பேட்டி, சமஸ் கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

செக்ஸை எப்படி அணுகுவது? சாரு பேட்டி

சமஸ் | Samas
12 Mar 2023, 5:00 am
4

படம்: பிரபு காளிதாஸ்

தமிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தப் பேட்டியில் பேசுகிறார் சாரு.

நாம் எழுத்தாளர்கள் கையாள வேண்டிய உடல் - மனம் நலம்சார் விஷயங்களைப் பேசிவருகிறோம். எவருக்குமே பெரிய சவால், பாலியல் தொடர்பான எண்ணங்கள். காந்திகூட தன்னுடைய முதுமையிலும் பாலியல் இச்சையை வெல்ல முடியுமா என்று பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்ததை அறிவோம். செக்ஸை எப்படி அனுசரிப்பது; உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும்? உங்களுடைய அனுபவம் என்ன?

இந்தக் கேள்விக்கு இன்றைய தினம் நேரடியான, வெளிப்படையான பதிலைச் சொல்வதற்கு தமிழ்நாட்டில் என்னை விட்டால் வேறு ஆளே இல்லை. தற்பெருமை என்று நினைக்க வேண்டாம். அந்த அளவுக்குப் பாலியலைப் பற்றிப் பேசுவதில் இங்கே தயக்கம் நிலவுகிறது. எனக்கு முன்பு என் அளவுக்குப் பேசியவராக குஷ்வந்த் சிங்கைத்தான் நினைக்கிறேன்; 90 வயதில் அவர் தனக்கு வந்த ஒரு காதல் கடிதத்தை வெளியிட்டாரே, அதை எழுதிய வங்கத்துக்குப் பெண்ணின் பெயரோடு!

பாலியலைப் பொருத்தவரை இந்தியாவில் மிகவும் மூடிய சமூகங்களில் ஒன்றாக இருப்பது தமிழ்நாடு. இங்கே செக்ஸ் பற்றிய ஆரோக்கியமான விவாதம்கூட சாத்தியம் இல்லை. இருந்தாலும் பல விஷயங்களில் பூனைக்கு மணி கட்டும் வேலையை நான் செய்துகொண்டிருப்பதால் பாலியல் தொடர்பிலான விவாதங்களையும் நானே முன்னெடுத்து கெட்ட பெயர் வாங்கிக்கொண்டிருக்கிறேன்.

கும்பகோணத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பெண்ணிய விவாதத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெர்மன் க்ரேர் (Germaine Greer) நடத்திய ‘கன்ட்’ (Cunt) பத்திரிகையிலிருந்து சில பத்திகளைப் படித்துக் காண்பித்தேன். கூட்டம் பெரிய கலவரத்தில் முடிந்தது. இத்தனைக்கும் ஜெர்மன் க்ரேர் உலகப் புகழ் பெற்ற பெண்ணியர். இன்றைக்கும் அவரது ‘கன்ட் பவர்’ (Cunt power) கோட்பாடு பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது.

அமெரிக்கப் பெண்ணியரான வி (V) 1996இல் ‘வஜைனா மோனலாக்ஸ்’ (Vagina Monologues) என்று ஒரு நாடகம் எழுதினார். அந்த நாடகம் இந்திய நகரங்கள் முழுவதும் நிகழ்த்தப்பட்டது என்றாலும், சென்னையில் மட்டும் போலீஸ் கமிஷனரால் தடை செய்யப்பட்டது. அந்த அளவுக்கு செக்ஸ் பற்றி விவாதிக்கவே நாம் தயாராக இல்லை என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன்.

சரி, இப்போது உங்கள் கேள்விக்கு நேரடியாக வருகிறேன். செக்ஸை எப்படி அணுகுவது? சுவாசிப்பதைப் போன்ற, உணவு உட்கொள்வதைப் போன்ற ஒரு செயல்பாடுதான் செக்ஸ். அப்படியிருக்க செக்ஸை எப்படி அணுக வேண்டும் என்ற கேள்வி ஏன் பிறக்கிறது? செக்ஸ் என்பது இன்னொரு நபரையும் உள்ளடக்கியதாக இருப்பதால் செக்ஸை எப்படி அணுகுவது என்ற கேள்வி எழுகிறது. இன்னொரு காரணம், எல்லா மதங்களுமே செக்ஸைக் கட்டுப்படுத்துகின்றன. இஸ்லாமில் இந்தக் கட்டுப்பாடு மிகவும் குறைவு. பௌத்தம் அது தோன்றிய இந்தியாவிலேயே இல்லாமல் போனதற்குக் காரணம், அந்த மதம் அளவுக்கு அதிகமாக மனித உடலைக் கட்டுப்படுத்தியதுதான்.

