கலை, கவிதை, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
ஓவியங்கள்: ஜோ.விஜயகுமார்
பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேரறியவே மெத்த வீங்கி
பரியார மொருமாது பார்த்த போது
பையோடே கழன்றதென்று ஆடாய் பாம்பே
- பாம்பாட்டிச் சித்தர்
1. அப்பாவின் சைக்கிள்
மன்னார்குடி ராஜகோபாலசாமிக்குப்
பல்லக்கு என்றால்
அந்தக் குழந்தைக்கு
அப்பாவின் சைக்கிள்
முன்னே கழுகு சிறகுவிரித்திருக்க
கைப்பிடியில் முன்கூடை கம்பி மாட்டி
அதில்
அக்குழந்தையை உட்காரவைத்ததும்
தொடங்கிவிடும் பவனி
அவன் தலைக்கு மேலே
அப்பாவின் மீசை குடைபிடிக்கும்
இரு பக்கமும்
கைகள் கோட்டை கட்டும்
எதிர்ப்படுவோர்
அப்பாவுக்கு இடும் வணக்கங்கள்
விசாரிப்புகள் மரியாதைத் தலையசைப்புகள்
அவன் மேல் விழுந்து வழிய
வெண்ணெய்த்தாழி* நடத்திக்கொண்டு
போவான்
சங்கிலிக் காப்பின்மேல்
முதல் அண்ணனின்
பெயர் கருப்பு சிவப்பில்
எழுதப்பட்டிருக்க
தன் பெயர் எழுதப்படாத சினம்
எப்போதும் பொங்கியதுண்டு
அவனுக்கு
அண்ணனுக்கும்
அப்பாவுக்கும் இடையே
பேச்சு நின்றபோதும்
அவனை முன்னே சுமந்ததுபோல்
பக்கவாட்டில்
அண்ணன் பெயரையும்
சுமந்துசென்றார்
அப்பா
இருபது ஆண்டுகள்
எத்தனையோ பாகங்கள்
மாறினாலும்
இடையறாது ஓடிய சைக்கிள்
இருபது ஆண்டுகள் ஓடினால்
எந்த சைக்கிளும்
காற்றில் கரைந்துவிடும்
அதுவும் அப்படித்தான்
எங்கே ஓடி
எங்கே ஓய்ந்து
எங்கே கழன்று
எங்கே கரைந்து போனதோ
காற்று சற்று பலமாக
அடிக்கும்போதெல்லாம்
அப்பாவின் உந்தலை
உணர்கிறான்
முன்கூடை ஏந்தலை
உணர்கிறான்
தற்போது வளர்ந்து நிற்கும்
அக்குழந்தை
அப்போதெல்லாம்
முன்னே
அதே கழுகு தோன்றி
ஓடுதளம் விட்டு
இழுத்துக்கொண்டு ஏறுகிறது
மேலே
(வெண்ணெய்த்தாழி – ஆண்டுப்
பெருவிழாவின்போது பெருமாள்
கோயில்களில் நடைபெறும்
உற்சவம். இந்த உற்சவத்தின்போது
பெருமாள் நவநீதகிருஷ்ணன்
கோலத்தில் பல்லக்கில் பவனி
வருவார். பக்தர்கள் அவர் மீது
வெண்ணெய் வீசுவார்கள்.
மன்னார்குடியில் பங்குனி
மாதம் இந்த உற்சவம்
ரொம்பவும் ஜோராக நடக்கும்.
பல்லக்கில் அமர்ந்திருக்கும்
பட்டர் மீது வெண்ணெய்
அடிப்பதற்குப் போட்டி நடக்கும்.
பட்டர் வெண்ணெய் வழிய வழிய
உட்கார்ந்திருப்பார். நவநீதம்
என்றால் சம்ஸ்கிருதத்தில்
‘வெண்ணெய்’ என்று பொருள்.)
