கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

மக்கள் தீர்ப்பால் அடக்கப்பட்ட ‘தலைவர்’

ராமச்சந்திர குஹா
16 Jun 2024, 5:00 am
0

ராண்டுக்கு முன்னால் எழுதிய அரசியல் கட்டுரையில், இந்திய ஜனநாயகத்தை புதுப்பிப்பது குறித்து பெருத்த எதிர்பார்ப்புடன் சிலவற்றைக் குறிப்பிட்டேன்; “அடுத்த மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை வலு கிடைத்துவிடக் கூடாது, அதிக தொகுதிகளில் வெல்லும் முக்கிய கட்சிக்குக்கூட பெரும்பான்மை வலு இருக்கக் கூடாது. நம்முடைய பிரதமர் (நரேந்திர மோடி) சுபாவமாகவே யதேச்சாதிகாரம் மிக்கவர், அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு மட்டுமே தனிப் பெரும்பான்மை கிடைத்ததால் அவருடைய குணாதிசயம் மேலும் மோசமாகும்.”

ஆய்வாளரின் கடிதங்கள்

என்னுடைய குறைந்தபட்ச ஆசைகூட நிறைவேறாது என்ற நிலைமையே 2023 ஜூலையிலும் அதற்குப் பிறகு சில மாதங்களாகவும் தொடர்ந்தது. ‘ஃபாரீன் அஃபேர்ஸ்’ என்ற பத்திரிகைக்கு 2024 பிப்ரவரியில் எழுதிய கட்டுரையில், பிரதமரின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்திருந்தேன். பிரதமர் பதவியிலிருந்து மோடியை அகற்றுவதற்குப் பெரும் முயற்சி தேவைப்படும்; இப்போதைக்கு பாஜகவுக்குக் கிடைக்கும் இடங்களாவது குறையும் என்று எதிர்பார்ப்பதுதான் நம்முடைய ஒரே நம்பிக்கை என்று தெரிவித்திருந்தேன்.

அந்த மாதத்தின் இறுதியில் ஒரு பத்திரிகையின் நிருபர் என்னைத் தொடர்புகொண்டு, ‘நீங்கள் எல்லாம் நினைப்பதைப் போல நாடாளுமன்றத்தில் பாஜகவுக்குப் பெரும்பான்மை குறைவது மட்டுமல்ல, ஆட்சியையே இழக்க வைத்துவிடும் எதிர்க்கட்சிகள் கூட்டணி’ என்று குறிப்பிட்டார்.

அப்படிக் கூறியவர் அனில் மகேஸ்வரி, வட இந்தியாவைக் குறித்து தொடர்ந்து பல பத்தாண்டுகளாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். தற்கால வரலாறு குறித்து சில புத்தகங்களும் எழுதியுள்ள அவர், இந்தியத் தேர்தல்கள் குறித்து இன்னொரு எழுத்தாளருடன் சேர்ந்து பதிப்பித்த ஆய்வு நூல், ‘வாக்குச் சீட்டின் ஆற்றல்’ (The Power of the Ballot) என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அனிலின் கடிதங்கள்

பிப்ரவரி 25இல் அனில் மகேஸ்வரி எனக்குக் கடிதம் எழுதினார். ‘உங்களுடைய அச்சம் (பாஜகவுக்குப் பெரும்பான்மை குறையாது) தவறானது. கள நிலைமையைப் பார்த்தால் – இடதுசாரிகள் / சுதந்திரத்தை வலியுறுத்துகிறவர்கள் அனைவருமே பார்க்கத் தவறும் ஒரு விஷயம் - இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 230 அல்லது அதை ஒட்டித்தான் தொகுதிகள் கிடைக்கும்’ என்று கணித்திருந்தார்.

