கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, பொருளாதாரம், ரீவைண்ட், நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

ரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்

சமஸ் | Samas
11 Oct 2018, 5:00 am
0

நாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான்? அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்கான போர்த் தளவாடங்கள்கூட நம்முடைய வீரர்களிடம் இன்று இல்லை என்ற செய்தி வந்தால், அவன் எப்படிக் கொந்தளிப்பான்?

கல்லூரி நாட்களில், ‘அமெரிக்க ராணுவம், சீன ராணுவத்தோடு ஒப்பிட இந்திய ராணுவத்திடம் ஆயுதங்கள், தளவாடங்கள் குறைவு’, ‘இந்திய ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு போதாது’ என்றெல்லாம் டெல்லியிலிருந்து ‘தேசிய ஊடகங்கள்’ செய்தி வெளியிடுகையில் கடுமையான கொந்தளிப்பு உருவாகும். மூளை உஷ்ணம் அடையும். உடல் தடதடக்கும். நரம்புகளுக்குள்ளான ரத்தக் கொப்பளிப்பைத் தோலுக்கு வெளியிலும் பார்க்க முடியும்.

ஊடகத் துறைக்கு இரண்டு பண்புகள் உண்டு. வெளியே இருப்பவர்களுக்கு அது கற்பனைகளை அள்ளிக்கொடுக்கும். உள்ளே வந்தடைபவர்களிடம் முதலில் அது அவர்களுடைய கற்பிதங்களை உடைக்கும்.

செய்தி ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் முன் செய்திகளை எப்படி அணுக வேண்டும் என்று ஊடக வகுப்பு எடுத்த ஒரு மூத்த சகாதான் என்னுடைய கற்பிதங்களை உடைத்தார். “ஒரு காவல் நிலையத்தின் உள்விவகாரங்களை நாம் வெளிக்கொண்டுவந்தாலே விஷயம் வெளியே போனதற்காக அங்குள்ள போலீஸ்காரர்களை மேலதிகாரிகள் கிழித்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது, ஒரு போர் வந்தால் பத்து நாட்களுக்கான ஆயுதங்கள்கூட ராணுவத்திடம் இல்லை என்பது மாதிரியான தகவல்கள் எப்படி இவ்வளவு சாதாரணமாக தேசிய ஊடகங்களை வந்தடையும்? உண்மையில் நம்முடைய ராணுவத்திடம் எவ்வளவு ஆயுதங்கள் கையிருப்பில் இருக்கின்றன, என்ன நிலையில் இருக்கின்றன என்பது ராணுவ ரகசியம் இல்லையா? ராணுவத் தலைமை, அரசு இரண்டுக்கும் இது உள்ளபடியே சங்கடம் தரும் செய்தி என்றால், இத்தகைய செய்திகள் ஏன் ஊடகங்களுக்குக் கசியவிடப்படுகின்றன?”

அவர் மேலும் பேசலானார். “இங்கே எல்லாவற்றிலும் லாபக் கணக்குகள் உண்டு. லாபி உண்டு. ராணுவத்திடம் உள்ள வாகனங்கள் பழசாகிவிட்டன என்று டெல்லியிலிருந்து வரும் ஒரு செய்தியை நீ படிக்கிறாய் என்றால், அந்தச் செய்திக்குப் பின் ஏதோ ஒரு வாகன நிறுவனம் இருக்கலாம், யாரோ சில அதிகாரிகள், யாரோ சில இடைத்தரகர்கள், யாரோ சில அரசியல்வாதிகள் இருக்கலாம் என்று சந்தேகி. செய்திகளில் சமூக அக்கறை மட்டும் அல்ல; வர்த்தக அக்கறைகளும் செயல்படலாம். ஆளுங்கட்சியில் மட்டும் இல்லை; எதிர்க்கட்சியிலும் அவர்கள் இருக்கலாம். செய்திகளைச் சந்தேகப்படு. நான் சொல்லும் டெல்லி பத்திரிகையாளர்களின் சொத்து விவரங்களை விசாரி. பத்திரிகையாளர்களாக மட்டும் இருந்துகொண்டு அவர்களால் எப்படி இத்தனை கோடி சொத்துகளைக் குவித்திருக்க முடியும் என்ற கேள்விக்குப் பதில் தேடு. புரியும்!”

