கட்டுரை, பொருளாதாரம், நிர்வாகம் 20 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டிக்கு முற்றுப்புள்ளி எப்போது?

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
09 Jun 2022, 5:00 am
3

2017 ஜூன் 30 இரவு. இந்திய நாடாளுமன்றம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விழாக் கோலம் பூண்டிருந்தது. அன்றைய நள்ளிரவில், ஜிஎஸ்டி என்னும் புதிய வரிவிதிப்புமுறையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். ஆளும் பாஜக அரசின் மிகப் பெரும் கொள்கை முன்னெடுப்பாக இந்த விழா முன்னிறுத்தப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா விடுதலை அடைந்ததை 1947, ஆகஸ்ட் 14இல் இப்படி ஒரு நள்ளிரவுக் கொண்டாட்டத்துடன் நாடு பிரகடனப்படுத்தியதை நினைவுகூர்ந்திடும் வகையிலேயே இது கட்டமைக்கப்பட்டிருந்தது.

குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கடுமையாக எதிர்த்தவர் இன்றைய பிரதமர் மோடி. ஜிஎஸ்டி ஒருபோதும் வெல்லாது என்று ஆருடம் சொன்னவர். முரண்பாடு என்னவென்றால், பிரதமரானதும் தன் நிலைப்பாட்டைத் தலைகீழாக்கிக்கொண்டிருந்தார். “ஜிஎஸ்டி வரிவிதிப்புமுறையானது, இந்திய ஜனநாயகத்தினுள் கூட்டாட்சித் தத்துவத்துக்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு!” என்றும் அவர் புகழ் மாலை சூட்டியிருந்தார். சமகால அரசியலின் மிகப் பெரும் நகைமுரணாக அது பார்க்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனென்றால், சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே கூட்டாட்சிக்கு எதிரான பெரும் தாக்குதல்களில் ஒன்றாக ஜிஎஸ்டி அப்போதே விமர்சனத்தை எதிர்கொண்டிருந்தது.

மோடி தன் உரையில் முழங்கினார், “இந்தியா விடுதலை அடைந்த காலத்தில், பல்வேறு சம்ஸ்தானங்களையும் சர்தார் வல்லபபாய் படேல் ஒன்றிணைத்தே, இன்றைய இந்தியாவுக்கு முழு உருவம் கொடுத்தார். அதேபோல, இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, இந்தியாவை பொருளாதாரரீதியாகவும் ஒன்றிணைக்கும். 29 மாநில வரிவிதிப்பு முறைகள், 7 யூனியன் வரிவிதிப்பு முறைகள், 7 மத்திய வரிவிதிப்பு முறைகள், பல்வேறு வரிவிதிப்புத் தளங்கள் எனக் கிட்டத்தட்ட 500 வகையான வரிவிதிப்பு முறைகள் ஒழிக்கப்பட்டு, ‘ஒரே நாடு, ஒரே வரிவிதிப்புமுறை’ என்னும் திசையில் இந்தியா அடி எடுத்து வைக்கிறது. இனி கங்கா நகர் முதல் இடா நகர் வரையில், லே முதல் லட்சத் தீவுகள் வரையில், இந்தியாவில் ஒரே வரிமுறைதான்!”

உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகள்

ஜிஎஸ்டி வரிவிதிப்புமுறையானது ஒரு மேம்பட்ட வரிவசூல் முறை என்றும், மாறிவரும் பொருளாதாரத்தில், வரிப் பளுவை உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளும் முறை என்றும் 13ஆம் நிதிக் குழுவின் தலைவராகப் பணிபுரிந்த விஜய் கேல்கர் சொன்னார். “இதை ஒன்றிய, மாநில அரசுகள் நல்ல முறையில் நிறைவேற்றினால், இந்தியா முழுவதும் ஒரே சந்தை என்னும் நிலை உருவாகும். 1991-92இல் அமலாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பின்பு நிகழும் முக்கியமான சீர்திருத்தம்!” என்றார் அவர். ஜிஎஸ்டியின் விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த தேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமானது (NCAER), ‘ஜிஎஸ்டி முறையாக அமல்படுத்தப்பட்டால் இந்தியப் பொருளாதாரம் 2% முதல் 2.5% வேகமாக வளரும்!’ என அறிக்கை அளித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நடந்தது என்ன?

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 2017-18இல், பொருளாதார வளர்ச்சி முந்தையான ஆண்டின் 8.2% என்பதிலிருந்து, 7.2% ஆகக் குறைந்தது. அடுத்த இரண்டாண்டுகளில், பொருளாதார வளர்ச்சியின் வேகம் மேலும் குறைந்தது.

2016இல் திடீரென நிகழ்த்தப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்புமுறையின் அமலாக்கத்தின் விளைவே பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு முக்கியமான காரணங்கள் என்கிறார் காந்தியப் பொருளாதார மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார அறிஞர் நாகராஜ்.

