பேட்டி, கலை, சமஸ் கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு

சமஸ் | Samas
01 Jan 2023, 5:00 am
1

மிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தப் பேட்டியில் பேசுகிறார் சாரு.

தில்லி கதைக்குப் போவதற்கு முன்பு உங்கள் தஞ்சாவூர் கல்லூரிக் கதையைப் பேசி முடித்துவிடலாம். பொதுவாக எப்படிப் படித்தீர்கள்?

நாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில்தான் நான் எஸ்எஸ்எல்சி (அப்போதெல்லாம் அது பதினோராம் வகுப்பு) முடித்தேன். பள்ளியில் படிக்கும் காலகட்டத்தில் நன்றாகப் படிப்பவனாகத்தான் இருந்தேன். காரைக்காலில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் பியூசி சேர்ந்தபோது கடைசி பெஞ்ச் மாணவனாகிவிட்டேன். 

என்ன காரணம்?

இங்கே முழுவதும் இங்லிஷ் மீடியம். ஆசிரியர் நடத்துவது ஒரு வார்த்தைகூட எனக்குப் புரியவில்லை. நான் நன்றாகப் படிக்கும் மாணவன் என்பதால் என்னை ‘எம்பிசி’ என்ற முதல் குரூப்பில் சேர்த்திருந்தார்கள்; அதாவது, மேத்ஸ், ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி. எனக்கு மூன்று பாடங்களுமே கண்ணைக் கட்டி காட்டில்விட்ட உணர்வைத் தந்தன. பள்ளியில் முதல் மாணாக்கனாகத் தேறிக்கொண்டிருந்த நான் பியூசியில் எல்லாப் பாடங்களிலும் தோற்றேன். இந்தத் தோல்வி தந்த அதிர்ச்சி தமிழை ஆர்வத்தோடு படிக்கும் வாய்ப்பையும் கெடுத்தது. 

பயிற்றுமொழியாகத் திடீரென்று உயர்படிப்புகளில் ஆங்கிலம் நுழைவது ஒரு பெரும் பிரச்சினைதான் இல்லையா?

எப்போது அது பெரிய பிரச்சினைதான். எங்கள் காலத்தில் ஆங்கிலத்தாலேயே படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு ஓடியவர்கள் அதிகம். நானே இரண்டு ஆண்டுகள் திணறித் திணறி ஒவ்வொரு சப்ஜெக்டாகத் தேர்வு பெற்றுதான் திருச்சியில் இருந்த பெரியார் ஈ.வே.ரா. கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால், இதற்குள் நான் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டிருந்தேன். ஷேக்ஸ்பியரையும்கூட சார்ல்ஸ் லாம்ப், மாரி லாம்ப் துணை கொண்டு படித்து அவரை உள்வாங்க ஆரம்பித்திருந்தேன். இங்கே ஒரு விஷயத்தையும் நான் குறிப்பிட்டாக வேண்டும், எனக்குள் இயல்பாக இருந்த இலக்கிய ஆர்வமே ஆங்கிலம் கற்பதை எனக்கு இலகுவாக்கியது. அந்த ஆர்வத்தின் தொடர்ச்சியாகவே கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தேன். ஆறு மாதம் போனது. உறவினர் ஒருவர் வந்து, “நீ பிஎஸ்ஸி எடு” என்றார். இன்றைக்குள்ள கூறுகூட அன்றைக்குக் கிடையாது. பிஎஸ்ஸி ஃபிஸிக்ஸுக்கு மாற்றிக்கொண்டு தஞ்சாவூர் சரஃபோஜி கல்லூரிக்கு வந்தேன்.  மீண்டும் ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ். என்னென்னவோ குறியீடுகளும் கோடுகளுமாக ஒரு எழவும் புரியவில்லை. அந்த இரண்டரை ஆண்டுகளும் ஒரு நாள்கூட நான் வகுப்புக்குச் செல்லவில்லை. 

சரியாக, அரை நூற்றாண்டுக்கு முன்னர் நீங்கள் கல்லூரியில் படித்த காலகட்டம் எல்லாம் உயர்கல்வி வாய்ப்பு என்பதே பெரும் சவாலாக இருந்திருக்கும். இந்த நிலையில், ஒரு ஊரின் கல்லூரியிலிருந்து இன்னொரு ஊர் கல்லூரிக்கு படிப்பையும் மாற்றிக்கொண்டு செல்ல வேண்டுமானால், அது அவ்வளவு எளிதான காரியமாக இருந்திருக்காதே?

