தலையங்கம், அரசியல், சட்டம், கூட்டாட்சி 3 நிமிட வாசிப்பு

காஷ்மீர்: நீதியின் வீழ்ச்சி

ஆசிரியர்
14 Dec 2023, 5:00 am
1

காஷ்மீர் மீது மோடி அரசு எடுத்த 2019, ஆகஸ்ட் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் சட்ட அங்கீகாரத்தை இந்திய நீதித் துறை வரலாற்றின் மிக மோசமான தீர்ப்புகளில் ஒன்றாகக் குறிப்பிடலாம். இந்தியாவின் மக்களாட்சி, கூட்டாட்சி இரண்டின் மீதும் விழுந்திருக்கும் மோசமான அடி இது.

இந்தியாவில் கூட்டாட்சியின் செல்வாக்கையும், மாநிலங்களின் அதிகாரத்தையும் தேசிய கட்சிகள் படிப்படியாக  நாடாளுமன்றத்தின் மூலம் குறைத்துவந்த சூழலில், பல சமயங்களில் தன்னுடைய தீர்ப்புகள் வழியே இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தி, கூட்டாட்சியைத் தாங்கிப் பிடித்து, முன்னகர்த்திய வரலாறு உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. காஷ்மீர் விவகாரம் தொடர்பான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தினுடைய முந்தைய முற்போக்கான போக்கில் ஒரு பெரும் பின்னடைவு. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கீழ் ஒரு மாநிலம் இல்லாமல் - குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சியின் கீழுள்ள சூழலிலும், அந்த மாநிலத்தைப் பிரிக்க முடியும்; மாநிலத்தின் மாநில அந்தஸ்தையே நீக்க முடியும் என்ற பாஜக அரசின் முயற்சியை நியாயப்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் முன்வைத்திருக்கும் பல வாதங்களும், முக்கியமான சில இடங்களில் அது வெளிப்படுத்தியிருக்கும் மௌனமும் காஷ்மீர் மட்டும் அல்லாது, ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களையும் பலவீனமான இடத்துக்குள் தள்ளியிருக்கிறது; ஒன்றிய அரசு நினைத்தால் எந்த மாநிலத்தையும் எப்படியும் சிதைக்கலாம் எனும் இடம்தான் அது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

எதிர்காலத்தில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் கொண்ட ஓர் ஆளும் அரசு தனக்குத் துளியும் செல்வாக்கு இல்லாத ஒரு மாநிலத்தின் மீதும் எத்தகைய நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய வாதங்கள் உதவலாம். பல்வேறு இனங்கள், மொழிகள், பிராந்தியங்களைச் சேர்ந்தோரின் கலவையாகச்  செயல்படும் இந்தியாவில், எண்ணிக்கை வலுவுள்ள ஒரு தரப்பு ஆதிக்கம் செலுத்தவும் எண்ணிக்கை சிறுத்த ஒரு தரப்பு அழுத்தித் தள்ளப்படவும் சட்டரீதியாகவே ஒரு தடத்தை உருவாக்க இந்தத் தீர்ப்பு பயன்படலாம். ஒன்றியத்தில் இணையான சகோதரர்கள் எனும் இடத்திலிருந்து கிட்டத்தட்ட காலனிகள் எனும் இடத்துக்கு மாநிலங்களைத் தள்ளிவிடக் கூடிய அபாயம் மிக்க தீர்ப்பாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது; மிக துரதிருஷ்டவசமானது!

இந்தியாவின் வன்முறைகள் மிகுந்த பிராந்தியம் என்பதோடு, உலகம் கவனிக்கும் விவகாரங்களில் ஒன்றாகவும் காஷ்மீர் இருந்துவருகிறது. எப்படியேனும் காஷ்மீரில் அமைதியையும், கூட்டாட்சியில் காஷ்மீரிகளின் பங்களிப்பையும் உண்டாக்க வேண்டும் என்று ஏழு தசாப்தங்களாக இந்திய பிரதமர்கள் முயன்றிருக்கிறார்கள். காஷ்மீரிகளின் உணர்வுகளுக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் மதிப்பளிக்கும் விதமாக ஒரு தீர்வுக்கு இந்த அரசு முயன்றிருந்தால், உள்நாட்டில் முன்னேற்றம் என்பதோடு, இந்தியாவின் மரியாதையையும் சர்வதேச அளவில் அது கூட்டியிருக்கும். 

மோடி அரசு படுயதேச்சதிகாரமான ஒரு முயற்சியை எடுத்தது. காஷ்மீரின் வரலாற்றையும் அது பொருட்படுத்தவில்லை; காஷ்மீர் சமூகத்தின் எதிர்காலத்தையும் அது பொருட்படுத்தவில்லை. காஷ்மீரின் எதிர்காலத்தை காஷ்மீர் தரப்பின் பங்கேற்பே இல்லாமல் தீர்மானிக்க முடியும் என்பது எவ்வளவு அஜனநாயகம்? நாடாளுமன்றத்தில் தனக்குள்ள பெரும்பான்மைப் பலத்தின் வழியே இந்த அட்டூழியத்தை மோடி அரசு செய்தது. இந்தியாவின் பெரும்பான்மைக் கட்சிகள் இந்த விஷயத்தில் வாய் மூடி நகர்ந்தது வெட்கக்கேடு; கூட்டாட்சிக்கு அவர்கள் இழைத்த வரலாற்றுத் துரோகம் இது. 

காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும் பாலம், காஷ்மீருக்கு விசேஷ அதிகாரங்களை வழங்கும் சட்டம் என்பதற்கு அப்பால், நவீன இந்தியாவைக் கட்டமைத்த மூத்த தலைவர்கள் அவர்கள் காலத்தில் அளித்த வாக்குறுதிகளுக்கு நம்முடைய காலத்தில் நாம் எத்தகைய மதிப்பை அளிக்கிறோம் எனும் கேள்வியின் தூல வடிவம் போன்றும் ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 370’ இருந்தது. காஷ்மீருக்கு மட்டும் ஏன் இந்தந்த விசேஷ அதிகாரங்கள் என்று கேள்வி எழுப்புவதற்குப் பதிலாக, எல்லா மாநிலங்களுக்கும் காஷ்மீரைப் போன்றே அதிகாரங்களை வழங்கலாமே என்று காஷ்மீருக்கு வெளியே உள்ளவர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தால், இன்றைக்கு அதிகாரப் பகிர்வில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்திருக்கும். ஆம், அதற்கான விரிந்த கூட்டாட்சிக்கான சாத்திய உத்வேகத்தையும் தந்தது அது. எல்லாவற்றின் மீதும்தான் அடி விழுந்திருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு

சமஸ் | Samas 22 Sep 2021

இதுவரை இந்திய அரசியல் விவாத மேஜையின் மையத்துக்கு கூட்டாட்சி வந்தமரவில்லை. இனி அது நடக்க வேண்டும். தமிழகம் இந்த விஷயத்தில் முன்னத்தி ஏராகச் செயல்பட முடியும்.

ஆட்டம் முடிந்துவிடவில்லை. சமூகங்கள் ஒவ்வொன்றும் தனக்கான அதிகாரப் பங்கை உரிமையோடு பெறும் காலமே நம் முன்னே விரிந்திருக்கிறது. எல்லாத் தளங்களையும் போன்று மாநிலங்கள் விவகாரத்திலும் இது பிரதிபலிக்கவே செய்யும். காஷ்மீர் மட்டும் அல்லாது, எல்லா மாநிலங்களுக்குமே கூடுதலான அதிகாரங்களைப் பகிரும் இடத்துக்கு இந்திய ஒன்றியம் நகர்ந்தே தீர வேண்டும். மக்களுடைய அபிலாஷைகள் அதை நோக்கி ஊற்றெடுக்கும்போது, இந்திய நாடாளுமன்றம் அதற்குரிய சட்டங்களை உருவாக்குவதை எவரும் தடுக்க முடியாது. அன்றைக்கு அந்தச் சட்டங்களுக்கான செல்லுபடித்தன்மையை இந்திய நீதித் துறை அங்கீகரிக்கும்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு
இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை
நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

5

2




1

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

U Lakshmikantan    9 months ago

கூட்டாட்சியுடன் காஷ்மீரத்தை இணைத்து யோசிப்பது அபத்தமாக தோன்றுகிறது. இதனை லடாக் மக்களவை உறுப்பினர் மக்களவையில் பேசியதையும் சேர்த்து பார்க்க வேண்டும் என்பதை ஆசிரியர் மறந்து விடக்கூடாது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

நிர்வாகக் கலாச்சாரம்செலன்ஸ்கிஇந்திய அமைதிப்படைலக்‌ஷ்மி ராமச்சந்திரன்காலை உணவு வழங்க நமக்குத் தேவை கண்ணியமான கற்பனைதிராவிட இயக்கத்தின் கூட்டாட்சி கொள்கை‘முதல்வரைப் போல’ அதிகாரம் செய்ய ஆசை!வதந்திகளும் திவால்களும்மலிஹா லோதிகுமுதம்ராகுல்நிர்பயாமாஸ்கலை அறிவியல் கல்லூரிகள்பட்டினி குறியீட்டு எண்விமானம்புதுமடம் ஜாஃபர் அலி கட்டுரைதேசிய அடையாளம்வ.உ.சி. வாழ்க்கை வரலாறுமொழிப் போராளிகள்அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு2024: ஆட்டம் முடிந்துவிடவில்லைதேனுகாதுப்புரவுத் தொழிலாளர் சங்கம்காங்கிரஸின் பொருளாதார மாடல்திரிபுராநீதிமன்ற அலுவல் மொழிகொல்வது மழை அல்ல!இனிக்கும் இளமைதாமஸ் ஜெபர்சன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!