பிற்பாடு டெல்லியில் சுற்றிய நாட்களில் எல்லாம் புரிபட்டது. 2014 மக்களவைத் தேர்தல் தருணத்தில் இந்திய ஒன்றியம் முழுவதும் பயணித்து, பல்வேறு தரப்பினரும் இங்கு ஜனநாயகத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று ‘இந்தியாவின் வண்ணங்கள்’ கட்டுரைத் தொடர் எழுதினேன். அப்போது நாடறிந்த சில பத்திரிகையாளர்களின் பேட்டியையும் அதில் கொண்டுவர விரும்பினேன். டெல்லியில் நடக்கும் பேரங்கள், பேச்சுவார்த்தைகளில் பத்திரிகையாளர்களின் இடையீட்டை அதில் பதிவுசெய்யும் நோக்கம் எனக்கு இருந்தது.

ஜனநாயகத்தில் இத்தகைய இடையீடுகள், லாபிகளுக்கான தேவையைப் புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியாகவே நான் அதைச் செய்ய முயன்றேன். ஏனென்றால், அமைச்சர்களாலேயே செய்து தர முடியாத காரியங்களைக்கூட அனாயாசமாகப் பிரதமர்களிடம் பேசி முடித்துத் தரும் பத்திரிகையாளர்களின் கதைகளை நான் கேள்விப்பட்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு பேட்டிக்கு யாரும் தயாராக இல்லை.

உலகெங்கும் இன்றுள்ள அரசதிகாரக் கோட்டைகளின் உள் சூட்சமப் பாதைகளை அறிந்தவர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்வார்கள்: நவீன அரசில் ஊழல்களின் தாய் ராணுவப் பேரங்களிலேயே குடிகொண்டிருக்கிறாள். தேச நலன் என்ற இரு வார்த்தைகள் போதும், தேசியத்தின் பெயரால் ஒரு அரசு எதையும் செய்யலாம்; எவ்வளவு பேரையும் பலியிடலாம்.

சுதந்திர இந்தியாவின் ஊழல் கதையும் மிகச் சரியாக பாதுகாப்புத் துறையிலிருந்தே தொடங்கியது. பிரிட்டனிலிருந்து 200 ஜீப்புகள் வாங்க 1948-ல் ஒப்பந்தம் போட்டது நேரு அரசு. ரூ.80 லட்சம் கொள்முதல் அது. 1949-ல் சென்னை துறைமுகத்தை வந்தடைந்த 155 ஜீப்புகளில் பெரும்பாலானவை உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பழைய ஜீப்புகள். “வெளிப்படையான, முறையான கொள்முதல் நடைமுறை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை” என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியதன் தொடர்ச்சியாக பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ணமேனன் பதவி விலகினார்.

1956-ல் மீண்டும் அவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். எவரும் தண்டிக்கப்படவில்லை.

அங்கிருந்து நாம் கதையைத் தொடங்கினால், ராணுவ வீரர்களுக்கான ரேஷன் பொருட்கள், சாப்பாடு, இறைச்சி தொடங்கி இறந்த வீரர்களுக்கான சவப்பெட்டி வாங்குவது வரை இந்தியப் பாதுகாப்புத் துறை சிக்காத ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. ஹெச்டிடபிள்யு நீர்மூழ்கிகள் ஊழல், போஃபர்ஸ் பீரங்கிகள் ஊழல், பராக் ஏவுகணைகள் ஊழல், தாத்ரா டிரக்குகள் ஊழல், வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் ஊழல் என்று நாட்டை உலுக்கிய பாதுகாப்புத் துறை ஊழல்கள் எதுவும் இங்கே முழுமையாக நிரூபிக்கப்பட்டதும் இல்லை; இன்றுவரை எவரும் தண்டிக்கப்பட்டதும் இல்லை.

இந்திரா ஆட்சியில் இறுதிசெய்யப்பட்ட ரூ.465 கோடி  ஜெர்மனியின் ஹெச்டிடபிள்யு நீர்மூழ்கி பேரத்தில், கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டது என்று பேசினார்கள். பிற்பாடு

வி.பி.சிங் பாதுகாப்புத் துறை அமைச்சரானபோது, நீர்மூழ்கிகளின் விலையைக் குறைத்துப் பேச்சு நடத்த உத்தரவிட்டார். “நீர்மூழ்கிகளுக்கு இந்திய அதிகாரிகளுக்கு மொத்த மதிப்பில் 7% கமிஷன் தரப்பட்டுவிட்டதால் விலையைக் குறைக்க சம்பந்தப்பட்ட நிறுவனம் மறுக்கிறது” என்று வி.பி.சிங்குக்குப் பதில் அனுப்பினார் இந்தியத் தூதர் ஜே.சி.அஜ்மானி. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார் வி.பி.சிங். என்னவானது?

