கலை, கவிதை, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

மாயக் குடமுருட்டி: பஞ்சவர்ணத்தின் பருக்கைகள்

ஆசை
27 Aug 2023, 5:00 am
0

ஓவியங்கள்: ஜோ.விஜயகுமார்

     “Family is all”

        Don Hector Salamanca, Breaking Bad

1. முந்தைய பிரபஞ்சத்தின் நினைவு

நினைவை நம்பியே
எழுதத் தொடங்கினேன்

பொய் நினைவோ
அரைநினைவோ
கால்நினைவோ
பிசகிய நினைவோ
மங்கல் நினைவோ
இரவல் நினைவோ
முந்தைய பிரபஞ்சத்தின்
எஞ்சிய நினைவோ
என்று போகப் போக
எனக்கே குழப்பம்

அப்போது
என்முன்
இரண்டு தொலைநோக்கிகள்
இருந்தன

ஒன்று
வெகு தொலைவில் இருக்கும்
எளிதில் புலப்படாத
விண்மீனைப் பார்ப்பதற்கான
தொலைநோக்கி

இன்னொன்று
வெகு தொலைவில் இருக்கும்
எளிதில் புலப்படாத
விண்மீனின் கனவைப் பார்ப்பதற்கான
தொலைநோக்கி

நான் இரண்டாவதைத்
தேர்ந்தெடுத்தேன்
உன் கதையைச் சொல்வதற்குக்
கதையை விடுத்துக்
கவிதையை ஏன் தேர்ந்தெடுத்தாய்
என்று கேட்கும்
நண்பர்களுக்கும்
இரண்டாம் தொலைநோக்கியே
தருவேன்

2. மூதாதையரைத் தேடி…

அப்பா இருந்தபோது
வம்சாவளி வரலாறு ஏதும்
கேட்டதில்லை

அதன் பிறகு நான்
கேட்பவர்களின் நினைவுகள்
திடீரென்று இறுகி
மலையாக முன்னெழுகின்றன

அவற்றில் எனது கூக்குரல் பட்டு
எனக்கே திரும்பிவரும்போது
யாருடையதைப் போலவோ கேட்க
திடுக்கிட்டுப் போகிறேன்

சமணப் படுகைகள் தேடிச் சென்ற
நண்பர்கள் இருவர் நினைவு
வந்தது

ஆய்வின் இடையே
குகைக்குள் தூங்கிக்
குறட்டை விட்ட சத்தம்
குகைக்குள் சுழன்று
பெரிய உறுமலாய்த்
திரும்பிவர
அரண்டு இருவரும்
எழுந்தோடிய கதையைச்
சொல்லிச் சிரித்தார்கள்
ஒருமுறை

மூதாதைமையின் குகை நோக்கி
எழுப்பிய கூக்குரல்
சிங்கக் குரலாய்த்
திரும்பவில்லை

அதனினும் பேரொலியோடு
ஒரு காட்டின் கேவலாய்த்
திரும்பிவந்தது

தொலைவில்
எப்போதோ எங்கோ
ஒரு காடு இருந்திருக்கிறது

3. இல்லாதது

மூதாதையின் முனை காண
தொலைநோக்கி ஒன்றைக்
கையில் எடுத்தேன்

தெரிந்த தூரத்தைக் கொஞ்சம்
முன்னே தள்ளி வைத்தது
அது

புறா ஒன்றின் காலில்
நூல் கட்டிப் பறக்கவிட்டேன்
அத்திசையில்

போய்க்கொண்டே இருந்த புறா
புள்ளியானது
புள்ளிவரை புறாவாக இருந்தது
அதன் பின் வானமானது

கையிலுள்ள நூல் மட்டும்
திடம்
நூலின் மறுமுனையோ 
மாயம்

ஆரம்பத்தில்
எந்தப் புள்ளியில் மாயம்
நூலாகியிருக்கும்

இரண்டுக்கும் இடையே
நிகழ்ந்தது என்ன

இதோ 
அந்தப் புள்ளி தாண்டி
ஒரு புறா பறக்கும் அதிர்வு
இங்கே அதன் நூலை
இறுகப் பற்றிய கையின்
மணிக்கட்டு நரம்பில் 
துடித்துக்கொண்டிருக்கிறது

