கலை, கவிதை, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு
மாயக் குடமுருட்டி: கருப்பு சிவப்பாய் ஒரு ஆறு
ஓவியங்கள்: ஜோ.விஜயகுமார்
மனக் குகையில் சிறுத்தை எழும்
- பெரியார் குறித்து பாரதிதாசன்
1. நெடுந்தாடி முனியாறு
கருப்பு சிவப்பாய்
ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு ஆறு
அது
குறுமுனி யொருவன் கமண்டலத்திலிருந்து
புறப்பட்டதாய்க்
கதை சொல்லப்படும்
காவிரி அல்ல
நெடுந்தாடி முனியொருவன் கைத்தடி
தரையில் தட்டிய இடத்திலிருந்து
கருப்பாய் புறப்பட்ட ஆறு அது
வழியில் சிவப்புப் பூவையும்
பறித்துக்கொண்டு ஓடுகிறது
குடமுருட்டியில் தப்பியவனைக்
கரையேற்றிய ஆறு
இன்னும் மூழ்காமல் பலரையும்
கரையேற்றிய ஆறு
எல்லோரும் இறங்கலாம்
என்று சொன்ன ஆறு
எல்லோரும் நீந்திக் களிக்கலாம்
என்றழைத்த ஆறு
ஏற்கெனவே குளித்த ஆறுகளை
எடுத்துக்கொண்டு போன ஆறு
2. ஆற்றைச் சுருட்டித் தோளில் போட்டவன்
அந்த ஆற்றை ரொம்ப நாளாய்
அமைதியாய்ப் பார்த்துக்கொண்டே
இருந்தான் அவன்
அதன் கரையில் மட்டுமே
சற்று நிமிர முடிகிறது
அவனுக்கு
ஆறு தனக்கு ஏதாவது கொடுக்கும்
என்று தெரியும்
அவனுக்கு
ஆனால்
அதனிடம் என்ன கேட்பதென்றுகூட
இதுவரை தெரியாது
அவனுக்கு
அவனுக்குத் தெரியாது
கேட்பவருக்கு மட்டுமல்ல
கேட்காதவருக்கும் சேர்த்து
ஒரு பூதம் வெளிவரும்
அந்த ஆற்றிலிருந்து என்று
அப்படித்தான் வெளிவந்தது அந்த பூதம்
வரம் தர வந்த பூதமில்லை
ஆணையிட வந்த பூதம்
‘இன்னும் என்ன பார்க்கிறாய்
சிறிய மனிதன்
என்று நம்ப வைக்கப்பட்ட உன்னை
யாருக்கும் இளைத்தவனல்ல
என்று ஆக்கிக்கொள்’
என்று அவன் காதில் மந்திரம் ஓதிய பூதம்
கரையிலிருந்து குனிந்து
ஆற்றை எடுத்துத்
தன் தோளில் போட்டபோது
துண்டாய்ப் படிந்தது
இறுதிவரை அகலாதபடிக்கு
சைக்கிளை முன்செலுத்த
அழுத்தியபோதெல்லாம்
எதிர்த் திசையிலிருந்து
வந்து விழுந்த மரியாதைகளைத்
தன் குழந்தை
வாங்கித் திரட்டிக்கொண்டே வர
தன் மரியாதை
தன்னுடையதல்ல
தன் பிள்ளைகளுக்கானது
அதற்காகவே இன்னும் இன்னும்
சைக்கிள் மிதிக்க வேண்டும் என்று
அவன் வேகமாக
மிதிக்க ஆரம்பித்தான்
தோளில் சுமந்த ஆற்றைக்
காற்றில் அசைந்தாட விட்டு
3. எதிர்சாமி
மன்னார்குடி ராஜகோபாலசாமியின்
பெரிய கோயிலுக்குக் கொஞ்சம் முன்னே
நிற்கிறது
ராமசாமியின் சிலை
அது எப்போதிருந்து அங்கே நிற்கிறது
என்று அவனுக்குத் தெரியாது
சாமி பிறந்தபோதே
அதை இல்லை என்று மறுப்பதற்காகப்
பிறந்த எதிர்சாமியோ என்று
பின்னாளில் நினைத்துக்கொண்டான்
உள்ளே இருப்பவர்