நம் சமூகத்தில் செக்ஸ் பற்றிய விஞ்ஞானரீதியான புரிதல் உள்ளவர்கள் குறைவு. ஆணும் பெண்ணும் பலரோடு உறவுகொள்ளும் விதமான (polygamous) உடல் மற்றும் மன அமைப்பு உள்ளவர்களாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் பெண்களுக்கு சற்று அதிகமாகவே பலர் பால் விழைவு உண்டு என்கிறது அறிவியல். அதனால்தான் மதமும் கலாச்சாரமும் பெண்ணின் உடலையே குறி வைத்துச் செயல்பட்டன. மதமும் கலாச்சாரமும் ஆண்களின் அதிகாரத்தில் இருந்ததால்தான் பெண்களை அன்னை, தெய்வம் என்ற வழிபாட்டு உருவங்களாக மாற்றி பெண்ணின் உடலை சுலபமாகக் கட்டுப்படுத்த முடிந்தது.

ஆக, செக்ஸைப் பொருத்தவரை மனித இனம் மட்டுமே ஒழுங்கற்று இருக்கிறது. வன்முறையில் ஈடுபடுகிறது. செக்ஸ் தொடர்பான விவாதங்களில் இதுவே அடிப்படைப் புரிதலாக இருக்க வேண்டும். மனித இனம் ‘பாலிகேமஸ்’ (polygamous) என்று பார்த்தோம். ஆனால் கோடிக்கணக்கான மனிதர்கள் அப்படி வாழ்வது சாத்தியம் இல்லை என்பதால் குடும்பம் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. எந்த ஒன்றும் நிறுவனமயம் ஆக்கப்படும்போதே அங்கே ஒடுக்குமுறையும் உண்டாகிவிடுகிறது.

சமூகம் ஆண்களின் ஆதிக்கத்தில் இருப்பதால் குடும்பத்தில் பெண் உடம்பு ஒடுக்கப்படுகிறது. இதைத் தமிழில் அதிகம் எழுத்தாளர்களே பதிவு செய்தார்கள். சி.சு. செல்லப்பாவின் ‘ஜீவனாம்சம்’, அசோகமித்திரனின் ‘இருவர்’, கு.ப.ரா.வின் ‘சிறிது வெளிச்சம்’, லா.ச.ரா.வின் ‘பாற்கடல்’, ந.முத்துசாமியின் ‘நீர்மை’ போன்ற பல படைப்புகளை உதாரணமாகச் சொல்லலாம். குறிப்பாக, ‘ஜீவனாம்சம்’ மற்றும் ‘இருவர்’ ஆகிய இரண்டும் பெண்ணின் உடம்பு பிராமண சமூகத்தில் எவ்வளவு கொடூரமாக ஒடுக்கப்பட்டது என்பதன் இலக்கிய சாட்சிகளாக விளங்குகின்றன. ஆம், மதம் பெண் உடம்பை ஒடுக்கியது என்றால், அதில் அதிகபட்சமாக இங்கே நம் சமூகத்தில் பாதிக்கப்பட்டவள் பிராமணப் பெண்ணாகவே இருக்கிறாள்.

இந்தப் பின்னணியில் அணுகினால் நமக்கு இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன. ஒன்று, சம்மதத்தோடு கூடிய உறவு (consensual sex) மற்றும் பாலியல் அத்துமீறல். ஆனால், ஒழுக்கவாதிகளோ இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொண்டு மேலும் மேலும் ஒழுக்க விதிகளை விதித்துக்கொண்டே போகிறார்கள். பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் யாருமே குற்றவாளிதான்.

