கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

மோடியை வீழ்த்த வரலாற்றிலிருந்து ஒரு பாடம்

சேகர் குப்தா
20 Jan 2024, 5:00 am
2

திக ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் வாக்காளர்களுடைய சலிப்புக்கும் அதிருப்திக்கும் ஆளாகும்போது, மோடி மட்டும் (முதல்வர் பதவியிலும்) விதிவிலக்காக செல்வாக்கை பெருக்கிக்கொண்டேவருகிறார் என்று ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தேன். மோடி மீது டெஃப்லான் உலோகப் பூச்சு படிந்திருப்பதாகக்கூட கருதலாம் என்று எழுதினேன். டெஃப்லான்கூட காலப்போக்கில் சற்றே மேல் பூச்சை இழந்துவிடும்; இவருடைய செல்வாக்கு டைட்டானியத்தால் பூசப்பட்டதைப் போல இருக்கிறது.

இதை நினைவில் வையுங்கள் - அந்தக் கட்டுரையை நான் 2018இல் எழுதினேன். அதற்குப் பிறகு ஆறு முழு ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்த மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கிறது. டைட்டானியம் தேய்ந்துவிட்டதைப் போல உங்களுக்குத் தெரிகிறதா?

இந்த இடைக்காலத்தில் மோடி தவறு ஏதும் செய்யவில்லையா? ஆட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தவறு செய்வார்கள்; அவர்களுடைய கொள்கைகளில் சில மக்களிடம் எடுபடாமல் தோல்வியைச் சந்திக்கும், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாக நேரும்.

மோடி ஆட்சியின் தவறுகளை, ஊழல்களை, தோல்விகளை எதிர்க்கட்சிகள் அடையாளம் கண்டு அவற்றைக் குறித்துத் தொடர்ந்து பேசியும் வருகின்றன. ஆனால் எதுவுமே மக்களிடம் பெரிய அதிருப்தியை, கோபத்தை ஏற்படுத்தவில்லை. ஏன்?

இந்திய அரசியலில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றால் முதலாகவும் முதன்மையாகவும் நீங்கள் படிக்க வேண்டிய பாலபாடம் ஒன்றிருக்கிறது. இந்திய அரசியலில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர், மக்களை பாதிக்கும் பிரச்சினைகளைக் கையில் எடுத்து, மிகுந்த கற்பனா சக்தியுடன் அதற்கு வடிவம் கொடுத்து, மக்களுடைய மனங்களில் எளிதில் பதியும் வண்ணம் முழக்கங்களை அல்லது பழமொழிகளைத் தயாரித்து, அதை மேடைகளிலும் நேரிலும் விளக்கித்தான் வெற்றி பெற்றார்கள். அப்படி வெற்றிபெற ஊழல் குற்றச்சாட்டுகளும் பிரச்சினைகளும் முழு உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை என்பதையே வரலாறு நமக்குச் சொல்கிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

2024: யாருக்கு வெற்றி?

யோகேந்திர யாதவ் 09 Jun 2023

மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகள்

போஃபர்ஸ் பீரங்கி குறித்து எவ்வளவோ தவறான பிரச்சாரம் செய்யப்பட்டும்கூட, எதிரிகளைச் சுடுவதற்கு (கார்கிலில்) அது தவறவே இல்லை. அந்தக் குற்றச்சாட்டு கூறப்பட்டு 37 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு ரூபாய்கூட அதில் கைமாறியதற்கான ஆதாரத்தை எவராலும் தரவே முடியவில்லை. அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டில் பேசப்பட்ட தொகை ரூ.1.76 லட்சம் கோடி மிகவும் மிகையானது.

நிலக்கரி வெட்டி எடுக்க சுரங்கங்களை ஏலம் விட்டதில் மன்மோகன் சிங் பதவிக்காலத்தில் ரூ.1.86 லட்சம் கோடி அளவுக்கு ஊழலும் நடக்கவில்லை; எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியதைப்போல ஸ்விஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கள்ளப்பணம் லட்சக்கணக்கான கோடிகளில் போடப்படவும் இல்லை.

இந்த விவகாரங்களில் எல்லாம் அரசுக்கு எதிராகப் பேசிய தலைவர்கள் வெறும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவிட்டுப் போகவில்லை, அதற்கு உணர்ச்சிகரமாக வடிவம் கொடுத்தார்கள், மக்களுடைய சொந்தப் பணமே திருட்டுப் போய்விட்டதைப்போல நம்ப வைத்தார்கள், இப்படிப்பட்ட ஊழல் அரசை பதவியில் விட்டுவைக்கலாமா என்று கேட்டு, ஆட்சி மாற்றத்தையே கொண்டுவந்தார்கள்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

வி.பி.சிங் சுட்ட பீரங்கி

இந்தப் போக்கு 1967 பொதுத் தேர்தலிலிருந்து தொடங்கியது. 1967 முதல் 2014 வரையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய எதிர்க்கட்சிகளின் வலிமையான பிரச்சாரம் தொடர்பான சம்பவங்களில், வரிசைக்கிரமமாக அல்லாமல் சற்று முன்னும் பின்னுமாக ஆராய்வோம்.

