கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்

காஞ்சா ஐலய்யா
09 Jun 2024, 5:00 am
0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்திய அரசியல் முறையே பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு எதிராகத்தான் இருக்கிறது” என்ற மிகவும் துணிச்சலான கருத்தை பஞ்ச்குலா மாநாட்டில் மே 22ஆம் நாள் வெளியிட்டார். இந்திய அரசமைப்புச் சட்டத்தை கௌரவிப்பதற்காக நடந்த மாநாடு அது. “படிப்படியான சீர்திருத்தங்கள் மூலம் நிலைமையை மாற்ற வேண்டும், அப்படிப்பட்டச் சீர்திருத்தங்களுக்காக காங்கிரஸ் கட்சி இனிப் பாடுபடும்” என்றும் அறிவித்தார்.

“நாட்டு மக்களில் 90% ஆக உள்ள பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மதச் சிறுபான்மையினர் நாட்டின் வெவ்வேறு துறைகளில் தங்களுடைய எண்ணிக்கைக்கேற்ப உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கின்றனர். நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்புச் சட்டம் கூறினாலும் இருவேறு விதமான விதிகள் நடைமுறையில் அமலாகின்றன.”

“இந்த அமைப்பே அழுத்தப்பட்ட சாதிகளுக்கு எதிராக இருக்கிறது. முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் போன்றோர் அமைப்புக்குள்ளே இருந்து நிர்வாகம் செய்ததால், அது எப்படி இயங்குகிறது என்று நன்கு புரிந்துகொண்டிருந்தனர்!” என்றும் ராகுல் பேசினார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மோடியின் எதிர்ப்பாட்டு

ராகுலின் இந்தப் பேச்சை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். “காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசுகளே பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு எதிராகச் செயல்பட்டதை ராகுலே ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராகுலின் தந்தை, பாட்டி ஆகியோர் தலைமையிலான அரசுகளே தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராகச் செயல்பட்ட நிலையில், இப்போது மட்டும் அவரால் எப்படி அவர்களை ஆதரிக்க முடியும் என்று பாஜக ஆதரவு செய்தி ஊடகங்கள் இதைப் பற்றி கேள்வி எழுப்பின.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ராகுல் வசதி மோடிக்குக் கிடையாது: சமஸ் பேட்டி

25 Apr 2024

முற்போக்காவது எப்போது?

தான் வாழும் நாட்டின் சமூக – பொருளாதர முறைமையின் குறைகளைத் தெரிந்துகொண்டு, தன்னுடைய கருத்துகளை மாற்றிக்கொள்ளும்போதுதான் ஓர் அரசியல் தலைவர் முற்போக்காளராக மாற்றம் அடைகிறார். அப்போதுதான் ஜனநாயக முறைமையானது, சுரண்டப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நெருக்கமாகச் செல்ல முடியும். ஒருவேளை ராகுல் காந்தியும் பிரதமராக இருந்து, அவருடைய ஆட்சியிலும் இதே நிலை தொடர்வதை உணர்ந்து, அதைத் திருத்திக்கொள்ள முற்பட்டாலும் நாம் வரவேற்க வேண்டும்.

இந்தச் சமூக – பொருளாதார முறை இப்படியே தொடரும் நிலையில் ராகுல் காந்தியின் ஆரம்ப வாழ்க்கை எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

ராகுலின் வளர்ச்சி

இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், ராகுல் காந்தி சிறு குழந்தை. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, ராகுல் காந்தி பள்ளிக்கூடச் சிறுவன். நரசிம்மராவ் பிறகு வாஜ்பாய் போன்றோர் பிரதமர்களாகப் பதவி வகித்தபோது, ராகுல் வெளிநாட்டில் பல்கலைக்கழக மாணவர். பிறகு 2004ஆம் ஆண்டில்தான் பொது வாழ்க்கைக்கு வந்தார். காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமுறைமையை உள்ளுக்குள் இருந்து 2014 வரையில் பார்த்துக்கொண்டிருந்தார் ராகுல்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த பத்தாண்டு காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், அமைச்சர் பதவி எதையும் வகிக்கவில்லை. எப்படியாவது பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்திருந்தால் 2009இல் அவரே பிரதமராகவும் ஆகியிருக்க முடியும். அவர் அப்படிச் செய்யவில்லை. அரசு நிர்வாகத்தின் பழமையான முறைகளை எதிர்ப்பவராக இருந்திருக்கிறார்.

