கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸின் புதிய பாதை!

பாலசுப்ரமணியம் முத்துசாமி
09 Apr 2024, 5:00 am
0

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முதல் பத்தி, அதன் 138 ஆண்டுக் கால வரலாற்றை நினைவூட்டுவதாக உள்ளது. அந்த முதல் பத்தியில், அந்த வரலாற்றுக் காலத்தில் வழிநடத்திய இரண்டு ஆளுமைகளைக் குறிப்பிடுகிறது. முதலாவது விடுதலைப் போரை வழிநடத்திய அண்ணல் காந்தியடிகள். இரண்டாவது, விடுதலைக்குப் பின்னர் நாட்டை வழிநடத்தும் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் அம்பேத்கர். காங்கிரஸ் முன்னெடுக்க விருக்கும் பாதையைப் பற்றிய குறிப்பு அது. இது ஒரு மிகப் பெரும் அடிப்படை மாற்றம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அணுகுமுறையில் மாற்றம்

அறிமுகக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தேர்தல் அறிக்கையின் மையக் கருத்துகளாக, ’வேலைவாய்ப்பு, வளம், மக்கள் நலன்’ (Work, Wealth and Welfare) என்பதை முன்வைத்தார். ஆனால், அதைத் தாண்டி மிக முக்கியமான கூடுதல் கருதுகோள்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருப்பது, காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை மாற்றத்தைக் குறிக்கிறது. அவை சமூக நீதி மற்றும் கூட்டாட்சி தொடர்பான வாக்குறுதிகள்.

இந்தத் தேர்தல் அறிக்கையின் மிகக் குறிப்பிடத்தக்க மக்கள் நலத் திட்டங்கள் இவை:

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

  • மிகவும் ஏழ்மைக் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு வருடம் ரூ.1 லட்சம் உதவித் தொகை தரும் ‘மகாலட்சுமி திட்டம்’.
  • 25 வயதுக்குட்ப்பட்ட பட்டதாரிகள் / டிப்ளமா ஹோல்டர்களுக்கு 1 ஆண்டு நிறுவனங்களில் பயிற்சியுடன் ரூ.1 லட்சம் உதவி. இது பலருக்கு மறைமுகமாக பல நிறுவனங்களில் பணி பெற உதவும்
  • கூடுதலாக 14 லட்சம் அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமனம்
  • 2,500 பேருக்கும் அதிகமான ஊர்களில், மேலும் ஒரு ஆஷா - மருத்துவப் பணியாளர் நியமனம்.
  • ஊரக வேலைவாய்ப்பைப் போலவே நகர்ப்புர வேலைவாய்ப்புத் திட்டம்.
  • 30 லட்சம் ஒன்றியப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் தினக் கூலி ரூபாய் 400 ஆக உயர்த்தப்படும்.
  • ராணுவத்தில் அக்னிபத் திட்டம் கைவிடப்படும்.
  • ஜிஎஸ்டி வரிவிதிப்பு எளிமைப்படுத்தப்படும்.
  • வேளாண் பொருட்களுக்குக் குறைந்தபட்சக் கொள்முதல் விலை சட்டபூர்வமாக்கப்படும்.

இதில் 2019 நவம்பர் மாதம் தொடங்கிய உழவர்கள் போராட்டம், கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகள் நீடித்தது. அதில் 700 உயிர்கள் பலியாகின. பிறகு அடுத்துவந்த தேர்தல்கள் காரணமாக ஆளுங்கட்சி அந்தத் திட்டங்களைத் திரும்பப் பெற்றது. சென்ற ஆண்டு, வழக்கமான ராணுவ ஆள் சேர்ப்புக்குப் பதிலாக, தற்காலிக ஆள் சேர்ப்புத் திட்டமான ‘அக்னிபத்’ கொண்டுவரப்பட்டபோது, வடக்கில் பிஹார், உத்தர பிரதேச மாநிலங்களில் பெரும் கலவரம் மூண்டது. இதுபோன்ற போராட்டங்கள் ஆழமாக வேரோடிப்போயிருக்கும் பிரச்சினைகளின் வெளிப்பாடுகள்தான். வேளாண்மை தொடர்ந்து லாபமின்றிப் போய்க்கொண்டிருக்கிறது. வடக்கு மாநிலங்களில், வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்பதே அடிப்படை பிரச்சினைகள்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் மேற்சொன்ன அம்சங்கள், இந்தப் பிரச்சினைகளுக்கான உடனடித் தீர்வுகளாக இருக்கும் என்னும் வகையில், இவை மிக முக்கியமான வாக்குறுதிகள்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் குரல்கள்

