ராகுல் காந்தியை ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்துவந்த பாஜக தலைவர் ஸ்மிருதி இராணி, இப்போது அவரை மிகவும் பாராட்டுகிறார். ராகுல் காந்தியை இன்னமும் சிறுவன் என்றே பார்க்கும் தவறான கண்ணோட்டத்தைக் கைவிடுமாறும் எச்சரிக்கிறார் இந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர்.
கேலிசெய்தது போதும்
ராகுல் காந்தி தன்னுடைய அரசியல் உத்தியை மாற்றிக்கொண்டுவிட்டார். அவருடைய அரசியல் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அரசியலில் தனக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்துவிட்டது என்று நம்புகிறார் ராகுல்.
சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அவசியம் என்று வலியுறுத்தும்போதும், நாடாளுமன்ற கூட்டத்துக்கு வரும்போது டீ-ஷர்ட் அணிந்துவருவதன் மூலமும் நாட்டு இளைஞர்களுக்கு மறைமுகமாக சில செய்திகளை அளிக்கின்றார். ராகுலுக்கு அரசியல் தெரியாது, அரசியலில் அவரால் வெற்றிபெற முடியாது என்றெல்லாம் பழைய நாள்கள்போல இனியும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். அவரைக் கேலிசெய்தது போதும்.
அவருடைய பேச்சு செயல் உடல்மொழி ஆகியவற்றை - நன்றாக இருக்கிறது, மோசமாக இருக்கிறது, சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது - என்றெல்லாம் வகைப்படுத்தாதீர்கள், அரசியலில் புதிய வகை பாணியை அவர் புகுத்திக்கொண்டிருக்கிறார்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
ராகுலின் புதிய உத்திகள்
“மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிகளையும் சேர்த்துப் பதியவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அரசியல் பக்குவம் இல்லாததால் அவர் கேட்கவில்லை, அதில் அரசியல் உத்தி இருக்கிறது. செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியில் இடம்பெறும் எண்ணம் என்றும் அதை ஒதுக்கிவிடக் கூடாது. “ஆலயங்களுக்கெல்லாம் சென்று தானும் பக்தியுள்ள இந்துதான் என்று மக்களுக்கு உணர்த்திப் பார்த்தார். அதற்கு அரசியல்ரீதியாக ஆதரவு அதிகமில்லை. இப்போது உத்தியை மாற்றிக்கொண்டிருக்கிறார். ஆலயங்களுக்கு ராகுல் சென்றதைப் பலரும் கேலிசெய்தனர். இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு தேவை” என்று பேசுகிறார். இதை யாராலும் விமர்சிக்க முடியாது. இதிலிருந்து அவருடைய உத்தி மாறியிருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
“மிஸ் இந்தியா போட்டிகளில் பழங்குடிப் பெண்கள் இடம்பெறவில்லை என்று பேசியிருப்பதையும் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். மிஸ் இந்தியா போட்டிக்கும் ஒன்றியத்தில் அரசு அமைப்பதற்கும் தொடர்பு ஏதுமில்லை. சமூக ஊடகங்களில் இதுபற்றிய விவாதம் எழ வேண்டும் என்பதற்காக இதைப் பேசுகிறார், அது தலைப்புச் செய்தியாகிறது, ராகுல் முன்னிலை பெறுகிறார். இவையெல்லாம் ராகுலின் ‘அரசியல் சிந்தனைகள்’ அல்ல, ‘அரசியல் உத்திகள்’ என்ற புரிதல் நமக்கு வேண்டும்” என்கிறார் ஸ்மிருதி இராணி.
ஸ்மிருதியின் மனமாற்றத்துக்கு காரணம்?
ஸ்மிருதி இராணிக்கு ஏன் இந்த மனமாற்றம் என்ற கேள்வி எழலாம். தேர்தல் வெற்றி ராகுல் காந்திக்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியதைப் போல, தேர்தலில் பெற்ற தோல்வி ஸ்மிருதி இராணிக்குள்ளும் பக்குவத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அது மட்டுமல்ல, அமேத்தி தொகுதியில் தோற்ற பிறகு அரசு வீட்டை அவர் காலிசெய்துவிட்டு புறப்பட்டதை ஸ்மிருதி எதிர்ப்பாளர்கள் கடுமையாக கேலிசெய்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர். அவற்றில் பல கடுமையாகவும் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவும்கூட இருந்தன. உடனே அவற்றை நிறுத்திக்கொள்ளுமாறு அதே ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்தார் ராகுல். அவருடைய அந்தச் செயல் ஸ்மிருதியை வெகுவாக மனம் மாறச் செய்திருக்க வேண்டும். ராகுலைப் பற்றிய புரிதல் முதலில் அவருக்கு அப்போதுதான் ஏற்பட்டிருக்க வேண்டும்.
தோற்றுப்போய் அரசியல் நடவடிக்கைகள் ஓய்ந்து வீட்டில் உட்காரும்போதுதான் பல அரசியல் தலைவர்களுக்கு நிதானமே வரும். இது அப்படியும் இருக்கலாம். ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள், அவர்கள் ஆதரித்தால் பதவி - தூக்கி எறிந்தால் ஏதோ ஒரு மூலை. ஸ்மிருதியும் அமேதியில் ராகுலை முதல் முறை வென்று வெகுவாக புகழப்பட்டவர்தான். இரண்டாவது முறை போட்டியிட்டபோது, ராகுலால் நிறுத்தப்பட்ட கிஷோரி லால் சர்மா என்ற காங்கிரஸ் வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார் இராணி.
இது ஏன் செய்தியாக வேண்டும்?
முந்தைய தலைமுறையில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நல்ல பண்புகளும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புறவும் கொண்டிருந்தனர். அரசியலில் தரம் தாழ்ந்து விமர்சிப்பது வழக்கமாக இல்லை. அப்போதும் சில மூன்றாந்தர, நாலாந்தர பேச்சாளர்கள் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருந்தது. இப்போது அவர்கள்தான் பெரும்பான்மையினராகிவிட்டனர்!
தொடர்புடைய கட்டுரைகள்
அமேத்தி சொல்லும் செய்தி என்ன?
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை
எதிர்க்கட்சித் தலைவர்: ராகுலின் கடமைகள், உரிமைகள்
சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.