போஃபர்ஸ் பீரங்கிக் கொள்முதலில் நடந்ததாகக் கூறப்பட்ட ஊழல் மட்டுமே 1987-1989இல் மக்களைப் பெரிதாகச் சிந்திக்க வைத்தது. 1987 நிலவரப்படிகூட அந்த பேரத்தில் கைமாறியதாகக் கூறப்பட்ட ரூ.64 கோடி ஒரு பெரிய தொகையே அல்ல!

இருப்பினும் வி.பி.சிங் (விசுவநாத் பிரதாப் சிங்) நாடு முழுவதையுமே ‘ராஜீவ் காந்தி திருடர்’ என்று தன்னுடைய பிரச்சாரம் மூலம் நம்ப வைத்தார். பிரதமர் ஆனார். வி.பி.சிங் காலத்தில் இப்போதிருப்பதைப்போல தொலைக்காட்சி செய்தி சேனல்களோ, சமூக ஊடகங்களோ இல்லை. அப்படியும் எப்படி அவர் இந்தத் தகவலை நாடு முழுவதும் கொண்டுசென்றார். அவரைத் தொடர்ந்து பின்பற்றி செய்தி சேகரித்த இளம் நிருபர்களில் நானும் ஒருவன்.

அவர் 1988 கோடைப் பருவத்தில் நடந்த ஒரு இடைத்தேர்தலில், அலாகாபாத் கிராமப் பகுதிகளுக்கு மோட்டார் சைக்களில் பின்னால் அமர்ந்து சென்று பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார். மிகவும் பின்தங்கிய ஏழ்மையான கிராமங்களுக்குக்கூட செல்வார். கட்சித் தொண்டர்கள் கிராமங்களில் சுமார் 60 அல்லது 80 பேரைத் திரட்டுவார்கள். மரத்தடியில் அவர்களிடம் பேசுவார் வி.பி.சிங். “உங்களுடைய வீடுகளில் எல்லாம் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைச் சொல்லத்தான் வந்திருக்கிறேன்” என்பார்.

கேட்கும் கிராம மக்கள் திடுக்கிடுவார்கள். பிறகு சட்டைப் பையிலிருந்து தீப்பெட்டியை எடுத்துக் காட்டி, ‘திருட்டு என்ன?’ என்று விளக்குவார். “நீங்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் இந்தத் தீப்பெட்டியை வாங்க எல்லோரையும் போலத்தான் காசு கொடுக்கிறீர்கள். இந்தத் தொகையில் ஒரு பகுதி மறைமுக வரியாக அரசுக்குப் போகிறது. அந்த வரிப்பணத்தில்தான் அரசு, ராணுவத்துக்கான கொள்முதல் உள்பட்ட அனைத்தையும் மேற்கொள்கிறது. அப்படியான ராணுவக் கொள்முதலில் நாட்டுக்கு பீரங்கி வாங்கியபோதுதான் கமிஷன் வாங்கியிருக்கிறார்கள், இது உங்கள் வீட்டிலிருந்து உங்களுக்குத் தெரியாமல் செய்யும் திருட்டு ஆகாதா?”

முந்தைய மக்களவை பொதுத் தேர்தலில் 414 இடங்களில் வென்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், வி.பி.சிங்கின் பிரச்சாரத்துக்குப் பிறகு 197 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. அப்போது ஏற்பட்ட அரசியல் திருப்பம் அதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியால் முழு வலிமையை எட்ட சாதகமாக மாறவே இல்லை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மோடிக்கு சரியான போட்டி கார்கே

சமஸ் 17 Jan 2024

இந்திரா கூறிய கிச்சடி கதை

இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியை 1971இல் ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா, சோஷலிஸ்ட் போன்ற கட்சிகளும் இடதுசாரிகளும் தனித்தனியாக எதிர்த்தனர். மிகக் கடுமையான அந்த சூழ்நிலையில் இந்திரா காந்தி ஒரேயொரு பேச்சின் மூலம் மக்களுடைய ஆதரவைத் தன் பக்கம் திருப்பினார். “அவர்கள் அனைவரும் இந்திராவை நீக்குங்கள் என்று கோரி ஆதரவு கேட்கின்றனர். நான், வறுமையை நீக்குவோம் என்று கோரி ஆதரவு கேட்கிறேன். உங்கள் ஆதரவு யாருக்கு?” என்றார். மக்கள் இந்திரா காந்தியைத்தான் பெருவாரியாக ஆதரித்தார்கள்.