சரிதான், இப்படியெல்லாம் மாறுவது சாமானியர்களுக்கு சாத்தியமே இல்லை. ஆனால் என் சின்ன நைனாவினால் அதைச் செய்ய முடிந்தது. நான் அப்போது பொன்மலையில் என் சின்ன நைனாவின் வீட்டில்தான் தங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். பெயர் ராகவன். அவர் திருச்சி மாவட்ட திமுகவின் முகமாகத் திகழ்ந்த அன்பில் தர்மலிங்கத்தின் வலது கரமாக இருந்தவர். அதனால் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் சொல்லி என் சப்ஜெக்டையும் கல்லூரியையும் அன்பில் தர்மலிங்கம் மாற்றிக் கொடுத்தார். தஞ்சாவூர் மாவட்ட திமுக தூணாக இருந்த மன்னை நாராயணசாமியையும் அப்போது நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தேன். ஆனால், இவர்களுடைய உலகத்திலிருந்தெல்லாம் நான் வெகு தொலைவிலேயே இருந்தேன். காரணம், ஜெயகாந்தன். எனக்கு அப்போது சம்ஸ்கிருதமும் சாஸ்த்ரீய சங்கீதமும்தான் திராவிட அரசியலைவிடப் பெரிதாகத் தெரிந்தன. தஞ்சையில் இருந்த காலகட்டத்தில்தான் சம்ஸ்கிருதம் கற்றேன்; இந்தி அப்படித்தான் உள்ளே வந்தது. படிப்பை மாற்றுவதோடு அல்லாமல், ஊரையும் சேர்த்து மாற்றிக்கொள்வதற்கு இன்னொரு தேவையும் அப்போது எனக்கு ஏற்பட்டிருந்தது. அது, பொன்மலையில் எனக்கு ஏற்பட்ட ஒரு பெண் சகவாசம். அந்தப் பெண் திருமணமானவர் என்பதால் அது உள்ளூரில் பெரிய பிரச்சினை ஆகியது. அதனால் அந்த ஊரை விட்டு ஓடி வர வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி

சமஸ் | Samas 25 Dec 2022

தஞ்சை சரபோஜி கல்லூரியில் நீங்கள் படித்தபோது அங்கே அ.மார்க்ஸ் ஆசிரியராக இருந்திருக்கிறார். மார்க்ஸுக்கும் உங்களுக்கும் இடையில் எப்படியான உறவு இருந்தது? அது எந்த விதமான மாற்றத்தையும் தாக்கத்தையும் உங்களுடைய பிற்கால வாழ்க்கையில் ஏற்படுத்தியது?

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், நான் படித்த காலகட்டத்தில்தான் அ.மார்க்ஸ் அங்கே ஃபிஸிக்ஸ் பேராசிரியராக இருந்தார் என்பதையே இருபது ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிந்துகொண்டேன். ஒழுங்காக வகுப்புக்குப் போனால்தானே பேராசிரியர்களைப் பார்த்திருக்க முடியும்? யாரோ ஒருவராகத்தான் ஒருவரை ஒருவர் கடந்து சென்றிருக்கிறோம். அந்தக் காலகட்டம் முழுவதும் நான் பெரும்பாலும் சரஸ்வதி மஹால் நூலகத்திலும் தஞ்சாவூர் அரசு நூலகத்திலும்தான் இருப்பேன். அரசு நூலகத்தில் நூல்கள் கடன் கொடுப்பார்கள். எடுத்துக்கொண்டு நூலகத்தின் அருகிலேயே இருக்கும் பெரிய கோயிலுக்கு வந்துவிடுவேன். காலையில் வந்தால் மாலை வரை கோயில்தான். கோடையில்கூட அங்கே குளுமையாக இருக்கும். அப்போதெல்லாம் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இப்போதுபோல் மொய்த்தது இல்லை. 