பொது வாழ்க்கையிலும் அரசு நிர்வாகத்திலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற கொள்கைக்கு முரணாக, அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில் அது சட்டமாகிவிடாமல் கிழித்தெறிந்தார். ஒருவேளை அந்த அவசரச் சட்டம் மட்டும் நிரந்தர சட்டமாக மாறியிருந்தால், பின்னாளில், “நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர்” என்று 2023இல் குஜராத் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு தண்டனையை வழங்கியிருக்கவே முடியாது.

இளைஞர்கள் போராட்டத்தில் ராகுல்

பாஜக தலைமையில் 2014இல் ஆட்சி அமைந்த பிறகும், மக்களுடைய பிரச்சினைகளில் அவர் சமரசமே செய்துகொள்ளவில்லை. மோடி அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார். நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர்களுடன் அமர்ந்து போராட்டத்திலும் கலந்துகொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்றால் அரசை நாடாளுமன்றத்தில் கண்டித்துப் பேசிவிட்டுப் பிறகு சாதாரண காலங்களில் கட்சிக் கூட்டங்கள், நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகள், பொதுக்கூட்டங்கள் என்று  வழக்கமான அரசியல் தலைவர்களைப் போல அவர் செயல்பட்டதில்லை. இளைஞர்கள் நிகழ்த்திய பல்வேறு போராட்டங்களில் நேரடியாகவே பங்கேற்றார்.

புணே நகரில் திரைப்படக் கழகத்துக்கு, அதிக அனுபவம் இல்லாத ஒருவரை இயக்குநர் பொறுப்பில் மோடி அரசு நியமித்தபோது அதை எதிர்த்து திரைப்படக் கல்லூரி மாணவர்களுடன் போராட்டத்தில் பங்கு கொண்டார். இதற்காக புணே சென்று அவர்களுடன் அமர்ந்தார். அப்போது அங்கு படித்த பாயல் கபாடியா, சமீபத்தில் நடந்த கான்ஸ் உலக திரைப்பட விழாவில் இந்தியாவுக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவர் ரோஹித் வேமுலா படுகொலை செய்யப்பட்டார். மாணவர்களுடைய போராட்டத்தால் இந்தியாவின் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் அதிர்ந்தன. ஹைதராபாதுக்குச் சென்ற ராகுல் காந்தி, அவர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு நாள் கலந்துகொண்டார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்

சமஸ் | Samas 12 Apr 2023

சாதியை உணர்தல்

மிகப் பெரிய அரசியல் குடும்பத்தின் வாரிசு என்ற அடிப்படையில் அவர் அரசியல் அதிகாரத்தைப் பெறவில்லை. மக்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக அவர்களுடைய போராட்டங்களில் தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்கிறார். சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறைத் தலைவர்களான காந்தி,  நேரு, படேல், அம்பேத்கர் போன்றோர் அப்படித்தான் நாட்டுக்காகப் போராடினர்.

மக்களுடைய உரிமைகளுக்காகப் போராடிய அவர்கள், காங்கிரஸ் கட்சியின் கிளைகளையும் இதர அமைப்புகளையும் உருவாக்கி அதிலிருந்து அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெற்று தலைமைத்துவப் பண்புகளைப் பெற்றனர். தேங்கிய நீராக அவர்கள் செயலற்று இருந்ததில்லை. மக்களுடைய போராட்டங்களில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு தங்களுடைய கண்ணோட்டத்தையும் போராட்ட வழிமுறைகளையும்கூட மாற்றிக்கொண்டனர்.

ராகுல் காந்தி 2023 – 2024இல் மேற்கொண்ட இரண்டு பாத யாத்திரைகளின்போது நாட்டின் சமூக – பொருளாதார முறைமையை அவர் புரிந்துகொண்டதற்கும் அதற்கும் முன்னால் அவர் தெரிந்துவைத்திருந்ததற்கும் நிச்சயம் அடிப்படையிலேயே பெரிய வேறுபாடு இருக்கிறது. அதற்கும் முன்னால் அவர் மற்றவர்களுடைய கருத்துகளையும் அனுபவங்களையும் கேட்டு அவ்வப்போது தன்னுடைய கருத்துகளையும் மாற்றிக்கொண்டார்.

