கலை, கவிதை, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
ஓவியங்கள்: ஜோ.விஜயகுமார்
கடவுளர்களைப் பற்றி
எனக்கு அதிகம் தெரியாது;
ஆனால் ஆறு என்பது
அடர் பழுப்பு நிறக் கடவுள்
என்றே நினைக்கிறேன் -
உம்மணா மூஞ்சிக் கடவுள்
கட்டவிழ்க்கப்பட்ட கடவுள்
கட்டுக்கடங்கா கடவுள்
… ஆறு நமக்குள், கடல் நம்மைச் சுற்றி.
-டி.எஸ். எலியட் (1888-1965), ‘Four
Quartets’ நெடுங்கவிதையில்
1. விலக்கப்பட்ட ஆறுகள்
வெளித்தெரியா நீரோட்டம்
எத்தனையோ உண்டு
என் வீட்டில்
மாதாமாதம்
பாப்பாவும் அக்காவும்
ஏன் விலகி உட்கார்ந்திருக்கிறார்கள்
என்பதை அறிந்த வயதில்
ஆற்றுக்கு
ஏற்கெனவே விடைகொடுத்திருந்தேன்
வங்காள விரிகுடாவில்
வந்து சேரும்
அளவிறந்த நீரோட்டங்களைக்
காணும்போது
பாப்பாவின் விலக்கமும்
அக்காவின் விலக்கமும்
ஆற்றோட்டமாய்த் துலக்கம்
கொள்கின்றன
அவர்களின் ஆறுகளுக்குத்
தனிப் பாயும்
தனிப் பாய்க்குக் கரைகளாக
ஒரு பக்கம் உலக்கையும்
மறு பக்கம் சுவரும்
தொட்டுவிடுவேன் தொட்டுவிடுவேன்
என்ற மிரட்டலுக்குச் சீறிப் பாய்வாள்
மற்ற காலங்களின்
சாதுகுண அம்மாவான
பாப்பா
அக்காவோ
என் குறுகுறுப்பில் சேர்ந்துகொண்டு
நான் தொடுவதைப் போல
என்னையும் தொட்டுவிடுவாள்
ஒருநாள் காதைப் பிடித்து
அருகில் இழுத்துக்
காதுக்குள் ஒன்று சொன்னாள் அக்கா
என்னவென்றே புரியவில்லை
தீண்டல் மட்டுமே ஆறு
என்று சொல்லியிருப்பாளோ
2. குண்டிப் பள்ளம்
நினைவு தெரிந்த நாள்முதல்
ஆண்டுக்கு எட்டு மாதங்கள்தான்
நீரோட்டம்
பாமணியாற்றில்
நீரோட்டம் இல்லாதபோதும்
*சட்ரஸின் முன்
நெடுங்காலப் பாய்ச்சலின் விரைவு
தோண்டிய குழிப் பகுதியில்
தேங்கியிருக்கும் நீர்
நீரோட்டம் நின்றபின்
நிறம் மாறி நிறம் மாறி
முறுகி முற்றிக்
கரும் பச்சை எட்டினாலும்
ஆற்றில்
நீர் வற்றாத
ஒரே இடம் அது
குளிப்பவர்களைக் கைவிட்டாலும்
விவசாயிகளைக் கைவிட்டாலும்
குண்டி கழுவுபவர்களைக் கைவிடாத
ஆறு பாமணியாறு
கடைமடைக் குண்டிகளுக்குக்
கிடைப்பதில்லை இந்தக் கருணை
குண்டிகளிலும் உண்டு
முதலிடைகடை
(*சட்ரஸ் = ஷட்டர்ஸ் - shutters
என்பதன் பேச்சு வழக்கு)
3. ஆகாசம் குடித்த பாட்டி
கண்ணெட்டும் தொலைவில்
மேலப்பாலத்திலிருந்து
சட்ரஸ் நோக்கி
ஏதோ மிதந்து வரக் கண்டு
ஆர்ப்பரிக்கிறது
வெள்ளம் பார்க்கும் கூட்டம்
ஆர்ப்பரித்ததைப் பொருளாக்கும்
