கலை, கவிதை, இலக்கியம் 4 நிமிட வாசிப்பு

மாயக் குடமுருட்டி

ஆசை
18 Jun 2023, 5:00 am
1

ந்து ஆறுகள்: குடமுருட்டி, காவிரி, பாமணியாறு, சோழசூடாமணி ஆறு, புதாறு!
ஒரு கடல் - வங்காள விரிகுடா!
இரண்டு வெவ்வேறு நிலங்கள் - ஒருங்கிணைந்த தஞ்சை, சென்னை!
ஒரு ஆகாசம்!
எதிலும் மூழ்காமல் குமிழியிட்டோடும் ஒரு குடும்பத்தின் 70 ஆண்டுகள் கதை!
ஒரு காவியம்!

மாயக் குடமுருட்டி

“ஒருத்தனை மூவுலகொடு தேவர்க்கும்
அருத்தனை அடியேன் மனத்துள்ளமர்
கருத்தனைக் கடுவாய்ப் புனலாடிய
திருத்தனைப் புத்தூர் சென்றுகண்டுய்ந்தேனே.”

                                -திருநாவுக்கரசர்

1. தனியுருட்டி

சிறுவனாய்க் குளிக்கப் போன
அப்பாவை
இழுத்துச் சுருட்டி
உருட்டிக்கொண்டு போனதாம்
குடமுருட்டி

மலங்கழித்துக் கொண்டிருந்த
யாரோ
மாக்கடியென்று குதித்து
முடி பற்றிக்
கரையிழுத்துப் போட்டாராம்

அன்று
இன்னொரு குடமுருட்டி
ஓட ஆரம்பித்தது

2. மலத்தின் பாதை

அந்த யாரோ
அந்த யாரோ
இந்தக் கரையிலா
அந்தக் கரையிலா

எழுபது
ஆண்டுகள்
கழிந்திருக்கும்
எனினும்
உயிர் பற்றி
இன்னும்
இழுக்கிறது
அவர் கை

நெடுங்காலம் கடந்தும்
நடுங்கலையே தருகிறது
அப்பற்றல்

கரைக்கும்
நீருக்கும் இடையில்
உயிர்க்கோட்டினை இழுக்கும்
இடைவிடாத பதற்றம்
அது

என் உயிர்
என்பது ஒன்றுமில்லை
யாரோ ஒருவரின்
மலங்கழிக்கும் உந்துதல்தான்

அவ்வுந்துதலின்
கரைகளில்
பயணிக்கிறேன்
பயணிக்கிறேன்

பயணித்து வந்த இடம்
தன் பாதி வழியில்
குடமுருட்டி
பெயரிழக்குமிடம்

இனி குடமுருட்டி
இல்லை
சோழசூடாமணியாய்
புதாறாய்க் கிளைத்து
அவள் தன் உருட்டை
இழக்கிறாள்

நான் இருக்கிறேன்
குடமுருட்டியே
உன் பெயர் நீள
பாய்வு நீள

3. தண்ணீரும் காவிரியே

காவிரியின் நற்பேறு
காவிரிக்கு மட்டும்தான்
அவள் பிள்ளைகளுக்கல்ல

காவிரி கடைசி வரைக்கும்
காவிரிதான்
அவள் கரையெல்லாம்
காவிரிதான்
ஊற்றெல்லாம்
காவிரிதான்
தொட்டித் தண்ணீரும்
காவிரிதான்
தண்ணீரெல்லாம்
காவிரிதான்

பாதி வழியில்
மறையும் குழந்தைகள்
முக்கால் வழியில் கரையும்
குழந்தைகள்
இருவர் ஒருவராய்
மாறும் குழந்தைகள்
உண்டு உனக்கு

நீயோ
அத்தனை பிள்ளைகள்
பெற்றுப் போட்டும்
இளைக்காமல் சளைக்காமல்
யவ்வன நடை
நடந்தாய்
வாழி காவிரி

