கட்டுரை, அரசியல், சர்வதேசம் 10 நிமிட வாசிப்பு

ரிஷி சுனக்: திறக்கும் கதவுகள்

கார்த்திக் வேலு
02 Nov 2022, 5:00 am
0

பிரிட்டனின் முதல் தெற்காசிய வம்சாவளியைச் சார்ந்த பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்கிறார் என்ற செய்தி இந்தியர்களிடையே பெரும் கிளர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. ஒரு தரப்பு அவரை இந்தியர் என்று அடையாளப்படுத்த, மற்றொரு தரப்பு அவரை ஓர் இந்து என்று அடையாளப்படுத்தி உவகை கொள்கிறது. இவற்றுக்கு எதிர்வினையாக இன்னொரு தரப்பு அவர் இந்தியரே அல்ல பிரிட்டனிலேயே பிறந்து வளர்ந்தவர் என்று வாதிடுகிறது. பிரிட்டனைச் சார்ந்த பலருக்கு அவர் ஆசியர், மீறிப்போனால் பழுப்பு நிற தெற்காசியர். இந்தியப் பின்புலம் கொண்டவர் (heritage) என்று சொல்வதற்கு உள்ளூர ஒரு தயக்கம். அது உருவாக்கும் எதிர்காலனிய சித்திரம் அசெளகரியத்தை அளிக்கிறது. 

ரிஷி சுனக் குறித்து பேசும் முன்னர் அவரை இந்தப் புள்ளி வரை உந்தித் தள்ளி வந்த விசைகள் எவை என்று புரிந்துகொள்வது நல்லது. இந்த வரைபடத்தைப் புரிந்துகொண்டால் அவர் இங்கிருந்து எங்கு செல்ல முடியும் அல்லது முடியாது என்பதையும் ஓரளவு ஊகிக்கலாம். 

ரிஷிக்கு வாய்ப்பு அமைந்தது எப்படி? 

சமகால பிரிட்டனின் சிக்கலுக்கான விதை 2016இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தன்னை துண்டித்துக்கொள்வதில் ஆரம்பிக்கிறது. ஐரோப்பிய நாடுகள் இரண்டாம் உலகப் போருக்கு பின்னான வளர்ச்சி காலகட்டத்தில் ஒன்றாக இணைந்திருப்பதன் வலிமையை உணர்ந்து நெருக்கமாக உறவுகளை அமைத்துக்கொண்டன. இந்த நெருக்கம் அமைப்புரீதியாக ஐரோப்பிய ஒன்றியம் என்ற வடிவை 1993இல் அடைந்தது. அரசியல் மற்றும் பொருளாதார ஒருங்கிணைவை முன்வைத்து இது உருவாக்கப்பட்டது. 

இதில் சிக்கல் 2004 வாக்கில் இந்த அமைப்பு மெல்ல விரிவடைய ஆரம்பிக்கும்போது ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் புதிதாக சேர்ந்துகொண்ட மால்டா, சைப்ரல் போன்ற நாடுகள் பிரிட்டனைப் போன்றோ ஜெர்மனியைப் போன்றோ அதே அளவு செழிப்பான நாடுகள் அல்ல – ஏழைச் சகோதர்கள். இது பிரிட்டனில் ஒரு சாரார் இடையே அதிருப்தியை உருவாக்கியது. ஏழை நாடுகளை ஒன்றியத்தில் சேர்த்துக்கொண்டால் அங்கிருந்து வேலை தேடி பலர் பிரிட்டன் வருவார்கள். அதேபோல புதிய தொழில்கள், உற்பத்திச் செலவு குறைவு என்பதால் அங்கு போக ஆரம்பிக்கும். காலப்போக்கில் பிரிட்டன் பத்தோடு பதினொன்றாக எல்லோரையும்போல மற்றொரு ஐரோப்பிய நாடு என்றாகிவிடும் என்ற அச்சம் கிளம்பியது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் மெல்ல வலுப்பெற ஆரம்பித்தது. குறிப்பாக,  வலதுசாரி தரப்பில். 