ஒரு வாரம் கழித்து அவரே இன்னொன்றையும் குறிப்பிட்டார்: “இயல்பாகவே சர்வாதிகார மனப்பான்மை கொண்ட மோடி, திட்டவட்டமாக முடிவெடுக்க முடியாமல் இப்போது திணறுகிறார். மக்களவையில் பல பாஜக உறுப்பினர்களுக்கு இன்னொரு முறை வாய்ப்பு கிடையாது என்று சொல்ல மறுக்கிறார், இதனாலேயே பாஜக வெல்லக்கூடிய இடங்கள் 230 ஆகத்தான் இருக்கும் என்கிறேன்” என்றார்.

மார்ச் 18இல் மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். “பாஜகவுக்கு 230 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று திட்டவட்டமாகக் கூறுகிறேன், உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 30இல் மட்டும்தான் பாஜக வெற்றி பெறும். பாஜகவுக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். பாஜக ஆதரவாளர்கள் மிகுந்த ஆணவத்தோடு செயல்படுகிறார்கள். ராகுல் காந்தியின் அரசியல் ஆற்றல் குறித்து எனக்கு சில ஐயங்கள் இருந்தபோதிலும், இப்போது மக்களை அதிக எண்ணிக்கையில் கவரும் எதிர்க்கட்சித் தலைவராக அவர் மட்டுமே இருக்கிறார்” என்று பதிவிட்டார்.

மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே தேர்தல் முடிவைக் கணித்துவிட்டார் மகேஸ்வரி. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த பிறகே சில அரசியல் விமர்சகர்கள், ‘பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று தவறாக நினைக்கிறார்கள்’ என்று எழுதினர். இப்படிப் பொதுவெளியில் பாஜகவுக்கு எதிராக எழுதியதற்காக இப்போது சிலர் பாராட்டும் பெறுகின்றனர். பலருக்கு இப்படியொரு உள்ளுணர்வு இருந்தது என்பதைத் தெரிவித்து நானும் பாராட்ட விரும்புகிறேன்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்

காஞ்சா ஐலய்யா 09 Jun 2024

கூட்டணி ஆட்சியின் முக்கியத்துவம்

‘பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்துவிடக் கூடாது, எந்த அரசாக இருந்தாலும் அது கூட்டணி அரசாகத்தான் இருக்க வேண்டும்’ என்று 2023 ஜூலையில் எழுதிய நான், அதற்கான காரணங்களையும் கூறியிருந்தேன்: “இந்தியா பல்வேறுபட்ட மக்களைக் கொண்ட மிகப் பரந்த - பெரிய நாடு. அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை கலந்தும் அவர்களுடைய ஒத்துழைப்பை பெற்றும்தான் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்கள் ஆளுங்கட்சிக்குக் கிடைத்துவிட்டால் அது அவர்களிடையே அகங்காரத்தையும் ஆணவத்தையும்தான் வளர்க்கிறது. அந்த ஆட்சியில் பிரதமராக இருப்பவர் அமைச்சரவையில் இருக்கும் சகாக்களைக்கூட மதிப்பதில்லை, எதிர்க்கட்சியினருக்கு மரியாதை தருவதில்லை, ஊடகங்களை அடக்கி வைக்கவே பார்க்கிறார், அரசமைப்புச் சட்டம் மூலம் உருவாக்கப்பட்ட அரசு அமைப்புகளின் சுதந்திரத்தன்மையைக்கூட மதிக்க மறுக்கிறார், மாநிலங்களின் நலன்களையும் உரிமைகளையும் காக்க மறுக்கிறார், அதிலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் கிள்ளுக்கீரையாகவே கருதுகிறார்” என்று குறிப்பிட்டிருந்தேன்.

இப்படி எழுதியதற்குக் காரணம், வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்தான். நாடாளுமன்றத்தில் மிதமிஞ்சிய பெரும்பான்மை இருந்தால் சர்வாதிகாரப் போக்குதான் ஏற்படுகிறது என்பதை இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் பார்த்திருக்கிறேன்.