இந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்தது என்பது இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் தலைவர் மகேஷ் வியாஸுடைய கருத்து. 2017-18இல் வேலைவாய்ப்பின்மை 6.1% ஆக அதிகரித்தது. இது கடந்த 45 ஆண்டுகளில் இந்தியா காணாத வேலைவாய்ப்பின்மை விகிதம் என்று சொன்னார் அவர்.

நடைமுறைச் சிக்கல்கள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்புமுறையானது, பல தொழில்களில் நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தியது. முக்கியமான ஓர் எடுத்துக்காட்டாக, திருப்பூர் ஆயத்த ஆடைத் தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சொல்லலாம். ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஏற்றுமதி நடக்கும் இத்தொழிலில், பெரும் ஏற்றுமதியாளர்களுடன் மிகச் சிறிய ஒப்பந்த வேலை செய்யும் தொழில்களும் இணைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஆயத்த ஆடைகளுக்குத் தேவைப்படும் நகாசு வேலைகளை அவர்கள் செய்து கொடுப்பார்கள்.

இந்தச் சிறு/குறு ஒப்பந்ததாரர்கள், தினசரி அளவில் ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து ஆயத்த ஆடைகளைப் பெற்று, நகாசு வேலைகளைச் செய்து திரும்பவும் ஏற்றுமதி நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள். இப்படிச் செய்யும் வேலைகளுக்கு, ‘பீஸ் ரேட்’ என்னும் அடிப்படையில் உருப்படிகளைக் கணக்கிட்டு கூலி பெற்றுக்கொள்வார்கள்.

ஜிஎஸ்டி முறையில் இவர்களும் ஜிஎஸ்டி சங்கிலியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர்கள் பெரும்பாலும் அமைப்புசாராத் தொழில் நிறுவனங்கள். மதிப்புக் கூட்டுவரி கட்டும் அளவுக்குக்கூட இவர்களுடைய தொழில் பரிவர்த்தனை இருக்காது. ஜிஎஸ்டி முறை என்பது இணையத்தில் இணைந்து செயலாற்றுவது. இதற்கான கட்டமைப்புகளும், நிதியாதாரங்களும் இல்லாததாலேயே மெல்ல இத்தகுக் குறுந்தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும்பாலானோர் பாதிக்கப்பட இந்தத் தொழிலே பெரும் நிலைக்குலைவுக்கு உள்ளானது.

இவர்களைப் போன்றவர்களை ஜிஎஸ்டி சங்கிலிக்கு வெளியில் வைக்க வேண்டும் என்று ஏற்றுமதி நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களும் விடுத்த கோரிக்கைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை.

வாராணசி நகரின் பிரசித்தி பெற்ற பட்டுச்சேலைகளுக்கான சரிகைத் தொழிலும் இதனால் பாதிக்கப்பட்டது. மொத்தத்தில், பெருநிறுவனங்களைப் பெரிதும் பாதிக்காத ஜிஎஸ்டி முறையானது சிறு/குறு நிறுவனங்களைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. பிரச்சினை என்னவென்றால், சிறு/குறு நிறுவனங்களே வேளாண்மைக்கு அடுத்தபடி இந்தியாவில் வேலைவாய்ப்பை அளிப்பவை.

எல்லா மாநிலங்களிலும் ஒரே விகித வரிவிதிப்பு சரியா?

ஜிஎஸ்டி கவுன்சில் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, நிபுணர்கள் குழு ஒன்று உண்டு. சில மாதங்களுக்கு முன்பு, தேங்காய் எண்ணெய்க்கான ஜிஎஸ்டி வரியை 5% என்பதிலிருந்து 18% ஆக உயர்த்தும் ஒரு பரிசீலனையை முன்வைத்தது இந்தக் குழு. தேங்காய் எண்ணெய் உற்பத்தி  மாநிலங்களான கேரளமும் தமிழகமும் இந்தப் பரிந்துரையை வலுவாக எதிர்த்தன.

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தேங்காய் எண்ணெய் கேரளத்தில் சமையல் எண்ணெயாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த வரி உயர்வானது தேங்காய் எண்ணெய் விலையை உயர்த்தும். இதனால், அதன் உபயோகம் குறையும். இரண்டாவது, தேங்காய் எண்ணெய்த் தொழிலை நம்பி, லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் உள்ளார்கள். எனவே இந்த மாநிலங்களின் பார்வையில், 18% வரிவிதிப்பு அவர்களது மாநிலத்தின் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் பாதிக்கக் கூடியது.

ஆனால், தேங்காய் எண்ணெய் மற்ற மாநிலங்களில் கூந்தல் எண்ணெயாக மட்டுமே உபயோக்கிக்கப்படுகிறது. அம்மாநிலங்களின் பார்வையில், ஜிஎஸ்டி வரிவிகித உயர்வு அவர்களது வரி வருவாயை அதிகரிக்கும் செயல் மட்டுமே. அதனால், அம்மாநிலங்களில் வேலைவாய்ப்பு பாதிக்கப்படப்போவதில்லை.