இந்த ஒரு கொள்கை முரணை மட்டும் வைத்துக்கொண்டு ஆளும்கட்சிக்குள்ளேயே பிளவு உண்டாகும் அபாயம் ஏற்பட்டது. இதைக் கையாள வேறு வழி இல்லாமல் இதுகுறித்து மக்கள் கருத்து கணிப்புக்கு அன்றைய பிரதமர் கேமரூனும் ஒப்புக்கொள்கிறார். சிறிய அளவு வாக்கு வித்தியாசத்தில் பிரெக்ஸிட் திட்டம் மக்கள் ஆதரவைப் பெறுகிறது. ஆனால், இதை அமல்படுத்துவதில் கேமரூனுக்கும், அவர் பின் வந்த தெரிசாவுக்கும் பல தடங்கல்கள் இருந்தன. இருவராலும் இந்தத் திட்டத்தை சரியாக அமல்படுத்த முடியவில்லை. போரிஸ் ஜான்சன் பதவிக்கு வந்ததே இந்த பிரெக்சிட் விலகலை அமல்படுத்துவேன் என்ற உறுதிமொழியின்பேரில்தான். 

2016இல் பிரெக்ஸிட் நிகழ்ந்தது. ஆனால், பெரும் குழப்பங்களுடனும் இழப்புகளுடனும். ஒரு கையை வெட்டி எடுப்பதுபோல பெரும் பொருளாதார வலியையும் ரணத்தையும் உருவாக்கியது. பிரெக்ஸிட் விலகலுக்குப் பின் பிரிட்டனின் பொருளாதாரம் பெருத்த நெருக்கடியைச் சந்தித்தது. வழக்கமாக பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பொருட்கள் 20%-30% விலை கூடுதல் ஆயின. பிரிட்டன் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும்  பொருட்கள் இதைவிடவும் விலை கூடின. இதனால், பல நிறுவனங்கள் பிரிட்டனில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்க்க ஆரம்பித்தனர். அரசு அமைச்சகமே அறிவித்தபடி பிரிட்டனின் ஜிடிபி இதனால் 4% அடிவாங்கியது. ஐரோப்பாவுடன் பிரிட்டனின் வர்த்தக உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போரீஸ் ஜான்சனால் பிரெக்ஸிட்டை அமல்படுத்தியதைத் தவிர உருப்படியாக பிரிட்டனின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தும்படி எதுவுமே செய்ய முடியவில்லை. 

போரீஸ் ஜான்சனின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர்தான் ரிஷி சுனக். வலதுசாரி பொருளாதார நோக்கு கொண்டவர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிக் குறைப்பை உறுதிசெய்யும் ஒரு திட்டத்தை இறுதி வடிவத்துக்குக் கொண்டுவந்ததில் முக்கியமானவர். ஆனால், கோவிட் பெருந்தொற்று சமயத்தில் பொருளாதாரத்தை நலத் திட்டங்கள் மூலம் ஓரளவு திறம்படவே சமாளித்தார். அதில் உருவாகிய ஒரு நன்மதிப்பு அவர் மேல் படிந்திருந்தது. 

பின்னர் பல்வேறு நிர்வாகக் குறைபாடுகளால் போரீஸ் ஜான்சன் பதவி விலக நேர்ந்தபோது ரிஷி சுனக்கையும் பிரதமர் பதவிக்குப் போட்டியாளராக அடையாளப்படுத்த இந்த நன்மதிப்பும் உதவியது. பிரதமர் மாற்றம் என்பது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் ஒன்று. எனவே, அந்தத் தேர்வில் கடைசி கட்டம் வரை வந்தாலும் 20 ஆயிரம் சொச்ச வாக்குகளில் ரிஷி அந்த வாய்ப்பை இழந்தார். அந்த வாய்ப்பு அதிகம் அறியப்படாத லிஸ் டிரஸ்ஸுக்குச் சென்றது. 

லிஸ் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையைக் கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் விலைவாசி (inflation) மேலும் உயரும்படி திட்டங்களைக் கொண்டுவந்தார். பங்குச் சந்தை சரிந்தது, பிரிட்டனின் மத்திய வங்கி தலையிட்டு பொருளாதார நிலைமையை ஸ்திரபப்டுத்தும்படி ஆனது. சூழலை சமாளிக்க முடியாமல் வெறும் 44 நாட்களில் டிரெஸ் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. 

