கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?

சமஸ்
19 Dec 2023, 5:00 am
0

போபாலிலிருந்து பாஜக ஏறுமுகத்தில் இருக்கும் செய்திகள் வெளியானபோதே டெல்லியில் தேர்தல் பண்டிதர்கள் உற்சாகம் அடைந்துவிட்டார்கள். ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் எந்த மாநில முடிவைவிடவும் மத்திய பிரதேச தேர்தல் முடிவு பாஜகவுக்கு உத்வேகத்தைத் தந்தது உண்மை.

ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் கிடைத்த வெற்றிக்கு, அங்கே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு மீதான அதிருப்தி முக்கியமான காரணமாக இருந்தது. மத்திய பிரதேசத்தில் அப்படி இல்லை. அது பாஜக ஆட்சியில் இருந்த மாநிலம். அதுவும் இடையில் 2018-2020 வரையிலான இரு ஆண்டுகள் நீங்கலாக 2003 முதலாக பாஜக ஆட்சியில் தொடரும் மாநிலம். முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் நான்கு முறை அங்கே தொடர் அதிகாரத்தில் நீடித்ததால், அரசு மீது அதிருப்தி இருப்பதை பாஜகவின் டெல்லி தலைமை அறிந்திருந்தது. வலுவான அடித்தளக் கட்டமைப்பை பாஜக கொண்டிருந்தாலும், இந்த அதிருப்தி தன்னை வீழ்த்திவிடலாம் என்பதால், இந்த முறை சிவராஜ் சிங் சௌகானை முன்னிறுத்தாமல் மோடி முகத்தையே தேர்தலில் முன்னிறுத்தியது.

மத்திய பிரதேச வாக்காளர்களுக்கு மோடி கடிதம் எழுதினார். ‘மத்திய பிரதேசத்தின் இதயத்தில் மோடி இருக்கிறார்’ என்பதே பாஜக அங்கு எழுப்பிய கோஷம். மொத்தம் 230 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தை இருபதாண்டுகளுக்குப் பிறகும், 163 இடங்களைப் பெற்று வென்றதைவிடவும் மொத்த ஓட்டுகளில் 48.5% ஓட்டுகளைப் பெற முடிந்ததும், முந்தைய சட்டமன்றத் தேர்தல்கள் எதைக் காட்டிலும் இது அதிகம் என்பதும் நாட்டின் மத்திய பகுதியில் இது நடந்திருப்பதும் பாஜகவின் மகிழ்ச்சிக்கு முக்கியமான காரணம்.

மாநிலத்தில், மோடியின் செல்வாக்குப் பெரிய வீழ்ச்சிக்குள்ளாகாமல் நீடிப்பதை இது உணர்த்துவதாக பாஜகவினர் கருதுகிறார்கள். இங்கு மட்டும் அல்லாது, ராஜஸ்தான், சத்தீஸ்கரிலும்கூட மோடி விஷயத்தில் இதே அலைவரிசை பிரதிபலித்திருக்கிறது. வாக்காளர்களில் மத்திய அரசு மீதான அதிருப்தியைத் தெரிவித்திருப்பவர்கள் எண்ணிக்கை 50% வரையறைக்குள் இருப்பதை ‘லோக்நீதி - சிஎஸ்டிஎஸ்’ ஆய்வுகளும் உறுதிபடுத்துகின்றன. இதே சூழல் நீடித்தால், 2024 மக்களவைத் தேர்தலை பாஜக எளிதாக வென்றுவிடலாம் என்பதே அவர்கள் பொதுவெளியில் கட்டமைக்க விரும்பும் பிம்பம். தவிர, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’யைச் சிதறடிக்கவும் இது உதவும் என்று நம்புகிறார்கள்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சூழல் பாஜகவுக்கு அவ்வளவு சாதகமாக இல்லை. புல்வாமா தாக்குதலின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட தேசியவாத அலையின் பின்னணியில் நடந்த 2019 மக்களவைத் தேர்தலிலேயே பாஜகவால் 303 இடங்களைத்தான் வெல்ல முடிந்தது; மக்களவையில் பெரும்பான்மைக்குரிய 274 எனும் எண்ணிக்கையோடு ஒப்பிட இது 31 இடங்கள் மட்டுமே அதிகம்; பாஜகவின் வரலாற்றிலேயே இந்த வெற்றிதான் பெரியது; சென்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணியில் இருந்த பெரிய கட்சிகள் எதுவுமே இப்போது அதனுடன் இல்லை என்ற பின்னணியில் இந்த முறை தனிப் பெரும்பான்மையைப் பெறுவது எவ்வளவு பெரிய சவால் என்பது எவரைவிடவும் பாஜகவுக்குத் தெரியும்.

