கலை, கவிதை, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

மாயக் குடமுருட்டி: அண்ணனின் தூண்டிலைத் திருடிய அப்பா

ஆசை
30 Jul 2023, 5:00 am
0

ஓவியங்கள்: ஜோ. விஜயகுமார்

1. தூண்டிலில் தப்பாத மீன்கள்

அண்ணன் நீந்திப் பார்த்ததில்லை
அவன் தம்பி
ஆனால்
நீந்துவதெல்லாம்
அண்ணனுக்குப் பிடிக்குமென்று
தெரியும் அவனுக்கு

கரையில்
அண்ணனுக்கு அருகமர்ந்து
வேடிக்கை பார்க்கிறான்
அண்ணனுக்கு
எந்த உதவியும்
தன்னால் செய்ய இயலாத
குற்றவுணர்வுடன்

ஒரு புழு தோண்டத் தெரிகிறதா
உனக்கு
புழுவை முள்ளில் மாட்டத் தெரிகிறதா
உனக்கு
ஒரே ஒரு மீனைப் பிடிக்கத் தெரிகிறதா
உனக்கு
பிடித்த மீனை உருவி
ஒழுங்காய்ப் பையில் போடத் தெரிகிறதா
உனக்கு
மீனின் பெயர் தெரிகிறதா
உனக்கு

ஆம்
ஏன் தெரியவில்லை தனக்கு
யோசிக்கிறான் தம்பி

அண்ணன் இல்லாதபோது
எல்லாம் ஒழுங்காய்ச் செய்யும் தனக்கு
அண்ணன் அருகில்
எல்லாம் மறந்துபோகிறதே ஏன்
யோசிக்கிறான் தம்பி

பெருநினைவுக்கு அருகில்
அரைநினைவு
இற்றுப்போகிறதே ஏன்
யோசிக்கிறான் தம்பி

அண்ணனின் அண்மையே
ஒரு பெரும் தூண்டில்
அதனிடம்
எல்லாம் புழுதான்
எல்லாம் மீன்தான்
என்று தெரிந்தபோது
அண்ணனிடமிருந்து ஓட ஆரம்பித்தான்

வெகு தொலைவு
ஓடிவந்தபின்
நின்று ஆறுதலாய்
ஓரிடத்தில்
உள்மூச்சு வெளிமூச்சு வாங்க
நின்றபோது
வெடுக்கென்று
உள்ளுக்குள் ஏதோ இழுத்துத்
துடித்தபோதுதான் தெரிந்தது அவனுக்கு

சேய்மைதான்
அண்ணனின் தூண்டில் நரம்பென்று

2. மீனின் நடனம்

அண்ணன் மீன் பிடிக்கிறான்
தம்பி வேடிக்கை பார்க்கிறான்

முள்ளில் புழு நுழைப்பது
நீரில் நரம்போடு எறிவது
தக்கையின் அசைவில்
கண்ணூன்றுவது
தக்கையின் துடிப்பில்
துடிப்பற்றிருப்பது
வெடுக்கென்று துடிப்பை
நீரிலிருந்து பிடுங்குவது
நீரிலிருந்து கரைநோக்கி வரும் மீனைப்
பார்த்த பார்வையில்
அரைவளையம் அந்தரத்தில் பதிப்பது
மனமெல்லாம் தூண்டிலாய் மாற்றிய
உடலொன்றின்
தனி நடனம்தான் அது

ஆட வேண்டிய நேரத்தில்
ஆடாமல் இருக்கும் வித்தை அது

அமைதியை உறையவைத்து
ஆடும் அந்நடனம் கண்டு
தம்பிதான் ஆர்ப்பரிக்கிறான்

3. நீச்சலை அணைக்கும் கரை

அண்ணன் மீன் பிடிக்கிறான்
தம்பி வேடிக்கை பார்க்கிறான்

ஒவ்வொரு மீனும்
மீதி நீச்சலை
அந்தரத்திலும்
கரையில்
வந்துவிழுந்த இடத்திலும்
நீட்டிக்க

அண்ணன் பார்த்துக்கொண்டே இருக்கிறான்
தன் பார்வையே
வந்து விழுந்த மீனின்
நீச்சலை
ஆற்றுப்படுத்திவிடும்
என்பதுபோல