என்னை விடவும் பெரியவர் இல்லை என்று
உணர்த்தியதற்காகக் கோயிலிலிருந்து
சற்று முன்னே தள்ளிவைக்கப்பட்ட
எதிர்துவாரபாலகரோ
என்றும் நினைத்ததுண்டு
‘இவர் யாரப்பா’
என்று முதன்முதலில்
அப்பாவிடம் கேட்டபோது
‘சாமி இல்லன்னு சொன்ன பெரிய தாத்தா
பெரியார் தாத்தா
ராமசாமி தாத்தா’ என்றார்
‘தாத்தாவும் சாமிதானே
அவர் இதோ இருக்குறாரே
எப்புடி இல்லைன்னு ஆவும்’
என்று கேட்டதற்கு
அப்பா சொன்னார்
‘சாமி இல்லன்னு சாமியே
சொல்லும்போது
நம்பித்தான் ஆவணும்
என் குஞ்சாமணிக் குட்டி’
4. செப்டம்பர் - 2001
இதோ டீ சாப்பிட்டு வந்துவிடுகிறேன்
என்று ராயப்பேட்டையிலிருந்து
கிளம்பிப்போனவர்
ரொம்ப நேரம் கழித்துத் திரும்பிவந்தார்
‘பாத்துட்டேன்’ என்று
‘எங்கே போயிருந்தீங்க
ஏன் இவ்வளவு நேரம்
தெரியாத இடத்துல
எங்காவது தொலைஞ்சுபோயிருந்தா
எவ்வளவு கஷ்டம்’
‘பாக்கணும்னு ரொம்ப துடிப்பு
பாத்துட்டேன்’
‘எங்கே போனீங்க
என்ன பாத்தீங்க’
‘ராயப்பேட்டையிலருந்து பக்கமுன்னு சொன்னாங்க
நடந்தே போயிடலாம்னு சொன்னாங்க’
‘ஓ உங்க தலைவரப் பாத்துட்டீங்களாக்கும்’
‘இல்லை இல்லை
தலைவர் வீட்டைப் பாத்துட்டேன்
தலைவரத்தான்
எத்தனையோ முறை
பக்கத்திலேயே பாத்திருக்கேனே
தலைவரோட வீட்டப் பாக்கணும்
அதுதான் ரொம்ப நாள் ஆசை
இப்போ பாத்துட்டேன்’
இதுவரை
தன் தலைவரைப் பார்த்த
அப்பாவின் முகத்தைதான்
அவன் பார்த்திருக்கிறான்
இப்போது
தன் தலைவர் வீட்டைப் பார்த்துவிட்டு வந்த
அப்பாவின் முகத்தை
முதன்முதலில் பார்க்கிறான்
அவனே பார்த்திராத
அந்த வீட்டை
அப்பாவின் முகத்தில்
மிக மிகத்
தெளிவாய்ப் பார்த்தான்
அந்த வீடு பெருமிதத்தின் மீது
அமைதியாய்
விண்ணளாவியிருந்தது
5. பெரியதோர் துண்டு
ஊழல் பட்டியல்
வாரிசு அரசியல்
மதவாதக் கட்சிக் கூட்டணி
என்றெல்லாம் தன் மகன்
எவ்வளவோ ஏவினாலும்
தன் துண்டை உதறி
வீழ்த்திக்கொண்டே இருந்தார் அப்பா
அந்த அஸ்திரங்களை
நீங்களும்
இத்தனை ஆண்டு
கட்சியில் இருக்கிறீர்கள்
என்ன கண்டீர்கள்
இப்போது வந்த
குடும்ப வாரிசுகளுக்கு
எத்தனை பதவிகள்
எத்தனை பொறுப்புகள்
நமக்கோ
புறம்போக்கு வீட்டுக்குப்
பட்டா கிடைத்துவிட்டதா
சொந்தமாக ஒரு சதுர அடி
வயலாவது இருக்கிறதா
அப்போதும்
துண்டை உதறி
வீழ்த்திக்கொண்டே இருந்தார் அப்பா
அந்த அஸ்திரங்களை
எவ்வளவு போராடினாலும்
தன் துண்டை உதறி
வீழ்த்திவிடுகிறாரே
என்று சலித்துப்போனது
அவனுக்கு ஒரு கட்டத்தில்
தனக்கு இருக்கும்
ஒரே அஸ்திரம்
தன் துண்டுதான்
அதைக் கொடுத்த
தன் தலைவரை எப்படி நான்
மறுதலிப்பேன்
