கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
இந்தத் தேர்தல் ஏன் முக்கியமானது?
ராஜன் புத்திசாலியான மாணவர். கோழிக்கோடு பிராந்திய பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். 1976 மார்ச்சில் அன்று காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின் அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவர் தந்தை, சொத்துகள் அனைத்தையும் தன் மகனைத் தேடுவதில் செலவழித்தார். ஆட்கொணர்வு மனு (Habeus Corpus) என்னும் சட்ட வழியில் முதல் முதலாக கேரள உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, அவர் காவல் துறையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்னும் உண்மை வெளிப்பட்டது.
ஸ்டேன் ஸ்வாமி ஒரு கத்தோலிக பாதிரியார். 84 வயதான இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காகப் போராடிவந்தார். மஹாராஷ்டிரத்தில் நடந்த பீமா கோரேகான் வன்முறைச் சம்பவத்துக்கும் இவருக்கும் தொடர்புள்ளது எனச் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் 2020 அக்டோபரில் கைதுசெய்யப்பட்டார். இவர் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்குப் பிணை தொடர்ந்து மறுக்கப்பட்டது.
முதுமையின் தள்ளாமையில், பார்க்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்ட இவர் கைகளால் டம்பளரிலிருந்து நீரைக் குடிப்பதற்கே தடுமாற்றத்தை எதிர்கொண்டதால், சீப்பிக் குடிக்க ஒரு ஸ்ட்ரா வைத்த டம்பளர் வேண்டும் எனக் கேட்டார். இந்தச் சிறிய தேவைகூட அரசால் மறுக்கப்பட்டது. உலக நாடுகளின், இந்தியாவின் மனித உரிமைக் கழகங்கள் என அனைத்துமே அவரது முதிய வயதைக் கருதி அவருக்குப் பிணை அளிக்குமாறு கேட்டுக்கொண்டபோதும், அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது. பிணை மறுக்கப்பட்ட நிலையில், சிறையிலேயே அவர் உயிரிழந்தார்.
ஆக, 44 ஆண்டுகள் இடைவெளியில் நிகழ்ந்த இந்த இரண்டு சம்பவங்களுக்குள் என்ன ஒற்றுமை? என்ன வேற்றுமை?
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
முக்கியமானது ஜனநாயகம்
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், அரசில் நடந்த எவ்வளவு முறைகேடுகள் வெளிக்கொண்டுவரப்பட்டன என்று யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் பத்திரிகைகள் காரசாரமாக பல விஷயங்களிலும் அரசை விமர்சித்து எழுதும். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் ஏராளமான போராட்டங்களை நடத்தும். பிரதமரும், அமைச்சர்களும் எல்லாவற்றுக்கும் பதில் அளித்தார்கள். ஜனநாயகம் துடிப்பாகச் செயல்படுவது இப்படித்தான்.
இன்றைக்கு என்ன ஆயிற்று?
மோடியின் ஆட்சியில் 2023இல், ஒன்றிய அரசின் தணிக்கைத் துறை நெடுஞ்சாலை மற்றும் சுகாதாரத் துறைகளில் ரூ.7.5 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நிகழ்ந்தன என ஒரு தணிக்கை அறிக்கையை வெளியிட்டது. எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினாலும், 2 - 3 நாட்களைத் தாண்டி ஊடகங்கள் அதைப் பேசவேயில்லை. முன்னதாக மன்மோகன் சிங் ஆட்சியில், 2010இல் ரூ.1.7 லட்சம் கோடி அளவுக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக இதேபோல குற்றச்சாட்டு எழுந்தபோது எப்படி அதை நாடு எதிர்கொண்டது என்று யோசித்துப் பாருங்கள்.
ஊடகங்களின் வீழ்ச்சி
ஜனநாயகத்தில், பொதுவாக ஊடகங்கள் ஆளுங்கட்சியைக் கேள்விக் கேட்பவையாக இருக்க வேண்டும் என்பது உலக மரபு. நேருவின் காலம் தொடங்கி மன்மோகன் சிங் காலம் வரையில், ஊடகங்கள் பெரும்பாலும் அரசைக் கேள்விக் கேட்பவையாகவும், ஊழல்களை வெளிக்கொணர்வதில் முக்கியப் பங்கு வகிப்பவையாகவும் இருந்திருக்கின்றன. ஊடக வெளிச்சத்தினால் பல ஆட்சிகள் கவிழ்ந்திருக்கின்றன.