துடிப்பை வைத்துதான்
இல்லாததையும்
பொல்லாததையும் 
அளந்துகொண்டிருக்கிறோம்

4. பருக்கைக் கண்

தட்டிலும் மிச்சம்
தரையிலும் பருக்கைகள்

‘ஒங்களுக்கெல்லாம்
சோத்தோட அருமை எங்கே தெரியும்
எங்க ஆயி பஞ்சவர்ணம்
வேலைசெஞ்சு கெடைச்ச
ஒருவேளை சோத்தைத்
தான் திங்காம
கொண்டாந்து கொடுத்து
என் உசுர வளர்த்தா’
என்று தவறாமல்
பாட்டு விடுவார் அப்பா

தட்டின் மிச்சம்
கீழே கிடப்பது எல்லாம்
எடுத்துத் தின்பார்
ஒரு பருக்கை மிச்சமில்லாமல்

திட்டுவாங்க வைத்துவிட்டாளே
பஞ்சவர்ணம்
என்று கோபம்கோபமாய் வரும்
அவனுக்கு

ஆனாலும்
ஆத்தாவுக்குப் பேரன் மீதும்
கொள்ளை ஆசை

பள்ளிவிட்டு வர நேரமானால்
வாசலிலேயே
தவியாய்த் தவித்துக் கிடப்பாள்
‘பேரன் வர்றானா
பேரன் வர்றானா’
என்று நச்சரிப்பாள்
வாசல் கடப்பவரையெல்லாம் கேட்டு

ஆறாம் வகுப்பு வரை
தன் பேரனைக் குளிப்பாட்டி
சூத்துக்கழுவியவள் அவள்தான்
என்றாலும்
பாப்பாவாலோ என்னவோ
ஆத்தா சாகும்வரை
அவள் மீது
ஏதோ ஒரு வெறுப்பு

தான் வளர்த்த
தங்கைப் பெண்ணின்
கணவன் சாவுக்கு
வடுவூர் புதுக்கோட்டை சென்றவள்
பூர்வீக வீட்டிலேயே
செத்துப்போனாள்

‘இவளுக்கு வந்த சாவப் பாரேன்
யாருக்கும் கிடைக்காத சாவு’
என்று மாய்ந்து மாய்ந்து போனார்கள்
ஊரிலெல்லோரும்

ஆத்தா சாவுக்கு
அழவே இல்லை அவன்
பக்கத்து வீட்டு வாசலில்
பம்பரம் விட்டுக்கொண்டிருந்தான்

மேல்படிப்புக்குச் சென்னை
வந்தபின்
ஆத்தா செத்து
பத்தாண்டுகளுக்குப் பின்
ஏனென்று தெரியாமல்
ஒரு நாள்
அவள் நினைவு வர
‘ஆத்தா ஆத்தா’ என்றழுதான்
விடிய விடிய

அதன் பின் அவன்
பஞ்சவர்ணத்தை எப்போதும்
பிரிந்ததில்லை

பேரனுக்குத்
திருமணம்
பேரனுக்குப் பிள்ளைகள்
என்று விரிந்துகொண்டே இருக்கிறது
பஞ்சவர்ணத்தின் கருப்பை

அலுவலகம் விட்டு
வீடு வரும்போது
வாசலில் எப்போதும்
அவள் காத்துக்கொண்டே
இருப்பாள்

வீட்டில் பிள்ளைகளுடன் சாப்பிடும்போது
அவர்கள் சிந்தும்போது
அப்பா சொன்ன
ஆத்தாவின் பருக்கைக் கதையைத்
தானும் சொல்கிறான்

பிள்ளைகளுக்குப்
பருக்கையின் அருமையையோ
ஒழுக்கத்தையோ
சொல்லிக்கொடுக்க அல்ல
பஞ்சவர்ணத்தைச் சொல்லிக்கொடுக்க

