கலை, கவிதை, இலக்கியம் 4 நிமிட வாசிப்பு

மாயக் குடமுருட்டி: அவட்டை

ஆசை
25 Jun 2023, 5:00 am
0

ஓவியங்கள்: இரா.தியானேஸ்வரன்

1. பாவம் அவட்டை

பாப்பா சொன்னாள்:
அப்போது
நிறைமாதக் கர்ப்பிணி
நான்

பாதி இரவு
வயிறு முட்ட
கொல்லைக் கதவு திறந்தபோதுதான்
இருட்டிலும்
தெளிவாகக் கண்டேன்
அதை

தென்னை மரத்தடியில்
நடுங்கிக்கொண்டு
ஏதோ பாவப்பட்ட ஜீவன்போல்
நிற்கும் இடுப்புயர அவட்டை

பாப்பா சொன்னாள்:
அதன் கண்கள்
என் கண்களைப் பார்க்கவில்லை
நேரடியாக
என் வயிற்றுக்குள் பார்த்தது
அய்யோ அது
உன் அண்ணனின் பார்வையை
வயிற்றுக்குள்ளேயே
திறக்கும் பார்வை

பாப்பா சொன்னாள்:
குலுங்கிக் குலுங்கி
வயிற்றுள் விழுந்தான்
குழந்தை
அங்கேயே
ஒன்றுக்குப் போய்விட்டேன் நான்
நிமிர்ந்து பார்த்தேன்
அங்கே
அவட்டையில்லை

பாப்பா சொன்னாள்:
உன் அண்ணன்
அப்போது இறக்கவில்லை
பிறந்து ஒரு நாள் மட்டும்
இருந்துவிட்டுத்
தன் குண்டு விழிகளால்
உலகைக் கொத்திக் கொத்திக்
கொறித்துவிட்டு
அடங்கிவிட்டான்

பாப்பா சொன்னாள்:
அவட்டையின்
அந்தப் பார்வை
அவனுக்கு
இவ்வுலகை விழுங்குவதற்கான
ஒரே ஒரு நாள் அனுமதிபோல

பாப்பா சொன்னாள்:
உலகைக் கொறித்த 
அந்தப் பார்வை அவனுடையதல்ல
அவட்டையுடையது

2. வழக்கொழிந்த பேய்

அவட்டை
அகராதிகளில் இல்லாத பேய்
வழக்கொழிந்த பேய்
வாழாமலேயே கெட்ட பேய்
தொல்நினைவாகவே
தோன்றி
தொல்நினைவாகவே
மறைந்த பேய்
திட்டவட்டமற்ற பேய்

பாப்பாவுக்குச் சொல்லத் தெரியவில்லை
அதன் பார்வை மட்டும்
அங்கேயே இருக்க
அந்தப் பார்வை தன்னைச் சுற்றியுள்ள
தன் உருவத்தை அழிரப்பர் வைத்து
மங்கலாக அழித்துக்கொண்டதுபோல

அந்த மங்கலிலிருந்து
ஏதாவது எடுத்துத் தா பாப்பா 
என்று கேட்டேன்
வழக்கொழிந்த பேயை
மீட்டுவிடும் தவிப்பில்

திரும்பத் திரும்பப்
பாப்பா நினைவுகூர்ந்தது
அதன் பார்வையையே

சற்றே இன்னும் கூர்ந்து கூர்ந்து
அதன் நடுக்கத்தையும் சொன்னாள்
ஆந்தைப் பார்வை என்றாள்

அவட்டை
அவட்டை
ஆந்தைக்கும்
பேய்க்கும் இடையே போல என்றாள்

நான் முழுதாய்த் தெளிவாய்ப்
பார்த்திருந்தால் சொல்லியிருப்பேன்
இல்லையில்லை
அப்படிப் பார்த்திருந்தால்
இப்போது சொல்ல வழியற்று
அப்போதே செத்திருப்பேன்
உன் அண்ணன் முழுதாய்ப் பார்த்திருப்பானோ
அதனால்தான் முழுநாள் தாண்டவில்லையோ
என்றாள்

அவட்டைப் பார்வைக்கு
அரைநாள் தாண்டினால்
அதிகம் தம்பி
மேலும் அரைநாள் இருந்ததெல்லாம்
அவட்டையின் பார்வையை
மிஞ்சத் துடிக்கும்
வாழ்க்கையின் துடிப்பு தம்பி
என்றாள்

