கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

தேர்தல்கள்: மாறாத உண்மைகள்

கோபால்கிருஷ்ண காந்தி
30 Jun 2024, 5:00 am
0

நாடு முழுவதையும் 2024 மக்களவை பொதுத் தேர்தல் காய்ச்சல் பிடித்திருந்தபோது நம்மை பெரிதும் அச்சப்படுத்தும் வகையில் ஒரு தகவல் திரும்பத் திரும்பக் கூறப்பட்டது; “இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தோற்கடிக்கப்படாவிட்டால், நரேந்திர மோடியே மீண்டும் பிரதமரானால் - இனி தேர்தல்களே இருக்காது.” இதைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அடிக்கடி கூறினார், பர்காலா பிரபாகர் தனது பேட்டிகளில் வலியுறுத்தினார்.

சரி இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்துவிட்டது, மோடியும் பிரதமராக பதவியேற்றுவிட்டார் மூன்றாவது முறையாக. இனி மேல் தேர்தலே நடைபெறாது என்று இப்போது யாரும் பேசவில்லை! இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜகூ) அல்ல – இந்திய வாக்காளர்தான் வெற்றிபெற்றிருக்கிறார். தேர்தல் கணிப்பாளர் யோகேந்திர யாதவும் மிக கவனமாக மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இந்த முடிவை முன்கூட்டியே சரியாகக் கணித்தார்.

ஒடிஷா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தேஜகூவுக்கு திட்டவட்டமான ஆதரவைத் தந்தன, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரம் தேஜகூவை அடியோடு தூக்கி வீசின. எல்லாவற்றையும் கூட்டி, கழித்துப் பார்த்தால் இரண்டு அம்சம் தெளிவாகிறது; தேஜகூ அணிக்கு தீர்ப்பை அல்ல - ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளனர் வாக்காளர்கள்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

‘நாலில் மூன்று பங்கு – மூன்றில் இரண்டு பங்கு என்றெல்லாம் கணக்குப் போடாதீர்கள், உங்களைவிட வாக்காளனாகிய நான் பெரியவன்’ என்பது அந்தப் பாடம்; ‘இந்தியா’ கூட்டணிக்கு அது விரும்பியபடி நல்ல முடிவைத் தரவில்லை, மாறாக அதற்கும் ஒரு பாடத்தைக் கற்றுத்தந்திருக்கிறது: ‘நியாயம் வேண்டும் என்று கேட்டு என்னிடம் வந்தீர்கள், நானும் நியாயமாக நடந்துகொண்டிருக்கிறேன், ஆனால் உங்களை வலிமையாக தூக்கிக்கொண்டுபோய் ஆட்சி பீடத்தில் உட்கார்த்தி வைக்க வேண்டும் என்றால், தொடர்ந்து உறுதியாகச் செயல்படுங்கள் – தூய்மையான கரங்களோடு’ என்று.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

1920: இந்தியத் தேர்தல் நடைமுறையின் தொடக்கம்

சக்ஷு ராய் 11 Apr 2024

ஞாபகம் வருதே

வியக்க வைக்கும் இந்தத் தேர்தல் முடிவின் இருவிதப் பாடங்களையும் நினைக்கும்போதே 1951-52இல் நடந்த முதலாவது பொதுத் தேர்தல் நினைவுக்கு வந்தது, ஜவஹர்லால் நேருவும் காங்கிரஸ் கட்சியும் வாக்குச் சீட்டு உதவியுடன் மத்திய அரசில் முதல் முறையாக பெரும் பலத்துடன் ஆட்சிக்கு வர முடிந்தது.

சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை, ‘பாதிக்கும் குறைவான மக்கள் ஆதரவு பெற்ற தேர்தல்’ என்றுதான் கூற வேண்டும். வாக்களிக்கும் தகுதி பெற்றவர்களில் பாதிக்கும் குறைவானவர்களே நாடு முழுவதும் சராசரியாக வாக்களித்தனர். அந்தப் பாதியிலும் பாதிப் பேர், காங்கிரஸுக்கு அதாவது - நேருவுக்கு வாக்களிக்கவில்லை! ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர் என்ற கொள்கை அடிப்படையில், அப்போது தேர்தல் நடந்த 489 தொகுதிகளில் 364இல் காங்கிரஸ் கட்சி வென்றது. முதல் அரசை நேருவால் வெகு எளிதாகவும் மக்களுடைய பேராதரவுடனும் அமைக்க முடிந்தது. அந்தத் தேர்தல் 5 நிலையான உண்மைகளை உணர்த்தியது.