ராஜீவ் ஆட்சியில் ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டை ஊடகங்கள் எப்படிக் கையாண்டன; மோடி ஆட்சியில் ரஃபேல் விமான ஊழல் குற்றச்சாட்டை ஊடகங்கள் எப்படிக் கையாண்டன?
சென்ற 10 ஆண்டுகளில், ஊடகங்கள் முற்றிலுமாக அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளன. அரசின் மடியில் செல்லப் பிராணி போன்று அமர்ந்துகொண்டு அவை எதிர்க்கட்சிகளைப் பார்த்துக் குறைக்கின்றன. சென்ற பத்தாண்டுகளில் பல முக்கியமான ஊடகங்கள் அம்பானி கைகளிலும் அதானி கைகளிலும் கொண்டுவரப்பட்டுள்ளன. மக்கள் குரலைப் பிரதிபலித்த எத்தனையோ நல்ல ஊடகர்கள் இன்று வேலை பறிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஊடகங்களின் வீழ்ச்சி மக்களுடைய வீழ்ச்சி என்பதை நாம் உணர வேண்டும்.
மூன்று யதேச்சதிகார முடிவுகள்
சென்ற 10 ஆண்டுகளில், மோடி ஆட்சியில், சமூகத்தைப் பாதித்த பல யதேச்சதிகார முடிவுகள் எடுக்கப்பட்டன. மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளைத் தந்த முடிவுகள் பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம், கரோனா காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கம். உரிய முன்யோசனை இன்றி அவசரகதியில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளுக்கு நாடு கொடுத்த விலை அதிகம்.
பணமதிப்பிழப்பு குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்த முன்னாள் பிரதமரும் பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங், இந்த முடிவினால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2% வரை குறையும் எனக் கணித்தார். இந்த முன்னெடுப்பைத் ‘திட்டமிட்ட கொள்ளை; சட்டபூர்வமான சுரண்டல்’ (Organised Loot; Legalised Plunder) என்று வர்ணித்தார். அப்படித்தான் நடந்தது.
புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 99.7% நோட்டுகள் வெள்ளையாகி மீண்டும் வங்கிக்குத் திரும்பின. மக்கள் கொடுமையான அவதிக்குள்ளாகி அலைக்கழிந்ததுதான் மிச்சம். இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2% வரை குறைந்தது. ஊரகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பை அளிக்கும் கட்டுமானத் துறையும் சுணங்கியது.
பணமதிப்பிழப்பின் மீது விமர்சனம் வைத்தவர்கள் ‘தேசத் துரோகிகள்’ எனத் தூற்றப்பட்டார்கள். ஆளுங்கட்சியை விமர்சிப்பது, நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்னும் சொல்லாடல் ஊடகங்களில், பொதுவெளிகளில் பயன்படுத்தப்பட்டது. ஆளுங்கட்சியும், தேசமும் ஒன்றே என்னும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
பணமதிப்பிழப்பு தோல்வியடைந்ததை அடுத்து, மோடி ஜிஎஸ்டி என்னும் புதிய வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்வை, இந்திய சுதந்திரம் பெற்ற நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில், நள்ளிரவில் நிகழ்த்தினார். இதுவும், ‘புதிய இந்தியா பிறக்கிறது’ என்னும் அடையாளத்துடன் வந்தது.
துரதிருஷ்டவசமாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. மாறாக, சிடுக்குகள் நிறைந்ததாக மாறியிருந்தது. சாதாரண காலங்களில், இதுபோன்ற தோல்விகள் நாடாளுமன்றத்தில் பெருமளவு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும். ஊடகங்கள் குளறுபடிகளைப் பெரிதாக்கி அரசு தரப்புக்குக் கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தும் நெருக்கடிகளைக் கொடுத்திருப்பார்கள். மாறாக, ஊடகங்கள் எதிர்க்கட்சிகளைக் கேள்விக் கேட்பதிலும், அரசுக்கு ஆதரவளிப்பதிலுமே குறியாக இருந்தார்கள்.
கரோனா காலகட்டத்தில் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்ட பொது முடக்கம் காரணமாக மக்கள் எப்படி ஊருக்கு ஊர் அலைக்கழிந்தார்கள் என்பதை விவரிக்கத் தேவையே இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாக தான் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்பவராக அதிகாரத்தை வசப்படுத்திய மோடி அடுத்தகட்டத்தில் 'ஒரே நாடு - ஒரே தலைவர்' எனும் கனவை நோக்கி அடியெடுத்து வைக்கலானார்.