சமஸ் | Samas 15 Mar 2024

சமூக நீதி

இந்தத் தேர்தக் அறிக்கையில் எதிர்பாராத ஒரு ஆச்சர்யம் சமூக நீதி தொடர்பான வாக்குறுதிகள். இது காங்கிரஸ் மிக தீர்க்கமாக தனது பாதையை ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை நோக்கிச் செலுத்த முற்பட்டிருப்பதைச் சொல்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் 50% இடஒதுக்கீட்டை உயர்த்தும் வாக்குறுதி, இவை இரண்டுமே மிக முக்கியமான வாக்குறுதிகள்.

ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிரப்பப்படாத இடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும் என்னும் வாக்குறுதியும், உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான நிதி இரு மடங்காக உயர்த்தப்படும் என்பதும் வரவேற்கத்தக்க அம்சம்.

ஆனால், 10% ஏழைகளுக்கான பொருளாதார ஒதுக்கீடு எல்லா ஏழைகளுக்கும் என்னும் வாக்குறுதி காங்கிரஸ் இடஒதுக்கீட்டின் உண்மையான பின்னணியைப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே உணர்த்துகிறது. மேலும், எல்லா ஏழைகளுக்கும் என்னும் வாக்குறுதி, வட இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் முற்பட்ட சாதிகளைப் பகைத்துக்கொள்வதில் முடியும். 

முதியவர்களுக்கான பாதுகாப்பு, சலுகைகள், மாற்றுப் பாலினத்தவர்களுக்கான உரிமைகள், மொழி மற்றும் மதச் சிறுபான்மையினர்களின் நலன் தொடர்பான வாக்குறுதிகள் காங்கிரஸின் உண்மையான பண்புகளைப் பிரதிபலிக்கின்றன.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தென்னகம்: உறுதியான போராட்டம்

சமஸ் | Samas 19 Mar 2024

கூட்டாட்சி

காங்கிரஸ் மிக நிச்சயமாக தன் பாதையை மாற்றியிருப்பதன் அடையாளமாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. இந்தியா என்பது ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்றிருந்தாலும், அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகள் ஒன்றிய அரசை ‘மத்திய அர’சாக பாவித்திருக்கின்றன. காங்கிரஸ் பதவியிலிருந்த நீண்ட காலகட்டத்தில், மாநிலங்களின் உரிமைகளை மிதித்திருக்கிறது. 

அரசமைப்புச் சட்டத்தில் 7வது அட்டவணையில் ஒன்றிய - மாநிலப் பட்டியல்களில் உள்ள பல பிரிவுகள் மாநிலங்களுக்கு மாற்றப்படும் என்னும் அறிவிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். மிக நிச்சயமாக கல்வி போன்ற துறைகள் மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டியதுதான்.  

ஒன்றிய அரசுக்கு மட்டுமே செல்லும் ‘செஸ்’ வரிவிதிப்பு மிக அதிகமாக இன்று 12% வரை உயர்ந்துள்ளது. இதை 5% ஆகக் குறைக்கும் வாக்குறுதி மிக முக்கியமானது. மேலும், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு, மாநிலத்தின் மக்கள்தொகை தொடர்பான இலக்குகளை அடைதல் மற்றும் வரி ஈட்டும் திறன் போன்றவற்றைப் பொறுத்து அமையும் என்னும் வாக்குறுதியும் முக்கியமான ஒன்றாகும்.

இது மாநிலங்களுக்கு அதிக நிதியைப் பெற்றுத்தரும் என நம்பலாம். மேலும், வளர்ந்த மாநிலங்கள் தங்களின் பங்களிப்பைவிடப் பல மடங்கு குறைவான நிதி கிடைக்கிறது என்னும் ஒரு குரலுக்கு காங்கிரஸ் செவிசாய்த்திருப்பதை இது உணர்த்துகிறது. மாநில உரிமைகளுக்காக உரக்கக் குரல் எழுப்பிய தமிழ்நாட்டு அரசியலர்களின் குரல் இங்கே பிரதிபலித்திருப்பதைக் காண முடிகிறது.

