கட்டுரை, அரசியல், நிர்வாகம், கூட்டாட்சி 3 நிமிட வாசிப்பு

பாஜக வெல்ல இன்னொரு காரணம்

வ.ரங்காசாரி
23 Feb 2024, 5:00 am
0

ரண்டு சாதாரண செய்திகள். முதலாவது செய்தி சில நாட்களுக்கு முன் வெளியானது; இரண்டாவது செய்தி சில வாரங்களுக்கு முன் வெளியானது. இரண்டையும் இணைத்துப் பார்த்தால் பாஜக தன்னுடைய வெற்றியை கட்சிக்குள்ளும் மக்களிடமும் எப்படி எல்லாம் கட்டமைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

தொண்டர்களுக்கு காது கொடு

முதல் செய்தி இது.

ராஜஸ்தானின் பிகானீர் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஏற்பாடுகளுக்கான ஆய்வுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் அமித் ஷா பங்கேற்றார். சமீபத்தில்தான் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைத்தது என்பது எல்லோருக்கும் நினைவிருக்கலாம். முன்னதாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து உள்ளூர் நிர்வாகிகளை தன் கட்சிக்குள் கொண்டுவரும் வேலையில் பாஜக ஈடுபட்டிருக்கிறது.

ஷாவைச் சந்தித்த தொண்டர்கள் காங்கிரஸிலிருந்து தொடர்ந்து வரும் இடைநிலைத் தலைவர்களைக் கட்சியில் சேர்ப்பதால் தங்களுக்கு எதிர்காலம் கிடையாதோ என்ற சோர்வு ஏற்படுகிறது என்று குற்றஞ்சாட்டினர்.

கட்சியில் புதியவர்களை - அதிலும் காங்கிரஸ்காரர்களை - தொடர்ந்து சேர்ப்பதால் ஆரம்ப காலத்திலிருந்தே கட்சியில் இருக்கும் தங்களுக்கு உற்சாகம் குறைவதாக சில தொண்டர்கள் கூறினர். “அப்படியெல்லாம் நினைக்காதீர்கள், உங்களைக் கட்சி எப்போதும் மறக்காது – கைவிடாது” என்று பதில் அளித்தார் ஷா.

அப்போதும் அவர்களில் பலர் வாட்டமாகவே இருந்தனர். “கட்சியில் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறீர்கள்?” என்று சிலரைக் கேட்டார். “25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரையில்…” என்று சிலர் பதில் அளித்தனர். “கட்சியில் உங்களுக்கு ஏதாவது பெரிய பதவிகள் கிடைத்துவிட்டனவா?” என்று கேட்டார். “இல்லை” என்றே எல்லோரும் பதில் அளித்தனர். “அப்படியானால் நேற்று வந்தவர்களுக்கு மட்டும் என்ன கிடைத்துவிடும்?” என்று கேட்டதும் எல்லோரும் உரக்கச் சிரித்தனர்.

பிறகு அவர்களுடைய வருத்தத்தைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறியவர், “புதிதாக வருகிறவர்கள் நம்முடைய கொள்கைகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால்தான் கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும். கட்சிக்காக நீண்ட காலமாக உழைக்கும் உங்களைக் கட்சி ஒருபோதும் புறக்கணித்துவிடாது, இதற்குப் பலர் உதாரணங்களாக உள்ளனர்” என்று கூறி ஆற்றுப்படுத்திய பின்னர், கட்சியின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்குள் சென்றார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பிகானீரில் தேர்தல் ஏற்பாடுகள் ஆய்வுக் கூட்டத்துக்கு 200 நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர். தேர்தலுக்கு என்னென்ன வேலைகளைச் செய்திருக்கிறீர்கள் என்று ஒவ்வொருவரையும் கேட்டார் ஷா. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் மாநில சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சார், சமூக நீதி - அதிகாரமளித்தல் துறை அமைச்சர் அவினாஷ் கெலாட், உணவு - குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் சுமித் கோதரா ஆகியோரும் உள்ளடக்கம்.

