கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

இந்திய அரசியலுக்குத் தேவை புத்தாக்கச் சிந்தனைகள்!

ஸ்வாமிநாத் ஈஸ்வர்
07 Jul 2024, 5:00 am
0

னித சமுதாயத்தில் உருவாகும் எல்லா இயக்கங்களுமே அலை போல எழுச்சி – உச்சம் - வீழ்ச்சி என்னும் நிலைகளைக் கொண்டவை. பெரும் அரசியல் இயக்கங்கள், நாடுகள், பொருளாதார அமைப்புகள் எல்லாவற்றுக்கும் இந்த விதி பொருந்தும். 

முகலாயர்கள் காலத்தில், உலகின் 24% மதிப்புள்ள, முதன்மைப் பொருளாதாரமாக இருந்த இந்தியா, 200 ஆண்டுகால ஆங்கிலேயச் சுரண்டலுக்குப் பிறகு 4% ஆக, உலகின் மிக ஏழை நாடுகளுள் ஒன்றாக வீழ்ந்தது. இன்று, 75 ஆண்டுகளுக்குப் பிறகு 8% ஆக உயர்ந்திருக்கிறது அது.

ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து போராடி 1947ஆம் ஆண்டு விடுதலை பெற்றது இந்தியா. விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய இந்திய காங்கிரஸ் கட்சி, மிக இயல்பாகவே மிக அதிக இடங்களைப் பெற்று, மிக அதிகமான வாக்குச் சதவீதத்தைப் பெற்று, சுதந்திர இந்தியாவின் முதல் அரசாக 1952ஆம் ஆண்டு மலர்ந்தது. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அடிப்படை மாற்றங்கள்

அன்று காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 44.99%. பெற்ற இடங்கள் 74%. அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் முக்கியமானவை 1977, 1989, 1991 மற்றும் 2014. ஏனெனில், இந்தத் தேர்தல்களில்தான் அரசியல் தளத்தில் மாபெரும் அடிப்படை மாற்றங்கள் (tectonic shifts) நிகழ்ந்தன.

இதில் 1977ஆம் ஆண்டு, நெருக்கடிநிலைக்குப் பிறகு நடந்த தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. 9% வாக்குகளை இழந்த காங்கிரஸ், மொத்தம் 154 இடங்களையே பெற்றது. 41.32% வாக்குகளைப் பெற்ற ஜனதா கட்சி, 295 இடங்களைப் பெற்றது.

மத்தியில் வலுவான காங்கிரஸ் இயக்கத்தை அசைத்த முதல் தேர்தல் அதுதான். ஆனாலும்கூட, காங்கிரஸின் வாக்குச் சதவீதம் 34.52% என வலுவாக இருந்தது. எதிர்க்கட்சிகள் இணைந்த காரணத்தால், காங்கிரஸ் இயக்கத்துக்கு எதிரான வாக்குகள் இணைந்து காங்கிரஸ் இயக்கத்தைத் தோற்கடித்தன.

இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு 1984ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், காங்கிரஸ் 404 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் இயக்கத்தில் மிக அதிக வாக்குச் சதவீதமும், இடங்களையும் பெற்ற தேர்தல் அதுதான். அந்தத் தேர்தலில் புதிதாக களம் இறங்கிய பாஜக 7.7% வாக்குகளுடன் 2 இடங்களைப் பெற்றது.

அதற்கடுத்து நடந்த 1989ஆம் ஆண்டு தேர்தலில், போஃபோர்ஸ் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக, 207 இடங்களை இழந்து 197 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதன் வாக்குச் சதவீதம், 9.57% வீழ்ச்சி அடைந்தது. ஆனாலும், அதன் வாக்குச் சதவீதம் 39.53% ஆக இருந்தது. அந்தத் தேர்தலில், மிக அதிகமான வாக்குச் சதவீதம் காங்கிரஸிடம்தான் இருந்தது. பாஜக 11.36% வாக்குகளையே பெற்றிருந்தாலும், அது தனது நாடாளுமன்ற எண்ணிக்கையை 2 இடங்களில் இருந்து 85 ஆக உயர்த்திக்கொள்ள முடிந்தது.

