பேட்டி, கலை, சமஸ் கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள் 3 நிமிட வாசிப்பு

டி20, ரீல்ஸ் மாதிரி எழுத்திலும் வரும்: சாரு

சமஸ்
26 Mar 2023, 5:00 am
0

மிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தப் பேட்டியில் பேசுகிறார் சாரு.

காப்பியம், காவியம், பா வகைமைகளில் தொடங்கி சிறுகதை, புதுக்கவிதை, நாவல் என்று இலக்கியம் இன்று வந்தடைந்திருக்கும் இடத்திற்குக் காலகட்டத்தின் தேவையும் சமூகத்தின் அழுத்தமும்கூட முக்கியமானதாக இருந்திருக்கிறது. அப்படி அடுத்துவரும் தலைமுறைக்கு ஏற்ற ஒரு புது வடிவத்துக்கு எழுத்தாளர்கள் மாற வேண்டியிருக்கிறதா? ஊடகங்கள் இன்று இன்ஷார்ட்ஸ் வடிவத்தையும் ஏற்றிருக்கின்றன; கிரிக்கெட் டி20 வடிவத்தை வரித்திருக்கிறது; விஷுவல்ஸ் ரீல்ஸ் வடிவத்தையும் உள்வாங்குகின்றன; இலக்கியமும் அப்படி மாறுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

இலக்கியத்தில் காலப் போக்கிற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அப்படிப்பட்ட மாற்றங்கள் வந்தேதான் தீரும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதை யாராலும் தடுக்கவும் முடியாது. ஏனென்றால், சங்க காலக் கவிதைகளின் மொழி நமக்குக் கடினமாகவும் நாம் அறிந்தே இராததாகவும் இருக்கிறது. உரையாசிரியர்களின் உதவி இல்லாமால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதேசமயம் பாரதியின் தமிழ் உரையில்லாமல் புரிகிறது. 2000 ஆண்டுகளில் நடந்த மாற்றம் அது. பாரதியின் தமிழுக்கும் இன்றைய கவிஞர்களின் தமிழுக்குமான வித்தியாசத்தையும் நாம் காண்கிறோம். மேலும், பெருங்காப்பியங்களின் காலமும் முடிந்துவிட்டது. நான் கம்பராமாயணத்தையும் மகாபாரதத்தையும் படித்துப் பார்த்தேன். அவ்வப்போது சம்ஸ்கிருத மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தபடி மகாபாரதத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்தேன். இரண்டு காப்பியங்களுமே என்னை ஈர்க்கவில்லை. அக்காவியங்களின் நயங்களை நான் மறுக்கவில்லை. வெகுவாகவே ரசித்தேன். ஆனாலும் ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளனான எனக்கு அக்காவியங்களின் உயர்வுநவிற்சியும், கூறியது கூறலும் மிகவும் சலிப்பூட்டின. காவியத் தலைவன் நடக்கும்போது அவன் புஜங்கள் ஆகாயத்தில் இடித்தன என்று படித்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. அடுத்த அத்தியாயத்திலேயே நாயகனின் தலை உத்தரத்தில் இடித்தது என்று வருகிறது. உயர்வுநவிற்சிக்கு உதாரணமாக, குருக்ஷேத்திரப் போரில் 166 கோடி பேர் இறந்ததாக யுதிஷ்டிரர் கூறுவதைச் சொல்லலாம். அப்போதைய பாரதத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே அதில் பத்தில் ஒரு மடங்குதான் இருந்திருக்கும் இல்லையா?

எனக்கு இந்த இதிகாசங்களைப் படித்தபோது ஏதோ ‘காட்ஸில்லா’, ‘ஹல்க்’ போன்ற ஹாலிவுட் படங்களைப் பார்ப்பதுபோல்தான் இருந்தன.

எதற்குச் சொன்னேன் என்றால், இலக்கியத்தின் வடிவம் எவ்வளவோ மாறிவிட்டது. மாறிக்கொண்டிருக்கிறது. இப்போது பத்தே வரிகளில் குறுங்கதைகள் வந்துகொண்டிருக்கின்றன.

