கட்டுரை, இலக்கியம், புத்தகங்கள் 5 நிமிட வாசிப்பு
சாரு மீதான தாக்குதல் தனி ஒருவர் மீதானதா?
எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்டுக்கு 1895இல் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. காரணம், அவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்று சொல்லப்பட்டது. அதுபற்றித் தன் படைப்புகளில் எழுதினார். அக்காலத்தில் பிரிட்டனில் தன்பாலின ஈர்ப்பு என்பது கடுமையான குற்றமாகக் கருதப்பட்டது. சிறைக்குச் சென்றபோது ஒயில்டின் வயது 40. இரண்டு ஆண்டுகள் அவர் சிறையில் காற்றாலையை இழுக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட அது செக்கிழுப்பதைப் போன்ற ஆளைக் கொல்லும் வேலை.
இந்தச் சித்ரவதையின் காரணமாக சிறையிலிருந்து வெளியே வந்தபோது உடல் நலிந்திருந்த அவர் உடனடியாக பிரிட்டனைவிட்டு வெளியேறி ஃப்ரான்ஸுக்கு வந்து அங்கேயே தங்கிவிட்டார். அப்போதெல்லாம் ஃப்ரான்ஸ்தான் உலக எழுத்தாளர்களின் புகலிடமாக விளங்கியது. மூன்று ஆண்டுகள் பாரிஸின் மிக மட்டமான ஓட்டல்களில் தங்கிய அவர், மதுபான விடுதிகளிலேயே தன் பொழுதையெல்லாம் கழித்து 45ஆவது வயதில் இறந்தார்.
அது நடந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் பாலியலை எழுதுவதற்கு எந்தத் தடையும் இல்லை. மதரீதியான விஷயங்களில் கை வைப்பதுதான் அப்போதும் இப்போதும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விஷயமாக இருந்துவருகிறது.
எழுத்துச் சுதந்திரம்
எழுத்துச் சுதந்திரத்தைப் பொருத்தவரை ஃப்ரான்ஸும் அமெரிக்காவும்தான் முன்னணியில் நிற்கின்றன. கேதரீன் மீலே எழுதி 2001இல் வெளிவந்த ‘த செக்ஸுவல் லைஃப் ஆஃப் காத்ரின் எம்’ (The Sexual life of Catherine M) ஒரு பெண் எழுதிய மிக வெளிப்படையான புத்தகம் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. அந்தப் புத்தகம் ஒரு ‘மெமோய்ர்’ (memoir). மூன்றாவது பக்கத்திலிருந்தே குழுவாகப் புணர்தல் பற்றிய விவரணைகளைக் கொண்ட அந்தப் புத்தகம் ‘ப்ரிக்ஸ் சேட்’ (Prix Sade) பரிசை வென்றது.
அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், அங்கே பாலியலைவிட சமூக விலக்கம் உள்ள விஷயம் போதை மருந்து (Narcotics). போதை மருந்தை உட்கொள்வதும் அதை வைத்திருப்பதும் விற்பதும் அமெரிக்காவில் மிகக் கடுமையான சமூக விரோத காரியமாகவும், நாற்பது ஐம்பது ஆண்டுகள் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது. ஆனால், அதே அமெரிக்காவில்தான் வில்லியம் பர்ரோஸ் ‘நேக்கட் லஞ்ச்’ என்ற நாவலை எழுதினார். பங்க்கர் மாதிரியான சிறியதொரு அறையில் ஆறு மாதங்கள் தங்கிக் கிடந்து தினமும் பல முறை போதை ஊசிகளைப் போட்டுக்கொண்டு அந்த அனுபவங்களை எழுதினார் பர்ரோஸ். சில சமயங்களில் கையில் ஊசி போட்டுக்கொள்ள இடம் கிடைக்காது என்று வருத்தப்படுகிறார் பர்ரோஸ். அந்த அளவுக்கு ஊசி போட்டு ஊசி போட்டுத் துளைகளாக ஆகியிருந்தன அவர் கைகள். அந்த அனுபவம்தான் ‘நேக்கட் லஞ்ச்’.
