கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

2024 தேர்தல் முடிவு: 10 முக்கிய அம்சங்கள்

பார்த்த எஸ். கோஷ்
16 Jun 2024, 5:00 am
0

க்களவைத் தேர்தல்களில் 1977 ஒரு திருப்புமுனை என்றால், 2024ஆம் அதைப் போன்ற முக்கியமான திருப்புமுனையே, இரண்டிலும் அளவில் பரிமாணங்கள் வேறாக இருந்தாலும். ‘இந்தியாதான் இந்திரா – இந்திராதான் இந்தியா’ என்ற காங்கிரஸின் முழக்கத்தை 1977இல் நிராகரித்த மக்கள், 2024இல் ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற வாதத்தை நிராகரித்துவிட்டனர்.

பாஜகவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துவிடுவார் மோடி, அவரது மாயாஜாலம் இதை நிகழ்த்திக்காட்டும் என்பது நிறைவேறவில்லை. இந்தத் தேர்தல் முடிவு வருவதற்கு முன்னால் பாஜகவில் ஒருவர்கூட ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை, எல்லோருடைய பேச்சும் ‘பாஜக – பாஜக’ என்றே இருந்தது.

2024 தேர்தல் முடிவுக்குப் பிறகு, ‘பாஜக’ என்பது மறைந்து ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ (தேஜகூ) என்றே பேசப்படுகிறது. ‘பாஜக’ என்ற வார்த்தையை ‘தேஜகூ’ என்பதைக் கொண்டு நிரப்பிவிட்டார்கள். ‘மமதை மாமன்னர் சென்றுவிட்டார் – மாமன்னர் நீடுழி வாழ்க!’

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இந்தத் தேர்தல் உணர்த்தியுள்ள மாற்றம் அல்லது நாட்டு அரசியல் பெற்றுள்ள பயன்கள் வருமாறு:

முதலாவது

ராகுல் காந்தி ஆட்ட நாயகனாகிவிட்டார். இனி ஒவ்வொரு கட்டத்திலும் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக அவருடைய பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். இதற்கு முன்னால் அவரை ஏளனம் செய்து ஒதுக்கியதைப் போல இனி அலட்சியப்படுத்த முடியாது. ஆர்எஸ்எஸ், மோடி ஆதரவு ஊடகங்கள் (கோடி மீடியா), சலுகைசார் முதலாளித்துவம் (அதானி - அம்பானி), ஆகியவற்றை இடைவிடாமல் தாக்கியதில் காட்டிய தீவிரம், அவரை நீண்ட கால அரசியலுக்குத் தயார்செய்துவிட்டது.

ராய்பரேலி மக்களவைத் தொகுதியில் அவர் வென்றது பெரிய விஷயமே அல்ல, மத வெறிக்கு எதிராக உறுதியுடன் நின்று மோடிக்கு எதிராக நாடு முழுவதும் வலிமையான அலையை உருவாக்கி, மதவாதத்தை அதன் கொம்புகளைப் பிடித்தே அடக்கிவிட முடியும் என்று காட்டியிருக்கிறார். “மத வெறுப்பை விற்கும் கடை வீதியில், அன்பை விற்கும் கடையைத் திறக்கிறேன்” என்ற அவருடைய முழுக்கம் வெற்றிகரமாக வேலை செய்துவிட்டது.

இரண்டாவது

ராகுலின் இந்த உறுதியான எதிர்ப்பு ஏழை இந்துக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் உரமூட்டி, சுயநல எண்ணம் கொண்ட அவர்களுடைய சமூகத் தலைவர்களுக்கு எதிராகவும் எதிர்த்து நிற்க உதவியது.

அசாமில் முஸ்லிம்களைக் கொண்டு அரசியல் நடத்திய பத்ருதீன் அஜ்மலை, தூப்ரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தலைவர் ரபிகுல் உசைன் 10.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருப்பது சாதாரண வெற்றியல்ல. 2009, 2014, 2019 மக்களவை பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்ற அஜ்மல், உண்மையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் ‘பதிலி’ (பிராக்ஸி) என்று இந்தத் தேர்தலில் அவர் செய்த பிரச்சாரம் நன்கு கைகொடுத்தது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?