ராஜீவ் ஆட்சியில் இறுதிசெய்யப்பட்ட ரூ.1,437 கோடி ஸ்விடனின் போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில், இந்திய அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ரூ.64 கோடி தரகு கை மாறியது என்று பேசினார்கள். ஏராளமான ஆவணங்கள் வெளியாயின. விசாரணைக்காக மட்டும் ரூ.200 கோடி செலவிட்டது சிபிஐ. என்னவானது?

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இறுதிசெய்யப்பட்ட ரூ.1,150 கோடி இஸ்ரேலின் பராக் ஏவுகணை பேரத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சருக்கே பணம் சென்றது என்று பேசினார்கள். இந்த பேரத்தில் தரகராகச் செயல்பட்டதாகச் சொல்லப்பட்ட சமதா கட்சியின் பொருளாளர் ஆர்.கே.ஜெயின், ‘தெஹல்கா’ நடத்திய புலனாய்வுப் பதிவில், கை மாறிய பணம் யார் யாருக்கெல்லாம் போனது என்று விலாவரியாகச் சொன்னார். இந்த பேரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகச் சொல்லப்பட்ட சுரேஷ் நந்தா - முன்னாள் கடற்படைத் தளபதி எஸ்.எம்.நந்தாவின் மகன் – கைதுசெய்யப்பட்டார். என்னவானது?

எல்லாவற்றின் உச்சம் இன்றைய அமைச்சர், அன்றைய தரைப்படைத் தளபதி வி.கே.சிங் “தரக்குறைவான ராணுவ லாரிகளை வாங்க ஒப்புதல் அளித்தால் ரூ.14 கோடி தரகு வாங்கித் தருவதாக என்னிடம் பேரம் பேசப்பட்டது” என்று பகிரங்கக் குற்றம்சாட்டியது. என்னவானது?

பெரிய கேள்வி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக குற்றஞ்சாட்டிக்கொள்ளும் பாஜகவும் காங்கிரஸும், ஆட்சியில் அமரும்போது தாங்கள் குற்றஞ்சாட்டிய ஆயுத பேர ஊழல்கள் தொடர்பிலேயே உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை? ஏன் ஆயுத பேர ஊழல்களில் யார் மீதும் கை வைக்க முடியவில்லை?

இந்தியப் பொதுப்புத்தி இதைத் தனிநபர்கள் அல்லது அரசியல் கட்சிகளோடு சுருக்கிப் புரிந்துகொள்ளவே முற்படுகிறது. இந்திய அரசியல் – ராணுவம் – சர்வதேசம் மூன்றுக்குமான பிணைப்பின் முடிச்சு இதற்குள் புதைந்திருப்பதை அது பொருட்படுத்துவதே இல்லை. காங்கிரஸ் இல்லா பாரதத்தைக் கனவு காணும், அதற்காக என்ன செய்யவும் தயாராக இருக்கும் சர்வ வல்லமை மிக்க நரேந்திர மோடியால், கடந்த காலங்களில் மேடைகளில் அவர் உரக்கக் குற்றஞ்சாட்டிய ஆயுத பேர ஊழல்கள் சார்ந்து ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை? மோடியின் கைகளின் எல்லை என்றல்ல; இந்திய ஜனநாயகத்தின் எல்லையும் அதுவென்றே நான் நினைக்கிறேன்.

இந்தியாவின் ஆயுத பேர ஊழல் கதைகளைத் தொடர்ந்து படித்து வளர்ந்த எவரும், மோடி அரசு இன்று எதிர்கொள்ளும் ரூ.59,000 கோடி ரஃபேல் விமான பேர ஊழல் குற்றச்சாட்டு அரசியலில் நீண்ட அதிர்வுகளை உண்டாக்கும் என்று நம்ப மாட்டார்கள். எதிர்ப்பரசியல் என்று பார்த்தாலும்கூட “விமானத்தின் விலையைக் கூடுதலாகக் கொடுத்து வாங்குகிறார்கள்” என்பதோடு காங்கிரஸ் தலைவர் ராகுல் முடித்துக்கொண்டிருந்தால் பழைய பல்லவியின் தொடர்ச்சியாக மட்டுமே அது இருந்திருக்கும்.

