கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 3 நிமிட வாசிப்பு

உதயமாகட்டும் கூட்டாட்சி இந்தியா

சமஸ் | Samas
19 Jul 2023, 5:00 am
0

புதிய அரசியல் போக்கு ஒன்றை உருவாக்க இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சிகள் கங்கையின் தென் கரையில் அமைந்திருக்கும் பாட்னாவைத் தேர்ந்தெடுத்தது பொருத்தமானது. வடக்கின் முதல் பேரரசை நிறுவிய மௌரியர்களுடைய தலைநகரமாகத் திகழ்ந்த ஊர் அது; இப்போது தெற்கின் கூட்டாட்சிக் கொள்கையைப் பேசும் கூட்டணியை உருவாக்கும் களம் ஆகியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான வலுவான பாஜக அரசை வேரோடு பிடுங்கி எறியும் முனைப்புகொண்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியை இந்திய அரசியல் வரலாற்றில் புதிய கூட்டணி யுகம் ஒன்றின் தொடக்கமாகவே நான் பார்க்கிறேன்.

சர்வ வல்லமை மிக்க இந்திராவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த ‘ஜனதா கூட்டணி’ முதலாக இப்போது மோடி பெயரளவில் நடத்திவரும் ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ வரையிலான இந்தியாவின் இதுவரையிலான கூட்டணிகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட ஒன்றாக இந்தக் கூட்டணியைக் காண முடியும்.

வரலாற்றில் முதல் முறையாகக் கூட்டணியின் மைய இடம் நோக்கி கூட்டாட்சி சிந்தனை நகர்ந்திருக்கிறது; முதல் முறையாகக் கூட்டணி உருவாக்கத்தில் மாநிலக் கட்சிகள் வலுவான பாத்திரத்தை வகிக்கின்றன; முதல் முறையாக, டெல்லி அரசியலைத் தீர்மானிக்கும் உத்தர பிரதேசம், பிஹாரின் பிரதான கட்சிகள் தங்களுடைய பிராந்திய அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன.

காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரையில் நாட்டின் முக்கியமான மாநிலத் தலைவர்கள் பலரும் பங்கேற்ற கூட்டணியின் முதல் கூட்டத்தை டெல்லியின் செய்தித் தொலைக்காட்சிகள் மிகுந்த ஏளனப் பார்வையுடனேயே பேசின: “இது எவ்வளவு கேலிக்கூத்தான கலவை பாருங்கள்! ராகுல் காந்தி, நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், பினரயி விஜயன், அர்விந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, மெஹ்புபா முப்தி… காங்கிரஸுக்கு எங்கெல்லாம் கொஞ்சம்போலத் தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கே பல இடங்களில் இந்தக் கூட்டணிக்கு உள்ளே உள்ள கட்சிகளுடனேயே அது மோத வேண்டும். அப்படி இருக்க நாடு முழுக்க எப்படி ஒன்றுபட்டு கூட்டணியாக நிற்பார்கள்? அப்படியே நின்றாலும், எப்படி இந்தக் கூட்டணி நீடிக்கும்?”

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

2024: யாருக்கு வெற்றி?

யோகேந்திர யாதவ் 09 Jun 2023

சரிதான். டெல்லியிலும் பஞ்சாபிலும் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கான முக்கியமான போட்டியாளர் காங்கிரஸ். கேரளத்தில் ஆளும் மார்க்ஸிஸ்ட் கட்சிக்குப் பிரதான போட்டியாளர் காங்கிரஸ்.

வேறு சிலருக்கும் சிக்கல் இருக்கிறது. கேரளத்தில் எப்படி காங்கிரஸோடு ஒட்டிச் செல்ல முடியாதோ அதுபோல, வங்கத்திலும் அங்கே ஆளும் திரிணமூல் காங்கிரஸை மார்க்ஸிஸ்ட் கட்சியினரால் ஒட்டிச் செல்ல முடியாது. காங்கிரஸ் வலுவாகக் களத்தில் நிற்கும் தெலங்கானாவில் சந்திரசேகர ராவ், ஒடிஸாவில் நவீன் பட்நாயக், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி இப்படிச் சில முக்கியமான மாநிலக் கட்சித் தலைவர்களையும் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது. அது கை கூடாமல் இழுக்கவும் உள் முரண்களே காரணம். 

கூட்டணியை எள்ளி நகையாடுபவர்கள் அடுத்துச் செல்லும் இடம் எண்ணிக்கைக் கணக்கு. 

பாஜக 300 இடங்களைக் கூட்டணி வழி குறி வைத்து மூன்று வியூகங்களை இம்முறை வகுத்திருக்கிறது.

