கட்டுரை, சினிமா, கலாச்சாரம் 7 நிமிட வாசிப்பு

பாட்ஷாவை ஜெயிலரோடு ஒப்பிட முடியுமா?

ராஜன் குறை கிருஷ்ணன்
22 Sep 2023, 5:00 am
1

ஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.500 கோடி வசூலுடன் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியுள்ளது. விளைவாகப் பரவலான பேசுபொருளாகவும் ஆகியுள்ளது. இதையொட்டி அந்தப் படக்குழுவினர் வெற்றி விழா நடத்தியுள்ளார்கள். இந்த விழாவில் பேசுகையில், அவருக்குப் பெரும் சந்தை வெற்றியைத் தந்த ‘பாட்ஷா’ படத்தோடு ‘ஜெயிலர்’ படத்தை ஒப்பிட்டு, ஒன்றுபடுத்திப் பேசினார் ரஜினி. சமூக ஊடகங்களிலும்கூட சிலர் அப்படிப் பேசியதைக் கவனிக்க முடிந்தது. இரண்டையும் அப்படி ஒன்றாகப் பார்க்க முடியுமா?

ஏன் இப்படிக் கேட்கிறேன் என்றால், இங்கே வணிக சினிமா வேறு; வெகுஜன சினிமா வேறு! இரண்டு வகை சினிமாக்களிலும் பெரும் லாபம் ஈட்டலாம்; ‘பாக்ஸ்-ஆஃபீஸ் ஹிட்’ கொடுக்கலாம். ஆனால், இரண்டும் ஒன்றல்ல. ‘பாட்ஷா’ ஒரு நல்ல வெகுஜன சினிமா; ‘ஜெய்லர்’ மோசமான ஒரு வணிக சினிமா. 

இரண்டு படத்திற்கும் ரஜினி என்னும் நடிகரே, அவருடைய ஸ்டைலே மூலதனமாக இருந்தாலும், இரண்டு படங்களும் முற்றிலும் வேறு  வேறானவை. 

எது வணிக சினிமா… எது வெகுஜன சினிமா?

இதை எளிதில் விளக்க ஓர் உதாரணம் தருகிறேன். அந்தக் காலத்தில்  ஒளிப்பதிவாளர் கர்ணன் ஒரு மாதிரியான ‘கெளபாய்’ படங்களுக்காக அறியப்பட்டவர். அமெரிக்காவின் ‘வெஸ்டர்ன்’ என்று அழைக்கப்படும் திரைப்படங்களில் வரும் கெளபாய்களைப் போன்று இவர் படங்களில் வருபவர்கள் தொப்பி போட்டுக்கொண்டு, துப்பாக்கியை வைத்துக்கொண்டு குதிரைகளில் திரிவார்கள். படத்தில் நிறைய கவர்ச்சி நடனங்களையும், காட்சிகளையும் சேர்த்துவிடுவார். அவருடைய காமிரா வித்தைகளால் காட்சிகளில் பரபரப்பூட்டுவார், கிளுகிளுப்பூட்டுவார்.

இதன் உச்சகட்டமாக ‘ஜம்பு’ (1980) என்று ஒரு படம் எடுத்தார் கர்ணன். ஏதோவொரு தீவில் காட்டில் சிக்கிக்கொள்ளும் பயணிகள், கொள்ளையர்கள், பழங்குடிகள் என்று ஏனோதானோவென்று ஒரு கதை. அதைப் பற்றி யார் கவனித்தார்கள்! படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சிக் காட்சிகள். ‘சாஃப்ட் போர்ன்’ என்று சொல்லத்தக்க கிளுகிளுப்புப் படம் அது. பல ஊர்களிலும் படம் 100 நாட்கள் ஓடியது. இது ஓர் அதீத உதாரணம் என்றாலும், உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளை இயங்கச் செய்து பார்வையாளர்களுக்கு உணர்ச்சி ஊட்டும் ‘ஜம்பு’ போன்ற படங்களைச் செய்வது வணிக சினிமா எனலாம்.