இந்த நாவலை யாரும் அமெரிக்காவில் தடைசெய்யவில்லை. ஏனென்றால், எழுத்தாளனின் படைப்பு என்பது அவனுடைய அறிக்கை அல்ல. அதை எழுதுவதன் மூலம் அவன் எல்லோரும் போதை ஊசி போட்டுக்கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்யவில்லை. கலை என்பது வேறு. அதைச் சாதாரண சட்ட திட்டங்களால் புரிந்துகொள்வது கடினம். ‘நான் என் உடம்பில் போட்டுக்கொள்ளும் ஒவ்வொரு ஊசியும் வியட்நாமில் அமெரிக்க ராணுவம் போடும் ஒவ்வொரு குண்டுக்குமான எதிர்ப்பு’ என்று கூறினார் பர்ரோஸ்.
அமெரிக்காவில் கேத்தி ஆக்கர் என்று ஒரு பெண் எழுத்தாளர் இருந்தார். அவர் எழுதியதையெல்லாம் இங்கே நான் மேற்கோள்கூட காட்ட முடியாது. அவருடைய ஒரு நாவலின் பெயரே ‘புஸ்ஸி’. மற்றொரு நாவலில் அது வெளிவரும்போது அதிபராக இருந்த கிளிண்டனின் ஆணுறுப்பைப் பற்றிக் கிண்டல் செய்து எழுதியிருந்தார் கேத்தி. யாரும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. அமெரிக்காவில் அந்த அளவுக்கு எழுத்துச் சுதந்திரம் இருந்தது.
அப்படிப்பட்ட அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் சாரு நிவேதிதா எழுதிய ‘ராஸ லீலா’ என்ற நாவலுக்கு கண்ணுக்குப் புலனாகாத ஒரு தடை வந்திருக்கிறது.
அமெரிக்காவில் ‘ராஸ லீலா’
ஆர்மரி ஸ்கொயர் என்ற நிறுவனம் அமெரிக்காவிலிருந்து ஒரு நாவல் போட்டியை இந்த வருடத்திலிருந்து நடத்த ஆரம்பிக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் நாவலை அந்நிறுவனம் வெளியிடும். அதுதான் விருது. இந்தப் போட்டிக்கு உலகெங்கிலும் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட படைப்புகள் அனுப்பப்படுகின்றன. ஏழு பேர் கொண்ட நடுவர் குழுவினர் ஏழு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து குறும்பட்டியலாக வெளியிடுகிறது. இந்த ஏழு படைப்புகளில் நந்தினி கிருஷ்ணனின் இரண்டு மொழிபெயர்ப்புகள் இடம்பெறுகின்றன. ஒன்று, நந்தினி மொழிபெயர்த்த உருது சிறுகதைகள். இன்னொன்று, சாரு நிவேதிதாவின் ‘ராஸ லீலா’.
சில தினங்களில் நடுவர் குழுவின் தலைவர் நந்தினிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். “எங்கள் நடுவர் குழுவினால் ஒருமனதாக விருதுக்குரிய படைப்பாக ‘ராஸ லீலா’ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, வாழ்த்துகள். எங்கள் அறிவிப்பு வரும்வரை இந்த விஷயத்தை வெளியிட வேண்டாம்.”
இந்தக் கடிதம் வந்தவுடனேயே இரண்டொரு தினங்களில் இன்னொரு கடிதம் வருகிறது. ‘ராஸ லீலா’வில் பாலியல்ரீதியான விவரணங்கள் இருந்தால் அதை மொழிபெயர்த்து அனுப்பவும். ‘ராஸ லீலா’வில் அப்படி எதுவும் இல்லை. அது ஒரு அரசாங்க குமாஸ்தா தன் அலுவலகத்தில் நடக்கும் அபத்தமான சம்பவங்களைப் பற்றி நினைவுகூரும் நாவல். இருந்தாலும் நாவலில் ஒரு இடத்தில் நாவலின் நாயகன் பெருமாள் தாய்லாந்தில் உள்ள செக்ஸ் கிளப்புக்குப் போகும் சம்பவம் இடம்பெறுகிறது. அந்தக் கிளப்பில் ஆங்காங்கே “இங்கே பணிபுரியும் பெண்கள் அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்” என்ற போர்டு தொங்குவதைப் பார்க்கிறான் பெருமாள். ஆனால், அந்தப் பெண்களைப் பார்த்தால் 16 வயதுதான் சொல்லலாம் போல் இருக்கிறார்கள். கிளம்பி வரும்போது ஒரு பெண்ணிடம் “உன் வயது என்ன?” என்று கேட்கிறான் பெருமாள். அவள் 16 என்கிறாள். கேட்டுக்கொண்டு வந்துவிடுகிறான்.