எனக்கு அ.மார்க்ஸுடன் நல்ல பழக்கம் ‘நிறப்பிரிகை’ காலகட்டத்தில் இருந்தது. அப்போதும்கூட மார்க்ஸ் என்னைப் படித்ததாகவோ என்னைப் பாராட்டியதாகவோ எனக்கு ஞாபகம் இல்லை. இயல்பிலேயே அ.மார்க்ஸ் மிக இனிமையாகவும் நட்பு உணர்வோடும் பழகுபவர் என்பதால், என் மீது அன்பு கொண்டிருந்தாரே தவிர என் எழுத்தைப் பற்றியெல்லாம் அவர் என்ன நினைத்தார் என்று எனக்குத் தெரியாது. பரஸ்பர அன்பும் மதிப்பும் உண்டு என்றாலும், என் உருவாக்கத்தில் தமிழ் புத்திஜீவிகள் எந்தப் பங்கையும் நிகழ்த்தவில்லை. எஸ்.என்.நாகராசன், கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை, தமிழவன், நாகார்ச்சுனன் எல்லோரையும் இங்கே உள்ளடக்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.என்.நாகராசனை நீங்கள் எடுத்த பேட்டியையும், அவரைப் பற்றி நீங்கள் உள்ளிட்ட சிலர் எழுதியவற்றையும் வாசித்தபோதுகூட, “இவ்வளவு மேன்மையாக நமக்கு இந்த ஆள் அறிமுகமாகவில்லையே!” என்றுதான் தோன்றியது. எனக்குக் கிடைத்த அனுபவம் அப்படி!

நீங்கள் அவரை அடிக்கப்போய்விட்டதாகக்கூட ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள், இல்லையா?

ஆமாம், என்னைவிட 26 வயது மூத்தவர் எஸ்.என்.நாகராசன். ஏன் அவரை அடிக்கப் பாய்ந்தேன் தெரியுமா? ஒரு விவாதத்தில் அவர் என் மனைவியைத் திட்டியதால் அடிக்கப் போனேன். பெண் விடுதலை தொடர்பான விவாதம் அது. நாகராசன் ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒரு மடாதிபதிபோல் பேசிக்கொண்டிருந்தார். முழுக்க முழுக்க பிராமண பாஷை. அப்போது நான் பெரியாரின் தாக்கத்தில் இருந்தேன். “முதலில் பெண் விடுதலையை உன் வீட்டிலிருந்து ஆரம்பி” என்றார் ஒருமையில். “ஏன் உன் மனைவியை இங்கே அழைத்து வரவில்லை?” என்று கேட்டார். “என் மனைவியை எப்படி நான் இங்கே வரும்படி வற்புறுத்த முடியும்? நான் நாத்திகனாக இருந்தால் என் மனைவியும் நாத்திகராக இருக்க வேண்டுமா? அப்படி அடிமைப்படுத்துவதுதான் ஆணாதிக்கம்!” என்றேன் நான். “வீட்டைத் திருத்தாத நீயா நாட்டைத் திருத்த வந்துவிட்டாய்!” என்று இன்னும் தகாத முறையில் பிராமணக் கொச்சையில் திட்டினார். நான் சென்னை பாஷையில் திட்டியபடி அவரை அடிக்கப் பாய்ந்தேன்.   

இவ்வாறாக, தமிழ் புத்திஜீவிகளிடமிருந்து நான் எதையுமே கற்றுக்கொள்ள முடிந்தது இல்லை. ஒருவர் - தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த புத்திஜீவியாகக் கருதப்படுபவர் - என்னை தில்லியில் என்ன பாடு படுத்தினார் என்பதை ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்’ நாவலில் எழுதியிருக்கிறேன். அந்த நாவலில் அவர் பெயர் பாலா. ஏதோ மனித உரிமை மாநாட்டுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து தில்லி வந்த அவர், என்னை ஒரு கொத்தடிமைபோல் நடத்தினார். அப்போதுதான் உணர்ந்துகொண்டேன், மார்க்ஸியம் எப்படிப்பட்ட நவீன குருமார்களை உருவாக்குகிறது!

நிச்சயமாக, தஞ்சை வாழ்க்கை என்னுடைய பிற்கால ஆளுமையில் பெரிய தாக்கத்தைச் செலுத்தியது. எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’ என்ற ஒரே ஒரு நாவலின் மூலம் நான் கற்றது அதிகம். லா.ச.ரா.வின் ‘பாற்கடல்’, ‘ஜன்னி’ போன்ற சிறுகதைகளிலிருந்தும் நான் உருவாகியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதேபோல, சில அபூர்வமான உறவுகள் எனக்குத் தஞ்சாவூரில் கிடைத்தன.

