கலை, கவிதை, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

மாயக் குடமுருட்டி: ஒளிதான் முதல் நினைவு

ஆசை
13 Aug 2023, 5:00 am
0

ஓவியங்கள்: ஜோ.விஜயகுமார்

          ஒளிக்கீற்றில் தூசுகளின் நடனம்
          யாருக்குமே தெரியாது
          எந்த இசையை அந்தத் துகள்கள்
          கேட்கின்றன என்று

           நம் ஒவ்வொருவருக்கும் உண்டு
           ரகசிய இசை
           அதை இசைப்பதற்கு உண்டு
           ஒரு ரகசிய இசைக் கலைஞன்

                         -ரூமி  

1. நினைவேற்றல்

ஒளிதான்
அந்தக் குழந்தைக்கு
முதல் நினைவு

சொந்த நினைவா
சொல்லப்பட்ட நினைவா
என்று கேட்க வேண்டாம்

யாருக்காவது
சொந்த நினைவென்று
ஏதும் இருக்கிறதா என்ன

நமக்கு நாமே
நினைவேற்றிக்கொள்ளும்போது
நம்மை நம்பியே
நம்முடன் பிறந்த குழந்தை
வேறு வழியின்றி
மறுபேச்சின்றி நம்பிவிடுகிறது

சொந்த நினைவின்றிப்
பிறந்த குழந்தையை
நாம்
இப்படித் தொடர்ந்து
ஏமாற்றிக்கொண்டுவருகிறோம்

நாம் அதனிருந்து
தொலைவாய்ச் சென்று
வளர்கிறோம்

எவ்வளவு தொலைவெனினும்
ஒளியைவிட விரைவாய்
இருவருக்குமிடையே தகவல்
பாய்கிறது

ஒன்று
இந்த குவாண்டம் பிணைப்பிலிருந்து
இருவரும் அறுபட்டுத் தனித்தனியே
உயிர்வாழ வேண்டும்

இல்லை
தொலைவு அறுபட்டு
இருவரும் ஒன்றாய்
ஓருயிராய் வாழ வேண்டும்

நாம் என்ற
நம் குழந்தை உயிருக்கு
நினைவேற்றவே
வாழ்நாள் முழுக்க
வாழ்ந்துதொலைக்கும் வேதனைக்கு
வாழ்க்கை என்ற பெயருக்கொன்றும்
குறைச்சல் இல்லை

ஒளி
ஒரு சொல்லப்பட்ட நினைவென்றால்
வாழ்க்கை
அதன்மேல் எழுதப்பட்ட கனவாகவே
இருக்கிறது

2. சுவைமிகு தொப்புள்கொடி

அந்தக் குழந்தை பிறந்து
ஐந்தாம் மாதம்
வெறுங்கண்ணில்
யாரும் பார்க்கக் கூடாதென்று
எச்சரிக்கப்பட்ட
விண்ணிகழ்வின் ஒளி*

கூரையின் சிறு பொத்தல் வழி
அந்தக் குழந்தையின்
காலைத் தொட்டு
மெதுவாய் ஏறி
குஞ்சாமணியைக் கிச்சுக்கிச்சு மூட்டி
வயிற்றில் ஊர்ந்துசென்று
முகத்தின் மேல் ஏறியபோது
அதுவரை உறங்கிய
அந்தக் குழந்தை
விழித்துக்கொண்டது

முதலில் வாயால் வாயால்
லாவப் பார்த்துப்
பின் கையால் கையால்
பிடித்து
வாய்க்குள் போடப் பார்த்தது

வாயிலிருந்து தப்பித்துக்
கண்ணில் படர்ந்தபோது
ஒளி
தான் புறப்பட்ட இடத்தின்
பொருள் செய்தது அங்கே

அசைவற்றுப் போன
அந்தக் குழந்தை
கண்டுகொண்டது

அதுதான்
அண்டம் தனக்கு அனுப்பிய
ஆதித் தொப்புள்கொடி என்று

அந்தக் குழந்தை கண்டுகொண்டது
அந்தத் தொப்புள்கொடி
சுவைமிகுந்ததென்று

அன்றுதான்
ஒளியூறித் ததும்பும்
உடல் கொண்டது அந்தக் குழந்தை
ஒளி முட்டி
வெளியேறத் ததும்பும்
உடல் கொண்டது அந்தக் குழந்தை

