கலை, கவிதை, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

மாயக் குடமுருட்டி: கர்த்தநாதபுரம்

ஆசை
03 Sep 2023, 5:00 am
0

ஓவியம்: ஜோ.விஜயகுமார்

1. புனித சூசையப்பர் தேவாலயம்

கர்த்தநாதபுரத்தின்1
புனித சூசையப்பர் தேவாலயம்
தன் இரண்டாம் நூற்றாண்டின்
மழையை வாங்கி
தன் இரண்டாம் நூற்றாண்டின்
வெயிலில் காயப்போடுகிறது

பாமணி ஆறு தாண்டி
356 ஆண்டுகளுக்கு முன்
இங்கொரு மெழுகுவர்த்தி
கொண்டுவந்தார்
ஆன்ரு ப்ரையர்

அதை அழுத்தி நிறுத்திப்
பற்றவைத்தபோது
உச்சிச் சுடர் பாடிய
சிலுவைநாதம் கேட்டவர்கள்
வந்துசேர்ந்தனர் ஒவ்வொருவராய்

இஸ்ரவேலில் எரிந்தாலும்
மன்னார்குடியில் எரிந்தாலும்
ஒரே ஒளிதான் என்று
கண்டுகொண்டவர்கள் அவர்கள்

ஒளிக்கொரு மாடம்
சின்னதாய் ஒரு ஆலயம்
எடுத்துக் கட்டினார்
தந்தை லெகூஸ்த்

ஒளியைப் பெருக்கினார்
தந்தை கிளாடியஸ் பெடின்
அது விரிந்தது
பெரிய சுடராக
புனித சூசையப்பர் தேவாலயமாக

அவரைக்
கர்த்தநாதராக்கியோர்
கர்ந்தநாதபுரமாகிறார்கள்

அது நடந்தது
நூற்று எண்பத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு 

தேவாலயம் நிற்கிறது
இருபுறமும் கை விரித்து நிற்கும்
மாபெரும் சூசையப்பரைப் போல

உலக ரட்சிப்புக்காய்
பிள்ளையை இழந்தவர் அவர்

அவர் குடிலின்
உச்சி சிலுவை
வானைக் கீறுகிறது
கர்த்தமே நாதமாய்
ஒலிக்கிறது

அது அனுதின உணவில்
எங்களுக்குக் கேட்கிறது

கர்த்தம் நாதம் கச்சாமி2
சிலுவை நாதம் கச்சாமி
கருணை நாதம் கச்சாமி 

2. உலகுக்கெல்லாம் ஒரே கல்லறைத் தோட்டம்

தெருவின் உள்ளே
ஒரு முனையில்
புனித சூசையப்பர் ஆலயம்
தெருவிலிருந்து வெளியேறும்
எதிர் முனையில்
தெருவுக்கென்ற
கல்லறைத் தோட்டம்

நூற்றாண்டுகளாய்
நெருக்கியடித்து
ஒருவர் மேல் ஒருவர்
புதைக்கப்படும்
சிறிய தோட்டம்

ஒவ்வொரு முறையும்
பழைய எலும்புகள் வரவேற்கின்றன
சதைப் பற்றுடன் வந்து சேரும்
புதிய எலும்புகளை

சதையுதிர்த்து
அவற்றைப்
புதிய உலகுக்கு
சகஜப்படுத்துகிறது
புதைத்த இடத்து மண்

வெவ்வேறு காலம்
என்றாலும்
ஒரே தெரு என்பதால்
சுற்றிச் சுற்றி
உறவுமுறைக்குள்தான்
எலும்பனைத்தும்
உள்ளே வளைய வரும்

மறுமுனையிலிருந்து
குருத்தோலை ஞாயிறு அன்று
தேவாலயம் அனுப்பும்
குருத்துகள் அங்கு வந்து
சாமரம் வீசி
உள்ளுக்குள் குமையும் புழுக்கம்
தணிக்கும்

அங்கேயே பிறந்து
அங்கேயே இறந்துபோன
கிறிஸ்தவர்களுக்கும்
எங்கேயோ பிறந்து
அங்கே இறந்துபோன
கிறிஸ்தவர்களுக்கும்
இனி பிறந்து
அங்கே இறக்கப்போகும்
கிறிஸ்தவர்களுக்கும்
அதே இடம்தான்