காங்கிரஸ் வெற்றி பெற்ற பெரும்பான்மைத் தேர்தல்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அது தொகுதிகளை வென்றவை. பாஜகவின் 303 அப்படி கிடையாது. இந்தி மாநிலங்களில் உள்ள 225 தொகுதிகளில் 188 இடங்களை வென்ற அது இந்தி அல்லாத மாநிலங்களின் 318 தொகுதிகளில் 115 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இந்த 115 இடங்களில் அதற்கு 23/28 கொடுத்த கர்நாடகம்; 6/17 கொடுத்த தெலங்கானா; 18/42 கொடுத்த வங்கம்; 23/48 கொடுத்த மஹாராஷ்டிரம்; 26/26 கொடுத்த குஜராத்; 8/21 கொடுத்த ஒடிஷா; 9/14 கொடுத்த அஸாம் என எங்குமே முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிகமாகவோ இணையாகவோ பெறும் சூழல் இல்லை. தவிர, இந்தி மாநிலங்களிலும் 17/40 கொடுத்த பிஹார், 12/14 கொடுத்த ஜார்கண்டில் முந்தைய சூழல் இல்லை. இத்தகைய கணக்கில் 274 எனும் தனிப் பெரும்பான்மை எண்ணிக்கை பாஜகவுக்குப் பெரும் சவால் என்பதே நிதர்சனம்.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

உதயமாகட்டும் கூட்டாட்சி இந்தியா

சமஸ் 19 Jul 2023

இத்தகைய சூழலிலும் இந்தியா கூட்டணி நம்பிக்கையோடு 2024 தேர்தலை வெல்லும் என்று சொல்லும் சூழல் இன்று இல்லை. இதற்கு காங்கிரஸைத்தான் குற்றஞ்சாட்ட வேண்டியிருக்கிறது. மூன்று விஷயங்கள். 1.தன்னுடைய முதன்மை இலக்கு எதுவென்றும் இன்னமும் காங்கிரஸ் தீர்மானிக்கவில்லை; தன்னுடைய பழைய இறுமாப்பையும் அது இன்னும் கைவிடவில்லை. 2.அது பேசும் கொள்கைக்கும், முன்னெடுக்கும் செயல்பாட்டுக்கும் பொருத்தப்பாடு இல்லை. 3.மோடிக்குப் பிந்தைய சூழலை அங்கீகரித்து, இந்தியா கூட்டணியின் முகத்தை உருவாக்கவில்லை.

இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டதும் அது எதிர்கொண்ட முதல் இடைத்தேர்தல்களில் அது வியத்தகு வெற்றியைப் பெற்றது. உத்தர பிரதேசத்தின் கோசி சட்டமன்றத் தொகுதியில் பாஜகவை 42,000+ ஓட்டுகள் வித்தியாசத்தில் சில மாதங்களுக்கு முன் சமாஜ்வாடி கட்சி வென்றது குறிப்பிடத்தக்க வெற்றி. அதேபோல், வங்கத்தில் துப்குரி தொகுதியை பாஜகவிடமிருந்து திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்க வெற்றி. இரண்டு தொகுதிகளுமே பாஜக வலுவாக உள்ள பிராந்தியங்கள். நாட்டு மக்களுக்கு இந்த வெற்றிகள் நம்பிக்கை ஒளியை அனுப்பின.

ஐந்து மாநிலத் தேர்தல்களில் கூட்டணியை மிக மோசமாகக் கையாண்டது காங்கிரஸ். இந்தி மாநிலங்களில் கொஞ்சம்போல சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு உண்டு. 2018 சட்டமன்றத் தேர்தலில் மத்திய பிரதேசத்தில் இரண்டு இடங்களை அது வென்றது. இந்தத் தேர்தலில் கூட்டணி பேசிக்கொண்டே கடைசி நேரத்தில் எல்லாத் தொகுதிகளுக்கும் தன்னுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு சமாஜ்வாதி கட்சியின் முதுகில் குத்தியது காங்கிரஸ். அகிலேஷ் யாதவ் பெரும் கோபத்துக்கு உள்ளானதோடு இதற்கு எதிர்வினையும் ஆற்றினார். இதுகுறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் முகமான கமல்நாத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் அளித்த பதில்: ‘அகிலேஷாவது வகிலேஷாவது!’ தேர்தலில் அங்கு தோற்கடிக்கப்பட்ட பிறகு சமாஜ்வாதி திருப்பியடித்தது: ‘இது காங்கிரஸின் ஈகோவுக்கு மக்கள் கொடுத்திருக்கும் அடி!’

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

2024: யாருக்கு வெற்றி?

யோகேந்திர யாதவ் 09 Jun 2023

பெரிய இலக்குகளைக் குறிவைக்கும்போது சில்லறை விஷயங்களில் கவனத்தைச் சிதறவிடக் கூடாது. கூட்டணி விஷயத்தில், தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் பெரிய மனதோடு நடந்துகொள்ள வேண்டும். தன்னுடைய தலைமைக்கும் கட்சியின் இருப்புக்கும் சவாலான சூழல் எழுந்தபோது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை இந்திராவிடமிருந்து கற்க வேண்டும்; 1971 தேர்தலில் தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி அமைத்த இந்திரா மக்களவையில் தனக்கு 9 இடங்கள் இங்கிருந்து வேண்டும் என்பதற்காக சட்டமன்றத் தொகுதிகள் அனைத்தையும் அப்போது திமுகவுக்கு விட்டுக்கொடுத்தும், அதேசமயம், தன் கை ஓங்கியபோது 1980 தேர்தலில் சட்டமன்றத் தொகுதிகளில் சரிபாதி இடங்களைத் திமுகவிடமிருந்து காங்கிரஸுக்கு அவர் கேட்டுப் பெற்றதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