ஓடிக்கொண்டே இருக்கும் ஒளியை
உறைய வைக்கும் சக்தியைத்
தன் உடலுக்குத் தந்தது
எதுவென்று
அன்றிலிருந்து
தேடிக்கொண்டே இருக்கிறது
அந்தக் குழந்தை

3. வெற்றொளி

‘பாப்பா**
இங்கே வாயேன்
தம்பி எப்படி
சிரிக்கிறான் பாரேன்’
என்று செல்வி
அழைத்ததும்
அடுப்பங்கரையிலிருந்து
ஓடிவந்து பார்க்கிறாள் பாப்பா

‘ஏட்டி
இந்தக் கொடுமையைப் பாரேன்
கெரகண ஒளியை
வெறுங்கண்ணால பார்க்கக் கூடாதுன்னு
நேத்துதான் ரேடியாவுல சொன்னாங்க

‘ஒளி அப்படி
என்ன சொன்னிச்சுன்னு
இது இப்படி
களுக்கு களுக்குன்னு
சிரிச்சுக்கிட்டுக் கிடக்கு’
என்கிறாள் பாப்பா

ஒளியோடு கதையடிக்கும்போது
அக்கா பேசுவதையோ
பாப்பா பேசுவதையோ
கேட்குமா குழந்தை

இருந்தாலும்
வெற்றொளியில்
அப்படி என்ன சிரிப்பு
வேண்டிக் கிடக்கு
என்று தம்பியையும்
கூரையிலிருந்து வரும்
ஒளிக்கீற்றையும் மாறி மாறிப்
பார்க்கிறாள் செல்வி

4. சிரிப்பொளி

ஒளி சொன்ன சேதி
இன்னும்
காதில் குடைகிறது

சிரித்த சிரிப்பொலியை
ஒளி கொண்டு போய்விட்டது
அது இனிமேல்
ஆப்பிரிக்கக் குடிசையொன்றுள்
படுத்திருக்கும் குழந்தையொன்றுக்கு
கூரை வழியே வந்து
கேட்கலாம்

அம்மா காட்டும்
திறன்பேசி வழியே
நார்வே குழந்தைக்கும் கேட்கலாம்

ஒளியைத் துழாவும்போது
எல்லாக் குழந்தைகளும்
இணைக்கப்படுகின்றன
ஒளி கிச்சுக்கிச்சு மூட்டும்போது
எல்லாக் குழந்தைகளும்
சிரிக்கின்றன
அந்தச் சிரிப்பொலி
எல்லாக் குழந்தைகளின் காதுகளிலும்
எதிரொலிக்கிறது

சிரிப்பொலி கேட்டே
சிரிக்கின்றன குழந்தைகள்
சிரிப்பொளி பார்த்தே
சிரிக்கின்றன குழந்தைகள்

ஒளி
ஒரு சிரிப்பு மட்டுமே

5. எங்கிருந்தாலும் நீ என் பொம்மை

ஒளியை ஒரு குழந்தை
வம்பிழுக்கும்போது
மறுமுனையில் என்ன நடக்கிறது என்று
நமக்குத் தெரியாது
குழந்தைக்குத் தெரியும்

மறுமுனையில் இருக்கும்
எதுவுமே பொம்மைதான்
ஒன்று
தன்னிடம் உடைபட வேண்டும்
இல்லை
உடைபடுவதற்குள்
ஓடிப்போக வேண்டும்

மூன்றாவதாக ஒன்று இருக்கிறது
அது
விளையாடும்போதே
காணாமல் மறையும் பொம்மை

காணாமல் போனாலும்
அது தன்னுடைய பொம்மையாக
இருக்க வேண்டும் என்றுதான்
எச்சிலை அடையாளமிட்டு
அனுப்புகிறது குழந்தை

6. பொன்வளையம்

முற்றிலும் இருள் பொதிய
மொத்த சக்தியும்
விளிம்பில் பிதுங்க
பொன்வளையம் செய்தது
சூரியன்

பொன்வளையம் செய்துவிட்டால்
பரிசுபெற வேண்டாமா

தன் கீழே திரண்டிருக்கும்
பரிசுகளின் மேல்
தூக்கி எறிந்தது

எறிந்தபின்
எல்லையற்றுப்
பிரிபிரியாய்ப்
பிரிந்த வளையங்களுள் ஒன்று
போய் விழுந்த இடம்
தேவங்குடியின்***
கீற்றுக் குடிசை
கீற்றின் ஓட்டை
நேர் கீழே குழந்தை

