கலை, கவிதை, இலக்கியம் 4 நிமிட வாசிப்பு
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
ஓவியங்கள்: இரா.தியானேஸ்வரன்
“… முழுதாய் அறிந்தவள் அவள்
வெற்று, நிறைவு இரண்டின் தத்துவம் பற்றியும்
மரித்துப்போன தன் மகன்கள் பற்றியும்
நிறைவு வெற்று இரண்டிலிருந்தும்
இசைபிரிக்கும் அக்கார்டியன்போல்
தன்னை வெற்றிடமாக்கிய கருப்பையொன்றின்
அமுக்கப்பட்ட ஓலம் பற்றியும்
முழுதாய் அறிந்தவள் அவள்”
- யெஹுடா அமிக்ஹாய், ஓப்பன் க்ளோஸ்டு ஓப்பன் (Open Closed Open) தொகுப்பில்…
1. மூன்று மூன்றல்ல…
மூன்றாவது குழந்தையுடன்
நிறுத்திக்கொள்ளலாம்
என்பதே
அப்பாவின் திட்டம்
பாப்பாவோ
திட்டம் பணிபவள் மட்டுமே
மூன்றோ
‘மூன்று’ ஆகும் முன்னே
தான் சுமந்த எண்ணை
மண் சுமக்க வைத்தது
மூன்றை ஈடு செய்ய வந்து நான்
மூன்றாக வளர்ந்துகொண்டிருக்கிறேன்
எனினும்
முழு மூன்று
ஏதுமில்லை
என்றறிகிறேன்
எனினும்
மூன்று என்பது மூன்றாக மட்டுமல்ல
நான்காகவும் இருக்கலாம்
பலவாகவும் இருக்கலாம்
பற்பலவாகவும் இருக்கலாம்
இடையில்
ஒரே ஒரு கருப்பை
புகுந்துவிட்டால்
என்றுமறிகிறேன்
2. கருக்காலக் கனவுக்குச் சொப்புச் சாமான்கள்
முழுதும்
வயிற்றுள்
வாழ்ந்த வாழ்க்கை
சற்றே கொஞ்சம்
வெளியிலும் எட்டிப் பார்த்துவிட்டுச்
சென்றிருக்கிறது
ஆமாம்
கருக்காலத்தில்
அண்ணனுக்கு என்னென்ன
கனவுகள் வந்திருக்கும்
பூக்கள் கண்டிராத
விண்மீன் கண்டிராத
ரயில்கள் கண்டி
காதல் கண்டிராத
புணர்ச்சி கண்டிராத
புணர்ச்சிக் காணொலிகள் கண்டிராத
ஒளியைக் கண்டிராத
கருக்காலம்
இரட்டை இதயத்தின்
துடிப்பொலிகள்
குலுக்கிக் குலுக்கித்
தோன்றும்
இணைவுகளைக்
கனவாய்க் கண்டானோ
இதயத் துடிப்பின்
ஒலியூதி
அதில் அனலேற்றி
கூடிவந்த
ஒருநொடியில்
ஒளியாக்கி
அதைக்
கருச்சுவரில்
கனவாய்க் கண்டானோ
அவன் கனவின் மெல்லிய
ஆவிப் படலமேனும்
எஞ்சி இருந்திருக்குமோ
நான் உள்ளே
பூத்த போது
அவன் கனவின்
உடைபடர்ந்து
உலகம் கண்டேனோ
வெடித்து வெளிவந்தபோது
முன்னைக்
கரையிழுத்துப் போட்ட
கைவிசையின் கவசமும்
பின்னை
அண்ணன் கனவின்
அற்புத ஆடையும்
பெற்று வந்தேன்
அவையே என்றும்
காப்பு
அவற்றுள் இருந்துகொண்டு
அண்ணனின் கண்கொண்டு
ஒவ்வொரு நொடியும்
அவன் கனவுக்குச்
சொப்புச் சாமான்
சேர்க்கிறேன்
என்னையே எடுத்து விளையாடு
எப்போதும் அண்ணா!