பொருளைப் பிணமாக்கும்
பிணத்தசைவு கண்டு
உயிராக்கும்
கூட்டம்
ஆ
உயிருடன் ஒரு பாட்டி
மூழ்குவிசையை வென்ற
செல்விசை
மலர்த்தியிருந்தது
வாய் பிளந்து
சுழலும் பாட்டியின் தலையை
மேல் நோக்கி
உன் இறப்பாசையை
ஆகாசம் குடிக்கும் ஆசை
வென்றதே பாட்டி
அடித்துப் பிடித்து
சட்ரஸ் மதகை
மேலிருந்து திறந்தபின்
திறப்பின் வழியே
சீறிப் பாய்ந்த நீரும்
உன்னை
எதிர்க் கட்டையில் மோதிக்
கொல்லவில்லையென்றால்
சாவின் நீளத்தை
எம்மட்டுக்கு
அளந்து பார்த்திருப்பாய் பாட்டி
ஆ இதோ
மேலிருந்து குதிக்கிறான் ஒருவன்
தன் மேலாடைகளை அவிழ்த்துப் போட்டு
உன் துணிவை
எவ்வளவு வெறுத்திருப்பான் பாட்டி
இந்த வெள்ளத்தில்
தன்னுயிரையும் வெறுத்து
அவன் குதிப்பதற்கு
ஆற்றின் போக்கிலே
உன்னைக் கொண்டுசென்று
அருகிலொரு படித்துறையில்
ஒதுக்கி
ஓங்கியொரு அறை தந்து
உனக்கு உயிர் தந்த அதிகாரத்தில்
வேசிப் பட்டமும் தருகிறான்
‘நல்லா திட்டுடாப்பா
அப்பவாச்சும்
நாக்கப் புடுங்கிக்கிட்டு
சாவு வருதான்னு பாப்போம்
‘அப்படி என்ன உசிரு இது
மருமவ பட்டினி போட்டு அடிச்சும்
போவாத உசிரு
‘ஒரு கேள்வியும் கேக்காம
அம்மாவ மவங்காரன் பாக்காம
பொண்டாட்டி முந்தானையில
சுருண்டு கிடக்குறதைப் பாத்தும்
போகாத உசிரு
‘புருசன் உடம்புல
புழுப் புழுவா
தெனமும் பூத்துவர்றதப்
பாத்தும் போவாத உசிரு
‘மானங்கெட்ட உசிரு
மசிருக்கு ஆகாத உசிரு
தண்ணியில போகாத உசிரு
தேவடியாப் பட்டத்துக்காச்சும்
போகுதான்னு பாப்போம்
திட்டுடா தம்பி
நல்லா திட்டுடா’
பாட்டியைக் காப்பாற்றியவன்
தன் நீச்சலை மறப்பதற்கு
என்னவெல்லாம் செய்யலாம்
என்று
அன்றிலிருந்து இடைவிடாமல்
யோசித்துக்கொண்டிருக்கிறான்
4. தூரம்
பாட்டி மேலப்பாலத்தில் குதித்தபோது
அவள் சாவு கொஞ்ச தூரத்தில்
கொஞ்ச ஆழத்தில்
இன்னம் கொஞ்ச தூரத்தில்
இன்னும் கொஞ்ச ஆழத்தில்
தெரிந்துகொண்டே வந்தது
எவன் கண் பட்டதோ பாவி
பாட்டியைக் கரையில் ஒதுக்கிவிட்டு
சாவை
அடித்துச் சென்றுவிட்டது
பாமணி ஆறு
5. கல்லில் அடங்கா அழகு
அதே பெருவெள்ளத்தின் மறுநாள்
மதகின் ஓரச் சுழலில்
சிக்கித் தவித்த
கட்டுவிரியனுக்குப்
பாட்டியின்
பாக்கியம் வாய்க்கவில்லை
அது உயிரோடு இருக்கும் வரை
எல்லோருடைய சாவாகத்தான்
இருக்கும்
என்று பரிதவித்துக்கொண்டிருந்தோம்
மேலிருந்து
நீரை வெல்லத்
தவித்தது கட்டுவிரியன்
அதை
எதிர்த்து எதிர்த்து