இதேபோல, மாநிலத்துக்கு மாநிலம் பொருளாதாரச் செயல்பாடுகள் வேறுபடுகின்றன. இப்படியான பெரும் வேறுபாடுகள் உள்ள மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான வரிவிதிப்பு என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்கிறார் இந்தியாவின் மிகச் சிறந்த வரித் துறை தொடர்பான சட்ட நிபுணர் அரவிந்த் தத்தார்.

“மலரில் இருந்து, தனக்குத் தேவையான உணவான தேனை எடுக்கும் தேனீ, அம்மலரின் மகரந்தத்தை எடுத்துச் சென்று, இன்னொரு மலருடனான அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது. இது தேனீ - மலர் இரண்டுக்குமே நன்மை பயப்பதாக மாறுகிறது. வரிவிதிப்பும் இப்படியே இரு தரப்புக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும்” என்பது காந்தியப் பொருளியல் நிபுணரான ஜே.சி.குமரப்பாவின் வரையறை. இதன் விளக்கம் என்னவெனில், வரிவிதிப்புமுறை என்பது பொருளாதாரச் செயல்பாட்டை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, தொழிலையோ, வாழ்வாதாரத்தையோ பாதிப்புக்குள்ளாக்குவதாக இருக்கக் கூடாது என்பதாகும். சர்வதேச அளவில் முற்போக்கு வரிவிதிப்பு என்னும் வரிவிதிப்பு மெய்யியலின் முக்கியமான பொருளாதார அறிஞர்களுள் ஒருவரான, கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் செலிக்மேனின் மாணவரும் குமரப்பா என்பதை இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும்.

இந்த வரையறையின் அடிப்படையில் ஒவ்வொரு பிராந்தியத்தின் தொழில் செயல்பாடுகளும் வேலைவாய்ப்புகளும் மேம்படும் வகையில் வரிவிதிப்புமுறைகள் அமைய வேண்டுமே ஒழிய வெறும் வரிவசூல் அதிகரிப்பு என்னும் குறுகிய வரையறைக்குள் அரசின் கொள்கைகள் நின்றுவிடக் கூடாது என்ற புரிதலுக்கு நாம் வந்தடைய முடியும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு முந்தைய வாட் வரிவிதிப்பு முறையில், தங்கள் மாநில நலன்களுக்கேற்ப வரியை நிர்ணயிக்கும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களிடம் இருந்தது. அம்முறையில் தமிழ்நாடும், கேரளமும் தேங்காய் எண்ணெய்க்குக் குறைந்த வரிவிதிப்பையும், தேங்காய் எண்ணெயை அழகுப் பொருளாக மட்டுமே பாவிக்கும் மற்ற மாநிலங்கள், அதற்கு அதிக வரியையும் விதிக்க வழி இருந்தது. உற்பத்தி செய்யும் மாநிலம், நுகரும் மாநிலம் என இருவருமே தங்கள் பொருளாதார அமைப்புக்கேற்ப வரிகளை விதித்துக்கொண்டார்கள்.

இம்முறையில் என்ன பிரச்சினையைக் கண்டார்கள்?

ஒவ்வொரு மாநிலத்தின் வரி அளவுகள் வேறு வேறாக இருப்பதால், நிறுவனங்கள் தங்கள் பொருள் மற்றும் சேவைகளைத் தருவது கடினமாக உள்ளது என்பது பெருநிறுவனங்களின் பார்வை. ஒரே வரி என்பது அவர்களைப் பொறுத்த வரையில் மேலாண்மைக்கு எளிதானது.  இந்தப் பார்வை அர்த்தமுடையதுதான் என்றாலும், இரண்டு அடிப்படைக் கேள்விகள் இது தொடர்பில் எழுகின்றன.

  1. இன்று கணிணிமயமாக்கப்பட்ட சூழலில் எவ்வளவு வரி அளவுகள் இருந்தாலும், அவற்றுக்கேற்ப தங்கள் கணக்குகளை மாற்றியமைப்பதில் எந்த நிறுவனத்துக்கும் ஒரு சிக்கலும் இல்லை.
  2. இந்தியா முழுதும் இயங்கும் பெருநிறுவனங்கள் ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கக் கூடும். அவர்களின் வசதிக்காக கோடிக்கணக்கான சிறு/குறு நிறுவனங்களும், மக்களும் தங்கள் நலனை விட்டுக்கொடுத்திட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எவ்வகையில் சரி? மேலும், பெருநிறுவனங்களால் தங்களுடைய பிரச்சினைகளுக்கு எளிதாகத் தீர்வு தேடிகொள்ள முடியும். அப்படி இயலாத சிறு/குறு நிறுவனங்கள் மீதான இவ்வகை நிர்ப்பந்தம் ஒரு வன்முறை இல்லையா?