இனி பருக்கை வழி மட்டும்தானே
பார்க்க முடியும் அவர்களால்
தனக்கென்றொரு புகைப்படமில்லாத
பஞ்சவர்ணத்தை

5. பஞ்சவர்ணம் பார்த்துக்கொண்டிருக்கிறாள்

பஞ்சவர்ணம் பார்த்துக்கொண்டிருக்கிறாள்
மேலிருந்தோ கீழிருந்தோ
உள்ளிருந்தோ
பருக்கையிலிருந்தோ
எதிலிருந்து என்று தெரியவில்லை

ஆனால் நிச்சயம் பார்த்துக்கொண்டிருக்கிறாள்
தன் பேரனின் பிள்ளைகள்
சிதறி ஓடுவதை

‘என் பருக்கையெல்லாம்
இப்படிப் பூத்துச் சிரிக்குதே
என் பருக்கையெல்லாம்
கைமொளைச்சுக் கால்மொளைச்சு
எல்லாத் தெசையிலும் ஓடுதே
பார்க்க எனக்குக்
கண்ணு கொள்ளலையே
இன்னும் எறைஞ்சு ஓடுங்கடா
என் ராசாமாருகளா
என் கண்ணுமுட்டத் தின்னுக்குறேன்
ஒங்களையெல்லாம்’
என்று நிச்சயம் மாய்ந்து மாய்ந்து
அரற்றிக்கொண்டிருப்பாள்

பாவம் பஞ்சவர்ணம்
கருப்பையல்ல
பருக்கைதான்
நம்மையெல்லாம் ஈன்றெடுக்கிறது
என்று நம்பியவள் அவள்

6. காவிரி வெறும் நீரல்ல

இறந்த பிறகு
வடுவூர் ஸ்டூடியோவிலிருந்து
வந்து படம் எடுத்தார்கள்

கிழவி உயிரோடு இருப்பதுபோல்
கண்ணை நாங்களே வரைந்துதருகிறோம்
என்றார்கள்
அப்படியே செய்தும்கொடுத்தார்கள்

இப்படியாக எங்கள் தலைமுறையின்
கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைத்
தன் இறப்பில் தொடங்கிவைத்தாள்
பஞ்சவர்ணம்

எல்லோரும் வெவ்வேறு திசைகளில்
சென்றுவிட
அண்ணன் கட்டிய புதுவீட்டுக்கு
அப்பாவும் பாப்பாவும் சென்றுவிட
பஞ்சவர்ணம் மட்டும்
பாமணியாற்றங்கரைப்
புறம்போக்கு வீட்டிலேயே
படமாகத் தொங்கிக்கொண்டிருந்தாள்

அங்கே குடிவந்த
சித்தப்பாவோ
‘பொணத்தோட படம்
குடும்பத்துக்கு ஆகாது’
என்று தூக்கிப்போட்டார்
வாய்க்காலில்

வெகுநாள் கழித்துதான்
கேள்விப்பட்டார் அப்பா
ஆத்து ஆத்துப் போனார்
தேம்பித் தேம்பி அழுதார்

‘படமாவாச்சும்
எல்லாரையும் அந்தக் கெழவி
பாத்துக்கிட்டு இருந்தாளேன்னு
ஒரு ஆறுதல் இருந்துச்சே
அதையும் நாசமாக்கிட்டானே’
என்று புலம்பினார்

அவருக்குத் தெரியவில்லை
பஞ்சவர்ணம்
எப்போதும் பார்த்துக்கொண்டுதான் இருப்பாள்
என்று

ஏனெனில்
அவள் பார்வை
அவள் போய்ச் சேர்ந்த
காவிரியின் பார்வை

காவிரி ஓடுவாள்
வற்றுவாள்
கரைபுரள்வாள்
மணல்புரள்வாள்
ஆனால்
ஒருபோதும் இல்லாமல்
போக மாட்டாள்
பார்க்காமல்
போக மாட்டாள்