ப.சிதம்பரம் 09 Jun 2024

மூன்றாவது

பட்டியல் இனத்தவர்களுடைய அரசியல் இனி மிகப் பெரிய மாற்றத்தைக் காணப்போகிறது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்குப் பதிலாக புதிய தலைமை தோன்றிவிட்டது. ‘பாஜகவுடன் ரகசியமாகக் கூடிக் குலாவும் மாயாவதி, இந்தியா கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க ஆங்காங்கே வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்’ என்று பரவலாக பேசப்பட்டது. ‘ராவணன்’ என்று அழைக்கப்படும் சந்திரசேகர் ஆஸாத் புதிய ‘தலித்’ தலைவராக உருவெடுத்திருக்கிறார்.

உத்தர பிரதேசத்தில் பட்டியல் இனத்தவர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட நாகினா தொகுதியில், நான்கு முனைப் போட்டியில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் வேட்பாளர்களைத் தோற்கடித்தார். அவர் மொத்தமாகப் பெற்ற 5,12,552 வாக்குகளை பாஜக (3,61,079), சமாஜ்வாதி (1,02,374), பகுஜன் சமாஜ் (13,272) வேட்பாளர்கள் மூன்று பேர் சேர்ந்தும்கூடப் பெறவில்லை.

நான்காவது

‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்ற முழக்கம் இனி அபஸ்வரமாகவே இருக்கும். அனைத்து கூட்டணி அரசுகளுமே, வெவ்வேறுபட்ட அரசியல் கொள்கைகள், கண்ணோட்டங்கள் காரணமாக தோழமைக் கட்சிகளின் அனைத்து முடிவுகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாது. எனவே, மோடியின் இந்த லட்சிய முழக்கம் இனி மூலையில் தூக்கி வீசப்படும்.

ஆட்சியில் நீடிக்கவே நரேந்திர மோடி இனி ஆந்திரத்தின் தெலுங்கு தேசம், பிஹாரின் ஐக்கிய ஜனதா தளம் – லோக் ஜனசக்தி ஆகிய அரசியல் கட்சிகளைப் பெரிதும் நம்பியிருக்க வேண்டும். இந்தக் கட்சிகள் கூட்டரசின் கொள்கையை பாஜக வலுவிழக்கச் செய்ய அனுமதிக்காது. இனி ‘இந்தி – இந்து - இந்துஸ்தானம்’ என்ற முழக்கங்கள் ஈன ஸ்வரத்தில்கூட கேட்காது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்

காஞ்சா ஐலய்யா 09 Jun 2024

ஐந்தாவது

இந்தியா கூட்டணி ஏற்படுத்திய மதச்சார்பின்மைக்கு ஆதரவான அலையால், அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியிலேயே சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத், பாஜக வேட்பாளரை தோற்கடித்துவிட்டார். ‘பாசி’ என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவதேஷ் பிரசாத், பொதுத் தொகுதியான ஃபைசாபாதில் பாஜகவை மண்ணைக் கவ்வ வைத்திருப்பது இரட்டைத் தாக்குதலாகும்.

இந்துத்துவ முழக்கமானது பட்டியல் இனத்தவரால்  தகர்த்தப்பட்டிருப்பது, அதுவும் - உத்தர பிரதேசத்தில் சாதாரண செயல் அல்ல. ‘ந மதுரா ந காசி, அப்கி பார் அவதேஷ் பாசி’ (இனி மதுராவும் இல்லை – காசியும் இல்லை, இந்த முறை அவதேஷ் பாசி) என்று அதற்குப் பொருள்.