1. பெரும் பலம் கொண்ட மாநிலங்களின் வழி 100 இடங்கள். உதாரணம்: உத்தர பிரதேசம், குஜராத், டெல்லி, ஹரியாணா, அசாம். இந்த ஐந்து மாநிலங்களிலும் 134 தொகுதிகள் இருக்கின்றன.

2. சம பலம் கொண்ட மாநிலங்களில் 100 இடங்கள். உதாரணம்: மஹாராஷ்டிரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பிஹார், ஜார்கண்ட், ராஜஸ்தான், கர்நாடகம், இமாசல பிரதேசம். இந்த எட்டு மாநிலங்களிலும் 199 தொகுதிகள் உள்ளன.

3. உதிரியாகவும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி வழியாகவும் 100 இடங்கள். உதாரணம்: உதிரியான எண்ணிக்கைக்கு வங்கம், தெலங்கானா, ஒடிஸா, தமிழகம், வடகிழக்கு மாநிலங்களை அது குறிவைக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் ஆந்திரத்தின் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிஸாவின் நவீன் பட்நாயக் போன்றவர்கள் கை கோத்துக்கொள்வார்கள் என்று அது நம்புகிறது.

நேர் எதிராக காங்கிரஸ் இந்த முறை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றால், அது பாஜகவுடன் நேருக்கு நேர் போட்டியிடும் தொகுதிகளில் அதிகமானவற்றை வெல்ல வேண்டும்.

2019 தேர்தலில் காங்கிரஸ் மொத்தமாக 262 தொகுதிகளில் போட்டியிட்டது. இவற்றில் 73% இடங்களில் - அதாவது 192 தொகுதிகளில் - பாஜகவை நேருக்கு நேராக எதிர்கொண்ட அது, வெறும் 16 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது; 176 இடங்களில் பாஜகவே வென்றது. அதாவது, பாஜகவின் வெற்றி சதவீதம் 92% எனும் அளவில் இருந்தது.

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த இவர்கள் காட்டும் இன்னொரு கணக்கு, பாஜக பெருவெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை. 2019 தேர்தலில் 224 தொகுதிகளில் 50% வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகளுடன் பாஜக வேட்பாளர்கள் வென்றார்கள். அதாவது, இந்த 224 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிரான எல்லாக் கட்சிகளும் இணைந்தாலும், அதனை வெல்ல முடியாத அளவுக்கு அது பலமாக இருந்தது. அப்படியிருக்க எதிர்க்கட்சிக் கூட்டணியால் என்ன சாதித்துவிட முடியும் என்பதே இவர்கள் எழுப்பும் கேள்வி.

இப்படிக் கேள்வி எழுப்பும் ஒவ்வொருவருக்கும் 2014 தேர்தல் சூழலையே நான் நினைவூட்ட தலைப்படுவேன். நூலகங்களுக்குச் சென்றால், அந்தக் காலகட்டத்தின் ஆவணத் தொகுப்பிலிருந்து பத்திரிகைகளை நாம் எடுத்துப் பார்க்கலாம். 

அன்றைக்கு ‘மோடியால் வெல்ல முடியுமா?’ என்று தலைப்பிட்டு விவாதம் நடத்திய ஒவ்வொரு பத்திரிகையாளரும் இதே போன்ற கணக்கைச் சொல்லியே பாஜகவால் இந்தத் தேர்தலை வெல்ல முடியாது என்று முன்கூட்டிய தீர்ப்பை எழுதினர். இன்னும் சொல்லப்போனால், பாஜகவால் 200 எனும் எண்ணிக்கையையே தொட முடியாது என்று கணக்கிட்டவர்களே அதிகம்.

தேர்தல் முடிவுகள் வந்து, 300 தொகுதிகளுக்கும் மேல் பாஜக கூட்டணி வென்றபோது, பாஜகவிலேயே அதை நம்ப முடியாத பலர் இருந்தனர். எப்படி இது நடந்தது?

அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த அதிருப்தியை பாஜகவால் வெற்றிகரமாக ஒருங்கிணைக்க முடிந்தது! மக்களின் கவனத்தை காங்கிரஸிடமிருந்து தன்னை நோக்கித் திருப்ப பாஜக உருவாக்கிய ‘வளர்ச்சி’ எனும் புதிய கதையாடலும் இந்தக் கதையாடலை மக்களிடம் ஏந்திச் செல்ல மோடி எனும் தலைவரையும் மக்களிடம் கொண்டுசெல்ல உறுதிபட பாஜக உழைத்தது. கூட்டணியில் எங்கெல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுத்து, எங்கெல்லாம்  பிடித்திழுக்க வேண்டுமோ அங்கு இழுத்தது.