இந்தியாவிலிருந்து வறுமையை நீக்குவது அவ்வளவு எளிதல்ல என்று எல்லோருக்குமே தெரியும், எனவே யார் சொல்லியிருந்தாலும் அதை நம்பியிருக்க மாட்டார்கள். இந்திரா காந்தியை நம்பினார்கள். 1971ல் காங்கிரஸ் கட்சி 352 தொகுதிகளில் வென்றது; 1962 தேர்தலில் நேரு தலைமையில் காங்கிரஸுக்குக் கிடைத்த வெற்றிக்கு அருகில் இந்த வெற்றியும் இடம் பிடித்தது.

நாட்டின் ஜனநாயக உரிமைகளை முடக்கியும் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்தும் ‘நெருக்கடி நிலையை’ அமல் செய்ததால் 1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். பிறகு 1980இல் எப்படி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்? ஜனதா கட்சி தலைமையில் ஏற்பட்ட கூட்டணி ஆட்சியை ‘கிச்சடி அரசு’ என்று ஒற்றை வாக்கியத்தால் வர்ணித்து மக்கள் மனதில் பதிய வைத்தார், வெற்றி பெற்றார். 529 தொகுதிகளில் 353இல் வென்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

சோனியா கேட்ட ஒரே கேள்வி

வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசு 2004 மக்களவைத் தேர்தலில் அப்படியொரு தோல்வியைச் சந்திக்கும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. அரசுக்கு எதிராக பெரிய அதிருப்தி அலை இருப்பதைப் போலவே தெரியவில்லை. ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று கூறி மக்களிடம் தொடர்ந்து ஆதரவு கேட்டது பாஜக கூட்டணி. காங்கிரஸ் மிகுந்த சாமர்த்தியத்தோடு அந்தப் பிரச்சாரத்தை முறியடித்தது. சோனியா கேட்டார், “இந்தியா ஒளிர்கிறது – சரி, மக்களாகிய உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது, உங்களுக்கு என்ன பயன் அதில்?”

மக்களிடம் அது எடுபட்டது. 1989 தேர்தலில் வி.பி.சிங் ஏற்படுத்திய அரசியல் திருப்பு முனைக்குப் பிறகு முக்கியமான திருப்புமுனை, காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததுதான்.

அரை நூற்றாண்டு வரலாறு

மீண்டும் 1967 தேர்தல் களத்துக்குச் செல்வோம். அந்தப் பொதுத் தேர்தலில்தான் நாட்டில் காங்கிரஸின் செல்வாக்குக்கு சவால் விடும் வகையில் வெவ்வேறு மாநிலங்களில் வலுவான மாநிலக் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் தலையெடுத்தன. மக்களவையில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக 300க்கும் குறைவான இடங்களில்தான் வெல்ல முடிந்தது. ஆனால், அப்போது இந்திராவுக்கு இணையாக சொல்லக்கூடிய தலைவரோ, மாற்று அரசியல் திட்டமோ எதிர்க்கட்சிகளிடம் இல்லை. எனவே, அவற்றால் காங்கிரஸைத் தோற்கடிக்க முடியவில்லை. அப்போது எதிர்க்கட்சிகளால் எழுப்பிய பல முழக்கங்களில் ஒன்று, ‘இந்திரா தேரே சாஷன் மே, கூடா பிக் கயா ரேஷன் மே’. இந்திரா அவர்களே உங்களுடைய ஆட்சியில் குப்பையைக்கூட ரேஷனில் விற்கிறார்கள் என்று அதற்குப் பொருள்.

கேட்க ஆளில்லை என்பதால் ரேஷனில் குப்பை விற்கிறார்கள் என்றும் சொல்லாம், நீங்கள் மக்களுக்குத் தரும் உணவு தானியங்கள் உண்பதற்கு தகுதியற்ற குப்பை கூளங்களாக இருக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம். ஆட்சியை இழக்கவில்லை என்றாலும் பெரும்பான்மை வலிமையைவிட 21 தொகுதிகள் கூடுதலாக அதாவது 283 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸால் அப்போது வெல்ல முடிந்தது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?

சமஸ் 19 Dec 2023

சில மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. சில மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் உறுதியற்ற கூட்டணிகள் ஆட்சிக்கு வந்தன.

இறுதியாக 2014 பொதுத் தேர்தலுக்கு வருவோம். பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இணைந்து, “நாட்டை ஆள்வது ஊழல் மிகுந்த கட்சி, பிரதமர் பதவி வகிக்கும் மன்மோகன் சிங், சொந்தமான அரசியல் செல்வாக்கற்ற பொம்மை’ என்று மக்களுடைய மனங்களில் பதிய வைத்தன. “எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள், நல்ல காலம் நிச்சயம்” (அச்சே தின்) என்று வாக்களித்தார் மோடி. 2009 மக்களவை பொதுத் தேர்தலில் 206 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி என்ற அளவுக்கு அந்தத் தேர்தலில் சுருங்கிவிட்டது.

