கட்டுரை, அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், கூட்டாட்சி 7 நிமிட வாசிப்பு
மக்கள் நல பட்ஜெட், கவலை தரும் நிதி நிர்வாகம்!
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 19.02.2024 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2024-25 ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கை பல வகைகளிலும் முக்கியமானது ஆகும். அதேசமயம், முழுமையாக அதை ஆய்வுக்குள்ளாக்கும்போது கவலை பிறக்கிறது. ஏன்?
இதற்கு முன்பு நிதிநிலை அறிக்கைகளைத் தந்த முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது நிதிநிலை அறிக்கைகளை, 7 முக்கிய நோக்கங்களின் அடிப்படையில் அமைத்திருந்தார். தன்னுடைய முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த தங்கம் தென்னரசு, அதே திசையில் அரசின் நோக்கங்களைக் கொண்டுசென்றிருக்கிறார். அதேசமயம் சற்றே மெருகூட்டியும் இருக்கிறார்.
நிதிநிலை அறிக்கையின் தொடக்கத்திலேயே ஆங்கிலேயர் காலந்தொட்டு, தமிழ்நாட்டில் மக்கள் நல மேம்பாட்டுக்கான அரசு திட்டங்களைப் பட்டியலிட்டு, தன் நிதிநிலை அறிக்கைக்கான ஒரு பின்புலத்தை உருவாக்கியது நல்ல அணுகுமுறை. கடந்த 2.5 ஆண்டுகளாக பிடிஆரின் பிள்ளைத் தமிழில் வெளிவந்த நிதிநிலை அறிக்கை, இந்த ஆண்டு இலக்கிய ஆர்வலர் தங்கம் தென்னரசின் தீந்தமிழுக்கு மாறியிருக்கிறது.
நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு புதிய மக்கள் நலத் திட்டங்களையும், ஏற்கெனவே உள்ள மக்கள் நலத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகளையும் செய்திருக்கிறார். உடனடி வேலைவாய்ப்புகளை அளிக்கும் சாத்தியமுள்ள முதலீடுகளுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், மொத்த நிதிநிலை அறிக்கையைப் பார்க்கையில், வருவாய் திட்டமிட்டபடி வந்திருந்தாலும் செலவினங்கள் அதிகரித்திருப்பது தெரியவருகிறது. மாநில வரி வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பது வருத்தமளிக்கும் விஷயம்.
இதன் விளைவாக, மாநிலத்தின் முதலீடுகள் நிதி ஆதாரங்கள் குறைந்து, நீண்ட கால நோக்கில் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயங்கள் உள்ளன. இரண்டாவது பொருளாதாரம் என்னும் நிலையில் இருக்கும் தமிழ்நாடு, அதைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால், மாநிலத்தில் வளர்ச்சி தரும் நீண்ட காலத் திட்டங்களில் அதிக முதலீடு செய்வது மிகவும் அவசியம்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
முக்கிய முதலீட்டுத் திட்டங்கள்
இந்த நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான திட்டங்கள் குடிசைகள் இல்லாத் தமிழ்நாடு திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 1 லட்சம் வீடுகள் கட்ட, ரூ.3500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், மிகவும் ஏழைமக்களுக்கான திட்டங்களை ஒருங்கிணைந்த வகையில் கொடுத்திட ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டமும் ஆகும். இவ்விரண்டும் ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுக்கப்பட்டால், அடுத்த 5-6 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் வறுமை பெருமளவில் நீங்கிவிடும்.
அதேபோல 2,000 கிலோ மீட்டர் கிராமச் சாலைகளும், 4,500 கிலோ மீட்டர் நகர்ப்புறச் சாலைகளும் திட்டமிடப்பட்டிருப்பதும் முக்கியமான கட்டமைப்பு முதலீடு. தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த சாலைக் கட்டமைப்பை உருவாக்க, ‘தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்’ அமைக்கப்படும் என்னும் அறிவிப்பு முக்கியமானது. தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் தங்கள் கொள்ளவை எட்டிவிட்டன. எனவே, ஒரு ஒருங்கிணைந்த சாலைப் போக்குவரத்துக்கான நீண்ட காலத் திட்ட உருவாக்கம் தேவை.