நீந்திச் சுழன்று
மேலிருந்து மாறி மாறிக்
கற்கள் பாய
கனத்த கல்லொன்று
கடைசியாய்
அதன் கதை முடித்தது
கட்டுவிரியன்
வெறுமனே தன்
பெயருக்குத் திரும்பியது
தலை துவண்டு
ஆற்றின் போக்கில்
அது இழுபட்டுபோனபோது
முதன்முறையாகச்
சொல்லத் தோன்றியது
'கட்டுவிரியன் எவ்வளோ
அழகுல்ல'
6. ஆற்றின் அடிமனம்
எப்போதாவது
குண்டிப் பள்ளம் முழுதும் வற்றுமா
என்று ஏங்கியிருக்கிறேன்
நீரோடிய காலங்களில்
அது கொண்டு உள்ளழுத்தி
உறிஞ்சிய உயிர்கள்
என்ன ஆகியிருக்கின்றன
என்பதைக் காண
எப்போதும் ஆவல்
எது இல்லாததால்
அவர்கள்
பிணம் ஆனார்களோ
அதைக் காணத் துடிக்கிறேன்
உள்ளே எப்படியும்
பெருந்திரட்டு
அருங்காட்சியகம் இருக்கும்
அதுதான் ஆண்டுக்குப் பலமுறை
நீச்சல் தெரியாத என்னையும்
ஈர்க்கும்
அருங்காட்சியகத்தின் கதவு திறக்கும் முன்
இங்கே நுழைய உரிமையில்லை
என்று
யாருடைய கையோ என்னை
ஒவ்வொரு முறையும் வெளித்தள்ளும்
அங்கே
செல்ல வேண்டும்
சேகரமாகியிருக்கும்
விளையாட்டுப் பொருட்களை
ஆறு எப்படியெல்லாம் உருட்டி
விளையாடுகிறது என்று பார்க்க வேண்டும்
முழங்கால் நீரில் விளையாடி
மறுநாள் கிடைத்த
ஐந்தாறு வயதுச் சிறுவன்
ஆற்றின் கனவாய்
அதன் அடிமனதில்
தங்கிவிட்டான்
குண்டி கழுவும்போதெல்லாம்
குஞ்சுமீன்கள் அனுப்பிக்
கால்விரல் கொறித்து
ஏதோ சொல்லத் துடிக்கிறான்
ஆறு பொல்லாதது
அதன் கனவுக்கு
ஆள் சேர்க்கிறது
7. கொடிநீரோட்டம்
பாப்பா
எனக்கு நீச்சல்
தெரியாமல் போனதற்குக் காரணம்
வெகுநாள் கழித்தே அறிந்தேன்
தூரமோ அருகோ
ஆழமோ முழங்கால் அளவோ
உன் தொப்புள்கொடி
என்னை எங்கும் பின்தொடர்கிறது
அது என் நீச்சலின் மூச்சை முறுக்கி
அதனை மேலெழ விடாமல்
என்னை மட்டும் மேலெழச் செய்கிறது
ஒவ்வொரு முறையும்
என்னை இழுத்துப்போடும்
ஒரு கையை அனுப்புகிறது
உன் தொப்புள்கொடி இறுக்கத்திலிருந்து
விடுபடவே
இறப்புக்குச் சில நொடிகள்
முன்பாவது
நீச்சலின் ஒரு கைவீச்சாவது
என் உடலில் காணவே
அன்றொரு நாள் குதித்தேன்
மேலப்பாலத்திலிருந்து
சட்ரஸ் வருவதற்குள்
நீரழிந்த மண்ணில் எழுந்து
நடக்க ஆரம்பித்தேன்
நீரோ மணலோ
எது ஓடினாலும்
தொப்புள்கொடியின் ஓட்டத்துக்குக்
பற்றிக்கொள்ளக்
கரையில்லை
மூழ்குவதற்கு
ஆழமில்லை
கொஞ்சம் ஓரமாக
நடந்துபோகலாம்
அவ்வளவுதான்
8. மூணாற்றுத் தலைப்பு
இனிய தேம்ஸ் நதியே,
மெல்ல ஓடு,
என் பாடலை முடிக்கும் வரை.
