கட்டுரை, தலையங்கம், நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

வரவேற்புக்குரிய ஆரம்பம் அக்னி பாதை

ஆசிரியர்
20 Jun 2022, 5:00 am
15

மோடி அரசு அறிவித்திருக்கும் ‘அக்னிப் பாதை’ திட்டம் வரவேற்புக்குரிய ஒன்றாகும். இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்புப் பணியில் புதிய உத்தியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இதன் பின்னணியில் உள்ள யோசனைகள் கவனத்துக்குரியவை. இந்தத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான வேலைவாய்ப்பின்மை சார்ந்து நாட்டின் கவனத்தைக் கோருகிறது. தனித்து விவாதிக்கப்பட வேண்டியது அது. வேலைவாய்ப்புக்  களமாக ஆயுதப் படைகளைப் பார்ப்பது தவறான பார்வை என்பதை இங்கே  அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது.

இந்திய ராணுவப் படைகள் அடுத்தத் தலைமுறை மாற்றத்தை எதிர்நோக்குகின்றன. போர்கள், போர்களுக்கான சூழல்கள் தவிர்ப்பட வேண்டியன; பாதுகாப்புப் படைகளுக்கான செலவுகள் எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கப்பட வேண்டுமோ அவ்வளவுக்கு அவ்வளவு குறைக்கப்படுவதே மக்கள் நல அரசுக்களுக்கான பாதை ஆகும். எனினும், ராணுவத்தை வைத்திருக்கும் ஒரு நாடு உலகளாவிய போர் வியூகப் போக்குகளுடன் தன்னுடைய ராணுவத்தை அனுசரிப்பது முக்கியம். அமெரிக்கா, சீனா என்று  உலகின் பெரும் ராணுவ சக்திகள் எல்லாமே மிக வேகமாக நவீனமாகி இருக்கின்றன. இன்றைய போர்கள் ஆள் பலத்தைக் கொண்டு நடக்கும் தாக்குதல்களுக்கு மாறாக தொழில்நுட்பப் பலத்தைக் கொண்டு நடக்கும் தாக்குதல்களாக மாறி இருக்கின்றன; ஆளில்லா ட்ரோன்கள் முதல் நெடுந்தொலைவு துல்லிய இலக்குத் தாக்குதல் ஏவுகணைகள் வரை பெருமளவில் இயந்திரமயமாகி இருக்கின்றன. ராணுவப் படைகளில் தரைப் படையினரின் எண்ணிக்கையைக் குறைத்து, கடல், வான் படைகளின் முக்கியத்துவத்தை  அதிகரிப்பது பேசப்படும் வியூகங்களில் ஒன்றாக இருக்கிறது.

இன்று சர்வதேச அளவில் ராணுவத் துறையில்  இரண்டு விஷயங்கள் இடையேயான சமநிலையைப் பேண அரசுகள் போராடுகின்றன. பாதுகாப்புப்  படைகளுக்கான செலவுகளை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியோடு (ஜிடிபி) ஒப்பிட குறைவான வீதத்தில் பராமரிக்க வேண்டும். அப்படிச்  செலவிடப்படும் தொகையில் கணிசமான பகுதி படைகளைத் திறன் மிக்கதாகப் புதுப்பிப்பதற்குச் செலவிடப்பட வேண்டும். இந்த வியூகத்தின் அடிப்படையில் படைகளில் ஆட்களின் எண்ணிக்கை குறைவது இயல்பாக நடக்கக்கூடியது என்பது புரிபட்டுவிடும். உள்ளபடி பாதுகாப்புப் படைகளில் ஈடுபடுத்தப்படும் மனிதர்களின் எண்ணிக்கை எவ்வளவுக்கு எவ்வளவு குறைப்படுகிறதோ அது நல்லது; அதுவே முற்போக்கான பார்வை.