சமாஜ்வாதி கட்சி கூடவே சுட்டிக்காட்டிய இன்னொரு விஷயமும் முக்கியமானது: ‘கமல்நாத் இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பற்றியோ பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டைப் பற்றியோ பேசவில்லை!’ அதேசமயம், மத்திய பிரதேசத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட சத்தீஸ்கரில் காங்கிரஸுடைய பிரதான பேச்சாக சமூகநீதியே இருந்தது. முரண்பாடு என்னவென்றால், மத்திய பிரதேசத்தில் பாஜகவின் சிவராஜ் சிங் சௌகான் பிற்படுத்தப்பட்ட சமூகப் பின்னணியைக் கொண்டவர். அவரை எதிர்த்து காங்கிரஸ் முன்னிறுத்திய கமல்நாத் முற்பட்ட சமூகப் பின்னணியைக் கொண்டவர் – பிராமணர். நான் சுட்டிக்காட்ட வரும் அடுத்த விஷயம் இதுதான், இந்தியா கூட்டணி தனக்கென்று பொதுவான கொள்கைகளை வகுத்துக்கொள்வதோடு, எதையெல்லாம் பேச வேண்டும்; பேசக் கூடாது என்பதைக் கறாராக வரையறுக்க வேண்டும்.

அடுத்த விஷயம் மேலும் முக்கியமானது. மோடிக்குப் பின் இந்திய மக்களவைத் தேர்தலானது ‘பிரதமர் தேர்தல்’ எனும் பரிமாணத்தையும் கொண்டிருக்கிறது. பாஜகவின் வாக்கு வங்கியில் மோடி பங்கு என்று மட்டும் தனிப் பங்கு உருவெடுத்திருப்பதை இனியேனும் காங்கிரஸ் அங்கீகரிப்பது அவசியம். பாஜகவின் மோடிக்குப் போட்டியாக இந்தியா கூட்டணிக்கும் ஒரு முகம் வேண்டும். அது கார்கேவோ, நிதிஷோ, மம்தாவோ குறைந்தபட்சம் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலேனும் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும். கூட்டணியில், யாருடைய இடம் என்னவாக இருக்கும் என்பதை இது உறுதிபடுத்தும். இதற்கான பாடத்தை வி.பி.சிங் மூலம் காங்கிரஸ் கற்றுக்கொள்ளலாம். 1989 தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு இடத்தைக்கூட அவருக்கு திமுக கூட்டணி வழியே பெற முடியவில்லை. ஆயினும், திமுக தலைவர் கருணாநிதிக்கான முந்தைய முக்கிய இடத்தைக் கூட்டணியில் தொடர்ந்ததோடு, முரசொலி மாறனுக்கு அமைச்சர் பதவியையும் வழங்கினார். எவரைவிடவும் தேசிய முன்னணிக் கூட்டணியில் உறுதியான பிரதிநிதியாக இருந்தது திமுக.

கூட்டணிகள் வெறும் அரசியல் கணக்குகளால் மட்டும் வெல்வதில்லை; மனிதர்களின் கூட்டுவேதிக்கலவைக்கு அதில் முக்கியமான பங்கு இருக்கிறது. எல்லாமே காங்கிரஸ் தலைவர்களின் முன்னர்வுகளில்தான் இருக்கிறது!

-‘குமுதம்’, டிசம்பர், 2023

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

14 ஊடகர்களைப் புறக்கணிப்பது ஏன்?
உதயமாகட்டும் கூட்டாட்சி இந்தியா
2024: யாருக்கு வெற்றி?
மாநிலக் கட்சிகளே எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்றன
பாஜக எப்படி வெல்கிறது? முதல்வர்களைக் கவனியுங்கள்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


8

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

1984 நாவல்உதிர்கிறதா இறையாண்மை?மாபெரும் தமிழ்க் கனவு சமஸ்வேலைத் திறன் குறைபாடுஅஸ்வினி வைஷணவ்ஜெயமோகன் உரையாடு உலகாளு பேட்டிஉமிழ்நீர்அறையை ஆக்கிரமித்துள்ளது சீன டிராகன்!நாக்பூர்ஆளுமைகள்கோர்பசெவ் வருகைக்கு முன்வாக்குச்சாவடிராஜீவ் காந்திசட்டமன்றத் தேர்தல்இன உணர்வுகீதைஆண்ட்ரூ சாரிஸின் சுட்டல்கையால் மனிதக் கழிவகற்றுவோர்பெருநகரம்வாழ்வியல் முறைசுளுக்கிaruncholநீராருங் கடலுடுத்தவேதங்கள்தமிழகக் காவல் துறைஷேக் அப்துல்லாபுதிய தலைமுறைமாமன்னன்: நாற்காலிக் குறியீடுதி டிஸ்கவரி ஆஃப் இந்தியாஇடஒதுக்கீட்டு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!