என்பதைச் சொல்லத் தெரியாமல்தான்
அப்படி அவர்
உதறிக்கொண்டே இருந்திருக்கிறார்
இதை அவர் மகன் உணர்ந்தபோது
அப்பாவைப் படுக்க வைத்து
அவர் மேல்
அதைவிடப் பெரிய துண்டை
மூடியிருந்தார்கள்
கருப்பு சிவப்பில்
6. அநாதைக் கொடி
கட்சிக்காக
எவ்வளவு கொடி பிடித்திருப்பார்
அவர் சாவுக்குக் கொடி பிடிக்க
யார் வந்தார்கள்
நாம்தான் வாங்கினோம்
நாம்தான் மூடினோம் என்று
அண்ணன் பொங்கினான்
அப்பா இருந்திருந்தால்
சொல்லியிருப்பார்
‘அடப் போடா இவனே
கொடி என் மேல கிடக்கிறதைவிட
வேறென்ன வேணும் எனக்கு
அவனுவோ வர்றானுவோ
வராம போறானுவோ’
என்று
7. உலகெலாம் அப்பாவின் மிக்சர்
அப்பாவின் துண்டை
எல்லோரும் சேர்ந்து தொலைத்துவிட்டார்கள்
அவருக்கு அது சுயமரியாதை
தந்த துண்டு என்பதெல்லாம்
அப்புறம்
அவனுக்கோ
அலுவலகத்தின்
பணிஓய்வு விருந்துகளில் தரப்படும்
மிக்சர் இனிப்புகளைத்
தானுண்ணாமல்
கடைக்குட்டிக்குப் பொதிந்து
அப்பா
கொண்டுவரும் துண்டு அது
அப்போது மட்டுமே
அவர் தோளில் படியாத துண்டு அது
உலகத்தின் ஒட்டுமொத்த
மிக்சரையும்
பொதிந்துவிடும் துண்டு
கடைக்குட்டிக்காக
இன்னும் மிக்சர் கொண்டுவரப்
போயிருக்கிறது போல
8. பல்லாக்கு
பல்லாக்கைத் தூக்காதே
பல்லாக்கில் நீ ஏறு
- கண்ணதாசன்
‘இங்கேயே
சைக்கிளைப் புடிச்சிக்கிட்டு நில்லு
சூசை மாமாவ
உள்ள போயிப் பார்த்துட்டு
உடனே வாரேன்’ என்று சொல்லிவிட்டு
அப்பா சென்றதும்
அந்தச் சிறுவனுக்கு வேடிக்கை பார்க்க
அதிகம் இருப்பதுபோல் தெரியவில்லை
பக்கத்தில் நின்றிருந்த தாத்தாவை
நிமிர்ந்து பார்த்தான்
இவ்வளவு கருப்பு
எங்கிருந்து இந்தத் தாத்தா
பூசிக்கொண்டார் என்று
சிரிப்பு வந்தது அவனுக்கு
எத்தனையோ முறை
அவரைக் கடக்கும்போதெல்லாம்
மனதில் எழுந்த கேள்வியை
இப்போது கேட்டாலென்ன
என்று தோன்றியது
சுற்றிலும் பார்த்துவிட்டு
அவரைக் கேட்டான்
‘அதோ அந்தக் கோயிலைப் பாருங்க தாத்தா
உள்ளே போயிருப்பீங்க இல்லையா
எவ்வளவு அழகா இருக்கு
எவ்வளவு சிலைகள் இருக்கும்
யானை இருக்கும்
நந்தவனம் இருக்கும்
கோயில் இல்லைன்னா
திருவிழா நடக்குமா
பொம்மைக் கடை
ராட்சச ராட்டினம்
டெல்லி அப்பளம் கடை
எல்லாம் வருமா
தேரெல்லாம் எவ்வளவு அழகு
வெட்டுக்குதிரை எவ்வளவு அழகு
எல்லாத்தையும் விடுங்க
வெண்ணெய்த்தாழி எவ்வளவு அழகு
சாமி மேலேயும்
அய்யர் மேலேயும் அடிக்கிற
வெண்ணெய் வழிய வழிய
பல்லாக்கு தூக்கிட்டு வருவாங்களே
எவ்வளவு அழகு
சாமியாலதானே எல்லாம்
ஏன் தாத்தா சாமி இல்லை
சாமி இல்லைன்னே எப்போ பாத்தாலும்
சொல்லிக்கிட்டு இருக்கீங்க’