இன்றைய பாஜக அரசு மீதான மக்களின் அதிருப்தி அப்பட்டமானது. மக்களின் கவனத்தை பாஜகவிடமிருந்து தம்மை நோக்கித் திருப்ப எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் ஓர் ஆக்கபூர்வக் கதையாடலையும் அதை ஏந்திச் செல்ல ஒரு தலைவரையும் முன்வைக்க முடியும் என்றால், அன்றைக்கு நடந்தது இன்றைக்கும் நிகழும். உத்தர பிரதேசம், குஜராத், அஸாம் நீங்கலாக எந்த மாநிலத்திலும் இன்று பாஜகவுக்கு நம்பிக்கை தரும் சூழல் இல்லை. திட்டமிட்டு செயலாற்றினால், எதிர்க்கட்சிகளால் 2024 தேர்தலை வெல்ல முடியும். எதிர்க்கட்சிகளுக்குத் தேவை உறுதியான நம்பிக்கை. இந்த உறுதியான  நம்பிக்கையை மக்களுக்கு அவை கடத்த வேண்டும்.

காங்கிரஸ் தன்னளவில் முழுத் தயார் நிலையை அடைய வேண்டும். முடிந்தவரை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். கூட்டணிக்கான தலைவரையும் பிரதமர் வேட்பாளரையும் இப்போதே அறிவிக்க வேண்டும். தேசத்தின் பல்வேறு தரப்பினரின் அபிலாஷைகளுக்கும் இடம் அளிக்கும் வகையில் ஒரு புதிய செயல்திட்டத்தை உருவாக்கி, ‘கூட்டாட்சி இந்தியா’வுக்கான கதையாடலை உருவாக்க வேண்டும். இவையெல்லாம் நடந்தால், நிச்சயம் இந்தக் கூட்டணியால் சாதிக்க முடியும்.

அப்படித் தேர்தலில் ஒருவேளை சறுக்கினாலும்கூட இந்தக் கூட்டணியினர் 2024 தேர்தலில் வெல்லும் ஒவ்வொரு தொகுதியும் முக்கியமானது. பரந்து விரிந்த அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதற்கான அடித்தளம் அதன் கூட்டாட்சியோடு பிணைந்திருக்கிறது. கூட்டாட்சியை மேல் உயர்த்தும் எந்த முயற்சியும் இங்கே ஒவ்வோர் இந்தியரின் பாதுகாப்பான வாழ்வுக்குமான போராட்டம். 2024 தேர்தல் உண்மையில் இந்தியாவைக் காப்பதற்கான போராட்டம்.

வெல்கிறோம், தோற்கிறோம் என்பது பொருட்டே இல்லை. ஜனநாயகத்தைப் பாதுகாக்கச் செயல்படுகிறோம் என்கிற அளவிலேயே இந்தக் கூட்டணி முன்னெடுப்பு சிறப்புதான்!

- ‘குமுதம்’, ஜூலை, 2023

 

தொடர்புடைய கட்டுரைகள்

2024: யாருக்கு வெற்றி?
ரௌத்திரம் பழகட்டும் எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகளின் இடத்தை வலுப்படுத்த ஒரு யோசனை
கூட்டாட்சியைக் கொல்ல ஐந்து வழிகள்!
மாநிலக் கட்சிகளே எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்றன
கூட்டாட்சியத்தின் ஆன்மா எது?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3

4





திமுக தலைவர்அன்பு உள்ளங்களுக்குக் காத்திருக்கும் ஆபத்து!காஞ்சூர்பாமணியாறுமோடி பயணத்தின் பேசப்படாத கதைகள்எண்டார்பின்சகிப்பின்மைதலைமையாசிரியர் ஸ்ரீநிவாசன்ஒரு தேசம் ஈராட்சி முறைமராத்தா சமூகம்நீதிபதி எம்.எம்.பூஞ்சிஉக்கிரமான அரசியல் போர்க்களத்தில் மஹ்வா மொய்த்ராலேம்டா: ஆபத்தா? அடுத்தகட்டப் பாய்ச்சலா?சுரங்கங்கள்சமஸ் - அதானிசெயற்கை மூட்டுஇந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்உடை சர்வாதிகாரம்கர்த்தாதபுரம்பற்றாக்குறைஉயர் வருவாய் மாநிலங்கள்உலகள்ளூரியத்துக்கான அறைகூவல்தேர்தல் அரசியல்பிரபஞ்ச உடல்ஆசிரியரிடமிருந்து...காமத்துப்பால்பருவ இதழ்கள்இந்தி மாநிலங்கள்கிழக்கு சட்டமன்றத் தொகுதிவயிற்றுவலி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!