வலதுசாரி அரசியலின் எழுச்சி

இந்திய அரசியல் வானில், வலதுசாரிகள் முதன்முறையாக 10%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, முக்கியமான அரசியல் சக்தியாக எழுந்து நின்றது இந்தத் தேர்தலில்தான். 1983 தொடங்கி இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக 6%க்கு அதிகமாக வளரத் தொடங்கியது, இந்த வலதுசாரி அரசியல் எழுச்சியின் பின்னணியில் இருந்தது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

அத்வானி, 1991ஆம் ஆண்டுத் தேர்தல் சமயத்தில் நடத்திய ரத யாத்திரையின் பின்னணியில், பாஜக முதன்முறையாக 20%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தனது வாக்குச் சதவீதத்தை இருமடங்கு உயர்த்திக்கொண்டது. மக்களவையில் 85 ஆக இருந்த தனது உறுப்பினர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது. இடதுசாரி, சோஷலிஸ அரசியலே மையமாக இருந்த இந்தியச் சூழலில், இது முக்கியமான நகர்வாகும். விளைவு, வலதுசாரித் தரப்பு ஓர் அசைக்க முடியாத இடத்துக்கு வந்துசேர்ந்தது.

அதேபோல், 1991 தொடங்கி 2014 வரை எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மை இடங்களைப் பெற முடியாமல் போனது. இந்தக் காலகட்டத்தில், 39.53% இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்குச் சதவீதம் 19.31% ஆக, பாதியாகக் குறைந்துபோனது. 

இதற்கிடையில், 2014 தேர்தல்தான் இந்திய அரசியல் வரலாற்றில் மிகப் பெரும் அடிப்படை மாற்றம் நிகழ்ந்த தேர்தல். அந்தத் தேர்தலில் பாஜக 31% வாக்குகளுடன் 282 இடங்களை வென்று, முதன்முதலாக வலதுசாரிப் பெரும்பான்மை ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ் தனது வாக்குச் சதவீதத்தில் 9.24%ஐ இழந்து முதன்முறையாக 20%க்கும் குறைவாகச் சென்றது. 1977இல் ஜெயப்பிரகாஷ் நாராயண் காங்கிரஸுக்கு விளைவித்த நஷ்டத்தைவிட அன்னா ஹஸாரே மற்றும் குழுவினர் காங்கிரஸுக்கு விளைவித்தது அதிகம்.

இந்தியாவின் இயல்பான ஆளுங்கட்சி, அரசியல் நிலை எனக் காங்கிரஸ் இருந்தது மாறி, பாஜக அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டது. அதன் பிறகு, வலதுசாரி அரசியல் நிலைப்பாடு கொண்ட பாஜக, ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் உதவியோடு தன்னை அரசியல்ரீதியாகவும், பொருளியல்ரீதியாகவும் பலப்படுத்திக்கொண்டது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஆர்எஸ்எஸ் கண்டனத்தின் முக்கியத்துவம்

சஞ்சய் பாரு 16 Jun 2024

மோடி-ஷா: உயர்வும் சரிவும்

பாஜக 2019 தேர்தலில் 37.36% வாக்குகளைப் பெற்று, 303 இடங்களைக் கைப்பற்றியது. 2024 தேர்தலில், அதன் வாக்குச் சதவீதம் 36.56% எனச் சற்றே குறைந்து, 63 இடங்களை இழந்தது. அத்துடன், கூட்டணி ஆட்சியை அமைக்கும் இடத்துக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

இதில் 2024ஆம் ஆண்டு, வலதுசாரி அரசியல் தளத்தை உந்தித் தள்ளிக்கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டு ஆகும். இந்த நூறாண்டு கால வரலாற்றில், மோடி - அமித்ஷா கூட்டுத் தலைமை போன்ற ஒரு வெற்றிகரமான கூட்டணி இந்துத்துவத் தரப்பில் இருந்ததில்லை. இருவரும் இணைந்து மாபெரும் வெற்றிகளைக் கட்சிக்கு ஈட்டித் தந்திருக்கிறார்கள். இந்திய நாட்டை இந்து நாடாக மாற்றும் இலக்குக்கு மிக அருகில் கொண்டுசென்றிருக்கிறார்கள்.