இந்தப் புள்ளியில்தான் முதல் முயற்சியில் கைநழுவிப் போன பிரதமர் பதவி  ரிஷி சுனக்கிற்குக் கிடைக்கிறது.  

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன்: தமிழ்ச் சன்னதம்

சமஸ் 11 Oct 2022

குறைவான அவகாசம்

தமிழகச் சூழலுடன் ரிஷி சுனக்குக்கான ஒப்புமை தேடிப் பார்ப்போம் என்றால் ஜெயலலிதா மறைவுக்கும் பின் ஓபிஸ், ஈபிஸ் முதல்வர் ஆனதுக்குச் சமம். நேரடியாக ரிஷி சுனக் பிரதமர் வேட்பாளராக நிறுத்தி கன்ர்வேடிவ் கட்சி தேர்தலில் வெல்வது என்பது சாத்தியமே இல்லை. தற்சமயம் ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் வைத்தால் கன்சர்வேடிவ் கட்சியேகூட ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியாது. கடந்த 12 வருடங்களாக அதிகாரத்தில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் செயல்பாடுகளின் மேல் மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது. 

பிரெக்ஸிட் உருவாக்கிய பொருளாதார நிலைக்குலைவை, கோவிட் முடக்கம் மேலும் அதிகரித்தது, உக்ரைன் யுத்தம் அதை இன்னுமே இருண்ட ஆழத்துக்குள் தள்ளியிருக்கிறது.  இன்னொரு வகையில் சொன்னால் ரிஷி பிரெக்ஸிட்டின் பிள்ளை. பிரெக்ஸிட் இல்லாமல் போயிருந்தால் இன்று ரிஷி பிரிட்டனின் பிரதமர் ஆகியிருக்க முடியாது. ஆனால், இதுவே ரிஷி சுனக்கின் மீதான பெரும் சுமையும்கூட. 

ஒருபுறம் பொதுமக்கள் ஆதரவு சரிந்துகொண்டிருக்கும் கட்சியில் இருப்பது. மற்றொருபுறம் இந்தப் புள்ளியில் இருந்து பிரிட்டனின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவது பொறுப்பைச் சுமப்பது என்பது எளிய விஷயமே அல்ல. ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்து ஒரே அமைப்பாக வர்த்தகத்தில் ஈடுபட முடியாத பிரிட்டன், உலகின் பிறநாடுகளுடன் சுமூகமாக பொருளாதார வர்த்தக உறவுகளைத் தொடர முடியும் என்பது அவ்வளவு எளிதல்ல. 

ரிஷி சுனக்கிற்குத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு சிறிய கால அவகாசமே உள்ளது. அவர் எதிர்கொள்ள வேண்டிய  சவால்களோ மலைபோல அவர் முன் எழுந்து நின்றிருக்கின்றன. 

உலக அளவில் இந்திய அடையாளம்

மேலே சொன்னவையெல்லாம் ரிஷி சுனக் இங்கிலாந்திற்கு என்னவாக இருக்கிறார் என்பதை மையப்படுத்தியவை. போலவே அவர் இந்தியர்களுக்கு என்னவாக இருக்கிறார் என்பதும் முக்கியமானது. உலக மக்கள்தொகையில் தோராயமா ஆறில் ஒருவர் இந்தியராக இருப்பார். இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்தியர்கள் மற்றும் அவர்களது  வழித்தோன்றல்கள் (Heritage) என்று  கணக்கில் கொண்டால் மொத்தம் மூன்று கோடிக்கும் மேலே வரும்.

பிரிட்டனில் வசிக்கும் தெற்காசியர்களை மட்டும் கணக்கில் கொண்டால்கூட பிரிட்டனின் மக்கள்தொகையில் 5% வருவார்கள். உலக அளவில் இந்திய அடையாளம் என்பது இப்போதுதான் தட்டுத்தடுமாறி தனக்கான இடத்தை உருவாக்க முயல்கிறது. ஒப்புநோக்க சீனா உலகளாவிய சீன அடையாளம் என்பதை நம்மைவிட வலுவாக நிலைநிறுத்திக்கொண்டுவிட்டது. 