2. தேசிலு
கல்யாணத்துக்கு முந்திய
அப்பாவின் புகைப்படங்களில்
மீசை இல்லாமல்
மீசை இல்லாத
ஜெமினி கணேசன் போல் இருந்தார்
பிற்பாடுதான் மீசை வந்தது
அவர் பெயர் தெருவில்
‘வீசை’ ஆனது
அப்பாவுக்குத்தான்
எத்தனை பெயர்
சான்றிதழ்களில் ‘தேசிகாமணி’
கேட்பவர் செவிகளில்
தவறாக எப்போதும் ‘தெய்வசிகாமணி’
சொந்த ஊரில் ‘தேசிலு’
வந்த ஊரில் ‘வடுவூரார்’
அரிதாக ‘சிகாமணி’ ‘மணி’
அப்புறம்
‘வீசை’
‘தலைவர்’
‘ஆர்சுத்தியார்’
கடைசியில் ‘தாத்தா’ ‘பெரிசு’ ‘கிழவன்’ ‘கிழடு’
எல்லாப் பெயர்களிலும்
சுழித்தோடினார்
ஒரு பெயரில் மூழ்கிக்கொண்டிருந்தபோது
இன்னொரு பெயரின் கை
இழுத்து வெளியில் போட்டது
மூச்சடங்கி
அமைதியில் நிலைத்திருந்த கணத்தில்
சுழிப்புகள் அற்று
ஓட்டமும் வெளித்தெரியாமல்
ஓடிக்கொண்டிருந்த குடமுருட்டி போலவே
ஆனார்
அப்பாவை இனி குடமுருட்டி
என்றும் அழைக்கலாம்
3. அந்தப் பக்கம் கண்ட எலி
தாத்தா ஏவிய
விந்தணுக்கள் பலகோடி
அதில் வென்று
ஆத்தாவின்
அண்டம் துளைத்துப்
பிண்டம் ஆனவர்
அப்பா
பீறிட்டு வெளிவந்தும்
ஐந்து வயதுக்குள்
தம்பியர் இருவர் வென்று
தனை ஏவிய
தந்தையும் வென்று
இன்னும் இன்னும்
முந்திச் செல்லும்
விந்தாகவே முண்டிக்கொண்டு
வந்தவர்
அப்பா
ஒருகணம் ஓய்ந்ததில்லை
ஓரிடம் கால் தரித்ததில்லை
துறுதுறுவென்று எப்போதும்
ஓடிக்கொண்டேயிருப்பார் தேசிலு
என்று எல்லோரும் சொல்லும்போது
எனக்குத் தோன்றும்
இன்னும் எந்த அண்டம் தேடி
இந்த விந்து பாய்கிறதென்றும்
இப்படியே போனால்
ஒளிவேகம் அடைந்துவிடும்
இவ்விந்து வேகமென்றும்
பேச்சடங்கி மூச்சடங்கி
கிடந்தபோதுதான் கண்டேன்
அப்பாவாய் அந்த விந்து ஆனதை
இதற்குத்தான் வந்தேன்
என்பதைப் போல
மலையை நெடுநேரம்
துளைத்து வந்த எலியாய்
மலைக்கு அந்தப் பக்கம்
எலி என்ன கண்டதென்று
தெரியவில்லை
ஆனால்
அந்தப் பக்கம் கண்டது
முகத்தில் உறைந்திருக்க
அலுங்காமல் அப்பா கிடந்ததைப்
பார்த்தபோது
அசைவற்ற ஒளியொன்று இருந்தால்
இப்படித்தான் இருக்குமென்று
யாரிடமாவது
சொல்லத் தோன்றியது
4. ஆமத்தம் உள்
மாயஞ்சுழற்றிய
மந்திரத்தில்
போய் விழுந்தான்
அச்சிறுவன்
ஆய்கழிக்க வந்தவர்
அதுகண்டு
கரையுந்தித்
தாவிக் குதித்துப்
பற்றினார்
பற்றுக அப்பற்றினையென
சுற்றிய தலையின்
கற்றை மயிரை
கரையுந்தலின் கனம் தாங்காமல்
எதிருந்தல் கொடுத்துக்
கரையேற்றிப் போட்டாள்
குடமுருட்டி
கரைகிடந்த சிறுவன்
கரையறியான்
கரைதந்த கையறியான்
கண்மூடிக் கிடந்தான்