காவிரி வெறும் நீரல்ல
காவிரி
ஒரு பார்வை

7. மண்புழு நம் தாத்தா

இதோ இந்த அதிநவீன நகரத்தின் 
வழுவழு குளியலறைத் தரைக்கு
எப்படி வந்தது இந்த மண்புழு

பிள்ளை அலறினான்
பயம் வேண்டாம்
மண்புழு விவசாயிகளின் நண்பன்
என்று தன் பிள்ளையிடம் சொன்ன
அவனிடமோ
அவன் தகப்பனிடமோ
கையகலநிலம் கூட கிடையாது

முப்பாட்டன் யார் நிலத்திலோ
உழுதிருக்கலாம்
இதே மண்புழுபோல

அவனை யாரும்
நினைத்திருக்க மாட்டார்கள்
நண்பனாய்

அதனால்
மண்புழு நம் தாத்தா
என்று வாய்தவறிச் சொல்லிவிட்டான்

புரியாமல் அவனையும்
மண்புழுவையும் பார்த்த பிள்ளை
தாத்தா முன்னேயும் நகர்வாரா
பின்னேயும் நகர்வாரா
என்று கேட்டான்

தாத்தா இதோ இவ்வளவு தூரம்
நகர்ந்துவந்திருக்கிறார்
என்று தன் பிள்ளையைத் 
தொட்டுச் சொன்னான்

தொட்ட விரலில்
முப்பாட்டனின்
மின்சாரம் பாய
உடல் ஒரு நொடி
உதறிப்போட்டது

8. தீச்செயல் பெருக்கு1

வலைத்தொடரில்
ஒரு காட்சித் துணுக்கு

இரண்டு பிள்ளைகளும்
கதவு திறந்து உள்நுழைந்துவிட
மடிக்கணினித் திரை நோக்கிக் குவிகிறது
அவர்கள் பார்வை

மண்சாலையொன்று
சாரைசாரையாக
ஊர்ந்துசெல்லும் சிலர்

எங்கிருந்தோ வரும் கார்
சாலையோரம் நிற்க
கோட்டுசூட்டுடன் இறங்கும் 
மொட்டை இரட்டையர்கள்
காலணிநுனிக் கபாலம்

அவர்களும்
சாலையில் படுத்து
ஊர்ந்துசெல்கிறார்கள்

சிறிது தூரத்தில்
ஒரு குடிசை
அதன் முன்னே எழுந்து
உள்ளே நுழைபவர்கள்
குட்டிக் குட்டி ஊர்ச்சாமிகள்
முன் நிற்கிறார்கள்
நடுநாயகமாகக்
கபால சாமி

சாமிகள் முன்
அவர்கள் வைக்கும் காகிதத்தில்
தொப்பியும் கண்ணாடியும்
அணிந்த ஒருவன்

அவன்
தன் முன்னே நிற்கும்
இரட்டையர்களை விலக்கிவிட்டு
எங்களை நோக்கி வெறிக்கிறான்

என்ன செய்தார்கள் அப்பா
இந்த இரட்டையர்கள்
ஏன் ஊர்ந்துசெல்கிறார்கள்
ஏன் சாமி முன் வைத்தார்கள்
அந்தப் படத்தை
என்றெல்லாம் கேட்கிறார்கள்
குழந்தைகள்

கொலை இலக்கு தவறக்கூடாதென்று
நேர்ந்துகொள்கிறார்கள் என்றும்
அங்கே இருப்பதெல்லாம்
கொலைச் சாமிகளென்றும்
எப்படிச் சொல்வது
குழந்தைகளிடம்

படத்தில் இருப்பவர் 
இரட்டையர்களின் தாத்தா
சிறுவயதிலேயே
காணாமல் போனவர்
அவரைத் தேடிப்போகும் முன்
சாமியிடம் இப்படி ஒரு வேண்டுதல்
என்றேன்

