பேட்டி, அரசியல், கூட்டாட்சி 7 நிமிட வாசிப்பு

சமூகத்தின் முன்னத்தி ஏர் பிரதமர்: சமஸ் பேட்டி

07 May 2024, 5:00 am
0

நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். அந்த வகையில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்கு, அதன் செய்தியாசிரியர் கார்த்திகேயன் அவர்களுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவத்தை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது.

மீண்டும் பாஜக கூட்டணி 400 இடங்களை வெல்லும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார் அமித் ஷா.  எதிர்க்கட்சிகளை உளவியல்ரீதியாக பலகீனப்படுத்துவே இதை பாஜகவினர் திரும்பத் திரும்பச் சொல்கிறார்களா? 

சென்ற மாதத்தில் நான் உங்களிடம் பேசும்போது என்ன சொன்னேன் என்றால், எதிர்க்கட்சிகளையும் மக்களையும் ஓர் உளவியல் தாக்குலுக்கு உள்ளாக்கும் உத்தியாகத்தான் இதைக் கையாள்கிறார்கள் என்று சொன்னேன். ஆனால், இந்த உத்தி இப்போது பாஜகவையே திருப்பியடிக்கும் பூமராங் ஆகியிருக்கிறது. ஏனென்றால், பாஜக கூட்டணி 400 இடங்கள் எனச் சொல்லிவிட்டு, கூடவே பாஜகவுக்கு 370 இடங்கள் என்று திரும்பத் திரும்பப் பேசினார் பிரதமர் மோடி. 

இந்தியாவில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றன என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால், உங்களுக்குத் தெரிந்த ஒரு பிரிவைச் சொல்லுங்கள் என்று கேட்டால், மக்களில் பெரும் பகுதியினர் கண்ணை மூடிக்கொண்டு பிரிவு 370ஐச் சொல்வார்கள். ஏனென்றால், இந்தப் பிரிவு 370 என்பது காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் பிரிவு. முன்னதாக, பாஜவைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் "நாங்கள் இந்த முறை ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம்" என்று சொன்னதோடு பிரதமர் குறிப்பிட்ட 370 எனும் இலக்கை மக்கள் பொருத்திப் பார்த்தார்கள். மக்களிடம் இது ஆழமான தாக்கத்தை உருவாக்கிவிட்டது.

இவர்கள் மீண்டும் இவ்வளவு பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தார்கள் என்றால் அரசமைப்பிலேயே கை வைத்துவிடுவார்களோ என்று நினைக்கிறார்கள். பிரதமர் ‘நான் உயிரோடு இருக்கும் வரை இது நடக்காது’ என்றும் சொல்கிறார். இந்தப் பேச்சை ஏதோவொரு ஒரு மக்களவை உறுப்பினர் பேசுகிறார் என்பது அல்ல விஷயம். உங்கள் ஆதிக்கதை என்பது எந்தளவுக்கு இந்த அரசமைப்புச் சட்டத்தோடு ஒன்றிப்போகிறது என்பதில் இருக்கிறது. 

இந்த அரசமைப்புச் சட்டம் வந்தபோது அதைக் கடுமையாக விமர்சித்து, இப்படியான ஒன்று இருக்கக் கூடாது என்று பேசியது பாஜகவின் தாயான ஆர்எஸ்எஸ். அவர்கள் கற்பனை செய்த அரசமைப்புச் சட்டம் என்பது ஏதோ ரகசியமானது அல்ல, அது அவர்களுடைய பல புத்தகங்களிலும் இருக்கிறது. இன்று வரை அவர்கள் பேசிக்கொண்டிருப்பதில் இருக்கிறது. 