அமெரிக்காவிலும், சீனாவிலும் ஜிஎஸ்டி இல்லை

இந்தியாவில் இயங்கிவரும் பெருநிறுவனங்களில் பலவும் அமெரிக்கா மற்றும் சீனாவில் இயங்கிவருபவை. ஆனால், அந்த நாடுகளில் ஒரே அளவு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகள் இல்லை. அங்கே மைய அரசு மற்றும் மாநில அரசுகள் என இரு அமைப்புகளுமே வரிவிதிக்கும் அதிகாரம் கொண்டவை. அங்கெல்லாம் யாரும் இதை ஒரு பெரும் தடையாகவோ, பிரச்சினையாகவோ சொல்வதில்லை. அந்த நாடுகளின் வரிவிதிப்புமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளும் பெருநிறுவனங்கள், இந்தியாவிலும் அதேபோல நடந்துகொள்வதில் என்ன பிரச்சினை?

எல்லாப் பொருட்களுக்கும் ஒரே விகித வரி சரியா?

இந்திய ஜிஎஸ்டி வரி அமைப்பின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுள் ஒன்று இந்திய ஜிஎஸ்டி முறையானது பல விகித வரி அமைப்பைக் கொண்டது என்பதாகும். உலகெங்கும் ஜிஎஸ்டி வரி அமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்று அல்லது இரண்டு விதமான வரிவிகிதங்களையே கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவில் ஐந்துக்கும் மேற்பட்ட விகிதங்கள் உள்ளன என்பது அவர்கள் வைக்கும் விமர்சனம்.

இந்திய மறைமுக வரிவிதிப்பின் வரலாற்றையும், விகித அமைப்பையும் கொஞ்சம் யோசிப்போம். இந்தியாவில் மறைமுக வரிகளுள் முக்கியமானது வணிக வரி மற்றும் கலால் வரிகள்.

பொதுவாக இந்த வரிவிதிப்பு என்பது சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களைப் பாதிக்கக் கூடாது என்னும் முற்போக்கு வரிவிதிப்பு மெய்யியலின் அடிப்படையில் அமைந்தவை.

அடிப்படை உணவுக்கு 0% வரிகள் (உணவு தானியங்கள்). அடிப்படை உணவுகள் – ஆனால் பதப்படுத்தப்பட்டவை – இவற்றுக்கு மிகக் குறைந்த வரிவிகிதம் - 0 முதல் 5% வரை (சமையல் எண்ணெய்). மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் 12 முதல் 18% வரை (கேக், ஐஸ்க்ரீம்).

கலால் வரிகள் என்பவை ஆடம்பரப் பொருட்கள், பாவப் பொருட்கள் (ஷாம்பு போன்ற அலங்காரப் பொருட்கள், கார்கள், சிகரெட், மது) மீது விதிக்கப்பட்டவை. கலால் வரிகள் தொடக்கத்தில் மிக அதிகமாக இருந்தன (100% வரை). ஆனால், காலப்போக்கில், மாறிவரும் சமூகச் சூழலுக்கேற்ப அவையும் குறைந்துவிட்டன.

இந்த முற்போக்கு வரிவிதிப்பை சோஷலிஸ வரிவிதிப்பு முறை எனக் கிண்டல் செய்பவர்களும் உண்டு. அலங்காரப் பொருட்களின் தயாரிப்பில் சுற்றுச்சூழலுக்கான பாதிப்பையும் சேர்த்துப் பார்த்தால், அவை நிச்சயமாக உயர் அளவு வரிவிதிக்கப்பட வேண்டியவை என்பது நமக்குப் புரியும்.

எனவே, இந்தியாவில் இருக்கும் வரி விகித அமைப்பானது, இந்தியச் சமூகத்திற்கும், பொருளாதாரச் சமத்துவத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்ற ஒன்று. இவை இந்தியச் சூழலுக்கேற்ப உருவாகிவந்தவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக, இந்திய வரி அமைப்பின் பிரச்சினை வரிவிதிப்பு விகிதங்கள் இல்லை. அவற்றைச் செயல்படுத்தும் முறைதான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகும்.

ஒரு தரப்பில், வரி ஏய்ப்பதையே தொழில்முறையாக வைத்திருக்கும் வணிகர்கள் உண்டு. இன்னொரு தரப்பில், நாங்கள் மிக நேர்மையானவர்கள் எனக் காட்டிக்கொள்ள, உண்மையான தொழில் நிறுவனங்களின் மீது அபத்தமான வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுகளை வைத்து கட்டாயமாக வரிவசூல் நிகழ்த்தும் வரி அலுவலர்களும் உண்டு.