குழந்தை கேட்டால் தாத்தா
எவ்வளவு கல்லாக இருந்தாலும்
பேசித்தானே ஆக வேண்டும்
‘சாமியாலதானே எல்லாம் குழந்தை
அதனாலதான் சொல்லுறேன்
சாமி இல்லை சாமி இல்லைன்னு
பல்லாக்கு அழகுதான் குழந்தை
சாமி அழகுதான் குழந்தை
நீயும் அழகுதான் குழந்தை
நீயே பல்லாக்கில் ஏறு
நீயே உன் பல்லாக்கைத் தூக்கு
நீயே உன் பல்லாக்கு ஆகு
உனக்கும் இதுதான்
உன் சாமிக்கும் இதுதான் குழந்தை’
9. கோஷமிட்ட தீ
முன்னவர்
இறுதி ஊர்வலத்தில்
தான் கண்டதையெல்லாம்
கதைகதையாய்ச் சொன்னாரே அப்பா
ரயில்கூரையில் பயணித்ததையும்
பாலம் தட்டிப் பலபேர் மடிந்ததையும்
சென்னையே சேர்ந்து நகர்ந்ததையும்
மேலேறியவர்களின் பாரம் தாங்காமல்
மரக்கிளைகள் முறிந்து விழுந்ததையும்
உலகத்திலேயே இப்படியோர்
இறுதி ஊர்வலம்
வரலாறு கண்டதில்லை என்பதையும்
சொல்லிச்சொல்லி மாய்வாரே அப்பா
பின்னவர் இறுதி ஊர்வலத்தைக்
காண விடாத உடலுக்குள்
முடங்கிக்கிடந்த அப்பாவுக்காக
நான் போனேனே ஐயா
ஆ ஆ அது இறுதி ஊர்வலமா
கல்யாண ஊர்வலம் ஐயா
ஊர்தி கடக்கும் இடமெல்லாம்
நின்று நின்று
ஆயிரமாயிரம் தற்படங்கள்
ஆயிரமாயிரம் நாடகங்கள்
தலைவனுக்காகக் குத்தாட்டங்கள்
முன்னவர் காலம்
ஓங்கி உயர்ந்தெழுந்த
அழுகையின் காலமென்றால்
பின்னவர் காலமோ
அழுகைக்கு விடைகொடுத்த
ஆர்த்தெழும் காலம்
அப்பாவுக்காகத்தான்
வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன் ஐயா
ஆனாலும் அப்படி ஆகிவிட்டது
உடன்வந்திருந்த அய்யர் பையன்
ஊர்தி அருகே கடக்கும் தருணம்
அப்படி ஒரு குரலில் ஓலமிட்டான்
‘முத்தமிழறிஞர்
சமத்துவ நாயகர்…’
ஊர்தி மேலே ஒரு உருவம் மட்டும்
மௌனி கதையின் யாளியாய்
தன் விஸ்வரூபத்தால்
அந்த கோஷத்தை ஆசிர்வதித்ததை
நான் மட்டும் கண்டேன்
சற்றுப் பொறுங்கள் ஐயா
இன்னும் அந்த நொடி முடியவில்லை
இன்னொரு பாதி இல்லாமல்
இழுத்துக்கொண்டே போகுமல்லவா
கோஷமும் நொடியும்
நானே எதிர்பார்க்கவில்லை
பீறிட்டெழுந்தது ஒரு சொல்
என் அடிவயிற்றிலிருந்து
மூடிய வாயென்ன செய்யும்
அப்போது
‘வாழ்க’
அதையும் ஏற்றுக்கொண்டு
அமைதியானது யாளி
பூர்த்தியானது நொடியும் கோஷமும்
அமைதியிழந்தேன் நான்
ஆயிரம் ஆயிரம் நூல்கள்
எனக்குச் சொல்லித்தந்தது இதுதானா
நான் படித்த இலக்கியம்
எனக்குச் சொல்லித்தந்தது இதுதானா
ஒரு கவிஞன்
‘வாழ்க வாழ்க’ கோஷமிடலாமா
என்னை இனி நான்
எப்படி ஏறெடுத்துப் பார்ப்பேன் ஐயா
அடேய் தம்பி
ஏன்டா இந்தப் புலம்பல்
கோஷம் என்ன கெட்ட வார்த்தையா
அறிவு கோஷம் போடாது தம்பி
வயிறு கோஷம் போடும்
அப்படியே இருந்தாலும்