மறுநாள்
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்
கதவைத் தட்டியபோதே
உள்ளிருந்து கசிந்தது
ஏதோ நாடகத்தின் வாசனை

‘அப்பா ஒரு சர்ப்ரைஸ்’ என்று
சொல்லிவிட்டு இருவரும்
கூடத்தின் வழுவழு தரையில் படுத்து
ஊர்ந்து செல்ல ஆரம்பிக்கிறார்கள்
ஒருவன் அம்மணக் குண்டியுடன்

பக்கத்து அறைக்குள்
நுழைந்து 
சுவரோரம் இருந்த
உடைந்த பொம்மைகளுக்கு நடுவே
சிறுபடமொன்று வைத்துவிட்டு
எழுந்து நின்று கும்பிட்டார்கள்

என்னுடைய படம்

அதன் பார்வை 
என்னுடையதுபோல் இல்லை
எனக்கும் முன்னரே
தொடங்கியதுபோல் இருந்தது

அதன் பார்வை
எங்களை விலக்கி
எங்களைத் தாண்டியும் 
வெறித்துக்கொண்டிருக்கிறது

இடையறாத பார்வையொன்றின் கொடி
கட்டப்பட்டிருக்கிறது
அதில் காலம்காலமாகக்
காய்ந்துகொண்டிருக்கின்றன
வெவ்வேறு துணிகள்

9. வயிற்றாய்வு

ஓரிடத்தில் தரித்திரா
வாழ்வு
எங்கே போய்
அகழாய்வு செய்ய

நினைவுகளிலும்
பதிவுகளிலும்
சில தலைமுறைகளுக்கு
முன்பு வரைதான்

சலித்துப்போய்ப்
பாதாளக் கரண்டியை
விழுங்கிக் கயிற்றை மட்டும்
கையில் வைத்துக்கொண்டேன்

வயிற்றில் சற்றுநேரம்
ஆட்டிஆட்டி
அளைந்துவிட்டு
வெகு நேரம் கழித்து
வெடுக்கென்று
இழுத்தேன்

அது இழுத்துக்கொண்டு வந்தது
சகலத்தையும்

ஆவணங்கள்
ஆவணக் காப்பகங்கள்
அகழாய்வுத் தளங்களிலெல்லாம்
கிடைக்காத குப்பைகள்
குவியல் குவியலாய்

கூடவே
கொஞ்சம் வைரவைடூரியங்கள்

எப்போதோ வரப்போகும் எனக்கென்று
அவற்றைக் கொட்டிவைக்க
அவர்களுக்கென்ன பைத்தியமா

அழியா வயிற்றுள்
கொட்டிவைத்த
மூதாதையின் குப்பை
நாட்பட நாட்பட
வைரம் ஆகியே தீரும்

அதற்குத்தான் சொல்வது
எங்கும் கிடைக்காத ஒன்றைத்
தேடுவதற்கு
வயிற்றுக்குள்
குதித்தால் போதும்
என்று

10. எச்சில் டம்ளர்

டீக்கடையில் மாஸ்டர் கேட்கிறார்
‘கிளாஸா யூஸ் அண்ட் த்ரோவா’

கண்ணாடி டம்ளரே
போதுமென்று சொன்னதும்
எச்சில் டம்ளரை எடுத்துப்
பேருக்குக் கொஞ்சம்
வெந்நீர் ஊற்றி
இரண்டு ஆற்று ஆற்றிக்
கழுவுகிறார்

வெந்நீர் ஊற்றிப் போய்விடுமா
மாஸ்டர்
அதில் படிந்த
ஆயிரம் ஆயிரம் உதடுகளின்
எச்சில் நுண்தடம்

நான் வாய் வைத்துப்
பருகும்போது
எல்லா மறுமுனை உதடுகளும்
உயிர்க்கின்றன
எனக்காக எச்சில் சுரக்கின்றன

