கலை, கவிதை, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

மாயக் குடமுருட்டி: மகமாயி

ஆசை
20 Aug 2023, 5:00 am
0

ஓவியங்கள்: ஜோ.விஜயகுமார்

        ‘அருண கிரண ரூபம்
        அக்னி கேசம் கரண்டம்
        டமருக தரசூலம்
        கபாலம் கட்க ஹஸ்தம்
        அனல நயன நாகம்
        ஆசனம் பத்ம பீடம்
        அகில புவன மாதா
        சீதளம் மாரி ரூபம்’

              - மாரியம்மன் குறித்து இரத்தின
                 தேசிகர் இயற்றிய பாடல் 1

1. கண்காணா தெய்வம்

பிறந்து ஐந்தாம் மாதம்
ஒளியைப் பிடித்துத் தின்ற
குழந்தை அது
தன் பாப்பாவின்
வயிற்றிலிருக்கும்போது
அதை முற்றிலும்
இருளாக்க
நினைத்தார் 
ஒரு மருத்துவர்

ரகசியமாய்
அதன் தந்தையை அழைத்த
செவிலி
‘டாக்டர்
வீடு கட்டுகிறார்
பணமுடை
உன் குழந்தை இறக்கவில்லை
உன் குழந்தையையும்
மனைவியையும்
காப்பாற்ற வேண்டுமென்றால்
இப்போதே
அழைத்துக்கொண்டு
ஓடிவிடு
என்னைக் காட்டிக்கொடுத்துவிடாதே
என்றாள்

தெய்வம்
வணங்கியறியா தந்தை
மகமாயி’ என்று
அவள் காலில்
அப்படியே விழுந்தெழுந்து
மனைவியுடன்
தப்பிச்சென்றார்

ஏதோ கணமொன்றின்
கருணை பிதுங்கித் 
தோன்றிய தெய்வம்
கருணையின் முடிவில்
காணாமல் போன தெய்வம்
உயிரைக் கண்ட தெய்வம்
உயிர்ப்பித்த தெய்வம்
உயிரில் நிறைந்து
வளர்கிறது

மகமாயி
தன் வெள்ளுடையோடு கரைந்து
உலகின் கருவறை
ஆகிறாள்

அவளைக் காட்டிக்கொடுக்கத்
தேவையே
இல்லை

2. தீனி

கடைத் தெருவில் 
பல மாதம் கழித்து
எதிர்ப்பட்டபோது
என்ன ஆச்சு’
என்று கேட்ட
மருத்துவரை
ஏமாற்ற விரும்பவில்லை
தந்தை

என்ன இருந்தாலும்
ஆறாம் வகுப்பு வரையே
படித்திருந்த தன்னுடன்
ஐந்தாம் வகுப்பில் படித்த
நண்பரல்லவா
‘செத்துப்போச்சு’
என்றார்

நல்லதுதான்
இல்லைன்னா
அம்மாவைத்
தின்னுருக்கும்
என்று சொல்லிவிட்டுப்
போய்விட்டார்

கொஞ்ச நாளில்
தூக்கிட்டுத்
தன்னை அவர்
மாய்த்துக்கொண்டபோது
செத்துப்போன குழந்தை
அவரோடு சேர்ந்து
செத்துப்போனது
இருக்கும் குழந்தை
அவரைத் தின்றுகொண்டிருக்கிறது

3. மகாகாசம்2

          நன்மையும் தீமையும்
          மனிதனின் இதயத்தில்தான்,
          மகிழ்ச்சியும் துக்கமும்
          நமது அதிர்ஷ்டமும் விதியுமே,
          பொறுப்பை வானகத்துச்
                 சக்கரத்தின்மீது சுமத்தாதே,

          பார்க்கப்போனால், நம்மைவிட
          ஆயிரம் மடங்கு நிராதரவானது
          அந்தச் சக்கரம்