எழுத்தாளர்களை வெகுவாக மதித்துக் கொண்டாடும் பிரான்ஸில் ஜான் ஜெனே சிறுவர்களைத் தன் பாலியல் வேட்கைக்கு உட்படுத்தியதால் நீண்ட கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனால், ஜெனேயை அப்படி ஒரு பொதுக் குற்றவாளியாகக் கருத முடியாது என்று சொல்லி, பிரான்ஸில் இருந்த அத்தனை புத்திஜீவிகளும் சிந்தனையாளர்களும் சேர்ந்து அதிபரிடம் விண்ணப்பித்து ஜெனேயை விடுவித்தனர். ஐரோப்பிய சமூகத்தின் அணுகுமுறை வேறு. இது இந்தியா போன்ற மூடிய சமூகங்களுக்குப் பொருந்தாது.

ஆனால் இந்திய சமூகம் மூடப்பட்டது சமீபத்தில்தானே தவிர அதற்கு முன்பு அப்படி இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஆங்கிலேயரின் ஒழுக்கக் கோட்பாடுகள்தான் இந்தியாவை மூடின. மற்றபடி பௌத்தமும் சமணமும் உடலை வெகுவாகக் கட்டுப்படுத்தியபோது காமத்தை வாழ்வின் கொண்டாட்டமாக வெளிப்படுத்தியது இந்து மதம். காமசூத்திரமும் கோயில்களில் உள்ள காமக்களியாட்ட சிற்பங்களும் அதற்கு சாட்சி.

என்னைப் பொருத்தவரை, நான் ஆரம்பத்திலிருந்தே ஒரு ஐரோப்பியனைப் போல்தான் வாழ்கிறேன். இங்கே எழுத்தாளர்கள் சினிமா நடிகர்களைப் போல் பிரபலம் இல்லை என்பதால் அவ்விதமான வாழ்க்கை எனக்குப் பிரச்சினையை ஏற்படுத்தவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பே என் இணையதளத்தில், ‘ஐ லைக் வைன், விமன் அண்ட் காட்ஸ்’ (I like wine, women and gods) என்று பெரிதாகப் போட்டுக்கொண்டவன் நான். பிறகு பல நண்பர்கள் “இங்கே எழுத்தாளர்களையெல்லாம் திருவள்ளுவரைப் போல் பார்க்கிறார்கள்; அதை நீக்கி விடுங்கள்” என்று சொன்னதால் அரைமனதுடன் நீக்கினேன். மற்றபடி, சமகால இலக்கிய உலகில் கண்ணதாசனைப் போல் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே எழுத்தாளன் நான்தான்.

இதை நான் வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்துக்கொண்டிருக்க முடியும். ஆனால், ஒரு எழுத்தாளன் தன் வாழ்க்கையையே திறந்து போட்டுவிட்டுத்தான் எழுத வருகிறான் என்று நம்பும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான். உலகில் உள்ள எந்த ஒரு எழுத்தாளரையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களின் வாழ்க்கை திறந்த புத்தகமாகத்தான் இருக்கிறது. நான் எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது. திறந்த புத்தகமாக வாழ்ந்தும் காட்ட வேண்டும்.

காந்தியைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். ஒரு தேசத்தின் தந்தை எனக் கருதப்பட்ட, மகாத்மா என்று அழைக்கப்பட்ட அவரே தன் பாலியல் இச்சையை வெல்ல முடியுமா என்று இளம் பெண்களோடு நிர்வாணமாகப் படுத்து சோதனைகள் செய்தவர். அதை அப்படி அப்படியே தன்னுடைய பத்திரிகையில் எழுதியவர். காந்தியின் வாழ்வில் ஒளிவு மறைவே இல்லை. ஒரு அரசியல் தலைவரே அப்படி இருந்தார் என்றால், அரசியலை எல்லாம் தாண்டிய, இந்த உலகத்துக்கே வாழ்வின் பேருண்மைகளைக் கற்பிக்க வேண்டிய நிலையில் இருக்கும் எழுத்தாளர்களின் வாழ்வும் அப்படித்தானே இருக்க வேண்டும்?