இந்த பட்ஜெட்டின் மிகப் பெரும் அதிகரிப்பு மின் சக்திக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2023-24 பட்ஜெட்டில் ரூ.10,694 கோடியாக இருந்த முதலீடு இந்தப் பட்ஜெட்டில் ரூ.22,310 கோடியாக அதிகரித்துள்ளது. இது 108% அதிகரிப்பாகும். பசுமை சக்தி எனச் சொல்லப்படும் ஹைட்ரஜன் வழி சக்தி உற்பத்தி மற்றும் மின்சார உபரி காலத்தில் நீரைப் பம்ப் செய்து தேக்கிவைத்து, அதனை மின்சாரப் பற்றாக்குறை காலத்தில் பயன்படுத்திக்கொள்ளுதல் எனப் புத்தாக்க வழிகளில் முதலீடுகள் செய்யப்படும் என நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 18,000 மெகாவாட் அளவு திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 2,500 மெகாவாட் பசுமை சக்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. இந்த முதலீடுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்னும் வகையில் வரவேற்கத்தக்கவை.
இந்த நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான பகுதி என இந்த முன்னெடுப்பைச் சொல்லலாம். எரிசக்திக்கு இன்னும் நிலக்கரியை நம்பியிருக்கும் பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் இந்த முடிவு முக்கியத்துவம் பெருகிறது.
பம்ப் செய்து தேக்கிவைத்து, மின் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு 12 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன எனவும், இதன் வழியே 11,500 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்திசெய்ய முடியும் எனவும் நிதிநிலை அறிக்கை கூறுகிறது. இதில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் எனவும் அறிக்கை கூறுகிறது. ஆனால், இவை எந்த வழியில் பசுமைப் பயணமாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு
பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை விஞ்சிவிட்டதா உத்தர பிரதேசம்?
09 Feb 2024
தொழில் பரவலாக்கல்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டாட்டா தொழில் குழுமத்துடன் இணைந்து, 71 மாநில ஐடிஐகளை தொழில் துறை 4.0 தளத்துக்கு மேம்படுத்தும் திட்டம் ரூ.2,800 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 45 பாலிடெக்னிக்குகளைத் தொழில் துறை 4.0 தளத்துக்கு மேம்படுத்தும் திட்டம் ரூ.3,000 கோடி முதலீட்டில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஐடிஐகள் தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளதாக இந்த நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது.
இன்று தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நவீனத் தொழிற்சாலைகளுக்குத் திறன் வாய்ந்த தொழில்நுட்பர்கள் தேவை. எனவே, ஐடிஐகள் மற்றும் பாலிடெக்னிக்குகளை நவீனப்படுத்தும் முதலீடுகள் பெரும் நன்மையை ஈட்டித்தர வல்லவை.
அதேபோல, மதுரை திருச்சி, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி நகரங்களில் டைடல் பார்க்குகள் அமைக்கப்படுவது, வேலைவாய்ப்புகளைப் பரவலாக்கி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உதவும். இதில் கன்னியாகுமரியைச் சேர்த்துக்கொள்வது மிக முக்கியம். அருகில் திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம் இருப்பது ஒரு கூடுதல் தகுதி.
கோயமுத்தூரில் ரூ.1,100 கோடி முதலீட்டில் அமையவிருக்கும் எல்காட் தொழில் பூங்கா, தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி எனப் பரந்துபட்ட துறைகளுக்கான ஆராய்ச்சி நிறுவனங்களுக்காக அமைக்கப்படுவதும் முக்கியமான முதலீடே.
இந்த நிதிநிலை அறிக்கையின் இன்னொரு முக்கியமான அம்சம், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்த 4 லட்ச சதுர அடிப்பரப்பில் ஒரு விற்பனையகம் ஏற்படுத்தப்படுவதாக வந்திருக்கும் அறிவிப்பு. இதே வளாகத்தில் ஆடை வடிவமைப்பு மையம் மற்றும் புதிய தொழில்களுக்கான ஆதரவு மையமும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக மாநிலத்தில் மிக அதிகமான வாழ்வாதாரங்களை அளிப்பது நெசவுத் தொழில் என்னும் வகையில் இந்த முன்னெடுப்பு விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும்.