காவிரியின் நற்பேறு
காவிரிக்கு மட்டும்தான்
அவள் பிள்ளைகளுக்கல்ல

4. இடைவு

குடமுருட்டி

மலையில் தொடங்கவில்லை
கடலில் முடியவில்லை
இடையில் இருப்பவள் மட்டுமே
நீ

இடைவின் புதைகுழியிலிருந்து
பூப்பறிக்கிறது
ஒரு கை

பூப்பூவாய்ப்
பூக்கிறது

5. சுழிவு

உன் தூரத்துச் சகோதரி
பாமணியாற்றங் கரையில்தான்
என் வீடு

உன் பெயரும்
உன்னைப் பற்றிய
கதைகளும்
அப்பாவின்
வாயிலிருந்து
அடிக்கடி உருளும்

நீரள்ள வரும்
பெண்களின் குடங்களை
உருட்டிக்கொண்டு
போய்விடுவாயாமே

நீ சுழித்தோடும் பரப்பே
குடம் பல மூழ்கிச்
சுழன்றோடுவது
போல் இருக்குமாமே

பிணங்களின் பிட்டம் மட்டும்
வெளித்தெரிய
குடம் கவிழ்த்தாற்போல்
சுற்றிச் செல்லுமாமே

என் அப்பாவையும்
குடமென்று
நினைத்தாயோ

நீரை நிரப்பியிருப்பாய்
அதற்குள்
வாழ்வை நிரப்பியொரு கை
இழுத்துப் போட்டதென்று
உனக்கு
இன்னும் வருத்தமா

இதோ நான் நிற்கிறேன்
இழுத்து நிரப்பிக்கொள்
என்னை
எப்படி நீ
குடமாக்குவாய் என்று
பார்க்க வேண்டும் நான்

6. தைலதாரை

குறையாக் குடத்துக்கும்
நிறையாக் குடத்துக்கும்
தீரா துவந்தம்

துவந்தத்தின் மேல்
பாலம் கட்டி
பாலத்தின் நடுவிலிருந்து
இரு புறமும்
ஒரே சமயம்
உருள்கிறது
உடையாக் குடம்

வாழ்வின் தளும்பலோசை

7. ‘கெர்ப்பப்பை’

என்ன கண்ணு பாக்குற
அது அம்மா
கும்பிட்டுக்கோ

பொறப்பெடுத்த எத்தனையோ பேர
மறுபடியும் தன் வயித்து சிசுவாக்கிக்க
ஆசைப்படுற
அம்மா

அதோட ஒவ்வொரு சுழலும்
அதோட கெர்ப்பப்பை
மொட்டு மொட்டாப்
பூத்து வரும்
புள்ளை கிடைச்சா
வாரிச் சுருட்டிக்கும்

‘அவளோட கெர்ப்பப்பை வாசம்
இருக்குற
குழந்தைங்கதான்
அவளைப் பாக்க
வருவாங்க
அதான் நீ வந்திருக்கே

‘கும்பிட்டுக்கோ ஐயா
ராசவடுவு

8. மூழ்குவேனென்று நினைத்தாயோ

நீ யார் பாட்டி
உன் பெயர் என்ன
மாயக் குடமுருட்டியா
கரைக்கே வந்துவிட்டாயா
கைப்பிடித்துக்
கூட்டிச்சென்றிடுவாயா

வேண்டாம் பாட்டி
உன் கைக்கும்
அன்று முடி பிடித்த கைக்கும்
இடையே நான்
ஓடிக்கொண்டிருக்கிறேன்
எனக்கே வாய்த்த
சிறு நிரந்தரத்தில்

நானும்
சோழசூடாமணியாய்
புதாறாய்
என் பாதி வழியில்
பெயரிழக்கும் தருணம் வரை
ஓடிக்கொண்டிருந்துவிட்டுப்
போகிறேன்

குடமுருட்டியில்
மூழ்க அல்ல
குடமுருட்டி
ஆக வந்தவன் நான்

அப்படியே ஆகட்டும்
என் வாழ்வு

9. சவாரி

வெளிப்படுத்தாமல்
அமுக்கி வைத்த சுழிப்புகள்
எத்தனையோ
என்னிடம்
கையளித்துச் சென்றுவிட்டார்
அப்பா

அவற்றுள்
ஒன்றிரண்டாவது
குமிழியிட்டுப் பின்
குழந்தைகளுக்கு
விட்டுச்செல்வேன்

குடமுருட்டிச் சவாரி
அவர்களுக்கானது

எங்களைச் சிறைவைக்க நினைத்த
கருப்பைகளைக் குதிரையாக்கித்
தட்டிப் புழுதி பறக்க
ஓட்டிச்செல்வார்கள்
அவர்கள்

10. பாமணியாறு

அன்று ஆற்றங்கரையில்
வீடிருந்த காலம் தொட்டு
இன்று கடற்கரையில் வீடிருக்கும்
காலம் வரை
நீச்சலறியாக் குழந்தை நான்
இது தூரத்துக்
குடமுருட்டியின்
இழுப்பன்றி வேறென்ன

பத்து முறை மூழ்கியும்
ஒவ்வொரு முறையும்
வந்துவிடுகிறது
ஒரு கை

பாமணியாறு நீயல்ல
அதற்குக் குடங்களை உருட்டிப்
பழக்கமில்லை
அடித்து ஆழத்தில் முக்கும்
இல்லையேல்
விலக்கிக் கரைமேல்
போடும்

