கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை 4 நிமிட வாசிப்பு

பாஜக எப்படி வெல்கிறது? முதல்வர்களைக் கவனியுங்கள்!

சமஸ் | Samas
14 Dec 2023, 5:00 am
0

பஜன்லால் சர்மா (இடது), விஷ்ணு தியோ சாய், மோகன் யாதவ் (வலது).

ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு பஜன்லால் சர்மாவை வசுந்தரா ராஜே முன்மொழிந்த தருணத்தில், வெளியே அதிகம் பேசப்படாத இன்னொரு வெற்றியை பாஜகவுக்குள் பிரதமர் மோடி அடைந்தார் என்று சொல்லலாம்.

ராஜஸ்தானில் பாஜகவின் முகம் வசுந்தரா ராஜே – இரண்டு முறை முதல்வர். அப்படித்தான் சத்தீஸ்கரில் ரமன் சிங் – மூன்று முறை முதல்வர்; மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகான் – நான்கு முறை முதல்வர்.

மூன்று மாநிலங்களிலுமே ஜாம்பவான்களை ஓரங்கட்டிவிட்டு, புதியவர்களை முதல்வர் பதவிக்குக் கொண்டுவந்திருக்கிறது பாஜக.

மூன்று மாநிலங்களிலுமே முதல்வரோடு, இரு துணை முதல்வர்கள் எனும் சூத்திரத்தைக் கொண்டுவந்திருக்கும் பாஜக, சமூகரீதியாக கவனமான கணக்குகளுடன் காய்களை நகர்த்தியுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் எனும் ‘பகுஜன் அரசியல் குரல்கள்’ மேலெழும் காலகட்டத்தில், பாஜகவின் இந்நகர்வு முக்கியமானது. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சத்தீஸ்கரில் பழங்குடி

முதல்வர் விஷ்ணு தியோ சாய் (59), பழங்குடி சமூகப் பின்னணியைக் கொண்டவர். மக்கள்தொகையில் 31% பேர் இங்கு பழங்குடிகள். சத்தீஸ்கரின் முதல்வர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகப் பேசப்பட்ட முதல் தேர்தல் இது. மூன்று முறை ஏற்கெனவே ஆட்சியில் இருந்திருக்கும்போதிலும், பாஜக இம்முறை இதுவரை இல்லாத அளவுக்குப் பெரிய வெற்றியைப் பெற பழங்குடி சமூகத்தினர் தந்த ஆதரவு முக்கியமான காரணம்.

விஷ்ணு சாய் கட்சியின் மாநிலத் தலைவராக இரு முறை இருந்ததுடன், மத்திய அமைச்சராக இருந்தவர், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர்.

துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் அருண் சாஹு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், மாநிலத்தில் 42% பேர் இந்த வரையறைக்குள் வருபவர்கள்; விஜய் சர்மா, முற்பட்ட சமூகத்தைச் சேர்தவர், பிராமணர்.

மூத்த தலைவரான ரமன் சிங் – இவர் தாக்கூர் - சபாநாயகர் பதவிக்கு நகர்த்தப்பட்டிருப்பதால், முற்பட்ட சமூகத்தினர் அதிருப்திக்குள்ளாவதைத் தவிர்க்கும் வகையில், அங்கிருந்தும் ஒருவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

சத்தீஸ்கரில் விஷ்ணு சாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, உள்ளூரில் காங்கிரஸிடமிருந்து பாஜக நோக்கி வந்திருக்கும் பழங்குடி மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மரியாதை என்பதோடு, பழங்குடிகள் அதிகம் வசிக்கும் அண்டை மாநிலங்களான ஒடிஷா, ஜார்கண்ட் மாநிலங்களிலும் தாக்கத்தை உண்டாக்கக் கூடியது.

மத்திய பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டவர்

முதல்வர் மோகன் யாதவ் (58), யாதவ சமூகப் பின்னணியைக் கொண்டவர். மக்கள்தொகையில் 48% பேர் இங்கு பிற்படுத்தப்பட்டோர். பாஜக இரு தசாப்தங்களாகத் தன்னுடைய செல்வாக்கில் மாநிலத்தை வைத்துக்கொள்ள பிற்படுத்தப்பட்டோரின் பெரும்பான்மை ஆதரவு முக்கியமானது.

மோகன் யாதவ் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் என்பதோடு, கட்சிப் பணியில் தீவிரமாகப் பங்காற்றியவர். துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜெகதீஷ் தேவ்டா, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்; மாநில மக்கள்தொகையில் 17% தலித்துகள் பங்கு வகிக்கிறார்கள்; ராஜேந்திர சுக்லா, முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்; பிராமணர்.

மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, உள்ளூரில் கமல்நாத், திக்விஜய் சிங் என்று இதுவரை முற்பட்ட சமூகத் தலைவர்களையே முன்னிறுத்திவந்த காங்கிரஸுக்கான எதிர்வினை என்பதோடு, யாதவர்கள் அதிகம் வசிக்கும் அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், பிஹாரிலும் தாக்கம் செலுத்தக் கூடியது.

ராஜஸ்தானில் பிராமணர்

முதல்வர் பஜன்லால் சர்மா (51), முற்பட்ட சமூகப் பின்னணியைக் கொண்டவர் – பிராமணர். மக்கள்தொகையில் 7% பேர் மட்டுமே இங்கு பிராமணர்கள் என்றாலும், மாநிலத்தில் தீவிரப் போட்டி மிக்க மூன்று பெரும்பான்மைச் சமூகங்களான ராஜபுத்திரர்கள், ஜாட்டுகள், குஜ்ஜர்கள் இடையே சமநிலை பேண பாஜகவுக்கு இந்தத் தேர்வு உதவும். மூன்று சமூகங்களுமே பெருமளவில் பாஜகவின் பாரம்பரிய வாக்கு வங்கிக்குள் வரக் கூடியவை.

மத்திய பிரதேசத்தின் குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் மஹாராஷ்டிர பின்னணியில் வளர்ந்தவருமான வசுந்தரா ராஜே அடிப்படையில் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர். ராஜஸ்தானுக்கு மருமகளாக வந்தவர். எதிரே காங்கிரஸின் முகமாக இருந்த அசோக் கெலட் எண்ணிக்கையில் சிறுபான்மையான மாலி சமூகத்தைச் சேர்ந்தவர். ஆகையால், சென்ற கால் நூற்றாண்டு காலமாக பாஜக – காங்கிரஸ் இரண்டுமே பெரும்பான்மைச் சாதிகளின் அதிகாரப் போட்டியிலிருந்து இங்கே தப்பித்தன. இப்போது வசுந்தரா ராஜேவுக்கு விடை கொடுக்கும் நிலையில், அதே அரசியலை பஜன்லால் சர்மாவை வைத்து விளையாட முற்படுகிறது பாஜக.

பஜன்லால் சர்மா முதல் முறை சட்டமன்ற உறுப்பினர். அதேசமயம், ஆர்எஸ்எஸ் அமைப்புப் பணிகளிலும் கட்சிக் கட்டமைப்புப் பணிகளிலும் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் திவ்யா குமாரி, ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர், அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரேம்சந்தர் பைரவா, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். மாநில மக்கள்தொகையில் ராஜபுத்திரர்கள் 10% அளவுக்கும், தலித்துகள் 17% அளவுக்கும் இருக்கிறார்கள்.

ராஜஸ்தானில் பஜன்லால் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உள்ளூர்ச் சமன்பாடுகளுக்கு அப்பால், நாடு முழுவதும் தனக்கு அடித்தள பலம் தரும் முற்பட்ட சமூகத்தினர் இடையேயான ஆதரவை பாஜக வலுப்படுத்திக்கொள்ளும் நகர்வு.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

கோட்டா கச்சோடி

சமஸ் | Samas 13 Dec 2023

கட்சியின் புத்துயிர்ப்பும் மோடியின் வெற்றியும்

சமூக பிரதிநிதித்துவத்தில் பாஜக காட்டும் கவனம் என்பதைத் தாண்டி, மத்தியில் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்ட ஒரு கட்சி தன்னளவில் அதிகாரத்தில் உறைந்துவிடாது தடுக்கும் உத்தியாகவும் அதன் புதிய முதல்வர்கள் தேர்வைப் பார்க்கலாம்.

மூன்று முதல்வர்களுமே சாதாரணப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். சித்தாந்த பிடிமானம் கொண்டவர்கள். கட்சியின் களச் செயல்பாட்டில் தீவிரப் பணியாற்றியவர்கள். ஜாம்பவான்கள் இன்னும் களத்தைக் கைவிட்டுவிடவில்லை என்பதோடு, துணை முதல்வர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் போட்டியில் உடன் இருப்பதால், புதிய முதல்வர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும். கட்சியை இது புத்துயிர்ப்போடு வைத்திருக்கும்.

மூன்று மாநிலங்களிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே ஜாம்பவான்களை ஒதுக்கியும் பெரும் வெற்றியை பாஜக அடைந்திருப்பது, கட்சிக்குள் மோடியின் இன்னொரு வெற்றியையும் குறிக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை வெற்றி எளிதாகக் கிடைத்துவிடும் என்று பாஜக நம்பவில்லை. 2019 தேர்தலில் அது பெற்ற 303 இடங்களே இதுவரை அது பெற்ற வெற்றிகளில் உச்சமானது. மக்களவையில் 272 எனும் தனிப் பெரும்பான்மை எண்ணிக்கையைக் காட்டிலும் இது 31 இடங்கள் மட்டுமே அதிகம்.