தஞ்சாவூரில் வெங்கடேச பெருமாள் கோயில் தெருவில் பெரியம்மா வீட்டில் இருந்து (நூலகங்களில்) படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் எனக்கு அன்னபூரணி, பாகீரதி இருவரும் அறிமுகமானார்கள்; அனு - பூமா என்று அவர்களுக்குச் செல்லப் பெயர்கள். இந்த நட்பை என் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். அந்தக் காலகட்டத்தில் பிராந்தியத்தின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தாள் அனு. தஞ்சாவூரின் பிரபலமான பள்ளியின் தலைமை ஆசிரியரின் பெண். நானும் நண்பர்களும் தெருவோரத்தில் நின்றபடி அவளைப் பார்த்துக்கொண்டிருப்போம். அவளோ எங்கள் பக்கமே திரும்ப மாட்டாள். தஞ்சாவூர் பெண்கள் கல்லூரியில் ஜியாலஜி படித்தாள். ஒருநாள் மாவட்ட அளவிலான ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் அவளும் நானும் சந்திக்க நேர்ந்தது. அவள் முதல் பரிசு. நான் இரண்டாம் பரிசு. அன்று இரவே அனு வீட்டில் எனக்கு விருந்து சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. விருந்து முடிந்ததுமே என் காதலைத் தெரிவித்துவிட்டேன். “தாமதமாக வந்துவிட்டாய் ரவி! (அறிவழகன் என்ற பெயரை நான் பயன்படுத்துவதில்லை), நான் என் மாமன் மகனைக் காதலிக்கிறேன்!” என்றாள் அனு. கூடவே, “என் தங்கையைக் கேட்டுப் பார்!” என்று யோசனையும் சொன்னாள். 

மறுநாளே தங்கை பூமாவிடம் என் காதலைத் தெரிவித்தேன்.  அவளும் மறுத்துவிட்டாள். ஆனால் ஒன்று சொன்னாள், நீ ரொம்ப நல்ல பையனாக இருக்கிறாய், எங்கள் இருவருக்கும் நீ நண்பனாக இரு! எனக்கும் அவர்களை இழக்க மனம் இல்லை; அருமையான பெண்கள். இப்போதுதானே மனுஷ்ய புத்திரன் பாய் பெஸ்டி கவிதை எழுதுகிறார்! நான் 1974இலேயே இரண்டு பெண்களுக்கு பாய் பெஸ்டியாக ஆகிவிட்டேன். அதன் பிறகு இருவரும் என் குடும்ப நண்பர்களாக ஆகிவிட்டார்கள். பிற்பாடு, நான் டெல்லியில் வேலைக்குச் சேரவும் என் தங்கை சென்னையில் வேலையில் சேரவும்கூட அவர்கள் உதவினார்கள். 

சரி, கல்லூரி முடிக்கும்போது எதிர்காலம் சார்ந்து என்ன கனவுகள் இருந்தன? நீங்கள் அரசு வேலைக்குச் சென்றதற்கு வீட்டின் வறுமைச் சூழல் மட்டுமே காரணமா அல்லது எழுத்து - பிழைப்பு இரண்டையும் பிரச்சினையின்றி அமைத்துக்கொள்வதற்கு அப்போதே இது ஒரு நல்ல வழி என்று திட்டமிட்டீர்களா?

வீட்டுச் சூழலைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. நானே என் முயற்சியில் சேர்ந்திருந்த ஆங்கில இலக்கியத்திலேயே இருந்து படித்திருந்தால் எனக்குக் கனவுகள் இருந்திருக்கும். பிஎஸ்ஸி ஃபிஸிக்ஸுக்கு வந்தவுடனேயே கல்லூரிப் படிப்பு எனக்கு இல்லை என்று தெரிந்துவிட்டது. ஆக, பிழைப்புக்கான ஒரே வழி போட்டித் தேர்வுகள்தான். தமிழ்நாடு சர்விஸ் கமிஷன் தேர்வைக் குறி வைத்தேன். 

