கட்டுரை, கலை, இலக்கியம், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

துணைவேந்தர்கள் ஜெயமோகன், எஸ்ரா: சாரு பேட்டி

வாசகர்கள்
16 Apr 2023, 5:00 am
3

மிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தத் தொடர் பேட்டிகளில் பேசியிருக்கிறார் சாரு. இந்த அத்தியாயத்துடன் இந்த உரையாடல் நிறைவு பெறும் சூழலில், இந்த வாரக் கேள்விகளை நம் ‘அருஞ்சொல்’ வாசகர்கள் கேட்கின்றனர். அதற்கு தனது பாணியில் விரிவாக பதில் அளிக்கிறார் சாரு.

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம் ன்றில் கௌரவப் பேராசிரியர் பணி வழங்கப்படும் எனில் ஏற்பீர்களா?

- விஜயகுமார் சாமியப்பன்

இந்தக் கேள்விக்கு நான் விரிவாக பதில் சொல்ல வேண்டும். இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இருக்கிறார். அவரால் தினந்தோறும் ஐந்தாறு இதய நோயாளிகள் மரணத்திலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். அவரைக் கொண்டுபோய் மருத்துவத் துறை மந்திரியாக நியமிக்கிறார்கள். இரண்டுமே மக்கள் பணிதான். ஆனால், மருத்துவத் துறை மந்திரியாக வேறு ஒருவர் இருக்கலாம். தினமும் ஐந்தாறு உயிர்களைக் காப்பாற்றக் கூடிய நிலையில் இருக்கும் நிபுணரை நாம் இழக்கலாமா?

அதேபோல், நான் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தால் என்னால் சில நூறு அல்லது சில ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்தான். சந்தேகம் இல்லை. ஆனால், நான் உலக அளவில் அறியப்பட்ட எழுத்தாளனாக இருக்கிறேன். அப்படி நான் உலக அளவில் அறியப்பட்டவன் என்பதே என் ஊர்க்காரர்களுக்குத் தெரியாது என்பது வேறு விஷயம். அப்படித் தெரியாததனால் மேற்படி உண்மையானது பொய் என்று ஆகிவிடாது இல்லையா?

லண்டனிலிருந்து வெளிவரும் ‘ஆர்ட்ரெவ்யூ ஏஷியா’ சஞ்சிகையில் நான்கு ஆண்டுகளாக தொடர் கட்டுரை எழுதிவருகிறேன். அமெரிக்காவிலிருந்து வெளிவரும் கதைத் தொகுதிகளில் என் கதையைக் கேட்டுப் பெற்று வெளியிடுகிறார்கள். ஐரோப்பியக் கலை இலக்கிய விழாக்களில் என்னைப் புதிதாகக் கதை எழுதச் சொல்லி அதை மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். சென்ற ஆண்டு என் கதையும் சல்மான் ருஷ்டியின் கதையும் வெனிஸில் நடந்த சிற்பக் கலைக்கான ஒரு விழாவில் வாசிக்கப்பட்டன. என்னுடைய ‘ஸீரோ டிகிரி’ நாவல் ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மாடர்ன் ஏஷியன் கிளாஸிக் என்ற பிரிவில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், என்னைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தமிழ் இலக்கியம் உலகமெங்கும் பிரபலம் ஆக முடியும். எப்படி?

வானளாவிய கட்டிடங்கள் கட்டப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட கட்டிடங்களைக் கட்டுவதற்காக பிரம்மாண்டமான எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வகை ராட்சச எந்திரங்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஜேசிபி. அதற்கும் ஒரு எழுத்தாளனான எனக்கும் என்ன சம்பந்தம்? அதற்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?

ஜேசிபி என்ற அந்த நிறுவனம் கோடிக்கணக்கில் செலவழித்து ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மிகப் பெரிய இலக்கியப் பரிசை வழங்கிக்கொண்டிருக்கிறது. பரிசுத் தொகை 25 லட்சம். இந்திய மொழிகளில் வெளியாகி, அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதே அதன் தகுதி. பரிசுக்குரிய நாவலை ஒரு நிபுணர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கிறது. ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்டுவருகிறது இந்தப் பரிசு. 

