கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

முலாயம் சிங் யாதவ்: ஒரு சகாப்தம்

வ.ரங்காசாரி
11 Oct 2022, 5:00 am
1

ந்திய அரசியலர்களில் ஒரு சகாப்தம் என்றே முலாயம் சிங் யாதவைக் குறிப்பிட வேண்டும். நவீன இந்தியாவில் உருவெடுத்த பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர். எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டு, இந்தியாவின் மதச்சார்பின்மை அரசியல் சக்திகளில் ஒருவராக இறுதி வரை நின்றவர். வட இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் தோன்றிய இரு பெரிய தலைவர்கள் என்று லாலு பிரசாத் யாதவுடன் இணைத்துச் சுட்டப்பட்டவர் முலாயம் சிங் யாதவ். உத்தர பிரதேசம், பிஹாரில் தம்முடைய அரசியலுக்கான பெரும் தடைக்கற்கள் என்று காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்டுகள் மூன்று தரப்பினருமே நினைத்தார்கள். குறிப்பாக, பாஜகவின் பெரும் சவால்களின் பட்டியலில் இருவரின் பெயரும் உண்டு.

இளமைப் பருவம்

சாதாரண கிராமப்புறப் பின்னணியிலிருந்து வந்தவர் முலாயம் சிங் யாதவ். மூர்த்தி தேவி – சுகார் சிங் தம்பதியின் மகனாக சைஃபாய் கிராமத்தில் 1939 நவம்பர் 22இல் பிறந்தார். முலாயமுக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி. அரசியல் அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டமும் ஆசிரியர் பயிற்சியில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். மைன்புரியில் ஜெயின் கல்லூரியில் சிறிது காலம் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

ஒரு பேராசிரியராகி இருக்க வேண்டியவரின் வாழ்வை அரசியல் நோக்கித் திருப்பியது சோஷலிஸ்ட் இயக்கம். முதுபெரும் சோஷலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோகியாவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதன் விளைவாக அரசியலுக்கு வந்தார் முலாயம். லோகியாவின் சீடரும் பிற்பாடு இந்திரா காந்தியின் கொடுங்கனவாகவும் மாறிய ராஜ் நாராயணன்தான் முலாயமின் அரசியல் முன்னோடியாக இருந்தார்.

காங்கிரஸ், பாஜக இரண்டையுமே விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்த்தார் முலாயம். உத்தர பிரதேச அரசியலைப் பொருத்த அளவில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே அப்போது முற்பட்ட சாதிகளின் ஆதிக்கத்தில் இருந்தன. பிராமணர்கள், தாக்கூர் உள்ளிட்ட முற்பட்ட சாதிகளுக்கு ஐந்தில் ஒரு பங்கு வாக்குகளோடு, நிலவுரிமை, அரசதிகாரம் என்று சகல பலங்களும் இருந்ததால், அரசியலிலும் பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள், தலித்துகள் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் இருந்தார்கள். இவர்களுக்கான தளமாகத் தன்னுடைய அரசியல் இருக்க வேண்டும் என்று எண்ணினார் முலாயம். அதேசமயம், கம்யூனிஸ கொள்கைகளிலும் அவருக்கு ஈர்ப்பு இல்லை. விளைவாக, இந்த மூன்று அமைப்புகளோடும் ஊடாடி உருவெடுத்த சோஷலிஸ்ட் இயக்கம் அவருடைய தேர்வாக இருந்தது. லோக் தளம், ஜனதா கட்சி, ஜனதா தளம் என்று பயணப்பட்டு பிறகு, சமாஜ்வாதி கட்சியை உருவாக்கினார்.