இத்தகு வெற்றியை பாஜக பெற இந்தி பேசாத மாநிலங்களில் அதுவரை இல்லாத அளவுக்கு அது பெற்ற வெற்றிகள் முக்கியம். இந்தி பேசும் மாநிலங்களில் 188 இடங்களை வென்றாலும், எதிர்க்கட்சிகள் வலுவாக உள்ள கர்நாடகம் (23/28), மஹாராஷ்டிரம் (23/48), வங்கம் (18/42), ஒடிஷா (8/21) என்று இந்தி பேசாத மாநிலங்களில் அது வென்ற 115 இடங்களே பாஜகவின் உச்ச எண்ணிக்கைக்கு வழிவகுத்தன.

இந்தி பேசாத மாநிலங்களில் போட்டி கடுமையாக உள்ள நிலையில், 2024 தேர்தலில் தனிப் பெரும்பான்மைக்குக் கீழே பாஜக செல்லலாம். அப்படிச் சென்றாலும், தேர்தலுக்குப் பிறகும் கட்சி மோடியினுடைய கைகளிலேயே இருப்பதை இந்த நகர்வுகள் உறுதிசெய்யும். 

புதிய முதல்வர்கள் அடுத்த ஐந்தாண்டுகளை நகர்த்த மோடியின் பின்புலம் அவர்களுக்குத் தேவை. ஆகையால், வரவிருக்கும் காலங்களில் மோடிக்குப் பின்னால் இவர்கள் உறுதியாக நிற்பார்கள். சென்ற முறை ஒருவேளை பாஜக தனிப் பெரும்பான்மை பெறாவிட்டால், நிதின் கட்கரி தலைமையில் கூட்டணியரசை அமைக்கலாம் எனும் வியூகம் ஆர்எஸ்எஸ் முகாமுக்குள் பேசப்பட்டதை இங்கு நினைவுகூர்ந்தால், அத்தகு சூழலை முன்கூட்டி எதிர்கொண்டிருக்கிறார் மோடி எனலாம்.

பெரிய சூதாட்டம்

மூன்று மாநிலங்களிலுமே மோடியின் முகத்தையே பாஜக முன்னிறுத்தியது. பாஜக தோற்றிருந்தால், நிச்சயம் மோடியின் பெயர் அடிபட்டிருந்திருக்கும். பெரிய சூதாட்டம்தான் இது. ஆனால், மோடி ஜெயித்திருப்பதையும், அவருடைய செல்வாக்கு மூன்று மாநிலங்களிலுமே கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்திருப்பதையும் ‘லோக்நிதி-சிஎஸ்டிஎஸ்’ உள்ளிட்ட நிறுவனங்கள் மக்கள் இடையே நடத்திய ஆய்வுகள் சொல்கின்றன.

2024 தேர்தலில் பாஜகவை முழுக் கட்டுப்பாட்டில் மோடி வைத்திருப்பதை உறுதிபடுத்துவதோடு, தேர்தலுக்குப் பின்னரும் கட்சிக்குள் - வாஜ்பாய், அத்வானி போன்று - கையோடு மோடியின் இடத்தைக் குறுக்கிட முடியாது என்பதையும் சேர்த்தே இந்த நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன!

- ‘தினமலர்’, டிசம்பர், 2023

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

கோட்டா கச்சோடி
ராஜஸ்தானின் முன்னோடித் தொழிலாளர் சட்டம்
வாக்கு வித்தியாசத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்
தேர்தல் இலக்கணத்தை மாற்றும் மோடி
காங்கிரஸ் வீழவில்லை; மோடி வென்றிருக்கிறார்: சமஸ் பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4


கோட்ஸேடாலர்ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்?உளவியல்சட்ட நிர்ணய சபைசியாமா பிரசாத் முகர்ஜிஃபின்லாந்துதலைமைப் பண்புராஜேஷ் அதானிகுடும்பத் தலைவிகள்ஏ.ஏ.தாம்சன்அஞ்சலிக் குறிப்புபிறந்த நாள்நிதி மேலாண்மைபழ. நெடுமாறன்இலவசம்அறத்தின் குரல்பரம்பரைக் கோளாறுசைபர் சாத்தான்கள் – இணைய மோசடிகளும்பத்தாம் வகுப்புஜெ.பிரசாந்த் பெருமாள் கட்டுரைஎன்னால் என்னுடைய சாதியை மாற்றிக்கொள்ள முடியாதுடிஸ்ட்டோப்பியாகிராமமாஆசிஷ் ஜா: பிஹாரின் சமீபத்திய கௌரவம்நம் மாணவர்கள்?எருமைப் பொங்கல் முடியாதா?குஜராத் மாநிலம்வழிபாட்டுத் தலம் அல்ல

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!