தமிழ்நாட்டில் இல்லாத கோடீஸ்வரர்களா? இதுபோன்ற ஒரு காரியத்தை அவர்களால் செய்ய முடியாதா? ஏன் செய்யவில்லை? காரணம், இந்தியாவிலேயே ஆதி நாகரீகம் தமிழ் நாகரீகம் என்று மார்தட்டிக்கொள்ளும் நாம் (அதற்கான வரலாற்று ஆதாரம் கீழடி; இலக்கிய ஆதாரம் தொல்காப்பியம்) இன்றைய நிலையில் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? சினிமா நடிகர்களுக்குப் பாலபிஷேகம் செய்துகொண்டிருக்கிறோம்!

எல்லோரும் அப்படி இல்லை, சாரு எப்போதும் எதிர்மறையாகவே பேசுவார் என்பீர்கள்.

இல்லை. எல்லோரும் நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்வதில்லை என்றாலும், இலக்கியத் துறையில் நாம் கண்ணை மூடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஆதாரம் தர முடியுமா? முடியும். இதோ ஆதாரம்:

ஜேசிபி இதுவரை ஐந்து ஆண்டுகளாக ஐந்து நாவல்களை பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. ஐந்தில் மூன்றை மலையாளிகள் பெற்றிருக்கிறார்கள். நாம் சும்மாவேனும் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறோம். இப்போது சொல்கிறேன், எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தாகூருக்கு அடுத்து இந்தியாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை; கிடைத்தால் அதை ஒரு வங்காளியோ மலையாளியோதான் வாங்கப்போகிறார்.

ஆனால், இன்றைய தினம் இந்தியாவிலேயே மகத்தான இலக்கியப் படைப்புகள் தமிழில்தான் உருவாகிக்கொண்டிருக்கின்றன. வங்காளம், கன்னடம், மலையாளம் எல்லாம் தமிழுக்குக் கீழேதான். ஆனாலும் நமக்கு எந்த இலக்கிய விருதும் கிடைக்காது. ஏன்?

இரண்டு காரணங்கள்:  ஒன்று, ஜேசிபி பரிசு அறிவிக்கப்பட்ட உடனேயே என் நாவல் (மார்ஜினல் மேன்) அவர்கள் பார்வைக்குச் சென்றது. அவர்கள் தமிழ்நாட்டின் ஓர் இலக்கியப் பிரபலத்திடம் என்னைப் பற்றிக் கேட்டார்கள். அந்த நாவலை சாருவே செல்ஃப் பப்ளிஷ் செய்துகொண்டார் என்று சொல்லிவிட்டார் பிரபலம். நாமே வெளியிட்டுக்கொண்டால் பரிசுக்குத் தகுதி இல்லை. இப்படியாக நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன். ஆனால், உண்மை என்னவென்றால், அந்த நாவலை நானே வெளியிட்டுக்கொள்ளவில்லை. வெளியிட்டது ‘ஸீரோ டிகிரி’ பதிப்பகம். அந்தப் பதிப்பகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தமிழ் நண்டு கதை தெரியுமா உங்களுக்கு? ஒரு குடுவையில் பல நண்டுகள் இருந்தன. எல்லா நண்டுகளும் வெளியேறிவிட்ட நிலையில் இரண்டு நண்டுகள் மட்டும் குடுவைக்குள்ளேயே கிடந்தன. ஒன்று மேலே ஏறினால் இன்னொரு நண்டு அதைப் பிடித்து கீழேவிட்டது. ஏன் அப்படி என்று கேட்டார் பார்த்துக்கொண்டிருந்தவர். அது அப்படித்தான், இரண்டும் தமிழ் நண்டுகள் என்றார் விஷயம் தெரிந்தவர்.

சமீபத்தில்கூட இப்படி ஒரு தமிழ் நண்டு என்னைக் கீழே பிடித்து இழுத்துப்போட்டது. ஒரு சர்வதேச இலக்கிய விருதுக்கான குறும்பட்டியலில் என் நாவலும் இடம்பெற்றது. பிறகு நான்தான் விருதுக்கு உரியவனாகத் தேர்வுசெய்யப்பட்டேன் என்ற தகவலையும் என் மொழிபெயர்ப்பாளருக்குத் தெரியப்படுத்தினார்கள். குறும்பட்டியலும் வெளியிடப்பட்டது. உடனே இங்கே உள்ள தமிழ் நண்டு ஒன்று அந்தப் போட்டியை நடத்துபவர்களோடு பேசி என்னைப் பற்றி அவதூறு சொல்லி என்னைக் கீழே பிடித்து இழுத்துப்போட்டது. பரிசுக்குரியவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டேன்.