ஒரே ஒரு முறை
பனையேறிக் கெண்டையைக்
கையிலெடுத்துத்
தம்பியைப் பார்த்துச் சொன்னான்
‘மீன்குஞ்சுக்கு ஆற்றில் மட்டுமல்ல
கரையிலும் நீந்தப் பழக்கக் கூடாது’

4. ஆற்றுக்கும் அந்தரத்துக்கும் என்ன வேறுபாடு

அடுத்தடுத்து மீன் கிடைக்கும்போதும்
அண்ணன்
அமைதியாய் இருந்தான்

மீனே கிடைக்காதபோதும்
அண்ணன் அமைதியாய் இருந்தான்

அண்ணன்
மீனைப் பிடிக்க வந்தவன்போல்
இல்லை
ஆற்றைப் பிடிக்க வந்தவன்தான்
அவன்

மீனுக்கு ஒரு தூண்டிலைப் போட்டுக்கொண்டே
ஆற்றுக்கும் ஒரு தூண்டிலைப் போட்டுக்கொண்டிருந்தான்

ஆற்றின் தூண்டிலுக்குச்
சிக்காமல் தப்பிய ஒரு மீனின்
மூத்த குஞ்சு போடும்
பழிவாங்கல் நாடகம் அது

இப்போதில்லையென்றாலும்
எப்போதாவது பிடித்துவிடுவோம்
என்று அண்ணன் பொறுமை காத்தான்

ஆற்றின் மனதை
ஒவ்வொரு மீனின் நீச்சலையும்
அடக்கித்தான் படிக்க முடியும்
என்று நினைத்தான்

ஒவ்வொரு மீனும்
முள்ளில் மாட்டி
நீரிலிருந்து மேலேறும்
ஒவ்வொரு நொடியிலும்
ஆற்றுக்கும் அந்தரத்துக்கும்
என்ன வேறுபாடு
என்ற எப்பாடுபட்டாவது
கண்டறிய துடித்தான்

கரையில் வந்துவிழுந்து
துடிக்கும் மீன்
தன்னிடம் இறுதிச் செய்தி ஏதும்
சொல்லுமா
என்று ஒவ்வொரு முறையும்
அதை உற்றுப் பார்த்தான்

ஒருநாள் மீன்பிடிப்பதை
அடியோடு நிறுத்திக்கொண்டான்
அண்ணன்

ஒருநாள் தம்பி
தூண்டிலை எடுத்துக்கொண்டு
மீன்பிடிக்க அண்ணனை
அழைத்தபோது
அவன் மறுத்துவிட்டான்
‘இனி நான் மீன்பிடிக்கப் போவதில்லை’
என்று

ஏன் என்று பார்த்த தம்பியிடம்
சொல்ல நினைத்தான்
ஆனால் சொல்லவில்லை

‘கடைசியாய் ஒரே ஒரு மீன்
வாய் திறந்து என்னிடம் சொன்னது
மூச்சுதான் நீச்சல்
இரண்டும் ஒன்றாய் இல்லாவிட்டால்
வாழ்வும் சாவும்
ஒன்றாகிவிடும் என்று’

5. சுளிவு

ஆறு மீனல்ல
பாம்பு
அண்ணனுக்குத் தெரியவில்லை
அப்பாவுக்குத் தெரிந்திருந்தது

தெரிந்ததால்
அப்பா சுளுக்கி செய்தார்
தெரியாததால்
அண்ணன் தூண்டில் செய்தான்

கரை அனுப்பும்
பாம்புகளைக் கொன்ற பிறகெல்லாம்
ஆற்றை அடக்கிய
ஒரு வீரனைப் போல்தான்
அப்பா நடந்துவந்தார்

நெளிவு
வளைவு
சுளிவு
சுழிவு
கண்டு
அச்சம் அவருக்கு

அதையெல்லாம்
அடக்கித்
தன்னிடம் வைத்திருக்க
முறுக்கிக்கொண்டே இருப்பார்
எப்போதும் மீசையை

சொல்
பார்வை
மீசை
எல்லாவற்றிலும்
சுளுக்கி ஏந்திக்கொண்டே
திரிபவர் அவர்

பிறகென்ன
அண்ணன் ஏந்தித் திரியும்
அமைதியில் மிதக்கும் தக்கை
அப்பாவின் ஆர்ப்பாட்டச் சுளுக்கியிடம்
தோற்றுத்தானே ஆக வேண்டும்