இதை மொழிபெயர்த்து அனுப்புகிறார் நந்தினி.
உடனே ஆர்மரி ஸ்கொயர் நடுவர் தலைவரிடமிருந்து நந்தினிக்குக் கடிதம்: “நீங்கள் அனுப்பிய பகுதியைப் படித்து எங்கள் முடிவை மாற்றிவிட்டோம். காரணம், இந்த விருதுக்குப் பக்கபலமாக இருக்கும் நிறுவனங்கள் ஆட்சேபணை செய்யலாம். மற்றும் ஏதாவது சட்டப் பிரச்சினை வரும் என்று அஞ்சுகிறோம். அதன் காரணமாக, ‘ராஸ லீலா’வுக்குத் தருவதாக இருந்த விருதைத் திரும்பப் பெறுகிறோம். மற்றபடி உங்கள் மொழிபெயர்ப்பு, நாவலின் தகுதி பற்றியெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை.”
மேலே குறிப்பிட்டுள்ள தாய்லாந்து செக்ஸ் கிளப் பகுதியில் சமூக விரோதமான கருத்து ஏதும் இருக்கிறதா? ஒரு நாட்டில் நடக்கும் சட்ட விரோதத்தைத்தானே நாவல் சுட்டிக்காட்டுகிறது? மேலும், இலக்கியம் என்பது நீதி போதனையாக இருக்க வேண்டும் என்று ஆர்மரி ஸ்கொயர் நடுவர்கள் எதிர்பார்க்கிறார்களா? ஷேக்ஸ்பியரிலிருந்து டி.ஹெச்.லாரன்ஸ், ஜான் ஜெனே வரை எழுதாத எதை ‘ராஸ லீலா’வில் எழுதிவிட்டார் அதன் ஆசிரியர்?
ஏன் இந்தப் புறக்கணிப்பு?
ஆர்மரி ஸ்கொயர் ஏன் இந்தப் போட்டியை நடத்துகிறது என்பதற்கு அந்த நிறுவனமே சொல்லியிருக்கும் விளக்கம் இங்கே குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் ஒரு ஆண்டில் 7,600 நூல்கள் பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருகின்றன. அதில் 64 நூல்கள்தான் தெற்காசிய மொழிகளிலிருந்து வரும் நூல்கள். இது ஒரு சதவிகிதத்துக்கும் கம்மி என்கிறது ஆர்மரி ஸ்கொயர். இந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சியே இந்த மொழிபெயர்ப்புத் திட்டம்.
ஆர்மரி ஸ்கொயரின் முதல் ஆண்டு செயல்திட்டம்தான் இப்படி நடந்திருக்கிறது. ஆர்மரி ஸ்கொயரின் செயல்பாடு பெருமாள்முருகனுக்கு நடந்த உயிர் அச்சுறுத்தலை எனக்கு நினைவூட்டுகிறது. முருகனுக்கு நடந்தது கொலை மிரட்டல். அவர் உடலின் மீதான அச்சுறுத்தல் அது. இப்போது ஆர்மரி ஸ்கொயர் செய்திருப்பது இலக்கியக் கொலை. ஒரு நாவல் வெளிவரும் முன்பே அதைக் கொல்லும் செயல்.
நான் ஒரு பதிப்பாளர் என்ற முறையில் சொல்கிறேன், ஒரு இலக்கியப் படைப்பு அதன் நீளம் கருதியோ அல்லது வேறு காரணங்களினாலோ உலகம் முழுவதும் இன்று சுருக்கப்படுகிறது, எடிட் செய்யப்படுகிறது. அதற்குப் பெரும்பாலான எழுத்தாளர்கள் யாரும் மறுப்பு சொல்வதில்லை. அப்படியிருக்கும்போது ‘ராஸ லீலா’ நாவலின் மொழிபெயர்ப்பாளருக்கும், அதன் ஆசிரியருக்கும் அந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. “எடிட்டிங் செய்வதற்கான நேரமும் காலமும் எங்களுக்கு இல்லை” என்று நந்தினிக்கு எழுதுகிறார் நடுவர் குழுத் தலைவர். (இந்தக் கடிதப் போக்குவரத்து அனைத்தும் நந்தினியின் ட்விட்டர் பக்கத்திலும் சாருவின் ப்ளாகிலும் காணக் கிடைக்கின்றன).