முதலாவது, இந்தியாவிலாவது தேர்தல் மூலம் ஜனநாயக அரசு ஏற்படுவதாவது என்று கேலி பேசியவர்களுடைய வாய்களை அது மூடவைத்தது.

இரண்டாவது, ‘வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை’ அளிப்பது என்று தலைவர்கள் எடுத்த முடிவு எவ்வளவு விவேகமானது என்பது தேர்தல் முடிவில் வெளிப்பட்டது. அதிக கல்வி அறிவு இல்லாத வாக்காளர்களும் - அனுபவ அறிவால் ஆய்ந்துணர்ந்து ஆதரவளித்தனர்.

மூன்றாவது, அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கும் கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு ஒத்துழைத்ததன் மூலம், உயர் நிறுவனங்களுடைய வேலை என்ன என்பது தங்களுக்குத் தெரியும் என்று இந்தியா உணர்த்தியது.

நான்காவதாக, மத அடிப்படையில் இரு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த இந்தியாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து ஒரே குடியரசின் சம உரிமையுள்ள குடிமக்களாக, அச்சமில்லாமல் தங்களுடைய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

ஐந்தாவதாக, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிற நாடுகளுக்கு ஜனநாயக நடைமுறைகளில் இந்தியா நல்ல முன்னுதாரணமாக மாறியது. இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் ஐசிஎஸ் (1898-1963) மேலும் பல வளரும் நாடுகளால் ஆலோசனைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் தொடர்ந்து அழைக்கப்பட்டார்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

பிரதமர் நேருவின் 1951 - 1952 பிரச்சாரம்

ராமச்சந்திர குஹா 01 May 2024

அந்தத் தேர்தலின்போது வேறு ஐந்து உண்மைகள் வெளிப்பட்டதையும் நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

முதலாவது, வாக்குப்பதிவு 50%க்கும் குறைவாக – சரியாகச் சொல்வதென்றால் 45.7% - இருந்தது, சலிப்பு காரணமாக வாக்களிப்பதில் ஆர்வம் இல்லாமல் வாக்காளர்கள் இருக்கக்கூடும் என்று அப்போதே அது எச்சரித்தது.

பதிவான வாக்குகளில் 55% எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வெவ்வேறு வேட்பாளர்களுக்கு விழுந்தன என்றாலும் எதிர்க்கட்சி எதுவும் வலிமையுடன் உருவாகவில்லை, எதிர்க்கட்சிகள் பிளவுபட்டிருந்தால் அவற்றால் வெற்றிபெற முடியாது என்ற உண்மையும் அப்போதே உணர்த்தப்பட்டது.

மூன்றாவது, காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டு மாபெரும் தலைவர்கள் ஆசார்ய கிருபளானி (ஃபைசாபாத்-உ.பி.), பாபாசாஹேப் அம்பேத்கர் (மும்பை வடக்கு) ஆகிய இருவரும் அவ்வளவாக அறிமுகமில்லாத சாதாரண காங்கிரஸ் வேட்பாளர்களிடம் தோற்றனர். வேட்பாளர்கள் யார் என்று பார்க்காமல், கட்சி எதுவென்று பார்த்தும் வாக்களிக்கிறார்கள் என்ற உண்மை அப்போது வெளிப்பட்டது.

நான்காவது, நேரு என்ற மாபெரும் தலைவர் இந்திய வாக்காளர்களை தனது ஆளுமையால் பெரிதும் ஈர்த்திருந்தார், அவருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு வாக்காளர்கள் வாக்களித்தனர் என்பதும் வெளிப்பட்டது.

ஐந்தாவது, கல்கத்தாவிலிருந்து எதிரெதிர் துருவங்களான சித்தாந்தம் கொண்ட இரண்டு தலைவர்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாரதிய ஜனசங்கம் கட்சியைச் சேர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி என்ற வலதுசாரி தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹிரேன் முகர்ஜி என்ற இடதுசாரி தலைவரும் வென்றனர். எதிர்கால இந்தியாவில் இவ்விரு கருத்துள்ளவர்களும் தேர்தலில் தீவிரமாகப் போட்டியிடுவார்கள் என்பதும் தெரிந்தது.

