கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

மீண்டும் மோடி: மக்களிடையே அச்சம், விரக்தி

யோகேந்திர யாதவ்
17 Apr 2024, 5:00 am
0

மிகவும் ‘அசாதாரண’மான இந்தக் காலகட்டத்தில் ‘இயல்பான அரசிய’லுக்கு வலிமையுடன் திரும்பிவிட முடியுமா? மேற்கு உத்தர பிரதேசம், தெற்கு பஞ்சாப், வடக்கு ஹரியாணா, கிழக்கு ராஜஸ்தான் பகுதிகளில் ஐந்து நாள்கள் தொடர்ந்து காரில் பயணித்து 1,500 கிலோ மீட்டர் சென்று திரும்பிய பிறகு இந்தக் கேள்வியை எனக்குள் கேட்டுக்கொண்டேன். 

இந்தி பேசும் மாநிலங்களில் 2014, 2019 மக்களவைத் தேர்தல் காலத்தில் வீசிய ‘பாஜக ஆதரவு அலை’ இப்போதும் வீசுகிறதா? இந்தப் பொதுத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் பெருந்தோல்வியைச் சந்திக்கப் போகின்றனவா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண, தீவிர அரசியல் சிந்தனையுள்ள ஐவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டோம்.

நானூறுக்கும் மேற்பட்ட சாமானிய வாக்காளர்களை அவர்களுடைய வீடுகளில், வீதிகளில், கடைத்தெருக்களில் சந்தித்துப் பேசிய பிறகு கிடைத்த எளிதான – உறுதியான பதில் - ‘இல்லை’.

மக்கள் அனைவருமே முக்கியத்துவம் தந்து பேசியது அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்கும் அதி முக்கியமான பிரச்சினைகளைப் பற்றித்தான்; வாழ்வாதாரம் தொடர்பானவை, உள்ளூர் பிரச்சினைகள், இப்போது பதவியில் இருக்கும் உறுப்பினர் தொகுதிக்கே வருவதில்லை என்ற ஆதங்கம், சாதி – சமயப் பிணக்குகள், கோஷ்டி அரசியல் என்று பல; இவற்றையெல்லாம் மற்றவர்கள் அறியாமல் அடக்கவும் மறைக்கவும்தான் விரும்புவார் மோடி. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மோடியின் கவர்ச்சியில் தேய்வு

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு காலம் உண்டு என்று ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனுவில் தேர்தல் பணியில் இருந்த போலீஸ்காரர் முணுமுணுத்தார். “கொரானா – கொரானா என்று தொடர்ந்து ஓராண்டாக எல்லோரும் அச்சப்பட்டார்கள், பிறகு அது படிப்படியாக தேய்ந்து நினைவிலிருந்தே இப்போது மறைந்துவிட்டது; மோடி  - மோடி என்ற இந்த மாயமந்திரமும் அப்படியே படிப்படியாக மறைந்துவிடும்” என்றார் சீருடை அணியாத, 30 வயது மதிக்கத்தக்க அந்த இளம் போலீஸ்காரர்.

நாங்கள் போன இடங்களிலும் சந்தித்த மனிதர்களிடத்திலும் இந்த எண்ணமே எதிரொலிப்பதைக் கண்டோம்.

பொதுமக்களுடைய கண்களிலிருந்து மோடி மறைந்துவிடவில்லை – நெஞ்சங்களிலிருந்தும் நீங்கிவிடவில்லை; ஆனால் பழைய கவர்ச்சி இல்லை. வாக்காளர்களிடம் நடத்தும் கருத்துக்கணிப்புகளில், ‘இப்போதிருக்கும் தலைவர்களில் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் யார்?’ என்று கேட்டால், மற்றவர்களைவிட அவருக்கு அதிகம் பேர் ஆதரவு தெரிவிப்பது நிச்சயம். 

மோடி மீது பித்தாக இருக்கும் அவருடைய தீவிர ஆதரவாளர்களையும் இப்பயணத்தில் சந்தித்தோம். நாங்கள் சென்ற இடங்களில் காணப்படும் பிரச்சினைகளை எல்லாம் மக்கள் மறக்க, அவருடைய உருவம் மட்டுமே போதாது என்பது புரிந்தது; அவர் மீதான கவர்ச்சி மங்கத் தொடங்கிவிட்டது, நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பிரச்சினைகள் பெரிதாகத் தெரியத் தொடங்கிவிட்டன.

