சர்வாதிகார நாடாகிறதா இந்தியா?
இந்தக் கேள்வியுடனான துருவ் ரத்தியின் (Dhruv Rathee) காணொலிக் காட்சியை (யூடியூப்) ஒரு வாரத்துக்குள் 160 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள் என்றால் நீங்கள் ஒன்றை நிச்சயமாக நம்பலாம்: இன்றைய இந்தியாவைப் பற்றிய நல்ல கேள்விதான் இது. இந்தக் கேள்விக்கு நல்ல பதில், நம்மிடம் இருக்கிறதா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.
காணொலியின் சிறப்பு?
இந்தக் காணொலியின் சிறப்பு என்னவென்றால், இதில் புதிதாக சம்பவங்களோ ஆவணங்களோ இடம்பெற்றுவிடவில்லை. அன்றாடம் செய்தித்தாள்களில் வரும் செய்திகளைத் தவிர வேறெதையும் கொண்டு இதை அவர் தயாரிக்கவில்லை. ஜனநாயகத்தை ஆதரிப்பவர்களும் - ஒவ்வொரு இந்தியரும் கவலைப்படும் வகையில், சம்பவங்களைத் தெளிவாக நினைவுகூர்வதாக இது அமைந்திருக்கிறது.
தேர்தல் நன்கொடை பத்திரங்கள், சண்டீகர் மேயர் தேர்தலில் சமீபத்தில் நடந்த தில்லுமுல்லு, மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அமல்பிரிவு இயக்குநரகம் (இ.டி.) எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த நடத்தும் திடீர் சோதனைகள், ஊடக சுதந்திரத்தின் வீழ்ச்சி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பழிவாங்கும் போக்கு, எதிர்க்கட்சி அரசுகளைத் திட்டமிட்டு கவிழ்ப்பது என்று இவை போன்ற நிகழ்வுகளைத்தான் தொகுத்திருக்கிறார். இருந்தாலும், பாஜக ஆதரவாளர்கள் கொந்தளித்து பதில் தரும்படியான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்.
காணொலியைத் தயாரித்தவருடைய நம்பகத்தன்மை, மோடியை எதிர்க்கும் சொல்லாடல்கள் இல்லாமை, நிகழ்வுகளை மிக எளிமையாகத் தொகுத்திருக்கும் விதம், எல்லோருக்கும் தெரிந்தவற்றை அடுக்கியிருப்பது, ஒன்றுடன் ஒன்றைத் தொடர்புபடுத்தும் பாங்கு ஆகியவைதான் இந்தக் காணொலிக்கு வலுசேர்த்திருக்கிறது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
‘உண்மை - கடந்த’ இந்தக் காலத்திலும் சாதாரணமான ஒரு கேள்விக்கு விடைபெற மேற்கொண்டுள்ள முயற்சி, உங்களுடைய சிந்தனையை வெகு தொலைவுக்கு இட்டுச் செல்லும்.
உடனே உங்களை எதிர்வினையாற்றச் செய்யும் தன்மை கொண்டதுதான் நல்ல கேள்விக்கு அடையாளம். ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற விடையை உடனே சொல்லத் தூண்டுகிறது இந்தக் கேள்வி. இந்தக் காணொலியைத் தயாரித்தவர் சொல்லாவிட்டாலும், இந்தியா சர்வாதிகாரப் பாதையில் போகிறது என்பதை அந்தத் தொகுப்பு தெரிவிக்கிறது. இந்த ஆட்சியை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் அப்படித்தான் பார்க்கின்றனர்.
இப்போதைய ஆட்சியை ‘சர்வாதிகாரம்’ என்று அடையாளம் காண்பது வெளிப்பார்வைக்கு அப்படியொன்றும் கடுமையான வகைப்படுத்தலும் அல்ல; ஆனால், அப்படிச் சொல்வது மிகையான விமர்சனமாகக் கருதப்படுவதால்தான் இந்த ஆட்சியால் அதிகக் கண்டனங்களுக்கு ஆளாகாமல் தப்பிக்க முடிகிறது.
சர்வாதிகாரம் – ஜனநாயகம்
‘சர்வாதிகார நாடாகிறதா இந்தியா?’ என்ற கேள்வி, ‘ஜனநாயகம்’ என்பதற்கான இலக்கணத்துக்கு இந்திய அரசியல் அமைப்பு இப்போது எப்படிப் பொருந்துகிறது என்று ஒப்பிட்டுப்பார்க்க வைக்கிறது. ஜனநாயகம் என்ற அமைப்புக்கான நியதிக்கும் நம் நாட்டில் நிலவும் நடைமுறைக்கும் இடையே உள்ள – மேலும் பெரிதாகிக்கொண்டேவரும் – இடைவெளியை நாம் நேருக்கு நேர் பார்க்க இந்தக் கேள்வி இட்டுச் செல்கிறது.