அம்பேத்கர் தோல்வி

பம்பாய் வடக்கு தொகுதியானது பூனா உடன்படிக்கைப்படி பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டது. அங்கே பட்டியல் இன சம்மேளனத்தின் வேட்பாளாரகப் போட்டியிட்டார் அம்பேத்கர். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகம் கேள்விப்பட்டிராத, நாராயண் சதா கஜ்ரால்கர் நிறுத்தப்பட்டார். கஜ்ரால்கர் 1,38,137 வாக்குகளும் அம்பேத்கர் 1,23,576 வாக்குகளும் பெற்றனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அமைப்பின் தலைவராக இருந்தவரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய அரசில் சட்ட அமைச்சர் பதவி வகித்தவருமான அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போட்டியிட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ‘அம்பேத்கரின் கருத்துகளுடன் வேறுபடுகிறோம் ஆனால் அவருடைய மேதைமையும் ஆலோசனைகளும் நாடாளுமன்றத்துக்கு அவசியம், எனவே அவருக்கு எதிராக வேட்பாளர் எவரையும் நிறுத்தப் போவதில்லை’ என்று காங்கிரஸ் பரந்த மனதுடன் முன்வந்திருந்தால் மிகவும் வரவேற்கப்பட்டிருக்கும். காங்கிரஸ் விட்டுத்தருவதாக இல்லை. இந்தியக் குடியரசுத் தோட்டத்தில் நோய் தீர்க்கும் மூலிகைகளும் குளிர்ச்சியூட்டும் பூஞ்செடிகளும் பயன்தரும் பழ மரங்களும் பூத்துக் குலுங்க வேண்டியதிருக்க, அரசியல் மாச்சரியம் என்ற களையும் சேர்ந்தே பயிராக்கப்பட்டது.

அதேதான் கிருபளானி விஷயத்திலும் நடந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது காங்கிரஸ் கட்சிக்கு தேசியத் தலைவராக இருந்தவர் ஆசார்ய கிருபளானி, அரசமைப்புச் சட்டத்தை இயற்றக்கூடிய பேரவையில் முதலாமவராக பேச அழைக்கப்பட்டவர், சுதந்திரப் போராட்டத் தியாகி. முதலாவது மக்களவையில் இடம்பெற முடியாமல் தோற்கடிக்கப்பட்டார் என்பது அனைவருக்கும் நினைவில் பதிந்தது, அவரைத் தோற்கடித்தவர் யார் என்பது எவருடைய நினைவிலும் இல்லை.

மேலே கூறிய பத்து உண்மைகளிலிருந்து நாம் அறியக்கூடிய பாடம் இன்னொன்று, அதாவது நல்ல வேட்பாளர்கள்கூட தோற்றுப்போவார்கள்.

2024 தேர்தல் உண்மைகள்

முதலாவது, போட்டியிடும் வேட்பாளர் நல்லவர் என்றால் அவரை எதிர்த்து எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டாலும் அவதூறுகள் பரப்பப்பட்டாலும் அவர் வெற்றிபெறுவது உறுதி.

இரண்டாவது, ஒரு பிரிவு மக்களுடைய சுயமரியாதை ஒட்டுமொத்தமாக அவமதிக்கப்பட்டால், அந்த அவமானத்தை எதிர்த்து எந்தச் சக்தியாலும் வெல்ல முடியாது.

மூன்றாவது, அநீதி இழைக்கப்பட்ட ஒரு பெண்மணி போட்டியிட்டால் அவரை எதிர்க்கும் வேட்பாளரைவிட நூறு மடங்கு பலம் பெற்றவராகிவிடுகிறார்.

நான்காவது, தேர்தல் ஆணையம் ஆங்காங்கே சில சறுக்கல்களைச் சந்தித்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தலைநிமிர்ந்து நிற்கிறது.

ஐந்தாவது, மத அடிப்படையிலான இரு நாடுகள் கொள்கையை வாக்காளர்கள் தொடர்ந்து நிராகரித்துவருகின்றனர்.

அதேசமயம் வேறு ஐந்து உண்மைகளும் கவனத்துக்குரியவை.

முதலாவது, வாக்களிப்பதில் வாக்காளர்கள் பலருக்குள்ள சலிப்பு இன்னமும் தொடர்கிறது, அனைத்து வாக்காளர்களுடைய தெரிவு எதுவென்று அறிய முடியாமல் தடுக்கிறது.