1967க்குப் பிந்தைய சக்தி

நேரு, சாஸ்திரியின் மறைவுக்குப் பின் நடந்த 1967 தேர்தல் காங்கிரஸுக்குப் பெரும் சறுக்கல் தந்தது. அந்தத் தேர்தலில்தான் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அந்த ஆண்டில்தான் உத்தர பிரதேச மாநிலச் சட்டப்பேரவைக்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் முலாயம் சிங். காங்கிரஸின் கடைசி முதல்வர் திவாரி 1991இல் இவரிடம்தான் ஆட்சியைப் பறிகொடுத்தார்.

முலாயம் சிங் 1991இல் காங்கிரஸின் ஆதரவோடு முதல்வரானார். அடுத்து 1993இல் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து முதல்வரானார். அடுத்து 2003இல் சிறிய கட்சிகளின் ஆதரவோடு முதல்வரானார். மூன்று முறையுமே முழு ஆட்சிக் காலத்தையும் அவர் ஆளவில்லை. இதற்கு முக்கியமான காரணம் முழுப் பலத்துடன் அவருடைய கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வரவில்லை என்பதும், ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ எனும் வகையில், இன்னொருவர் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் பொருட்டான ஆதரவின் அடிப்படையிலேயே அவர் ஆட்சிக்கு வந்தார் என்பதும்தான்.

மூன்று தசாப்தங்களாக உத்தர பிரதேசத்தில் நான்கு முனைப் போட்டி அரசியலே நிலவுகிறது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பாஜக, காங்கிரஸ். இந்தப் போட்டியில் உத்தேசமாக 20%-25% ஓட்டுகளை வாங்கும் கட்சியாக முலாயம் சிங் கட்சி இருந்தபோதிலும், முழுப் பலத்துடன் ஆட்சியில் அமரும் வாய்ப்பு அதற்கு 2012 தேர்தலிலேயே கிடைத்தது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், 29.15% ஓட்டுகளைப் பெற்று 224 தொகுதிகளை அது வென்றது. யாரும் எதிர்பாராத வகையில், தன்னுடைய மகன் அகிலேஷ் யாதவை இம்முறை முதல்வராக்கினார் முலாயம். ஐந்தாண்டுகளை அவர் பூர்த்திசெய்தார்.

தேர்தல் உத்தி

பிஹாரில் லாலு பிரசாத் யாதவுக்கு அமைந்ததுபோலவே உத்தர பிரதேசத்தில் யாதவ சமூகத்தினர் ஓட்டுகள் முலாயம் சிங் யாதவுக்கு அடித்தளமாக இருந்தன. மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள்தொகை 45%. இவர்களில் யாதவர்கள் 9%. இவர்கள் கிட்டத்தட்ட முழுமையாக முலாயமை ஆதரித்தார்கள். அதேபோல, மக்கள்தொகையில் 19% உள்ள முஸ்லிம்களில் பெரும் தொகையினரும் முலாயமை ஆதரித்தார்கள். இதோடு ஏனைய சமூகத்தினரையும் உள்வாங்குவதே முலாயமின் தேர்தல் உத்தியாக இருந்தது.

பிஹாரில் லாலுவால் தலித் மக்களையும் அரவணைத்துச் செல்ல முடிந்தது. உத்தர பிரதேசத்திலோ முலாயமால் அது முடியவில்லை. குறிப்பாக, தலித்துகளின் அரசியல் வடிவமாக உருவெடுத்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியுடனான முலாயமின் மோதலும், இருவருக்கும் இடையிலான பகையும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இரு கட்சிகளுக்குமே பின்னடைவைத் தந்தது.

பாஜகவின் எழுச்சிக்கு இந்த இரு கட்சிகளின் பின்னடைவும் ஒரு முக்கியமான காரணம். பிற்பாடு, அகிலேஷ் தலையெடுத்த பிறகு, 2019 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளுமே இதை உணர்ந்து கை கோத்தன என்றாலும், சமூகத்திலும், அரசியல் களத்திலும் இருந்த முரண்களுக்கு முகம் கொடுக்காத இந்த இணைவு தோல்வியையே தந்தது. இருவரும் ஒருவரையொருவர் சாடிக்கொண்டனர்.