ஒரே முயற்சியில் தேர்ச்சி பெற்றுவிட்டேன். அப்போது நான் எந்தத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுவிடும் அளவுக்குப் பொது விஷயங்களைப் படித்திருந்தேன். ஒருவர் நூறு ஆண்டுகளில் படிக்கக் கூடியவற்றை நான் அந்த வயதுக்குள் படித்து முடித்திருந்தேன் என்றுகூட சொல்லலாம். என் தங்கை சமீபத்தில்கூட நினைவுகூர்ந்தார், “நாங்கள் தூங்கப் போகும்போது அண்ணன் படித்துக்கொண்டிருப்பார்கள்; நாங்கள் விடிகாலையில் எழும்போதும் அண்ணன் படித்துக்கொண்டிருப்பார்கள்!” பன்னிரண்டு மணிக்குப் படுத்து நான்கு மணிக்கு எழுந்துவிடுவேன். அப்போதே தியானம் செய்துகொண்டிருந்ததால் உடம்புக்குத் தேவையான ஓய்வு கிடைத்தது. ஆக, 1977இல் சிறைத் துறைக்குள் நுழைந்துவிட்டிருந்தேன்.

சிறைத் துறைக்குள் நுழைந்தது தற்செயலா, விருப்பமும் இருந்ததா? 

இருபது வயதில் பிரெஞ்சு இலக்கியத்தில் முக்கியமானவர்களையெல்லாம் வாசித்திருந்தேன். அவர்களில் ஜான் ஜெனே என்னை மிகவும் கவர்ந்தவராக இருந்தார். அவர் திருடனாக இருந்து அந்த அனுபவத்தை ஒரு நாவலாகவும் எழுதியிருந்தார். திருடனாகும் அளவுக்கு எனக்குத் துணிச்சல் இல்லாததால், சிறைத் துறைக்கு வேலைக்குப் போய் திருடர்களைச் சந்தித்து அவர்களைப் பற்றி எழுதுவோம் என்று ஓர் ஆசை எனக்கு இருந்தது. அப்படித்தான் சிறைத் துறை மீது கவனம் விழுந்தது. 

அப்போது பொன்.பரமகுரு பொறுப்பில் இருந்தார். சிறைத் துறை கிடைத்தது என்றாலும், துரதிர்ஷ்டவசமாக எனக்கு சிறை கிடைக்கவில்லை. சிறைத்துறையின் தலைமை அலுவலகத்தில் பரமகுருவின் பர்ஸனல் ப்ராஞ்சில் போட்டுவிட்டார்கள். நானே ஒரு கைதியாகச் சிக்கிக்கொண்டேன் என்றுதான் அந்த அனுபவத்தைச் சொல்ல வேண்டும். சூப்ரன்டென்டென்ட் அண்ணாசாமி பல கொடுமைகளையும் அரங்கேற்றினார்.

சென்னை, கீழ்ப்பாக்கம், 10, ஓவார்ம்ஸ் சாலை. அந்தச் சாலை முடிந்து இடது புறம் புரசைவாக்கம் திரும்பும் வீதியின் வலப்பக்கத்தில் ‘சாந்தி மேன்ஷன்’ தங்கும் விடுதி இருந்தது. அதே வீதியின் இன்னொரு முனையில் சட்டக் கல்லூரி மாணவர் விடுதி இருந்தது. ‘சாந்தி மேன்ஷன்’ பக்கத்திலேயே ஒரு மெஸ். அங்கேதான் சாப்பிடுவேன். என்னுடைய உலகம் சுருங்கிவிட்டது. நரக வாழ்க்கை அது.

எவ்வளவு காலம் சிறைத் துறையில் வேலை பார்த்தீர்கள்? அந்த நாட்களைக் கொஞ்சம் பேசலாமா?

சிறைத் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு ஆண்டு வேலை பார்த்தேன். ஆறு நாள் வேலை. என் சூப்பரின்டெடன்ட் அண்ணாசாமி என்னிடம் பண்ணையார் மாதிரி நடந்துகொள்வார். அவர் பேனாவுக்கு இங்க் எல்லாம் போடச் சொல்லுவார். சிறைச்சாலைகளில் வாங்கக் கூடிய பீடி மற்றும் மளிகைச் சாமான்களுக்கு சிறைக் கண்காணிப்பாளர் இங்கே தலைமை அலுவலகத்துக்கு எழுதி அனுமதி கேட்பார். வாங்கியவற்றின் பட்டியல் அனுப்புவார். அதற்கெல்லாம் அனுமதி தரும் கடிதங்களைக் கையால் எழுதும் குமாஸ்தா வேலை என்னுடையது. மகளிர் சிறைச்சாலை என்றால் சானிட்டரி நாப்கின்களும் பட்டியலில் சேரும். 

