கலை, கவிதை, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

மாயக் குடமுருட்டி: வெற்றிடத்தின் பாடல்கள்

ஆசை
10 Sep 2023, 5:00 am
0

        இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது

                           - அரிஸ்டாட்டில்

1. பரவசம்

மொக்கைக் கவ்விக் கவ்விப் 
பிடித்து வைக்கப்பார்க்கிறது
உள்யோனி

வெற்றிடத்தின் பரவசத்தில்
மின்னலை வீசிவிட்டு
வெளிவந்த குறி
உள்ளே கண்டது
ஏதும் சொல்லவில்லை
வெளியே

வெற்றிடம் இப்போது
என்ன நினைத்துக்கொண்டிருக்கும்
வெற்றிடம் இப்போது
என்ன நினைத்துக்கொண்டிருக்கும்

இதுதான் என் 
ஒரே எண்ணம்

2. பால்

வெற்றிடத்தைச் 
சாதாரணமாக நினைக்க வேண்டாம்
அதன் உள்ளே எந்தப் பாறை 
நுழைந்து பார்த்தாலும்
தனக்கான பாலை
அதிலிருந்து கறந்துவிடும்

3. விரியும் அலை

வெற்றிடத்தில் குதிப்பது எது
வெற்றிடத்திலிருந்து வெளிப்படுவது எது
வெற்றிடத்தை விரிப்பது எது
வெற்றிடத்தைச் சுருக்குவது எது
வெற்றிடத்தின் மையத்திலிருந்து
விரியும் அலையில் மிதப்பது எது
வெற்றிடம் யாருடைய யோசனை
வெற்றிடத்தில் உலவும் செய்தி எது 
அதைத் தடவிப் படிக்கும்
விரல்கள் எங்கே

4. விரித்தலும் சுருக்குதலும்

நான் ஒரு வெற்றிடம் ஆகிறேன்
என்று நினைக்கவே
எவ்வளவு ஆனந்தம்
அப்படி இல்லையென்றாலும்

எனக்குத் தெரியும்
இல்லாமல் வேண்டுமானால் ஆகலாம்
ஒருபோதும் வெற்றிடம்
ஆக முடியாது

ஏனெனில் 
இருப்பது ஒரே ஒரு வெற்றிடம்
நாமெல்லாம் அதை விரிக்க வந்தவர்கள்
இல்லையெனில்
சுருக்க வந்தவர்கள்

5. தெளிவு

முழு வெற்றிடத்தை
இயற்கை வெறுக்கிறது
என்கிறார்கள்

முழு வெற்றிடமென்று
ஒன்றில்லையென
தெளிவாகச் சொல்லியிருக்கலாம்தான்

ஆனால்
கவிதை தெளிவை வெறுக்கிறது

நான்கூட
தெளிவென்று ஒன்றில்லையென
தெளிவாகச் சொல்லவில்லை பாருங்கள்

இந்தக் குழப்பம்
வெற்றிடம் தோன்றியபோதே 
தொடங்கியிருக்கலாம்

6. பெருங்குழப்பம்

தெளிவாக 
ஒன்றே ஒன்று சொல்லலாம்
வெற்றிடத்தின் செய்தி
குழப்பம்

குழப்பம் குழப்பம் குழப்பம்
பெருங்குழப்பம் பெருங்குழப்பம் பெருங்குழப்பம்1
பேரண்டம்

7. நிற்கிறதா போகிறதா

கைகள்
முன்னே உள்ள
கணினித் திரை
ஜன்னல் வழி தெரியும் 
வேப்ப மரம்
பக்கத்து வீடு
எல்லாம் தெரிகின்றன
தெளிவாக

பின் எங்கே வந்தது
தெளிவின்மையும்
அதைப் பெற்றெடுத்த வெற்றிடமும்
என்று கேட்கலாம்

உங்களை
என்னைச் 
சுற்றிலும்
உங்களுக்கு
எனக்கு உள்ளேயும்
விரிந்திருக்கும்
வெற்றிடத்தை
அதாவது பூரண வெற்றிடமல்லாத
வெற்றிடத்தை
எல்லைகள் தடுக்காது
என்கிறார்கள்

அதற்கு நீங்களும் நானும்
ஜன்னல்வழி மரமும்
பக்கத்து வீடும்
ஒரு பொருட்டே இல்லை
என்கிறார்கள்

நியூட்ரினோக்களைப் போன்றது அது
ஏதும் தடுக்க முடியாது
என்கிறார்கள்

ஒரே வேறுபாடு
நியூட்ரினோக்கள் செல்கின்றனவா
நின்றுவிடுகின்றனவா
என்று சொல்லிவிட முடியும்
இந்தப் பூரணமற்ற வெற்றிடமோ
நிற்கிறதா செல்கிறதா
என்று சொல்லிவிட முடியாது
என்கிறார்கள்

இரண்டையும் ஒரே நேரத்தில்
செய்யலாம்
போய்க்கொண்டே ஒன்றுக்கு இருப்பதுபோல
அல்லது
போகவும் போகாமல்
ஒன்றுக்கும் இருக்காமல் இருக்கலாம்
என்கிறார்கள்