ஆக, அரசமைப்பில் கை வைக்க மாட்டோம் என்று பிரதமர் உறுதி அளித்தாலுமேகூட இதெல்லாம் நடந்துவிடுமோ என்று மக்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. ஆக,  உளவியல்ரீதியாக இந்த முறை பாஜகவின் உத்தி  எதிர்க்கட்சிகளை அடிக்கவில்லை, மாறாக அது அவர்களையே அடிக்கிறது. அதனால்தான், பிரதமர் மோடி அந்த எண்ணிக்கை உச்சரிப்பதைக் குறைத்துக்கொள்கிறார். அமித் ஷா இப்போது இதைப் பேசியிருப்பது, இன்னும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று காட்டிக்கொள்வதற்கான பேச்சு. இதற்காக அவர் கொடுத்திருக்கும் கணக்கு படு அபத்தமாக இருக்கிறது. உபியில் 80/80, மஹாராஷ்டிரத்தில் 40/48 வெல்வோம் என்றெல்லாம் அவர் பேசுவதை அந்தந்த மாநிலங்களில் உள்ளவர்கள் கேட்டால் சிரிக்கத்தான் செய்வார்கள்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பிரதமர் மோடியின் சமீபத்திய காத்திரமான பிரச்சாரத்தால், அதன் மீதான நம்பிக்கையில் அமித் ஷா இந்தக் கணக்கைச் சொல்கிறாரா? 

பிரதமர் மோடியின் பிரச்சாரத்தில் நம்பிக்கை இருப்பதாகவா நாம் பார்க்கிறோம்! 

கடந்த மூன்று தேர்தல்களை எடுத்துக்கொண்டால், மிகப் பலவீனப்பட்டு, மிகவும் அம்பலப்பட்டு இருக்கும் தேர்தலாக இந்தத் தேர்தலைச் சொல்ல முடியும். இந்திய வரலாற்றில் ஒரு பிரதமர் இவ்வளவு பெரிய வீழ்ச்சியை சந்தித்ததே கிடையாது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால், பிரதமர் என்பவர் ஒரு சமூகத்தினுடைய முன்னத்தி ஏர்; ஒரு நாட்டின் கற்பனையை, கனவை அடுத்த கட்டத் தலைமுறைக்கு முன்வைக்கக்கூடியவர்.

நமது முதல் பிரதமர் நேரு 1951 – 1952 தேர்தலின்போது தனது பிரச்சாரத்தில் என்ன பேசியிருக்கிறார் என்று பாருங்கள். ஒவ்வொரு பேச்சுமே ஜனநாயகத்தைப் பற்றி மக்களுக்கு வகுப்பு எடுப்பதுபோல இருக்கும். அதில் அவர், ‘நாளைக்கு இதே இடத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் வருகிறார், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்’ என்றெல்லாம் பேசியிருக்கிறார். நம் நாட்டில் அப்படிப்பட்ட ஓர் அரசியல் கலாச்சாரமும் இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியும் என்னவிதமாக சண்டையிட்டுக்கொண்டாலும் அதற்கு ஓர் எல்லை இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மன்மோகன் சிங் பிரச்சாரத்துக்குச் செல்லக்கூடிய இடங்களில் அவரது பேச்சு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள். அது ஒரு பிரதமரின் பேச்சுக்கான தன்மையோடு இருக்கும். அதுவே ஒரு கட்சியின் தலைவராக சோனியா காந்தியின் பேச்சு வேறொரு தன்மையோடு இருக்கும். ஆனால், இந்த வரையறைகள் எல்லாவற்றையும் உடைத்துவிட்டார் மோடி.  

இந்தத் தேர்தலானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டிருக்கிறது. அதாவது முழுக்கவும் உள்ளூர்மயம் ஆகியிருக்கிறது. இந்த 2024 தேர்தல் என்பது இவர்கள் நினைத்துபோல் தேசிய கதையாடலுக்குள் அமையவில்லை. முழுக்க முழுக்க உள்ளூர் கதையாடலுக்குள் அடங்கியிருக்கிறது. இதைத் தேசிய கதையாடலுக்குள் அடைக்க முடியாததால்தான் மோடி உச்சகட்ட பதற்றத்தையும் கீழிறக்கத்தையும்  அடைந்திருக்கிறார்.