அப்போது, “ஏற்பாடுகள் நடக்கின்றன” என்று பொதுவாக பதிலைச் சொன்னார் அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சார். “எத்தனை பேர் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், எத்தனை பக்கங்களில் அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டியுள்ளீர்கள்?” என்று அடுத்து கேட்டார் ஷா. அமைச்சர் பதில் அளிக்காமல் மழுப்பினார்.

இதைச் செய்ய முடியாமல் போனது ஏன் என்று அமித் ஷா கேட்டார். அமைச்சர் பொறுப்பை ஏற்றதால் அந்த வேலைகளில் மூழ்கிவிட்டதாகவும் இப்போதுதான் முதல் முறையாக தொகுதிக்கு வந்திருப்பதாகவும் பதில் வந்தது. “தேர்தல் வேலைக்காக பிரதமர் இன்றைக்கு ஜம்மு சென்றிருக்கிறார்; (உள்துறை அமைச்சரான) நான் உங்களில் 200 பேரை அழைத்து விவரங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். மக்களவைத் தேர்தலுக்கான வேலைகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறோம். உங்களுக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைக்கவில்லை, காரணம் நீங்கள் மாநில அமைச்சராகிவிட்டீர்கள், அப்படித்தானே?” என்று கேட்டார் ஷா.

சுமித் கோதரா, அவினாஷ் கெலாட் என்ற அமைச்சர்கள் ஹனுமான்கர், ஸ்ரீகங்காநகர், சூரு தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்கள். அவர்களாலும் ஷாவின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியவில்லை. அடுத்த 40 நிமிஷங்களுக்கு மூன்று அமைச்சர்களையும் நிற்க வைத்தே பேசிய ஷா, “இன்று மாலைக்குள் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பட்டியலையும் நிர்வாகிகளுடைய பெயர்களையும் பொறுப்புடன் தயாரித்து எனக்குத் தாருங்கள்” என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

அடுத்து ஷாவிடம் சிக்கியவர் பிகானீர் நகர பாஜக தலைவர் விஜய் ஆச்சார்யா. மக்களவைத் தேர்தல் அலுவலகத் திறப்பு தொடர்பாகவும் வேறு தகவல்களையும் அவரால் அளிக்க முடியவில்லை. மாலைக்குள் இந்தத் தகவல்களைத் தாருங்கள் என்று அவருக்கும் கட்டளையிட்டார் ஷா. 

2019 பொதுத் தேர்தலில் 25 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வென்றிருந்தது. இப்போது அவற்றை 8 தொகுப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு மாநில அமைச்சர் பொறுப்பிலும் அளித்துள்ளனர். “பாஜகவின் கோட்டை ராஜஸ்தான் என்று பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிறோம், அதைத் தக்கவைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது, ஜனசங்க காலத்திலிருந்தே இது சுந்தர்சிங் பண்டாரியின் தவ பூமி, அந்தப் பெருமையைக் காப்பாற்றியாக வேண்டும்” என்று பேசிய ஷா, பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

காலையில் கூட்டத்துக்கு சுணக்கமாக வந்த தொண்டர்கள்கூட மாலையில் உற்சாகமாக ஊருக்குத் திரும்பியுள்ளார்கள்.

மக்கள் அதிருப்திக்குத் தலை வணங்கு

அடுத்த செய்தி இது.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் உள்ளூர் அளவில் அதிருப்தியைச் சம்பாதித்து இருக்கும் சுமார் 100 மக்களவை உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பதில்லை என்ற முடிவை பாஜக எடுத்திருக்கிறது. 

தேர்தல்களுக்கு முன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து கட்சி உறுப்பினர்கள், அந்தந்தத் தொகுதி மக்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட பொதுவெளி மக்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளைப் பெறுவதை பாஜக தலைமை முக்கியமான செயல்பாடாகக் கருதுகிறது.

கட்சி மூலமாக கருத்துகளைப் பெறுவதுடன் ‘அசோசியேஷன் ஆஃப் பிரில்லியண்ட் மைண்ட்ஸ்’ (ஏபிஎம்) என்ற முகமையுடனும் இதற்காக கட்சி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்நிறுவனம் சேகரிக்கும் தகவல்களை மாதந்தோறும் கட்சித் தலைமைக்குத் தருகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பலருக்கு இந்த வகையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது சமீபத்தில் பேசப்பட்டது.