வெகுஜன சினிமாவிலும் இத்தகைய அம்சங்கள் இருந்தாலும், அது மனிதர்களின் சுயத்துடன் உரையாடலை நிகழ்த்தக் கூடியது;  உணர்வுகளையும், சுய பரிசீலனையையும் பிணைப்பது. கதையாடல் என்பதே உணர்வுகளையும், சிந்தனையும் கலந்து நிகழ்வுகளைக் கோர்த்துக் காட்டுவதுதான்! படம் பார்க்கும் சுயம் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளவும், சுயபரிசீலனை செய்துகொள்ளவும் இது உதவும். (இதில் உறுதிப்படுத்திகொள்ளல்தன்மை அதிகமாக இருப்பதைத்தான் நாம் சாதாரண படம், வெகுஜன ரசனைக்குத் தீனி போடும் படம் என்றும், சுயபரிசீலனைத்தன்மை அதிகமாக இருப்பதைத்தான் நாம் கலைப் படம் என்றும் கூறுகிறோம்).

நான் கர்ணனுடைய படத்தை உதாரணம் காட்டியதற்கு மற்றொரு காரணம், இப்போதைய இளைஞர்கள் ‘ஜெயிலர்’ படம் ‘பாட்ஷா’ படத்திலிருந்து வேறுபட்டிருப்பதற்குக் கால மாற்றம்தான் காரணம் என்று நினைக்கிறார்கள். முப்பதாண்டுகளின் ரசனை மாற்றத்தை என் போன்ற முதியவர்கள் புரிந்துகொள்வதில்லை என்றுகூட அவர்கள் கூறலாம். அவர்கள் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால் வணிக சினிமாவும், வெகுஜன சினிமாவும் எல்லா காலங்களிலும் இருந்துவந்துள்ளன. சமீப காலத்தில்கூட வெகுஜன சினிமாவாக உருவாகி வெற்றி பெற்ற படங்களுக்கு, ‘விசுவாசம்’ (2018), ‘பிகில்’ (2019) படங்களை உதாரணங்களாகக் கூறலாம்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

வன்முறைக் கொண்டாட்டம்

ராஜன் குறை கிருஷ்ணன் 15 Aug 2023

நல்ல படமும் கெட்ட படமும்

முக்கியமான விஷயம்: வணிக சினிமா, வெகுஜன சினிமா வித்தியாசம் நல்ல படமா, கெட்ட படமா என்பது குறித்தது மட்டுமல்ல; வணிக சினிமா கெட்ட படமாகத்தான் இருக்க வேண்டும் என்பது அல்ல. வெகுஜன சினிமா நல்ல படமாகத்தான் இருக்க வேண்டும் என்பது அல்ல!

உதாரணமாக ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் கிச்சு, கிச்சு மூட்டி சிரிக்க வைப்பதில் மட்டும் கவனம் செலுத்தலாம்; அதுவும் வணிக சினிமாதான். அதற்காக மோசமான, கெட்ட படமாக இருக்க வேண்டிய தேவை இல்லை. ஏன், முழு நீள சண்டைப் படமும்கூட, வணிக சினிமாவாக இருந்தாலும், மோசமான படமாக இருக்க வேண்டிய தேவை இல்லை. உதாரணமாக புரூஸ் லீ உள்ளிட்டோர் நடித்த குங்ஃபூ, கராத்தே படங்களை யோசித்துப் பார்க்கலாம். இவற்றில் சண்டைக் காட்சிகள் அதிகம் இருந்தாலும், பெரிய தீங்கு எதுவும் இல்லை. சுவாரஸ்யமான பொழுதுபோக்கு எனலாம். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