ஒருவர் பிறக்கும்போது
இருப்புக்கான இடத்தில்
புதிதாய் ஒரு இடம் பூப்பதைப் போல
ஒருவர் இறக்கும்போது
இல்லாமையில்
ஒரு இடம்
பூக்கிறது

பிறந்ததும்
இறந்ததும்
இடம்தானோ
எஞ்சிய எலும்பு
அதன் காலம்தானோ 

3. சௌக்கியமா மாப்புள்ளை

இஸ்ரவேலில் பிறந்தாலும்
எங்கள் தெரு ஏசு
பட்டு வேட்டி கட்டியே
சப்பரத்தில் பவனி வருகிறார்
மாசில்லா மரியும் புடவை கட்டி
வழக்கத்தில் இல்லாத
அமர்க்களமாய்
ஊர்வலம் போகிறாள்

சிலுவை தூக்கிப் பாடுபட்டு
ரத்த வேர்வை சிந்தி
தன் பிள்ளை சம்பாதித்துக் கொடுத்த
புதுவேட்டியை நினைத்து
சூசையப்பர்3 விம்முவதும்
கீழிருந்து பார்த்தாலே
தெரிகிறது

சப்பரம் செல்லும் தெருவிலெல்லாம்
ஒவ்வொரு வீடும்
கடக்கும் ஓரிரு நொடி
தன் பரப்பில் பளிச்சிடும் வெளிச்சத்தில்
ஒலிபெருகிக் கரையும் துண்டுப் பாடலில்
ஒரு விள்ளல் எடுத்து
அப்பம் போல் நாவில் இட்டுக்கொள்கிறது
கர்த்தரின் கருணை கரைந்து
அடிநா தித்திக்கிறது

அப்படியே சப்பரம்
ஊரையே சுற்றிவருகிறது
ராஜகோபாலசுவாமிக்கும்4
தூரத்திலிருந்து சிலுவைசுவாமி
கையசைக்கிறார்

‘சௌக்கியமா மாப்பிள்ளை
பார்த்துப்போ
வெட்டுக்குதிரை
வெண்ணெய்த்தாழின்னு
பதினெட்டு நாள் என்னை
பெண்டு நிமித்திட்டாங்க’
என்று அங்கிருந்து
குரல் கொடுக்கிறார் ராஜகோபாலசுவாமி

சுமக்கவே பிரியப்படும்
ஆசாரி மகன்
தான் சுமக்கப்படுவதை விரும்புவானா
நெளிந்துகொண்டுதான்
சப்பரத்தில் நிற்கின்றான்

ஒரே வசதி
மேலே இருப்பது
மூன்று சீடர்கள் முன்
தான் ஒளித் தோற்றம்5 கொண்ட மலையையும்
பிரசங்கம் நிகழ்த்திய மலையையும்
உயிர்விட்ட கல்வாரியையும்
நினைவுபடுத்துவதுதான்

அம்மா அப்படியல்ல
தன் மகன் சப்பரத்தில் போனால்
யாருக்குத்தான்
பெருமையாக இருக்காது
முக வெளிச்சத்தில்
மன்னார்குடியே
ஜொலிஜொலிக்கிறது

‘ஆயாடி
தெனைக்கும் நமக்கும்தான் பண்ணுறானுவோ
கண்ணப் பறிக்கிற அலங்காரம்
ஆனாலும்
பாழாப் போன
நம்ம வூட்டுக்கார மனுசன்
ஒரு இடமாவா இருக்கான்

‘ஒண்ணும் இல்லாம
சிம்பிளா இருக்குற
இந்த அம்மாவுக்குப் பாரேன்
இன்னைக்கு ஒரு நாளு
எவ்வளவு தேஜஸு’
என்று செங்கமலத்தாயார்தான்
கொஞ்சம் கண்வைத்துவிட்டாள்

4. வான் கடிகாரம்

அப்படியே வெகுகாலம்
குளமாய்க் கிடக்கும்
காலத்தில் குத்திச் செருகி
அதைக் கலக்கிவிடுகிறது
புனித சூசையப்பர் தேவாலய
உச்சி சிலுவை

காலத்தில் செருகிய
இந்த நான்கு முனைக் கத்தி
இந்த தேவாலயத்தை
மாபெரும் வான் கடிகாரமாய்
ஆக்கிவிடுகிறது