மகளிர் சிறைக் கண்காணிப்பாளர் அவர்களுக்கு,

- ஒன்பதாவது நினைவூட்டுக் கடிதம்.

(ஒன்பதாவது நினைவூட்டுக் கடிதத்துக்கு முன்பாக எந்தெந்தத் தேதிகளில் நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்ப்ப்பட்டுள்ளன என்ற தேதி விவரம் வரிசைக்கிரமமாக எழுத வேண்டும்.)

தாங்கள் இன்ன தேதியில் தங்களின் சிறைவாசிகளுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின்கள் 569 வாங்கியதற்கான ரசீது வகையறாக்களை இன்னும் அனுப்பித் தரவில்லை. விரைவில் அனுப்பித் தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

கையொப்பம்

சிறைத்துறைக் கண்காணிப்பாளருக்காக

சி. அண்ணாசாமி 

இப்படியான கடிதங்களை காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை எழுதிக்கொண்டே இருப்பதுதான் வேலை. இடையில் பதினோரு மணிக்குக் காபி வரும். பத்து நிமிடம் இடைவேளை. வெளியே போக முடியாது. உள்ளேயேதான். அதற்காக இருக்கையிலிருந்தே குடிக்க வேண்டியது இல்லை. ஒரு தனி அறை இருக்கும். அங்கே போய் கிசுகிசுவென்று பேசியபடி குடிக்கலாம். ஐஜி சேம்பரில் இருந்தால் முழு அலுவலகத்திலும் செருப்பு சப்தம்கூட கேட்காதபடிதான் நடக்க வேண்டும். மகாராஜாக்களின் தர்பார் மாதிரியேதான். 

மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை உணவு இடைவேளை. நான் கொஞ்சம் நடந்து வந்து மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டுப் போவேன். அலுவலகத்தில் எனக்கு ஒரு நண்பரும் இல்லை. சக ஊழியர்களைப் பார்த்தால் எனக்கு மனநோயாளிகளைப் போல் தோன்றும். அண்ணாசாமி ஒரு சைக்கோபோல் நடந்துகொள்வார். ஆனால், ஐஜியிடம் பம்முவார். ஒவ்வொரு நிமிடமும் அவரை எனக்கு அடிக்க வேண்டும்போல் தோன்றும். 

இத்தனை ஆண்டுகள் ஆகியும் நான் என்னுடைய சிறைத் துறை அனுபவங்களை எழுதவில்லை. அப்போது நான் அச்சு அசலாக ஜெயகாந்தனைப் போலவே தலைமுடி வைத்திருந்தேன். ஒருநாள் என்னை அலுவலக மாடியில் பார்த்துவிட்ட ஐஜி பொன். பரமகுரு, “இது கல்லூரி அல்ல; உடனடியாக முடியை வெட்டிக்கொள்ள வேண்டும்” என்று ஆங்கிலத்தில் சொன்னார். நான் வெட்டவில்லை. அவரும் நான் வெட்டினேனா என்று பார்க்கவில்லை. 

ஒரு ஆண்டு ஆனதும் என்னைப் பயிற்சிக்காக மதுரை போகச் சொன்னார்கள். பதினைந்து நாளோ ஒரு மாதமோ, ஞாபகம் இல்லை. அந்தப் பயிற்சிக்குப் போனால் நான் வேலையை ராஜினாமா செய்ய முடியாது. சிறைத்துறை அலுவலகத்தில் என்னுடைய ஒரு சான்றிதழைக்கூட இன்னும் கொடுத்திருக்கவில்லை. பயிற்சியின்போதுதான் கொடுக்க வேண்டும். கொடுத்துவிட்டால் வாழ்க்கை காலி. ஆயுள் முழுவதும் சிறைத் துறையிலேயே சானிட்டரி நாப்கின் மற்றும் பீடி கணக்கு எழுத வேண்டும். 

அரசுப் பணிக்கு ஏன் வந்தேன் என்ற கேள்விக்கே அப்போது இடம் இருக்கவில்லை. ஏனென்றால், எனக்கும் என் தம்பி தங்கைக்கும் வேறு வாய்ப்பே இல்லை. அரசுப் பணி ஒன்றுதான் வீட்டில் உள்ளவர்களின் பட்டினியைப் போக்குவதற்குக் கிடைத்த ஒரே வழியாக இருந்தது. சரி, அரசுப் பணி என்பது சிறைத் துறையில் மட்டும் இல்லையே!  