ஆனால், 2024 தேர்தலில் மிகப் பெரும்பலத்துடன், ஊடகங்களை வளைத்தும், தேர்தலை தன் இஷ்டத்துக்கு நீட்டி வடிவமைத்தும், பெருஞ்செலவுகள் செய்தும், பாஜகவால் தனது வாக்குச் சதவீதத்தை உயர்த்த முடியவில்லை. மாறாக இந்துத்துவம் கோலோச்சும் வட மாநிலங்களில் அதன் வாக்குச் சதவீதம் குறைந்துள்ளது. 

மோடி - அமித்ஷா தலைமைக்கு அடுத்த நிலையிலிருக்கும் தலைவர்களான யோகி ஆதித்யநாத், நித்தின் கட்கரி, ராஜ்நாத் சிங் போன்றவர்களால், இன்று மோடி - அமித்ஷா கூட்டணி போல, பரந்து விரிந்த இந்திய அரசியல் தளத்தை மேலாதிக்கம் செய்து, இதேபோல தேர்தல்களை வெல்ல முடியுமா என்பது கேள்விக்குறி.

என்ன விதமான சமிக்ஞை இது? 

இந்திய அரசியல் செயல்பாட்டாளர்களில் மிக முக்கியமானவரான யோகேந்திர யாதவ், தனது கட்டுரை ஒன்றில், கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“பாஜகவின் ஆதரவு வீழ்ச்சி, மேலோட்டமாகத் தெரிவதைவிட உண்மையில் அதிகம். 2019, 2024 ஆகிய இரண்டு முறையும் பாஜக போட்டியிட்ட 399 தொகுதிகளில் கிட்டத்தட்ட 274 தொகுதிகளில் அதற்குக் கிடைத்த வாக்குகள் குறைந்துவிட்டன. மஹாராஷ்டிரம், ராஜஸ்தான், பிஹார், ஜார்க்கண்ட், ஹரியாணா, இமாச்சலம், பஞ்சாப், ஜம்மு – காஷ்மீரம் ஆகியவற்றில் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குகள் சரிந்துவிட்டன. 20% வாக்கு வித்தியாசத்தில் அது முன்னர் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 151லிருந்து வெறும் 77 ஆக சரிந்துவிட்டது.”

இந்தத் தேர்தல் முடிவுகளின் பின்னால் உள்ள செய்தியை பாஜக உள்வாங்கியிருக்கிறதா என்பதை உடனடியாக அனுமானிக்க முடியவில்லை. எனினும், மராத்திய மாநிலத்தில் பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ள மக்கள் நலத் திட்டங்களைப் பார்க்கும்போது கொஞ்சம் மாறுதல் இருப்பதாகத் தோன்றுகிறது. அதேசமயம், மத்தியில் உருவாக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லாதது, வேறொரு சமிக்ஞையைத் தருகிறது.

தேர்தல் அரசியலுக்காக, இலவசங்களைக் கொடுத்தாலும், நீண்ட கால நோக்கில் பாஜக தனது அடிப்படை அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாது எனக் கணிக்கலாம்.

