கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு

சிலருக்கு மட்டுமே இது மகிழ்ச்சியான புத்தாண்டு

ப.சிதம்பரம்
08 Jan 2024, 5:00 am
0

ங்கிலப் புத்தாண்டில் நான் எழுதும் முதல் கட்டுரை, அனைவருக்கும் என்னுடைய ‘மகிழ்ச்சியான’ புத்தாண்டு வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். ‘மகிழ்ச்சி’ என்பது பல அம்சங்களைக் கொண்ட ஒரு கலவை. இந்தியாவில் 142 கோடி மக்கள் வெவ்வேறு நிலைகளில் வாழ்கின்றனர், அவர்களில் யார் மகிழ்ச்சியாக இருப்பார்கள் – யாரால் மகிழ்ச்சியடைய முடியாது என்று எண்ணிப் பார்த்து வியந்திருக்கிறேன்.

சமீப காலமாக, ‘மக்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் இருப்பதாக’ (ஒன்றிய) அரசு கூறுவதை அப்படியே உரத்து வழிமொழியும் பல கட்டுரைகளை வாசித்துவருகிறேன். ‘இதற்கு முன்னால் இருந்திராத வகையி’லான பொருளாதார வளர்ச்சியை நாடு கண்டிருப்பதாகவும், மக்களில் அனைத்துத் தரப்பினருமே அதனால் பயன் அடைந்துவருவதாகவும் அக் கட்டுரைகளை எழுதியவர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை, ஆனால் அது இதுவரை இருந்திராத அளவிலான வளர்ச்சி அல்ல! ‘பொருளாதார வளர்ச்சியின் பொற்காலம்’ என்பது காங்கிரஸ் தலைமயிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆண்ட காலத்தில் 2005-2008 வரையில் ஏற்பட்ட - 9.5%, 9.6%, 9.3% - ஜிடிபியாகும்.

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் சராசரி ஜிடிபி 5.7% மட்டுமே. 2023-24இல் 7.3% ஆக இருக்கும் என்று தேசிய புள்ளிவிவர அமைப்பால் (என்எஸ்ஓ) மதிப்பிடப்படும் ஜிடிபியையும் சேர்த்துக் கூட்டினால்கூட சராசரி வளர்ச்சி 5.9% ஆகத்தான் இருக்கும்.

இது, இதுவரை இருந்திராத வளர்ச்சியோ, பிரம்மாண்டமானதோ, ஆச்சரியப்படும்படியானதோ அல்ல; திருப்தி தரக்கூடியது, ஆனால் இது எல்லாத் துறைகளிலும் நன்கு பரவிய வளர்ச்சியும் அல்ல - போதுமானதும் அல்ல.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மகிழ்ச்சியடையும் மக்கள்

அரசின் பொருளாதாரக் கொள்கைகள் நேர்முக வரி விகிதங்களைக் குறைத்துவிட்டது, மறைமுக வரிகளை உயர்த்தியும் பல சமயங்களில் பெருஞ்சுமையாக மக்கள் மீது திணித்தும் செயல்படுகிறது. சாலைகள், ரயில் போக்குவரத்து, துறைமுகங்கள், விமான நிலையங்கள் என்று மூலதன முதலீட்டை பெரும் துறைகளில் மட்டுமே ஒன்றிய அரசு செலவிடுகிறது, கல்வி – மக்களின் சுகாதார நலன் ஆகியவற்றுக்குப் பற்றாக்குறையாகவே நிதி ஒதுக்குகிறது, மகளிர் போன்ற சில பிரிவினருக்கு மானியங்களை வழங்குகிறது.

அரசு திருப்திப்படும் இந்தப் பொருளாதார வளர்ச்சி, சமூகத்தின் சில பிரிவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அப்படி மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்திருப்பவர்கள் யார் என்று என்னால் அடையாளம் காட்ட முடியும்: பெருந்தொழில் – நடுத்தரத் தொழில் அதிபர்கள், தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெரும் பணக்காரர்கள், வங்கி உடைமையாளர்கள், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், வியாபாரிகள், இடைத்தரகர்கள், கடனில் மூழ்கியதால் விற்கப்படும் சொத்துகளை மிகக் குறைந்த விலைக்கு வாங்குவோர், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மென்பொருள் வித்தகர்கள், மொத்த வர்த்தகர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக – கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணக்கார விவசாயிகள், வட்டிக்கு கடன் கொடுக்கும் லேவா-தேவிக்காரர்கள் ஆகியோர்தான் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

மகிழ முடியாதவர்கள்

சமூகத்தின் பெரும் பகுதியினர் மகிழ்ச்சி அடைய முடியாமல், துயரங்களிலேயே வாழ்கின்றனர். மக்களில் பெரும்பான்மையானவர்கள், மகிழ்ச்சியாக வாழ்பவர்களோடு சேர முடியாமல் – அவர்களிலும் பெரும்பாலானவர்கள் அடியோடு கைவிடப்பட்ட நிலையில் – வாழ்கின்றனர்.