பிதா சுதன் பரிசுத்த ஆவியின்
மூன்று முனைகளையும்
நொடி நிமிட மணி முட்களாய்க் கொண்டதோடு
காலத்தை வேடிக்கை பார்க்கும்
கர்த்தநாதபுர மக்களையும்
ஒரு முள்ளாகக் கொண்டு
சுற்றுகிறது
அந்தக் கடிகாரம்

5. எல்லோருக்குமான இடம்

இந்த கர்த்தநாதபுரத்தில்
எல்லோருக்கும் இடம் இருக்கிறது

இஸ்ரவேலில் பிறந்த தச்சர் குடும்பத்துக்கும்
அந்தத் தச்சர் குடும்பத்தில் செய்யப்பட்ட
உலகின் மிகச் சிறந்த சிலுவை ஒன்றை
வைப்பதற்கும்
அச்சிலுவையை ஊன்ற வந்த
பிரெஞ்சு தேசத்தவர்
ஆன்ரு ஃப்ரையருக்கும்
சிலுவையின் தீபத்தை விரித்து
ஒளிரச் செய்த இன்னொரு பிரான்சியர்
தந்தை கிளாடியஸ் பெடினுக்கும்
இடம் இருக்கிறது

கூடவே
பக்கத்தில் வடுவூர் புதுக்கோட்டையிலிருந்து
வந்துசேர்ந்த தேசிலு குடும்பத்துக்கும்
இடம் இருக்கிறது
களிமண்ணால் செய்து
தெருவழியே நாங்கள் இழுத்துவந்த
கார்கில் பிள்ளையாருக்கும் இடம் இருக்கிறது
அதை வழிபட்டுத் திருநீறு வாங்கிப் பூசிக்கொண்ட
அத்தெரு கிறிஸ்தவ மக்கள் நெஞ்சில்
எல்லாவற்றையும் விட பெரிய இடம் இருக்கிறது

அத்தனை பேரும்
எங்கிருந்தோ வந்தவர்கள்தான்

எங்கிருந்தோ வந்தவர்களுக்கு
இடம் அளிக்கும் எந்த இடமும்
கர்த்தநாதபுரமாகிவிடுகிறது

6. கர்த்தர் வழியே ஒரு கொண்டலாத்தி

கர்த்தரின் கைகளைப் போல
விரிந்திருக்கிறது
கர்த்தநாதபுரம்

அதன் தொளதொள அங்கிக் கைகளில்
இந்தப் பக்கம் புகுந்து அந்தப் பக்கம்
வெளியேறிய கொண்டலாத்தியொன்று
சொல்லித் திரிகிறது
கர்த்தர் வழியே பறந்த பறவை
நானென்று

கர்த்தரைக் கடந்தபோது
அதன் தலையில்
அவர் சொருகிய குருத்தோலைதான்
இந்த விசிறிக்கொண்டை

அதைச் சுமந்துகொண்டு
ஓசானா பாடிப் பறக்கிறது
அந்தக் கொண்டலாத்தி

7.

செல்ல உந்துக ஓசானா!

(இடத்தில் நேராகவும் காலத்தில் முன்னும் பின்னும் பின்னும் முன்னும் என்றெல்லாம் மாறி ஓடும் பாமணி ஆற்றில் ஒரு நாடகம்)

அ.

பாமணியாறு
நீடாமங்கலம் தாண்டும்போது
‘கனிமனத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனிதனைப் பூவனூரனைப்’6 போற்றிப்
பதிகம் பாடி
ஓடிவந்து பரிசலில்
ஏறிக்கொள்கிறார்
அப்பர்

அரைக் காதத் தொலைவில்
மன்னார்குடி வந்துவிடும்
அதுவரை அப்பருக்குப் பொழுதுபோக்கு
அப்பன்தானே
பாடிய பதிகத்தை
மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டே வந்தார்

‘ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன்
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர்
பாதி யானான் பரந்த பெரும்படைப்
பூத நாதன்தென் பூவனூர் நாதனே’7

‘ஆஹா
பாட்டு நல்லாருக்கு சாமி
நம்ம பூவனூர் சாமியைப் பத்திப்
பாடியிருக்கீங்களா’
என்று கேட்ட ஓடக்காரனுக்கு
கண்ணை மூடியபடியே
தலையாட்டிய அப்பர்
யாருக்காகவோ மன்னார்குடியில்
ஓடம் ஒதுங்கியபோதுதான்
குலுங்கலில் கண்திறந்தார்

அரைக் காதத் தொலைவைக் கடக்க
ஆயிரம் ஆண்டுகள் ஆனதை
அறியவில்லை அவர்

ஆ.