ஒரு நாடு, ஒரு தலைவர்
பத்தாண்டுகளில் எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்க எல்லா விதங்களிலான நடவடிக்கைகளையும் எடுத்த மோடி தன்னுடைய சொந்த கட்சியையுமே இன்று முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார். நாட்டின் பெரும்பாலான முடிவுகளை மோடி - ஷா இருவர் மட்டுமே எடுக்கின்றனர் என்பதும், அமைச்சரவை என்பதே ஒரு சம்பிரதாய கொலு என்பதும் பாஜகவுக்குள்ளேயே பேசப்படும் விஷயம் ஆகிவிட்டது. பாஜக ஆளும் பல மாநிலங்களின் முடிவுகள் டெல்லியிருந்தே எடுக்கப்படுகின்றன.
பாஜக உண்மையில் இன்று ஒருநபர் அதிகார கட்சியாகச் சுருங்கிவிட்டது. நாட்டையும் அப்படி மாற்றிட அடுத்தகட்ட நடவடிக்கைகளில் மோடி ஈடுபட்டிருக்கிறார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில், ஆட்சி நிர்வாகம் என்பது மூன்று தளங்களில் உருவகிக்கப்பட்டது. ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள். மூன்றுக்குமான அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மிக முக்கியமானவை மாநில அரசுகள். அவைதான் மக்களுடைய பெரும்பான்மை வேலைகளை நிறைவேற்றுகின்றன. இந்த மாநில அரசுகளை அதிகாரமற்றதாக்கும் காரியத்தை மிக வீரியமாக மோடி அரசு கடந்த பத்தாண்டுகளாகச் செய்துவந்தது.
அரசமைப்புச் சட்டப்படி, விற்பனை வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருந்தாலும், நடைமுறையில் அது சாத்தியமே இல்லை என்னும் நிலைக்குப் போய்விட்டது. இன்று மாநிலங்கள் நிதி அதிகாரமில்லாத நிர்வாக அலகுகள். அவற்றுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெரும் வித்தியாசம் இல்லை.
அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கை
இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தை வகுத்தளித்த அண்ணல் அம்பேத்கர் நம் நாட்டு மக்களுக்கு விடுத்த ஓர் எச்சரிக்கையை இந்தத் தருணத்தில் நினைவுகூர வேண்டும். “ஆன்மீகத்தில் பக்தி என்பது முக்திக்கு உதவலாம். ஆனால், அரசியலில் அது சீரழிவை உருவாக்கி, சர்வாதிகாரத்தில் கொண்டு நிறுத்திவிடும்!”
நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்க ஏன் அம்பேத்கர் தலைவர்கள் மீதான பக்தி நிலைக்கும் யதேசத்திகாரத்துக்கும் எச்சரிக்கை விடுத்தார்? ஏன் எந்த விஷயத்தையும்விட இந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்? ஏனென்றால், ஜனநாயகத்துக்கான மாபெரும் எதிரி யதேச்சதிகாரமும் அதற்கு வழிவகுக்கும் தனிமனித வழிபாடும்தான்.
பன்னெடுங்காலமாக நிலவுடைமையும் சாதிய ஆதிக்கமும் நிலவிய இந்தியச் சமூகத்தில் எல்லோருக்குமான ஓட்டுரிமை என்பது சாதாரணமாகக் கிடைத்தது அல்ல. சாமானிய மக்கள் நமக்கு கிடைத்த மாபெரும் அதிகாரம் அது. ஒரு ஓட்டில் தோற்ற வேட்பாளருக்கும் இங்கே உதாரணம் உண்டு; ஒரே ஓட்டில் கவிழ்ந்த அரசுக்கும் இங்கே உதாரணம் உண்டு. இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல்களில் ஒன்று இது. முடிவெடுக்கும் முன் அடுத்தடுத்த தேர்தல்களில் இதே அதிகாரம் நம்மிடம் இருக்க வேண்டும் என்று கருதி முடிவெடுக்க வேண்டும்.
மக்கள் தங்களுடைய மாபெரும் அதிகாரத்தை வீணடித்திடக் கூடாது. ஒரு விரல் மூலம் ஜனநாயகப் புரட்சியை உருவாக்குவோம்!
தொடர்புடைய கட்டுரைகள்
1977: மீண்டும் நினைவுக்கு வருகிறது
மீண்டும் மோடி: மக்களிடையே அச்சம், விரக்தி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
மோடி ஏன் எம்ஜிஆர் புகழ் பாடுகிறார்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.