சேலத்தில் அமையவிருக்கும் சிப்காட் ஜவுளிப் பூங்கா ரூ.800 கோடி முதலீட்டில் அமையவுள்ளது. சிவகாசியில் அமையவிருக்கும் ஜவுளிப் பூங்காவிலும் கூடுதலாக மாநில அரசு முதலீடு செய்வது என்பதும் நேர்நிலை முன்னெடுப்பு. ஜவுளி இயந்திர முதலீடுகளில், வட்டி மானியம் கொடுக்கும் திட்டம், தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிக்கும் ஒன்று. கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிகவும் எளிதாக உபயோகிக்கும் வகையில் ப்ளக் அண்ட் ப்ளே கட்டமைப்பை சிப்காட் நிறுவனம் உருவாக்க உள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.6.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் ரூ.1.15 கோடி தென் மாவட்டங்களுக்கான முதலீடு என்பது கவனிக்கத்தக்கது. அந்த முதலீடுகளுக்கான கட்டமைப்பை டிட்கோ நிறுவனம், 2000 ஏக்கர் பரப்பளவில், விண்வெளித் தொழில் நிறுவனங்களுக்கான தொழில் பூங்காவாக உருவாக்கும் என நிதிநிலை அறிக்கை கூறுகிறது.
மக்கள் நலத் திட்டங்கள்
சமூக நீதி, மகளிர் மட்டும் விளிம்புநிலை மக்களுக்கான பல வரவேற்கத்தக்க திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் வெளியாகியுள்ளன. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயின்று, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டதுள்ளது. இந்தியாவுக்கே முன்னோடித் திட்டங்கள் இவை.
ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் ஒன்று. இதைப் புகழ்பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் ஜான் ட்ரெஸ் ஆய்வுசெய்து எழுதியுள்ளார். இதற்கான ரூ.3,100 கோடி ஒதுக்கீடு ஒரு நேர்நிலை முன்னெடுப்பு.
உழைக்கும் மகளிர்களுக்கான விடுதிகள் தொடர்ந்து பல நகரங்களில் கட்டப்பட்டுவருகின்றன. இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த விடுதிகளின் கொள்ளளவு ஆண்டு தோறும் இரட்டிக்கப்பட வேண்டும். மாற்றுப் பாலினத்தவர்களின் உயர்கல்விக்கான முழுச் செலவையும் அரசே எற்றுக்கொள்ளும் திட்டமும் ஒரு முன்னோடித் திட்டமாகும். இதன் வெற்றியைப் பொறுத்து, இதற்குக் கூடுதல் உதவி தேவைப்பட்டால், அதை அரசு தயங்காமல் செய்ய வேண்டும்.
மின் உற்பத்திக்கு அடுத்தபடியாக, கல்வித் துறைக்கான ஒதுக்கீடு உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கிவரும் 38 மாதிரிப் பள்ளிகளின் வெற்றியைத் தொடர்ந்து, இன்னும் 28 மாதிரிப் பள்ளிகள் தொடங்க இருப்பது கல்வித் துறை செல்லவிருக்கும் திசையைச் சொல்கிறது.
சமூக மாற்றத்துக்கான வழி
மாணவர்களின் உயர்கல்விக்கான கல்விக்கடன் வழங்கிட ரூ.2,500 கோடி ஒதுக்கிடுசெய்யப்பட்டிருப்பதும் நேர்நிலை முன்னெடுப்பு. மேலும், 500 பேருக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டால், அரசு 2 ஆண்டுகளுக்கு அவர்களுக்கான ஊதியத்தில் 10%த்தை வழங்கும் என்னும் அறிவிப்பு முன்னோடி அறிவிப்பு ஆகும்.