வணிக சினிமா மோசமான படமாக, கெட்ட படமாக மாறுவது அது மலிவான உணர்ச்சிகளுக்குத் தீனி போடுகிறதா, சிந்தனையை மழுங்கடிக்கிறதா என்பதையெல்லாம் பொறுத்துத்தான் கூற முடியும். அதேபோல, வெகுஜன சினிமாவில் சிறந்த படைப்பு சுய உறுதிப்பாட்டுடன் கூடிய சுயபரீலனைக்கு இட்டுச் செல்ல வேண்டும்; மோசமான படைப்பு முழுவதும் அரைத்த மாவையே அரைப்பதாக இருக்கும்; மூளைக்கு வேலை கொடுக்காமல் இருக்கும். இவ்வாறான வரையறைகளைத் தொகுத்து ஓர் அட்டவணையாக நாம் உருவாக்கிக்கொள்ளலாம். 

நான் கொடுக்கும் உதாரணங்கள் எல்லைக் கோடுகள் (edge of the spectrum). இடையில் கலவையாக பல படங்கள் இருக்கும். 

வகை மாதிரி நல்ல சினிமா கெட்ட சினிமா
வெகுஜன சினிமா

நன்மை, தீமை குறித்து, மனித உறவுகளின் தன்மைகள் குறித்து உணர, சிந்திக்க வைப்பது; விழுமியங்களை விவாதிப்பது.

(எ.க: அன்பே சிவம், பரியேறும் பெருமாள், சார்பட்டா பரம்பரை)

எந்தப் புதுமையும் இல்லாமல், பழக்கப்பட்ட உணர்வுகளுக்கே தீனி போடுவது. அரைத்த மாவு. சிந்தனையின்மை. 

(எ.க: சுறா, வீரம்)

வணிக சினிமா

நகைச்சுவை, சண்டை, கேளிக்கை என்றிருந்தாலும் சுவாரசியமான, புத்திசாலித்தனமான பொழுதுபோக்காக இருப்பது 

(எ.க: மைக்கேல் மதன காமராஜன், தில்லு முல்லு) 

வன்முறைக் கிளர்ச்சி, தர்க்கமற்ற நடைமுறைகள், அறிவை மழுங்கடிக்கும் நாயக வழிபாடு

(எ.க: மாஸ்டர், விக்ரம், ஜெயிலர்) 

பாட்ஷா (1995)

கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்திற்கான ரஜினிகாந்தின் பதில் போன்று அமைந்தது ‘பாட்ஷா’.  கமலின் ‘நாயகன்’ ஹாலிவுட் ‘காட்ஃபாதர்’ படத்தை முன்னோடியாகக் கொண்டது. ‘பாட்ஷா’ மும்பை குற்ற உலகம் என்ற அந்தக் களத்தை எடுத்துக்கொண்டாலும் உள்ளூர் தொல்கதையாடல்களில் வேர் கொண்டது எனலாம். 

இந்தப் படத்தில் ஒரு கெட்ட தாதாவை, வன்முறையாளனை எதிர்க்க, நல்ல வன்முறையாளனாக மாறுகிறான் மாணிக்கம். தீயவனான ஆண்டனியின் ஆட்களால் கொல்லப்பட்ட தன் நண்பன் பாட்ஷாவின் பெயரையே தன் பெயராக மாற்றிக்கொள்கிறான். பாட்ஷாவின் வன்முறை என்பது தீமைக்கு எதிரான பழிவாங்கும் வன்முறையாக மட்டுமே இருக்கிறது. தன் நண்பனைக் கொன்றவர்களைத் துரத்தித் துரத்திக் கொல்கிறான். தீயவர்களான அவர்களைக் கொன்றதால் மக்களின் ஆதரவைப் பெறுகிறான். அவனுக்கென்று ஓர் அடியாள் குழுவை உருவாக்கிக்கொண்டு, அவனும் சட்டத்திற்கு வெளியே செயல்பட்டாலும், ஆண்டனியின் குற்ற சாம்ராஜ்யத்தை அழித்து அவனுடைய பிடியிலிருந்து எளிய மக்களை விடுவிப்பதுதான் அவனது நோக்கம்.