இந்தியா இந்த விஷயங்கள் எல்லாவற்றிலும் பின்தங்கி இருக்கிறது. 2013-14 – 2022-23 காலகட்டத்துக்குட்பட்ட இந்த எட்டாண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி ரூ.112 லட்சம் கோடியிலிருந்து ரூ.237 லட்சம் கோடி ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு இணையாகப் பாதுகாப்புப் படைகளுக்குச் செலவிடப்படும் தொகையும் இரண்டு மடங்கு ஆகியிருக்கிறது. ஆனால், ராணுவம் விரும்பும் நவீனமயமாக்கல் நடக்கவில்லை. இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று ராணுவத்துக்குச் செலவிடப்படும் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி -  48.8% - படையினரின் சம்பளம், ஓய்வூதியத்துக்கே போய்விடுவதாகும். அமெரிக்கா 38.6% தொகையையும், சீனா 38.6% தொகையையும் இப்படிச் செலவிடுகின்றன. அதேபோல, இந்தியாவில் தரைப் படைதான் இந்தத் தொகையில் பெரும் பகுதியைப் பெறுகிறது. படையினருக்கான ஊதியம், ஓய்வூதியத்தில் முறையே 79%; 86% தரைப் படையினரையே சென்றடைகிறது. 

இந்திய ராணுவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தத்தின் அவசியத்தை இந்தப்  புள்ளிவிவரங்கள் துல்லியமாக உணர்த்துகின்றன. இந்திய அரசு அது நோக்கி சரியாகவே அடியெடுத்து வைத்திருக்கிறது.

இன்று சற்றேறத்தாழ 12 லட்சம் பேர் ராணுவப் படைகளிலும், 10 லட்சம் பேர் துணை ராணுவப் படைகளிலும் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் படைகளின்  எண்ணிக்கையைக் குறைப்பதுடன், செலவையும் குறைக்க  புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 'அக்னி பாதை' திட்டம் உதவும் என்று அரசு நம்புகிறது. ராணுவத்தில் 50:50 விகிதத்தில் 'அக்னி வீரர்'களை அது பயன்படுத்த உத்தேசிக்கிறது. இத்திட்டத்தின் கீழ், 17.5 வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆண்டுக்கு 46,000 பேர் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். நான்கு ஆண்டுகள் இவர்கள் ராணுவப் பணியிலும், பல்வேறு பயிற்சிகளிலும் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களில்  திறன் மிக்க 25% பேர் அடுத்து, நிரந்தரப் பணியில் சேர்க்கப்படுவார்கள். எஞ்சும் 75% பேர் ரூ.11.71 லட்சம் பணப் பலனுடன் விடுவிக்கப்படுவார்கள். 

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டைக் கட்டுக்குள் வரும்; அரசின் ஓய்வூதியச் சுமை குறையும்; ராணுவத்தினரின் சராசரி வயது 32 என்பதிலிருந்து 26 ஆகக் குறையும்; எஞ்சும் நிதியை நவீனமயமாக்கலுக்குச் செலவிடலாம்;  இதன் மூலம் ராணுவம் இளமையானதாகவும், கூடுதல் திறன் மிக்கதாகவும் செம்மையாக்கப்படும் என்கிறது அரசு. முன்னாள் தரைப் படைத் தளபதி வி.பி.மாலிக் உள்ளிட்டவர்களின் கருத்துகளைக் கணக்கில் கொண்டால் இத்திட்டம் சரியானதாகவே தோன்றுகிறது.  

இத்திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைப்பவர்கள் மூன்று முக்கியமான கருத்துகளை முன்வைக்கிறார்கள்: 1. இப்படி நான்காண்டுகள் பயிற்சி பெறுபவர்களைக் கொண்டு திறன் மிக்க படைகளை உருவாக்க முடியாது. 2. சீக்கிரமே ராணுவத்திலிருந்து இப்படி விடுவிக்கப்படுவர்கள் சமூக அமைதியைச்  சீர்குலைக்கலாம். 3. ராணுவத்தில் கிடைக்கும் நல்ல வேலைவாய்ப்பை இத்திட்டம் சீர்குலைக்கும். 