ஆறாவது

தேர்தலுக்குப் பிறகு வெளியிடப்படும் ‘வாக்குக் கணிப்பு’ (Exit Poll) முடிவுகளை மக்கள் இனி சந்தேகக் கண் கொண்டுதான் பார்ப்பார்கள். பழைய முறை கருத்துக் கணிப்புகளுக்கு மட்டுமே மதிப்பு ஏற்படும். யோகேந்திர யாதவ் வீடு வீடாகச் சென்று பேசி, மக்களுடைய மனங்களைத் தெரிந்துகொண்டு கணிப்பார். அத்துடன் தேநீர்க் கடைகளிலும் பேருந்துகளிலும் மக்களிடையே பேசி கருத்தறிவார். நம்பகமான, ஆனால் அதிக நேரம் எடுக்கக்கூடிய அந்த வழிமுறைக்கே இனி மரியாதை திரும்பும். சமூக மானுடவியலில் அதுவே ஏற்கப்பட்ட வழிமுறை என்பதும் முக்கியம்.

ஏழாவது

‘அரசியலில், பொருளாதாரமும் முக்கியம் முட்டாள்களே’ என்ற வாதம் எடுபட்டிருக்கிறது. மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சியானது ‘அமைப்புரீதியாக திரட்டப்பட்ட சமூகத்துக்கும் துறைகளுக்கும்தான் வருவாயை அதிகப்படுத்தியது’ என்பதை பேராசிரியர் அருண் குமார் சுட்டிக்காட்டிக்கொண்டேவருகிறார். ஆனால், வேலைவாய்ப்பில் 95%, ‘அமைப்பு சாராத’ துறைகளில்தான் ஏற்பட வேண்டும். மிகக் குறைவான மக்களுக்கான துறையில் மட்டும் காணும் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவோ, மக்களுடைய வருவாயைப் பெருக்கவோ, ஏற்றத்தாழ்வுகளைப் போக்கவோ உதவாது.

‘சலுகைசார்’ முதலாளித்துவத்தால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சிக்கும் அமைப்பு சாராத துறையில் ஏற்பட்டுவரும் பின்னடைவுகளுக்குமான மோதல், மோடி ஆட்சியின் மூன்றாவது காலகட்டத்தில் நிச்சயம் பெரிதாகும்.

எட்டாவது

மோடியின் மாயாஜாலத்தை உடைத்ததில் சமூக ஊடகங்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. மோடிக்கு ஆதரவான கருத்துகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் ‘கோடி மீடியா’ உருவாக்கியபோது அதை எதிர்த்து நிற்க சமூக ஊடகங்கள்தான் கை கொடுத்தன. உண்மைகளை ஊடகங்கள் வெளியிட முடியாமல் தொழில்நுட்பம் மூலமும் சட்டக் குறுக்கீடுகள் மூலமும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

துருவ் ரத்தி போன்றவர்களின் உறுதியான – விடாப்பிடியான காணொலி பரப்புரைகள் 100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டதன் விளைவு, தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. மோடியின் சர்வாதிகாரத்துக்கு எதிராக ‘வாட்ஸப்’ செய்திகள் அணிவகுத்தன.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மோடி ஏன் அப்படிப் பேசினார்?

அரவிந்தன் கண்ணையன் 02 Jun 2024

ஒன்பதாவது

தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்ந்தெடுத்த சில ஊடகங்களுக்கு மட்டும் மோடி அளித்த பேட்டியானது அவருடைய ஆணவத்தையே வெளிப்படுத்தியது. மோடியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நீலாஞ்சன் முகோபாத்யாய், கரண் தாப்பருக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், ‘கடவுள் தன்னை சிறப்பானதொரு சேவைக்காக அனுப்பியிருக்கிறார்’ என்று மோடி கூறியதுகூட அவருடைய ஆணவத்தை வெளிப்படுத்தும் பேச்சு என்று குறிப்பிட்டிருக்கிறார்.

குஜராத் முதல்வராவதற்கு முன்னதாகவே மோடியைப் பேட்டி கண்ட ஆசிஷ் நந்தி அவரை, ‘பாசிஸத்தின் இலக்கணம்’ என்று கணித்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்களைக் குறிவைத்து மோடி பேசிய வார்த்தைகள் அவர் ஆதிக்கச் சுபாவம் உள்ளவர், இஸ்லாமிய வெறுப்பை சிறுவயது முதலே கொண்டவர் என்பதைக் காட்டுகின்றன.