6. பின்னோக்கி நடக்கும் குழந்தை

அப்பா குடிகாரர்
புகைபிடிப்பவர்
முன்கோபக்காரர்
இங்கிதமற்றவர்
கெட்டவார்த்தை பேசுபவர்

அண்ணன்
இவை எதுவுமில்லை

அப்பாவால் தண்டிக்கப்பட்டு
அப்பாவை வெறுத்து
தூர தூர ஓடியவன்

கால்நூற்றாண்டு
அப்பாவுடன் பேசாதவன்

மூத்தோன் என்பதால்
தொலைவில் இருந்துகொண்டும்
தலையில் தன் குடும்பம்
தூக்க முடியாமல்
தூக்கிக்கொண்டோடத்
திணிக்கப்பட்டவன்

அப்பாவின் ஆட்டங்கள்
அடங்கி
உயிர் ஒடுங்கிக்கொண்டிருக்கும் நாட்களில்
அப்பாவிடம் திரும்பிவந்தவன்

அப்போது அவனுக்கு
அப்பா வேறு எதுவுமில்லை
பின்னோக்கிச் செல்லும்
குழந்தை
அவ்வளவுதான்

பார்த்துக்கொண்டே இருக்கிறான்
மெதுவாக மூச்சு அடங்கிக்கொண்டிருக்கிறது

பதினொன்றாம் வகுப்பில்
தேர்ச்சி பெறாததற்குக்
கம்பு எடுத்துக்கொண்டு
தெருவில்
துரத்தித் துரத்தி அடித்த அப்பா

தெருப் பெண்ணுக்குக் காதல் கடிதம்
கொடுத்ததற்குத்
தெருவிலக்கம் செய்து
தெருப்பஞ்சாயத்தில் தீர்ப்பளித்த அப்பா

திரும்பத் திரும்ப
வாழ்வில்
அலங்கோலத்தைத் திணித்த அப்பா

பார்த்துக்கொண்டே இருக்கிறான்
மெதுவாக மூச்சு அடங்கிக்கொண்டிருக்கிறது

சன்னமான
ஒவ்வொரு மூச்சும்
வெளியேறும்போது
அவ்வளவு சன்னம்கூட
வந்துரசி
வெறுப்பும்
கசப்பும்
பட்ட இலைகளாய்
பட்ட மலர்களாய்த்
தன்னிடமிருந்து
ஒவ்வொன்றாய் உதிரக் கண்டான்

சட்டென்று
அவனுக்கு மறந்துபோகிறது
அப்பாவை ஏன் முன்பு
வெறுத்தோம் என்று

கண்ணை மூடிக்
காரணங்கள் தேட முயன்றபோது
சட்டென்று
எல்லோரும் பெருங்குரலெடுக்க
ஏனென்று உணர்வதற்குள்
அவனிடமிருந்து
கண்ணீர் துளிர்க்க
‘அப்பா’ என்று
சற்றே இங்கிதமாகவே
கத்திவிட்டான்

இப்போது அண்ணனின்
தூண்டிலைத்
தான் வைத்திருக்கும்
அமைதியில்
அப்பா உறைந்திருந்தார்

(தொடரும்...)

 

தொடர்புடைய கவிதைகள்:

மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


3

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தனிநபர் வருமானம்அரசியல் பரிமாணம்இரட்டைப் பெயர்கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானநியமன நடைமுறைசோழர்சம்ஸ்கிருதமயம்பிடிஆர் சமஸ் பேட்டிஉமர் அப்துல்லா உரைஜார்ஜ் ஆர்வெல்மன்னிப்புக் கடிதங்கள்பேராசிரியர்கள்முன்னெடுப்புஒரு நூறு ஆண்டுக்காலத் தனிமைநேரு-காந்தி குடும்பம்சோஷலிஸ்ட் இயக்கம்கணினி அறிவியல் படிப்புப.சிதம்பரம் அருஞ்சொல்370வது பிரிவுயாசர் அராபத்தர மதிப்பீடுஆர்பிஐகுறைந்த பட்ச ஆதரவு விலைசட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (யுஏபிஏ)ஐந்து ஆறுகள்தமிழ் சினிமாகுழந்தையின்மைகிறிஸ்டோபர் நோலன்பெருமாள் முருகன்அறம் எழுக!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!