அங்கே இருந்தவன் கண்டவன் கேட்டவன்
மட்டுமே நீ
‘வாழ்க’வென்று கோஷமிட்டது
நீயில்லையடா
உன்னை ஓங்கியடித்து
உட்காரவைத்து
மாக்கடியென்று எகிறி குதித்த
உன் ஒப்பன்காரன்டா
உன் ஒப்பன்காரன்டா
ஏனென்றால்
அவன் வயிற்றுக் கவலை
ஓய்ந்த இடத்தில்தான்டா தம்பி
உன் அறிவுக் கவலை
தொடங்கியது
புலம்பலை விட்டுவிட்டு
இன்னொரு மடக்கை எடுத்துக் குடி
10. மன்னார்குடி உங்களை வரவேற்கிறது ஞானக்கூத்தன்!
வணக்கம் ஞானக்கூத்தன்
மன்னார்குடி உங்களை வரவேற்கிறது
நீங்கள் பிறந்த திருஇந்தளூர் சென்றுவிட்டு
கும்பகோணம் வழியே
மன்னார்குடி வந்திருக்கிறீர்கள்
நன்றி
பாரம்பரிய மிக்க ஊர் இது
ஒரு காலத்தில் பத்து வாத்தியங்கள் ஒலித்த
ஒரே ஊர்
ராஜகோபாலசுவாமி தரிசனம் செய்துவிட்டு
இரவு சென்னை திரும்புவது
உங்கள் திட்டம்
எல்லோருக்கும் பிடித்த கோயில் அது
கொஞ்சம் பொறுங்கள்
சுவாமி தரிசனம் முடித்துவிட்டு
ஒரு அலங்கோல தரிசனமும்
பெற்றுச் செல்லுங்கள்
கோயிலுக்கு அருகேதான்
கட்சிக் கூட்டம் ஒன்று
நடக்கிறது
போனால்
உங்கள் கவிதை
திரும்பத் திரும்பத் தன்னை
நிகழ்த்திக்கொண்டிருப்பதைக் காணலாம்
அட
சொன்னபடியே இங்கே வந்தும்விட்டீர்களே
மிக்க நன்றி
இதோ கூட்டம் தொடங்கிவிடும்
நான்காவது வரிசையில்
அப்பா மடியில்
ஒரு சிறுவன் உட்கார்ந்திருக்கிறான்
அவனை மட்டும்
கொஞ்சம் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்
எதிர்காலத்தில்
உங்கள் கவிதைகளின் தீவிர வாசகன்
கோபம் கொண்டாலும்
மாற மாட்டான்
உங்களுக்கு ரசிகப்பிள்ளை சம்பவம்
அவனே செய்வான்
அவனை மன்னியுங்கள்
உங்களைப் போலவே
அவன் அப்பாவுக்கும் தமிழ்தான் மூச்சு
வெங்கனல் உமிழப் பிறர் வரும்போது
அது தணிக்க
வேறு வழியில்லாமல்
அவர் மீதெல்லாம்
அவர் விடத்தான் செய்வார்
அவரை மன்னியுங்கள்
ஆஹா இதோ கூட்டம் தொடங்கிவிட்டது
வரவேற்புரை நிகழ்த்துபவர்
மேலவாசல் அண்ணாத்துரை
முதல் முறையாக மேடையேறுகிறார்
‘தலைவரார்களேங்’ என்று தொடங்கவில்லை
ஆனால் கிட்டத்தட்ட அவர் பேச்சு
அப்படித்தான் இருக்கும்
அவரை மன்னியுங்கள்
அவர் பிள்ளை மேடை ஏற மாட்டான்
மேற்படிப்புக்குப் பட்டணம் போய்விடுவான்
‘தொண்ணூறு வாட்டம்’ கொண்ட
ஊரில்லை இது
மன்னிக்கவும்
அதனால் அவரை இடைமறித்து
பதிமூன்றாம் வட்டத்தின் சார்பில்
இந்த மலர்மாலையை
அண்ணனுக்கு மணிமாலையாய்
குறுக்கே ஒருவர் சார்த்த வருகிறார்
அவரையும் மன்னிக்கவும்
அவர்கள் ‘வாழ்க வாழ்க’ எனும்போதும் சரி
அவர்கள் ‘ஒழிக ஒழிக’ எனும்போதும் சரி
கேட்கச் சகிக்கவில்லைதான்