அடுத்து, 2024 மக்களவைத் தேர்தலில் இப்போது பதவி வகிக்கும் மக்களவை உறுப்பினர்களில் சுமார் 100 பேருக்கும் வாய்ப்பை இழப்பார்கள் என்று தெரிகிறது.

நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டிய விஷயம், 2019 மக்களவைப் பொதுத் தேர்தலின்போதும், இப்படி 99 பேருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை பாஜக மறுத்தது என்பது ஆகும். 

இதன்படி பாஜகவின் 303 எம்பிக்களில் மூன்றில் ஒருவருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பில்லை. இதை வேறு சொற்களில் கூறுவது என்றால், 100 தொகுதிகளில் புதியவர்களுக்குப் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனால், எப்படிச் செயல்பட்டாலும் தொகுதிகள் பல கட்சிகளைப் போல மீண்டும் மீண்டும் ஒருவருக்கே எனும் சூழல் இருக்காது. கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள்.

பாஜக வெல்ல ஒரு காரணம் இல்லை

பாஜக வெல்ல மோடி மட்டுமே காரணம் இல்லை; அதன் சித்தாந்த கட்டமைப்புப் பலம் மட்டுமே காரணம் இல்லை; பல காரணங்களால் அது வெல்கிறது.

கட்சிப் பணியாற்றும் தொண்டர்களுக்கும் வாக்களிக்கும் மக்களுக்கும் அதிருப்தி உண்டாக்கும் வகையில் நடந்துகொள்ளும் நிர்வாகிகளை மேலிடம் தண்டிக்க தவறுவதில்லை என்பதைத் தொடர்ந்து கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அது ஒரு செய்தியாக எடுத்துச் செல்கிறது. ஆட்சி மீது உருவாகி இருக்கும் அதிருப்தியை உடைக்க அதற்கு இதுவும் ஒரு வியூகம் ஆகிறது!

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

யோகியை எதிர்கொள்வது பெரும் யுத்தம்தான்

வ.ரங்காசாரி 26 Jan 2022

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

பாஜக எப்படி வெல்கிறது? முதல்வர்களைக் கவனியுங்கள்!
தேர்தல்களை பாஜக எப்படி வெல்கிறது? மேலும் ஒரு காரணம்!
காங்கிரஸுக்குப் புத்துயிர் ஊட்டுவது எப்படி?
மோடி - ஷாவுக்கு அடுத்து பாஜகவில் யார்?
யோகியை எதிர்கொள்வது பெரும் யுத்தம்தான்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வ.ரங்காசாரி

வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். விமர்சகர். ‘அருஞ்சொல்’ இதழின் துணை ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’யில் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க நிர்வாகியாகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்கவர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com


7






பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸில் நடக்க வேண்டிய மாற்றமவரலாறு உங்களை வாழ்த்தும் சோனியா!வங்கிகளைக் காப்பதற்கு ஒரு நோபல்காந்தஹார்: வாஜ்பாயின் ஒரே கேள்விதோள்பட்டைஇந்தியன் ஏர்-லைன்ஸ்சஞ்சய் மிஸ்ரா: வெட்கமற்ற முன்னெடுப்புநகரமாஅன்னா சவ்வா கட்டுரைமூட்டு வீக்கம்பாலு மகேந்திரா பேட்டிபேராசிரியர் கல்யாணிசாலைசேகர் குப்தா கட்டுரைஇஸம்குழந்தையின்மைவிஜயகாந்த் - அருஞ்சொல்ஆர்.எஸ்.நீலகண்டன்ராங்கோவரி ஏய்ப்புதமிழ்ப் பௌத்தம்அரசு நிறுவனங்கள் முக்கியம் அச்சத்துடனா?ஜவாஹர்லால் நேரு கட்டுரைபிரீமென்ஸுரல் சின்ட்ரோம்தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்!கடுமையான நிதிநிலைமைஅசிஷ் ஜாசேகர் மாண்டே கட்டுரைமுதல் என்ஜின்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!