-எட்மண்ட் ஸ்பென்ஸர் (1552-1599),
‘Prothalamion’ கவிதையில்
தாய்நடை பிடிக்காத
தளுக்குநடை தேடிய
பெண்ணொருத்தி
அவள் பெயர் வெண்ணாறு
அவளிங்கே பெற்றாள்
மூன்று பெண்கள்
மூன்று சகோதரிகளில்
தாயும் ஒருத்தி
கருச்சுமையை நீக்கிவிட்டு
இளைத்த தேகம் காட்டிக்கொண்டு
பிள்ளைகளோடு போட்டி கட்டுகிறாள்
பிள்ளைகளுக்குத் தெரியாதா
தாயின் வெட்கமற்ற தளுக்கு
தம் வழியே
அருகருகே கதை பேசி நடப்பதற்குத்
தாயைத் தள்ளிவிடுகிறாள்கள்
இங்கிருந்து இவளும்
அங்கிருந்து அவளும்
மாறி மாறி
நீர்க்காகங்களிடமும்
கரையோரப் பச்சைக் கிளிகளிடமும்
கருப்பு வெள்ளை மீன்கொத்திகளிடமும்
கதை சொல்லி அனுப்புவாள்கள்
இவள் சிரித்த களுக்கை
அங்கு சென்று குறுக்கு மின்கம்பியில்
அமர்ந்து தின்று பார்க்கும் மீன்கொத்தி
காட்டுச் சிறுக்கிகள்
கரைமீறி இடையேயும்
கைகோத்துக் கொள்வாள்கள்
கடைசியாய்க் கடைசியாய்க்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
தாய்க்கெழவி தெரிகிறாளா
என்று பார்த்துவிட்டு
ஒரே கடலில்
ஒரே உடலாய்
ஓட்டமாய்
ஓடிக்குதிக்கிறாள்கள்
நடுக்கரை சங்கதிகளெங்கே
புறக்கரை பூக்களெங்கே
கோரையாற்றுக் கும்மாளமெங்கே
பாமணியாற்றுப் பவிசெங்கே
என்ன நாடகம் இது
யாரை ஏய்க்க
ஓரக்கடலுக்குள்
உள்நீச்சல்
(மூணாற்றுத் தலைப்பு -
நீடாமங்கலத்துக்கு முன்னே
வெண்ணாறு மூன்றாகப் பிரிந்து
பாமணியாறு, கோரையாறு,
வெண்ணாறு என்று மூன்று
ஆறுகளாக ஓடத் தொடங்கும்
இடம்)
9. தங்கத் தோண்டிகள்
நீர்வறளும் பருவம்தோறும்
எங்கிருந்து வருகிறார்கள்
இந்தச் சிறுவர்கள்
நில்லாமல்
செல்வது ஆற்றின் அடிமனம்
என்றாலும்
அதற்கும் உண்டு
தங்கச் சங்கிலிகள் தங்க மோதிரங்கள்
வெள்ளி மெட்டிகள் வெள்ளிக் கொலுசுகள்
அணியும் வழக்கம்
என்று அறிந்த சிறுவர்கள்
அவர்கள்
சலித்தெடுத்துக்கொண்டே இருப்பார்கள்
நொடிதோறும்
காசோ
இரும்போ துரும்போ
பித்தளையோ
ஏதோ
கிடைக்கும் பித்தளைக்கெல்லாம்
ஒரு நொடி
தங்க மதிப்பு
வழங்கி
அடுத்த நொடி
ஆற்றைச் சபிக்கும்
அவர்களின் வியப்பு
தங்கம் கிடைத்தவர்களையோ
தங்கம் கிடைத்த தருணங்களையோ
கண்டதில்லை
ஒரு நாளும்
ஆயினும்
ஒரு சிறுவன்
கையால் ஆழக் குழி தோண்டி
ஒருநாள்
அதனுள்
ஏதோ சொன்னதைக் கண்டேன்
என்னவென்றே புரியவில்லை
தோண்டல் மட்டுமே தங்கம்
என்று சொல்லியிருப்பானோ
(தொடரும்...)
தொடர்புடைய கவிதைகள்
மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்
1
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.