கூட்டணி அரசுகள் ஆட்சியில் இருந்தபோது பத்திரிகைகள் எப்படிச் சுதந்திரமாகச் செயல்பட்டன, நீதித் துறை எப்படிக் குறுக்கீடுகள் இல்லாமல் செயல்பட்டது, கூட்டாட்சித் தத்துவமும் செயல்பாடும் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தன, நாட்டை நிர்வகிக்க வேண்டிய கட்டுப்பாட்டு அமைப்புகள் எப்படி ஆள்வோரின் நெருக்குதலின்றித் தங்களுடைய வேலையைச் சரியாகச் செய்தன என்பதையெல்லாம் பார்த்தும் படித்தும் தெரிந்துகொண்டிருக்கிறேன்.

1989 தொடங்கி 2014 வரையில் மக்களவையில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை வலு இல்லை. இந்தக் காலகட்டத்தில் நாடு ஏழு பிரதமர்களைப் பார்த்தது. அவர்களில் விசுவநாத் பிரதாப் சிங், சந்திரசேகர், எச்.டி.தேவ கௌடா, இந்தர் குமார் குஜ்ரால் ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே பிரதமர் பதவியில் இருந்தனர். அதேசமயம், இதே காலகட்டத்தில் மூன்று பிரதமர்கள் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலம் ஆட்சிசெய்தனர், அவர்கள் முறையே பி.வி.நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?

ப.சிதம்பரம் 09 Jun 2024

பட்டியலில் சேர்ந்த மோடி

மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடி இப்போது இந்தப் பட்டியலில் சேர்ந்துவிட்டார், சொந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை வலு இல்லாத நிலையில், பிரதராகியிருக்கிறார். அவருக்கு முன்னால் இந்தப் பதவியில் இருந்த மூவரும் தங்களுடைய குணநலன், அனுபவம் காரணமாக மக்களிடமும் பிற அரசியல் கட்சிகளிடமும் ஆதரவு பெற்று நன்றாக நிர்வகித்தனர், மோடி அப்படிப்பட்டவர் அல்ல.

பிரதமராகப் பதவி ஏற்பதற்கு முன்னால் இந்திரா காந்தி அரசிலும் ராஜீவ் காந்தி அரசிலும் நீண்ட காலம் அமைச்சராக இருந்து நல்ல அனுபவம் பெற்றிருந்தார் நரசிம்ம ராவ். மொரார்ஜி தேசாய் தலைமயிலான ஜனதா அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக நன்றாக செயல்பட்ட அனுபவம் வாஜ்பாய்க்கு இருந்தது. மன்மோகன் சிங்கும் நரசிம்ம ராவ் அரசில் நிதியமைச்சராக இருந்து அனுபவம் பெற்ற பிறகே பிரதமர் பதவிக்கு வந்தார். நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் மூவருமே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த அனுபவமும் பெற்றிருந்தனர்.

ஆர்எஸ்எஸ் தொண்டராகவும் பிறகு பாஜகவில் நிர்வாகியாகவும் இருந்தபோது வெவ்வேறு தரப்பு மக்களுடன் பழகியிருக்கிறார், பலருக்கும் கீழே பணிபுரிந்திருக்கிறார் மோடி என்பதும் உண்மையே. ஆனால், தேர்தல் அரசியலில் நுழைந்த பிறகு மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு இருந்ததில்லை.

குஜராத்தில் முதல்வராக கட்சியால் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ உறுப்பினராகக்கூட அவர் இருந்ததில்லை. 2001 முதல் அவருக்குத் தெரிந்ததெல்லாம் எப்படி மாநிலத்தின் (குஜராத்) முதல்வராக இருப்பது, நாட்டின் பிரதமராக இருப்பது என்பதுதான். கடந்த 23 ஆண்டுகளாக மாநிலத்தின் தலைமை நிர்வாகி அல்லது நாட்டின் தலைமை நிர்வாகியாக இருந்த அனுபவம் மட்டுமே அவருடையது.