3. கும்மிருட்டின் தனிமனம்

நள்ளிரவில் ஆந்தை காணும்போதெல்லாம்
உயிரைக் கவ்வுகிறது
குளிரொன்று

என்றோ ஆந்தைகளை விட்டு நீங்கிய
அவட்டையின் நிழல்
இன்றும்
அவற்றின் முகத்தில்
எனக்கு அசைவாடும்

அன்றொருநாள்
கும்மிருட்டில்
வானம் தவிர்த்து
எங்கும் வயலுள்ள
நிலப்பரப்பில்
ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு
சைக்கிள் மிதித்துச் செல்கிறேன்

கப்பி பெயர்ந்த ரோடு
முன்விளக்கின் துணை

நடுரோட்டில்
திடீர் ஆந்தை 

அதன் பார்வை என்
அடிவயிற்றைத் துளைக்க
நான் பாப்பாவானேன்
என் வயிற்றில்
என் அண்ணன்
குலுங்கியாடி குலுங்கியாடி
அடங்க
ஆந்தை பதறி அகன்றது
அங்கிருந்து

அடுத்த கணம்
சுற்றிலும் இறந்து கிடந்தது
இருள்

அதற்கு முன்பிருந்த இருளல்ல
இது
இருளின் பேய்

என் முன்னே
முன்விளக்கின் ஒளி
பாப்பா இருக்கும் ஊருக்கு
அது மட்டுமே அழைத்துச் செல்லும் என்னை
இந்த நள்ளிரவில்

4. கவசம்

அப்பாவின் இறுதி அழுத்தலில்
அத்தனை கோடி அணுக்கள்
ஏவுகணையாய்ச் சீறிப் பாய
சரியாய் ஒரே ஒரு அணுவின் முதுகில் மட்டுமேறி
ஏன் சவாரி செய்ய வேண்டும்
அந்தக் கை
சரியாய்த் தனக்கே தனக்கான வரவேற்பறையை
ஏன் எட்ட வேண்டும்
அந்த ஒரே ஒரு அணு

இப்படித்தான் உலகத்தீர்
நீரிலிருந்து அப்பா
மேலிழுக்கப்பட்ட வேகத்தில்
பாப்பா கருப்பையுள்
போய் விழுந்தேன் நான்

இன்னும் அங்கிருந்த
அவட்டையின் பார்வை
தூக்கிப்போட்ட கைக்கு
முகமன் கூறியது
‘வரும்போதே இவ்விந்துக்குக்
கவசம்சூட்டும் கையே கையே
அது திரண்டு வெளிச்சென்ற பின்னும்
எப்போதும் அதனுடனிருப்பாய் நீ
ஒரு கணம் உன் கவசம்
அகன்றால் போதும்
உள்ளிழுக்கும் சுழலொன்று
என் பார்வை அனுப்பும்
பின்னே அது இருக்கும்
ஆழத்துக்கு எந்தக் கையும் நீளாது’

5. அவட்டை: ஒரு செய்முறை

இருட்டின் யுகம்
அகன்று வெளிச்சம் வியாபித்த யுகத்தில்
ஒளிவுகள் திரிந்து
அவட்டைகள் ஓடிவற்றிவிட்டன
அவட்டைகளைத் தேடிச்செல்ல வேண்டும்
அழிவின் விளிம்பில் இருக்கும்
பேய்களையெல்லாம் காப்பாற்ற வேண்டும்

‘அவட்டைகளைத் தேடிச்செல்ல வேண்டாம்
ஒரு ஒளிவைத் தயார் செய்து
அங்கே
இருளை அலைக்கழிக்காமல்
நிலைக்கச் செய்
தூரம் சென்று ஒளிந்துகொள்
மெல்ல எட்டிப்பார்
இருளை உற்றுப்பார்
தானே நடுங்க ஆரம்பிக்கும் இருள்
சிலநொடிகள் கண்ணை மூடு
மூடிய கண்ணின் இருளால்
ஒளிவின் இருளை உற்றுப்பார்
இப்போது கண்ணைத் திற
அங்கே இருளின் நடுக்கத்தில்
அவட்டை முதிர்ந்து
கனியாய் நிற்கும்
பறித்து எடுத்துக்கொள்

இருள் தானாக
நடுங்கினால் மட்டும் போதும்
அங்கே உண்டாகிவிடும்
அவட்டை முதல்
அண்டம் வரை’

6. நெற்பரப்பின் பாடல்

அப்பா இறந்த மறுநாள்
அவர் படத்துக்கு மாலையிட்டுச்
சுவரில் சாத்திவைத்து
முன்னே தாம்பாளத்தில்
நெல் பரத்தி வைத்தார்கள்

