கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

மோடிக்கு சரியான போட்டி கார்கே

சமஸ்
17 Jan 2024, 5:00 am
0

டெல்லியின் டிசம்பர் மாத இரவுகளின் பனி வெகு சீக்கிரம் இரவைக் கொண்டுவந்துவிடக் கூடியது. நாளெல்லாம் சால்வையோடு திரியும் மனிதர்கள் இரவுக் குளிருக்கு பயந்து இரவு 9 மணிக்கெல்லாம் படுக்கைக்குள் பதுங்கிவிடுவார்கள். 82 வயதான காங்கிரஸ் தலைவரின் வீட்டில் இந்தப் பனியிரவில் இரவு 2 மணிக்கும்கூட சில சமயங்களில் சந்திப்புகள் நடக்கின்றன. தேர்தல் நடக்கும் தொலைதூர ஊர்களிலிருந்து வரும் நிர்வாகிகளையோ, பத்திரிகையாளர்களையோ இடைவிடாது சந்திக்கிறார் கார்கே. இந்த வகையிலும் நேருவின் மரபுத் தொடர்ச்சி என்று அவரைக் குறிப்பிடலாம். "ஓய்வு நமக்கு அனுமதிக்கப்படாதது" என்பார் நேரு.

டெல்லியில் நடந்த ‘இந்தியா கூட்டணி’ கூட்டத்தில் பங்கேற்ற தலைவரிடம் இரு வாரங்களுக்குப் பின் பேசிக்கொண்டிருந்தேன்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கூட்டம் நிறைவுறும் தருணத்தில்தான் அதுபற்றிப் பேசினார் என்றார். “மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஒருவர் முன்னிறுத்தப்படுவது அவசியம். நான் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்பட சில தலைவர்களுடன் ஆலோசனை கலந்தேன். பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே நல்ல சவாலாக இருப்பார் என்று மம்தா குறிப்பிட்டார். இதற்குப் பின் இதுகுறித்து யாரும் விவாதிக்கவில்லை. நிறைவாக கார்கே பேசினார். பிரதமர் முகம் யார் என்ற விவாதம் இப்போது தேவையற்றது; நாம் 2024 தேர்தலில் வெல்ல வேண்டும்; அதுதான் முன்னுரிமை; பிரதமர் யார் என்பதை எல்லாம் தேர்தலுக்குப் பின் முடிவெடுக்கலாம் என்று கார்கே குறிப்பிட்டார்” என்று என்னிடம் அந்தத் தலைவர் சொன்னார்.

சரியான யாக்கர்

மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டணி இதுவரை நடத்திய கூட்டங்களிலேயே பேசப்பட்ட முக்கியமான விஷயமாக இதுதான் எனக்குத் தோன்றியது. கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டியது இதற்கு முன் நிகழ்ந்த ஒரு ஸ்கூப்தான் என்றாலும், கார்கே பிரதமர் முகமாக அறிவிக்கப்பட்டிருந்தால், அது பாஜகவுக்கு எதிரான யாக்கராக இருந்திருக்கும்.

துரதிருஷ்டம் என்னவென்றால், இதுகுறித்து மேலதிகம் விவாதிக்காமல் காங்கிரஸ் அப்படியே கடந்து சென்றதுதான். காங்கிரஸுக்கு வெளியிலிருந்து காங்கிரஸ் தலைவரை முன்மொழிந்து வந்த குரல் முக்கியமானது. 2019 தேர்தலிலும் இதே தவறை காங்கிரஸ் செய்தது. அப்போது இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அன்றைக்கு காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தியை பிரதமர் முகமாக முன்மொழிந்தார். “தேர்தலுக்குப் பின் பிரதமர் யார் என்று பேசிக்கொள்ளலாம்” என்று இதே பாட்டைத்தான் அப்போதும் காங்கிரஸ் பாடியது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மோடியின் வருகைக்குப் பின் இந்தியப் பொதுத் தேர்தல் அதிபர் தேர்தல் மாதிரி மாறிவிட்டிருக்கிறது. 2014, 2019 இரு மக்களவைத் தேர்தல்களிலுமே காங்கிரஸ் தன்னுடைய பிரதமர் முகத்தை அறிவிக்கவில்லை. களத்தில் இது எந்த நல்ல விளைவையும் உண்டாக்கவில்லை. 2024 தேர்தலிலும் அதே தவறைச் செய்தால், இம்முறையும் மோடி சிவப்புக் கம்பள விரிப்பில் நடக்கவே அது வழிவகுக்கும்.