இதேபோலவே, சென்னையில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres) அமைக்கும் நிறுவனங்களின் ஊதியத்தில் (மாதம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊதியம் பெறுபவர்கள்), முதல் ஆண்டு 30%, இரண்டாம் ஆண்டு 20% மூன்றாமாண்டில் 10% என்பது புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பெரிதும் உதவும். இதையே கொஞ்சம் மாற்றி, தமிழ்நாடு அரசுப் பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்றவர்களுக்குக் கூடுதல் 5% ஒதுக்கலாம். இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் கோவை மற்றும் மதுரை நகரங்களில் உலகளாவிய திறன் மையங்கள் அமைக்கப்படும் என்பதும் நல்ல செய்தி.
கடந்த சில ஆண்டுகளில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினத் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனம் வெற்றிகரமாக புத்தாக்க முயற்சிகளில் முதலீடு செய்ததாகும். அதேபோல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் அண்ணல் அம்பேத்கர் தொழில் சாதனையாளர் திட்டமும் மிகப் பெரும் வெற்றியை அடைந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியான ரூ.156 கோடியுடன் கூடுதலாக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு திட்ட முனைப்புகளும் நீண்ட கால நோக்கில் பாரதூரமான சமூக மாற்றங்களைக் கொண்டுவர வல்லவை.
விளையாட்டுத் துறையில் முன்னெடுப்பு
எதிர்பார்த்தது போலவே இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான பல முக்கிய முதலீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரி முதலிய நான்கு இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தமிழ்நாடு அடுத்த புதிய கட்டமைப்பை உருவாக்கும் இடத்துக்குச் சென்றுள்ளதைக் காண்பிக்கிறது. ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீடு விளையாட்டுத் துறையில் இருப்பதை அனைவரும் அறிவர்.
விளையாட்டுத் துறையில் எந்த முக்கியத்துவமும் இல்லாத குஜராத் மாநிலத்துக்கு, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களைவிட அதிக நிதி ஒதுக்கியதெல்லாம் காலக் கொடுமை. ஒன்றிய அரசைக் குறை கூறிக்கொண்டில்லாமல், இந்தக் கட்டமைப்புகளை நாமே உருவாக்கிக்கொள்வது மிக முக்கியம். ராமநாதபுரத்தில் அமையவிருக்கும் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமியும் முக்கியமான முன்னெடுப்பு.
ஆனால், தமிழ்நாட்டின் பாரம்பரிய வலிமைகள் உள்ள இரண்டு விளையாட்டுகள் விடுபட்டிருக்கின்றன. உலக அளவிலான வீரர்களை, தமிழ்நாடு செஸ் மற்றும் டென்னிஸ் விளையாட்டில் உருவாக்கியுள்ளது. அவர்களின் பங்களிப்போடு, தமிழ்நாடு அரசின் முதலீட்டோடு, உலகத்தரம் வாய்ந்த அகாடமிகள் சென்னையில் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு முதலீடு செய்து, உலக அளவிலான போட்டிகளைச் சென்னையில் நடத்த வேண்டும். இதில் செய்யப்படும் முதலீடு, சென்னையை உலக அளவில் முக்கியமான நகரமாக மாற்றும்.
சுகாதாரத் துறையில் ஒதுக்கீடுகள் மாவட்ட மற்றும் தாலூகா மருத்துவமனைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் உள்ளது வரவேற்கத்தக்கது. அரசுத் துறையில் பெரும் கட்டமைப்புகளைக் குறிப்பாக மருத்துவமனைகளை நிர்வகித்தல் பெரும் சுமை. அது பரவலாக அனைத்து மக்களுக்கும் பயன் தராது. சிறிய மருத்துவமனைகளே அனைவருக்கும் பயன்படும்.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
தமிழக பட்ஜெட்: சின்ன மருத்துவமனைகளை சிந்திக்கலாம்
24 Mar 2022
நிதி நிர்வாகம்
திமுக ஆட்சியின் முதல் 2.5 ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதி நிர்வாகத்தில் தனது அணுகுமுறையை வலுவாகப் பதித்திருந்தார். வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்து பூஜ்யமாக்கி, முதலீடுகளை அதிகரிக்கும் ஒரு மூன்றாண்டுத் திட்டத்தை அவர் முன்வைத்திருந்தார்.