மூன்று கருத்துகளுமே சாரமற்றவை. ராணுவத்தில் ஏழாண்டுகள் பணிக்கால முறை ஒருகாலகட்டம் வரை வெற்றிகரமாக இங்கே இருந்திருக்கிறது; இப்போதும் 15 ஆண்டுகள் சேவை முடித்துச் செல்வோர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லத்தக்க நிலை இல்லை; முக்கியமாக, ராணுவப் பணியானது சித்திரவதைகள் மிகுந்தது; அதை வசதியான வேலைவாய்ப்பாக ஒரு சமூகம் கருதும் நிலை மோசமான அவலம். மாறாக, நம்முடைய ராணுவப் படையினர் கண்ணியமான ஒரு வாழ்க்கைச் சூழலைப் பெறும் வகையில் அவர்களுக்கான பணிக்காலப் பணப் பயன்கள் அதிகரிக்கப்படுவதில் தொடங்கி ராணுவப் பணியிலிருந்து வெளியேறிய பிறகான மறுவேலைத் திட்டங்கள் வரை அவர்களுக்கான நல்வாழ்வுப் பலன்களை இத்திட்டத்தில் சேர்த்திடும் யோசனைகள் இங்கே பயன் தரக் கூடியவை. 

அரசின் இந்தத் திட்டத்துக்கான முன்மொழிவிலும், திட்டத்தை எதிர்ப்பவர்கள் மத்தியிலும் ஒரு விஷயம் மையம் பெறுகிறது. அது பணிக்குப் பிந்தைய ஓய்வூதியம். இன்றைக்குப் படையினரில் கணிசமானோர் 15 ஆண்டுகள் பணியாற்றி 50 ஆண்டுகள் ஓய்வூதியம் பெறும் சூழல் நிலவுகிறது; இது பெரும் சுமை என்று கருதுகிறது அரசு. ஓய்வூதியம் ஓர் உரிமை என்று கருதுகின்றனர் எதிர்ப்போர்.

நிச்சயமாக ஓய்வூதியம் ஓர் உரிமை. ஆனால், அது சமூகத்தில் எந்த ஒரு பிரிவினருக்குமான விசேஷ  முன்னுரிமையாக இருக்க முடியாது. இன்றைய இந்திய மக்கள்தொகையான 140 கோடி பேரில் வெறும் 2% மட்டுமே உள்ள மத்திய, மாநில அரசுகளுடைய  ஊழியர்கள் - அவர்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி - எஞ்சிய 137 கோடி பேரில் இருந்து தனித்த பிரிவினராக நடத்தப்படுவது சரியான போக்கு இல்லை. அரசின் செலவீனத்தில் ஒரு பெரும் தொகையை இப்படி ஒரு சிறு பிரிவினர் மட்டும் கொண்டுசெல்வது சமூகநீதிக்கு முற்றிலும்  எதிரானது.

ஒவ்வொரு துறையிலும் பணியாற்றுபவர்கள் தங்களுடைய நியாயமான பணப் பயன்களைப் பணிக் காலத்திலேயே பெறட்டும். பணி ஓய்வுக்குப் பிறகு முதுமையில் ஒரு விவசாயியும், ராணுவ வீரரும்; கூலித் தொழிலாளியும் அதிகாரியும்; ஆட்டோ ஓட்டுநரும் மருத்துவரும் கண்ணியமான வாழ்க்கை வாழ ஒரே விதமான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அரசு தரும் சூழல் உருவாகட்டும். அதுவே நல்லது. அதற்கான சீர்திருத்த ஆரம்பமாக 'அக்னி பாதை' அமையட்டும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3






9

பின்னூட்டம் (15)

Login / Create an account to add a comment / reply.