எல்லோருடைய எச்சிலின்
திரவியக் கருவூலம்
கருணைக் களஞ்சியம்
இந்த டீ டம்ளர்

எப்போதோ ஒன்றாய்ச் சுரந்த
எச்சிலை
அவரவர் தூக்கியெறி கோப்பைகள்
தனித்தனியாய்ப் பிரித்துவிட
அந்த அடையாளமெல்லாம்
பொருட்படுத்தாமல்
அந்த எச்சிலையெல்லாம்
என்னிடம்
ஒன்றுசேர்ப்பது
இந்த டீ டம்ளர்தான் மாஸ்டர்

ஒருபோதும்
தந்துவிடாதீர்கள் எனக்கு
தூக்கியெறி கோப்பையை
அது எச்சில் தொடர்ச்சியைக்
குப்பைக்குக் கொண்டுபோய்
சேர்க்கிறது

குடித்து முடித்து
யாரோ வைத்துப்போன
காலி டம்ளரைப் பார்க்கிறேன்
அது என் பார்வையை நிறைக்கிறது

வையத்தின் குடமுருட்டியெல்லாம்
இந்த வெற்று டம்ளரிலிருந்தே
ஊற்றெடுக்கின்றன
இந்த வெற்று வாய்நோக்கியே
பாய்கின்றன

11. தற்காலிக ஆறு

ஒரு சித்திக்கு மட்டும் தெரிந்திருக்கிறது
சோமு
முருகன்
லெட்சுமணன்
என்று மூன்று நான்கு பேர் வரை
ஒப்பிக்கிறாள்

அதன் பிறகு அம்போவென்று
விட்டுவிடுகிறாள்

சோமுவுக்கும்
முருகனுக்கும்
லெட்சுமணனுக்கும்
அப்படித்தான் மூன்று நான்கு பேரை
ஒப்பித்திருப்பார்கள்

அதுவும்
கருமக் காரியங்களின்போது மட்டும்

பரம்பரைக்கு
அம்மாவே கிடையாதா
என்று யாரும் கேட்டதில்லையா

வம்ச வரிசையும்
வம்ச சரித்திரமும்
எழுதிவைக்க
தமக்கு முன் யாரும்
ஆண்டிருப்பார்கள் என்றோ
தமக்குப் பின் யாரும்
ஆள்வார்கள் என்றோ
நினைத்திராதவர்கள்

ஒவ்வொரு தலைமுறையிலும்
அப்பனுக்கும் பிள்ளைக்கும் 
நடுவே ஆறாய் 
ஓடிக்கொண்டிருப்பார்கள்
அவ்வளவுதான்

அம்மையும் பெண்ணும்
ஓரமாய் நின்று நாணலாய்
சிலுசிலுத்துக்கொள்வார்கள் 
அவ்வளவுதான்

ஆற்றுக்கு மூன்றாம் கரையோ
நாலாம் கரையோ 
அவர்கள் கட்டியதில்லை

அதனால்தான்
பத்துப் பதினைந்து கரைகள்
கட்டியவர்களைப் பற்றியே
கல்வெட்டுகள் பேசுகின்றன
காவியங்கள் பேசுகின்றன
செவிவழிக் கதைகள் பேசுகின்றன
வரலாறு பேசுகிறது

தற்காலிக ஆற்றில்
குளிப்பவர்கள் யாரும்
அதை
நினைவில் வைத்துக்கொள்வதில்லை

பூத்துப் பூத்து
மறைகின்றன தற்காலிக ஆறுகள்
மறைவதற்குள் முங்கியெழுந்துவிடுகின்றனர்
ஒவ்வொருவரும்

12. நீருக்கு வெளியே நீளும் ஜுவாலைகள்

அப்பாவின்
பழைய தகரப் பெட்டியைத்
துழாவியபோது
ஒரு நோட்டில்
இந்தப் பெயர்கள்

சோமு – பஞ்சவர்ணம்
முருகன் – கோவிந்தம்மாள்
லெட்சுமணன் – காவேரியம்மாள்

இறுதியாய் முட்டி மோதி நின்ற இடம்
காவேரியின் கருவறை

அவள் ஈந்த அண்டம்
பாய்ந்து வந்த
நீரையெல்லாம் வாங்கிக்
குருதியாய்ப் பீய்ச்சியிருக்கிறது