எனவே, இந்திய வணிக வரி அமைப்பைச் சீர்திருத்த வேண்டும் என்றால், அது இந்த வரி வசூல் செய்யும் முறைதானே ஒழிய, வரி விகிதங்களையோ, வரி விதிக்கும் அதிகாரங்களையோ மாற்றுவது இல்லை.

ஜிஎஸ்டி என்பது வரிச் சீர்திருத்தமா?

இல்லை. 1986ஆம் ஆண்டு, கலால் வரிகளில் ‘மதிப்புக் கூட்டு வரிவிதிப்பு முறை’  அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு, ஒரு முனை அல்லது பல்முனை வரிவிதிப்புமுறைகள் இருந்தன. இதில் வரி ஏய்ப்பு மிக அதிகமாக இருந்தது. பல்முனை வரிவிதிப்புமுறையில், நேர்மையாக உற்பத்திசெய்யும் பெருநிறுவனங்களின் பொருட்கள் மிக அதிக விலை கொண்டதாக இருந்தன. கலால் வரி ஏய்ப்பு நிறுவனங்கள் உற்பத்திசெய்யும் பொருட்கள் மலிவாகக் கள்ளச் சந்தையில் கிடைத்தன.

1986ஆம் ஆண்டு, கலால் வரியில் பல்முனை வரிவிதிப்புமுறை அகற்றப்பட்டு, ஒவ்வொரு முனையிலும் எவ்வளவு மதிப்புக் கூட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு மட்டும் வரிவிதிக்கப்படும்முறை அறிமுகத்துக்கு வந்தது.

இதனால் நேர்மையாக வரி செலுத்தும் பெருநிறுவனங்கள் உற்பத்திசெய்யும் பொருட்களுக்கும், கலால் ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் உற்பத்திசெய்யும் பொருட்களுக்கும் இடையே விலைகளில் நிலவிய ஏற்றத்தாழ்வு வெகுவாகக் குறைந்தது. கலால் வரி செலுத்தப்படும் அளவும் அதிகரித்தது.  

இதைத் தொடர்ந்து, வணிக வரிகளில் மதிப்புக் கூட்டுமுறை 2005இல் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இதற்கு எதிராக இருந்தாலும், காலப்போக்கில் மற்ற மாநிலங்களில் இந்த மதிப்புக் கூட்டுமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஏற்றுக்கொண்டன.

ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்புமுறையானது இந்தியாவெங்கும் விற்கப்படும் பொருள் மற்றும் சேவைகளுக்கு ஒரே அளவிலான வரிவிகிதம் என்பதாகும். வரிவிதிப்பை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழு பரிந்துரைக்கும். எனவே, இது வரிவிதிப்பு அதிகாரத்தை மாநிலங்களிடம் இருந்து பறித்துக்கொண்ட, வரிவிதிப்பு விகிதங்களை ஒரே அளவு என எளிமைப்படுத்திய ஒரு மையப்படுத்தப்பட்ட வரிவிதிப்புமுறையே தவிர, சீர்திருத்தம் அல்ல.

ஜிஎஸ்டி வரிவிதிப்புமுறை எளிதானதா?

இல்லை என்கிறார் வரிகளுக்கான சட்ட நிபுணர் அர்விந்த் தத்தார். நாடு முழுவதும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஒரே வரிவிகிதம் என்றுதான் இதைச் சொல்ல முடியுமே ஒழிய, அதன் நிர்வாகமுறைகள் ஏற்கனவே இருந்த வரிநிர்வாகத்தைவிடக் கடினமானவை என்கிறார்.

எடுத்துக்காட்டாக ஒரு சேவை அளிக்கும் நிறுவனத்தை உதாரணமாகச் சொல்கிறார். முந்தைய வரிவசூல் முறையில், வருடத்துக்கு இரு முறை தனது வரிக் கணக்கை சேவை வரி நிறுவனத்துக்கு ஒரு சேவை நிறுவனம் அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால், இப்போது  ஒவ்வொரு மாதமும் 3 முறை அனுப்ப வேண்டி இருக்கிறது. தவிரவும், ஒவ்வொரு மாதமும் தான் மற்றவர்களின் சேவைக்குச் செலுத்திய பணத்தில் நிறுத்திக்கொண்ட வரி (Tax Deducted at Source) தொடர்பான கணக்குகளையும் தாக்கல் செய்ய வேண்டியிருக்கிறது. வருட இறுதியில், மொத்த கணக்கு வழக்குகளையும் ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும். ஆக, முன்பு தாக்கல் செய்துகொண்டிருந்த 2 முறைக்குப் பதிலாக, தற்போது 49 முறை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.

ஜிஎஸ்டி முறையில் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியான ஜிஎஸ்டி சட்டத்தை உருவாக்கியுள்ளன. மேற்சொன்ன சேவை நிறுவனம், பல மாநிலங்களில் இயங்குவதாக இருந்தால், ஒவ்வொரு மாநிலத்திலும் 49 முறை தனது தொழில் தொடர்பான கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டி வரும்.