முலாயம் அரசியலின் இன்னொரு போதாமை, பிற்படுத்தப்பட்ட மக்களிலும்கூட, தான் சார்ந்த யாதவ சமூகத்துக்குக் கிடைத்த பிரதிநிதித்துவம் பல சமூகங்களுக்கும் கிடைப்பதை அவர் உறுதிபடுத்த தவறிவிட்டார் என்பது ஆகும். இதேபோல, பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சியில் மாயாவதி, தான் சார்ந்த ஜாதவ சமூகத்துக்குக் கிடைத்த பிரதிநிதித்துவம் ஏனைய தலித் சமூகங்களுக்கும் கிடைப்பதை உறுதிபடுத்த தவறினார். இந்தப் பலகீனத்தை பாஜக சரியாக இனம் கண்டு தாக்கியது. யாதவர்கள் அல்லாத பிற்படுத்தப்பட்டோர், ஜாதவர்கள் அல்லாத தலித்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் பக்கம் அவர்களை அது ஈர்த்தது.

அரசியல் நிலைப்பாடு

பாஜகவுக்கு மிகப் பெரிய அரசியல் எதிரியாக இருந்தபோதிலும், சித்தாந்தரீதியாக ‘மதச்சார்பின்மை’ ஒரு விஷயம் நீங்கலாக பெரிய உள்ளடக்க மாற்றம் எதையும் சமாஜ்வாதி கட்சிக்குக் கொடுக்கத் தவறிவிட்டார் முலாயம்.

வலுவான மாநிலங்கள், நெகிழ்வான ஒன்றிய அரசு என்ற கூட்டாட்சிக் கொள்கையை அவர் ஆதரித்தாலும், அந்த நெகிழ்வு ஆட்சியாளர்களின் அணுகுமுறையைத் தாண்டியதாகத் தெரியவில்லை. இந்திக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று சொல்லி ஆங்கிலத்தை எதிரியாகப் பார்த்தவர் அவர்.

பாஜக பாகிஸ்தானை பிரதான எதிரியாகச் சித்திரித்தது என்றால், சமாஜ்வாதி சீனா பிரதான எதிரி என்றது. “திபெத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்; அது சீனத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே தடுப்புச் சுவராக இருக்க முடியும்” என்று கூறும் அளவுக்குத் தீவிரமான பார்வை கொண்டிருந்தார் முலாயம்.

பாபர் மசூதி இடிப்பைக் கடுமையாக எதிர்த்தவர் முலாயம். ஆனால், பிற்பாடு அந்த இடம் உச்ச நீதிமன்றத்தால் இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்டு, ராமர் கோயில் கட்டும் பணியை பாஜக முன்னெடுத்தபோது, சமாஜ்வாதி கட்சி பரசுராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று பேசலானது. காஷ்மீர் விவகாரத்தில், படையினருக்கு முழுச் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று பேசினார் முலாயம்.

நிர்வாகத்திலும் பெரிய மாற்றங்கள் எதையும் முலாயம் செய்திடவில்லை. நிலச் சீர்திருத்தம், கல்வி – சுகாதாரத்துக்கு முன்னுரிமை, சாலை – போக்குவரத்து வசதிகள் மேம்பாடு, சட்டம் - ஒழுங்கில் உறுதி என்று குறிப்பிடும்படியான சாதனைகள் எதையும் அவரால் செய்ய முடிந்ததில்லை. முழுப் பலம் இல்லாத ஆட்சி என்பதும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.

குடும்பக் குழப்பங்கள்

மோடி ஏன் ‘குடும்ப அரசியல் இந்தியாவின் பெரிய எதிரி’ என்று பேசுகிறார் என்றும், அது எந்த அளவுக்குத் தேர்தல் களத்தில் பாஜகவுக்குப் பெரும் அறுவடையைத் தரக்கூடிய விவகாரம் என்றும் ஒருவர் அறிந்துகொள்வதற்கு முலாயமைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். பெரிய குடும்பமான முலாயமின் சுற்றத்தார் எப்போதும் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தினர் என்றாலும், 2012-2017 ஆட்சியில் இந்த அதிகாரச் சண்டை உத்தர பிரதேசத்தில் சந்தி சிரித்தது.