இப்படி வாழ்வோரில் முதல் சமூகத்தினர் எண்ணிக்கை மட்டுமே 82 கோடி. இவர்களுக்குத்தான் ஒன்றிய அரசு ஒரு மாதத்துக்கு ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை பொது விநியோக முறை மூலம் விலையில்லாமல் (இலவசம்) வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

விலையில்லாமல் அவசியப் பண்டங்களைக் கொடுப்பதென்பது அவற்றை வழங்கும் அரசுக்கோ, அதைப் பெறும் மக்களுக்கோ கௌரவமான அடையாளமல்ல. அது பொருளாதார வளர்ச்சியையும் காட்டவில்லை, நாட்டின் செழிப்பையும் உறுதிப்படுத்தவில்லை. உணவுப் பொருள் தயாரிப்பில் முக்கியமான தானியங்களை அரசு விலையில்லாமல் கொடுக்கிறது என்றால் அந்த அளவுக்கு மக்களிடையே ஊட்டச்சத்துக் குறைவு பரவியிருக்கிறது என்றும், மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்றும் காட்டுகிறது.

அரிசி, கோதுமையைக்கூட வாங்க முடியாமல் நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் ஏன் இருக்கின்றனர்? அதற்குக் காரணம் அவர்களுக்குக் கிடைக்கும் மிக மிகக் குறைந்த ஊதியம் அல்லது வேலையே கிடைக்காத நிலைமைதான். பற்றி எரியும் இவ்விரு பிரச்சினைகளைத் தீர்க்க இந்த அரசிடம் எந்தக் கொள்கையும் இல்லை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்பது குடும்பங்களின் குறைந்த வருவாயை உயர்த்தவும் அவர்களுடைய வருமானத்தை மேலும் ஒரு உதவி மூலம் அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்டது. தொடக்கத்திலிருந்தே இந்தத் திட்டத்துக்கு விரோதமான எதிர்ப்புணர்வுடன்தான் இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 2022 ஏப்ரல் முதல் இந்த வேலைக்கான பதிவேட்டிலிருந்து 7.6 கோடித் தொழிலாளர்களை நீக்கிவிட்டது ஒன்றிய அரசு.

இப்போதுள்ள பதிவுபெற்ற தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் (8.9 கோடிப் பேர்), தொடர்ந்து வேலைக்கு வருவோரில் எட்டில் ஒரு பகுதியினர் (1.8 கோடிப் பேர்) ஆதார் அடிப்படையிலான பணம் வழங்கும் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திலிருந்து விலக்கப்பட்ட குடும்பங்களும் தனியாள்களும் எப்படி இனி வாழ்க்கையை எதிர்கொள்வார்கள்? இனி வாழ்க்கையே அவர்களுக்குப் பெரும் போராட்டம்தான், அவர்களால் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

வேலைவாய்ப்பு குறைவு 

மகிழ்ச்சியடையாத இன்னொரு பெரும் பிரிவினர் வேலை கிடைக்காமல் அவதிப்படுவோர். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்துப் பேசுவதையே நிறுத்திவிட்டது ஒன்றிய அரசு. சுயவேலைக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்திவிட்டதாகக் கூறி மக்களைத் தவறான முறையில் திருப்திப்படுத்தப் பார்க்கிறது.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் சராசரியாக அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளை மட்டுமே படிப்புக்காக பள்ளிக்கூடங்களில் செலவிடும் நாட்டில், வேலை பெறுவதற்கான தொழில் பயிற்சி என்பதே அவர்களுக்குக் கிடைக்காது, அப்படியென்றால் அவர்கள் வேலையில்லாமல்தான் அவதிப்படுவார்கள். சுயவேலைவாய்ப்பில் ஈடுபடுவதாகக் கூறும் இளைஞரோ - யுவதியோ நிரந்தரமான வருவாயோ, ஊதியமோ இல்லாமல் வேலை செய்தால் - கூலி என்ற அளவிலேயே காலம் கழிப்பார்கள்.

அந்த ஊதியத்தை அவர்களால் விலைவாசிக்கு ஏற்பவோ, தங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளவோ உயர்த்திக்கொள்ள முடியாது. அவர்களுடைய வேலைக்கும் உத்தரவாதம் கிடையாது, வேறு பணப் பயன்களும் சலுகைகளும் கிடையாது. இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை அளவு 10.0%. படித்த பட்டதாரிகள் இடையில் அதிலும் 25 வயதுக்குக் குறைந்தவர்கள் இடையில் 42%. நிச்சயமாக அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை.

விலைவாசி அதிகம்

மகிழ்ச்சியற்ற நிலையில் வாழும் மற்றொரு பிரிவினர், விலைவாசி உயர்வால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறவர்கள். இந்திய சமூகத்தில் வருவாய் – சொத்து அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கும் 10% பெரும் பணக்காரர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் விலைவாசி உயர்வால் மகிழ்ச்சியின்றியே வாழ்கின்றனர். அந்த 10% பெரும் பணக்காரர்கள்தான் நாட்டின் சொத்துகளில் 60%க்கு உரிமையாளர்கள், அவர்கள்தான் நாட்டின் மொத்த வருவாயில் 57% பெறுகின்றனர்.