தங்களுக்குக் குரல் வந்ததை
இப்படித்தான் அறிவிக்கத் தெரிகிறது
அவர்களுக்கு
அவர்களை மன்னியுங்கள்
எல்லாச் சடங்குகளுக்கும்
மந்திரமொழி உண்டு
இவர்களுக்கு அது தெரியாது
அது தெரிந்திருந்தால்
உங்கள் கவிதைக்குள்
இவர்களுக்கு
அவப்பெயர் கிடைக்காமல்
போயிருந்திருக்கும்
மன்னியுங்கள்
ஆனால்
வரலாற்றை நீங்கள்
சாஸ்வதப்படுத்திவிட்டீர்கள்
மேடையில் நிற்பவர்கள்
அந்த நயத்தைக் கற்கத்தான் வேண்டும்
அவர்களை மன்னியுங்கள்
கூட்டம் கலைவதற்கு முன்னே
பேச்சாளர் இன்னும் ‘யிருகூட்டம்
பேசயிருப்பதால் வொடய்’ பெறும் முன்னே
மேடையமைத்த
பந்தல்செட் பன்னீருக்கும் மாலை
இப்படி அலங்கோலப் பேச்சுகளை
எட்டுத்திக்கும் அதிரவிட்ட
மைக்செட் முனியாண்டிக்கும் மாலை
அவர்களை மன்னியுங்கள்
இடையே பெயர்வைக்க வேண்டி
தன் கைக்குழந்தையுடன் மேடையேறிய
வடுவூர் ராஜமாணிக்கம் குழந்தைக்குப்
‘பூங்கொடி’
சேரங்குளம் ஜெயபால் குழந்தைக்கு ‘முரசொலி’
என்னென்ன கூத்துக்கள்
அவர்களை மன்னியுங்கள்
மேடை கருவறையல்ல
அதுதான் யார் யாரோ ஏறிவிட்டார்கள்
அதையே சாதனையாகவும்
பேசிக்கொள்கிறார்கள்
அவர்களை மன்னியுங்கள்
தாங்கள் மேடைக்கு வருவதற்குள்
காலம் எங்கோ சென்றதை
அறியாதவர்கள்
ஆனால் மேடையில் இருந்துகொண்டு
காலத்தைத் தங்கள் பின்னே வரவைக்கும்
வித்தை அவர்களையே அறியாமல்
அவர்களிடம் உண்டு
அவர்களை மன்னியுங்கள்
உங்களுக்கு நேரம் ஆகிவிட்டதென்று
எனக்குத் தெரியும்
கலைந்து செல்லும் கூட்டமும்
கூட்டம் சென்ற பின்
வெறிச்சோடும் திடலும்
திரைப்படங்களில் கவித்துவமிக்கதாக
இருக்கலாம்
இங்கே அப்படி இருக்காது
மன்னியுங்கள்
இதனாலெல்லாம் மன்னார்குடிக்குத்
திரும்பவும் வராமல்
இருந்துவிடாதீர்கள்
மன்னார்குடி உங்களை
எப்போதும் வரவேற்கும்
வாய்ப்புக்கு நன்றி கூறி
என் உரையை
இத்துடன் முடித்துக்கொள்கிறேன்
பிழையாகவோ
உங்கள் மனம் புண்படும்படியோ
பேசியிருந்தால்
மன்னியுங்கள்
(திராவிட இயக்கத்தினரின் மேடைப்
பேச்சைப் பகடி செய்து கவிஞர்
ஞானக்கூத்தன் எழுதிய
'தலைவரார்களேங்' என்று
தொடங்கும் 'காலவழுவமைதி'
கவிதையைப் படிக்க: கவிதை)
11. மன்னை மாநகரிலே… என்னோடு மேடையிலே…
நாடகத்தின் முதல் காட்சி:
அவன் வீட்டைக் கடந்துதான்
அவன் அப்பாவின் தலைவர் செல்வார்
தன் நண்பர் வீட்டுக்கு
தலைவர்
நீடாமங்கலம் வருவதற்குள்
தகவல் எப்படியோ
மன்னார்குடி வந்துவிடும்
மகனை அழைத்துக்கொண்டு
வாசலில் காத்திருப்பார்
அப்பா
வீட்டை கார் கடக்கும்போதெல்லாம்
கும்பிட்ட கையோடு
அப்பா நிற்க
டாட்டா காட்டியபடி