விசேஷம், ராகுல் வேறொரு இடத்தில் கை வைத்திருக்கிறார். இந்த பேரத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் ஆட்சிக் கால ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருந்த பொதுத் துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ்’ நிறுவனம் பாஜக அரசால் சேர்க்கப்பட்டதை மக்களிடத்தில் ராகுல் தொடர்ந்து பேசிவருகிறார். பொதுக்கூட்டம் ஒன்றில் கிராம மக்கள் மத்தியில் ‘ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்கும் பாஜக அரசுக்கும் இடையிலான உறவைப் பேசிக்கொண்டிருக்கும் காணொலியை நேற்று பார்த்தேன். ரஃபேல் விமான பேரத்தைத் தாண்டியும் இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நகர்வு இது.

இந்திய அரசியலில் தனிநபர்கள் சம்பந்தப்பட்டவையாகவும் கட்சிகள் சம்பந்தப்பட்டவையாகவுமே இதுவரை ஊழல்கள் அணுகப்பட்டிருக்கின்றன. ஆட்சியதிகாரத்தோடு நெருக்கமான உறவில் இருக்கும் தொழில் சாம்ராஜ்ஜியங்கள் – குறிப்பாக டாடாக்கள், பிர்லாக்கள், அம்பானிகள் – இரு தேசியக் கட்சிகளாலும்கூட பெரிய அளவில் தொட முடியாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ‘ரிலையன்ஸ்’ நிறுவனத்தைச் சந்திக்கு ராகுல் இழுப்பது, அந்த நிறுவனத்தை மட்டும் அல்லாது, தொழில் சாம்ராஜ்ஜியங்கள் எல்லாவற்றின் நிம்மதியையுமே குலைக்கும்.

ஒரு கட்சியாக காங்கிரஸும் இதன் மூலம் பெரும் சவாலை எதிர்கொள்கிறது. அரசியல் கட்சிகள் இன்று செலவுக்குப் பெருமளவில் தொழில் சாம்ராஜ்ஜியங்களையே நம்பியிருக்கின்றன. எல்லாக் கட்சிகளிலுமே தொழில் சாம்ராஜ்ஜியங்களை, அவர்களுடைய நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களே கட்சியின் நிதியாதாரமாக இருக்கிறார்கள். ராகுல் நெருப்பில் கை வைத்திருக்கிறார். இந்த இடத்தில் நம் காலத்தில் ஜனநாயகத்தின் பெரும் எதிரியாக உருவெடுத்திருக்கும் கள்ள முதலாளித்துவம் மீதும் ராகுலின் விரல்கள் படர்கின்றன. கள்ள முதலாளித்துவம் சர்வதேசத்துடன் பிணைந்திருப்பது. தெரிந்தோ, தெரியாமலோ எல்லாவற்றின் மீதும் சேர்த்தே கை வைத்திருக்கிறார் ராகுல். இனி கட்சிக்கு வெளியில் மட்டும் அல்ல; உள்ளேயும்கூட அவர் புதிய எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். ஆனால், மக்கள் - அவர்கள் யார் பக்கம் நிற்கப்போகிறார்கள்?

இந்தியா இன்று ரஃபேல் விமான பேரத்தைப் பற்றி விவாதிக்கையில், அந்த விவாதம் கள்ள முதலாளித்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையிலான கள்ள உறவைப் பற்றிய விவாதமாக விரிய வேண்டும் என்று நினைக்கிறேன். முக்கியமாக, பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுக்கொண்டே செல்வது நாடு தழுவிய விவாதமாக்கப்பட வேண்டும். கூடவே இந்திய அரசியலில் நிகழ்ந்துவரும் மாற்றங்களுக்கும் ஆயுத பேரங்கள், சர்வதேச உறவுகளுக்கு இடையேயுள்ள உள்ள தொடர்புகளும் விவாதிக்கப்பட வேண்டும்.

பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு சார்ந்து இந்தியாவில் மூன்று முக்கியமான நகர்வுகள் இந்த ஆண்டில் நடந்திருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக அவை மூன்றும் ஒன்று கோத்து அணுகப்படவில்லை: 1. பாதுகாப்புத் துறைக்கான செலவை உயர்த்தியதன் மூலம் உலகில் ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் ஐந்து நாடுகள் பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறது இந்தியா. 2. உள்நாட்டில் அரசுசார் நிறுவனங்களுக்கு அளித்துவரும் உற்பத்தியாணையைக் குறைத்துக்கொண்டு அந்தத் தொகையை நவீனமயமாக்கலுக்குத் திருப்பிவிட முடிவெடுத்திருக்கிறது இந்திய ராணுவம். 3. முப்படைகளிலும் சேர்த்து 1.5 லட்சம் ஆட்களைக் குறைத்துவிட்டு அந்தத் தொகையை ஆயுதத் தளவாடங்கள் வாங்க பயன்படுத்த முடிவெடுத்திருக்கிறது பாதுகாப்புத் துறை.