எப்படியாவது இந்துக்கள் ஓட்டுகளை ஒருங்கிணைக்க முஸ்லிம் சமூகத்தை ஒரு பொது விரோதியாக வெறுப்பைக் கட்டமைத்து வெறுப்புப் பேச்சுகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். மோடியின் பேச்சுகள் முழுக்க கணக்குகளை அடிப்படையாகக் கொண்டவை. 

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

இரண்டு நாள்களுக்கு முன்பு சர்ச்சையான பிரதமரின் பேச்சையே எடுத்துக்கொள்வோம். “உங்கள் வீட்டில் இரண்டு எருமை மாடுகள் இருந்தால், அதில் ஒன்றை காங்கிரஸார் பிடித்துக்கொண்டுபோய் முஸ்லிம்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள்” என்றார் அல்லவா? இதை எங்கு பேசினார் என்றால், பனஸ்கந்தா மாவட்டத்தின் தீஸா நகரில் பேசியிருக்கிறார்? அதை ஏன் குஜராத்தின் பனஸ்கந்தாவில் பேசுகிறார்?  

எனக்கு ஒரே ஆச்சரியம்… பொதுவாக பாஜகவுக்கு பசுவைத்தானே பிடித்துக்கொண்டு தொங்கும்? இந்த முறை என்ன எருமை மாட்டைப் பற்றிப் பேசுகிறார்களே என்று! பிறகுதான் புரிந்தது. அதாவது, பனஸ்கந்தா மாவட்டம்தான் இந்தியாவிலேயே அதிக பால் உற்பத்தி நடக்கக்கூடிய இடம். அங்குள்ள பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பது பால் உற்பத்திதான். இந்த மாவட்டத்தில் 6.5 லட்சம் பசு மாடுகள் இருக்கிறதென்றால், எருமை மாடுகளின் எண்ணிக்கை 9.5 லட்சமாக இருக்கின்றன. இந்த அளவுக்கு நுட்பமான கணக்குகளோடுதான் மோடி எதையும் திட்டமிடுகிறார்.

தேசிய அளவில் வெறுப்பைப் பரப்பும் பிரச்சாரத்தில் உள்ளூர்த்தன்மையும் இதில் இருப்பதைக் கவனியுங்கள். ஆக, வாக்காளர்கள் மத்தியில் ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்குவதற்காக அவர்கள் முயற்சிசெய்துகொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கட்டமாக நாம் கடக்கும்போதும் எப்படியாவது இதைச் செய்துவிட முடியாதா என்கிற பதற்றம் இருக்கிறது. 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

சமஸ் | Samas 16 Apr 2024

இதுவரை வாக்காளர்கள் மத்தியில் பாஜக அப்படி ஒன்றை உருவாக்கியிருக்கிறதா? இதுவரையிலான அவர்களுடைய பிரச்சாரம் எந்த அளவுக்கு அவர்களுக்கு இடங்களைப் பெற்றுத் தரும்? 

இல்லை, இதுவரை அவர்களால் தேசிய அளவிலான கதையாடலை உருவாக்க முடியவில்லை.

அதாவது, பாஜகவுக்கு என வலுவான ஒரு கட்டமைப்பு இருக்கிறது, அதற்குப் பாரம்பரியரீதியான சில தொகுதிகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, 2019 தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 50% என்று எடுத்துக்கொண்டாலே அவர்களுக்கு 200 தொகுதிகள் வருகின்றன. அந்த இடங்களிலெல்லாம் வலுவாக இருப்பார்களா என்றால், நிச்சயம் வலுவாகத்தான் இருப்பார்கள்.