அடுத்த காரணம், நம்மிடம் நல்ல பல படைப்புகள் இருந்தாலும் அதை வெளியே எடுத்துச் சொல்ல ஆள் இல்லை. உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு ஆண்டில் மட்டும் 7,600 ஆங்கிலம் அல்லாத அந்நிய மொழி இலக்கியப் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருகின்றன. அவற்றில் 60 புத்தகங்கள்தான் தெற்காசிய மொழி நூல்கள். அதாவது, ஒரு சதவிகிதத்துக்கும் கீழே. அப்படியானால் நம்முடைய சமகாலத் தமிழ் இலக்கியத்தை ஆங்கிலம் பேசுபவர்கள் படிப்பது எப்போது நடக்கும்? நம்முடைய மகத்தான இலக்கிய கர்த்தாக்கள் உலக அளவில் தெரியாமல் போனதற்கு இதுதான் காரணம்.

இந்த நிலைமை இனிமேலாவது நீடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

சமகால இலக்கியத்துக்காக ஒரு குழு அமைத்து அதை உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இங்கே உள்ள செல்வந்தர்களிடம் பேசி ஜேசிபி போன்ற விருதுகளை உருவாக்க வேண்டும். இப்படி நூறு யோசனைகள் என்னிடம் உள்ளன. இதைச் செயல்படுத்துவதற்கு அரசும் சமூகமும் என்னைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மற்றபடி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக அல்ல, துணைவேந்தராகவே இருக்கத் தகுதியானவர்கள் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும். அவர்களையும் அரசு உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நீங்கள் எழுதிய ஒரு புத்தகத்தின் பகுதியைப் பள்ளிக்கல்வியில் பாடமாக வைக்கலாம் என்று முடிவுசெய்து உங்களிடம் பரிந்துரைக்க கேட்கிறார்கள். நீங்கள் எந்த புத்தகத்தின் எந்த பகுதியைப் பரிந்துரைப்பீர்கள்?

-த.செந்தமிழ்

கிட்டத்தட்ட தொண்ணூறு அபுனைவு நூல்களை எழுதியிருக்கிறேன். அவற்றில் பாதி அளவு மாணவர்களுக்கு ஆனவைதான். ஆனாலும், ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ என்ற தலைப்பில் எழுதிய மூன்று தொகுதிகளும் மிக நிச்சயமாக தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டியவை. சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு முழுமையான அறிமுகத்தை அந்தத் தொகுதிகளிலிருந்து ஒருவர் பெற முடியும்.

ஆன்மிகம் சார்ந்து நிறைய எழுதியுள்ள நீங்கள் என்றாவது ஒரு நாள் எழுத்துத் துறையை விட்டுவிட்டு முழுமையாக ஆன்மிகத்திற்குள் சென்றுவிடலாம் என்று சிந்தித்திருக்கிறீர்களா?

-த.செந்தமிழ்

என்றாவது ஒருநாள் என்ன, பணத்துக்காக சிங்கியடிக்கும்போதெல்லாம் அப்படி நினைப்பது உண்டு. என்னுடைய பிரெஞ்சு தாடியை எடுத்துவிட்டு, நீண்ட தாடியை வைத்துக்கொண்டு ஆன்மீகத்தில் குதித்தால் ஓஷோவைவிடப் பிரபலம் ஆகிவிட முடியும். அதற்கான அத்தனை தகுதியும் என்னிடம் இருக்கிறது. ஆனால், பணத்துக்காகவும் பிரபலத்துக்காகவும் என் ஆன்ம சக்தியை விற்றுவிடக் கூடாதே? என் ஆன்மா இலக்கியம்தான் இல்லையா? ஒருவர் ஓஷோவிடமிருந்து பெறக்கூடிய அனைத்தையும் என் எழுத்துக்களிலிருந்தும் பெற முடியும். அதைவிடக் கூடுதலாகவே.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், ‘தமிழில் இரு சிந்தனைப் பள்ளிகள் இருக்கின்றன, அவை சுந்தர ராமசாமி மற்றும் நகுலன் பள்ளிகள்’ எனக் குறிப்பிட்டிருப்பீர்கள். சுரா பள்ளியின் முக்கிய முகமாக ஜெயமோகனும், நகுலன் பள்ளியின் முக்கிய முகமாக உங்களையும் சுட்டி இருப்பீர்கள். இன்று அவை இன்னும் தெளிவாகி இருக்கின்றன. அதேபோல் இளம் எழுத்தாளர்களை அந்த இரு சிந்தனைப் பள்ளிகளின் நீட்சியாக வகைப்படுத்திப் புரிந்துகொள்வது சாத்தியமா?