இறுதியில் ஆண்டனியைச் சிறைக்கு அனுப்புவதில் வென்றாலும், அவன் தந்தையை ஆண்டனி கொல்ல நேர்கிறது. அவன் தந்தை பாட்ஷா அவதாரத்தை விட்டுவிட்டு, எங்காவது சென்று குற்ற உலகின் நிழல் படியாமல் வளரும் மாற்றாந்தாய் குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று உறுதிமொழி வாங்கிக்கொள்கிறார். பாட்ஷா, தான் குண்டுவெடிப்பில் இறந்ததாக ஜோடித்துவிட்டு நண்பர்களுடன் மும்பையிலிருந்து வெளியேறுகிறான். 

பாட்ஷா, ஆட்டோ ஓட்டுநர் மாணிக்கமாக அன்னை, தம்பி, தங்கைகளுடன் சென்னையில் வாழும்போதுதான் படம் துவங்குகிறது. அவரும் அவர் குழுவினரும் பல்வேறு தொழில்கள் செய்து பிழைக்கின்றனர். ஏழைகளுக்கு உதவுகின்றனர். ஆனால், ஒரு சில ரெளடிகள் மாணிக்கத்தின் குடும்பத்திற்கு தொல்லை தரும்போது, பாட்ஷா அவதாரம் எடுக்க வேண்டிவருகிறது. பல சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு பிறகு, மாணிக்கமாக பாட்ஷா வாழ்வது ஆண்டனிக்குத் தெரியவர, அவன் சிறையிலிருந்து தப்பித்து பாட்ஷாவைப் பழிவாங்க சென்னை வருகிறான். இறுதி மோதலில் மாணிக்கம் ஆண்டனியைக் கொல்லாமல் தடுத்து, போலீஸ் ஆய்வாளராகிவிட்ட அவன் தம்பியே கொன்றுவிடுகிறான். அதாவது சட்டம் தீயவனைக் கொன்று, மாணிக்கம் தன் அமைதியான வாழ்க்கையை தொடர உதவுகிறது.  

படத்தின் முதல் பாதி முழுவதும், மாணிக்கத்தின் கடந்த காலம் நிழலாக உணர்த்தப்படுகிறது. அஞ்ஞாத வாசத்தில் மகா வீரர்களான பாண்டவர்களெல்லாம் விராட நாட்டில் சமையல்காரனாக, குதிரைகளை பராமரிப்பவனாக எளிய தொழில்களை செய்து மறைந்து வாழ்வதைப் போல பாட்ஷாவும், நண்பர்களும் எளிய மனிதர்களாக வாழ்கிறார்கள். அங்கே கீசகன் திரெளபதியைத் தொந்தரவு செய்வதால் நள்ளிரவில் பீமன் அவனைக் கொல்வதுபோல, மாணிக்கமும் தன் பராக்கிரமத்தை வெளிப்படுத்த வேண்டிய சில சந்தர்ப்பங்கள் வருகின்றன.

சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘கீசக வதம்’ (1916) என்பதை நினைவில் கொண்டால், எப்படி ‘பாட்ஷா’ மகாபாரத கதையாடல் அம்சத்தை வெற்றிகரமாக திரைக்கதையில் பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ‘பாட்ஷா’வில் சண்டைக் காட்சிகள் இருந்தாலும், வன்முறை தவறு என்பதே படத்தின் செய்தியாக இருக்கிறது. வன்முறை பாட்ஷாவாக இல்லாமல் அமைதி நாடும் ஆட்டோக்கார மாணிக்கமாக எளிய வாழ்க்கை வாழ்வதே மாணிக்கத்தின் லட்சியமாக இருக்கிறது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன்: தமிழ்ச் சன்னதம்

சமஸ் | Samas 11 Oct 2022

ஜெயிலர் (2023)

