேள்வி - பாஜகவுக்குக் கிடைத்திருப்பது மக்களுடைய ஆதரவிலான முழு வெற்றியா? நானூறு தொகுதிகளுக்கும் மேல் 50% வாக்குகளுக்கும் மேல் என்று இரட்டை இலக்குகளோடு களம் இறங்கியபோது, ‘வெற்றி அதற்கே’ என்றே அனைவரும் முடிவு கட்டிவிட்டார்கள். 

பாஜகவுக்கு வாக்குகள் எவ்வளவு சரிந்துள்ளன, அதை எதிர்த்த கட்சிகளுக்கு எவ்வளவு கூடியுள்ளன என்றெல்லாம் பெரும்பாலானவர்கள் இப்போதும் கவலைப்படவில்லை. ‘அதிக அதிகாரம் படைத்தவர் மோடி’, ‘அதிக செல்வாக்குள்ள கட்சி பாஜக’ என்பது மட்டுமே மிஞ்சியிருக்கிறது.

இன்னும் எத்தனை நாள்களுக்கு, ‘இரண்டு’ பாஜகவில் ‘ஒன்று’ ‘இன்னொன்’றைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும்? காலமும் இடமும் பாஜகவுக்குச் சாதகமாக இல்லை. பாஜகவால் இனிமேல் எந்த மாநிலத்திலும் இப்போதிருப்பதைவிட, அதிகத் தொகுதிகளில் வென்றுவிட முடியாது, இப்போதுள்ள சாதக நிலைமையும் தொடராது. வெகு காலமாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவு பாஜகவுக்கும் ஏற்படும். 

மோடி மீது மக்களுக்குள்ள மிச்ச மீதி கவர்ச்சியும் வற்றிய பிறகு பாஜகவுக்கும் சரிவுகள் தொடங்கிவிடும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டால், பாஜகவுக்கு இது ‘நம்பிக்கை தரும்’ தேர்தல் முடிவோ – வெற்றியோ அல்ல!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?
சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்
இடதுசாரிகளுக்குத் தேவை புதிய சிந்தனை
மோடி ஏன் அப்படிப் பேசினார்?
நாட்டை எப்படி பாதுகாப்பது?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1





இந்தியத் தேர்தல்கள்கருப்பு ரத்தம்75 ஆண்டுகள்ஆசை கவிதைMinimum Support priceஉழவர் விருதுதிராவிடக் கட்சிகள்நிலுவைத் தொகைசாதிவெறிஆன்மாதுயரம்பூணூல்சூத்திர இனம்பழங்குடி தெய்வங்கள்சாதி மறுப்புஜூலியஸ் நைரேரேமலையாளப் படம்இந்துத்துவர்கள்சவுக்கு சங்கர் சுவாமிநாதன்திரிணாமூல் காங்கிரஸ்தமிழ் நாள்காட்டிகார்கேபுதையல்மாற்றம்பணமதிப்பிழப்புசோழர்கள் இன்றுஇரண்டு செய்திகள்இரவுத் தூக்கம்தேசியத்தின் அவமானம்நவதாராளமயம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!