துரதிர்ஷ்டவசமாகத் தமிழில் அப்படி இல்லை என்பதற்காக நான் ரகசியமாக வாழ முடியாது. மேலும், தஞ்சை மண்ணைச் சேர்ந்த யாருக்குமே வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்தான். அது அந்த மண் தந்த வரம். அந்த வரத்தை வாழ்ந்துகொண்டிருப்பவன் நான். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் ஸாஃபோ (Sappho) என்ற பெண் கவி ஒருவர் வாழ்ந்தார். அவர்தான் இந்த உலகின் முதல் பெண்ணியக் கவிஞர். முதல் லெஸ்பியன் கவிஞரும் அவரே. அவர் வாழ்ந்த ஊரின் பெயர் லெஸ்போஸ் என்பதால் பெண்களில் தன்பால் சேர்க்கையாளர்களுக்கு லெஸ்பியன் என்ற பெயர் வழங்கப்படுகிறது.

இன்றைய தமிழ்ச் சமூகத்தில் ஒரு பெண்ணோ ஆணோ தன்னை லெஸ்பியன் என்றோ கே என்றோ அழைத்துக்கொள்ள முடியுமா? சமூகம் இடம் கொடுக்குமா? எல்ஜிபிடி குழுக்கள் எல்லாம் இருக்கிறார்கள்தான். ஆனால் பிரபலமான ஒரு நபர் தன்னைப் பற்றி அப்படிச் சொல்லிக்கொள்ள சமூகம் அனுமதிக்கிறதா?

நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே என்னை ஒரு பைசெக்ஸுவல் என்று அறிவித்துக்கொண்டேன். ஆனால், தமிழர்கள் இலக்கியம் வாசிப்பதில்லை என்பதால் என்னுடைய வார்த்தைகள் அத்தனையும் டயரியில் எழுதிக் கொண்டதுபோல் ஆயிற்று. நானும் பிரச்சினையின்றி வாழ்கிறேன். அறிவித்துக்கொண்டதோடு மட்டுமல்ல, வலது காதில் வளையமும் மாட்டிக்கொண்டேன். அதன் காரணமாக இன்னமும் ஐரோப்பாவில் சில இடங்களில் – ஆஃப்ரிக்க முஸ்லிம்கள் நடத்தும் விடுதிகளில் எனக்கு அறை தர மாட்டார்கள். ஹராம் என்பார்கள். அதனால் காதில் உள்ள வளையத்தைக் கழற்றி விட்டுத்தான் அம்மாதிரி இடங்களுக்குச் செல்கிறேன்.

நான் ஒருபோதும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதில்லை. ஒருபோதும் அதிகாரத்தை (!) துஷ்பிரயோகம் செய்ததில்லை. பாலியல் அத்துமீறலை விட பாலியல் தேவைக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் கொடுங்குற்றமாகக் கருதுகிறேன். அதேசமயம் அடிக்கடி என்னை பாங்காக்கில் உள்ள பட்பாங் ஏரியாவிலும் காண முடியும். தாய்லாந்து உணவைப் போலவே எனக்குத் தாய்லாந்துப் பெண்களையும் பிடிக்கும். பட்பாங் பெண்களிடம் நான் கேட்ட கதைகளையெல்லாம் ‘ராஸ லீலா’ நாவலில் எழுதியிருக்கிறேன்.

ஒரு பெண்ணை உற்றுப் பார்ப்பதே குற்றம் என்று கருதும் நானேதான் ஒரு பெண் என்னிடம் வழிந்தால் நானும் வழிபவனாகவும் இருக்கிறேன். நானாக வழிந்தது இல்லை. அவ்வளவுதான். அதேசமயம், ஒரு பெண்ணைப் பார்த்து “நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” என்று சொல்வதையும் அத்துமீறல் என்று கருதும் பழைய ஆளாகவும் இருக்கிறேன். அந்த வார்த்தைகளை என்னால் என் காதலியிடம் மட்டுமே கூற முடியும். இப்போதெல்லாம் அது மிகவும் சகஜமான ஒன்றாகவும் பெண்களே அதை ரசிக்கின்ற விஷயமாகவும் ஆகியிருக்கிறது என்பது வேறு விஷயம்.

இந்த நிலையில் ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளைப் பார்ப்பதோ தொடுவதோ அத்துமீறல். ஆனால் இந்த நாட்டில் வசிக்கும் பத்தாம்பசலிகள் பாலியல் அத்துமீறலையும் சம்மதத்துடனான செக்ஸையும் ஒன்றாகப் பார்க்கிறார்கள். இங்கே ஒரு சம்பவத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் என் தோழி ஒருத்தி ‘எங்காவது பப்புக்குப் (நடனமாடக் கூடிய மதுபான விடுதி) போகலாமா?’ என்று கேட்டாள். அப்போது நான் மது அருந்துவதை நிறுத்தியிருந்த காலம். ஐந்து ஆண்டுகளாகக் குடிக்கவில்லை. சொன்னேன். பிறகு நான் குளிர்பானமும், அவள் மதுவும் அருந்துவதாக ஏற்பாடாகியது.