              - ஒமர் கய்யாம் (1048-1131),
                  ‘ருபாயியத்’ நூலிலிருந்து

குடமுருட்டியில் மிதந்து வருகிறது
ஒரு குடம்

குடம்
உடைந்தால்
குடமுருட்டியும்
காணாமல் போய்விடுகிறது

சின்ன உயிரால்
பெரிய உயிருக்கு
எப்போதும்
ஆபத்து

சின்னதைச்
சின்னதென்று பார்க்க வேண்டாம்
பெரியதைப்
பெரியதென்று பார்க்க வேண்டாம்

ஆபத்து மட்டுமே
பெரியது

அதற்குள் ஓடும் குடமுருட்டியும்
அதன்மேல் மிதக்கும் குடமும்
ஒரே அளவு சின்னதுதான்

4. பேரண்டப் பெரும் போட்டி

டாக்டரின் கைகள்
அதற்கு முன்பு
ஒருநாள் அண்ணன்
அதற்கும் முன்பு
குடமுருட்டியில் அப்பா
பின்னாளில்
பாமணியாற்றில் பத்து முறை

தனக்கு ஏன்
இவ்வளவு வாய்ப்புகள்
என்று அவன்
எப்போதும்
எண்ணிப் பார்த்ததுண்டு

ஒரு யுகபுருஷனுக்காகவோ
ஒரு மகாகவிக்காகவோ
வழங்கப்பட்ட
வாய்ப்புகள் இவை இல்லை
என்றும் 
நன்கறிவான்

அண்டம்
தோன்றவும்
இருக்கவும்
அழியவும்
வழங்கப்பட்ட
சம அளவு வாய்ப்புகளே
தனக்கும்
ஒவ்வொருவருக்கும்
என்றறிவான்

தோன்றவும்
இருக்கவும்
அழியவும்
இவ்வண்டத்துடன்
போட்டியிடுதல் தவிர
தனக்கு
வேறு வாய்ப்பில்லை
என்றறிவான்

இதேதான்
இவ்வண்டத்துக்கும் தன்னுடன்
என்பது மட்டுமே
இதில் ஒரே ஆறுதல்

5. ஆதி அணுவின் தேதி

அவனுக்கு
பிறந்த தேதி ஒன்று
சான்றிதழ் தேதி பத்து நாள் கழித்து
நிரந்தரக் கணக்கெண் அட்டையில்
இன்னும் ஒரு நாள் கழித்து
கருக்கொண்ட தேதி
அதற்கும் முந்தைய ஆண்டு
அணுக்கொண்டது
ஆதிவெடிப்பில்

சுமக்கும் தேதிகள்
சுமக்கும் நொடிகள்
கூடிவந்து
உருவும் வந்தபோது
சூழ்ந்த அறையில் கும்மிருட்டு
கும்மிருட்டிலும் 
ஓடிக்கொண்டிருந்தது காலம்
வெளியிலும்
ஓடிக்கொண்டிருந்தது காலம்

தலையில் தட்டிக்கொண்டே இருந்தாலும்
நிற்காமல் அலாரம் அடித்துக்கொண்டே
இருக்கிறது
நொடிக்கு நொடி
யார் அலாரம் வைத்திருப்பது
யாரை எழுப்பிவிட்டு
எந்த வேலை பார்க்க வைப்பதற்காக
ஒலித்துக்கொண்டிருக்கிறது
எழுந்துவிட்டவருக்கே
எதற்காக 
இந்த நிற்காத அலாரம்

அலாரத்துடன் மல்லுக்கட்டினான்
தூர ஓடப் பார்த்தான்
காதை மூடிக்கொண்டான்
காதுக்குள்ளும்
கிங்கிணி

தீராத வலியைப் பழகிக்கொள்ள
அதையே உற்று நோக்குவதுதான்
ஒரே வழி 
என்ற அனுபவத்தில்
அலாரத்தின் மீது கருத்தூன்றினான்
செவியூன்றினான்