யாரோ தாடிக்கார இளைஞன்
வேற்றுதேசத்தவன் போலும்
ஏறிக்கொண்டான்

தன் மொழி புரியுமா
என்ற சம்சயத்துடன்
‘யாரப்பா நீ குழந்தாய்’
என்று கேட்ட அப்பருக்கு
‘புறப்பட்ட இடம் இஸ்ரவேல் சாமி
போய்ச்சேரும் இடம் எல்லா இடமும் சாமி’
என்றான் தாடிக்காரன்

‘அப்பன்தானே போய்ச்சேரும் இடம் குழந்தாய்’
என்ற அப்பருக்கு
‘ஆம் சாமி
பிதாவே அனுப்பிவைத்தார்
பிதாவிடமே போகிறேன்’
என்று சொல்லிவிட்டு
‘ஓசானா தாவீதின் புதல்வா
ஓசானா ஓசானா ஓசானா’8
என்று ஏதோ ஒரு பாடலை
முணுமுணுத்துக்கொண்டு வந்தான்

அவர்கள் ஊர் சாமிக்கு
யாரோ தன்னைப் போல்
பதிகம் பாடியிருப்பார்கள் போல
அவன் இறங்குவதற்குள்
வாதில் வென்று
சிவன் வழி சேர்க்கலாம்
என்று சிரித்துக்கொண்டார் அப்பர்

அங்கிருந்து கிளம்பிய ஓடம்
கூப்பிடு தூரத்தில்
ஆயிரம் ஆண்டுகள்
பின்னோக்கி
புறப்பட்ட காலத்தின்
ஓரிடம் ஒதுங்கியது

‘பூமருவும் குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பாமருவும் குணத்தான் உறைகோயில் பாதாளே’9
என்று பாமணியில் பாதாளீச்சரரைப்
பாடிவிட்டு
ஓடிவந்தது ஒரு குழந்தை

இ.

‘வாருங்கள்
சம்பந்தர் சுவாமிகளே’
என்று அப்பர் கூப்பிட
வியப்புடனும் ஆசையுடனும்
அந்தக் குழந்தையைத் தூக்கி
ஓடத்தில் உட்காரவைத்தான்
தாடிக்கார இளைஞன்

‘அடுத்தது எங்கே சுவாமி’
என்று குழந்தையிடம் கேட்ட அப்பரிடம்
‘செறிதரு பொழிலணி திருவுசாத்தானம்
அப்பர் தாத்தா’10
என்றது குழந்தை

‘அதுவரை மூவரும் சேர்ந்து
அப்பருக்கெல்லாம் அப்பனை
அப்பனுக்கெல்லாம் அப்பனைப் பற்றி
ஆற்றுப் பதிகம் பாடலாமே’
என்று அப்பர் சொல்ல
அப்படியே பாட ஆரம்பித்தனர்
மூவரும்

அங்கிருந்து கூப்பிடு தூரத்திலும்
முன்னூறு ஆண்டு பயணத்திலும்
உயர்ந்திருந்த ராஜகோபாலசுவாமி
பெரிய கோயில்
திருக்கோபுரம் தலையசைத்து
ஆற்றுப் பதிகத்துக்குத் தன்
ஆமோதிப்பை வழங்கியது

ஈ.

அப்பதிகம் முடிந்ததும்
எல்லாவற்றையும்
வாய்பிளந்து கேட்டபடி
துடுப்புபோட்டிருந்த
ஓடக்காரனைப் பார்த்துக் கேட்டது
குழந்தை
‘ஒரு கரையிலிருந்து
மறுகரைதானே செல்லும் ஓடம்
இந்த ஓடம் ஏன் இப்படி
ஆற்றோட்டத்தில்
ஓடுகிறது’

‘அதுவா சாமி
பரம்பொருள் நோக்கி ஓடும் ஓடம்
பரமபிதா நோக்கி ஓடும் ஓடம்
குறுக்கே ஓடாது
நெடுவழி சென்றே சேரும்’
என்று பாடினான் ஓடக்காரன்