மாநிலங்களுக்கு உரிமைகள் வேண்டும் எனக் குரல் கொடுக்கும் மாநில அரசியல் கட்சிகள் (திமுக உள்பட) ஆட்சிக்கு வருகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொடுப்பது போன்றவற்றைச் செய்வதில்லை. மாநில அளவில் அதிகாரத்தை மையப்படுத்துகிறார்கள் என்பது ஒரு முக்கியமான தவறு.

காங்கிரஸ் இதைச் சரிசெய்ய மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நிதியில் ஒரு பங்கு நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்லும் வகையில் திருத்தம் செய்யப்போவதாக அறிவித்திருப்பது மிக முக்கியமான அரசியல் கட்டமைப்பு மாற்றமாகும்.

மேலும், தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புத் தலைவர்களுக்கு நிதி, நிர்வாக அதிகாரங்கள் அதிகமாக்கப்படும் என்னும் அறிவிப்பு, நிறைவேற்றப்பட்டால், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். 1993ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்ட திருத்தம், கேரளம் போன்ற மாநிலங்களில் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற தளங்களில் பெரும் மேம்பாடுகளைக் கொண்டுவந்தது.

மொத்தத்தில், சமூக நீதி மற்றும் கூட்டாட்சி தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால், அது இந்திய நாட்டில் பெரும் சமூகப் பொருளாதாரத் தளங்களில், அடிப்படை மாற்றங்களை (Paradigm Shift) கொண்டுவரும். அதேபோல, வடகிழக்கு மாநிலங்களுக்கான தனியான வாக்குறுதிகளும் முன்னோக்கிய பார்வை கொண்டவை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி

சமஸ் | Samas 23 Mar 2024

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்தல்

இந்தத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றிபெற்றால், நாங்கள் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என பாஜகவின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் பகிரங்கமாகப் பேசிவருகையில், காங்கிரஸின் இந்த நிலைப்பாடு மிக முக்கியமாகிறது. 

தனிமனித உரிமைகள், அரசமைப்புச் சட்டத்தில் தன்னாட்சி பெற்ற அமைப்புகளான தேர்தல் கமிஷன், ஒன்றியக் கணக்காள நிறுவனங்கள் போன்றவை சுதந்திரமாக இயங்கும் உரிமைகள், கிரிமினல் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நிறுத்துதல் போன்ற உறுதிமொழிகள் நன்றாக இருக்கின்றன. இவை எவ்வளவு தூரம் சாத்தியப்படும் எனத் தெரியவில்லை.

பொருளாதாரக் கொள்கைகள்

இதில் 1991ஆம் ஆண்டு கொண்டுவந்த பொருளாதாரக் கொள்கைகள் பொருளாதாரத்தில் தனியார் துறையை ஊக்குவித்த ஒன்று. 33 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது எனச் சொல்லும் அறிக்கை, இந்த முறை பொருளாதாரக் கொள்கைகளின் மையப்புள்ளியானது ‘வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்கும்’ எனச் சொல்கிறது. மேலும் அறிக்கையில் ‘வேலைவாய்ப்பற்ற பொருளாதார வளர்ச்சி’ (Jobless Growth) என்னும் நிலையை மறுதலிக்கிறது என்றும் சொல்கிறது.