பல அபத்தங்கள் நிறைந்த திரைக்கதையைக் கொண்ட ‘ஜெயிலர்’ படமானது வன்முறை வெறியாட்டங்களிலேயே பெருமளவில் திளைக்கிறது. இந்தப் படத்தில் ஆறேழு வயது பேரனுடன் மகிழ்ச்சியாக விளையாடும் ஒரு தாத்தாவாக ரஜினிகாந்த் அறிமுகமாகிறார். அவர் மகன் போலீஸ் அதிகாரி. அதிகபட்சம் ஒரு பத்து, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்தான் ரஜினி ஜெயிலர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும். அந்தக் கடந்த காலம் பெரிய ரகசியம் ஒன்றுமில்லை. ஆயினும் அதைப் பெரிய ரகசியம் போன்றே காட்டுகிறார்கள். 

திஹார் சிறையில் ஜெயிலராக ரஜினி வைத்துதான் சட்டம் என்று காட்டுகிறார்கள்; கைதிகளை அவர் அடக்கி ஆள்கிறார். ஜெயிலில் கைதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது என்று கூறும் கைதியின் காதைச் சடாரென்று வெட்டிவிடுகிறார். கேள்விமுறையே இல்லாத காட்டு தர்பார். அப்படி ஆதிக்கம் செலுத்த அவர் அந்தச் சிறையிலுள்ள ஜாக்கி ஷ்ராஃப் போன்ற கிரிமினல்களையே ஆதரவாக வைத்துக்கொள்கிறார். அதாவது, ஜாக்கி ஷ்ராஃப் போன்ற சில கிரிமினல்களுக்கு நண்பர், வேறு சில கிரிமினல்களுக்கு எதிரி.

எந்த அடிப்படையில் அப்படி சில கிரிமினல்களுடன் நட்பாக இருக்கிறார் என்று புரியவில்லை. சரி, சிறையில்தான் அந்தக் கிரிமினல்களும் அவர் ஜெயிலர் பதவியை முன்னிட்டு நட்பாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அவர் ஓய்வு பெற்ற பிறகும் அந்தப் பெரிய, பெரிய தாதாக்கள், டான்கள் எல்லோரும் அவர் மீது பயபக்தியுடன் இருக்கிறார்கள். எதனால் என்று புரியவில்லை. அப்படி என்ன கிரிமினல்களுக்கும், ஜெயிலருக்கும் பந்த பாசம்? மோகன்லால் அறிமுக காட்சியிலேயே இரண்டு பேரின் மண்டையை உடைத்துக் கொன்றுவிட்டுதான் தன்னைத் தேடிவந்த ரஜினியைச் சந்திக்க வருகிறார்.  

ரஜினிகாந்த் என்ற மூத்த நடிகரிடம் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகிய நடிகர்கள் மரியாதையாக இருக்கிறார்கள், அவருக்கு உதவி செய்கிறார்கள் என்பதை திரைப்பட உலகம் சார்ந்த உறவாகப் புரிந்துகொள்ள முடிகிறதே தவிர, கதாபாத்திரங்களாக அந்தப் பெரிய, பெரிய மாஃபியா டான்கள் எல்லாம் எதற்காக ஒரு ஓய்வுபெற்ற ஜெயிலருக்கு உதவுகிறார்கள் என்று தெரியவில்லை. 

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

படத்தின் மகா கொடூரமான முக்கிய வில்லனின், விநாயகனின், குற்றப் பின்னணி என்னவென்றால் சிலைக் கடத்தல் என்கிறார்கள். ஊடகங்களில் நாம் காணும் சிலை கடத்தல்காரர்கள் எல்லாம் வங்கி அதிகாரிகள், ஜவுளிக்கடை முதலாளிகள் போலத்தான் சாதாரணமாக இருக்கிறார்கள். அடியாட்களை சல்ஃபூரிக் ஆசிட்டில் மூழ்கடித்துக் கொல்லும் கொடூரர்களாக அவர்களைக் கற்பனை செய்ய முடியவில்லை. சிலைக் கடத்தல் ஒரு பரிமாணத்தில் வொய்ட் காலர் குற்றம்; அதாவது படித்த மேல்மட்ட சமூகத்தினர் ஈடுபடக்கூடியது. அயல்நாட்டு கலைப்பொருள் விற்பனைத் தொடர்புகள் இதில் முக்கியம்.   

