கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
ராகுலுக்குப் பயன்படக்கூடிய ‘ஆலோசனைகள்’
ராகுல் காந்தி போன்ற இந்தியத் தலைவர்கள் பிரிட்டிஷ் ‘கன்சர்வேடிவ்’ (டோரி – பழமைவாதம்) கட்சித் தலைவரின் அரசியல் ஆலோசனைகளை வரவேற்பதில் நிச்சயம் ஆர்வமாக இருக்கமாட்டார்கள்; பிரதமர் பதவிக்குரிய மரியாதையைத் தராமல், அதை இசை நாற்காலியைப் போல ஆள்மாற்றி ஆளை உட்காரவைத்து கடைசியில் ஜூலை மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியையும் அவர்கள் இழந்துவிட்டார்கள். ஆனால், ரிஷி சுனக்குக்குப் பிறகு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முன்னதாக, புதிய தலைவருக்கு, வில்லியம் ஹேக் என்ற மூத்த தலைவர் கூறியுள்ள சில ஆலோசனைகள் நம்முடைய ராகுலுக்கும் பொருந்துகின்றன. (ஏற்பதும் ஏற்காததும் ராகுலின் விருப்பம்).
1997 பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெருந்தோல்வி அடைந்த பிறகு 2001 வரையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் வில்லியம் ஹேக். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடந்த பொதுத் தேர்தலிலும் கன்சர்வேடிவ் கட்சி தோல்விதான் கண்டது. இருந்தாலும் எதிர்க்கட்சிகள் என்ன செய்யக் கூடாது என்பதை அனுபவத்தில் நன்கு உணர்ந்தவர் ஹேக். ‘எதிர்க்கட்சியாக இருக்கும்போது பெரிய ஆபத்தைச் சந்திப்பார்கள் டோரிகள்’ என்ற தலைப்பில் ‘த டைம்ஸ்’ (03.09.2024) நாளிதழில் சில நாள்களுக்கு முன்னால் எழுதிய கட்டுரையில் இந்த ஆலோசனைகளைத் தெரிவித்திருக்கிறார் வில்லியம் ஹேக்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
விளைவுகளைச் சிந்திக்காமல்…
“முதலாவது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னின்னவற்றைச் செய்வோம் என்று அவசரப்பட்டோ, சரியாக ஆராயமாலோ திட்டவட்டமான கொள்கை முடிவுகளை அறிவிக்கும் ஆவலைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலுக்குக் குறைந்தபட்சம் 4 அல்லது 5 ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் நாட்டின் பொருளாதார நிலைமையும் ஐரோப்பிய நிலைமையும் உலகச் சூழலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆட்சியைப் பிடிக்க விரும்பும் எதிர்க்கட்சிகள் வாக்குறுதிகளைத் தயாரிக்கும்போதும், தாங்கள் வந்தால் இதைச் செய்வோம் என்று கூறுவதற்கு முன்னாலும் – பல முறை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். திட்டவட்டமாக எதையும் அறிவிக்கக் கூடாது” என்கிறார்.
ராகுல் காந்தி இதைப் பரிசீலிக்க வேண்டும். கடந்த மக்களவை பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அறிவித்த தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை மட்டும் முழுதாக நிறைவேற்றுவதாக இருந்தால், ஆண்டுக்கு ரூ.22 லட்சம் கோடி தேவைப்படும் என்று ‘பிசினஸ் டுடே’ கணக்கிட்டுள்ளது. அதாவது, 2024 – 2025இல் அரசுக்கு வரி வருவாயாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் ரூ.25.83 லட்சம் கோடியில் 85%!
அந்த வாக்குறுதிகள் பொது நிதி நிர்வாகத்தில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். அடுத்து ஆட்சிக்கு வர விரும்பும் எந்த அரசியல் கட்சியும் நிதிநிலைமையை அந்த அளவுக்குச் சேதப்படுத்தும் உறுதிமொழிகளை அறிவிக்காது, அதிலும் அடுத்த ஒருமுறை மட்டுமல்ல - அதற்கும் மேலும் ஒருமுறை ஆள நினைக்கும் கட்சியாக இருந்தால், நிச்சயம் கவனமாக இருந்திருக்கும். ‘தோற்றுவிடுவோம்’ என்பது தெரிந்தே தயாரித்த தேர்தல் அறிக்கையாக அது இருந்தது; நிறைவேற்றக் கடினமான இலவசங்களை அறிவித்தது. பாஜகவின் ‘தனிப்பெரும்பான்மை’ ஆட்சி போய், மோடி தலைமையில் தேசிய ஜனநாயக ‘கூட்டணி’ அரசு நடக்கிறது; மோடிக்கும் ராகுலுக்கும் இடையிலான மக்கள் ஆதரவு சதவீதம் குறைந்துகொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் – ஹேக் கூறிய அறிவுரைகளைக் காங்கிரஸ் கட்சி பின்பற்ற வேண்டும், அவசரப்பட்டு வாக்குறுதிகளை அள்ளிவீசக் கூடாது.