இந்தக் கடிதப் போக்குவரத்து எல்லாம் வெளியிடப்படக் கூடாதவை என்று ஆர்மரி ஸ்கொயர் சொல்வதற்கான தார்மீக உரிமையை அந்த நிறுவனம் இழந்துவிட்டது. ஓர் இலக்கியக் கொலையைச் செய்துவிட்டு, அதை வெளியில் சொல்லாதீர்கள் என்று சொல்வது அறம் அல்ல இல்லையா? அதனால்தான் நந்தினி அக்கடிதப் போக்குவரத்தையெல்லாம் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
‘ராஸ லீலா’வை வெளியிட்டால் ஆர்மரி ஸ்கொயருக்கு என்ன சட்டச் சிக்கல் ஏற்படும்? சாருவின் அத்தனை நூல்களையும் படித்திருப்பவள் என்கிற முறையில் சொல்கிறேன், மிகக் குறைவான பாலியல் விவரணைகள் கொண்ட நாவல் ராஸ லீலா. அப்படியிருக்கும்போது ஏழு நடுவர்களும் ‘ஏக மனதாக’ விருதுக்குத் தேர்ந்தெடுத்த ஒரு நாவலை சில தினங்களில் நிராகரிக்கிறார்கள் என்றால் இடையில் நடந்தது என்ன?
எடிட்டிங் என்பது வேறு, தணிக்கை என்பது வேறு. அதிலும் நாவலை முழுமையாகப் படிக்காமல் தணிக்கைக்கு உட்படுத்துவதும் நிராகரிப்பதும் – அதிலும் விருதுக்குத் தேர்ந்தெடுத்த பிறகு – அமெரிக்க ஏகாதிபத்திய மனோபாவம் அல்லவா? ஏனென்றால், அவர்களேதான் சொல்கிறார்கள், 7,600 நூல்களில் வெறும் 67 நூல்கள்தான் தெற்காசிய மொழிகளிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்கின்றன என்று. பத்திரிகைத் துறையில் ‘கில்’ என்று ஒரு வார்த்தை உண்டு. தேவையில்லாத கட்டுரைகளை நீக்கிவிடு என்று பொருள். நேரடி அர்த்தம் கொன்றுவிடு. அதே காரியத்தைத்தானே ஆர்மரி ஸ்கொயர் நிறுவனமும் செய்கிறது?
ஏகாதிபத்தியம்…
ஏகாதிபத்திய மனோபாவம் என்பது மிகவும் கடுமையான வார்த்தை. ஆனால், நடந்திருப்பது அதுதான். நான் ஒரு பதிப்பகத்தின் பங்குதாரர். நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சாரு நிவேதிதாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான ‘மார்ஜினல் மேன்’ நாவலை வெளியிட்டோம். நாங்கள் மூன்றாம் உலக நாட்டின் ஒரு மூலையில் இயங்கும் பதிப்பகம். நாங்கள் வெளியிட்டால் அது விருது அல்ல. கிட்டத்தட்ட இங்கே வெளியிடப்படும் ஆங்கில நூல்கள் நம்முடைய பீரோக்களிலேயே அலங்காரமாக அடுக்கப்பட்டுக் கிடக்கின்றன.
ஆனால், அமெரிக்க நிறுவனமோ பிரிட்டிஷ் நிறுவனமோ ஒரு நூலை வெளியிட்டால் அதற்குப் பெயர் விருது! அதற்கு ஒரு குறும்பட்டியல். அதற்கு ஒரு சட்டச் சிக்கல். அமெரிக்காவிலோ பிரிட்டனிலோ வெளியிட்டால் அந்த நூல்கள்தான் சர்வதேசப் போட்டியிலேயே இடம்பெற முடியும்! இங்கே மூன்றாம் உலக நாடுகளில் வெளியிடும் நூல்களை நாம் புக்கர் பரிசு போன்ற சர்வதேச விருதுகளுக்கு அனுப்பவே முடியாத நிலைமையில் இருக்கிறோம். இந்த நிலையில்தான் ஆர்மரி ஸ்கொயர் போன்ற நிறுவனங்கள் நம்மை மேலும் ஒடுக்குகின்றன.