இதோ
கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் 
தனித்தனியாய்
ஒவ்வொரு நொடிக்குமாய்
பூத்துப் பூத்து ஒலித்த
கிணுக்கொலித் துணுக்குகள்
ஒவ்வொன்றும் 
மெதுமெதுவாய்க் 
கைகோக்க ஆரம்பித்தன
இறுகக்கோர்த்தன
இறுகக்கோர்த்ததும்
ஒன்றாய் இளகின

ஒரே ரீங்காரம் ஆன பின்
ரீங்காரத்துக்கு
உள்ளேயும் வெளியேயும்
அவனால் பிரித்தறிய 
முடியாமல் போனது

கூடிய சீக்கிரம் 
தெரிந்துகொள்வான் அவன்
அந்த அலாரம்
அவனை எழுப்பிவிடுவதற்கானது அல்ல
அவன் எடுத்துக்கொண்டு போவதற்கானது
என்று

அப்போதுதான்
தட்ட வேண்டிய சரியான இடத்தில்
தன் தலையில்
தட்டி நிறுத்துவான் அதை
‘சீ சனியனே நின்றுவிடு
போய்த்தொலையலாம்’
என்று சொல்லி

6. சுற்றும் முற்று

இதமான அறை
இறுக்கமான அறை

இருப்பது அறைக்குள் என்றாலும்
வேடிக்கை பார்க்க வேண்டாமா என்று
சுற்றுமுற்றும் பார்க்கத் தொடங்கி
பார்த்த பார்வையே
சுற்றையும் முற்றையும்
விரிக்கத் தொடங்கியது

இருப்பது ஒரே அறை 
என்று ஒரு குரல் கேட்டது
விரிக்காவிட்டால் அது சிறை
என்று இன்னொரு குரல் கேட்டது

எகத்தாளம் பிடித்தவன் அவன்
அறைக்கு வெளியிலிருந்து வரும்
எந்தக் குரலையும் நம்புவதில்லை

அதனால்
ஒரே சிறையை
விரித்துக்கொண்டிருக்கிறான்
சுற்று
முற்றாகும் வரை

7. நாகம்

காட்டிக்கொடுத்துவிடாதே
என்று
அப்பனிடம் சொன்னாள்
மகமாயி
சொன்ன சொல் மாறாமல்
இருந்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான்
அப்பன்

மகமாயி அறியாமல்
வளர்ந்தான் பிள்ளை
எனினும்
மகமாயி வந்து வந்து
உடல் முழுதும்
முத்துக்கள் தந்து சென்றாள்

பாப்பா சித்திகள் அத்தைகள்
அக்கம்பக்கத்துக் கிழவிகள்
அன்றாடத் துன்பம் துயருக்கெல்லாம்
‘மகமாயி மகமாயி’ என்றே
கன்னத்தில் கொட்டிக்கொண்டு
அபயக் குரல் எழுப்ப
அவன் செவிக்குள்
வெறும் சொல்லாய்ப் போய்
ஒட்டிக்கொண்டாள்
‘மகமாயி’

மகமாயி உயிர்கொடுத்த கதையை
தன் பாப்பாவிடம்
கேட்டறிந்தபோது
வெறும் சொல்
செவிக்குள் சுருண்டெழுந்து
படமெடுத்தாடியது

‘என்னைத் தேடு
என்னையறி’
என்று இடையறாமல்
குரல் கொடுக்கத் தொடங்கியது

செவிக்குள் சுழன்றோடிய ஒலி
உடல் முழுதும் பாய்ந்தது
உடல் உயிர் விரித்தாடியது

உடலொரு மகாமாயம்
உயிரொரு மகமாயி
உடலெல்லாம் ஊரும்
உருவில்லா நாகம்

8. மேரியம்மன்

காலில் விழுந்த அப்பாவைத்
தூக்கிய நர்ஸின் கழுத்தில்
ஆடிய சிலுவை மட்டும்
இன்னும் நினைவில் இருக்கிறது
என்றாள் பாப்பா