என்னிடமே சிலர் கேட்டார்கள், “ராஜஸ்தான் சென்று வந்தீர்களே, அங்கே எவ்வளவு பெரிய வெற்றி வரும்” என்று. நான் சொன்னேன், “அங்குள்ள 25 தொகுதிகளில் ஐந்தில் காங்கிரஸ் வரும்” என்று. "அவ்வளவுதான் வருமா?" என்றார்கள் வருத்தத்தோடு!

அவர்களுக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், ராஜஸ்தானில் பாஜக சென்ற முறை வாங்கிய வாக்குகள்  50%க்கும் அதிகம். டெல்லி, ஹரியாணா என்று பல மாநிலங்கள் இப்படி இருக்கின்றன. இங்கெல்லாம் பல இடங்களில் பாஜகவின் வெற்றி வித்தியாச வாக்குகளின் எண்ணிக்கை பல லட்சங்கள். ஆகையால்; முற்றிலுமாக பாஜக தளர்ந்துவிடாது.

நிச்சயமாக, பாஜகவினர்தான் தனிப் பெரும் கட்சியாக வருவார்கள். ஆனால், 225 – 250 இடங்களை அவர்கள்  கடப்பதற்கான சாத்தியக்கூறு இன்று வரை தெரியவில்லை. தேர்தல் ஆரம்பிக்கும் முன் நான் சொன்னேன்,  "மக்களிடம் ஒரு சலிப்பு இருக்கிறது. ஆனால், மோடிக்கோ பாஜக அரசுக்கோ எதிராக பெரிய அதிருப்தி இன்னும் உருவாகவில்லை" என்று; ஆனால், இப்போது அப்படியான அதிருப்தி மெல்ல உருவாகிவருவதைப் பார்க்கிறேன்.

எதிர்த் தரப்பில் போட்டி இல்லாததால்தான் வாக்குச் சதவீதம் குறைந்திருக்கிறது, ஆனால் எங்களுக்கான நிலையான வாக்கு வங்கி அப்படியேதான் இருக்கிறது என்கிறாரா அமித் ஷா?

அதுதான் சொல்கிறேனே, அவர்களுக்கான நிலையான வாக்கு என்பது 20%. அதிகபட்சம் 25%தான். அது 400 இடங்களாக மாறாது. அவர்களுக்கு இருக்கும் பாரம்பரியமான தொகுதிகளில் வேலை செய்தார்கள் என்றால், 200 இடங்களைத் தொட்டுதான் வர முடியும். உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன், 1998இல் பிரதமர் வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பாஜக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 182. இதுதான் அவர்களின் அதிகபட்சமாக இருந்தது. 200 இடங்களைக்கூட தொடவில்லை. 

ஆந்திர பிரதேசத்தில் மோடியின் படம் இல்லாமலேயே தெலுங்கு தேசம் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அப்படியென்றால், இதன் அர்த்தம் என்ன? 

களம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்! 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

பாஜகவை வீழ்த்த கடும் உழைப்பு தேவை: சமஸ் பேட்டி
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3






இதய நோய்பெகஸஸ்தலைவர்பொருளாதார நிலைதிரிணமூல் காங்கிரஸ் சமூக மாற்றமும்!கல்யாணராமன் கட்டுரைசூத்திரங்கள்ஆனி பானர்ஜி கட்டுரைஉபநிடதங்கள்மோசடித் திருத்தம்ஆண்ட்ரூ சாரிஸின் சுட்டல்ஃபுளோரைடு கலந்த பேஸ்ட்பைப்பர் கெர்மன்சிப்கோ இயக்கம்ஹண்டே பேட்டிபிறகு…ஆடிட்டர் குருமூர்த்திதுயரப் பிராந்தியம்பொதுச் செயலாளர்அசாஞ்சேஅட்மிஷன்ராஜேஷ் அதானிதென்னாப்பிரிக்காவில் காந்திஇந்திய ஆட்சிப் பணிகரிகாலச் சோழன் பொங்கல்தென்னிந்திய மாநிலங்கள்உடல் உழைப்புதமிழ் இயக்கம்வினோத் காப்ரி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!