பாஜக வாக்குச் சதவீதம் சரியத் தொடங்கியிருப்பது எந்தவொரு அரசியல் இயக்கத்துக்கும் இயல்பான ஒன்றுதான். தனது அணுகுமுறையில் பாஜக புதிய மாற்றங்களைக் கொண்டுவராமல், இந்த வாக்குச் சதவீதச் சரிவைச் சரிசெய்து ஆட்சிக்கு வருவது கடினம். 2029 தேர்தலில் 15 ஆண்டுகால ஆட்சியின் எதிர்மறை மனநிலை (anti-incumbency) வேறு சேர்ந்துகொள்ளும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்

காஞ்சா ஐலய்யா 09 Jun 2024

காத்திருக்கும் சவால்கள்

இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி, நவீன தொழில்நுட்பத்தை ஒரு மதம் போல முன்னெடுத்தார். கணினிமயமாக்கம், தடுப்பூசிகள், எழுத்தறிவு, தொலைத்தொடர்பு போன்ற தளங்களில் மிகப் பெரும் பாய்ச்சல்களை உருவாக்கினார். ஆனாலும், கட்சிக் கட்டமைப்பு, கட்சியின் நிர்வாக அமைப்பு போன்ற தளங்களில் கவனம் செலுத்தாமல், அதைச் சரியவிட்டார். 

காங்கிரஸ், 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தபோதும்கூட இந்தக் குறைபாட்டைச் சரிசெய்யவில்லை. 2014 முதலான பத்தாண்டுகளில் பெரும் போராட்டங்கள், பாத யாத்திரைகள் நடத்தி, பல மாநிலங்களில் ஆட்சிக்கு மீண்டும் வந்தாலும், காங்கிரஸின் வாக்குச் சதவீதம் பெரிதாக உயரவில்லை.

எனவே பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே, தங்களது அணுகுமுறையில் புத்தாக்க அணுகுமுறைகளை (Innovative Approach) முன்னெடுக்காமல், 2029 தேர்தல்களில் பெரிதான மாற்றங்களை உருவாக்க முடியாது.

உலகின் மிகப் பெரும் காலனியாதிக்க, ராணுவ சக்தியான ஆங்கிலேயரை எதிர்க்க, காந்தி முன்வைத்த அகிம்சை வழிச் சத்தியாகிரகம், ஒரு புத்தாக்க (Innovation) முயற்சி. இன்றைய அரசியல் சூழலில், இரண்டு கட்சிகளுக்குமே அது மிகவும் பொருந்தும் ஓர் உதாரணம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள் 

இந்துத்துவ நிராகரிப்பு அல்ல; பாஜக நிராகரிப்பு
2024 தேர்தல் முடிவு: 10 முக்கிய அம்சங்கள்
ஆர்எஸ்எஸ் கண்டனத்தின் முக்கியத்துவம்
எதிர்க்கட்சித் தலைவர்: ராகுலின் கடமைகள், உரிமைகள்
மக்கள் தீர்ப்பால் அடக்கப்பட்ட ‘தலைவர்’
சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்
காங்கிரஸ், பாஜக உள்ளுக்குள் எதிர்கொள்ளும் எதிர்க்குரல்கள்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3


பற்களின் பராமரிப்புசட்டப் பரிமாணம்அதிமுகவில் என்ன நடக்கிறதுநாலாவது கட்டம்மோகன் பாகவத்நீலகிரிஅம்பேத்கர் உரைஅமிர்த ரசம்பர்ஸாமூன்றாவது மக்களவைத் தேர்தல்ஜனநாயகம்சாராயம்வேற்சொற்களின் களஞ்சியம்உயர் சாதியினரின் கலகம்மாதாந்திர நுகர்வுச் செலவுஇந்து சமய அறநிலைத் துறைஅமெரிக்கப் பயணம்மது அருந்துவோர்தமிழகம்அருஞ்சொல் பேரறிவாளன் அற்புதம் அம்மாள்பிரதிட்ஷைகாந்தி பேச்சுகள் தொகுப்புதேசியத் தலைநகர அதிகாரம் யாரிடம்?Agricultureகொலஸ்ட்ரால்இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்சித்தராமய்யா கட்டுரைநல்வாழ்வுப் பொருளாதாரம்ஹிஜாப்: ஆதரவு – எதிர்ப்புஈனுலை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!