முலாயமின் முதல் மனைவி மாலதி தேவி 1973இல் உடல் நலம் பாதிக்கப்பட்டு, 2003இல் இறக்கும்வரை படுத்த படுக்கையாகவே இருந்தார். அவர் வழியே பிறந்த ஒரே பிள்ளை அகிலேஷ். 1980களில் முலாயமுக்கு சாதனா குப்தாவுடன் உறவு உண்டானது. முலாயமைக் காட்டிலும் 20 வயது இளையவர் சாதனா. ஏற்கெனவே மணமான அவருக்கு மகன் பிரதீக் இருந்தார். திருமணமான சில ஆண்டுகளிலேயே அந்த உறவு முறிந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த உறவை முதல் மனைவியின் மறைவுக்குப் பின்னரே உலகுக்கு அறிவித்தார் முலாயம். கூடவே பிரதீக்கைத் தன் மகனாகவும் சுவீகரித்தார்.

2012இல் அகிலேஷை முதல்வர் ஆக்கிய பிறகு, பிரதீக் ஒரு போட்டியாக உருவெடுத்தார். அகிலேஷ், அவர் மனைவி; பிரதீக், அவர் மனைவி; கூடவே முலாயமுடன் பிறந்த நால்வர் - அவர்களுடைய வாரிசுகள் என்று ஒரே சமயத்தில் பல அதிகார மையங்கள் முளைத்தன. அகிலேஷ் தலைமையில் ஓர் அணியாகவும், சாதனா தலைமையில் ஓர் அணியாகவும் இவர்கள் திரண்டார்கள். அதிகாரிகள் யாருக்குப் பதில் சொல்வது என்று அல்லோலகலப்பட்டனர். ஒருகட்டத்தில் முலாயமுக்கும் அகிலேஷுக்குமே கடும் மோதல் உருவானது. ஒருவரை மற்றொருவர் கட்சியிலிருந்து நீக்கியும், பின்னர் சேர்த்தும் அறிவிப்புகளை வெளியிட்டனர்.

2017 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குப் போனபோது பிரதமர் மோடி கேட்ட முக்கியமான கேள்விகளில் ஒன்று, “தந்தையின் பேச்சையே மதிக்காத மகன் (அகிலேஷ்) எப்படி வாக்களித்த மக்களுடைய பேச்சைக் கேட்பார்?”

மோடி கேட்ட கேள்வி சரிதான் என்று பேட்டி கொடுத்தார் முலாயம்.

முந்தைய சமாஜ்வாதி ஆட்சிகளில் இல்லாத பல நல்ல விஷயங்களை அகிலேஷ் முயன்றபோதும்கூட அவர் அரசு 2017இல் மோசமாக தோற்கடிக்கப்பட குடும்ப அரசியல் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தது. கட்சி ஒருவழியாக அகிலேஷுக்குப் பின் திரண்டபோது, பிரதீக்கின் மனைவி - முலாயமின் இன்னொரு மருமகள் – பாஜகவில் போய் சேர்ந்தார். ஆசி கேட்க வந்த மருமகளிடம் எதையும் பேசும் நிலையில் இல்லை முலாயம்.

இந்த ஆண்டில் சில மாதங்களுக்கு முன் முலாயமின் மனைவி சாதனா மறைந்தார். அடுத்து, முலாயமின் காலமும் முடிவுக்கு வந்திருப்பது ஒருவகையில் சமாஜ்வாதி கட்சியில் அகிலேஷின் கைகளுக்குள் முழு அதிகாரத்தையும் கொண்டுவந்திருப்பதாகச் சொல்லலாம்.