இந்தச் சிலை கடத்தல் கொடூர வில்லன் எப்படிப்பட்ட ஆள் என்றால் காவல் துறை அதிகாரியையே கடத்திக்கொண்டு சென்றுவிடுகிறான் (கொன்றுவிட்டான் என்றுதான் நினைக்கிறார்கள்). ஒட்டுமொத்த காவல் துறையும், அரசும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இந்தப் படத்தில் ஊடகங்களோ, அரசோ, அரசியல் தலைவர்களோ, காவல் துறையோ, நீதிமன்றமோ இடம்பெறுவதில்லை. ஓய்வுபெற்ற ஜெயிலரும், பயங்கரமான கிரிமினல்களும் மட்டும் நிறைந்த சமூகமாக இருக்கிறது. 

அப்படி வன்முறை நிறைந்த சமூகத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் வயதான ஜெயிலர் அரசின், தான் பணி செய்த காவல் துறையின் பாதுகாப்பை நாடுவதில்லை. தன்னுடைய பழைய கிரிமினல் நண்பர்களைத்தான் நாடுகிறார். அவர்களில் ஒருவரான சிவராஜ்குமார் குறிபார்த்து சுடும் பத்துப் பேரை ஸ்னைபர் துப்பாக்கிகளுடன் அனுப்புகிறார். அதெற்கெல்லாம் காசு வாங்கிக்கொள்வாரா, ஓய்வுபெற்ற ஜெயிலர் எப்படி காசு கொடுப்பார், இலவச சேவையா என்பதெல்லாம் தெரிவதில்லை.  

எப்படியோ கிரிமினல்கள் உதவி, பின்னர் துணை ராணுவத்தின் உதவி எல்லாம் பெற்றுக்கொண்டு கொடூர வில்லனை ஏமாற்றி, அவன் கடத்தி வைத்திருந்த மகனை விடுவிக்கிறார் ரஜினி. அந்த மகன் வில்லனுடன் பேசுவதை அவர் ரகசிய காமிரா மூலம் பார்த்துவிடுகிறார். மகன் அந்த வில்லனிடம் “நான் உன்னுடன் சேர்ந்து பிசினஸ் செய்யத்தான் உன்னைத் தேடினேன்; நீ அவசரப்பட்டு என்னை அடைத்து வைத்துவிட்டாய்” என்று கோபிக்கிறான். வில்லன் எதற்காக கொல்லாமல் அவனை அடைத்துவைத்தார் என்றும் தெரியவில்லை; அவன் எப்படி தன்னை காவல் காப்பவர்கள் மூலம் தகவல் சொல்லி வில்லனுடன் பிசினஸ் பேசாமல் இருந்தான் என்றும் தெரியவில்லை. அவ்வளவு வீராவேசமான ஜெயிலரால் வளர்க்கப்பட்ட மகன், ஏன் இப்படி பொறுக்கியாக, காசுக்காக கிரிமினல் வேலை பார்க்க விரும்புகிறான் என்றும் புரியவில்லை. 