2022இல் சராசரி பணவீக்க விகிதம் (விலைவாசி அதிகரிப்பு அளவு) 6.7%. 2023இல் அதன் அதிகபட்ச வரம்பு 2 முதல் 6% வரையில் 12 மாதங்களில் நான்கு மாதங்கள் உயர்ந்தது.

2023 நவம்பரில் பணவீக்க விகிதம் 5.5%. உணவுப் பண்டங்களின் விலை உயர்வு இப்போது 7.7%. இந்திய ரிசர்வ் வங்கியின் 2023 டிசம்பர் அறிக்கைப்படி, ‘அரசு நிர்ணயித்த இலக்கைவிட பணவீக்க விகிதம் தொடர்ந்து உயர்ந்துகொண்டேதான் இருக்கும்’. விலைவாசி உயர்வு காரணமாக பண்டங்களின் நுகர்வு குறைந்துவிட்டது, குடும்பங்களின் மொத்த வருவாயில் சேமிப்பும் குறைந்துவிட்டது, குடும்பங்களின் கடன் சுமை அதிகமாகிவிட்டது. பணவீக்க விகித்தைக் குறைக்க வேண்டிய பொறுப்பை அரசு கை கழுவிவிட்டது, அந்த வேலையை இந்திய ரிசர்வ் வங்கியிடம் விட்டுவிட்டது.

மறைமுக வரிகளைக் குறைக்க அரசுக்கு விருப்பமில்லை, அதுதான் ஏழைகளுடைய விலைவாசி உயர்வுச் சுமையைக் குறைக்கக்கூடியது. இதை ஏன் குறைக்க மறுக்கிறது என்றால், அப்படிச் செய்தால் அரசின் வருவாய்க்கும் செலவுக்குமுள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டிய இலக்கை தன்னால் எட்ட முடியாது என்று அது அஞ்சுகிறது.

மோடி தலைமையிலான அரசில் எட்டப்பட்ட மிதமான பொருளாதார வளர்ச்சி வீதம்கூட, சமூகத்தின் பெரும்பகுதி மக்களுக்குப் பயன்தரும்படியாக இல்லை, காரணம், அரசின் கொள்கைகள் விலைவாசியைக் குறைக்கவும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும் தவறியதுதான். அது மட்டுமல்லாமல் இந்த அரசின் கொள்கைகள் ‘பணக்காரர்களால்’, ‘பணக்காரர்களுக்காக’, ‘பணக்காரர்களே’ வகுத்து நிறைவேற்றுபவையாக இருக்கின்றன.

பணக்காரர்களுக்கு இடையிலும்கூட ஏகபோகமான முதலாளிகள் கரங்களில் அல்ல – மிகச் சில பெருந்தொழிலதிபர்கள் கைகளுக்கு மட்டுமே (சில்லோர் முற்றுரிமை) லாபம் அனைத்தும் கிடைக்கும் அளவுக்கு அரசின் கொள்கைகள் படுதீவிரமாகச் செயல்படுகின்றன. புத்தாண்டானது மிகச் சில மக்களுக்கு மகிழ்ச்சியையும் மிகப் பெரும்பான்மை மக்களுக்கு மகிழ்ச்சியின்மையையும்தான் தரும் என்று கருதுகிறேன்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

புத்தாண்டில் எப்படி இருக்கும் நம் பொருளாதாரம்?
துயர நிலையில் பொருளாதாரம், தொடர்ந்து மறுக்கும் அரசாங்கம்
7.5% ஜிடிபி வளர்ச்சி முடியுமா, முடியாதா?
பொருளாதாரப் பேரழிவை எதிர்நோக்குகிறதா இந்தியா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






மாயக் குடமுருட்டி: பஞ்சவர்ணத்தின் பருக்கைகள்அழகியலும் மேலாதிக்க சுயமும்காந்தி பெரியார் சாவர்க்கர்மாயக் குடமுருட்டி: பாமணியாறு98வது தலைவர்ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்இயக்கச் செயல்பாடுகள் கர்நாடகம் எல்லைப் பிரச்சினைஅரசியல் – பொருளாதாரம்சங்க காலம்ரஜினி 63 - மறுபார்வை: நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோமகுடும்ப வருமானம்கருத்து வேறுபாடுகள்தகுதிநீதிபதி கே.சந்துரு குழு அறிக்கைபெரியார் சொன்ன ‘சீவக்கட்டை’மூன்று சட்டங்கள்ஒடிஷாபிஜு ஜனதா தளம்இந்திய பொருளாதாரம்ஜாம்பியாவும் கென்னெத் கவுண்டரும்!நண்பகல் நேரத்து மயக்கம்டீனியா பீடிஸ்ராம ஜென்ம பூமிதேசியமயமாக்கம்பாட்ரீஸ் லுமும்பாசினைமுட்டைபொதிகைச் சோலைஆளுநர்தமிழ்வழிக் கல்வி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!