இந்தக் கணக்குகள் அனைத்தும் இணையம் வழியே ஒரே நாளில் அப்லோட் செய்ய வேண்டும் என்னும் விதி இம்முறையை மேலும் சிக்கலாக்குகிறது. இதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் உருவாக்கப்படாததால், மாநில அரசுகளின் கணிணி சர்வர்கள், ஒரே நாளில் ஆயிரக்கணக்கான ஃபைல்கள் ஆன்லைனில் அப்லோடு ஆவதைத் தாங்காமல் பல முறை செயலிழந்துபோகின்றன. பல்வேறு மாநிலங்களில், சிறு நகரங்களில் இணையத் தொடர்புகள் சரியாக இல்லாதது, இம்முறையை மேலும் சிக்கலாக்குகின்றன.  தற்போதைய ஜிஎஸ்டி நிர்வாக முறையானது முந்தைய முறையை விடப் பலமடங்கு அதிகமான தகவல்களை அரசுக்கு அளிக்க நிர்ப்பந்திக்கிறது.

இவையெல்லாம் தேவைக்கு அதிகான நிர்வாகப் பளுக்கள் என்கிறார் தத்தார்.

ஜிஎஸ்டி வரிமுறையும் இந்திய அரசமைப்புச் சட்டமும்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 101ஆவது மாற்றமாக ஜிஎஸ்டி வரிவிதிப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 246ஏ, நாடாளுமன்றமும், மாநிலங்களும் ஜிஎஸ்டி சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றன என்கிறது. இதன் அடிப்படை பிரச்சினை என்னவெனில், பலரும் நம்புவதுபோல, இந்தியாவில் ஒரு ஜிஎஸ்டி வரிவிதிப்புமுறை இல்லை. 29 மாநிலங்களிலும் தனித்தனி ஜிஎஸ்டி சட்டங்கள் உள்ளன. இன்று அனைவரும் ஒருமித்து, ஒப்புக்கொண்ட ஒரு ஜிஎஸ்டி வரிவிதிப்பை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், நாளை எதாவது ஒரு மாநிலம், தனக்கென ஒரு வரிவிகிதத்தை உருவாக்கினால், அதற்கு சட்டப்படி எந்தத் தடையும் இருக்காது. அரசமைப்புச் சட்டம் 279ஏ பிரிவின்படி, ஜிஎஸ்டி கவுன்சிலின் வரிவிகிதங்கள் பரிந்துரைகள்தானே தவிர, எந்த ஒரு மாநிலத்தையும் கட்டுப்படுத்தாது எனச் சொல்கின்றது. அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் இதை உறுதிப்படுத்துகிறது.

இந்தியாவின் எந்த ஒரு மாநிலமும், தனக்கென ஒரு ஜிஎஸ்டி வரிமுறையை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதே இன்றைய அரசமைப்புச் சட்டம் சொல்லும் நிலை.

ஜிஎஸ்டியும், கூட்டாட்சி முறையும்

ஜிஎஸ்டி வரிவிதிப்புமுறையில், மாநிலங்களின் வணிக வரிகள், ஒன்றிய அரசின் சேவை வரி மற்றும் கலால் வரிகள் மூன்றும் ஒரே அமைப்பின் வடிவமைப்புக்குள் வருகின்றன. மாநிலத்துக்கெனத் தனித்துவமான நிதி இறையாண்மையாக இருப்பது வணிக வரி. இது இன்றும் மாநில அரசின் அதிகாரத்தில் இருந்து முற்றிலுமாக சட்டபூர்வமாக இன்றைய ஜிஎஸ்டி முறையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

கூட்டாட்சியைப் பற்றிப் பேசுகையில், உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில், ‘மாநிலங்கள் என்பவை ஒன்றிய அரசின் துணை உறுப்புகள் அல்ல; அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கும் எல்லைகளுக்குள், ஒன்றிய அரசைப் போலவே சட்டங்களை இயற்றும் இறையாண்மை கொண்டவை!’ எனக் கூறியிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் ஒன்றிய அரசும், மாநில அரசும் தத்தம் எல்லைகளுக்குள் சட்டங்களை இயற்றுவதில் சம உரிமை கொண்ட அரசுகள் (co-equals) என்பது அம்பேத்கரின் பார்வையாகும்.

எனவே, மாநிலத்துக்கான வரிவிதிப்பு அதிகாரங்கள் முற்றிலுமாக எடுக்கப்பட்டு, ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்புக்குள் செலுத்தப்படுவது, இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், இன்றைய ஜிஎஸ்டி வரிவிதிப்புமுறையானது ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுடன் நின்றுவிடுகிறது.