நான் தொடர்ந்து இதை வலியுறுத்திவருவதை ‘குமுதம்’ வாசகர்களுக்கு நினைவூட்டுகிறேன். கார்கே மிகச் சிறந்த போட்டியாக மோடிக்கு அமைவார். மோடியின் பிம்பத்தை அசைப்பதில் முக்கியமாக மூன்று விதங்களில்!

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

கார்கே: காங்கிரஸின் நம்பிக்கை எடுபடுமா?

சமஸ் 05 Nov 2022

தந்தைமைப் பிம்பம்

மோடி தனக்கு இன்று ஒரு தந்தைமை ஸ்தானத்தை உருவாக்கியிருக்கிறார். ராகுல் 53 வயதைக் கடந்துவிட்டாலும்கூட தொடர்ந்தும் அவரை ‘பப்பு’, ‘குழந்தை’ என்று பாஜக சாடுவதன் பின்னணி ராகுலைக் கேலிக்குள்ளாக்குவது மட்டுமே அல்ல. மோடியை முதிர்ச்சியின் வெளிப்பாடாகவும் ராகுலை விடலையின் வெளிப்பாடாகவும் தொடர்ந்து சித்திரிக்க இது அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது.

மோடிக்கு 73 வயதாகிறது என்றால், கார்கேவுக்கு 81 வயதாகிறது. மோடியைப் போன்றே கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். தோற்றத்திலேயே தந்தைமை ஸ்தானத்தை இயல்பாக எடுத்துக்கொள்ளக் கூடியவர். மோடியைப் போன்றே கார்கேவும் தீவிரமான உழைப்பாளி. பல சமயங்களில் நள்ளிரவு 2 மணி வரை பிராந்திய தலைவர்களை அவர் தன் வீட்டில் சந்திக்கிறார். வயது அவருக்கு ஒரு தடையாக இல்லை.

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

சாமானியர் பிம்பம்

பாதிப்புக்குள்ளான ஒரு பிம்பத்தை மோடி பராமரித்துவருகிறார். ஏழை, மிக சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர், பிற்படுத்தப்பட்டவர், கட்சியில் அடிநிலையிலிருந்து வளர்ந்துவந்தவர்… இப்படி மோடி தன்னைப் பற்றி உருவாக்கிய கதைகள் பாஜக சாமானியர்களுக்கான கட்சி எனும் தோற்றத்தைக் கட்டமைக்கவும் உதவியது. ‘பிராமண – பனியா கட்சி’ எனும் அதன் பழைய பெயரை உடைக்க உதவியது.

கார்கே இந்தக் கதையாடலைச் சிதறடிக்க காங்கிரஸின் சரியான பதிலடியாக அமைவார். ஏற்கெனவேவும் கார்கே அப்படிப் பேசுகிறார். “நான் ஒரு தலித். நானும் சாதாரண குடும்பத்திலிருந்துதான் வந்திருக்கிறேன். அரசியல்ரீதியாக மோடி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இப்படியான சுயபச்சாத கதைகளைப் பேசி எதிர்கொள்வதை மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கார்கே பேசுவது மக்களிடம் நன்கு எடுபடுகிறது. தேசிய அளவில் இதை இந்தியா கூட்டணி பயன்படுத்த கார்கே தேர்வு உதவும்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

செயல் வீரர் கார்கே: செயல்பட விடுவார்களா?