பத்தாவது

மோடிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இனி உறவு சுமுகமாக இருக்காது. இரு தரப்புக்குமான மோதல் அவ்வப்போது வெளிப்படும். ‘ஆர்எஸ்எஸ்ஸை பாஜக நம்பியிருக்கவில்லை’ என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா 2024 மே 22 பேட்டியில் தெரிவித்தார்; ‘ஆர்எஸ்எஸ் தொண்டர் எப்போதும் தன்னடக்கத்துடன்தான் பேச வேண்டும், ஆணவம் கூடாது’ என்று மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் ஜூன் 10 நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சாடியிருக்கிறார்.

மணிப்பூரில் உள்நாட்டுப் போர் முடிவுறாமல் தொடருவதை அவர் சுட்டிக்காட்டியிருப்பது மோடியின் நிர்வாகத்தின் மீதான கண்டனமாகும். இதை பெரிய மோதலாகவும் கருதிவிட முடியாது. மணிப்பூர் பற்றி எரிவது மோகன் பாகவத்துக்கு இத்தனை நாள்களாகத் தெரியாதா? மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு இதைப் பேசுவானேன்? இரு அமைப்பினரும் இன்றைக்கு அடித்துக்கொள்வார்கள் – நாளைக்கு அணைத்துக்கொள்வார்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நாட்டை எப்படி பாதுகாப்பது?

ராமச்சந்திர குஹா 02 Jun 2024

முக்கியமானது!

2024 மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவு இந்திய அரசியலை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடவில்லைதான்; அதேசமயம் ஆளும் பாஜகவை நன்றாக உலுக்கியிருக்கிறது. மோடியின் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 146 உறுப்பினர்களை நாடாளுமன்றத்தைவிட்டு அற்ப காரணத்துக்காக வெளியேற்றினார்கள். இனி அப்படியெல்லாம் நடக்காது. இருந்தாலும் எதிர்க்கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஆளும் கூட்டணிக்குப் பண பலம் அதிகமாக இருக்கிறது. ஆளும் கூட்டணியின் தோழமைக் கட்சிகளைக் கவர்ந்திழுக்க ‘இந்தியா’ கூட்டணி முயலும் அதேவேளையில், தங்களுடைய கூட்டணியிலிருந்தும் எவரும் நழுவிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுக்கு முன்னதாக இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் எழுச்சியும், பிறகு தேர்தல் முடிவுக்குப் பிறகு ஏற்பட்ட வீழ்ச்சியும் நமக்குப் பசுமையாக நினைவிலிருக்கும்.

© த வயர்

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

தொடர்புடைய கட்டுரைகள்

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?
சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்
இடதுசாரிகளுக்குத் தேவை புதிய சிந்தனை
மோடி ஏன் அப்படிப் பேசினார்?
நாட்டை எப்படி பாதுகாப்பது?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

2


காதலிகாங்கிரஸ்: பாஜகவின் பி அணியா?கவசம்கூவம்சமஸ் பார்வைவரவு – செலவுஆன்டான் ஜெய்லிங்கர்இணையான செயற்கை நுண்ணறிவுபுறக்கணிக்கும் கட்சி மேலிடம்கேசரிபின்லாந்து பிரதமர்நீதிபதி குப்தாகருணாநிதியின் முன்னெடுப்புகாதில் இரைச்சல்ஜாங் வெய்தாங்கினிக்கா ஏரிஆட்சிமுறைசங்கரய்யா: நிறைவுறாப் போராட்டம்இரு வல்லரசு துருவங்கள்திராவிட இயக்கக் கொள்கைகள்200வது பிரிவுதமிழ்நாட்டு உயர்கல்வித் துறைநிதிநிலை அறிக்கை 2023-24ஓய்வுசுய சுகாதாரம்உள்கட்சித் தேர்தல்எதிர்மறைப் பிம்பம்இரு பெரும் முழக்கங்கள்பஞ்சாப்அமுத காலம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!