8. திராணியுள்ள நுண்மை

பூரணமற்ற வெற்றிடத்தை நம்பியே
இவ்வளவு திமிர் கொள்கிறது
நியூட்ரினோ
தடுக்க ஆயிரம் ஆள்படை அம்புகள்
வந்தாலும்
கை விட்டுவிட்டுக் கண்மூடிக்கொண்டு
காலையும் தூக்கிக்கொண்டு
ஊடே
ஹாயாக சைக்கிள் விட்டுச் செல்கிறது

தடுக்கும் திராணியுள்ள
நுண்மையைத் தேடிச் செல்கிறது 

கோடானுகோடி தருணங்களில்
ஒரு தருணம்
ஏதோ ஒன்றைத் தட்டி
ஒளி விடும்போதுதான்
நியூட்ரினோ கடந்ததை அறிகிறோம்
அதற்காக மலைகளைக் குடைகிறோம்
துருவ உறைபனிகளைக் குடைகிறோம்
உள்ளே உணர்பொறிகள் புதைக்கிறோம்

அதேபோல்
அதேபோல்
வெற்றிடம் தட்டி
ஒளி விடக் காண வேண்டுமடி குதம்பாய்

எத்தைத் தோண்டி
எத்தைப் புதைத்தால்
வெத்தொளிரக் காண்பேனடி குதம்பாய்

9. நீட்ஷேவின் வெற்றிடம்

பேரரசர் பிரெடெரிக்கின் மரணத்துக்கு
அவர் அறையில்
உருவான பூரண வெற்றிடமும்
ஒரு காரணமாக இருக்கலாம்
என்று யோசிக்கிறான்
உம்பெர்த்தோ எக்கோவின் நாயகன்
பௌதோலீனோ2

ஆகவேதான் இயற்கை மட்டுமின்றிக்
கடவுளும் வெறுக்கிறார்
பூரண வெற்றிடத்தை
தன்னை அது கொன்றுவிடுமென்று

நீட்ஷே அப்படித்தான்
ஒரு பூரண வெற்றிடத்தை உருவாக்கித்
தன் கடவுளைக் கொன்றார்

10. தலைக்காவிரி

பூரணமற்ற வெற்றிடத்திலிருந்தே
புறப்படுகிறது காவிரி
இதனால்தான் சொல்கிறேன்
தலைக்காவிரி என்று ஏதும் இல்லையென

பூரண வெற்றிடமென்று
ஒன்று இருந்திருந்தால்
தலைக்காவிரியும் தெளிவாகத் தெரிந்திருக்கும்

காவிரி ஒரு
முனை மழுங்கி

இடையே பார்த்து
இடையே குளித்து
இடையே அதில் கரைந்து
போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்

11. ஒளிதிறப்பு

குடமுருட்டியில் 
மிதந்துவரும்
குடாகாசத்தின் வெற்றிடம்
ஒரு கண்

அது வெறித்துப் பார்க்கிறது
மகாகாசத்தின்
வெற்றிடத்தை

மகாகாசத்தின் வெற்றிடமும்
ஒரு பெருங்கண்

அது குடாகாசத்தின்
உள்ளே போய்
விழிக்கிறது

குடாகாசத்தைத் தட்டி
மகாகாசம் உடைந்து
உள்ளும் வெளியும்
திறக்கிறது
வெற்றிடத்தின் ஒளி

    (‘மாயக் குடமுருட்டி’ நெடுங்காவியத்தின் முதல் பாகம் நிறைந்தது)

 

குறிப்புகள்

1. பெருங்குழப்பம் – Entropy
2. பௌதோலீனோ – இத்தாலிய நாவலாசிரியர் உம்பெர்த்தோ எக்காவின் ‘Baudolino’ நாவல்

 

தொடர்புடைய கவிதைகள்

மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்
மாயக் குடமுருட்டி: அண்ணனின் தூண்டிலைத் திருடிய அப்பா
மாயக் குடமுருட்டி: கருப்பு சிவப்பாய் ஒரு ஆறு
மாயக் குடமுருட்டி: ஒளிதான் முதல் நினைவு
மாயக் குடமுருட்டி: மகமாயி
மாயக் குடமுருட்டி: பஞ்சவர்ணத்தின் பருக்கைகள்
மாயக் குடமுருட்டி: கர்த்தநாதபுரம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


1






ந.முத்துசாமிதாய்மையைத் தள்ளிப்போடும் இத்தாலிய மகளிர்!பைஜூஸ் ஊழியர்கள்ஸ்டாலின் ராஜாங்கம் கட்டுரைசூத்திர இனம்கோயில் திறப்பு விழாடெல்லி பல்கலைக்கழகம்வைக்கம் வீரர்கோர்பசெவ் ஆண்டுகள்பத்திரிகையாளர் கலைஞர்சுற்றுச்சூழலியல்திருமாஇஸ்லாமியக் குடியரசுஇந்தியக் குழந்தைகளின் இன்றைய நிலைதாய்மொழி மதிப்பெண்காசாராதிகா மெர்ச்சன்ட்தணிக்கைச் சட்டம்தேசிய வருவாய்நேடால் இந்தியக் காங்கிரஸ்முகமதி நபிதருமபுரிவிவசாயிகள் போராட்டம் எப்படித் தொடர்கிறது?ஜோஸே ஸரமாகோஅரசுப் பணிகள்தொழில் சாம்ராஜ்ஜியம்ராஜாஜி சமஸ்சிஈஓலால்தன்வாலாஅகவிலைப்படி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!