அப்போதே
நேர்ந்துகொண்டேன்
மாரியம்மன் கோயிலுக்குச் சென்று
அவள் கழுத்தில் சிலுவை டாலர்
சாத்துவதென்று

புவனத்தையே சுமப்பவள்
சிலுவை சுமக்க மாட்டாளா

அப்படிச் சுமக்கும்போது
அதில் இருக்கும் அவள் பிள்ளை
இளைப்பாற மாட்டானா

அனல் கொங்கைக்காரி நெஞ்சில்
அகிலத்தின் கருணை சுமந்த புத்திரன்
அசைந்தாடும்போது
வெம்மை சுண்டி
சுரக்கட்டும் 
அம்மையின் பால்

அதை மீண்டும் அருந்தும் தேவமைந்தன் 
கானாவூர் ரசமாய்ப் பெருக்கி
நம் பாவங்களின் மேல்
பொழியட்டும்

9. மகமாயி கதை கேளு

மாரி முத்து மாரி
அவதான்டா மகமாயி

குளுந்த உசுரைப் பொதைச்ச எடத்தில்
கொளுந்துவிட்டு எழும்புவா
தாயி மகமாயி

பாங்கி வந்து நடந்த உடம்பு பூரா
பாதக் கொலுச அவுத்து வுடுவா பாரு
முத்து முத்தா கொட்டுமுடா தம்பி
அந்த முத்தொலிதான் நீ தாங்குவியா தம்பி

ஆத்தா ஆடுற ஆட்டம்
அது ஓன் ஒடம்புல கெளப்புமே சூட்டை
தூக்கித் தூக்கிப் போடுமுடா தம்பி
அந்த ஆட்டம் நீ தாங்குவியா தம்பி
அந்த ஆட்டக்காரி பார்த்ததுண்டா தம்பி

ஆத்தா ஆடுற ஆட்டம்
அண்ட சராசரத்தோட ஓட்டம்
அந்த ஆட்டத்துல கெளம்பிப் பறக்குற
தூசிப் புழுதிதான்டா நீயி
இந்த தூசிக்கெல்லாம் அவதான்டா தாயி

வேகாளக் காரி அவ
வெறுங்கோலமாக்கிடுவா
திரிகாலக் காரி அவ
தெச மடக்கிப் பூட்டிடுவா

ஆத்தா அழிவுக்காரின்னு சொல்லுறியே பாட்டி
ஆனா அவதானே உயிர்கொடுத்தா எனக்குப் பாட்டி
அழிவுக்காரி எப்படி ஆத்தா ஆவா பாட்டி
அப்புடின்னு கேக்குறியா தம்பி

ஆத்தா அழிவுக்காரிதான்டா தம்பி
மகா அழிவுக்காரி ஆனா மகாசோதனைக் காரி

அவ அழிவு ஆட்டம் ஆடி ஆடி
அதத் தாங்கிக் கெடந்து தபாலிச்சா
ஆத்தாதான்டா தம்பி இனி ஒன் காவக்காரி
அவ காவல் தாண்டி வாராது
நோயிநொடம் தும்பமெல்லாம் ஒனைத் தேடி

10. கொக்கரிப்பு

மகமாயி பற்றிப் பேசித்தீரவில்லை
அவருக்குத் தன் மாணவரிடம்
அம்மை வந்து
ஒருத்தர் இறந்தால்
செத்துப் போய்விட்டாரென்று
சொல்லக் கூடாது
குளுந்துபோயிட்டார் என்றுதான்
சொல்வார்கள் என்றார்

குளுந்துபோனவர்களை
எரிக்க மாட்டார்கள்
புதைத்துவிடுவார்கள் என்றார்

வெக்கை தருபவளுக்குப் பேரோ
ஒரு ஊரில் குளுந்தாளம்மன்
இன்னொரு ஊரில் சீதளா தேவி என்றார்