மது விடுதிகள் எங்கும் ஆடைக் கட்டுப்பாடு உண்டு. காலர் இல்லாத சட்டை, செருப்பு போன்றவற்றுக்குத் தடை. அதுபற்றி தோழி கேட்டாள். பெண்களுக்கு எந்த ட்ரெஸ் கோடும் கிடையாது என்றேன். அப்படியானால் நான் மினி ஸ்கர்ட்டோடு வருகிறேன் என்றாள். அப்படியே வந்தாள். வந்த வேகத்தில் சரக் சரக் என்று நாலு பெக்கை அருந்தினாள். கடும் விஸ்கி. நான் குளிர்பானம் அருந்தினேன். 9 மணி அளவில் நடனம் ஆடலாமா என்றாள். நடனம் எனக்கு உயிர். பன்னிரண்டு மணி வரை ஆடினோம்.

கடைசியில் அவள் சொன்னாள், “உங்களைப் போய் என்னென்னவோ சொல்கிறார்கள், ஆனால் உங்களைப் போன்ற ஒரு ஜென்டில்மேனை நான் பார்த்ததே இல்லை.” ஏன் என்று கேட்டேன். “இத்தனை நேரம் ஆடியும் ஒரு தப்பான ஸ்பரிசம் கூட இல்லை” என்றாள் ஆங்கிலத்தில். “அப்படி ஒன்றும் என்னை நல்லவனாக நினைத்து விடாதே. நீ என் தோழி மட்டும்தானே? கேர்ள் ஃப்ரெண்ட் இல்லையே?” என்றேன். ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும்.

அப்போது இன்னொரு ரசமான சம்பவமும் நடந்தது. அங்கே எதேச்சையாக வந்திருந்த ஒரு பத்திரிகையாளர் (நண்பரும்கூட) நானும் தோழியும் நடனம் ஆடுவதைப் புகைப்படம் எடுத்துவிட்டார். என்னிடம் வந்து “தல, இதைப் போட்டல் செம ஸ்கூப்பாக இருக்கும், 65 வயது ரைட்டரும் 25 வயது அழகியும் என்று தலைப்பு!” என்றார். “யோவ், இது என்ன பிரான்ஸா? இது வந்தால் என்னை ஒரு ரேப்பிஸ்ட்போல் சித்தரித்து என் வாழ்வையே முடித்துவிடுவார்கள்” என்று சொல்லி அவரிடம் அதை அழித்துவிடச் சொன்னேன்.

ஒழுக்கசீலர்களாகக் காண்பித்துக்கொள்பவர்கள்தான் சமூகத்துக்கு ஆபத்தானவர்கள். அவர்கள்தான் பெண் சுதந்திரத்துக்கும் சமத்துவமான ஆண் பெண் உறவுக்கும் எதிரானவர்கள். இம்மாதிரி ஆட்கள்தான் எழுத்தாளர்கள் திருவள்ளுவரைப் போல் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எழுத்தாளன் நீதி போதகன் அல்ல. எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் – இதயப் பிரச்சினை உள்ளவர்கள் – வயகரா எடுத்துக்கொண்டு செத்துப் போயிருக்கிறார்கள். வயகரா எல்லாம் நிலப்பனைக் கிழங்குக்கு முன்னால் நிற்கக்கூட முடியாது. எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். எந்தவிதப் பக்க விளைவுகளும் இல்லை. ஆனால் பெண் துணை இல்லாமல் சாப்பிடக் கூடாது. ஆரம்ப காலத்தில் என் நண்பர் ஒருவரிடம் இதை சோதித்துப் பார்த்தேன். பொடியும் கிடைக்கும். கிழங்காகவும் கிடைக்கும். நண்பர் ஆர்வக் கோளாறு காரணமாக கிழங்காகச் சாப்பிட்டுவிட்டார். ஒரு வார காலம் வீட்டை விட்டே வெளியே கிளம்ப முடியவில்லையாம்.

நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது தாதுபுஷ்டி லேகியம் விற்பவர்கள் தெருவில் உள்ள லாந்தர் விளக்குக் கம்பங்களின் கீழேதான் துணி விரித்து விற்பார்கள். அப்போது அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தை அந்த வயதில் எனக்குப் புரியவில்லை. பிற்பாடு புரிந்தது. “இந்த லேகியத்தைச் சாப்பிட்டால் இந்த லாந்தர் கம்பம் போல் நிற்கும்” என்று சொல்லி கம்பத்தைக் காண்பிப்பார். இதைப் படிக்கும் யாவரும் உற்சாகமாகவும் உல்லாசமாகவும் வாழ வழி சொல்லியிருக்கிறேன். பயன்படுத்தி இன்புறுங்கள்.

இன்னொரு விஷயம். என்னதான் சொன்னாலும் அன்புக்கு ஈடு இணை கிடையாது. ஆனால், அன்பு என்பதைப் பற்றித்தான் பெரிய பஞ்சாயத்து இருக்கிறது. பெரும்பாலானவர்கள் நூற்றுக்கணக்கான நிபந்தனைகளோடுதான் அன்பு செலுத்த முன்வருகிறார்கள். நிபந்தனையற்ற அன்பை நாம் அரிதாகவே சந்திக்கிறோம். அல்லது, சந்திப்பதே இல்லை!

(உரையாடல் தொடர்கிறது... அடுத்த வாரம்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5

4





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Meera V   2 years ago

அன்பு என்றாலே நிபந்தனையற்றது தானே!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   2 years ago

நன்றி சாரு. இன்று அருஞ்சொல் தளம் முடங்குமளவுக்கு வாசகர் வருகை எனக் கேட்டேன். இணையத்தில் தாதுபுஷ்டி லேகியமும் நிலப்பனைக் கிழங்குப் பொடியும் ஆர்டர் செய்யவிருக்கிறேன்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Veeramanikandan    2 years ago

காமம் பற்றிய தெளிவு, அதன் திறந்த மாண்பு சமூகத்தில் எல்லோரிடமும் பரவி விரவும் போது பாலியல் அத்துமீறல்கள், ஆண், பெண் சமத்துவமின்மை போன்ற பிரச்னைகள் முடிவுக்கு வரும். குடும்பம் என்ற நிறுவனம், ஆணாதிக்கத்தால் பிராமண பெண்களை காட்டிலும் தலித் சமூகப் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்ணினமே பாதிக்கப்பட்ட இனம்தான் இன்றும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

SENTHIL KUMAR P   2 years ago

சமீப காலங்களில் இது போன்று ஓர் ஒளிவு மறைவு அற்ற மனம் திறந்த ஆழமான செய்தி உள்ள கருத்துக்கள் நிரம்பிய பேட்டியை வாசித்ததில்லை இதைத் தொடர்ந்து வெளியிடும் அருஞ்சொல் தளத்திற்கு நன்றிகள்.....சாரு ஐ லவ் யூ அப்பா...

Reply 7 0

Login / Create an account to add a comment / reply.

தேசிய உறுப்பு தான தினம்திருமாவளவன் சமஸ்கனடாதிரைப்பட நடிகர்கள்பெண் ஏன் அடிமையானாள்?: பெரியாரின் அடி தொட்டுசுகுமாரன்யூனியன் பிரதேசம்மறைநுட்பத் தகவல்கள்சண்முகநாதன் கருணாநிதிசாரு அருஞ்சொல் பேட்டிவிஜயும் ஒன்றா?மக்களவைத் தேர்தல் 2024சமஸ் கலைஞர்தான்சானியாவில் என் முதல் மாதம்வகுப்பறைக்குள் வகுப்புவாதம்தேசத் தந்தைவேலை இழப்பில் இருந்து மீள்வது எப்படி?oilseedsசசி தரூர்நீலப் புரட்சிமதுரைதசை வலிவரலாற்றாய்வாளர்சோழர்கள் இன்றுசெயலற்றத்தன்மைகால்நடைகள்முகமது பின் பக்தியார் கில்ஜிமாஉப்புப் பருப்பும்ஜனநாயக கட்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!