சட்டப்படி ஜிஎஸ்டி வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களை விட்டுப்போகவில்லை எனினும், நடைமுறையில், ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்யும் ஜிஎஸ்டி வரிவிகிதங்களை எல்லா மாநிலங்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகின்றன என்பதே இன்றைய நிலை.

ஜிஎஸ்டி கவுன்சிலும், அதிகாரச் சமநிலையின்மையும்

இந்திய ஜிஎஸ்டி வரிவிதிப்பு நிர்வாகத்தை நடத்த அரசமைப்புச் சட்டம் 279ஏ பிரிவின்படி, ஜிஎஸ்டி கவுன்சில் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சர் இதன் தலைவராக இருப்பார். ஒன்றிய இணை நிதியமைச்சர் இதன் உறுப்பினராக இருப்பார். அதேபோல, ஒவ்வொரு மாநிலத்தின் நிதியமைச்சரும் (அல்லது பிரதிநிதிகள்) இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.  ஜிஎஸ்டி தொடர்பான விஷயங்களை இந்த கவுன்சில் ஆலோசித்து முடிவெடுக்கும். இதில் ஒன்றிய அரசுக்கு மூன்றில் ஒரு பங்கு அதிகாரமும், மாநில அரசுகளின் பிரதிநிதிகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு அதிகாரமும் உள்ளது.

வெளித்தோற்றத்தில், ஒரு ஜனநாயக அமைப்புபோலத் தோன்றினாலும், நடைமுறையில் இதில் பல சிக்கல்கள் உள்ளன. தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இதைச் சரியாகவே சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவின் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் சம உரிமை கொண்டவர்களாக இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் உள்ள அதிகாரச் சமநிலையின்மையின் காரணமாக, இது மாநில நலன்களுக்குச் சாதகமாக இருப்பதில்லை என்பது அவர் வாதம்.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு, மராத்தியம் போன்ற மாநிலங்கள், ஒன்றிய அரசுக்கு அதிக நிதி செலுத்தி, ஒன்றிய அரசிடமிருந்து அதில் ஒரு பகுதியை மட்டுமே திரும்பப் பெறுகின்றன. ஆனால், பல வட இந்திய மாநிலங்களும், வட கிழக்கு மாநிலங்களும், பொருளாதாரரீதியாகப் பின்தங்கியிருப்பதால், மாநில அரசை நடத்த, ஒன்றிய அரசின் நிதி நல்கையைப் பெரிதும் நம்பியிருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் எடுக்கும் நிலைப்பாட்டை ஆதரிக்கும் நிலைக்கு அவை தள்ளப்படுகின்றன.

ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஏகமனதாக நிறைவேறும் என நம்பினாலும், கருத்து வேறுபாடுகள் எழுகையில், வாக்கெடுப்பு நடைபெறும். 75% வாக்குகள் பெற்றால்தான் முடிவுகள் நிறைவேறும்.  

மூன்றில் ஒரு பங்கு அதிகாரத்தை ஒன்றிய அரசு வைத்திருப்பதால், மாநிலங்கள் அனைத்தும் இணைந்து ஒன்றிய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக முடிவெடுத்தாலும், தன்னிடம் இருக்கும் மூன்றில் ஒரு பங்கு வாக்கு – வீட்டோ - அதிகாரத்தின் மூலம் ஒன்றிய அரசு மாநிலங்களின் எந்த முடிவையும் நிறுத்த முடியும்.  

மாநிலங்களிடம் இருந்தது வரிவிதிக்கும் அதிகாரங்களை எடுத்துக்கொள்வது அரசமைப்புச் சட்ட அமைப்புக்கு எதிரானது என்பதால், நடைமுறை அதிகாரச் சமநிலையின்மை மிகவும் புத்திசாலித்தனமாக ஜிஎஸ்டி கவுன்சிலின் வடிவமைப்பில் புகுத்தப்பட்டிருக்கிறது. தங்கள் அதிகாரத்துக்குள் உள்ள துறைகளில் வரிகளை விதிக்கும் அதிகாரம் சட்டப்படி மாநில அரசுகளிடம் இருந்தாலும், நடைமுறைப்படி அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாதபடி இந்த ஜிஎஸ்டி கவுன்சிலும் அதன் நடைமுறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.

நம்பிக்கை தரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் வருங்காலமும்

அண்மையில், குஜராத் மாநில உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் என்பது பரிந்துரைகள் மட்டுமே என்றும், ஒவ்வொரு மாநிலமும், ஒன்றிய அரசும், ஜிஎஸ்டி வரிகளை விதிக்கும் அதிகாரம் பெற்றவை என்றும் தீர்ப்பளித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது, ஜிஎஸ்டி நடைமுறையில் நீதிமன்றங்கள் தலையிடும் சாத்தியங்களை அதிகரித்திருப்பதாக புகழ்பெற்ற வழக்குரைஞரான ரஸ்தோகி கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மாநிலங்களின் வரிவிதிப்பு உரிமைகளை சட்டபூர்வமாக நிலைநாட்டியிருக்கிறது எனச் சொல்ல வேண்டும். ஆனால், அதை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதுதான் மாநிலங்களின் முன்னிற்கும் சவால்!