3. பொதிதல்
”… அனைத்தும்
இருத்தலிலிருந்து வருகின்றன;
இருத்தல்
இருத்தலின்மையிலிருந்து
வருகிறது”
-தாவோ தே ஜிங்
அவன் இல்லாததால்
நான் இருக்கிறேன்
எனினும்
எனினும்
எப்போதும் உணர்கிறேன்
அவனை
இருவரும்
ஒருவர் மேல் ஒருவர்
மேற்பொதிந்திருக்கிறோம்
உட்பொதிந்திருக்கிறோம்
மோதி மோதிக்கொள்கிறோம்
பிய்ந்துசெல்லப் பார்க்கிறோம்
எனினும்
எனினும்
அவனை
ஆரத்தழுவவே விரும்புகிறேன்
அது மட்டும்
முடியவே இல்லை
எவ்வளவு முயன்றும்
தன்னைத் தானே
ஒருவர் வெறுங்கையால்
தூக்க முயல்வது போல்
இருக்கிறது
தூக்குவதற்கு
மட்டுமல்ல
இறக்குவதற்கும்
முடியவில்லை
4. மூதாதைமையின் முனை
அத்தனை மாதம் சுமந்த
குழந்தை
அன்றொருநாள்
பிரசவ மயக்கத்தில்
விடுபட்டு நீ பார்க்கும்போது
அது உன்னிடம் இல்லை
யாரிடமும் இல்லை
எப்படித் தவித்திருப்பாய் நீ
பாப்பா
பாப்பா சொன்னாள்:
‘கர்ப்பப்பை காணாமல் அடித்தது
கைக்கு வரும்
நானோ கைக்கும் வராமல்
கண்ணுக்கும் வராமல்
மண்ணுக்குக் கொடுத்துவிட்டேன்’
பாப்பா சொன்னாள்:
‘நானிருந்து
என் பிள்ளைகளை
இழந்தாலென்ன
நானில்லாமல்
என் பிள்ளைகளை
இழந்தாலென்ன
வெறித்தே பழகிவிட்டேன்
இந்த வாழ்க்கையை’
நீயில்லாமல் போகும்
வெறுமையையும்
நானில்லாமல் போகும்
வெறுமையையும்
என் பிள்ளைகள்
எப்படி வெறிப்பார்கள் பாப்பா
வெறுமைக்குள்ளும்
வெவ்வேறு தளங்கள்
வெவ்வேறு படிக்கட்டுகள்
இருப்பதை
அவர்கள் காண்பார்களா
பாப்பா சொன்னாள்:
‘கண்டுகொண்டால்
மூதாதைமையின் முனைக்கே
சென்று திரும்பலாம்
என் மகனே’
5. ராஜு
சிறுவனாய் இருந்தபோது
யோசித்துப் பார்த்தேன்
எவ்வளவு பைத்தியக்காரத்தனம்
பெயரில்லாமல் பிறப்பதும்
பெயரில்லாமல் சாவதும்
அப்புறம்தான் பெயர்வைத்தேன்
அண்ணனுக்கு
ராஜு என்று
தெருவில் இருந்த ஒருத்தனுக்கும்
அதே பெயர்
அவன் நான் விரும்புபவனோ
வெறுப்பவனோ அல்ல
எனினும்
அண்ணனுக்குப் பெயர்
என்றதும்
அவன் பெயர் வந்து
ஒட்டிக்கொண்டுவிட்டது
உயிரைவிட
பெயருக்கு
ஆயுள் அதிகம்
என்று எப்படியோ
தெரிந்திருந்தது அந்த வயதில்
ஆகவே
அவட்டை பறித்த
அண்ணன் உயிரை
மீட்டேன்
பெயரைக் கொடுத்து
பெயரைத் தவிர வேறெதையும்
சுமக்கவில்லை
என்பதால்
நினைவு போல
பறந்துசெல்வான் அவன்
நான்
நினைத்த இடங்களுக்கெல்லாம்
6. கருப்பையின் தனிப் புலம்பல்
விட்ட கருப்பையார்
விட்டதும் என்ன புலம்பினீர்
விட்டதன் புலம்பல் நீயே
ஆ என்ன சாபமிது
7. செம்பருத்தி
எங்கே புதைத்தார்கள்
என்று யாருக்கும் தெரியவில்லை
கொல்லையில் புதைத்திருக்கலாம்
என்பது என் நினைவு
என்றாள் பாப்பா
ஒருநாள் வாழ்க்கைக்கு
எடை கிடையாது
அதனால்
இறுதிச் சடங்கும் கிடையாது
ஓரளவு வாழ்க்கையைச்
சுமந்த உயிருக்கே
நாலு பேர் வருவார்கள்
என்றாள் பாப்பா
புதைத்த குழிமேல்
பூ கூட வைக்கமாட்டார்கள்
எலியைக் கொன்று புதைத்ததுபோல்
என் பிள்ளையைப் புதைத்துவிட்டார்கள்
என்றாள் பாப்பா
பிரசவ அறைக்குள் இருக்கும் குழந்தைக்கு
அறைக் குழந்தை
என்று சொல்வார்கள்
என் பிள்ளை
அரைக் குழந்தையாகப் போய்விட்டான்
என்றாள் பாப்பா
அன்றே பிறந்து
அன்றே இறந்த குழந்தையை
ஒரு பிறவியாக
யாரும் நினைப்பதில்லை
இன்னும் பிறக்கவேயில்லை
என்றுதான் நினைப்பார்கள்
என்றாள் பாப்பா
பச்ச மண்ணு போல அது
பிடிச்சு வைச்ச மண்ணு போல அது
அதைப் பிடிச்சு வைக்க
மண்ணுக்குத்தான்
எப்படி மனசு வந்திச்சோ
என்றாள் பாப்பா
இன்னும்
சொல்லிக்கொண்டே போவாள்
பாப்பா
எனக்கோ
அண்ணன் புதைந்த இடம் தேட
வேண்டும்
வீடு தொலைந்துவிட்டது
கொல்லை தொலைந்துவிட்டது
இனி எங்கே தேட நான்
ஒரு மருத்துவக் கழிவைப் போல
இறந்திருக்கிறான்
அண்ணன்
அவனை எங்கே தேடியெடுத்துப்
புதைப்பேன் நான்
ஒரே ஒரு செம்பருத்தி
வைப்பதற்கேனும்
சொல் அண்ணா
நீ புதைந்த இடம் எதுவென்று
(தொடரும்...)
தொடர்புடைய கவிதைகள்
மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.