அதன்படி, வருவாய்ப் பற்றாக்குறை இந்த ஆண்டு ரூ.37,000 கோடியாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட வருவாயைவிட ரூ.2,000 கோடி அதிகம் வந்த பின்னரும், செலவினங்கள் ரூ.9,000 கோடி அதிகரித்ததால், பற்றாக்குறை திட்டமிட்ட ரூ.37,000 கோடியைவிட ரூ.7,000 கோடி அதிகரித்துள்ளது. இது கவலைகொள்ள வைக்கும் விஷயமாகும்.
சென்ற ஆண்டு மாநில வரி வருவாய் 19% உயரும் எனத் திட்டமிடப்பட்டதற்கு மாறாக, 12% மட்டுமே உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் (2022-2023), மாநில வரி வருவாய் ரூ.1.42 லட்சம் கோடி என்னும் திட்டத்தைத் தாண்டி, ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரித்திருந்தது. 2020-21ஆம் ஆண்டு ரூ.62,000 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை, 2022-23ஆம் ஆண்டில் ரூ.30,000 கோடியாகக் குறைந்த நிலையில், இந்த ஆண்டு அது திட்டமிட்ட வருவாய்ப் பற்றாக்குறையான ரூ.37,000 கோடியைத் தாண்டியது ஒரு பின்னடைவுதான்.
இந்த ஆண்டு வருவாய்ப் பற்றாக்குறை குறைந்ததன் காரணங்களை மிகவும் விரிவாகத் தன் நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியிருக்கிறார்.
- சென்னை மெட்ரோ திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசு தவறியதால், தமிழ்நாடு அரசே ஒன்றிய அரசின் பங்காக ரூ.9,000 கோடியைச் செலவிட நேரிட்டது.
- தமிழ்நாடு இந்த ஆண்டு எதிர்கொண்ட இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள, ஒன்றிய அரசு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யவில்லை.
- தமிழ்நாடு மின்வாரிய நஷ்டத்திற்கான இழப்பீட்டைச் செல்வினத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு கொடுத்த நிர்ப்பந்தம்.
- வரி வசூல் சுணக்கம்.
இந்த நான்கு காரணங்களில், முதலாவது முதலீட்டில் சேரும். இரண்டாவது அரசியல். மூன்றாவது தவிர்க்க முடியாதது. ஆனால், நான்காவது மிக முக்கியமான ஒன்று – தமிழ்நாடு அரசு நிர்வாகம் சரிசெய்தே ஆக வேண்டிய ஒரு விஷயம், வரி வசூல் சுணக்கம்.
மாநிலத்தின் வரி வருவாய், 2006-07 ஆண்டில் மாநிலத்தின் பொருளாதாரத்தில் 10% அளவுக்கு இருந்தது. ஆனால், இன்று அது 7%ஆகக் குறைந்துவிட்டது. இதை முந்தைய ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், வரி வருவாய் சதவீதம் இந்த ஆண்டும் உயர்ந்ததுபோலத் தெரியவில்லை.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும் விஷயம் இது. வரி வருவாய் 10% என்னும் அளவை எட்டியிருந்தால், இந்த ஆண்டு வருவாய்ப் பற்றாக்குறை இல்லாமல் போயிருக்கும். தமிழ்நாடு தன் முதலீட்டின் அளவை ரூ.47,000 கோடியில் இருந்து ரூ.80,000 – ரூ.90,000 கோடிக்கு உயர்த்திருக்க முடியும்.
போர் கால நடவடிக்கை அவசியம்
இன்று தமிழ்நாடு அரசு மிக அவசரமாக, மிக முக்கியமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை, வரி சதவீதம் ஏன் குறைவாக உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதை உயர்த்தும் நடவடிக்கைகளை போர் கால அடிப்படையில் செய்ய வேண்டியதுதான். தமிழ்நாடு அரசின் மிகப் பெரும் பலவீனம் இந்தப் பகுதி.
மற்ற வளர்ந்த மாநிலங்களான மஹாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் (per capita GST) மிகக் குறைவாக உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு உள்ளதால் டாஸ்மாக் போன்ற வருமானமும் இல்லை. இதற்கு இரண்டே காரணங்கள்தாம் இருக்க முடியும்; 1. தமிழ்நாட்டு மக்களின் நுகர்வு மற்ற மாநிலங்களைவிடக் குறைவு, 2. வரி ஏய்ப்பு.