வ.ரங்காசாரி 25 Oct 2022

சித்தாந்தர் பிம்பம்

சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ‘இந்துத்துவ நாயகர்’ எனும் ஆகிருதியை இன்று மோடி உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் பேசும் சித்தாந்தத்தில், அவர் முன்வைக்கும் இந்தியா எனும் கற்பனையில் அவருக்குள்ள உறுதிபாட்டிலிருந்தே இந்தப் பிம்பம் உருவாகியுள்ளது. எதிரே ‘பன்மைத்துவ நாயகர்’ எனும் ஆகிருதி வேண்டுமா, இல்லையா?

இன்று இந்தியா கூட்டணியில் அமைந்துள்ள 28 கட்சிகளிலும் சரி; காங்கிரஸில் உள்ள எண்ணற்ற தலைவர்களிலும் சரி; கார்கே அளவுக்குத் தீவிரமான சித்தாந்தத் தெளிவு, பிடிமானமும் கொண்ட ஒரு தலைவர் நம் கண் முன் தெரியவில்லை. இளவயதிலேயே மதவாதத்துக்குத் தன்னுடைய தாயையும் தீக்குப் பறிகொடுத்தவர் அவர். கார்கே பேசும் ‘பன்மைத்துவ அரசியல்’ அவருடைய நேரடி வாழ்வின் சாட்சியம்.

ஒருங்கிணைக்கும் தலைவர்

காங்கிரஸுக்குத் தலைமையேற்ற இந்த ஓராண்டில் கட்சிக்குள் பல ஆக்கபூர்வ மாற்றங்களை கார்கே கொண்டுவந்திருக்கிறார். தலைமை அலுவலகம் உத்வேகத்துடன் இயங்குகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் நிர்வாகிகளுடைய குரல்கள் கேட்கப்படுகின்றன. கோஷ்டிகள் இடையேயான பிரச்சினைகள் களையப்படுகின்றன. ‘ஒவ்வொரு ஊரிலும் கட்சிக் கிளைகளை வலுப்படுத்துங்கள்!’ என்று கட்சிக் கட்டமைப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. தேவையான உதவிகள் கிடைக்கின்றன. காங்கிரஸின் முதல் குடும்பத்துடன் கார்கேவுக்கு உள்ள நெருக்கமான உறவும் அவர்கள் இவருக்குத் தரும் ஆதரவும் இதைச் சாத்தியமாக்கியுள்ளன.

காங்கிரஸில் மட்டும் அல்லாது, இந்தியா கூட்டணிக்குள்ளும் முரண்பாடுகளைக் களைய கார்கேவால் முடியும் எனும் நம்பிக்கையை இந்த ஓராண்டு அனுபவங்கள் நமக்குத் தருகின்றன. காங்கிரஸுடைய வரலாற்றில் ஒரேயொரு ஆண்டுதான் தலைமைப் பொறுப்பில் இருந்தார் காந்தி. 1924. சரியாக அதன் நூற்றாண்டில் கார்கே தலைமையில் இருப்பது சாலப் பொருத்தமானது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?

சமஸ் 19 Dec 2023

இந்தியாவுக்கு ஒரு நல்வாய்ப்பு

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தி பேசும் மாநிலங்களின் ஆதிக்கம் பாஜகவின் இந்த ஆட்சிக் காலகட்டத்தில் விசுவரூபம் எடுத்திருக்கிறது. குஜராத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், உத்தர பிரதேசத்திலிருந்துதான் மக்களவைக்கு மோடி போட்டியிடுகிறார்; பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்கிறார். இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து கார்கே போன்ற ஒருவர் எதிரே நிற்பது, இந்தியாவின் பிராந்திய சமநிலை பிரதிநிதித்துவத்தைப் பறைசாற்றுவதாக அமையும். கன்னடம் தாய்மொழி என்றாலும், இந்தி, உருது, மராத்தியிலும் பேச வல்லவர் அவர். தெற்கின் நல்லெண்ணெத்தை நாடு முழுமைக்கும் அவரால் கடத்த முடியும்.