இந்தத் திருப்புமுனை தேர்தல் முடிவுகளிலிருந்து நாம் பெறக்கூடிய பாடமாவது, மிக்க வலிமையுடன் ஆட்சியில் இருப்பதைப்போலத் தோற்றமளிக்கும் கட்சியைக்கூட, புத்திசாலித்தனமும் தன்னம்பிக்கையும் மிக்க பிரச்சாரத்தால் தோற்கடிக்க முடியும் என்பதுதான். அதற்கு முதலில் மிகுந்த கற்பனா சக்தி வேண்டும், ஆட்சியில் இருப்பவர்களைக் கீழே இறக்கும் வகையில் மாற்று திட்டங்கள் வேண்டும், அதை மக்களுடைய மனங்களில் பதிய வைக்க வேண்டும், பிரச்சாரம் நம்பகமாக இருக்க வேண்டும், மாற்று திட்டங்கள் மட்டுமல்லாமல் மாற்றுத் தலைமையும் அவசியம். இவை எல்லாவற்றுக்கும் முன்னதாக ஓரிரு ஆண்டுகளாவது களத்தில் இறங்கிப் பணி செய்திருக்க வேண்டும்.

எதிர்க்கட்சி வேலையை யார் செய்வது?

ஆளுங்கட்சியைப் பதவியிலிருந்து நீக்க எதிர்க்கட்சிதான் முழு மூச்சுடன் வேலை செய்ய வேண்டும். நமக்காக செய்தி ஊடகங்கள் உழைக்க வேண்டும், நீதிமன்றங்கள் சாதகமான தீர்ப்புகளை வழங்க வேண்டும், மக்கள் அமைப்புகள் களமிறங்கி வேலை செய்ய வேண்டும், எதிர்க்கட்சி வேலையை மற்றவர்கள் கடுமையாக மேற்கொண்டால் நாம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைப்பது கூடாது.

மோடியை எதிர்க்கும் கட்சிகள் இப்போதும் இதைத்தான் செய்கின்றன, அப்படியென்றால் முடிவு எப்படி வரும்?

© த பிரிண்ட்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?
உதயமாகட்டும் கூட்டாட்சி இந்தியா
2024: யாருக்கு வெற்றி
காங்கிரஸ் குறிவைக்கும் 255 தொகுதிகள்
மோடிக்கு சரியான போட்டி கார்கே

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சேகர் குப்தா

சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர். முன்னதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘இந்தியா டுடே’ இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘தி பிரின்ட்’ இதழின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

5


பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Kamalikka   3 months ago

sir. பொய் சொல்லியாவது -ஆட்சியை கவிழ்க்க வேண்டும் - ? இது தான் நீங்கள் முன் வைக்கும் கருத்தியலா ?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Sivasankaran somaskanthan   3 months ago

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மாற்று தென்படவில்லை. உற்சாகத்துடன் உழைத்தால் அதற்கான பலன் நிச்சயம். ஆனால் யார் அப்படி இருகிறார்கள் ? பா. சிதம்பரம் அவர்கள் மக்கள் முன்பு போல போராட வருவதில்லை மாறிவிட்டார்கள் என்று கூறி இருந்தார். கடைசி பத்தி அதைதான் நினைவுறுதியது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பண்டைய வரலாறுதங்க ஜெயராமன்அரவிந்தன் கண்ணையன் கட்டுரைரயத்துவாரி முறைபிளவுபட்ட இரண்டு ஜனநாயகங்கள்லவ் ஜிகாத்நேரு குடும்பம்அறந்தை அபுதாகிர்நவீன எழுத்தாளர்கள்மது அருந்துவோர்சைபர் வில்லன்கள்கல்விக் கட்டமைப்புஅருஞ்சொல் இமையம் சமஸ்சீமாறுநயத்தக்க நாகரிகம்ஐன்ஸ்டைனை வென்றதற்காக நோபல் பெறுபவர்கள்வாங்கும் சக்திமற்றும்நீதிஉலக நாடுகளின் பாதுகாப்புஅரசுப் பேருந்துகள்ஸ்விக்கி ட்ரான்ஸியன்ட் ஃபெசிலிட்டிசெமி கன்டக்டர் தட்டுப்பாடுவிக்கிப்பீடியாவெங்கய்ய நாயுடுகாந்தி ஆசிரமம்: ஓர் அறைகூவல்மாநிலத்தின்வீழ்ச்சிவரலாறு உங்களை வாழ்த்தும் சோனியா!குடிமைப் பணித் தேர்வுநடைமுறைச் சிக்கல்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!