குழந்தை நிற்பான்
ஒரேயொரு முறை
பதில் டாட்டா பெற்றதும்
தெருவெல்லாம்
சொல்லித் திரிந்தான்
இன்னொரு முறை
வீட்டருகே கொடியேற்ற
போகும் வழியில் நின்று
காரிலிருந்து இறங்கியபோது
மெலிதாய் அவரைத் தொட்டுவிட்டதைத்
தனக்கான ரகசிய மலராகத்
தன் உள்ளங்கைக்குள்ளேயே
இன்னும் வைத்திருக்கிறான்
நாடகத்தின் அடுத்த காட்சி:
மன்னையைப்1 பார்க்க வந்தார்
என்றால்
இரவு திருப்பாற்கடலிலோ2
தேரடியிலோ3
இடிமழை என்று அர்த்தம்
உள்ளூர் நாயகர் பேச்சைத்
தொடங்க
உள்ளூர்களின் நாயகர்
தலையைச் சற்றே சாய்த்து
பேச்சிலா
பெருந்திரளிலா
என்றறிய முடியாத
கருப்புக் கண்ணாடியுடன்
ஊன்றிப்போக
குழந்தை
மாறிமாறி
இருவர் முகத்தையும்
பார்த்துக்கொண்டிருப்பான்
தன்னைத்தான்
அவர் பார்த்துக்கொண்டிருக்கிறாரோ
என்றும்
அவனுக்கு எப்போதும்
தோன்றும்
நாடகத்தை
இதோ தன் கையில்
எடுத்துவிட்டார் மன்னை
'நான் முன்னே போய்விட வேண்டும்
என் கல்லறையை என் தலைவனின்
கண்ணீர் கழுவ வேண்டும்'
வென்ற பூரிப்பில்
போய் உட்கார்கிறார்
அவர் முடிப்பில் தொட்டதை
இவர் எடுப்பிலேயே தொடுகிறார்
'பேராசை பிடித்தவர் மன்னை
நான்தான் செல்வேன் முன்னே
என் கல்லறை தேடி வருவார் அவர் பின்னே'
திரும்பி
இன்றைய நாடகத்தில்
தான் வென்றதை
நண்பரின் முகத்தில்
எழுதிவிட்டுத் தொடர்கிறார் உரையை
வீடு திரும்பும் போது
நாடக வசனத்தை
ஒப்பித்துக்கொண்டே வருவான் குழந்தை
'பேராசை பிடித்தவர் மன்னை
நான்தான் செல்வேன் முன்னே
என் கல்லறை தேடி வருவார் அவர் பின்னே'
நாடகத்தின் இறுதிக் காட்சி:
கடைசியாக
அவன் வீட்டை
அப்பாவின் தலைவர் கடந்தது
மன்னை மறைந்த பின்னேதான்
இரவு
இரங்கல் கூட்டம்
தோற்றவரோ வென்றவரோ
தனிமொழி பேச வேண்டிய
கட்டம்
இரண்டுமே
ஒன்றுதானோ என்று
தோன்றும் கட்டம்
‘மன்னை மாநகரிலே
என்னோடு மேடையிலே
மன்னை வீற்றிருந்த காலங்கள்
ஐயகோ
காற்றோடு போயினவோ
தேற்றவும் ஆளில்லையே
எங்குபோய் நானழுவேன்
‘முழுநிலவுக் காலமென்றாலும்
உம்மோடு கதைபேசிக்
களித்த இரவுகள்
எழுஞாயிற்று இரவுகள்
எங்குபோய் நான் பெறுவேன்
அவை இனி
‘மூத்தவர் என்றால்
முன்னே சென்றுதான்
ஆக வேண்டும் என்று
விதி இருக்கிறதோ
இளையவருக்கு
வழிவிட்டிருக்கக் கூடாதோ
இளையவன் நான் என்றாலும்
இடைவிடாமல் என்னை
தலைவரே என்றழைத்த மன்னை
'எப்போதும்
என்னை என் நண்பர்கள்
வென்றால் முதல் ஆளாய்
நான்தான் வாழ்த்துவேன்
இதயத் தட்டில் ஏந்தி
புன்னகை பரிசளிப்பேன்
ஆனால் நான் மட்டும்
வெல்ல வேண்டும் என்று
எப்போதும் என் நண்பர்கள்
என்னிடம் தோற்பார்கள்