அது எனக்குள்
ஒரேயடியாகக்
கொந்தளிக்கிறது

அது என்னை
அவள் கரையோடு
ஒட்டி இருக்கச் செய்திருக்கிறது

அது
தன்னை எழுதச் செய்திருக்கிறது
என்னை

காவேரியம்மாள்
நீ வெறிகொண்ட மூதாய்
காலத்தைத் தாண்டியும்
நீட்டுகிறாய்
உன் கைகளை
உன்
அண்டக்குழவியை
அடிவயிற்றோடு சேர்த்து
அணைத்துக்கொள்ள

ஒவ்வொரு முறையும்
உனக்குள் அழுத்தி
உயிர்முட்டக் கொஞ்சிவிட்டு
உயிர்போகும் தருணத்தில்
வெளியே எறிந்துவிடுகிறாய்

நீ எனைக் கொஞ்சியபோதெல்லாம்
நீருக்கு வெளியே நீண்ட
கைகளைக் கண்டவர்கள்
என் சாவை மட்டுமே படித்திருப்பார்கள்

எனக்குத்தானே தெரியும்
இடையில் இருந்த
காலத்தையும்
இடத்தையும்
நீருக்குள் வைத்தெரித்த
அம்மைக் கொஞ்சலின்
வெளிநீண்ட ஜுவாலைகள்
அந்தக் கைகளென்று

       (தொடரும்...)

 

குறிப்பு:

1. தீச்செயல் பெருக்கு: புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்களுள் ஒன்று ‘Breaking Bad’. இந்தத் தலைப்புக்குத் தோராயமான பொருளை ‘தீச்செயல் பெருக்கு’ என்று மொழிபெயர்த்திருக்கிறேன். இந்தப் படலத்தின் மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கும் வசனமும் அந்தத் தொடரில் இடம்பெற்றதுதான். குடும்பம், வம்சாவளி போன்றவை இந்தத் தொடரின் கருப்பொருள்களுள் ஒன்று. கதைநாயகன் தன் தீச்செயல்களைப் பெருக்குவதும் கதைநாயகனைப் பழிவாங்க இரட்டையர்கள் தேடிவருவதும் குடும்பம், குடும்ப உறவுகள் என்ற விஷயங்களுக்காகத்தான்.

 

தொடர்புடைய கவிதைகள்:

மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்
மாயக் குடமுருட்டி: அண்ணனின் தூண்டிலைத் திருடிய அப்பா
மாயக் குடமுருட்டி: கருப்பு சிவப்பாய் ஒரு ஆறு
மாயக் குடமுருட்டி: ஒளிதான் முதல் நினைவு
மாயக் குடமுருட்டி: மகமாயி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


1






வாழ்க்கைமுறை மாற்றங்கள்நான் இந்துவாக வாழ்வதாலேயே மதவாதி ஆகிவிடுவேனா?பில்கிஸ் பானுதேசிய பாதுகாப்புஎம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும்தெய்வீகத்தன்மைஓய்வுபெற்ற அதிகாரிகள்நவீன வாழ்வியல் முறைசோழர்கள்சீர்திருத்த நடவடிக்கைகுற்றவாளிஅகிம்சைதலைநகரம்இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள்பிரமோத் குமார் கட்டுரைகுறுங்கதைஅடித்தட்டு மக்கள்மாற்றம் வேண்டும்விட்டாச்சியின் பரவசம்Even 272 is a Far cryசோஷலிச சிந்தனைவகுப்புக் கலவரங்கள்பனியாக்கள்எளிமைசத்தியமங்கலம் திருமூர்த்தி4 கொள்கைக் கோளாறுகள்குஜராத்: பின்பற்றக் கூடாத முன்மாதிரிபுளியந்தோப்புரவி நாயர் கட்டுரைஆன்மா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!