இரண்டாவது காரணம் உண்மையாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வரும் ஆண்டிற்கான மாநில வரி வசூல் வளர்ச்சியை 14.7% எனத் திட்டமிட்டுள்ளார். மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகள் வரி வசூல்முறையே 16%, 18% இருக்கும் என நிதிநிலை அறிக்கை சொல்கிறது.
இந்த அளவு வரி வசூல் வளர்ச்சி வர வேண்டும் எனில், வரி நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள், சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் வருவாய்ப் பற்றாக்குறை ஒழிக்கப்பட்டு, மாநிலத்தின் முதலீடுகளை அதிகரிக்க முடியும். ஒன்றிய அரசு அரசியலில் தனக்குச் சாதகமான மாநிலங்களில் மிக அதிகமான முதலீட்டைச் செய்துகொண்டிருக்கிறது. இங்கே நாம் சுணங்கினால், நாட்டின் இரண்டாவது பொருளாதாரம் என்னும் நிலை இன்னும் சில ஆண்டுகளில் விலகிவிடும். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் கனவு காற்றோடு போய்விடும்.
தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையில் கவலை அளிக்கும் இன்னொரு விஷயம் அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியமும். அடுத்த ஆண்டுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காக ரூ.1.22 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மாநிலத்தின் நிதி வருவாயான ரூ.1.99 லட்சம் கோடியில் இது 62% ஆகும். இதுவும் மிகப் பெரும் செலவினமாக மாறிபோய்க்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறைக்கு இதுவும் முக்கிய காரணம். இது தொடர்பான விவாதங்கள் பொதுவெளியில் வைக்கப்பட்டு, ஓர் ஆரோக்கியமான முடிவு எட்டப்பட்டு, இந்தச் செலவுகள் நீண்ட கால நோக்கில் குறைக்கப்பட்டே ஆக வேண்டும்.
இறுதியாக…
மக்கள் நலத் திட்டங்களில், தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி கால மாதாந்திர உதவித்தொகை, அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிற்றுண்டி, மூன்றாம் பாலினம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் என தமிழ்நாடு இன்று முன்னெடுக்கும் திட்டங்கள் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவின் திட்டங்களாக மாறும் என்பதில் ஐயமில்லை.
ஆனால், குறைவான வரி வசூல் என்பது தமிழ்நாட்டின் மிகப் பெரும் பிரச்சினை. இதற்கான காரணகாரியங்களை ஆராய்ந்து, சரிசெய்யும் வழிகளை உடனடியாக உருவாக்க வேண்டும். அரசு இயந்திரத்துக்குத் தெரியாமல் இந்த ஏய்ப்பு நடக்கிறது என்று யாரும் நம்ப மாட்டார்கள். வருவாய்ப் பற்றாக்குறை திட்டமிட்டபடி இருந்திருந்தால், இது தமிழ்நாட்டின் மைல்கல் பட்ஜெட்டாக இருந்திருக்கும். இந்தக் குறையைத் தவிர்த்து, ஒரு நல்ல பட்ஜெட்டைதான் அளித்திருக்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!
தொடர்புடைய கட்டுரைகள்
பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை விஞ்சிவிட்டதா உத்தர பிரதேசம்?
தத்தளிக்கும் சென்னை: அரசின் தவறு என்ன?
வரப்புத் தகராறா மக்களின் வதை?
மாநிலங்கள் மீது தொடரும் தாக்குதல்
தமிழகத்தின் ஆக்கபூர்வ முதலீடு
அமைதியாக ஒரு பாய்ச்சல்
தமிழக பட்ஜெட்: சின்ன மருத்துவமனைகளை சிந்திக்கலாம்
முன்னுதாரணம் ஆகட்டும் மாதிரிப் பள்ளிகள்
விளிம்புநிலை மக்கள் நலனில் நல்ல முன்னெடுப்பு
6
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 10 months ago
சிறுதொழில்கள் அதிகமுள்ள மாநிலங்களில் வரிச்சலுகையும், வரி ஏய்ப்பும் அதிகமாகவே இருக்கும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.