ஜிஎஸ்டி: பொது சரக்கு, சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்செய்வது தொடர்பாக தொடக்கம் முதலே இடைவிடாமல் விமர்சித்துவருகிறது காங்கிரஸ் கட்சி; தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டியே தலைகீழாக மாறிவிடும் என்பதைப் போலவும் - இதற்கு வரி விதிக்கமாட்டோம், அதற்கு வரிவிலக்கு தருவோம் என்றெல்லாமும் தொடர்ந்து பேசிவருகிறது. நடைமுறையில் இவை சாத்தியமா என்று பரிசீலிக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு
‘சாதிவாரி கணக்கெடுப்புதான் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரே நடவடிக்கை’ என்று காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் உரத்த குரலில் கோரிவருகின்றன. காங்கிரஸின் இந்தக் கோரிக்கை வலுத்துவருவதால், நரேந்திர மோடியின் அரசே, இதை ஏற்றுக்கொண்டுவிடலாமா என்று யோசிக்கிறது; ஆர்எஸ்எஸ் அமைப்பும், ‘சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கட்டும்’ என்று கூறிவிட்டது. நாட்டின் சமூக – பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும், சாதிவாரி கணக்கெடுப்புதான் ஒரே நிவாரணியாக இருக்கும் என்பதைப் போன்ற மாயத் தோற்றத்தைக் காங்கிரஸும் தோழமைக் கட்சிகளும் உருவாக்கிவிடக் கூடாது.
இடஒதுக்கீட்டுக்கு 50% அளவுதான் உச்ச வரம்பு என்பதை நீக்கிவிட்டு, அந்தந்தச் சமூகவாரியாக முழு ஒதுக்கீட்டைச் செய்துவிடலாம் என்றே காங்கிரஸ் கருதுவதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், அரசுத் துறைகளின் செயலர்கள் போன்ற உயர்பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டைக் கொண்டுவர காங்கிரஸ் விரும்புகிறது என்று அறிகிறேன். அதற்கும் மேல் இதில் ஏதும் தெரியவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு (ஓபிசி) காங்கிரஸ் அளிக்கப் போவதாகக் கூறும் நல்வாழ்வுக்கு இந்த ஒதுக்கீடே போதுமானதா? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு சாதிக்கும், துணை சாதிக்கும் இவ்வளவு கோடி ரூபாய் என்று அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடுகளைத் தருமா? தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்று கோருகின்றனர், அதையும் அரசால் நிறைவேற்ற முடியுமா? சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் சாதிக்கப் போவதென்ன?
நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்ற ஒரே சிந்தனையில், மண்டல் இயக்கத்தின் இரண்டாவது கட்டம் பற்றிப் பேசுகின்றன எதிர்க்கட்சிகள். இந்த இடஒதுக்கீட்டின் மூலம் நாட்டு மக்களுக்கு என்னென்ன நன்மைகளைச் செய்ய முடியும் என்று முதலில் விரிவான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும், அப்படி அமல்செய்வதில் எழக்கூடிய சிக்கல்கள், பிரச்சினைகளை ஆராய வேண்டும். மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரும்புவது உண்மையென்றால், மாற்றுத் திட்டங்கள் வலுவாகவும் அமல்செய்யக்கூடியதாகவும் தயாரிக்கப்பட வேண்டும்.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
இந்திய அரசியலுக்குத் தேவை புத்தாக்கச் சிந்தனைகள்!
07 Jul 2024
ஆஆக போல…
“பிரிட்டனில் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் தொழிலாளர் கட்சியும் நிர்வாகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியாமல் போனால் மீண்டும் கன்சர்வேடிவ் (டோரி) கட்சியால் ஆட்சிக்கு வந்துவிட முடியாது. அதற்குப் பதிலாக, பிரிட்டனைச் சீர்திருத்துவோம் (ரிஃபார்ம் யுகே) கட்சி பக்கம் மக்களுடைய ஆதரவு சாய்ந்துவிடும் என்று எச்சரிக்கிறார் வில்லியம் ஹேக். அது பிரிட்டனின் இன்னொரு வலதுசாரி கட்சி, இப்போது மக்களிடையே வேகமாகப் பிரபலமாகிவருகிறது. எனவே, அந்தக் கட்சி எதையெல்லாம் பேசுகிறதோ, வாக்குறுதியாக அறிவிக்கிறதோ அதை அப்படியே நாமும் ஏற்று அறிவித்துவிட வேண்டும் என்ற ஆவலையும் கன்சர்வேடிவ் கட்சி (டோரி) அடக்கிக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஹேக். (இந்தியாவிலும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மூன்றாவது மாற்றாக ஆம்ஆத்மி கட்சி (ஆஆக) ஒரு காலத்தில் பார்க்கப்பட்டது).