ஆட்சியில் இருப்பவர்கள், தற்காத்துக்கொள்ள வேண்டி சமாதானம் சொல்ல வேண்டிய பிரச்சினைகளுக்குக் குறைவே இல்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பது மிக மிக வேதனை தரும் பிரச்சினையாகும். பாஜகவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் ஆதரவாளர்கள்கூட, புள்ளிவிவரங்களுடன் எதிர்கொள்ளும்போது பேச வார்த்தைகள் இல்லாமல் திணறுகிறார்கள்.

சீனாவை எல்லையிலிருந்து முட்டி மோதி வெளியேற்றினோம் என்று வீரம் பொங்க ஆதரவாளர்களிடையே பேசும்போது அவர்கள் கேட்டுப் பரவசமடைவார்கள்; வேலையில்லாத் திண்டாட்டம் ஒவ்வொரு குடும்பத்தையும் அலைக்கழிக்கும்போது அதைப் போல கதைகளைப் பேசி கண்ணை கட்டிவிட முடியாது. 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

சமஸ் | Samas 16 Apr 2024

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு அடுத்த இடத்தைப் பிடிக்கிறது. பொது விநியோக முறை மூலம் கோதுமை, அரிசி போன்றவை கிடைக்கிறது என்று ஏழைகள் கூறினால்கூட, அது மட்டுமே அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருந்துவிடவில்லை (இதற்குக் காரணமான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் என்பதே பலருக்கும் நினைவில் இல்லை). 

அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள இந்த ரேஷன் கோதுமை மட்டும் போதவில்லை என்பதே மக்களுடைய பொதுவான அங்கலாய்ப்பாக இருக்கிறது. விவசாயிகளுடைய பிரச்சினைகளை இந்த அரசு தீர்க்கவே இல்லை என்றே அனைவரும் கூறுகின்றனர். பிரதான் மந்திரி கிசான் நிதி திட்டம் மூலம் ஆண்டுக்கு தரப்படும் ரூ.6,000, டீசல் – உரங்களின் விலை உயர்வைச் சமாளிக்கக்கூட போதவில்லை என்பதே அனைவருடைய குற்றச்சாட்டாகவும் இருக்கிறது. 

இவை போக ஏராளமான உள்ளூர் பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்கின்றன. வாய்க்கால் கட்டுவோம் என்றார்கள் வாய்க்கால் வரும் அறிகுறியே இல்லை, சாலை வசதிகளை மேம்படுத்துவோம் என்றார்கள் சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாகத்தான் இருக்கின்றன, பயிர் விளைச்சல் பொய்த்தால் இழப்பீடு தரப்படும் என்றார்கள் அதிலும் ஏதும் தரவில்லை, மருத்துவச் செலவுக்கு சொந்தப் பணத்தைத்தான் ஏராளமாகச் செலவிட வேண்டியிருக்கிறது, எல்லா அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று துயரங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார்கள்.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

மௌன ராமர்

அயோத்தி ராமர் கோயில் பற்றி நாங்கள் சந்தித்த யாரும் தாங்களாகவே பேசவில்லை. மோடியின் ஆதரவாளர்கள் மட்டும்தான் ராமர் கோயில் பற்றிப் பேசுகிறார்கள் அது மட்டுமல்லாமல், மோடியால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது என்கிறார்கள்.

காஷ்மீருக்கு தனி அந்தஸ்து தந்த அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டதை பெரிய சாதனையாகக் கூறுகிறார்கள். 

இவர்கள் இப்படிப் புகழ்ந்து பேசும்போதே எதிர்க்குரல்களும் கூட்டத்திலிருந்து ஒலிக்கின்றன. “மக்களைக் கோவிலுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளுகிறார்கள், கோயிலில் இருக்க வேண்டிய தெய்வங்களை அரசியலுக்கு இழுத்துவருகிறார்கள்” என்று பழங்குடி இளைஞர் ஒருவர் கூறியது எங்களை ஈர்த்தது.