சரி, ஏதோ போதாத காலம், அவனுக்கு புத்தி கெட்டுப்போய்விட்டது என்றாலும், அந்தத் தகவல் தெரிந்த ஜெயிலர் என்ன செய்ய வேண்டும்? ஒன்று அவனைத் திட்டி நல்வழிப்படுத்த வேண்டும். அல்லது அவனை மேலதிகாரிகளிடம் சொல்லி பணிநீக்கம் செய்யச் சொல்ல வேண்டும். வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும். ஜெயிலர் என்ன செய்கிறார் என்றார், அவனை தனியே அதிரப்பள்ளி அருவி மலையுச்சிக்குக் கூட்டிச் சென்று பேசுகிறார். அவன் கெட்டபேருக்கு பயந்து அப்பாவையே கொல்லத் துணியும்போது, கூலிப்படையை வைத்து அவனைக் கொன்றுவிடுகிறார். அதாவது எதையுமே சட்டப்படியோ, மனிதாபிமானத்துடனோ செய்வதில்லை. கொலைதான் தீர்வு; பேச்சே கிடையாது, வீச்சுதான் என்பதுதான் இந்தப் படத்தின் பஞ்ச் டையலாக். 

ஒரு பேச்சுக்கு படத்தில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் இருந்தாலும், இது ஒரு கேங்க்ஸ்டர் படம்தான். மோசமான அர்த்தமற்ற வன்முறை நிறைந்த கேங்க்ஸ்டர் படம். பிரச்சினை என்னவென்றால் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் மக்கள் குடும்பமாக பார்த்து ரசிக்கும் படங்களையே தரும் நடிகர். ‘பாட்ஷா’ படத்திலும் அவர் டான் என்றாலும் அது மிகக் குறைந்த வன்முறைக் காட்சிகளை மட்டுமே கொண்டது. “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற பஞ்ச் டயலாக் குழந்தைகள் சொல்லி மகிழ்வதாக இருந்தது. இனி “பேச்சே கிடையாது வீச்சுதான்” என்று ஒரு குழந்தை சொல்லிப் பழகினால் அது விபரீதமல்லவா?

சினிமாவுக்கும் நிதர்சனத்துக்கும் தொடர்பில்லையா?

எனக்கு, “சினிமாவை சினிமாவாக, கேளிக்கையாகப் பாருங்கள். அதில் கருத்துக்களை தேடாதீர்கள்” என்று அறிவுரை சொல்பவர்கள், நாளைக்கு மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம் நடந்தால் அதற்கும் இதுபோன்ற வன்முறை அழகியலுக்கும் தொடர்பில்லை என்று உத்திரவாதம் தருவார்களா? படத்தின் எந்தக் காட்சியிலும் தான் செய்யும் கொலைகளுக்கு ரனிஜிகாந்த் வருந்துவதில்லையே? ரசித்து, ருசித்துதானே கொல்கிறார்? மக்களைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு நட்சத்திரத்தை, சூப்பர் ஸ்டாரை எப்படி கொலைவெறி பிடித்த மனிதராக காட்டுவது ஆரோக்கியமானதா? கூச்சப்படாமல் இந்தக் கேள்வியைச் சிந்தனையாளர்கள், உளவியலாளர்கள், பண்பாளர்கள் அனைவரும் கேட்க வேண்டும், தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து. 

என்னுடைய பயிற்சியில் விமர்சனம் என்பது ஒரு திரைப்பட பிரதியைத் தத்துவார்த்த மானுடவியல் கோணத்தில் ஆராய்வதே ஆகும். அந்த வகையில் ஒரு மானுடவியலாளனாக இதெல்லாம் நெருப்புடன் விளையாடுவது என்றுதான் கூறுவேன்.  

வெளிநாட்டு படங்களை முன்மாதிரிகளாகக் கொள்வது தவறு; அங்கே சமூகம் ஏற்கெனவே பலவிதமான மன நோய்களுக்கும், வன்முறைப் போக்குகளுக்கும் ஆட்பட்டுதான் இருக்கிறது. நாம் தமிழ்ச் சமூகத்திலும் பரவலாக உட்பொதிந்து இருக்கும், புகைந்துகொண்டு இருக்கும் வன்முறையைத் தூண்ட விரும்புகிறோமா என்பதுதான் கேள்வி. ஏற்கெனவே சாதீயம் என்ற சமூக வன்முறையிலிருந்து வெளிவர முயன்றுகொண்டிருக்கும் சமூகத்திடம் “இனி பேச்சில்லை, வீச்சுதான்” என்றெல்லாம் வாக்கியங்களை பரப்புவது அறிவுடைமை என்றோ, பொறுப்புணர்ந்த செயல் என்றோ நான் நம்பவில்லை. 

