கட்டுரை, அரசியல், விளையாட்டு 5 நிமிட வாசிப்பு

மோடி, கிரிக்கெட், அரசியல், ரகசியம்

ராமச்சந்திர குஹா
07 Nov 2023, 5:00 am
0

கிரிக்கெட் ஆட்ட களத்தில் பந்துவீச்சாளர்கள் ஓட்டத்தைத் தொடங்கி வந்து பந்து வீசும் பகுதியை ‘முனைகள்’ என்பார்கள். அந்த இடங்களுக்குப் பெயரிடுவது மரபு. லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் திடலில், ‘பெவிலியன் முனை’, ‘நர்சரி முனை’ என்பவை பெயர்கள்.

லண்டனில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற இன்னோர் ஆட்டக் களமான ஓவலில், ஒரு முனையை ‘மெம்பர்ஸ் பெவிலியன்’ என்றும் இன்னொன்றை அப்பகுதிக்கு அருகில் இருக்கும் வாக்ஸால் சுரங்க ரயில் நிலையப் பெயரை முன்னி்ட்டு ‘வாக்ஸால் முனை’ என்றும் அழைப்பார்கள்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் திடலில் ‘மெம்பர்ஸ் எண்ட்’, ‘கிரேட் சதர்ன் ஸ்டேண்ட்’ என்பன பெயர்கள். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ‘பெவிலியன் எண்ட்’, ‘ஹைகோர்ட் எண்ட்’ என்று பெயர்கள்.

ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களின் பெயர்களைச் சூட்டியிருப்பார்கள். ‘பிரியான் ஸ்டாதம்’, ‘ஜிம்மி ஆண்டர்சன்’ என்று. மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ‘கர்வாரே’, ‘டாடா’ என்று கிரிக்கெட்டின் புரவலர்களான இரண்டு தொழில் நிறுவனங்களின் பெயர்களால் அழைப்பார்கள். அவ்வளவு ஈர்ப்பாக இல்லாவிட்டாலும், புரவலர்கள் இல்லாமல் போட்டிகள் ஏது என்பதால் இதை ஏற்றுக்கொண்டுவிடலாம்.

மூன்று பயன்கள்

பந்து வீச வரும் முனைக்கு இப்படிப் பெயர்களைச் சூட்டுவது மூன்று பயன்களைத் தந்துவிடுகின்றன;

  1. ஆட்டத்தை நேரில் காண வரும் ரசிகர்கள் தங்களுடைய இருக்கை அரங்கின் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதை எளிதாக இதை வைத்து அடையாளம் கண்டுவிடலாம்.
  2. திடலில் இல்லாமல் எங்கோ தொலைதூரத்திலிருந்து - பெரும்பாலும் வெளி நாடுகளிலிருந்து - வானொலி வாயிலாக (தொலைக்காட்சி இல்லாத காலங்களில்) நேர்முக வர்ணனை கேட்கும் ரசிகர்களுக்கு சுவைக் கூட்டுவதாக இருக்கும். அந்தப் பெயர்களே, ஏதோ நாமே அங்கு இருப்பதைப் போன்ற உணர்வையும் பெருமிதத்தையும் தரும்.
  3. ஆட்டக் களத்தின் தரை எப்படி இருக்கும், பருவநிலை எப்படி உதவும் என்பதை அணித் தலைவர்கள் தீர்மானிக்கவும் அதற்கேற்ப வீச்சாளர்களை முனைகளில் இறக்கவும் உதவும். ஆட்டத்தின் எந்த நேரத்திலிருந்து குளிர்காற்று வீசும், எந்த வீச்சாளரால் அதை நன்கு பயன்படுத்த முடியும் என்பதையெல்லாம் திட்டமிடவும் இந்த முனை அடையாளங்கள் கை கொடுக்கும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மோடி வரலாற்றில் மோடி

ராமச்சந்திர குஹா 16 Mar 2023

அதிர்ச்சி தந்த பெயர்கள்

வீச்சு முனைப் பெயர்கள் கல்லில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சில வேளைகளில் பெயர்கள் மாறவும் கூடும். சென்னையிலிருந்து இரண்டாயிரம் மைல் வடக்கில் வாழ்ந்த எனக்கு, சேப்பாக்கம் அரங்கத்தின் ‘வாலாஜா சாலை முனை’ வானொலி வர்ணனைகள் மூலம் நன்கு பதிவாகிவிட்டது. அந்தப் பெயரைக் கேட்கும்போதெல்லாம் ஈர்ப்பாகவும் புதிர் போலவும்கூட இருக்கும்.