புதிய தலைமுறை வாக்காளர்களும் ஏற்கும்படியான வலிமையான மாற்றுக் கட்சியாக கன்சர்வேடிவ் உருவாக விரும்பினால், மக்களை மயக்கும் இலவச அறிவிப்புகளைத் தாங்களும் பின்பற்றி அறிக்கைகள் தயாரிப்பது வெற்றிக்கு உதவாது என்கிறார் ஹேக்.
ஹேக் சொன்ன அறிவுரை இந்தியாவின் காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை காலம் கடந்தது. காரணம், காங்கிரஸ் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் பல இலவசங்களையும் ரொக்க மானியங்களையும் அறிவித்துவிட்டது. இந்த உதவிகளையெல்லாம் ‘ரேவடி’ என்று கேலிசெய்த மோடியே, இப்போது சில மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியில் சேர்க்க அனுமதித்துவிட்டார். ‘வலிமையான - போட்டி போடக்கூடிய அரசியல் கட்சியைக் கட்டமைக்க இந்த அணுகுமுறை சரியல்ல’ என்ற ஹேக்கின் ஆலோசனையை ராகுல் காந்தி அவசியம் பரிசீலிக்க வேண்டும்.
ரிஷி சுனக்குக்குப் பிறகு கன்சர்வேடிவ் கட்சிக்குத் தலைவராக வர விரும்புகிறவர் தவிர்க்க வேண்டிய சில ஆவலாதிகளை ஹேக் பட்டியலிட்டிருக்கிறார். அவையெல்லாம் இந்திய அரசியல் பின்னணிக்குப் பொருத்தமில்லாதவை என்பதால் அவற்றை விலக்கிவிடுகிறேன். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் கடைப்பிடிக்கக் கூடாத - சில ஆவல்களைப் பட்டியலிட விரும்புகிறேன்.
ஆதரவு குவிந்துவிடவில்லை
முதலாவதாக, மக்களவை பொதுத் தேர்தல் முடிவை, தன்னுடைய அரசியல் உத்திக்கு பெருவாரியான மக்கள் வழங்கிய ஆதரவாகக் கருதிவிடக் கூடாது ராகுல். சில மாநிலங்களில் சில இடங்களைத்தான் காங்கிரஸ் கூடுதலாகப் பெற்றிருக்கிறது அதற்குக்கூட காரணம், பாஜகவின் திறனற்ற நிர்வாகமும் உள்கட்சிப் பூசல்களும்தான்.
காங்கிரஸும் அதன் தோழமைக் கட்சிகளும் ‘பாரத் ஜோடோ’ யாத்திரை நிகழ்ந்த வழியில் இருந்த தொகுதிகளில் 41இல்தான் வென்றன. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான முதல் கட்ட யாத்திரையில் அவர் 71 தொகுதிகளை – 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் – கடந்தார். 2024இல் இதில் 56 தொகுதிகளில் போட்டியிட்டு 23இல்தான் காங்கிரஸ் வென்றது. 2019இல் 65 தொகுதிகளில் 19இல் வென்றிருந்தது.
‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்ற பிற கட்சிகள் 2024இல் 14 தொகுதிகளில் போட்டியிட்டு, 6 தொகுதிகளில் வென்றன. இரண்டாவது கட்டமான ‘பாரத் ஜோடோ நியாய் யாத்திரை’ 82 மக்களவைத் தொகுதிகள் வழியாக சென்றது. அதில் 49 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 17இல் வென்றது. 2019இல் 71இல் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வென்றிருந்தது. ‘இந்தியா’ கூட்டணி தோழமைக் கட்சிகள் 2024இல் 33 தொகுதிகளில் போட்டியிட்டு 18இல் வென்றன.
ராகுல் மேற்கொண்ட இரண்டு யாத்திரைகளும் அவருடைய கட்சிக்கு இடங்களை அதிகப்படுத்தியுள்ளன, அதில் அவரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். ஆனால், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் செல்ல வேண்டிய தொலைவு மிக அதிகம். ராகுலின் யாத்திரை ஆந்திரத்திலும் தெலங்கானாவிலும் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடவில்லை.
ஆந்திரத்தில் யாத்திரை சென்ற 2 தொகுதிகளையும் தேர்தலில் இழந்துவிட்டது காங்கிரஸ். தெலங்கானாவில் 7 தொகுதிகள் வழியாகச் சென்றது, 2019 தேர்தலில் ஒரே இடத்தில் வென்றது, 2024லும் அதே ஓரிடம்தான் காங்கிரஸுக்குக் கிடைத்தது. டெல்லி, குஜராத், இமாச்சலம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஷா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 2019 தேர்தல் முடிவுடன் ஒப்பிடுகையில், 2024இல் காங்கிரஸுக்குப் பெருத்த லாபம் ஏற்பட்டுவிடவில்லை.
மஹாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பிஹார் மாநிலங்களில்தான் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்தன. இந்த மாநிலங்களில் வெற்றிக்குப் பல காரணங்கள். எதிர்க்கட்சிகள் அமைத்த கூட்டணி வலுவாக இருந்தது, ஆளும் பாஜக அமைத்த கூட்டணியில் ஒற்றுமை இல்லை, பாஜகவுக்குள்ளேயே உள்கட்சிப் பூசல்கள் நிலவின, கட்சி மாறி வந்தவர்களை வேட்பாளர்களாக ஏற்றதால், இந்த மாநிலங்களில் தேர்தல் வேலைகளில் ஈடுபடவில்லை ஆர்எஸ்எஸ்.
சமூக இணைப்பு
நான்காவதாக, தான் கடைப்பிடிக்கும் ‘சமூக இணைப்பு’ (சோஷியல் என்ஜினீயரிங்) அரசியலால்தான் கட்சிக்கு அதிக வெற்றிகள் கிடைத்துவருகிறது என்ற எண்ணத்தையும் ராகுல் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று தொடர்ந்து பேசும் யோகேந்திர யாதவே இந்தத் தேர்தல் முடிவுகளை அலசிப் பார்த்துவிட்டு, “தேசிய அளவில் எந்தச் சமூகமும் தனது முடிவை பெரிய அளவில் மாற்றிக்கொண்டதற்கான அறிகுறியே இல்லை” என்று கூறியிருக்கிறார். அதேவேளையில், பாஜக இந்துக்களில் முற்பட்ட சாதியினர், இடைநிலைச் சாதியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரிடையேயான வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொண்டதுடன் ஆதிவாசிகளிடமும் அதிக செல்வாக்கு பெற்றுள்ளது என்று ‘த பிரிண்ட்’ நாளிதழில் எழுதியிருக்கிறார்.
கடந்த மூன்று பொதுத் தேர்தல்களாக காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி நிலையாக – சரியாமல் இருக்கிறது என்பதும் உண்மை. 2024 பொதுத் தேர்தலில் காங்கிரஸுக்கு 21.9% கிடைத்திருக்கிறது, 2019 தேர்தல் முடிவுடன் ஒப்பிடுகையில் 1.7% மட்டுமே அதிகம். ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் இந்த வெற்றிக்காக, ஒருவருக்கொருவர் முதுகில் தட்டி பாராட்டிக்கொள்வதும், மார்பை நிமிர்த்திப் பேசுவதும் அவர்களுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவுக்குப் பொருத்தமில்லாமல் ‘மிகையாகவே’ இருக்கிறது.
ராகுல் தவிர்க்க வேண்டிய ஐந்தாவது ஆவல், இந்தியா கூட்டணியில் இப்போது உடன் இருக்கும் தோழமைக் கட்சிகள் அனைத்தும் ‘நிரந்தரத் தோழர்கள்’ என்று நம்பிவிடக் கூடாது. உண்மையில் அந்தக் கட்சிகளில் பெரும்பாலானவை காங்கிரஸை எதிர்த்தே வளர்ந்தவை. பாஜக ‘பொது எதிரி’ என்பதால் உடன் இருக்கிறார்கள். பாஜக ‘பெரிய எதிரி’யாக இருக்கும்வரையில்தான் உடன் இருப்பார்கள். அந்தக் கட்சிகளில் பெரும்பாலானவற்றுக்கு ‘இரண்டாவது பெரிய எதிரி’ காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சி தன்னுடைய பழைய உன்னத நிலையை அடைய வேண்டும் என்றால், விரைவிலேயோ சிறிது காலம் கழித்தோ இந்தத் தோழமைக் கட்சிகளிடமிருந்து விடுபட்டே தீர வேண்டும்.
தொடர்புடைய கட்டுரைகள்
ராகுலைப் பாராட்டுகிறார் இராணி
இந்திய அரசியலுக்குத் தேவை புத்தாக்கச் சிந்தனைகள்!
எதிர்க்கட்சித் தலைவர்: ராகுலின் கடமைகள், உரிமைகள்
மக்கள் தீர்ப்பால் அடக்கப்பட்ட ‘தலைவர்’
2024 தேர்தல் முடிவு: 10 முக்கிய அம்சங்கள்
சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்
காங்கிரஸ், பாஜக உள்ளுக்குள் எதிர்கொள்ளும் எதிர்க்குரல்கள்
பிராந்திய கட்சிகளின் குடையாக வேண்டும் காங்கிரஸ்
தமிழில்:
வ.ரங்காசாரி

1






பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.