'சற்றும் எனக்கு
விட்டுக்கொடுக்காமல்
எனக்கு முன்னே போய்
என்னை வென்றுவிட்டீரே மன்னை
தேடி வருவேன் நான் பின்னே'
கரகோஷம் வேண்டி
சற்று நிறுத்தினாரா
இல்லை கரகோஷம்
அவரைச் சற்று நிறுத்தியதா
என்றறிய முடியாத
இடைவெளிக்குப் பின்
'மன்னைக்கு
இனி எப்படி வருவேன்
மன்னையே இல்லையென்றால்'
என்று முடித்தார்
ஒரு மாபெரும்
துயர நாடகத்தை
அவ்வளவு உண்மை இருந்தால்
அவ்வளவு நாடகங்கள்
நடக்கத்தானே செய்யும்
நாடகத்தின் இறுதிக் காட்சி முடிந்து
அப்பாவின் சைக்கிளின்
முன்னே அமர்ந்துகொண்டு வந்த
அந்தக் குழந்தை
சொல்லிக்கொண்டே வந்தான்
'மன்னைக்கு
இனி எப்படி வருவேன்
மன்னையே இல்லையென்றால்'
(தொடரும்...)
குறிப்புகள்:
1. மன்னை: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியைச் சுருக்கமாக ‘மன்னை’ என்று அழைப்பார்கள். மன்னார்குடியில் பிறந்து பெரியாரின் திராவிடர் கழகத்தோடும் திமுகவோடும் தன்னைப் பிணைத்துக்கொண்ட முக்கியமான தலைவர் மன்னை ப.நாராயணசாமி (பிறப்பு: 19-10-1919, மறைவு: 17-10-1993). இவரை அன்போடும் சுருக்கமாகவும் மன்னை என்றே அழைப்பார்கள். ஊரின் சுருக்கமும் ‘மன்னை’; மன்னையின் முக்கியத் தலைவரின் சுருக்கமும் மன்னை; பாமணி ஆற்றை ஒட்டி இவர் வசித்த தெருவும் இவர் பெயரால் ‘மன்னை நகர்’. திமுக அமைச்சரவையில் கூட்டுறவு, விவசாயம், உள்ளாட்சித் துறை அமைச்சராக மன்னை பணியாற்றியிருக்கிறார். திமுகவின் முதல் தலைமுறை தலைவர்கள் அனைவரும் இவர் மீது பெரும் மதிப்பு கொண்டவர்கள். இவரைப் பார்ப்பதற்காக அடிக்கடி மன்னார்குடி வந்து செல்வார்கள்.
2. திருப்பாற்கடல்: மன்னை நகரிலிருந்து பாமணியாற்றைக் கடந்து சென்றால் திருப்பாற்கடல் குளம் வரும். அந்தத் தெருவும் திருப்பாற்கடல் தெரு என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெருவுக்கு அருகே சில சமயம் அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட கூட்டங்கள் நடப்பதுண்டு.
3. தேரடி: மன்னார்குடி பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு அருகே பிரதான சாலையை ஒட்டி அமைந்திருக்கும் திடல். கட்சிக் கூட்டங்கள், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கலை இரவுகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கும் இடம்.
தொடர்புடைய கவிதைகள்:
மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்
மாயக் குடமுருட்டி: அண்ணனின் தூண்டிலைத் திருடிய அப்பா
2
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.