வளர்ந்து வாலிபனாகி 35வது வயதில் சென்னையில் நான் ஏறிய ஆட்டோ ரிக்‌ஷா பெரிய வீதி வழியாகச் சென்றபோது, ‘வாலாஜா சாலை’ என்ற பெயர்ப் பலகையைப் பார்த்ததும் நாடி நரம்புகளில் மின்சாரம் பாய்ந்ததுபோல உணர்ந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தார் அந்த முனைக்கு வி.பட்டாபிராமன் என்ற சங்க நிர்வாகி பெயரைச் சூட்டினர். இருந்தாலும் வாலாஜா சாலை முனை என்ற பெயர் மனதில் ஆழமாக இன்னமும் புதைந்திருக்கிறது.

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நரேந்திர மோடி ஸ்டேடியம் 2021இல் தொடங்கப்பட்டது, அந்த ஆண்டு பிப்ரவரியில் முதலாவது டெஸ்ட் போட்டி அங்கு நடந்தபோது இரு முனைகளுக்கும் ‘அதானி’, ‘அம்பானி’ பெயர்களைச் சூட்டியிருந்தனர். அது எனக்கு அதிர்ச்சி, கோபம், ஏற்க மறுக்கும் சுபாவத்தையே ஏற்படுத்தின.

இருவர்…

விளையாட்டுக்கு உதவும் தொழிலதிபர்கள் பெயர்களைச் சூட்டுவது உலகில் வழக்கம்தான் என்றாலும் ‘சர்தார் படேல்’ என்றிருந்த அரங்கின் பெயரை ‘நரேந்திர மோடி அரங்கம்’ என்று மாற்றிய கையோடு, அம்பானி - அதானி பெயர்களையும் சூட்டியது ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது. மோடி ஆட்சியில் இந்த இரு தொழிலதிபர்களும் மேலும் மேலும் கொழுத்துக்கொண்டேவருவது எல்லா வட்டாரங்களிலும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்திய அரசுக்கு முதன்மைப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றிய அர்விந்த் சுப்ரமணியன், இந்தியாவில் இப்போது ‘2ஏ மாடல் பொருளாதாரம்’ (அம்பானி – அதானி) அமலில் இருப்பதாக பூடகமாகக் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘நாம் இருவர்’ (மோடி, ஷா) – ‘நமக்கு இருவர்’ (அம்பானி, அதானி) என்ற பழைய குடும்பக் கட்டுப்பாட்டு வாசகத்தைக் கூறி இந்தக் கூட்டை நினைவுபடுத்தினார்.  

தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகப் பார்த்தேன். ஒரு முனையில் அதானி, இன்னொரு முனையில் அம்பானி பெயர்கள் வெளிப்படையாகத் தெரிந்தன. அவற்றுக்கும் மேலே இன்னும் கொட்டை எழுத்துகளில் ‘நரேந்திர மோடி விளையாட்டரங்கம்’ என்று ருந்தது. விளையாட்டரங்குடன் மட்டுமல்ல; வேறு களங்களிலும் இந்த மூவருக்கும் உள்ள நெருக்கத்தை அவை எடுத்துக்காட்டின.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

விளையாட்டும் விளம்பர உத்தியும்

கிரிக்கெட்டில் நான் விருப்பு – வெறுப்பு உள்ள ஆசாமி. இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) போட்டிகளைப் பார்ப்பதில்லை. எனவே, 2022 ஐபிஎல் போட்டியின்போது அந்த முனைகளை என்ன சொல்லி அழைத்தார்கள் என்று தெரியாது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அந்த அரங்கம்தான் தாய் நிலம். 2023 மார்ச் இரண்டாவது வாரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது அதானி முனை பெயர் மாறவில்லை, அம்பானி முனை பெயர், ‘ஜியோ முனை’ என்று மாறிவிட்டது.