LOGESH KUMAR   2 years ago

ஆசிரியர் கவனத்திற்கு அக்னி பாத் திட்டம் வெறும் ராணுவத்தில் நவீனபடுத்தலில் மட்டும் இல்லை. வீரர்களின் வயது படிக்கும் வயது. இருபது மூண்டு வயதில் வெளி வந்து அவர்களால் கல்வி தொடரமுடியுமா என்பது கேள்வி குறி. அவர்களுக்கு என்னவிதமான பயிற்சி அளிக்கப்பட போகிறது என்பது தெரியாது. வெளியே வரும் ராணுவ வீரர்கள் என்ன வேலை இங்கே காத்துக்கொண்டிருக்கிறது? ஏற்கனவே இருக்கும் ராணுவ வீரர்களுக்கு நவீனத்துவம் சொல்லிக்கொடுக்கலாமே! அதில் என்ன பிரச்சனை? ஓய்வுஊதியம் பிரச்னையை காரணம் காட்டி ராணுவத்தில் அத்த கூலிகளாக மாற்றுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தவிர ராணுவ சேவை செய்தோருக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கவே அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதை மறுத்து இறுதி தொகை கொடுத்து அனுப்பிவிட்டால் ஏற்கனவே இங்கு வேலை இல்லா வளர்ச்சி நாட்டை மோசமான நிலைக்கு இட்டு சென்று கொண்டிருக்கிறது. இதில் கைத்தொழில் கற்று கொடுத்து அனுப்பும் அக்னி வீரர்கள் சுய தொழில் எதையோ செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம் ஆனால் ஆளும் அரசின் கொள்கைகள் அதற்கு எதிராக சிறு குறு தொழில்களை முடக்கும் போக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது இதையும் மனதில் வைத்து பார்க்க வேண்டி இருக்கிறது பிறகு அவர்கள் சமூக பங்களிப்பில் எப்படி தங்கள் பங்களிப்பை செலுத்த முடியும். பணம் இருக்கும் வரை செலவு செய்து விட்டு பின்னர் இருபது மூண்டு வயது இளைஞன் என்ன செய்வான். தான் கற்றுக்கொண்ட பாடத்திலிருந்து கைத்தொழில் செய்வானா அல்லது மூளை சலவை செய்து அனுப்ப பட்ட ஒரு மனிதனாக ஆளும் ஆட்சியாளர்களுக்கு விசுவாசியாக இருக்க போகிறானா என்பது காலம் பதில் சொல்லும். ஆகா என் பார்வையில் இன் திட்டம் இன்னொரு ஆர் எஸ் எஸ் இன் சாகவாக செயல் படுமோ என்ற அச்சம் இருக்கிறது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

K.SUSILKUMAR   2 years ago

ஆசிரியர் கவனத்திற்கு, இத்திட்டத்தை நாம் இன்னொரு கோணத்திலும் பார்க்க வேண்டும். ஒன்றிய அரசின் ஒற்றைத்தன்மை மற்றும் இந்துத்துவம் இதில் பிரிதிபலிக்காது என்பதை எவ்வாறு அறிவது. இவர்களில் திறன் மிக்க 25% பேர் நிரந்தரப் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்றால் அவர்கள் யாராக இருக்கக்கூடும் என்பதையும் ஒன்றிய அரசின் முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையில் அறியலாம்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Raja   2 years ago