கரைகாணா வெள்ளத்துள்
திசைகழுவிய வெள்ளத்துள்
அப்போது ஒரு குரல்
அவன் செவியுள்
எற்றரோ பேராய் நீ
ஆமத்தம் உள்
கண்விழித்ததும்
செவிச்சொல் மறந்தெழுந்து
கால்சட்டை அணிந்து
வீடு சென்றான் சிறுவன்
இனியெஞ்சும்
தலைமுறைகள்
சேர்ந்து தேடட்டும்
அதன் பொருளை
என்று
5. அப்பாவின் மீசை
அப்பாவின் மீசை
சாதி மீசையல்ல
ஆண் மீசையுமல்ல
தன்னாலும் முறுக்க முடியும்
என்று சொல்லிக்கொண்ட மீசை
அதுதான்
சிறுபிள்ளைகளை
அவர்மேல்
அச்சம் கொள்ள வைத்தது
அதுதான் அந்தச்
சிறிய மனிதரை
எதிர்ப்படுவோரைத்
தலைவரே என்று
அழைக்கவும் வைத்தது
அப்பா
வாழ்நாளில் சம்பாதித்தது
ரொம்பவும் கொஞ்சம்
அந்தக் கொஞ்சத்தில்
ரொம்பவும் அதிகம்
அவர் மீசை
அப்பாவை எரித்தபோது
அவர் எலும்பைவிட
அதிகம் சடசடத்திருக்கும்
அவர் மீசை
அதற்குத்தான்
வீராப்பு
ரொம்ப அதிகம்
6. அப்பாவின் சுளுக்கி
ஆளுயரத்துக்கும் அதிகம்
அந்த இரும்புச் சுளுக்கி
திருப்பாற்கடல்* எதிரில்
இரும்புப் பட்டறையில்
இப்படி வேண்டும்
அப்படி வேண்டும்
என்று சொல்லிச் சொல்லி
அப்பா செய்துகொண்டது
கூர்முனைக்கு அருகே
கீழ்நோக்கி மற்றொரு கூர்முனை
நழுவிச் செல்லும்
பாம்பின் தந்திரங்கள்
அப்பா நன்கு அறிந்ததால்
இப்படி ஒரு ஏற்பாடு
அப்பாவின் சுளுக்கிக்கு
நல்லபாம்புகளையும்
சாரைப்பாம்புகளையும்
அனுப்பிக்கொண்டே இருந்தது
பாமணி ஆற்றங்கரை
வீட்டுக்கொல்லைகளின்
மறைவுகள்
சுவர்களின் விரிசல்கள்
கீற்றுக்கூரைகள் என்று
எங்கிருந்தெல்லாமோ
முளைத்துக்கொண்டே இருக்கும்
பாம்புகள்
யார் வீட்டில் என்றாலும்
இறவாணத்தில் சொருகிய
சுளுக்கியை எடுத்துக்கொண்டு
ஓடுவார் அப்பா
தலைக்கு அருகே
ஒரு சொருகு சொருகி
அப்பா திருகும்போது
வலியை
பாம்பின் வால் சுழற்றும்
அதன் உயிரை
முற்றிலும் உறிஞ்சி எடுத்துக்கொண்ட
சுளுக்கியைப்
பின் உருவி
வாய்க்காலில் ரத்தம் கழுவி
வீட்டுக்குக் கொண்டு வருவார் அப்பா
இறவாணத்தில் அது சொருகியிருப்பதைப்
பார்க்கும்போதெல்லாம்
பாம்பைவிட அதன் மேல்தான்
பயம்
எந்த நொடியிலும்
அது பாம்பாக மாறிவிடும் என்று
எப்போதும் அஞ்சினேன்
தான் திருடிய பாம்புகளின்
உயிரையெல்லாம்
ஆலகால நஞ்சைச் சுண்டக் காய்ச்சித்
தன்னுள் அது வைத்திருக்கிறது என்று
எப்போதும் அஞ்சினேன்
என்னுள் தன் கூர்முனையால் சொருகி
அந்த நஞ்சைச் செலுத்திவிடும் என்று
எப்போதும் அஞ்சினேன்
அப்பா இறந்தபின்
நடுக்கத்துடன் இறவாணத்திலிருந்து
அதை உருவியபோதுதான்
அது தந்த குளுமையை