ஆர்மரி ஸ்கொயரிலிருந்து நந்தினி கிருஷ்ணனின் குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் பதில் இல்லை. என்ன நடந்தது என்று விளக்க வேண்டிய பொறுப்பு ஆர்மரி ஸ்கொயர் நிறுவனத்துக்கு இருக்கிறது. ஏற்கெனவே சுரண்டப்பட்டுக் கிடக்கும் மூன்றாம் உலக நாடுகளின் எழுத்தாளர்களை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் ஆர்மரி ஸ்கொயரின் செயல்பாடு மிகவும் கண்டனத்துக்கு உரியது.
சமீபத்தில் புக்கர் பரிசுக்கான குறும்பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள புத்தகங்களின் தகுதி பற்றிக் குறிப்பிடுகையில் தேர்வுக் குழு சொல்வது: “இந்தக் கதைகள் செக்ஸியாகவும் ரசிக்கக்கூடிய வக்கிரமாகவும் (nicely perverse) உள்ளன” என்றும் சொல்கிறது. ஆனால், ஆர்மரி ஸ்கொயர் ஜூரிகளோ இன்னும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே வாழ்கிறார்கள் அல்லது இங்கிருக்கும் அவர்களின் நண்பர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்!
தொடர்புடைய கட்டுரைகள்
எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: சாரு
எழுத்துச் செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டி
ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டி
டி20, ரீல்ஸ் மாதிரி எழுத்திலும் வரும்: சாரு

4



1



பின்னூட்டம் (5)
Login / Create an account to add a comment / reply.
infant reader 2 years ago
வெறும் பதினைந்து பக்கங்களை மட்டுமே படித்துப் பார்த்து நாவலை தேர்வு செய்யும் முறை வினோதமாகத் தான் இருக்கிறது. அத்தகைய விருதின் தகுதி என்னவாக இருக்க முடியும். இத்தகு பொருட்படுத்தவே கூடாத தேர்வுமுறை கொண்ட ஒரு விருதுக்குத் தான் இத்தனை தொடர் விவாதங்களா அன்பு காயத்ரி!
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Krishnan R 2 years ago
மேலை நாடுகளுக்கு ஒரு தெற்கு ஆசிய எழுத்தாளனையோ அல்லது ஒரு நூலயோ அறிமுகம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு சாருவை தேர்ந்து எடுப்பதே ஒரு அபத்தம். தமிழில் நல்ல எழுத்தாளர்கள் உள்ளனர். சாரு ஒரு மனிதனின் தேடலை ஆன்மீக தத்தலிப்பை எந்த விதத்திலும் எழுதியது இல்லை. இதை சொல்வதனால் நான் பூமர் என்று நினைத்து விட வேண்டாம். என் வயது 27
Reply 1 1
Login / Create an account to add a comment / reply.
Thiruvasagam 2 years ago
உங்கள் பதிப்பகம் வழியே வெளியிட்டதன் காரணமாக, சாருவுக்கு JCB இலக்கிய விருது கிடைக்கப் பெறவில்லை என்பதை அவரே குறிப்பிட்டுள்ளார்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Krishnamoorthy Muniyappan 2 years ago
ஒட்டுமொத்த கட்டுரையிலும் கவர்ந்த வரிகள் இதுதான், குறிப்பாக இரண்டாவது பகுதி ''ஆர்மரி ஸ்கொயர் ஜூரிகளோ இன்னும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே வாழ்கிறார்கள் அல்லது இங்கிருக்கும் அவர்களின் நண்பர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்!''
Reply 1 1
Krishnan R 2 years ago
தலைவா இதுல புடிக்க என்ன இருக்கு. நீ ஒரு இலக்கிய வாசகன் தானா
Reply 0 2
Login / Create an account to add a comment / reply.