அரசுடனான நெருக்கத்தால் லாபம் அடைபவரின் பெயரைப் பின்னுக்குத் தள்ளி, அவர்களுடைய நிறுவனப் பெயரை முன்னிறுத்தும் அருமையான விளம்பர உத்தி இது. விமர்சனங்கள் அதிகமாகிவிட்டதால் மோடிக்கு நெருக்கமானவராக தன்னை மற்றவர்கள் இனியும் நினைக்கக் கூடாது என்று அம்பானி நினைத்தாரோ என்னவோ பெயர் மாறியிருந்தது. அதானி எதைப் பற்றியும் கவலைப்படவில்லை, இது விசுவாசத்தாலா, அகந்தையாலா என்றும் தெரியவில்லை.

ஐபிஎல் போட்டிகளை வெறுக்கிறேன் என்றாலும் எப்போதாவது சில போட்டிகளைப் பார்ப்பதும் உண்டு. உலகக் கோப்பை முதல் போட்டியைப் பார்க்கவில்லை. அக்டோபர் 14இல் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடியதைப் பார்த்தேன். ஆமதாபாத் ஸ்டேடியத்தின் இரு முனைகளிலுமே அம்பானி, அதானி பெயர்கள் இல்லை.

கான்கிரீட் பெயர்ப் பலகைகளில் வெள்ளை அடித்திருந்தனர். ஆனால், நரேந்திர மோடி பெயர் மட்டும் தெளிவாகத் தொடர்கிறது.

சில கேள்விகள்…

கிரிக்கெட்டை ரசிப்பதுடன் உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்பும் ரசிகர் மனதில் நிச்சயம் சில கேள்விகள் எழும்.

பந்துவீச்சு முனைகளுக்குத் தங்கள் பெயர்களைச் சூட்ட அம்பானியும், அதானியும் எவ்வளவு கொடுத்திருப்பார்கள்? அந்தப் பெயர்களை நீக்குவது என்று முடிவெடுத்தவர்கள் அவர்களுக்கு இழப்பீடு தந்திருப்பார்களா? அவர்களுடன் ஆலோசனையாவது நடத்தியிருப்பார்களா? கிரிக்கெட், தொழில் நிறுவனம், வியாபாரம், அரசியல் ஆகியவற்றுக்குள்ள தொடர்பை இவ்வளவு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியதை அழித்ததற்கு யார் அல்லது எது காரணம்?

இந்திய பிரதமர்களிலேயே மிகவும் ரகசியங்கள் நிரம்பியவர் நரேந்திர மோடி மட்டுமே; அவருடைய கடந்த காலம் குறித்தும் நிகழ்காலம் குறித்தும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அரசியல் வாழ்க்கை குறித்தும் பல அம்சங்களைத் தெரிந்துகொள்ள நம்பகமான தகவல்களே இல்லை. (தகவல் அறியும் உரிமையை ஒட்டுமொத்தமாக முடக்க நினைக்கும் போக்குக்கு அவருடைய சுபாவமும் அவருடைய ஆட்சியும்தான் காரணம்).

நம்பகமான தகவல்களைப் பெற முடியாவிட்டால் புத்திசாலித்தனமாக ஊகிப்பதுதான் ஒரே வழி. அம்பானி, அதானி பெயர்களை நீக்கிவிடுமாறு பிரதமர் அலுவலகத்திலிருந்துதான் உத்தரவு பிறந்திருக்க வேண்டும், தொழிலதிபர்களுடைய அலுவலகங்களிலிருந்து அல்ல. ஓட்டுண்ணி முதலாளித்துவம் தொடர்பான கண்டனங்கள் பிரதமர் அலுவலகத்தைப் பலமாகத் தாக்கியிருக்க வேண்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் அல்லது மேலும் வளர்ந்தால் அரசியல் களத்தில் தான் இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது மோடிக்குத் தெரியும்.

அதனால்தான் பிரதமருடன் இந்தத் தொழிலதிபர்களுக்கு உள்ள நெருக்கத்தை மேலும் உறுதிப்படுத்தும் இந்த வெளிப்படையான சான்று நீக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் பிரதமரைச் சுற்றிய பிம்பக் கட்டமைப்பு நீடிப்பதும் அவசியம். எனவே, அரங்குக்குச் சூட்டிய அவர் பெயர் அப்படியே நீடிக்கிறது. அது மட்டுமல்ல; இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியை நடத்திய அரங்கு, இறுதிப் போட்டியையும் இங்கேதான் நடத்தப்போகிறது.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

விராட் கோலி நீக்கப்பட்ட அரசியல் என்ன?