புகழ்பெற்ற நாவல், அடர்த்தியான கதை, ருசிகர சம்பவங்கள், ஏராளமான நடிகர்கள், அரங்க அமைப்புகள், ஒப்பனைகள் என பிரம்மாண்டமான தயாரிப்பு முயற்சிகளைக் கோரிய, கடும் உழைப்பை, படைப்பூக்கத்தைக் கோரிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூலைவிட, ‘ஜெயிலர்’ வசூல் அதிகமாக இருக்கலாம் என்னும்போது தமிழ்ச் சமூகத்தின் வெகுஜன ரசனை என்னாவாகிறது என்று கவலைப்படாமல் இருக்க முடியவில்லை! இதைப் பெரும் சீரழிவாகப் பார்க்கிறேன்!  

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

வன்முறைக் கொண்டாட்டம்                                                              
பொன்னியின் செல்வன்: தமிழ்ச் சன்னதம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


2






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   10 months ago

"இதன் உச்சகட்டமாக ‘ஜம்பு’ (1980) என்று ஒரு படம் எடுத்தார் கர்ணன். ஏதோவொரு தீவில் காட்டில் சிக்கிக்கொள்ளும் பயணிகள், கொள்ளையர்கள், பழங்குடிகள் என்று ஏனோதானோவென்று ஒரு கதை. அதைப் பற்றி யார் கவனித்தார்கள்! படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சிக் காட்சிகள். ‘சாஃப்ட் போர்ன்’ என்று சொல்லத்தக்க கிளுகிளுப்புப் படம் அது. பல ஊர்களிலும் படம் 100 நாட்கள் ஓடியது.-" மேலே செய்தி இயக்குனர் காமெராமேன் கர்ணன் "ஜம்பு" படம் , அப்படி ஒன்றும் நூறு நாட்கள் எல்லாம் ஓடவில்லை! ஜெய்சங்கர், கர்ணன் காம்பினேஷன் படங்கள் பெரும்பாலும் ஒரு மாதம் ஓடினால் பெரிது! அதற்குள் போட்ட முதல் வந்துவிடும்! ஜெய்சங்கரை " வெள்ளிக்கிழமை நடிகர்" என்பர்! ஒவ்வொரு மாதமும் தவறாமல் ஒரு வெள்ளிக்கிழமை அவர் படம் ரிலீஸ் ஆகும்! பணமே இல்லை என்றாலும் அவர் படம் பண்ணி கொடுப்பார்! அற்புதமான மனிதர்!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

தலை நகரங்களும்அறிவுஜீவிஎன்பிசிகருணாநிதி சகாப்தம்தேசிய நுழைவுத் தேர்வுகிலி பால்அருஞ்சொல் அன்வர் ராஜா பேட்டிகேள்வி - நீங்கள்மத நல்லிணக்கம்விசுவபாரதிதமிழ் முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாட்டம்மணீஷ் சிசோடியாசிந்தனை உரிமையின் மேல் தாக்குதல் கூடாதுமாய குடமுருட்டிபா.இரஞ்சித்பட்டாபிராமன் கட்டுரைமிகெய்ல் கோர்பசெவ்பொருளாதார நிர்வாகம்பாரத ஸ்டேட் வங்கிநடப்புக் கணக்கு பற்றாக்குறைபெகாசஸ்எண்ணிக்கைஇளம் வயது மாரடைப்புநாடாளுமன்றத் தாக்குதல்புத்தக வாசிப்புபிரைஸ் ஆஃப் தி மோடி இயர்ஸ்சாஹேப்பொருளாதார வளர்ச்சிஆசிஷ் ஜா: பிஹாரின் சமீபத்திய கௌரவம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!