இந்தியர்கள் பெரும்பாலும் தத்தமது தொழில் பண்பாடு மற்றும் கலை சார்ந்த விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அரசியல், ஊடகம் போன்ற பொதுவெளி ஏற்பு தளங்களில் பெரிதாக ஒரு அடையாளத்தை இன்னும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. கார்ப்பரேட் தளங்களில் இந்த நகர்வு மெல்ல ஏற்பட்டுள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், பெப்சி, ட்விட்டர் போன்ற பெரும் நிறுவனங்களில் தலைமை பதவிக்கு வரும் சூழலை உருவாகியுள்ளது.

இவ்வகை நிகழ்வுகள் கார்ப்பரேட் அடுக்குகளில் கீழ்மட்டங்களிலும் உள்ள ‘கண்ணாடிக் கூரை’களைத் தகர்த்த ஆரம்பித்திருக்கிறது. இந்த மாற்றங்கள் இந்தியர்கள் கார்ப்பரேட் உயர் பதவிகளுக்குச் செல்லும் பாதையைச் சற்றே எளிதாகியிருக்கிறது எனலாம்.  ஆனால், சமூக தளங்களில் இதே வகை ஏற்பு அல்லது வாய்ப்பு இன்னும் உருவாகவில்லை. குறிப்பாக ஊடகங்களில் இந்தியர்கள். தெற்காசியர்களின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது. ஒரு தரப்பின் குரல் ஊடகங்களில் வெளிப்படாவிட்டால் அதன் சமூக ஏற்பு நிகழ்வதில் பெரும் தடைகளை உருவாகும் என்பதை கண்கூடாக காணலாம்.

அரசியலில் இவ்வகை ஆர்வங்களும் வாய்ப்புகளும் இன்னும்கூட குறைவாகவே உள்ளன. இந்த இரண்டு துறைகளில் ஆரம்ப கட்டத்தில் உள்ளே நுழைவதே சவாலான ஒரு விஷயம். அப்படியே உள்ளே போனாலும் ஒரு குறிபிட்ட எல்லைக்குள் மட்டுமே இயங்க சூழல் நிலவுகிறது. சில இடங்களில் கவுன்சிலர் ஆகலாம் மிக அரிதாக எம்.பி ஆகும் வாய்ப்பு கிடைக்கும். 

பாகிஸ்தானிய பின்னணியில் இருந்து வந்த ஒருவர் லண்டன் மேயரானது அமெரிக்காவிலேயே பெருத்த சலசலப்பை உருவாக்கியது. சமீபத்தில் கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் ஆனபோது, குறியீட்டுரீதியாக இன்னும் ஒருபடி நகர முடிந்தது. துணை அதிபர் என்பது பெரிய அதிகாரங்கள் ஏதுமற்ற பணி என்றாலும் அந்த பதவியின்  வெளிச்சமும் குறியீடும் முக்கியமானது தற்போது ரிஷி சுனக் அடைந்திருக்கும் பிரதமர் பதவி என்பது முதன்முறையாக தெற்காசியப் பின்புலத்தின் வந்த ஒருவர் மேலை நாடுகளில் ஏற்கும் மெய்யான அதிகாரம் கொண்ட பணி. 

ரிஷியின் சவால்கள் என்ன? 

ரிஷி தன்னை இந்தியராக கருதுகிறாரா, இந்தியர்கள் அவரை இந்தியராகக் கருதுகிறார்கள் என்பதெல்லாம்கூட இங்கு முக்கியம் இல்லை. உலகத்தின் பார்வையில் அவர் இந்தியர் என்றே அடையாளம் காணப்படுவார். அவர் இந்துத்துவ ஆதரவு நிலைப்பாடு கொண்டவரா என்பதுகூட இங்கு பெரிதாகப் பொருட்படுத்தக்க விஷயம் அல்ல. அவர் அதை வைத்துக்கொண்டு பிரிட்டனில் அரசியல் செய்ய முடியாது. பொருளாதாரச் சிக்கலை எப்படி கையாளுவார் என்பதை வைத்தே இவரை மதிப்பிடுவார்கள். அதை வைத்துக்கோடு இந்திய அரசியலிலும் பெரிதாக செல்வாக்கை செலுத்த முடியாது. வெளியுறவுத் துறை கொள்கைகளில் தற்போது இருக்கும் நிலைப்பாட்டுக்கு வெளியே அவரால் பெரிதாக எதையும் முடிவு செய்ய முடியாது. ‘சாப்ட் டிப்ளமஸி’ (Soft diplomacy) என்ற அளவில் சில தொழில்சார் வலைப்பின்னல்களை வாய்ப்புகளை உருவாக்கி அளிக்கலாம் அவ்வளவுதான்.