யோசித்தேன். ஜான் ஜெனே மாதிரி ஆக நினைத்து இப்படி காஃப்காவின் கரப்பான் பூச்சியாக மாறிவிட்டேனே என்று வருந்தினேன். ஒருபோதும் தோல்வியை ஏற்றுக்கொண்டு அடிபணியும் மனநிலை உள்ளவன் அல்ல நான். அப்படித்தான் தில்லி அரசு நிர்வாகத்தில் வேலையில் சேர்வதற்காக ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனின் ஸ்டெனோ தேர்வு எழுதியிருந்தேன். அதில் தேர்வாகி வேலைக்கான நியமன உத்தரவு வரவும் இங்கே பயிற்சிக்கான அழைப்பு வரவும் சரியாக இருந்தது. பார்த்தேன், சிறைத் துறையில் சொல்லிக்கொள்ளாமலேயே தில்லிக்குப் போய்விட்டேன். சொல்லியிருந்தால் விட்டிருக்க மாட்டார்கள். என் சான்றிதழ்கள் அனைத்தும் என்னிடமே இருந்ததால் நான் தில்லிக்கு ஓடுவது எளிதாக இருந்தது. சான்றிதழ்கள் சிறைத் துறையில் இருந்திருந்தால் அண்ணாசாமி என் வாழ்க்கையையே சிதைத்திருப்பார். என் வீட்டுக்கு எத்தனையோ மிரட்டல் தந்திகள் போயிருக்கின்றன. எதற்கும் கவலைப்படாதீர்கள் என்று சொல்லிவிட்டேன்.

இப்படி தில்லிக்குச் செல்வதற்கு அனுவும் பூமாவும் ஓர் உதவி செய்தார்கள். அப்போதெல்லாம் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனின் ஸ்டெனோ தேர்வுக்கு, தேர்வர்களே டைப்ரைட்டரும் எடுத்துப் போக வேண்டும். தஞ்சாவூரைத்தான் நான் தேர்வு மையமாகத் தேர்ந்தெடுத்திருந்தேன். எனக்கான டைப்ரைட்டரை ஒரு இன்ஸ்டிட்டியூட்டிலிருந்து அனுவும் பூமாவும் எனக்காக இரவல் வாங்கி வந்திருந்தார்கள்.

பொதுவாக, தில்லிக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் தென்னிந்தியர்கள் யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் தேர்வுதான் எழுதுவார்கள். நான் தில்லியில் உள்ளூர் வேலைக்கான தேர்வை எழுதினேன். எப்படியோ தில்லிக்கு ஓடிவிட வேண்டும் என்பதே அப்போதைய கனவாக இருந்தது. அப்படியே ஓடியும்விட்டேன். தில்லி வாழ்க்கை ராஜ வாழ்க்கைதான். 

சரி, தில்லி மீது அப்படியென்ன பிரேமை?

(அடுத்த ஞாயிறு அன்று பேசுவோம்…)

தமிழ் உரையாடல் பகுதியில் சாரு பேட்டியின் முந்தைய அத்தியாயம்
கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4

2





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஸ்காட்லாந்தவர்பொருளாதாரக் கொள்கைகள்தலைமைத் தேர்தல் ஆணையர்அருந்ததி ராய் அருஞ்சொல்வசுந்தரா ராஜ சிந்தியாதென்னிந்தியா மோதலுக்கு வாய்ப்பு தரக் கூடாதுபேனா சின்னம்அருஞ்சொல் சமஸ் பேட்டிகர்சான் வைலிதலைவர்பாரசீக மொழிபிடிஆர் அருஞ்சொல்வினோத் கே.ஜோஸ் பேட்டிஅழுத்தம்இறவாணம்தூயன் கட்டுரைசாதகமாபீட்டரிடம் கொள்ளையடித்துஎழுத்துப் பிழைமதச்சார்பின்மைமுதல்வரை நீக்குவதுதிமுகவிவசாயம்உள்ளதைப் பேசுவோம் உரையாடல்சர்வாதிகார நாடுகள்சித்தர்கள்தாளித்தல்சித்ரா ராமகிருஷ்ணாசுய சிந்தனைஓட்டுநர் ஜெயராமன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!