அதன் பின்
நீயாரப்பா
என்று கேட்பார்களா மூவரும்

ஓடக்காரனோ
மூன்று சீடர்கள் நிகழ்ந்த உருமாற்றம்11 போல்
பேரொளி காட்டினான்
படகை நிறைத்து
ஆற்றை நிறைத்துக்
கடல்திசை
காட்டியது அவ்வொளி

பாடிய பதிகத்தைக்
களவாடிச் சென்றதந்த ஒளி

திருமுறைகளும்
வேதாகமும் தொலைத்த
அப்பதிகம்
நீரோடாத காலத்துப்
பாமணியாற்றின் கிளிஞ்சல்களில்
படிந்திருக்க
எடுத்துப் படித்துப் பார்த்தது
பல நூற்றாண்டுகள் கழித்து வந்த
குழந்தையொன்று

உ.

‘ஓடம்விட்டு ஓடிப்போன நீ
ஓடக்காரனில்லையடா
ஓட்டக்காரனடா’
என்று வசைபாடினார் அப்பர்

ஓடக்காரன் இல்லாவிட்டால் என்ன
குழந்தை சம்பந்தருக்குத்தான்
கொள்ளம்புதூர் அனுபவம்
இருக்கிறதே

குழந்தை கண்ணைக் காட்ட
மூவரும் ஒரே குரலில் பாடினார்கள்
‘அரசருக்கரசன் வெளிப்பட்ட வாசலே
இருளை நோக்கி ஒளியை வீசிய கூடமே8
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே9
நின்ற புன்சடை நிமலனை உள்கச்10
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே
ஓசானா ஓசானா ஓசானா’

பாடல் உந்த
ஓடம் செல்ல
ஓடம் மீது மூவர்
குருத்தோலை நடனம்

        (தொடரும்...)

 

குறிப்புகள்:

1. கர்த்தாதபுரம்: மன்னார்குடிக்கு வெளியே பாமணி ஆற்றங்கரையில் இருக்கும் தெரு. இதன் புதிய பெயர் ‘மாதாக்கோவில் தெரு’. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

2. கர்த்தம் நாதம்…: ’புத்தம் சரணம் கச்சாமி’ என்ற புத்தரின் மும்மணிகளிலிருந்து உருவாக்கிய வரிகள். ‘கர்த்தரின் நாதத்திடம் செல்கிறேன்/ சிலுவையின் நாதத்திடம் செல்கிறேன்/ கருணையின் நாதத்திடம் செல்கிறேன்’ என்று இதற்கு பொருள்.

3. சூசையப்பர் விம்முவதும்…: இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது சூசையப்பர் உயிரோடு இல்லை என்றே பலரும் கருதுகிறார்கள். இங்கே கவிதை தற்காலத்தில் நிகழ்வதால் இயேசுவின் சிலுவையேற்றம் பற்றி சூசையப்பர் நினைப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. அதாவது இயேசு, மரியாள், சூசையப்பர் ஆகிய சொரூபங்கள் தற்காலத்தில் வாழ்கின்றன; கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கின்றன.

4. ராஜகோபாலசுவாமி: மன்னார்குடி பெரிய கோயிலின் உற்சவர்.

5. ஒளித் தோற்றம்: இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்றாகக் கருதப்படுவது. இந்நிகழ்வானது மறுரூபம், உருமாற்றம் (Transfuguration of Jesus Christ) என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இதைப் பற்றி மாற்கு (Mark) உள்ளிட்டோர் எழுதிய சுவிசேஷங்களில் காணப்படுகிறது. (மாற்கு 9: 2 & 4 - ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்… அப்பொழுது மோசேயும், எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்).

6. கனிமனத்தோடு...: அப்பர் பாடிய திருப்பூவனூர் பதிகத்திலிருந்து, ஐந்தாம் திருமுறை. மன்னார்குடிக்குச் செல்லும் வழியில் நீடாமங்கலத்தை அடுத்து உள்ள ஊர் திருப்பூவனூர். சமீபத்தில் செஸ் ஒலிம்பியாடை முன்னிட்டு இங்குள்ள சதுரங்க வல்லபநாதர் பெரும் புகழ்பெற்றார்.