ஏற்றபோதுதான்
உணர்ந்தேன்
மறுமுனை நச்சையெல்லாம்
இம்முனையில் இறுகப் பற்றிய
அப்பாவின் கைகள்
தணித்துவிட்டனவென்றும்
அப்பாவின் சாவு
அந்தச் சுளுக்கியை
ஒரு பாம்பு பொம்மை
ஆக்கிவிட்டதென்றும்
(திருப்பாற்கடல் – மன்னார்குடியில்
பாமணியாற்றுக்கு அருகில்
உள்ள ஒரு குளம்)
7. இறவாணம்
சாவு
அப்பாவுக்குள்
ஆழப் பாய்ந்தபோது
அது அவரின் சுளுக்கி போல்
இருந்திருக்குமா
அது இரும்பால் செய்ததா
கூர்முனை அதனடி கீழ்முனை
கொண்டதா
அது ஆழப் பாய்ந்தபோது
தான் கொன்ற பாம்புகளை
ஒவ்வொன்றாக அப்பா
நினைத்திருப்பாரா
தன் வலியைக் கடத்திச்
சுழற்றவொரு
வாலில்லையென்று
முதன்முறையாக
வருந்தியிருப்பாரா
இல்லை
தன் வலியைக் கடத்திய
வாலென எங்களைக் கண்டு
நிச்சலனத்தில் ஆழ்ந்தாரா
சொருகிய சுளுக்கியை
உருவி எடுக்க வேண்டும்
அதை ஏதாவதொரு
இறவாணத்தில்
சொருகி வைக்க வேண்டும்
ஏதாவதொரு இறவாணம் என்றால்
அப்பாவின் சாவை
ஒரு பொம்மையாக்கித்
தன்னுள் என்றும் வைத்திருக்கும்
இறவாணம்
8. சாக வைக்கிற சாமி
முழுதும் அடங்கிய பிறகு
பாம்பை விட்டுவிட்டு
அப்பா சென்றாலும்
பாம்படிக்கச் சொன்ன வீட்டுக்காரர்கள்
அங்கேயேதான் நிற்பார்கள்
கரையோரம் புதைத்துப்
பாலூற்றுவார்கள்
சில வாரம் தொடரும்
இந்தச் சடங்கு
ஒருமுறை பாம்பைப் புதைத்துப்
பாலூற்றியதும்
தன் கன்னத்தில் போட்டுக்கொண்ட
பக்கத்து வீட்டுப் பூபதி அத்தை
‘நல்லது* நமக்கெல்லாம் சாமி
கும்புட்டுக்க கண்ணு’ என்று
தன் மகளிடம் சொல்ல
‘செத்தால்தான் சாமியாக முடியுமாம்மா
சாமின்னா அது ஏன் சாகணும்மா’
என்று அவள் கேட்க
‘சாமிகள்லயும் வாழ வைக்கிற சாமி
சாக வைக்கிற சாமின்னு
இருக்குடியம்மா
இது சாக வைக்கிற சாமிடி கண்ணு
கன்னத்துல போட்டுக்கோ’
என்று சொல்ல
அன்றிலிருந்து
அந்தச் சிறுமிக்கு ஒரே யோசனை
தான் வளர்ந்து பெரியவளாகி
வாழ வைக்கிற சாமி ஆவோமா
இல்லை
சாக வைக்கிற சாமி ஆவோமா
என்று
(நல்லது – பேச்சு வழக்கில்
நல்ல பாம்புக்கு இப்படி ஒரு
பெயர் உண்டு. பாம்பு என்ற
சொல்லைச் சொல்வதைத்
தவிர்ப்பதற்காகவும் ‘நல்லது’
என்று சொல்வதுண்டு)
9. அப்பா ஆகத் தவறியவன்
மாமா வந்திருந்தபோது
அப்பா இல்லாதபோது
பக்கத்து வீட்டுச் சுவர்ப் பிளவில்
பாம்பு நுழைந்திருந்தபோது
ஓடிவந்து எங்களை
அழைத்தார்கள்
அப்பாவைப் போல
அப்பாவின் சுளுக்கி மீதும்
மாமாவுக்கு பயம்
அப்பாவின் சுளுக்கி
அவர் பேச்சை மட்டுமே
கேட்கும்
கையில் கிடைத்த கம்பை
எடுத்துக்கொண்டு