எப்படி நினைவுகூரப்படுவார்?

இவ்வளவு குறைகள் – பலவீனங்கள் இருந்தாலும், ஒரு விஷயத்துக்காக நிச்சயம் நினைவுகூரப்படுவார் முலாயம். அது, சமூக நல்லிணக்கத்தில் அவர் கொண்டிருந்த பற்றுறுதி. வட இந்திய அரசியலில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் முன்னகர அவருடைய அரசியல் பெரும் பங்கு அளித்திருக்கிறது. கடுமையான சாதி, மதப் பிளவுகள் ஆதிக்கம் செலுத்தும் வட இந்தியச் சமூகப் பின்னணியில் கூடுமானவரை எல்லாச் சமூகங்களையும் ஒருங்கிணைக்க முயன்றார் முலாயம்.

அரசியல் நிலைப்பாடுகளையும், தனிப்பட்ட உறவுகளையும் எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதில் கூடுமானவரை அக்கறையோடு செயல்பட்டார். பாஜகவின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தபோதிலும், வாஜ்பாய், அத்வானி, மோடி எல்லோருடனும் நல்லுறவு அவருக்கு இருந்தது. சோனியா, ராகுலுடன் நெருக்கமான உறவு இருந்தபோதிலும், 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் தன் மகன் அகிலேஷ் உருவாக்கிய கூட்டணியை அவர் எதிர்த்தார். “தோல்விக்குக் காரணம் காங்கிரஸுடனான கூட்டணி” என்றார்.

முக்கியமாக, பெரும்பான்மைச் சமூகத்தினரின் அரசியல் தார்மிகம், சிறுபான்மைச் சமூகத்தினருக்கான நல்வாழ்வு, பாதுகாப்பிலும் இருக்கிறது என்பதில் உறுதிபட இருந்தார் முலாயம். எப்படியும் ஒரு சகாப்தம் அவர் வாழ்க்கை; முடிவுக்கு வந்தது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வ.ரங்காசாரி

வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். விமர்சகர். ‘அருஞ்சொல்’ இதழின் துணை ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’யில் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க நிர்வாகியாகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்கவர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com


2

3





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

S.Elangovan   1 year ago

முலாயம் சிங் யாதவ் 1989ல் ஜனதாதளம் சார்பில் காங்கிரஸின் என்.டி.திவாரியை தோற்கடித்து முதல்வரானார். பின்னர் சந்திரசேகரின் ஆதரவாளராக மாறி காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராக தொடர்ந்தார். காங்கிரஸ் ஆதரவைத் திரும்பப் பெற்ற பின் பதவி இழந்தார். கட்டுரையாளர் இதில் தவறான தகவல் கொடுத்துள்ளார். ஆசிரியரும் கவனிக்கவில்லை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தான்சானியாமக்கள்தொகை: எந்த இடத்தில் நிற்கிறது இந்தியா?தமிழுணர்வுவருவாய்ப் பற்றாக்குறைதருமபுரிகாலனி ஆதிக்கம்பிசினஸ் ஸ்டேண்டர்டுகழிவுஜனநாயகப் பண்புதலித் தலைவர்குமுதம்அண்ணாவின் மொழிக் கொள்கைபழ.அதியமான் கட்டுரைமு.கருணாநிதிஅரபு நாடுகள்செபிமருதன் கட்டுரைதலித் அரசியலின் எதிர்காலம்திராவிட முன்னேற்ற கழகம்ஜெயகாந்தன்தந்தை வழிஊடகர் ஹார்னிமன்40 சதவீத சர்க்கார்ராமச்சந்திர குஹா நரேந்திர மோடிபுலம்பெயர்ந்தோர் எதிர் உள்ளூர் சமூகம் முற்போக்கானது: உண்மையா?கால் வீக்கம்உமேஷ் குமார் ராய் கட்டுரைநல்வாழ்வுவிருந்து

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!