யார் விரல்களோ
ஐந்தடமாய் ஓடிய
அச்சிறுவட்டப் பரப்பு
உழுத சாலின்
சுருள் வரியாய்
நிலைத்திருந்தது

அழுது ஓய்ந்திருந்த பாப்பாவிடம் கேட்டேன்
ஏனிந்த நெல்தாம்பாளம் என்று

அப்பா வருவாரடா
அவட்டையாக வருவாரடா
அவர் வந்துபோனால்
அவர் நடந்த தடம்
நெற்பரப்பில் தோன்றுமடா என்று
ஒப்பாரி வைத்தாள்

அப்பாதான் அவட்டை என்றால்
அன்று வந்த அவட்டை யார் பாப்பா

அப்பா பார்ப்பதற்கு முன்பே
குழந்தை அண்ணனைப்
புதைத்துவிட்டார்கள் என்றாயே
அன்று உன் அடிவயிற்றைப் பார்த்தது
யார் பாப்பா என்றேன்

அப்பா போய்விட்டார்
அறிகுறியைத் தொலைத்துவிட்டார்
செத்த உயிர் கொஞ்சநாள்
செகத்தினிலே உலவும்வரை
அவர்தான் அவட்டையடா
அவர் தடம் பார்த்திரடா
என்று தொடர்ந்தாள் ஒப்பாரியை

தாம்பாள நெல்லைப் பார்த்தேன்
நான் சிந்திய பருக்கைகளை
‘ஒருவேளை சோற்றுக்கு
சிங்கியடித்தவன் நான்’ என்று
தான் எடுத்துத் தின்றவர்
நெல் மேல் நடப்பாரா
என்று தாம்பாளத்திடம் கேட்டேன்

அண்டப் பசியையே
நான் அவித்துவிடுவேன்
உன் அப்பா பசியை
அவிக்க மாட்டேனா
வரச்சொல்
என்று பொறிந்தது

காலை எழுப்பியது
பாப்பாவின் ஒப்பாரி
அவட்டை நடந்த தடம்
அனாமத்தா போன தடம்
ஆனை நடந்த தடம்
அரிபரியாய் ஆன தடம்
என்று மறுபடியும் ஒப்பாரி

தாம்பாளநெல்லில்
பூனை நடந்ததுபோல்
ஒற்றி ஒற்றி ஐந்து தடங்கள்
எங்கோ எப்போதோ
புதைக்கப்பட்ட
குழந்தை அண்ணனின்
படுகுழியை வெறித்துக்கொண்டிருந்தன

என் அடிவயிற்றுள்
யானை மிதித்ததுபோல்
குப்பென்றொரு வலி

 

சை ‘மாயக் குடமுருட்டி’ எனும் தலைப்பில் ஒரு நெடுங்காவியத்தை எழுதுகிறார். அதில்  இரண்டாவது படலம் இது. இந்தக் காவியம் வாரம்தோறும் தொடர்ச்சியாக வெளிவரும் என்றாலும், ஒவ்வொரு வாரத்து அத்தியாயத்தையும் தனித்தனிக் கவிதைகளாகவும் படிக்கலாம், காவியத்தின் பகுதிகளாகக் கருதியும் படிக்கலாம். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் படலத்தின் தலைப்பு: ‘அண்ணன் பெயர்’.

தொடர்புடைய கவிதைகள்

மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


1


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ராமச்சந்திர குஹா அருஞ்சொல்திருப்பாற்கடல்போரிஸ் ஜான்சன்ராணுவக் கிளர்ச்சிஹிண்டென்பர்க் அறிக்கைடெல்லி லாபிபசு குண்டர்கள்சுளுக்கிமோடிக்கு சரியான போட்டி கார்கேரீவைண்ட்முரசொலி கலைஞர்சாஸ்த்ரீய இசைகணினிமயமாக்கல்தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைதமிழ் ஆளுமைஇந்தியப் பிரிவினைமின்சாரம்பெருநிறுவனம்மாத்ருபூமிபட்டியல் சாதியினர்மரபியர்அரசு நிர்வாகம்ஏர்லைன்ஸ்பயத்திலிருந்து விடுதலைபள்ளி நிர்வாகம்தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைஜமீன்தார் வி.பி.சிங்பொதுவான குறைந்தபட்ச நிறுவன வரி விதிப்புகண்ணந்தானம்திமுகவுக்கு உதயநிதி செய்ய வேண்டியது என்ன?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!