-ஜகந்நாதன் கோவிந்தன்

இதுபற்றிக் கொஞ்சம் விளக்கியாக வேண்டும். சுந்தர ராமசாமி பள்ளி, நகுலன் பள்ளி என்றெல்லாம் ஒரு பள்ளியும் இல்லை. சுந்தர ராமசாமி ஒரு பாணியிலும் நகுலன் ஒரு பாணியிலும் எழுதினார்கள். சுந்தர ராமசாமியின் பாணி மரபார்ந்ததாகவும், நகுலனின் பாணி மனப்பிறழ்வு நிலையைக் கலையாக மாற்றியதால் எனக்கு நெருக்கமாக இருந்தது என்பதாலும் ஒரு வசதிக்காக அப்படி நான் குறிப்பிட நேர்ந்தது.

நகுலனை எனக்குப் பிடித்திருந்ததே தவிர எனக்கும் நகுலனுக்கும் அதிக ஒற்றுமைகள் இல்லை. சொல்லப்போனால், நான் நகுலன் பள்ளியைச் சேர்ந்தவனே இல்லை எனலாம். ஒரு சிந்தனைப் பள்ளி என்றால் அதற்கு ஒரு தத்துவப் பின்புலம் தேவை. அந்தத் தத்துவப் பின்புலம் சு.ரா., நகுலன் ஆகிய இரண்டு பிரிவுக்குமே இல்லை.

இந்தச் சூழலில் சாரு நிவேதிதாவின் இடம் என்ன? நான் முழுக்க முழுக்க ஃப்ரெஞ்ச் தத்துவப் பின்புலத்திலிருந்து எழுந்து வருகிறேன். ஜாக் தெரிதா (Jacques Derrida), ரொலாந் பார்த் (Roland Barthes), மிஷல் ஃபூக்கோ (Michel Foucault) ஆகிய மூவரிடமிருந்தும் பயின்று தமிழ்நாட்டில் வந்து குதிக்கிறேன். எத்தியோப்பியாவின் ஏதோ ஒரு ஊரில் கொண்டுபோய் ஒரு சர்வதேசப் பள்ளியை நிறுவுவதைப் போல. ஆனால், தமிழ்நாடு எத்தியோப்பியா அல்ல. இங்கே 4000 ஆண்டு வளமான பாரம்பரியம் உண்டு. 2000 ஆண்டுக்கு முந்தைய தொல்காப்பியரே தான் சொல்வதெல்லாம் தான் கண்டுபிடித்தது அல்ல, தன் மூதாதையர் கண்டுபிடித்தது – என்மனார் புலவர் – என்கிறார். ஆனாலும், நான் என்னுடைய புனைவுகளின் மூலம் சொன்னது எல்லாமே தமிழுக்குப் புதிது என்பதால்தான் நான் தமிழ்ச் சூழலில் மிகவும் புதியவனாகவும் முன்னோடிகள் அற்றவனாகவும் இருந்தேன்.

என்னை வாசிக்கும் பலருக்கும் என் அ-புனைவுகள் பிடித்திருந்து, புனைவுகள் பிடிக்காமல் போனதற்கும் இதுதான் முக்கியக் காரணம். உதாரணமாக, என்னுடைய ‘காமரூப கதைகள்’ என்ற நாவல் பற்றி இதுவரை ஒரு வார்த்தை மதிப்புரையோ விமர்சனமோ வந்ததில்லை.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அப்படி எழுதிய டி.ஹெச்.லாரன்ஸின் பல புத்தகங்களைப் புத்தகக் கடைகளிலிருந்து கைப்பற்றி எரித்தார்கள். லாரன்ஸின் லேடி சேட்டர்லீஸ் லவ்வர் நாவலை வெளியிட்ட பெங்குவின் பதிப்பகத்தின் மீது ஆபாசத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு வழக்கில் ‘பெங்குவின்’ வென்றதால் அந்த நாவல் முப்பது லட்சம் பிரதிகள் விற்றது. காமரூப கதைகள் நாவலுக்கு அப்படி நடந்திருக்க வேண்டும். நடக்காததற்குக் காரணம், இங்கே யாருமே இலக்கியம் படிப்பதில்லை. அதனால் அப்படி ஒரு நாவல் வந்திருப்பதே இங்கே யாருக்கும் தெரியாது. அந்த நாவலைப் படித்தவர்களும் ஏதோ நெருப்பைத் தொட்டுவிட்டதுபோல விலகிக்கொண்டார்கள். அவ்வளவுதான்.