‘சர்வாதிகாரம்’ என்றால் அதன் இலக்கணமாக இருக்கும் ராணுவச் சட்ட அமல், பத்திரிகைத் தணிக்கை, தேர்தல் நடைபெறாமல் நிறுத்திவைப்பது, அரசமைப்புச் சட்டப்படியான உரிமைகளுக்குத் தடை என்பவை நினைவுக்கு வரும். இப்படியெல்லாம் இல்லையே என்று கூறி மோடியின் ஆதரவாளர்களால், ‘இந்தியா சர்வாதிகார நாடு அல்ல’ என்று வாதிட முடிகிறது.
அவர்களுடைய வாதத்தின் சாரம் இதுதான்: சர்வாதிகாரத்துக்கு உரிய அம்சங்களைக் காண முடிவதில்லை என்பதால், இது ஒரு வகையிலான ஜனநாயகம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
எனவே, இருப்பத்தோராவது நூற்றாண்டில் அரசியல் அறிவியலின் பாலபாடம் இதுதான்: ஜனநாயகம் அல்லாத அரசை சர்வாதிகார அரசு என்று கூறிவிட முடியாது. நாம் வாழும் இக்காலத்தில், ஜனநாயகமற்ற அரசுகளுக்கு, பழைய கால சர்வாதிகாரத்துக்கான அலங்காரங்கள், புற அடையாளங்கள் தேவைப்படுவதில்லை. இந்தப் பின்னணியில் நம் உள்ள கேள்வி, ‘நாம் இப்போதும் பலமான ஜனநாயக நாடாகத்தான் தொடர்கிறோமா?’
சர்வாதிகார ஆட்சிகள் – ஜனநாயகமற்ற எல்லா வகை அரசுகளையும் இப்படி அழைக்க முற்பட்டால் – மிகப் பெரிய அரசியல் வகைமை உள்ளவையாகிவிடும். சர்வாதிகார – எதேச்சாதிகார அரசுகள் பற்றிய தன்னுடைய நூலில் பேராசிரியர் ஜுவான் லின்ஸ், ஒப்பீட்டு அரசியல் நிபுணர் என்ற வகையில் இதுபற்றிய தொடக்க அறிமுகத்தைச் செய்துவைக்கிறார். ஆனால், இதன் பின்னணி அதற்குப் பிறகு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வகைகளில் மாற்றம் அடைந்துள்ளது.
அமெரிக்க – சோவியத் ஒன்றிய வல்லரசுகளுக்கு இடையிலான ‘பனிப்போர்’ காலம் முடிந்துவிட்டது, பிறகு சிறிது காலம் கோலோச்சிய சுதந்திரச் சிந்தனையாளர்களின் செல்வாக்கு, அனைத்து நாடுகளையும் முழுமையான ஜனநாயகத்துக்குத் திரும்புமாறு கூறிவிட்டு ஓய்ந்துவிட்டது. ஜனநாயகமற்ற நாடுகள் தங்களை அப்படி அழைத்துக்கொள்ளாத வரையில், ஜனநாயக நாடுகளாகவே நீடிக்கின்றன.
எனவே, ஜனநாயகம் – சர்வாதிகாரம் ஆகிய இரண்டின் அம்சங்களும் கலந்த கலப்பின அரசுகளையே அதிகம் காண்கிறோம். ‘கலப்பு’ என்பது இப்போதைய காலத்தில் எல்லாத் துறைகளிலும் சகஜமாகிவிட்டது.
என்ன சொல்கிறார்கள் அறிஞர்கள்?
‘போட்டி சர்வாதிகாரம்’ என்ற கலப்பின ஆட்சிமுறை குறித்து சிறப்பாகக் கூறியாக வேண்டும். ஸ்டீவன் லெவிட்ஸ்கி, லூகான் ஏ. வே என்ற இருவரும் இது தொடர்பாக ‘ஜனநாயகம்’ என்ற ஆய்வேட்டில் கட்டுரை வரைந்துள்ளனர். சர்வாதிகாரத்தில் இது ஒரு துணைப் பிரிவு. இங்கே சர்வாதிகாரிகள் ஜனநாயக நடைமுறைகள் அனைத்தையுமே ரத்துசெய்துவிட மாட்டார்கள்.
ஆனால், அதிகாரப்பூர்வமற்ற வகையில் நெருக்குதலையும் கட்டுப்பாடுகளையும் கையாள்வார்கள், ஜனநாயகத்தின் முறையான கட்டமைப்புகளை அப்படியே தொடர அனுமதிப்பார்கள். இதை ஜனநாயகத்தின் மோசமான வடிவம் என்று கூறிவிட முடியாது, இது சர்வாதிகாரத்தின் அரைகுறை வடிவமாகும்.