தற்போது ரிஷியின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் முக்கிய விஷயம் உடனடியாக தனது ஆதரவைக் கட்சிக்குள் எப்படி உறுதிசெய்துகொள்வது, மிகச் சவாலான ஒரு பொருளாதார சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதாகவே இருக்கும். ரிஷி ஒரு கன்சர்வேடிவ், ஆனாலும் கோவிட் பெருந்தொற்று சமயத்தில் தனது கட்சி நிலைப்பாடுகளைப் பிடித்து தொங்கிக்கொண்டிராமல் பெருந்தொற்றை சமாளிக்க என்னவித திட்டங்கள் சரியாக இருக்குமோ அவைகளை முன்னெடுத்தார். ஆனால், மேற்சொன்ன அழுத்தங்கள் அவரை இன்னுமே ஒரு கன்சர்வேடிவாக காட்டிக்கொள்ளும் ஒரு அழுத்தத்தை உருவாக்கலாம். 

‘மார்டன் டைம்ஸ்’ (Modern times) என்ற சார்லி சாப்ளின் படம் ஒன்று உள்ளது. அதில் ஒரு காட்சியில் வேலை செய்துகொண்டே அந்த இயந்திரத்தின் உள்ளே சென்று அதன் பல்வேறு பற்சக்கரங்களுக்கு இடையே மாட்டிக்கொள்வார். ஒன்றை ஒன்று நகர்த்தும் பல்வேறு பற்சக்கரங்களைக் கொண்ட ஒரு இயந்திரத்துக்குள் ரிஷி மாட்டிக்கொண்டிருக்கிறார். அதை உலகமே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பற்சக்கரங்களுக்குத் தப்பி அந்த இயந்திரத்துக்கும் சேதாரமல் இல்லாமல் அவர் வெளியே வந்துவிட்டாலே அது பெரிய சாதனையாக இருக்கும். அடுத்த தேர்தல் வரைக்கு ரிஷி தாக்கு பிடிப்பார் என்றாலே அது வெற்றிதான். அவரின் வெற்றி, குறியீட்டுரீதியாக பல இந்தியர்களுக்கு வேறு பல கதவுகளைத் திறப்பதாக அமையும்!

 

தொடர்புடைய கட்டுரை

ரிஷி சுனக் கதையும் சவாலும்

கார்த்திக் வேலு

கார்த்திக் வேலு, எழுத்தாளர். ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியில் வசிக்கிறார். அரசுத் திட்டங்கள், வெளியுறவுத் துறை விவகாரங்கள் தொடர்பில் எழுதுகிறார்.


2


அதிகம் வாசிக்கப்பட்டவை

நடராசன்கூடாரவல்லிஇந்துத்துவத்தின் இத்தாலியத் தொடர்புபயணம்தமிழ் புலமைகதிர்வீச்சு சிகிச்சைஃபின்னிஷ் மொழிமதவாதம்சாவர்க்கரின் முஸ்லிம் வெறுப்புசமஸ் நயன்தாரா குஹாஇங்கிலீஷ் ஆட்சிஅ.முத்துலிங்கம்அடையாளச் சின்னங்கள்டிராகன்விலைவாசிகாலனிய கலாச்சார மேலாதிக்கம்கூகுள் ப்ளேஸ்டார்இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்தேசிய தலைமை103வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் – 2019பக்ஷி அமித் குமார் சின்ஹா கட்டுரைகலைஞர் சமஸ்யுஏபிஏசாவர்க்கர் வாழ்வும் நூல்களும்விசிலூதிகளுக்கான பாதுகாப்பு என்னசட்டப் பரிமாணம்5ஜி நெட்வொர்க்இந்திரா காந்திசர்வாதிகார அரசியல்‘பிஎஸ்ஏ’ பரிசோதனை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!