கூட்டாட்சிமுறை நிதிக் கொள்கைகளைப் பற்றிய ஆலோசனைகளை வழங்க தமிழ்நாடு அரசு, புகழ்பெற்ற வழக்கறிஞர் அர்விந்த் தத்தாரின் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவில் வைத்தீஸ்வரன், நடராஜன் போன்ற சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள், சுரேஷ் ராமன், ஸ்ரீவத்ஸ் ராம் போன்ற துறைசார் நிபுணர்கள் மற்றும் சிறு/குறு நிறுவனங்களின் பிரதிநிதியாக வேல்முருகன் ஆகியோர் உள்ளார்கள். இவர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்புமுறை, செஸ் மற்றும் சர் சார்ஜ் போன்ற வரிவிதிப்புகளின் பாதிப்புகள், அதனால் மாநிலத்துக்கு ஏற்படும் நிதி இழப்புகள், ஜிஎஸ்டி நிர்வாக அமைப்பில் உள்ள குறைபாடுகள் முதலியவற்றை ஆராய்ந்து, அரசுக்கு ஆலோசனை சொல்வார்கள் எனச் செய்திக் குறிப்புகள் சொல்கின்றன.

குழு என்னவோ சரியான ஆட்களைக் கொண்ட குழுதான். ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்புமுறையின் பின்னிருக்கும் சக்திகள் மிக வலுவானவை. அவற்றை எதிர்கொள்ள அறிவார்ந்த தரப்பில் எடுக்கும் முயற்சிகள் மட்டுமே போதாது. அம்முயற்சிகள் அரசியல் தரப்பிலும் எடுக்கப்பட்டு மாநில உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.

ஆக, ஜிஎஸ்டிக்கு எதிரான போராட்டம் நெடியதாகத்தான் இருக்கும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


2

2

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

விஷ்வ துளசி.சி.வி   2 years ago

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் விமர்சனத்திற்கு அப்பாற்படதல்ல.GST விமர்சிக்க பட வேண்டியது தான் ..அதே போல் தமிழ்நாட்டின் சமகால அரசியலின் அவசியமான நிகழ்வுகளை அருஞ்சொல் தவிர்ப்பது ஏனோ?.ஒரு வருடத்தில் அனைத்தும் செம்மையாக செல்கிறதோ?.மக்கள் கவனிக்கிறார்கள் ஊடகம் உட்பட அனைத்தையும்?

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு. ஐந்துவிதமான வரிவிதிப்புகள் என்பதே மிக குறைவு. நல்ல உதாரணம் தேங்காய் எண்ணெய்தான். 5% குறைவு என்றால் 7% அல்லது 8% இருக்கலாம். ஆனால் 12% என்பது 140% அதிக வரி. அதனால் பத்துவிதமான வரிவிகிதங்கள்தான் பழைய வரிவிகிதங்களின் அருகில் இருக்கும். பத்து விகிதங்கள் இருந்திருந்தால் நான்கைந்து வருடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வரிவிகிதமாக குறைத்திருக்கலாம்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

ஒரு பழைய நகைச்சுவை. அரசு அலுவலர்: தேவையில்லாத பழைய கோப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. அழித்துவிடலாமா? மேல் அதிகாரி: நாளை சொல்கிறேன். அடுத்த நாள். மேலதிகாரி: சரி அழித்துவிடலாம். ஆனால் ஒவ்வொரு கோப்புக்கும் இரண்டு நகல்கள் எடுத்து வைத்துவிட்டு பழையதை அழித்துவிடவும். அலுவலர்: ஙே! GSTயின் நோக்கமே வரிவிதிப்பை எளிமைப் படுத்துவதுதான். ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

சமஸ் பெரியார்தேசிய தலைமைஇணையச் சேவைமேற்கத்திய மருந்துகள்: மறுக்க முடியாத சில உண்மைகள்டிடி கிருஷ்ணமாச்சாரிவீட்டோமரிக்கோஹண்டே அருஞ்சொல்Jaibhimஅனுஷா நாராயண்பிரடெரிக் கெல்டர் கட்டுரைஉற்பத்தி நிறுவனம்செல்வாக்கை இழந்த ஜான்சன்இந்தியாஅன்பில் மகேஸ் பொய்யாமொழிமனிதவளத் துறைசாஹேபின் உடல்தமிழக அரசுசென்னை போக்குவரத்து நெரிசல்இலவசம்வணிக அங்காடிஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்சேதுராமன்கவி நாராயணர்நாட்டுப்பற்றுக் கல்விச் சட்டம்தி பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட்காலனியாதிக்கம்சென்னை மழைவரி நிர்வாகம்போல்சொனாரோ

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!