இங்கு முறையான ஜனநாயக அமைப்புகள் நீடிக்க அனுமதிக்கப்படுவதுடன் அவற்றின் மூலம் அரசியல் அதிகாரம் பெறப்பட்டு, செயல்படுத்தப்படும். ஜனநாயகத்துக்கான விதிகளை, ஆட்சியில் இருப்பவர்கள் அடிக்கடி மீறுவார்கள், எனவே குறைந்தபட்ச ஜனநாயகத் தரம்கூட அந்த ஆட்சியில் இருக்காது. தேர்தல்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும், தேர்தல்களிலும் பெருமளவு மோசடிகள் நடைபெறாது.
அதேசமயம், ஆட்சியாளர்கள் அரசின் வளங்களைத் தொடர்ந்து சுயநலத்துக்குப் பயன்படுத்துவார்கள், எதிர்க்கட்சிகளுக்கு ஊடக ஆதரவு போதிய அளவு கிடைக்காமல் பார்த்துக்கொள்வார்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் ஆதரவாளர்களையும் அலைக்கழிப்பார்கள், சில வழிகளில் தேர்தல் முடிவுகளைக்கூட மாற்றும் மோசடிகளில் ஈடுபடுவார்கள்” என்கின்றனர்.
இந்தக் கருத்துகள் இந்தியாவுக்கு எப்படிப் பொருந்தும் என்று பார்ப்பதற்கு முன்னால், இரண்டு துணை வகைகள் குறித்துப் பார்ப்போம். முழுமையற்ற ஜனநாயக முறையிலிருந்து, வெவ்வேறு ரகத்தில் ‘போட்டி சர்வாதிகார’ முறை தோன்றுகிறது. அதிகாரத்தை இழந்துவிடக்கூடிய ஆபத்து இல்லாமலேயே, ஜனநாயகம்தான் நிலவுகிறது என்று நம்பவைக்கும்படி ஜனநாயகத்துக்கு அடிப்படையான சில நிறுவனங்களின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்கிறது. கிர்கிஸ்தான், பொலீவியா, செர்பியா, நைஜீரியா, கென்யா, ஜிம்பாப்வே நாடுகள் இந்த வகையிலானவை.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
மக்கள் மீது திணிக்கப்படும் மௌனத்தால் தீராது பிரச்சினைகள்
13 Apr 2023
மோடி ஆட்சி எப்படியானது?
போட்டி சர்வாதிகாரத்தின் இன்னொரு வகையில் வலிமையான ஜனநாயக அமைப்புமுறையானது, எப்படியாகும் என்று ஊகிக்க முடியாத அரசியல் போட்டிகள் காரணமாக சர்வாதிகார அமைப்புக்கு மாறிவிடுகின்றன. ஹங்கேரி, பிலிப்பின்ஸ், துருக்கி, வெனிசூலா இதற்கு நடப்பு உதாரணங்கள். இங்கே ஆட்சியாளர்கள் முதலில் பெரும்பான்மை வலிமையுடன் ஆட்சிக்கு வருகிறார்கள், பிறகு பொதுக்கருத்துகள் மூலம் தங்களுடைய சட்டங்களுக்கு மக்களிடம் ஆதரவைப் பெற்று அரசமைப்புச் சட்டத்தையும் தேர்தல் சட்டத்தையும் நடைமுறைகளையும் மாற்றி எதிராளிகளை வலிமையிழக்கச் செய்கின்றனர் அல்லது தங்களுடைய ஆட்சியைத் தொடர வழிகாண்கின்றனர்.
லஞ்சம் தருவது, எதிர்ப்பவர்களில் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களைத் தங்களுடன் சேர்த்துக்கொள்வது, சிலரை தொடர்ந்து குறிவைத்து ஒழிப்பது, வரி ஏய்ப்பு சோதனைகள் என்ற பெயரில் நிம்மதி இழக்க வைப்பது, சொல்பேச்சைக் கேட்கும் நீதித் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது, இதர அரசு முகமைகள் மூலம் சட்டப்படியே அலைக்கழிப்பது, விமர்சகர்களையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் மிரட்டி ஒத்துழைப்பைப் பெறுவது என்று செயல்படுவது.