ராகுலிடம் ஏற்பட்ட பெரும் மாற்றம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரிடம் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம் எதுவென்றால், இந்தியாவில் சாதிய அமைப்புமுறை எவ்வளவு பெரிய செல்வாக்கைச் செலுத்துகிறது, அதன் பாதிப்புகள் எப்படிப்பட்டவை என்பதையும் அதன் வேர் எங்கே இருக்கிறது என்பதையும் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் தன்னுடைய கொள்ளு தாத்தா (ஜவஹர்லால் நேரு), இந்தியாவில் சூத்திரர்கள் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலை குறித்து ஆராய்ந்து காகா கலேல்கர் அளித்த அறிக்கையை நிராகரித்தது தவறு என்று உணர்ந்திருக்கிறார். மண்டல் ஆணைய அறிக்கை தொடர்பான இந்திரா காந்தியின் மதிப்பீடும், மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்த 1990இல் ராஜீவ் காந்தி எதிர்த்ததும், இந்திய சாதி முறை குறித்துப் போதிய புரிதல்கள் இல்லாததால் என்றும் உணர்ந்திருக்கிறார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

புதிய ராகுல்

யோகேந்திர யாதவ் 17 Mar 2023

சுமையாக மாறிய கட்சி

டெல்லியில் மார்ச் 2013இன் இறுதிப் பகுதியில் ராகுலை நான் முதல் முறையாகச் சந்தித்தபோது, மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு ராகுலும் பாஜகவுக்கு பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும் முக்கியப் பிரச்சாரகர்கள். அதற்குள் ஆர்எஸ்எஸ் / பாஜக கூட்டமைப்பானது தங்களுடைய பிரதமர் வேட்பாளர், ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்’ (ஓபிசி) என்பதை நாடு முழுவதும் பரப்பியது.

நாட்டின் பல பகுதியில் - குறிப்பாக வட இந்தியாவில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மோடியைத் தங்களுடைய நம்பிக்கைக்குரியவராகப் பார்க்கத் தொடங்கினர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தானா என்ற கேள்வியை எழுப்பி தங்களுடைய பிரச்சாரத்தைத் தொடங்க காங்கிரஸ் கட்சியும் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எதிரியாகவே பார்ப்பது வழக்கம்.

இந்தச் சூழ்நிலையில் இந்தப் பிரச்சாரத்தை எப்படி முறியடிப்பது என்று காங்கிரஸுக்குப் புரியவில்லை. காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ‘ஓபிசி’ என்ற கோணத்திலான பிரச்சாரம் எந்த அளவுக்கு பாஜகவுக்கு கை கொடுக்கும் அல்லது காங்கிரஸுக்கு எதிராகப் போகும் என்றும் முடிவுசெய்யத் தெரியாமல் திகைத்தனர். ஆனால், அந்த ஒரு அம்சமானது, பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர்களில் கணிசமானவர்களைத் திருப்பியது.

எதையும் ஆழ்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுள்ள இளைஞராக ராகுல் இருந்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றுக்கொண்டிருக்கிறது என்பது அவருக்கு நன்கு புரிந்தது. நாட்டின் நன்மைக்காக தன்னுடைய கட்சியையே சீர்திருத்தவும் அதற்காக புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும் விரும்பினார். ஆனால், காங்கிரஸ் கட்சியே அமைப்புரீதியாக நொறுங்கிக்கொண்டிருந்த அந்த வேளையில், அவருடைய பொறுப்பானது நினைத்துப் பார்க்கக்கூட முடியாதபடிக்குப் பெரிய சுமையாகிவிட்டது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ராகுலாக இருப்பதன் முக்கியத்துவம்

சமஸ் | Samas 01 Mar 2023

புதிய நம்பிக்கை

நரேந்திர மோடியை ‘ஓபிசி’ என்று சித்தரித்ததின் மூலம், அரசு – கட்சி இரண்டையும் தங்கள் நோக்கத்துக்கேற்ப வளைத்துக்கொள்ள பாஜகவின் ‘இரு பிறப்பு சாதிக்காரர்’களான ஏகபோகவாதிகளுக்கு வசதியாகிவிட்டது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் ஆகியோரின் எதிர்காலத்தையே பாழாக்கும் வகையில், நாட்டின் முழுப் பொருளாதாரத்தையும் ‘தனியார்மயம்’ என்ற நடைமுறை மூலம் அவர்களிடம் ஒப்புக்கொடுத்துவிட்டார் மோடி. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அரசிடம் நன்மை பெற முடியாமல் விலக்கப்படுவது, ஓபிசி பிரதமரின் காலத்தில் வெகு விரைவாக நடந்துகொண்டிருக்கிறது. 