மாநில முதல்வராக இருந்தபோதும் பிரதமரானபோதும் தன்னை முதன்மைப்படுத்திக் கட்சிக்குள் ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கிவிட்டார். தனியொருவராகவே மாநிலத்தையும் நாட்டையும் வளர்ச்சி, முன்னேற்றம் நோக்கி கொண்டுசெல்லும் ஆற்றல் மிக்கவர் என்றே காட்டிக்கொண்டார். இப்படிப் பதவி, அதிகாரம் இரண்டையும் தான் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முதலில் காந்தி நகரிலும் (குஜராத் தலைநகர்) பிறகு புது டெல்லியிலும் சக அமைச்சர்களை அடிபணிய வைத்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பெற்றார்.

தன்னுடைய ஆட்சியில் புதிதாக பாலம் கட்டினாலும், நெடுஞ்சாலை அமைத்தாலும், ரயில் நிலையம் திறந்தாலும், கோதுமை – அரிசிக்கு மானியம் வழங்கினாலும் - வேறு எதுவாக இருந்தாலும், அதற்கான பாராட்டுகள் தனக்கு மட்டுமே சேர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மோடி ஏன் அப்படிப் பேசினார்?

அரவிந்தன் கண்ணையன் 02 Jun 2024

தொடரும் பழைய நிலை

மோடிக்கு முன்னதாக கூட்டணி அரசுக்குத் தலைமை வகித்த நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் இருவருமே சுயமோகிகளும் அல்ல, தங்களை அதிகம் முன்னிலைப்படுத்திக்கொண்டவர்களும் அல்ல. வாஜ்பாய் இயல்பாகவே அவருடைய பேச்சாற்றல், பெருந்தன்மை, நடவடிக்கைகளால் மக்களிடம் மட்டுமல்ல - மாற்றுக் கட்சியினரிடமும் மரியாதையையும் அன்பையும் பெற்றிருந்தார்.

கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த காலத்தில்கூட தன்னை கட்சியின் - ஆட்சியின் மைய அதிகார பீடமாகவும் நாட்டிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஒருபோதும் கருதியதில்லை வாஜ்பாய். ராவ், மன்மோகன் சிங், வாஜ்பாய் மூவருமே தங்களுடைய அமைச்சரவை சகாக்களிடம் மட்டுமல்ல, எதிர்க்கட்சியினருடனும்கூட ஆலோசனை கலந்த பிறகே முக்கிய முடிவுகளை எடுத்தனர்.

மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவி வகிப்போம் என்று உறுதியாக எதிர்பார்த்த மோடி, புதிய அரசு முதல் நூறு நாள்களுக்குள் எடுக்க வேண்டிய முடிவுகள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக இலக்குகளைத் தயாரிக்குமாறு மூத்த அதிகாரிகளைப் பணித்தார்.

மோடி 3.0 அரசு முதல் நூறு நாள்களுக்குள் 50-70 இலக்குகளை அடைய செயல்திட்டம் வகுத்துள்ளது என்று ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழ் அறிவிக்கிறது. முதல் நூறு நாளில் நிறைவேற்ற வேண்டியவை குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி மறுஆய்வுக் கூட்டம் நடத்தினார் என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவிக்கிறது.

இங்கே கவனியுங்கள் - இந்த ஆலோசனைக் கூட்டம், மறுஆய்வுக் கூட்டமெல்லாம் மூத்த அதிகாரிகளுடன்தான் நடத்தப்படுகிறது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையில் உள்ள எந்த அமைச்சரும் அவற்றுக்கு அழைக்கப்படவில்லை. கடந்த 23 ஆண்டுகளாக காந்தி நகரிலும் டெல்லியிலும் சக அமைச்சர்கள் எப்படி எந்த அதிகாரமும் இல்லாமல் இருந்தார்களோ அப்படியே இப்போதும் தொடரப்போகிறார்கள்!

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ஒரு ஜனநாயகவாதியின் ஆசைகள்

ராமச்சந்திர குஹா 02 Aug 2023

மோடிக்கு சில கேள்விகள்

மோடி 3.0 என்று இருந்திருக்க வேண்டியது தேஜகூ 2.0 ஆகிவிட்டது - தேர்தல் முடிவால். இது சில கேள்விகளை எழுப்புகிறது. இதுநாள் வரை சர்வாதிகாரியாக இருந்தவரால் இனி ஜனநாயகவாதியாக மாற முடியுமா?