இங்கு கருத்து பதிவிடும் நண்பர்கள் ஒன்றுக்கு பதில் சொல்லுங்கள். இந்த வேலை இவர்களை காப்பாற்றுவதற்கா அல்லது நாட்டை காப்பாற்றுவதற்கா?  மஹிந்திரா வேலை கொடுப்பாரா இல்லையா என்று ட்விட்டரில் கடும் விவாதம் செய்கிறார்கள். மஹிந்திராவும் டாடாவும் வேலை கொடுப்பார்களா என்பதல்ல அரசின் பிரச்சனை. பதினைந்து வருடம் வேலை பார்த்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் சும்மா இருந்தாலும் அளிக்கப்படும் பென்ஷன் தான் பிரச்சனை. தவிர மற்ற சலுகைகளும் அரசுக்கு பெரும் சுமையாக உள்ளது. அவர்களின் பிள்ளைகள் படிக்க ராணுவ மருத்துவ கல்லூரிகள், மற்ற கல்லூரிகளிலும் ஸ்பெஷல் கோட்டா, ராணுவ கேண்டீனில் டிவி, வாஷிங் மெஷின் முதல் சரக்கு, மளிகை வரை அனைத்தும் சலுகை விலையில், ரயில் சலுகை கட்டணம் மற்றும் சிறப்பு ஒதுக்கீடு,  ஸ்பெஷல் மிலிட்டரி கேண்டீன், வங்கி கடன், குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச மருத்துவம், சகல வசதிகளுடன் கூடிய ராணுவ குவார்ட்டர்ஸ் போன்ற சகல சலுகைகள் கிடைக்கின்றன. ராணுவ பட்ஜெட்டில் பாதி அப்படியே ஓய்வு பணம் அளிக்க போய்விடுகிறது. இது தவிர அனைத்து சலுகைகளை அளித்து அதில் ஒரு பகுதி போகிறது. ராணுவம் மட்டும்தான் அனைத்து சலுகைகளையும் இன்னும் வழங்கி கொண்டு உள்ளது. ராணுவம் கையில் இருந்து கொடுக்கவில்லை, அரசும் அரசுக்கு வரி செலுத்தும் மக்களும் கொடுக்கிறார்கள்.  துப்பாக்கியை தூக்கி கொண்டு நிற்பவர்கள் மட்டும் நாட்டை காப்பவர்கள் அல்ல,  இந்த நாட்டை விழுந்து விடாமல் காப்பாற்றும் ஒழுங்காக வரி செலுத்தும் கோடிக்கணக்கான மக்களும், விவசாயிகளும்,  வெளிநாடுகளுக்கு சென்று அந்நிய செலாவணியை சம்பாதித்து நாட்டுக்கு அனுப்பி இந்தியா மற்ற நாடுகளில் பொருட்கள் வாங்கவும் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் என இந்தியாவை காப்பாற்றும் மக்களுக்கு இந்த சலுகைகள் ஏதும் உண்டா? இல்லையே, நாலு வருடம் வேலை பார்க்கட்டும். வரி இல்லாத 30,000 மாத சம்பளம் மற்றும் கடைசியில் அது தவிர 11.75 லட்சம் வரி இல்லாமல் கையில் கொடுக்கிறார்கள். அதன் பிறகும் படிக்கலாம், வேலைக்கும் செல்லலாம். தொழிலும் செய்யலாம். இந்த வேலை நாட்டை காப்பாற்றுவதற்கு தான், இவர்களை மட்டுமே காப்பாற்றுவதற்கு அல்ல!

Reply 4 2

Login / Create an account to add a comment / reply.

Mahesh Raja G   2 years ago

கல்லூரி போகும் வயதில் ராணுவம் செல்லும் ஒருவர், நான்கு வருடம் கழித்து வரும் போது தன் நண்பர்கள் அவரகளை விட அதிகம் படித்தவர்ககளாகவும், அதிக வருவாய் ஈட்டுக்கிறவர்களாகவும் இருப்பர். அதை எப்படி ராணுவத்தில் சேர்ந்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும். இது ராணுவத்தில் சேருவதை எப்படி ஊக்குவிக்கும்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   2 years ago

அன்புள்ள ஆசிரியருக்கு வேறென்ன சொல்ல ‘யூ டூ சமஸ்’ என்பதைத் தவிர. என்னதான் நல்ல திட்டமாக இருக்கட்டுமே, அதை ஏற்க வேண்டிய இளைஞர்கள் மறுத்துப் போராடுகிறார்கள் என்றால், ஒரு மக்கள் அரசு குறைந்த பட்சம் அவர்களிடம் விளக்க முன் வர வேண்டும். அதற்கு மாறாக இராணுவ அதிகாரிகள் முதல், அமைச்சர்கள் கவர்னர் எனப் பலரும் அதற்கு முட்டுக் கொடுக்க அவசரப்படுகிறார்கள் என்றால், மிக ஆழமாக ஏதோ தவறாக இருக்கிறது என்பது தெரியவில்லையா? ஒரு நாட்டின் இராணுவ வீரர்கள் என்றால் அது ஓய்வூதியச் சுமை மட்டும் தானா? செலவும் குறைய வேண்டும், இராணுவமும் நவீனமயப்பட வேண்டும் என்றால், ரஃபேல் போர் விமானம் வாங்கிய லட்சணம் சந்தி சிரிக்கிறது. உங்களிடமிருந்து ஆய்வு பூர்வமான ஆழமான கட்டுரையை எதிர்பார்க்கிறோம். விவாதங்களைக் கிளப்பிவிட இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். உங்கள் கருத்துப்படி இவ்வளவு நல்ல திட்டத்தை ஏற்கச் செய்ய ஒரு மக்கள் அரசு என்ன செய்ய முன்வர வேண்டும் என்பதையும் எழுதுவீர்கள் என நம்புகிறேன்

Reply 8 1

Login / Create an account to add a comment / reply.