பாதுகாப்புத் துறை சார்ந்து இன்று ஊடகங்களில் அதிகம் கேட்கும் ஒப்பாரியோடு மேற்கண்ட மூன்று செய்திகளையும் பொருத்திப் பார்த்தால், இந்தியா செல்லவிருக்கும் பாதை தெளிவாகும்: “பாதுகாப்புத் துறைக்கு அதிகம் நிதி ஒதுக்குங்கள், ராணுவத்தில் ஆட்களைக் குறையுங்கள், ஆயுதத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பொதுத் துறை நிறுவனங்கள் வீண்.” அதாவது, ஒருபுறம் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்போம், இன்னொருபுறம் ராணுவத்திலுள்ள வேலைவாய்ப்புகளும், அரசுசார் நிறுவனங்களுக்குமான பணியாணைகளும் குறைக்கப்பட்டு, பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீட்டில் கணிசமான தொகை சர்வதேசத்துக்கும் தனியாருக்குமானதாக, ஆயுதக் கொள்முதலுக்கானதாக மாறிக்கொண்டே இருக்கும்.

பத்தாண்டுகளில் மட்டும் பாதுகாப்புக்கான ஒதுக்கீட்டை 54% அதிகரித்திருக்கிறது இந்தியா. இதே பத்தாண்டுகளில் பாதுகாப்புக்கான ஒதுக்கீட்டை சீனா 118% உயர்த்தியிருப்பதைக் குறிப்பிட்டு, இந்த ஆயுதப் போட்டியைத் தொடர்ந்து ஊக்குவித்துவரும் ஊடகங்கள் ஒரு விஷயத்தை மக்களின் கவனத்திலிருந்து திட்டமிட்டு மறைக்கின்றன. இதே காலகட்டத்தில்தான் பாதுகாப்புக்கான ஒதுக்கீட்டை அமெரிக்கா 4.8%, பிரிட்டன் 12% குறைத்திருக்கின்றன. தவிர, ஆயுதக் கொள்முதலுக்கான சீன ஒதுக்கீட்டில் பெரும் பகுதி உள்நாட்டு உற்பத்திக்குச் சென்றடைகிறது. இந்தியர்களின் பணமோ சர்வதேச பேரங்களுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. பேரங்களினூடாக நடக்கும் தரகுத்தொகையே கருப்புப் பணமாகி, அதன் கணிசமான ஒரு பகுதி அரசியல் கட்சிகளுக்குத் தீனியாகிறது

ஒரு நாட்டின் மீதான தாக்குதலை ஆயுதங்கள் மூலமாக மட்டுமே நடத்த முடியும் என்ற சிந்தனை இருபதாம் நூற்றாண்டோடு முடிந்தது. ஆயுதங்களுக்கான, ஆயுத பேரங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இந்திய ஆட்சியாளர்கள் ஏன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்? போருக்காக நாம் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறோமா, குவித்துக்கொண்டிருக்கும் ஆயுதங்களுக்காக ஒரு போரை உருவாக்கப்போகிறோமா? இந்தியர்கள் இதையெல்லாம் விரிவாக்கிப் பேச வேண்டும். இந்தியா இதுபற்றி விவாதிக்க வேண்டும்!

- ‘தி இந்து’, அக்டோபர், 2018 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com








விவிபாட்சாவர்க்கர் சிறை அனுபவங்கள்குமரியம்மன்4ஜி சேவைபழங்குடியினர்அரசியல் தலைவர்உடல்மொழிதீண்டப்படாதவர்கள்முரசொலி செல்வம்எழுத்தாளர்கள்தலைநகரம்சூத்திரர்கள்விழித்தெழுதலின் அவசியமா?கல்வான் பள்ளத்தாக்குசிட்லின் கே. சேத்தி கட்டுரைஹரியானாவங்கதேச வளர்ச்சிலாலு சமஸ்அப்பாவின் சுளுக்கிதிரும்பத் திரும்ப அடிக்கும் ராவ்அதிகாரத்தின் ஆட்சி – அவலமான காட்சிஅமுல் 75சைபர் சாத்தான்கள்சோ.கருப்பசாமி கட்டுரைமக்கள்தொகைக் கணக்கெடுப்புநடப்புக் கணக்கு பற்றாக்குறைஇரண்டாவது விண்வெளி ஏவுதளம்கடும் நிபந்தனைகள்கவிக்கோ அரங்கம்தொழில்நுட்பம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!