நாட்டின் தொழில் உற்பத்தியும் அடித்தளக் கட்டமைப்பு மூலம் உருவாகும் சொத்துகளும் தனியாரிடம் குவிகின்றன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர், பழங்குடிகளின் எதிர்காலத்தைச் சூனியமாக்கி, தொழிலதிபர் கௌதம் அதானி தன்னுடைய சொத்துகளைப் பலமடங்காக பெருக்கிக்கொண்டுவருகிறார். வட இந்தியாவில் வாழும் ‘ஓபிசி’கள் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் இருளடைந்துவருவதை உணர்ந்துவிட்டனர். 

இந்த நிலையில்தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், பட்டியல் இனத்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி 2024 மக்களவை பொதுத் தேர்தலுக்காகத் தயாரிக்க வைத்தார். இந்த அறிக்கைக்குக் காங்கிரஸ் கட்சியிலேயே இருக்கும் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் ராகுல் காந்தி விடாப்பிடியாக அதை ஆதரித்து ஏற்கவைத்தார். ராகுல் காந்தி தொடர்ந்து புதிய கருத்துகளை ஏற்றும் பாடங்களைப் படித்தும் தன்னை வளர்த்துக்கொண்டுவருகிறார்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

தமிழகத்திலிருந்து ராகுலுக்கு சில பாடங்கள்

சமஸ் | Samas 30 Mar 2022

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆற்றல் மிக்க மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் – பிரியங்கா ஆகியோரின் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், பட்டியல் இனத்தவர், பெண்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

தேர்தல் முடிவு எப்படியானாலும், ஏழைகளுக்கு - குறிப்பாக பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக தான் தொடங்கிய சமூக – பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகளை ராகுல் காந்தி இனியும் தொடர வேண்டும்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

ராகுல் வசதி மோடிக்குக் கிடையாது: சமஸ் பேட்டி
தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்
ராகுலின் பாதை காந்தியின் பாதையா, நேருவின் பாதையா?
சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்
புதிய ராகுல்
ராகுலாக இருப்பதன் முக்கியத்துவம்
தமிழகத்திலிருந்து ராகுலுக்கு சில பாடங்கள்
காங்கிரஸுக்குத் தேவை புதிய கனவு!
ரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்
ஒரு காந்தியின் வருகையும் ஒரு காந்தியின் புறப்பாடும்
விளிம்புநிலை மக்களிடம் ராகுலுக்கு ஆதரவு
காங்கிரஸுக்குப் புத்துயிர் ஊட்டுவது எப்படி?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
காஞ்சா ஐலய்யா

காஞ்சா ஐலய்யா, தெலங்கானாவைச் சேர்ந்த பேராசிரியர். அரசியல் விமர்சகர். சாதி ஒழிப்பு, சமூகநீதி தொடர்பில் தொடர்ந்து தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் எழுதிவருபவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4


திருவொற்றியூர் விபத்துபாண்டியர்கள்பண்டைத் தமிழ்நாடுஅறிவியல் தமிழ்இளம் பிரதமர்வரலாற்றிற்குள் எல்.இளையபெருமாள்பாலஸ்தீனம்திலீப் மண்டல் கட்டுரைகால்பந்து வீரர்காவேரி கல்யாணம்நேருவின் தேர்தல் பரப்புரைகள்ஆரியம்மேலாண்மைநேரு வெறுப்புசந்திப்புசட்டப்பேரவை கூட்டத் தொடர்ஏபிபி - சி வோட்டர்அவுனிசமஸ்தானங்கள்சூர்யாஅடக்கம் அவசியம்பெரியாரும் வட இந்தியாவும்பல் சந்துதனித் தொகுதிகள்குளோக்கல்பூர்வாஞ்சல்பேரறிவாளன்அடிப்படைச் செயலிகள்இலங்கை தமிழர்கள்சாதிகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!