Raja   2 years ago

மோடி எதை கொண்டு வந்தாலும் என்னவென்று யோசிக்காமலேயே எதிர்ப்பு காட்டுவது போல் இல்லாமல் சமஸ் சரியாக வரவேற்று எழுதி இருக்கிறார். தான் ஒரு நடுநிலையாளர் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். மற்ற அரசு துறைகளை போல் அல்லாமல் ராணுவத்திற்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பெரும் சுமையாக உள்ளது. இந்தியா ஒன்றும் அமெரிக்கா அல்ல, ஆனால் உலகில் ராணுவத்திற்கு செலவழிக்கும் நாடுகளில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. இது தேவை அற்றது. இந்த நாட்டின் மக்கள் பசியிலும் பண தட்டுப்பாட்டிலும் காலத்தை கழிக்கும் போது நாம் இப்படி பாதுகாப்பு என்ற பெயரில் வீணடிப்பதை எந்த காரணத்தை சொல்லியும் ஏற்று கொள்ள முடியாது. நாம் சீனாவிடம் போரில் வெல்ல இயலாது. பாகிஸ்தானை நிச்சயமாக வெல்ல முடியும். அங்கு யாரும் இப்போது குறைந்தது அடுத்த பத்தாண்டுகளுக்கு சண்டை போடும் நிலையில் இல்லை. அந்த அளவு அந்த நாட்டின் நிலைமை உள்ளது. பக்கத்தில் வேறு பலமான  எதிரிகள் நமக்கு இல்லை. எனவே நாம் தேசத்தை வளப்படுத்த வேண்டும். 140 கோடியை தாண்டி மக்கள் தொகை பெருகி கொண்டு இருக்கிறது. இவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் மிகவும் அவசியம். மேலும் ஐரோப்பா, மத்திய கிழக்கு,  அமெரிக்கா எங்கும் வலதுசாரிகள் பெருகி கொண்டு வருகிறார்கள். நாம் எப்போதும் செய்வது போல் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு நமது மக்களை வேலைக்கு அனுப்ப முடியுமா என்று தெரியவில்லை.  இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு நமது நிதியை மிகவும் அவசியமான தேவைகளுக்கு மட்டுமே செலவிடுமாறு அமைத்து கொள்ள வேண்டும். மற்றவர்களை கொல்வதற்காக நிதியை மேலும் மேலும் செலவிட வேண்டிய அவசியமில்லை.  மீண்டும் சமஸிடம் இருந்து தெளிவான பதிவு. 

Reply 4 3

Login / Create an account to add a comment / reply.

Suresh Kumar   2 years ago

Persons at productive age 17 to 23, who has to be college is inducted for employment and sent out at the age of 25 to 28, with no other qualifications for second job. They can only become a watchman, barber ....as a union minister said. Would you call this a good scheme?

Reply 4 1

Mahesh Raja G   2 years ago

Even I am also feeling the same in this. Once they come out after 4 years, they cannot compete with the environment which would have learnt more than them and would have settled in good job with good pay...

Reply 0 1

Login / Create an account to add a comment / reply.

S.Neelakantan   2 years ago

இந்தத் திட்டத்தை பாராளுமன்றத்திலேயே அறிவித்து, விவாதித்துக் கொண்டு வந்திருக்கலாமே? இப்போது அவசரகதியில் மாற்றங்கள் செய்வது தவிர்க்கப் பட்டிருக்குமே?

Reply 12 2

Login / Create an account to add a comment / reply.

Kumaresan Krishnasamy   2 years ago

எல்லாக் கட்டுரைகளிலும் ஏன் மோடி அரசு என்றே குறிப்பிடுகிறீர்கள். மத்திய அரசு அல்லது ஒன்றிய அரசு என்று குறிப்பிடலாமே?