இவற்றில் பல அம்சங்கள் இந்தியாவிலும் இப்போது நிலவுகின்றன. புகழ்மிக்க அல்லது போற்றத்தக்க எந்த இந்திய ஜனநாயக அறிஞரும், மோடி தலைமையிலான அரசு ஜனநாயகமானதுதான் என்று விருப்பத்துடன் ஒப்புக்கொள்ள மாட்டார். ஜனநாயக நடைமுறைகள் இந்தியாவில் எந்தக் காலத்திலும் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்றாலும், ஜனநாயக நாடு என்பதற்கான குறைந்தபட்ச இலக்கணத்துக்கும் கீழே சரிந்துவிட்டது இன்றைய நிலை.
ஜனநாயகம் தொடர்பாக வரையறுக்கும் இரண்டு உலகளாவிய அமைப்புகளின் தரப்படுத்தல் இதைத் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகள் உருவாக்கிய இந்த உரைகல் முறை உண்மையை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல என்றாலும், ஒரே நாடு வெவ்வேறு காலகட்டங்களில் எந்த அளவுக்கு ஜனநாயகத்தைக் கடைப்பிடித்தது என்பதை அறிய இவை உதவுகின்றன. ‘இந்தியா ஓரளவுக்குத்தான் சுதந்திர நாடு’ என்று ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ என்ற அமைப்பு கூறுகிறது; ‘வி–டெம்’ என்ற அமைப்போ, ‘தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகார நாடு’ என்கிறது.
சுதந்திரமற்ற கருத்துகள், மக்கள் ஆதரவு, பேரினவாதம், இனவாத ஜனநாயகம், பாசிஸம் என்பவை இந்தியாவில் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதில்தான் இவ்விரு அமைப்புகளின் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றனவே தவிர, ‘இந்தியாவில் ஜனநாயகம் இல்லை’ என்பதில் அவர்கள் ஒத்துப்போகின்றனர்.
மக்களும் ஜனநாயகமும்
‘போட்டி சர்வாதிகாரம்’ என்ற புதிய கருதுகோள் இந்த வகையில் நமக்கு, நம்முடைய ஜனநாயகத்தன்மையை உணர உதவுகிறது. ஜனநாயகக் கட்டமைப்பு மாறவில்லை, அப்படியே நீடிக்கிறது, தேர்தல் களப் போட்டிகளும் கேலிக்கூத்தாகவில்லை, சில மோசடிகள் இருந்தாலும் ஆளுங்கட்சியும் அவ்வப்போது மாநிலங்களில் தோற்றுக்கொண்டிருக்கிறது.
அதேசமயம், ஜனநாயக அமைப்புகளின் தனித்தன்மை, சுதந்திரம், அதிகாரம் ஆகியவை திட்டமிட்டே தகர்க்கப்படுவதும் தொடர்கிறது. எனவேதான் ஜேம்ஸ் மனோர், ராகுல் முகர்ஜி போன்ற அறிஞர்களும் நானும் ‘போட்டி சர்வாதிகார வகையில்’ இந்தியா இருப்பதாகக் கூறுகிறோம். ‘போட்டி சர்வாதிகாரம்’ என்பது உலகமெங்கும் ஒரே மாதிரியான தன்மைகளுடன் இல்லை, நம் நாட்டில் நம் மண்ணுக்கே உரிய சில தனித்துவ அம்சங்களும் இதில் இருக்கின்றன.
அந்த தனித்துவ அம்சங்களில் ஒன்றுதான் நமக்கு நம்பிக்கையை ஊட்டிக்கொண்டிருக்கிறது. மேலே பார்த்த நாடுகளைப் போல அல்லாமல் இந்தியர்களின் மனங்களில் ஜனநாயக உணர்வு ஆழமாக வேரோடியிருக்கிறது. இந்திய மக்கள் நெருக்கடிநிலையைப் பார்த்தவர்கள், ஜனநாயகத்தை இழந்தவர்கள் – பிறகு அதை மீட்டவர்கள். ஜனநாயகம் என்றால் என்னவென்று அதன் சுவையை அனுபவித்த இந்தியர்கள் அதை மீண்டும் இழக்குமாறு விட்டுவிட மாட்டார்கள்.
துருவ் ரத்தியின் காணொலி இந்த அளவுக்குப் பிரபலமானதற்கு இதுவும் ஒரு காரணம்.
தொடர்புடைய கட்டுரைகள்
சர்வாதிகாரத்துக்கான சட்டங்கள்
சர்வாதிகார ஜனநாயகம்
பாசிஸம்: அருந்ததி ராய் முழுப் பேட்டி
அரசே வழக்காடி - மத்தியஸ்தர் - நீதிபதி!
மோடியின் இன்னோர் அவமானகரத் தோல்வி
தேசிய ஊழலை மறைக்கவே சிசோடியா கைது
மக்கள் மீது திணிக்கப்படும் மௌனத்தால் தீராது பிரச்சினைகள்
தமிழில்: வ.ரங்காசாரி
4
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.