சமூகங்களின் முடிவுகள்

மேற்கு உத்தர பிரதேசத்தில் ராஜபுத்திரர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதை பாஜக தலைமை ஒரு வழியாக சமாளிக்கக்கூடும், ஆனால் ஹரியாணாவிலும் ராஜஸ்தானிலும் ஜாட்டுகள் மீண்டும் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள் என்பது உறுதி. பஞ்சாபின் நகரப்பகுதிகளில் பாஜகவுக்கு சிறிது ஆதரவு கூடியிருந்தாலும் ராஜஸ்தான் ஹரியாணாவிலும் பட்டியல் இனத்தவர் ஆதரவை அது நிச்சயம் இழக்கும். 

அரசியல் விமர்சனத்துக்காக இதையெல்லாம் சொல்வதுபோலத் தோன்றும், பாஜகவுக்கான வழக்கமான எதிர்ப்புகள் இந்தத் தேர்தலில் மீண்டும் வலுத்துவருவதையே இவை காட்டுகின்றன.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சர்வாதிகார நாடாகிறதா இந்தியா?

யோகேந்திர யாதவ் 05 Mar 2024

சர்வாதிகாரமா கோலோச்சுவது?

நானூறு இடங்களுக்கு மேல் நிச்சயம் என்ற முழக்கத்துக்கு முற்றிலும் வேறுபட்டிருக்கிறது தேர்தல் களம். நாங்கள் நேரில் பார்த்து, கேட்டு, உணர்ந்தபடி வாக்குகள் பதிவாகி, முறையாக எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டால் – வாஜ்பாய் தலைமையில் இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரத்துக்குக் கிடைத்த முடிவுதான் – அதாவது படுதோல்விதான் பாஜகவுக்கு இந்தத் தேர்தலிலும் நிச்சயம் கிடைக்கும். 

போட்டியிடும் கட்சிகளுக்கு இடையில் பணபலம், அதிகார பலம், ஆள் பலம், ஊடக பலம் ஆகியவற்றில் சமமின்மை நிலவும் இந்த நிலையில்கூட, இந்தப் பகுதிகளில் 2019 தேர்தலில் கிடைத்த வெற்றி பாஜகவுக்கு நிச்சயம் கிடைக்காது.

ஆனால் நாம், ‘சாதாரண கால’த்தில் வாழவில்லை. நான் சொல்வது என்னவென்று மக்களுக்குப் புரிந்திருக்கும். கடந்த நாற்பதாண்டு கால அரசியல் அனுபவத்தில், ‘சர்வாதிகாரம் – யதேச்சாதிகாரம்’ என்ற வார்த்தைகளை பொதுமக்கள் பேசும் இடங்களில் இந்த அளவுக்கு நான் கேட்டதே இல்லை. தங்களுடைய முடிவுகளை கடைசி நேரத்தில் மாற்றிக்கொள்ளக்கூடிய வாக்காளர்கள் இதைப் பேசுவதில்லை, பாஜகவை தீவிரமாக எதிர்ப்பவர்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். 

மோடியை ஆதரிக்கும் ஊடகங்களைத் தவிர மற்ற ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டிருப்பதையும், எதிர்க்கட்சி ஆளும் அரசுகளைச் சீர்குலைப்பதையும், வலுக்கட்டாயமாக பிற கட்சிகளிலிருந்து நிர்வாகிகளை விலக வைப்பதையும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைக் கைதுசெய்ததையும் இந்தச் சர்வாதிகாரத்துக்கு நிரூபணங்களாக சுட்டிக்காட்டுகின்றனர். ‘இடி’ – ‘சிபிஐ’ போன்ற அரசு முகமைகளைத் தவறாகப் பயன்படுத்துவதையும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் திரும்பிவிட்டால் எல்லா ஊழல்கறைகளையும் போக்கும் ‘வாஷிங் மெஷி’னாக அது அபயம் தருவதையும் சாமானிய மக்கள் - கிராமங்களில்கூடப் பேசுகிறார்கள்.  