Reply 6 2

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

Bjp அவசர அவசரமாக கொண்டு வரும் எந்த சட்டமும்/திட்டமும் நல்லது இல்லை. வெளி தோற்றத்திற்கு நல்லது போலவே தோன்றும்.. ஆனால்................. வெறும் நான்கு ஆண்டுகளுக்கு ராணுவ வேலை... பிறகு வெளியே வந்து என்ன செய்ய... நிச்சயமில்லா வேலை, பின்பு ராணுவ ரகசியங்கள் வெளியே விற்கும் நிலை வராதா...

Reply 5 2

Login / Create an account to add a comment / reply.

Alagu Muthu Eswaran   2 years ago

This insight is similarly narrow minded as the scheme, which is an adversary for a long run. You are mentioning about the employment opportunity for the young people...What will they know at the age of 17? How they can get job after four years without proper graduation? Haven't you heard what Union Minister Kishan Reddy told? He said that these Agniveers can be trained on various jobs like driving, electrician, hair dresser...Why haven't you touched on this? Are our Agniveers destined to be a hair dresser? Where this scheme is pushing the young people? Your remarks are completely flawed as the scheme...We fear that this contract-based scheme would damage the ethos of our armed forces and you are talking about cost cutting and investing on technology...How can we expect technological enhancement from the conservative minds? Instead of disseminating your insights, why can't you speak directly to the young aspirants in Tamil Nadu on how their minds read the scheme. There are several villages in our state that are sending people to the armed forces generations after generations...Deeply disappointed to see the veterans like you backing the scheme that is being agitated nationwide. Do you think that more young people are joining in the armed forces without knowing the fact that they ought to face a painful journey under the sun and moon? They know and they don't need advocacy for that as their aspiration to serve for the nation nurture them to pursue this path...And what happens if they are being told that they will be removed from the service after four years? Do you think our posterity would love to pursue a temporary service in armed forces? What's the need for this scheme now and if you are speaking about the cost -cutting, yes, then let's remove some population whom the Centre considers as aliens by implementing CAA and NRC and let's spend more on native Indians. Can you identify who are native Indians here? ...This article shows that you have clearly found some peccable points to back the scheme!

Reply 13 0

Login / Create an account to add a comment / reply.

Subramanikandan   2 years ago

பொத்தாம் பொதுவாக வரவேற்கதக்கது என சொல்வதை விட இரானுவ விடுவிப்புக்கு பின் அவர்களுக்கான வழிகாட்டுதலை சொல்லிருக்கலாம். எடுத்ததுமான இனிய வரவேற்பு தங்களுக்கும் தேவைகளாயிற்றோ என்றே தோன்றுகிறது. வலுவிழந்து பிறழ்தல் எழுத்துக்கும் வலிமை சேர்க்காது.

Reply 9 1

Login / Create an account to add a comment / reply.

Periasamy   2 years ago

ஆசிரியர் இனி இரண்டு நாட்களுக்கு அக்னிபாதையில் நடக்க வேண்டி இருக்கும்..😀

Reply 5 1

Login / Create an account to add a comment / reply.

Anbarasu   2 years ago

சாரமற்ற வாதமாக உள்ளது .

Reply 4 2

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பாண்டியன்பஞ்சாப்தேசத் துரோகச் சட்டம்சந்நியாசமும் தீண்டாமையும்நாகலாந்து துப்பாக்கிச் சூடுஒற்றை அனுமதி முறைடாக்டர் வெ.ஜீவானந்தம்நாடாளுமன்றத் தொகுதிகள்யதேச்சதிகாரத்தின் பிடியில் நாடாளுமன்றம்வானொலிஆபெர் காம்யுவேலைவாய்ப்பில் கூட்டல்களைவிடக் கழித்தல்களே அதிகம்காகித தட்டுப்பாடுஅகிம்சையை கொல்ல வேண்டிய தேவை என்ன?வியாபாரிகள்குடிமைச் சமூகங்கள்பெகஸஸ்இந்திய ரயில்வேஅகாலி தளத்தின் பல்தேவ் சிங்அறநிலைத் துறைசிங்களம்மைக்ரேன்ஓவியங்கள்மூவேந்தர்கள்அண்ணா சாலைசவிதா அம்பேத்கர்சமஸ் ராஜன் குறைஜேஇஇசிக்கிம்தேர்தல் முடிவு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!