இன்னும் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அது, இன்னும் கொஞ்ச காலத்தில் புத்தகங்களை வாசித்துக் காதால் கேட்கும் பழக்கம் வரும். ஆங்கிலத்திலும் மற்ற ஐரோப்பிய மொழிகளிலும் அது புழக்கத்துக்கு வந்துவிட்டது என்றாலும், தமிழில் இன்னும் பெரிய அளவில் நடைமுறையில் வரவில்லை. காரணம், தமிழைப் பெரும்பான்மைத் தமிழர்களால் பிழையின்றி எழுத முடியாததுபோலவே சரியாகப் பேசவும் வாய்விட்டு வாசிக்கவும்கூட முடியவில்லை. ஏற்ற இறக்கங்களே இல்லாமல் ஏதோ ரோபோ மாதிரி படிக்கிறார்கள் பலர். பல கவிஞர்கள் தங்கள் கவிதைகளை வாசிக்கும்போது அந்த இடத்தைவிட்டு எழுந்து ஓடிவிடலாமா என்று தோன்றுகிறது. வாசிப்பு என்பது ஒரு நிகழ்த்துக் கலை போன்றது.

இன்றைய காலகட்டத்தில் புத்தகத்தைப் படிப்பதைவிட யாரேனும் வாசித்துக் கேட்பது பலருக்கும் வசதியாக இருக்கிறது. அது இன்னும் கொஞ்ச நாளில் நடக்கும்.

சமீபத்தில் அராத்துவின் குறுநாவல் ஒன்று என்.எஃப்.டி. என்ற முறையில் விற்பனைக்கு வந்தது. அதில் ஒவ்வொரு பக்கத்துக்கும் இசை, ஓவியம், நகரும் காட்சிகள் என்றெல்லாம் இருந்தன. ஒரு புத்தகத்தைத் தயாரிக்க இரண்டு லட்சம் ரூபாய் செலவானது என்று அறிந்தேன். இப்படி இன்னும் பலவிதமான மாற்றங்கள் வரலாம். வர வேண்டும்.

இன்றைக்கு யதார்த்த எழுத்து வகைமையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எதார்த்த வகை எழுத்தின் காலம் முடிந்துவிட்டது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஹாருகி முராகாமி போன்றவர்களைப் படித்தபோது எதார்த்த வகை எழுத்துக்கு இன்னும் ஆயுள் இருக்கிறது என்று தோன்றியது. ஆனால் ஒற்றைப் பரிமாண எழுத்தின் காலம் முடிந்துவிட்டது.

மேலும், எதார்த்த வகை எழுத்து எதில் நிலைகொண்டிருக்கிறது என்பது முக்கியம். நவீனத்துவத்தின் பக்கம் நிற்கிறது என்றால், அவ்வகையான எதார்த்த எழுத்துக்கு ஆயுள் இல்லை. அது இறந்தே பிறக்கும் சிசுவைப் போன்றது. பின்நவீனத்துவத்தை உள்வாங்கிக்கொண்ட எதார்த்த வகை எழுத்து என்றால், அது நீண்ட காலம் வாசிக்கப்படும். தமிழில் பெருந்தேவி, அராத்து போன்றவர்கள் உதாரணம்.

(உரையாடல் தொடர்கிறது… அடுத்த வாரமும்…)

 

தொடர்புடைய பேட்டிகள்

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி
அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு
நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி
ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டி
தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: சாரு
எழுத்துச் செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டி
தமிழ் லும்பனிஸத்தின் பிதாமகன் ரஜினி: சாரு
எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: சாரு
செக்ஸை எப்படி அணுகுவது? சாரு பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


1

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேம் ஆனந்த்வேலு கட்டுரைசமந்தாஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?நான் ஆற்றியிருக்கக்கூடிய உரை!தேர்தல் ஜனநாயகம்மாநிலத் தலைகள்: ரமண் சிங்சாலிகிராமம்வீர் சங்வி கட்டுரைஏக்நாத் ஷிண்டேமனோஜ் ஜோஷிஹார்மோன்திமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன?முரசொலி வரலாறுஎஸ்.அன்பரசு கட்டுரைபழுப்பு நிறப் பக்கங்கள்அகிம்சையை கொல்ல வேண்டிய தேவை என்ன?சமஸ் - கமல் ஹாசன்இரட்டைத் தலைமைநக்ஸலைட்கார்கே: காங்கிரஸின் புதிய நம்பிக்கைவரிதைவானை ஏன் இணைத்துக்கொள்ள துடிக்கிறது சீனா?கரிசல் கதைகள்டி.கே.சிங் கட்டுரைஎக்ஸைல்பயோடேட்டாதமிழ் இயக்கம்ஹோட்டல் ருவாண்டாதேசிய புள்ளிவிவர நாள்பால் உற்பத்தி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!