தினேஷ் அகிரா 13 Dec 2021

அன்று இருந்தது இன்று இல்லை!

லார்ட்ஸ், ஓல்ட் டிராஃபோர்ட், ஈடன் கார்டன்ஸ், சேப்பாக்கம் போல ஆமதாபாத் ஸ்டேடியத்திலும் இரு முனைகளுக்கும் பெயர்கள் இருந்தன. இப்போது இல்லை.

இதே நிலை நீடிக்குமா, அல்லது வேறு மாற்றுப் பெயர்களை நிர்வாகிகள் சூட்டுவார்களா? இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக இருந்த இரண்டு குஜராத்தியர்கள் வினு மன்கட், கே.எஸ்.ரஞ்சித் சிங்; அவர்களுடைய பெயர்களைச் சூட்டலாம் என்று கிரிக்கெட் ஆர்வலரான என் நண்பர் யோசனை தெரிவித்தார்; யார் கண்டது, தேர்தலில் வாக்குகளை அள்ளுவதற்காக அம்பேத்கர், சாவர்க்கர் ஆகியோருடைய பெயர்களைக்கூட சூட்டுவார்கள் என்று அரசியல் ஆர்வம் அதிகமுள்ள இன்னொரு நண்பர் கூறினார். 

முதலாவது யோசனை கண்ணியமானது, இரண்டாவது கேலியானது. ஆனால், ஜனநாயகவாதிகள் அனைவரையுமே முகம் சுளிக்க வைப்பது என்னவென்றால் விளையாட்டு அரங்குக்கு அரசியலர்களின் பெயரைச் சூட்டுவதுதான்.

இப்படி ஆட்சியில் இருப்பவர்களை மகிழ்விப்பது ஹிட்லரின் ஜெர்மனி, ஸ்டாலினின் ரஷ்யா, கிம் இல் சுங்கின் வட கொரியா ஆகிய சர்வாதிகார நாடுகளில்தான் வழக்கம். மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இதற்கு முன்னால் இப்படி நினைத்துக்கூட பார்க்க முடியாது.

மோடி உயிரோடு இருக்கும்போது, அதிகாரத்திலும் தொடரும்போது விளையாட்டு அரங்குக்கு அவருடைய பெயரைச் சூட்டியிருப்பது அந்த விளையாட்டையும் தரம் இழக்க வைப்பதுடன் நாட்டையும் தலைக்குனிவுக்கு ஆளாக்குகிறது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மோடி வரலாற்றில் மோடி
சோபர்ஸுக்குப் பிறகு ஆல்-ரவுண்டர் யார்?
ஆளுமைகள் ஏன் சொதப்புகிறார்கள்?
விராட் கோலி நீக்கப்பட்ட அரசியல் என்ன?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

3






தியாகராய கீர்த்தனைகள்ஆழ்வார்கள்வழக்குப் பதிவுசமஸ் எனும் புனிதர்ஏறுகோள்ஜி20 மாநாடுராஜவிசுவாசம்பசு குண்டர்கள்சம்பா சாகுபடி: நெல்வளமும் சொல்வளமும்பால்ய விவாகம்நிறவெறிஊழியர் சங்கங்களின் இழிநிலைதிருநெல்வேலிசீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்உள்ளூர்க் காய்கறிகள் அம்பேத்கரிய கட்சிகள் திமுகவிடம் கற்றுக்கொள்ள வேண்இரண்டு அடையாளங்கள்செல்வாக்கான தொகுதிகள்ரத்தவெறிமக்கள்தொகைக் கணக்கெடுப்புகதீஜா கான் கட்டுரைஉதய்ப்பூர் மாநாடுஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா ராகுல் பேச்சுமூன்றாவது கட்ட வாக்குப்பதிவுசுற்றுச்சூழல்எடப்பாடி கே.பழனிசாமிரஷ்ய-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலையில் உள்ள முரணஹிமந்த விஸ்வ சர்மாஎத்தியோப்பியாபொருளாதார மந்தநிலை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!