இரண்டாவது, தேர்தலை ஒட்டி கட்சி மாறி, வேட்பாளராகவும் வாய்ப்பு பெறும் கட்சி மாறிகளையும் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்வது வியப்பாக இருக்கிறது.

மூன்றாவது, தேர்தல் பரப்புரைகளில் சில தலைவர்களின் பேச்சு சாக்கடையைவிட மோசமாக முடைநாற்றமடிக்கிறது.

நான்காவதாக, வாக்குகளுக்காக சில சமூகங்களை இணைத்துக்கொள்வது, புகழ்வதைப் போலவே – குறிவைத்துத் தாக்குவது, விலக்குவதும் அதிகமாகிவருகிறது.

ஐந்தாவது, மூன்றாவது நாலாவது உண்மைகள் களத்தில் இருந்தாலும் எந்த வகையிலும் வாக்காளர்களின் நடுநிலையான முடிவுகளை அவை மாற்றுவதில்லை.

இவ்வாறாக, இந்தியாவில் தேர்தல்கள் உரிய காலத்தில் இனியும் தொடரும் என்பது இந்தத் தேர்தல் முடிவு மூலம் உறுதியாகிவிட்டது. தேர்தலில் பல பலவீனங்கள் தொடர்ந்தாலும் அதன் வலிமைகள் அவற்றைப் போக்கிவிடும். ஆட்சியைப் பிடித்த கூட்டணிக் கட்சிகளும் வெற்றிக் கோட்டுக்கு அருகில் நெருங்கிவிட்ட எதிர்க்கட்சி கூட்டணியினரும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நாகரிகமாக நடந்துகொள்வது மிக மிக முக்கியம். கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் இணைந்து கருத்தொற்றுமை அடிப்படையில் சபாநாயகரைத் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறவரும் தன்னைத் தேர்தலில் நிறுத்திய கட்சியின் தொடர்புகளை அந்தப் பதவியில் இருக்கும் காலம் வரையில் துண்டித்துக்கொள்வது மேலும் சிறப்பாக அமையும்.

© த டெலிகிராப்

நீங்கள் அதிகமாகப் பங்களிக்கும்போது எங்களால் மேலும் சிறப்பாகச் செயல்பட முடியும்!

தொடர்புடைய கட்டுரைகள்

ஜவஹர்லால் நேரு மிகவும் மதித்த வல்லபபாய் படேல்
பிரதமர் நேருவின் 1951 - 1952 பிரச்சாரம்
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
நேரு எப்படி மூன்றாவது முறை பிரதமரானார்?
அம்பேத்கரையும் சண்முகம் செட்டியையும் ஏன் அமைச்சரவைக்கு அழைத்தார் நேரு?
1920: இந்தியத் தேர்தல் நடைமுறையின் தொடக்கம்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கோபால்கிருஷ்ண காந்தி

கோபால்கிருஷ்ண காந்தி, முன்னாள் ஆளுநர். வெளியுறவுத் துறையிலும் இந்திய ஆட்சிப் பணியிலும் அலுவலராகப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். ' காந்தி இஸ் கான். ஹு வில் கைட் அஸ் நவ்?' உள்ளிட்ட பல்வேறு நூல்களின் ஆசிரியர். காந்தி, ராஜாஜியின் பேரன்.

தமிழில்: வ.ரங்காசாரி

2


மிகைப்படுத்தப்பட்ட வளர்ச்சிமக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாதுஹரப்பாஅரசுப் பணிகள்சமத்துவமின்மை: இரு அடையாளங்கள்8 பிரதமர்கள்சின்னக்காசுரங்க நிபுணர்மலையாளப் படம்கூட்டுக் குடும்பம்பாதுகாப்புத் துறைபொது விநியோகத் திட்டம்வறட்சிமதச்சார்பற்ற கருத்துகள்தேர்தல் நன்கொடைமகா.இராஜராஜசோழன் கட்டுரைகா.ராஜன்விடைமுதல் தலையங்கம்டேவிட் கிரேபர்70 மணி நேர வேலை அவசியமா?இந்தியமயம்தேவி லால்உலக எழுத்தாளர் கி.ரா.வஹாபியிஸம்சந்திராயன் சரிபுத்தக வாசிப்புஅறுவை மருத்துவம்பால்ஃபோர் பிரகடனம்என்.வி.ரமணா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!