இந்த
இரண்டுக்கும் நடுவே
ஒரு கதவு திறந்து
ஒரு பாதை தெரிய
ஒவ்வொரு முறையும்
கேட்டிருக்கிறேன்
உன் தீனமான குரலை

அதற்குள்
இழுத்துக் கரையில் போடப்பட்டு
அரைமயக்கத்தில் கிடந்தாலும்
நான் வியந்துகொண்டிருந்தது
எல்லா ஆறுக்குள்ளிருந்தும்
எல்லா நீருக்குள்ளிருந்தும்
நீளும் உன் பாதை பற்றித்தான்

11. குறுநண்டுச் சிரிப்பு

குடமுருட்டி

மேலும் மேலும்
நீச்சலின்மையைக் கற்றுக்கொடுக்க
உன் தூரத்துச் சூழ்ச்சியை இன்றுவரை
உணர்கிறேன்

வங்கக் கடல் அழைக்கிறது
கால்பிடித்து இழுக்கிறது
அலைவிலகி நீர்வடிய
தரைப்பரப்பில்
குடம்குடமாய் நீர்மொட்டுகள்
உனைக் காட்டி
வெடித்து மறையும்

மொட்டிருந்த தரையெல்லாம்
குறுநண்டுகள்
குப்பென்று பூத்து
வெளியோடும்

12. ஆகாசம்

குடம்
குடமுருட்டி
குடா
குடாகாசம்

ஆகாசம்
மாபெரும் குடமுருட்டி
கூத்தாடிக் கூத்தாடி
ஆகாசம்
போட்டுடைப்பேன்டி

 

(குடமுருட்டிக்குத் தனிக் காலக்கோடு கொடுத்த அந்த யாரோ ஒருவரின் கைக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்)  

குறிப்புகள்:

குடமுருட்டி

இந்த ஆறு திருக்காட்டுப்பள்ளியில் காவிரியிலிருந்து பிரிகிறது. பழந்தமிழில் இதற்கு ‘கடுவாய்’ என்று பெயர். திருநாவுக்கரசர் ‘திருக்கடுவாய்க்கரைப் புத்தூர்’ பதிகமே பாடியிருக்கிறார். குடவாயில் அருகேயுள்ள கீழ விடையல் என்ற ஊரில் சோழசூடாமணி ஆறு, புதாறு என்று குடமுருட்டி இரண்டாகப் பிரிகிறது. அந்த ஊர் தி.ஜானகிராமனின் சொந்த ஊர் என்பது சிறப்பு.

பாமணியாறு

நீடாமங்கலம் அருகே மூணாற்றுத் தலைப்பு என்ற இடத்தில் வெண்ணாறு மூன்று ஆறுகளாகக் கிளைக்கிறது. அவை: வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு. பாமணியாறு மன்னார்குடி வழியாக ஓடிக் கோரையாற்றுடன் சேர்ந்து முத்துப்பேட்டையில் கடலில் கலக்கிறது. ‘இருவர் ஒருவராய் மாறும் குழந்தைகள்’ என்ற வரி இதையே குறிக்கிறது.

 

தொடர்புடைய கவிதைகள்

மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


1

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

பூவிதழ் உமேஷ்   11 months ago

மிகச்சிறப்பான சொல்லோவியம் - முதல் வாசிப்பில் தனித்துவமான ஒரு மயக்கத்தை மாயத்தை உருவாக்கிவிடும் தனித்த பண்பு கவிதைக்கு உண்டு அதை இந்த மாயக் குடமுருட்டி மிகச்சிறப்பாக செய்கிறது. வாழ்த்துக்கள். 💙💙

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கி.வீரமணிஇந்திய ஒன்றியம்அப்பாவுவின் யோசனை ஜனநாயகத்துக்கு முக்கியமானதுபுஞ்சைஅச்சத்தை மறைக்கப் பார்க்கிறது அரசுபெரியார் - லோகியா சந்திப்பு: முக்கியமான ஓர் ஆவணம்அரசு வேலை பெற அலைமோதும் சீன இளைஞர்கள்ஜூலியஸ் நைரேரேஅறத்தின் குரல்துறைமுகம்ஆகார் படேல்how to write covering letter for job applicationஉலகின் மனநிலைமுகம் பார்க்கும் கண்ணாடிசனாதனம்சின்னம்ரயத்துவாரி முறைரோவான் ஃபிலிப் பேட்டிஅண்ணாமலைபாடத்திட்டம்குஹா கட்டுரை அருஞ்சொல்வ.ரங்காசாரிநடிகர்கள்ஜல்லிக்கட்டுமாநிலக் கொடிமுதல் என்ஜின்ஜெய்பூர்ப்ராஸ்டேட் வீக்கம்ஹிண்டன்பர்க் அறிக்கைமுகைதீன் மீராள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!