உலகளாவிய பொருளாதாரப் பாதை இயந்திரமயமாக்கம், செயற்கை நுண்ணறிவு, பெரும் நிறுவனமயமாக்கம் என்னும் வழியில் சென்றுகொண்டிருக்கும்போது ‘மனித வேலைவாய்ப்புகளை மையமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி’ என்னும் கொள்கை முழக்கம் என்பது எவ்வளவு தூரம் சாத்தியம் எனத் தெரியவில்லை. 1991 பொருளாதார அணுகுமுறையைவிடப் பெரும் புத்தாக்கப் பொருளாதார அணுகுமுறை (Economic Policy Innovation) இல்லாமல், இது சாத்தியம் ஆகப்போவதில்லை. காங்கிரஸின் பொருளாதார நிர்வாகிகள் இதை எப்படிச் சாத்தியப்படுத்தப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பெருமளவு கூட்டாட்சி, அதிகாரப் பரவலாக்கம் என்றெல்லாம் பேசும் காங்கிரஸின் அறிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை என வருகையில், மையப்படுத்தும் தொனியில் பேசுவது துரதிருஷ்டவசமானது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸின் மீது அழுத்தம் கொடுத்து, விற்பனை வரி விதிக்கும் அதிகாரத்தை மீண்டும் மாநிலங்களுக்குக் கொண்டுவர வேண்டும். அரசியல் அதிகாரப்பரவலாக்கம் என்பது நிதி நிர்வாகப் பரவலாக்கத்துடன் வர வேண்டும். இல்லையென்றால், இந்தக் கூட்டாட்சி முறை பலவீனப்படும்.

தொழில் துறை தொடர்பான வாக்குறுதிகள் அனைத்துமே முற்போக்கானவை, முக்கியமானவையும்கூட. உலக அளவில், சில தொழில்களில் இந்தியா வலிமை பெற்று முதன்மை இடத்தை அடையும் சாத்தியங்கள் கொண்டவை. தோல் பதனிடுதல், மருந்து, பொறியியல் துறை, தானியங்கி, மின்னணுத் துறை போன்றவை. ஆனால், இவ்வரிசையில் மென்பொருள் சேவைத் துறை விடுபட்டிருக்கிறது. தொழில் துறை தொடர்பான பகுதி இன்னுமே விரிவாகப் பேசப்பட்டிருக்கலாம். குறிப்பாக அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்னும் பகுதிகள் தொழில் துறையின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்த உதவுபவை. அவை பற்றிய திட்டங்கள் அறிக்கையில் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ் | Samas 29 Mar 2024

பாதுகாப்பு, வெளியுறவு, சுற்றுச்சூழல் போன்ற தளங்களின் வாக்குறுதிகள், சென்ற காலத்தில் காங்கிரஸின் நிலைகளின் தொடர்ச்சியாகத்தான் தெரிகின்றன. பெரிதான மாற்றங்கள் இல்லை. மொத்தத்தில் மக்கள் நலன், சமூக நீதி, கூட்டாட்சி, பெண்ணுரிமை எனப் புதிய அணுகுமுறையைக் கொண்ட நல்ல தேர்தல் அறிக்கை எனச் சொல்ல வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால், இவற்றில் பெரும்பான்மைத் திட்டங்கள் கூட்டணியின் குறைந்தபட்சத் திட்டத்தில் இடம்பெறும் என நம்பலாம். அப்படி இடம்பெற்றால், இது வரலாற்றை மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தடுக்கும் சக்தி இங்கே இல்லை
வரவேற்புக்குரிய ஆரம்பம் அக்னி பாதை
சமூகநீதியுடன் நிறையட்டும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம்
காஷ்மீர்: நீதியின் வீழ்ச்சி
வரப்புத் தகராறா மக்களின் வதை?
அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு
தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்
ஜிஎஸ்டிக்கு முற்றுப்புள்ளி எப்போது?
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
ரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


4


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நெறியாளர்எஸ்பிஐசேகர் பாபுநீட் தேர்வுபச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்போம்வெளிவராத உண்மைகள்சார்புநிலைசரண் சிங்காலனியாதிக்கம்முடிவுக்காலம்பி.ஆர்.அம்பேத்கர்வி.கிருஷ்ணமூர்த்திமகாத்மா ஜோதிபா பூலேஅத்லெட் ஃபுட்தமிழ்ப் பௌத்தம்: ஒரு நவீன சமுதாய இயக்கம்சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் வேண்டும்உரம்தபாசிலி சங்கல்ப்காதுக்குழல்பட்ஜெட் அலசல்இழிவுகலைக் கல்லூரிவங்கதேச வளர்ச்சிபாதிக்கப்பட்ட பகுதிகள் சட்டம்புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?தொண்டர்களுக்கு ஆறுதல்உத்தர பிரதேச மாதிரிகரன் தாப்பர் பேட்டி உபி தேர்தல் மட்டுமல்ல...நிதியமைச்சர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!