பொன்வளையமே வைத்துக்கொண்டு
வேறு பரிசு தேட வந்தாயோ
என்று கைகால் உதைத்துக்
குழந்தை கெக்கலி கொட்ட

அடுத்த நொடி
முகமெல்லாம் வெளிறிப்போக
எறிந்த வளையங்கள்
தொலைத்துவிட்டு
பதிந்த நிலவைப்
புறந்தள்ளிவிட்டுப்
பொன்னந்தி நோக்கிப்
புறப்பட்டது சூரியன்

7. அணையாத ஈ

தீயின் மேல் வந்து
உட்காரப் பார்க்கிறது
ஒரு ஈ

வெம்மை விரட்டுகிறது
ஒளி ஈர்க்கிறது

இரண்டில் ஒன்றில்லாமல்
போயிருந்தாலும்
அணைந்து போயிருக்கும் ஈ

ஈயை நிம்மதியாக இருக்க
யார் விட்டது

    (தொடரும்...) 

 

குறிப்புகள்:

*விண்ணிகழ்வு - 1980ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி நடந்த சூரிய கிரகணத்தை இது குறிக்கிறது. அதுதான் இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் தெரிந்த முதல் முழு சூரிய கிரகணம். இதையொட்டி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பும் ஆர்வமும் ஏற்பட்டது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த நிகழ்வைக் காண்பதற்கு கிரகண நோக்கு முகாம்கள் அமைக்கப்பட்டன. கூடவே, அறிவியலுக்கும் சோதிடத்துக்கும் இடையே பெரும் விவாதம் அப்போது நடந்தது. கிரகணத்தின்போது உணவு கெட்டுப்போகுமா என்பதை இந்திய தேசிய அறிவியல் நிறுவனம் (Indian National Science Association) ஆராய்ச்சி செய்து, கெட்டுப்போகாது என்ற முடிவுக்கு வந்தனர். கிரகணத்தைப் பார்க்கக் கூடாது, கிரகணத்தின்போது வெளிவரக் கூடாது என்று மரபான நம்பிக்கையாளர்களும், கிரகணத்தைத் தகுந்த கண்ணாடி கொண்டு பார்க்கலாம், கிரகணத்தின்போது வெளியே வரலாம் என்று அறிவியலர்களும் கூறினார்கள். மக்கள் வெளிவருவதைத் தடுப்பதற்காக தூர்தர்ஷனில் ரஜினிகாந்த் படம் ஒளிபரப்பினார்கள் என்றும், பேருந்துகளை ஓட்டத் தயங்கிய ஓட்டுநர்களுக்கு கறுப்புக் கண்ணாடி வழங்கப்பட்டது என்றும் சுவாரசியமான தகவல்களை முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.  

**பாப்பா – கவிதையில் வரும் குழந்தையின் அம்மாவை எல்லோரும் அழைக்கும் செல்லப் பெயர்.

***தேவங்குடி – மன்னார்குடிக்கு அருகில் உள்ள கிராமம்; எழுத்தாளர் தி.ஜானகிராமன் பிறந்த ஊர்.

 

தொடர்புடைய கவிதைகள்:

மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்
மாயக் குடமுருட்டி: அண்ணனின் தூண்டிலைத் திருடிய அப்பா
மாயக் குடமுருட்டி: கருப்பு சிவப்பாய் ஒரு ஆறு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


1






பச்சுங்கா பல்கலைக்கழகம்ஆசிஷ் ஜா: பிஹாரின் சமீபத்திய கௌரவம்சாஹேபின் உடல்சாவர்க்கர் குறுந்தொடர்தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேலிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரிதடுப்பணைகள்காந்திய வழியில் அமுல்மோடியின் கவர்ச்சியில் தேய்வுநிதிஷ்குமார்காங்கிரஸ் குறிவைக்கும் 255 தொகுதிகள்வைக்கம்தான்சானியாவின் முக்கிய நகரங்கள்வகுப்புவாதம்‘தி டெலிகிராப்’ நாளிதழுடன் வளர்ந்தேன் பயங்கரவாதம்!ramachandra guha articles in tamilவெற்றொளிதேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேசட்டப்பிரிவு 370உபநிடதம்1984 நாவல்காங்கிரஸ் வீழவில்லை; மோடி வென்றிருக்கிறார்: சமஸ் பஹிலாரிபுவியியல் அமைப்பு எனும் சவால்லீ குவான் யுஅறிவுஜீவிகள்சிறப்பு வரிகாட்சி மொழிஜொமெட்டோ

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!