சில கடமைகளை நிறைவேற்ற கடவுளால் அனுப்பப்பட்டவர் என்று தன்னை நினைத்துக்கொள்கிறவர், தவறுகள் செய்யக்கூடிய சாதாரண மனிதராக தன்னை நினைப்பாரா? மற்றவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவாரா? மற்றவர்கள் செய்யும் செயல்களுக்கு உரிய பாராட்டை அவர்களுக்கும் அளிப்பாரா?

பெரும்பான்மை வலிமையைப் பெறாத கட்சியின் பிரதமர் என்ற வகையில் நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஏற்படுத்தி வைத்த முன்னுதாரணங்களைப் பின்பற்றுவாரா? அமைச்சரவை சகாக்கள் செயல்பட அதிகாரங்களையும் சுதந்திரத்தையும் வழங்குவாரா? நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதமாக நடப்பாரா? எதிர்க்கட்சிகளைக் கனிவோடு நடத்துவாரா? ஆளுங்கட்சியோ – கூட்டணிக் கட்சியோ அல்லாத மாற்று எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநில அரசுகளுக்கு உரிய மரியாதையையும் செயல்பாட்டு அதிகாரங்களையும் வழங்குவாரா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண சில மாதங்களோ, சில ஆண்டுகளோகூட காத்திருக்க வேண்டும். மோடியின் நிர்வாக பாணியில் மிதமான மாற்றமாவது இருக்கும் என்று நம்புகிறேன். நாடாளுமன்றத்தில் பொது விவாதங்களை அனுமதிக்க அதிக வாய்ப்புகள், எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் நடந்துகொள்ளும் அருவருப்பான செயல்களின் எண்ணிக்கை குறைதல் ஆகியவற்றை எதிர்பார்க்கிறேன்.

மோடி அரசின் நிர்வாக முறையில் பெருமளவு மாற்றம் ஏற்படுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைய பிரதமரின் உள்ளுணர்வு – ‘எப்போதும் அதிகாரம் செய்ய வேண்டும், அதிகாரத்தைக் குவித்து தன் கையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும்’ என்பதாகும், இது இப்படியே இருபதாண்டுகளுக்கும் மேல் பழகிவிட்டது. கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் தந்த கட்டற்ற மகிழ்ச்சி இனி கட்டுக்குள் வருமா?

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?
சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்
இடதுசாரிகளுக்குத் தேவை புதிய சிந்தனை
மோடி ஏன் அப்படிப் பேசினார்?
நாட்டை எப்படி பாதுகாப்பது?
ஒரு ஜனநாயகவாதியின் ஆசைகள்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1





பாதம்ஹிட்லர்ஜெய்மோகன் பண்டிட் கட்டுரைமத்திய பிரதேசம்: காங்கிரஸுக்குச் சாதகம்ஒழுக்கக் காவலர்கள்கிராமப்புறங்கள்அன்ஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்வாய் உலரும் பிரச்சினைசென்னை மேயர்தமிழ்க் கல்விஆண்ட்ரூ சாரிஸின் சுட்டல்சர்வதேச உறவுபட்டப் பெயர்நிச்சயமற்ற அதிகாரம்எம்.எஸ்.சுவாமிநாதன் குழுபுதிய கல்விக் கொள்கை75இல் சுதந்திர நாடு இந்தியாதூத்துக்குடி வெள்ளம்வெற்றியைத் தர முடியாவிட்டால் மோடியை ஆர்.எஸ்.எஸ். நஇன ஒதுக்கல்லஞ்சம்இஸ்ரேலியர்கள்மாதவிகடிதங்கள்விவசாயக் குடும்பங்கள்பாஜகவின் புலப்படாத சக்திதனிச் சட்டங்களை சீர்திருத்துங்கள்ஒளிஅதிகாரிகுரியன் வரலாறு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!