இந்திய மக்கள்தொகையில் ஆறில் ஒருவர் தலித் – சரியாகச் சொல்வதானால், 16% பேர். பன்னெடுங்காலமாக தலித்துகளுக்கு எதிராக ஒடுக்குமுறையைக் கையாண்ட இந்தியச் சமூகம், நாட்டின் முடிவுகளைத் தீர்மானிக்கும் பதவியில் கார்கேவை அமர்த்துவதன் மூலம் தன்னையே மீட்டுருவாக்கிக்கொள்ளும் சாத்தியத்தில் கால் பதிக்க முடியும். தலித்துகள் மட்டும் அல்லாது பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர் என்று விளிம்புநிலையில் உள்ள பகுஜன்கள் மத்தியில் ஓர் ஊக்கத்தை உண்டாக்க முடியும்.

தேர்தல் களத்திலும் இது காங்கிரஸுக்கு நல்ல விளைவுகளைத் தரும். இந்தி மாநிலங்களில் 2014, 2019 இரு தேர்தல்களிலும் பாஜகவுக்குப் பெரும் பலமாக இருந்தது முற்பட்ட சாதியினர். 2019 தேர்தலில் இந்தி மாநிலங்களில் தனித் தொகுதிகள் நீங்கலான 147 தொகுதிகளில் 88 தொகுதிகளை முற்பட்டோருக்கு பாஜக ஒதுக்கியது. இந்தி மாநிலங்களில் தலித்துகள் வலுவான வாக்குவங்கியைக் கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியாக காங்கிரஸ் சார்ந்து வாக்களித்துவந்த அவர்கள் இன்று பாஜக நோக்கி நகர்ந்துவிட்டார்கள். மீண்டும் அவர்களைத் தம் திசை நோக்கி காங்கிரஸ் இழுக்க கார்கே முடிவு வழிவகுக்கும்.

கார்கேவுடைய வாழ்வைப் பேசும் நூல் வெளியீட்டில் பங்கேற்ற சோனியா காந்தி, “இந்தியாவின் ஆன்மா மீது நடக்கும் போரில் காங்கிரஸுக்குத் தலைமை ஏற்க மிகவும் பொருத்தமானவர் கார்கே” என்றார். காங்கிரஸுக்கு மட்டும் அல்ல; இந்தியாவுக்குத் தலைமை ஏற்கவும் இன்று கார்கேவைக் காட்டிலும் பொருத்தமானவர் இல்லை!

- ‘குமுதம்’, ஜனவரி, 2024

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

கார்கே: காங்கிரஸின் நம்பிக்கை எடுபடுமா?
செயல் வீரர் கார்கே: செயல்பட விடுவார்களா?
இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


9

4

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆட்சிதைராய்டு குறைவாகச் சுரப்பது ஏன்?சமூக நீதிமஹாராஷ்டிரம்மறுவினைநிலக்கரி இறக்குமதிஒன்றியப் பட்டியல்இந்திய அரசியலர்பத்திரிகையாளர் கலைஞர்ஆர்.என்.சர்மாநியமன நடைமுறைகாலை உணவுத் திட்டம்புஸ்டிதொல்.திருமாவளவன்ஊடகர் கருணாநிதிமார்க்ஸிஸ்ட் கட்சிdr ganesanசவிதா அம்பேத்கர் கட்டுரைஉழவர் விருதுஃபேஸ்புக்வறுமை ஒழிப்புகுருமூர்த்தி: ராஜிநாமா செய்ய வேண்டும்!புகலிடமாகிய நுழைவுத் தேர்வுஜன் சுராஜ்கர்ப்ப காலம் பிறகு…மொழிச் சிக்கல்புதிய அடையாளம்பாபுறநானூறு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!