இதற்கு உதாரணங்களை தேசிய அளவில் தேடாமல், உள்ளூரில் ‘இடி-ஐடி’ சோதனைகளுக்கு உள்ளான காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் சேர்ந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கைகள் இல்லாமல் தப்பியதைச் சுட்டிக்காட்டுகின்றனர். முதல் முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீது மக்களுக்கு சந்தேகம் அதிகமாகியிருக்கிறது. ‘நாம் ஒரு பொத்தானை அமுக்கினால் அது வேறொரு சின்னத்தில் போய் பதிகிறது’ என்கிறார்கள். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ் | Samas 29 Mar 2024

தேர்தல் நன்கொடை பத்திரம்

மக்களுக்குத் தெரிய வேண்டிய தேசிய செய்திகளும் அவர்கள் வரை சென்று சேருவதுமில்லை. நாம் சந்தித்தவர்களில் மிகச் சிலருக்குத்தான் தேர்தல் நன்கொடை பத்திரம் பற்றித் தெரிந்திருக்கிறது. இந்த நன்கொடை பாத்திரத்தை வாங்கி, பதிலுக்கு தொழில் நிறுவனங்கள் பெரும் சலுகைகள் குறித்து அவர்களில் பலருக்கும் தெரியவில்லை.

நாட்டுக்கு என்ன நேர்கிறது என்பதும் தங்களுக்கு அது எந்த வகையில் தொடர்புள்ளது என்பதும் மக்களுக்குத் தெரிவதே இல்லை. வெல்லும் குதிரை மீது பந்தயம் கட்டுவதுதான் மக்களுடைய இயல்பு. ஆனால், இந்த முறை தானோ, தன் குடும்பமோ, கிராமமோ பாஜகவுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்றே நாங்கள் சந்தித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவித்தனர்.

இருந்தாலும், ‘மீண்டும் வருவார் மோடி’ என்ற முழக்கத்தைக் கேட்கிறேன். பாஜக தொண்டர்கள் இதை உரத்துச் சொல்லி, அற்ப திருப்தி அடைகிறார்கள். சில சமயம் தாங்கள் அடைய வேண்டிய வெற்றிக்காக இதைச் சொல்கின்றனர்; பல வேளைகளில் அடைய முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், கையறு நிலையில் முழங்குகின்றனர். ‘அசாதாரண’மான காலங்களில் ‘சாதாரண’மான முறையில் அரசியல் செய்வது அப்படியொன்றும் எளிதல்ல!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

நேர்மையாக, நியாயமாக நடக்குமா 2024 தேர்தல்?
ராகுலின் நியாய யாத்திரை நிகழ்த்தியுள்ள சாதனை
சர்வாதிகார நாடாகிறதா இந்தியா?
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
மோடி ஏன் எம்ஜிஆர் புகழ் பாடுகிறார்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

6

2





கால்ஆணிவளரிளம் பருவம்பூக்கள் குலுங்கும் கனவுபுதிய நுழைவுத் தேர்வுதிருப்புமுனைஉலகளாவிய வளர்ச்சிஅச்சமூட்டும் களவா?மாயத் தோற்றம்சிவப்பணுக்கள்ஜோக்கருணாதிலக பேட்டிசெமி-கன்டக்டர்தமிழகம்ஜாமியா பல்கலைக்கழகம்சீன ராணுவம்நேர்முக- மறைமுக உருவாக்கம்சிவாஜி பூங்காசாவர்க்கர் ராஜன் குறை பி.ஏ. கிருஷ்ணன்அமெரிக்காசந்தேகங்களும்!விருந்துகுக்கீ திருடன்முஸ்லிம்களுக்கு கிடைக்குமா அரசியல் அங்கீகாரம்?தமிழ் மரபில் கலக இலக்கியம்உபி தேர்தல்என்னால் என்னுடைய சாதியை மாற்றிக்கொள்ள முடியாதுஉலகம் ஒரு நாடக மேடைசாலைக் கட்டுமானம்உயர் நீதிமன்ற தீர்ப்புசஞ்சய் மிஸ்ரா: வெட்கமற்ற முன்னெடுப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!