7. ஆதிநாதன்...: மேலே உள்ள பதிகத்திலிருந்து. இந்த இரண்டு பாடல்களின் பொருள் அறிந்துகொள்ள: https://t.ly/HNpo2

8. ஓசானா: குருத்தோலை ஞாயிறு பாடல். இந்தப் பாடலைக் கேட்க: https://t.ly/sq6v8

9. பூமருவும் குழலாள்...: பாமணியில் பாதாளீச்சரரை சம்பந்தர் பாடிய முதலாம் திருமுறையிலிருந்து. இந்தப் பாடலின் பொருளை அறிந்துகொள்ள: https://t.ly/BCPjv

10. செறிதரு...: மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டை போகும் வழியில் உள்ள திருவுசாத்தானம் என்னும் கோயிலூரில் மந்திரபுரீஸ்வரரைப் பற்றி சம்பந்தர் பாடிய பதிகம், மூன்றாம் திருமுறையிலிருந்து. இந்தப் பாடலின் பொருளை அறிந்துகொள்ள: https://t.ly/VDKEB

11. அரசருக்கரசன் வெளிப்பட்ட…: இத்தாலியைச் சேர்ந்த புனித வெனான்ட்டியஸ் ஃபார்ச்சுனேட்டஸ் (Venantius Fortunatus, கி.பி. 6ஆம் நூற்றாண்டு) இயற்றிய ‘ஓ குளோரியோஸா டொமினா’ (O Gloriosa Domina) என்ற பாடலிலிருந்து. (மொழிபெயர்ப்பு ‘செபமாலை தேவரகசிய தியானம்’ என்ற நூலிலிருந்து). முழுப் பாடலையும் படிக்க: https://l1nq.com/TT1BQ

12. நெக்கு நெக்கு...: அப்பர் பாடிய ஐந்தாம் திருமுறையின் பொதுப் பதிகத்திலிருந்து. இந்தப் பாடலின் பொருளை அறிந்துகொள்ள:  https://l1nq.com/efPzK

13. நின்ற புன்சடை...: திருக்கொள்ளம்புதூரில் ஆற்றைக் கடப்பதற்கு ஓடம் இருக்க, ஓடக்காரரைக் காணாததால் சம்பந்தர் ஓடத்தில் ஏறி இந்தப் பதிகத்தைப் பாட, ஓடம் தானாகச் சென்று அக்கரைக்கு அவரைச் சேர்த்தது என்பது ஐதீகம். இந்த மூன்று வரிகளும் மூன்றாம் திருமுறையிலிருந்து. இந்தப் பாடலின் பொருளை அறிந்துகொள்ள: https://l1nq.com/g17kJ

 

தொடர்புடைய கவிதைகள்:

மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்
மாயக் குடமுருட்டி: அண்ணனின் தூண்டிலைத் திருடிய அப்பா
மாயக் குடமுருட்டி: கருப்பு சிவப்பாய் ஒரு ஆறு
மாயக் குடமுருட்டி: ஒளிதான் முதல் நினைவு
மாயக் குடமுருட்டி: மகமாயி
மாயக் குடமுருட்டி: பஞ்சவர்ணத்தின் பருக்கைகள்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


2


வருமான வரிஒரு முன்னோடி முயற்சிஆ.சிவசுப்பிரமணியன் பேட்டிதமிழால் ஏன் முடியாது?மேலாண்மைஅஸ்ஸாம் துப்பாக்கி சூடுசில முன்னெடுப்புகள்மஞ்சள் நிற தலைப்பாகைஇஸ்ரேல்: கிறிஸ்துவத்தின் நிழலில்கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ்இல்லாத தலைமை!yogendra yadav 4 தவறுகள் கூடாதுமக்கள் நீதி மய்யம்முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புஆலிவ் பழங்கள்வயிற்றுவலிநீர்நிலைநியுயார்க் டைம்ஸ் அருஞ்சொல்நூறாண்டு மழைகாளைகள்பாலியல் வல்லுறவுஷிர்க் ஒழிப்பு மாநாடுகல்வி சந்தைப் பண்டம்த செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டாஅப்பாவுவின் யோசனை இந்திய ஜனநாயகத்துக்கு முக்கியமானமுன்பருவக் கல்விஇமையம் அருஞ்சொல்கரண் பாஷின் கட்டுரை ஒரே தேர்தல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!