நமக்குத்தான் வைரஸ்
அவர்களுக்கெல்லாம் அது மாரியாயி
மகமாயி என்றார்

காலரா என்றாலோ
காளியாயி என்றார்

மகமாயி நம் ஊர்ப் புறத்து தெய்வம்
வந்துசேர்ந்த தெய்வமெல்லாம்
இப்போது அவள் மேல் ஏறிக்கொண்டுவிட்டது
என்றார்

தெற்குப்படுகை3 வாருங்களேன்
கோரையாறு அய்யனாறு
அரிச்சந்திர நதி முள்ளியாறு என்று
நான்கு ஆற்றுக் காற்றும்
கலந்து வாங்கிக்கொண்டே
இன்னும் நிறைய பேசலாம்
என்று கைபேசியைத் துண்டித்துவிட்டார்

தெற்குப்படுகை
போனபோது தெரிந்தது
உலகம் மட்டுமல்ல
மன்னார்குடியும் கொஞ்சமே கொஞ்சம்தான்
அங்கு எட்டிப்பார்த்திருக்கிறது
என்று

பெரிய ஓட்டுவீட்டின்
வாசலில் காத்திருந்து வரவேற்ற
பேராசிரியர்
அம்மா தம்பி உறவினர்
இருக்கும் ஊர் இது
பூர்வீக வீடு இது என்று சொல்லி
உள்ளே அழைத்துச் சென்று உபசரித்து
ஒரு பழைய அறையைக் காட்டினார்

‘இது மகமாயி வீடு
மகமாயி வந்தவங்களைத் தனியே
உட்கார வைக்கும் அறை’

எல்லா ஊர் அம்மன்களின்
விசேஷத்தையும் பற்றிச் சொல்லிவிட்டுக்
கொல்லைக்கு அழைத்துச் சென்றவர்
மேயும் கோழிகளைப் பார்த்தபடி
குந்தியிருந்த பாட்டியைக் காட்டிச்
சொன்னார்

‘இவங்கதான் அம்மா
வயசு 92
குழந்தையா இருக்கும்போது
அம்மை போட்டுடுச்சு
ரொம்ப கெடந்துருக்காங்க
தாயே பிள்ளைக்கு ஒன் பேரையே
வைக்கிறோம்
அவளைக் காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டாங்க’

‘அப்போ பாட்டியோடு பேரு’

‘மகமாயி’

விலுக்கென்று தலை
பாட்டி பக்கம் திரும்பிக்கொள்ள
அவள் முன்னே நெடுஞ்சாண் கிடையாக
விழுந்து கிடந்த அப்பா எழுந்து
என்னைத் தூக்கிக்கொண்டார்

அவர் கைகளுக்குள் இருந்த நான்
வெருண்டுபோய்
‘மகமாயி’ என்று கத்திவிட்டு
நிகா வந்த பின்னோ
‘பாட்டி’ என்று மெதுவாகக்
கூப்பிட்டேன்

‘அம்மாவுக்குக் காது கேக்காது
அவங்க மாதிரியே
எங்க குடும்பத்துல
எல்லாருக்கும் காது கொஞ்சம்
சரியா கேக்காதுதான்

‘காப்பாத்தும்மான்னு
கதறுன குரலைக் கேட்டவ
நெஞ்செளகிக் காப்பாத்திட்டா

‘வந்த தடம் காட்டணும்னு
இவங்க காதுல
தான் பேரை ஓதிட்டு
இனிமே வேறெதையும்
கேக்குற சக்தியை
எடுத்துக்கிட்டா’

மகமாயி இன்னும் என்னை
உணரவில்லை
கோழிகளின் கொக்கரிப்பை
அவருடைய கண்
கேட்டுக்கொண்டிருக்கக் கூடும்

அடைத்த செவிகளுக்குள்
உயிர்தந்தவளின் கொக்கரிப்பும்
கேட்டுக்கொண்டிருக்கக் கூடும்

               (தொடரும்...)