அந்த வீட்டுக்குள் ஓடும் முன்
இன்னொரு கம்பை
என்னிடம் கொடுத்துச் சுவருக்கு
வெளியே நிற்கச் சொன்னார்
மாமா
உள்ளிருந்து
அவர் கம்பால் தள்ளிய பாம்பு
வெளியே வந்ததும்
அவசரத்தில் நான்
வாலில் அடித்துவிட
அப்படியே திரும்பி
தாண்டவப் படமாடியது
ஒற்றைக் கால் நடராசன்
உச்சியில் சினம் விரித்தான்
ஒரே அடியில்
எளிதில் வீழ்த்திவிட
அப்படியொரு வாகு
அப்படியொரு சமயம்
அச்சமயம் பாம்பு கேட்டது என்னிடம்
‘நான் விரித்த படத்தைவிட
பேரழகு மிக்கது
பேரச்சம் தருவது
நீ எனக்குத் தரப்போகும்
சாவெனில்
வா
தா
ஓங்கி உலகளந்துவிட்டுச்
சாகிறேன்’
பேசாத ஒப்பந்தமாய் நானும் நிற்க
அதுவும் என் கம்புக்குக் காத்திருந்துவிட்டு
நிலைத்த தன் படத்தை
உள்வாங்கிச் சென்றுவிட
‘ஒரு பாம்படிக்கத் தெரியலை
நீயெல்லாம்
ஒரு ஆம்பளைப் புள்ளை’
என்ற மாமாவின் குரல்
என்னை மகுடியிடமிருந்து
விடுவித்தது
10. சுளுக்கியின் பெயர்
பாமணியாற்றங்கரையின்
இருபது ஆண்டுகளில்
எனக்குத் தெரிந்து
யாரையும் கடித்ததில்லை
எந்தப் பாம்பும்
இருப்பினும்
ஒவ்வொரு பாம்பிலும்
யாருடைய சாவையோ கண்டு
அடித்துக் கொன்றீர்கள் அப்பா
கடைசியில்
சுளுக்கியுடன் சாவு
உங்கள் கண்முன்
வந்து நின்றதா அப்பா
அப்போது
அதற்கு முறுக்கு மீசை
இருந்ததா அப்பா
அன்றொரு நாள்
தாரில் சிக்கிக்கொண்டு
உங்கள் சுளுக்கி முன்னே
தலை மட்டும் நீட்டி நீட்டிச்
சீறிய பாம்பைப் போல
தானுமொரு பாம்பாய்
சாவின் சுளுக்கி முன்
உங்களை
உணர்ந்தீர்களா அப்பா
வாழ்விலிருந்தும்
வாழ விடாமல்
இறுக்கிப் பிடித்த தாரிலிருந்தும்
உங்களை விடுவிக்க வந்த
சுளுக்கியை
அது நேரே உங்கள் இதயத்தில்
பாயும் முன்
என்ன பெயர் சொல்லி
அதனை அழைத்தீர்கள்
அப்பா
(தொடரும்...)
தொடர்புடைய கவிதைகள்
மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்
1
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Tamil 1 year ago
ஆழமான பார்வை, அழுத்தமான பதிவு வாழ்த்துக்கள் ஆசை
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Mathavan 1 year ago
ஒவ்வொரு பாம்பிலும் யாருடைய இறப்பயோ தவிர்கிறேன் என்று எத்தனை பாம்புகளின் உயிர் எடுத்தீர்கள் அப்பா---ஆனால் அந்த புதர் செழித்த நதிக்கறையில் எந்த மனித உயிர்களைமயும் சீண்டியது இல்லை இதுநாள்வரை. மிக சரியாக புரியாத நிறைய வாழ்க்கையை புரிய வைக்கிறது இந்த பதிவு
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.