 

குறிப்புகள்:

1. சீதளா தேவியும் மேற்கோள் பாடலும்: மகமாயி என்ற மாரியம்மனுக்கு திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு அருகில் ‘சீதளாதேவி மாரியம்மன்’ என்ற கோயில் இருக்கிறது. கோயில் சற்று புதிது என்றாலும் அதன் விக்கிரகம் மிகவும் பழமையானது என்று கூறுகிறார்கள். ‘சீதளா தேவி’ என்றால் ‘குளிர்விக்கும் கடவுள்’ என்று பொருள். வட இந்தியாவில் துர்க்கையின் அவதாரமாகக் கருதப்படும் ‘ஷீத்தலா தேவி’ இங்குள்ள மாரியம்மனுடன் கலக்கப்பட்டிருக்கலாம். மேற்கோள் பாடல் திருவாரூரைச் சேர்ந்த இரத்தின தேசிகர் இயற்றியது என்று கோயில் குருக்கள் ராமமூர்த்தி கூறுகிறார். இது மாரியம்மனின் உருவத் தோற்றத்தைப் பற்றிய பாடல்.

2. மகாகாசம்: இந்து மதத் தத்துவத்தில் குடாகாசம், மகாகாசம் என்று இரு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. குடாகாசம், அதாவது குடத்தில் உள்ள ஆகாசம் என்பது ஜீவாத்மாவைக் குறிப்பது; மகாகாசம், அதாவது எங்கும் நிறைந்திருக்கும் ஆகாசம் என்பது பரமாத்மாவைக் குறிப்பது.

3. தெற்குப்படுகை: மன்னார்குடி அருகில் உள்ள குக்கிராமம். இந்த கிராமத்தின் அருகில் கோரையாறு, கோரையாற்றிலிருந்து பிரியும் முள்ளியாறு, அய்யனாறு, அரிச்சந்திர நதி என்று நான்கு ஆறுகள் ஓடுகின்றன. அரிச்சந்திர நதிக்குப் புதாறு என்று உள்ளூர்ப் பெயர் ஒன்றும் உண்டு. இதுவும் குடமுருட்டியிலிருந்து பிரியும் புதாறும் வேறு வேறு. அரிச்சந்திர நதி மட்டும் இந்து மத நம்பிக்கையாளர்களால் தீர்த்தம் என்று கருதப்படுகிறது.

 

தொடர்புடைய கவிதைகள்:

மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்
மாயக் குடமுருட்டி: அண்ணனின் தூண்டிலைத் திருடிய அப்பா
மாயக் குடமுருட்டி: கருப்பு சிவப்பாய் ஒரு ஆறு
மாயக் குடமுருட்டி: ஒளிதான் முதல் நினைவு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


1






சமூக மேம்பாடுசத்துணவுபல்பீர் சிங் ராஜேவால்சபாநாயகர் அப்பாவுவங்கதேசம்நேபாளம்ஹிட்லர்செந்தில் பாலாஜி: திமுகவைச் சுற்றும் சுழல்நேதாஜிடாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்பிராமணரல்லாதோர்ஆசாத் உமர்அதீத முதலீடுகள்முத்துலிங்கம் சிறுகதைகள்எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்அமைப்புசாரா தொழிலாளர்கள்பட்டியலினம்பயிற்றுமொழிramachandra guha articles in tamilநீடித்த வளர்ச்சிஐக்கிய மாகாணம்பார்டர் அண்ட் பௌண்டரீஸ்மசூதிகிறிஸ்துவம்ருவாண்டாத.செ.ஞானவேல் பிரத்யேகப் பேட்டிபெரும்பான்மைதேசிய சுகாதார அறிக்கைபுனிதம் எனும் கொடுஞ்சொல்தசை வலி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!