சொல்லப்போனால், ‘லேடி சேட்டர்லீஸ் லவ்வர்’ நாவலைவிட பல மடங்கு அதிர்ச்சிகரமான கதைப் புலனையும் சொல்லாடலையும் கொண்டது காமரூப கதைகள். அந்த நாவலுக்கு இணையான அதிர்ச்சியைக் கொண்ட எழுத்து என்று சொன்னால் உலக இலக்கியத்திலேயே ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) எழுதிய ‘மதாம் எத்வார்தா’, ‘மை மதர்’ ஆகிய இரண்டு நாவல்கள்தான். இவற்றில் முதலாவதை ஜார்ஜ் பத்தாய் யாருக்கும் தெரியாத ரகசியப் பெயரில்தான் எழுதினார். இரண்டாவது நாவல் ‘மை மதர்’ அவர் மரணத்துக்குப் பிறகு வெளிவந்தது.

என்னுடைய எழுத்துக்குத் தத்துவப் பின்புலம் உண்டு. ஆனாலும், என் பள்ளியிலிருந்து என்னைத் தொடர்ந்து வேறு யாரும் வர சாத்தியம் இல்லை. ஏனென்றால், தெரிதா, ரொலாந் பார்த், ஃபூக்கோ ஆகியோரிடமிருந்து வெளிவந்த புனைவிலக்கியப் படைப்பாளி என்று பிரான்ஸிலேயே யாரும் இல்லை. அதனால் தமிழிலும் எனக்குப் பின்னால் என்னைப் பின்பற்றி, என் தத்துவப் பள்ளியைச் சேர்ந்தவராக யாரையும் சொல்ல முடியும் எனத் தோன்றவில்லை. ஆனால் என் நுண்ணுணர்வுகளையும், என் வாழ்க்கைப் பார்வையையும் புரிந்துகொண்டவராக அராத்துவைச் சொல்லலாம். அதிலும், அவர் ஒரு அதிபுத்திசாலியான மாணவராக இருந்ததால் அது சாத்தியமாயிற்று. அதாவது, நான் பயின்ற பிரெஞ்சு தத்துவ்வாதிகளை நேரடியாகப் படிக்காமல் என் மூலமாக அறிந்துகொண்டு ஓரளவு அதன் போக்குகளைத் தெரிந்துகொண்டு தன் அறிதலில் அதற்கான வழிவகைகளைக் காண முயல்கிறார். கவனியுங்கள், அறிதலில் என்று குறிப்பிடுகிறேன். அவருடைய புனைவெழுத்தில், சொல்லாடலில் அதை முயற்சி செய்திருந்தால் நகல் எடுத்ததுபோல் ஆகியிருக்கும். என்னுடைய ஆரம்ப காலத்தில் என்னை நகல் எடுக்க முயன்ற அத்தனை பேருமே இன்று பெயர் தெரியாமல் போய்விட்டதிலிருந்து நீங்கள் இதைப் புரிந்துகொள்ளலாம். அதேசமயம், அராத்துவையும் என் வழி வந்தவராகச் சொல்ல முடியாது.

அப்படியானால் யாரை என் வழி வந்தவராகச் சொல்லலாம்? அதற்கு நான் கடைசியில் பதில் சொல்கிறேன்.

இந்த நிலையில், இனிமேலான தமிழ் இலக்கியவாதிகள் பெரும்பாலும் சு.ரா.வின் பள்ளியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஏனென்றால், சு.ரா. முன்வைத்தது ஒரு எழுத்துப் பாணி. அதிலேயே கொஞ்சமாகப் பாதை விலகிச் செல்பவராக இருந்தால் - கடைசியில் எல்லோருடனும் கை கோர்த்து விட வேண்டும்; இடையில் லேசாக மாறலாம், அவ்வளவுதான் - அவரைப் பின்நவீனத்துவ எழுத்தாளர் என்று சொல்லிவிடுவார்கள். மிக வலுவான மையத்தையும், அதிகாரக் கட்டமைப்பையும் கொண்டிருக்கும் பிரதியைப் போய் யாராவது பின்நவீனத்துவ எழுத்து என்று சொல்வார்களா? அது பற்றியெல்லாம் யாருக்கும் இங்கே கவலை இல்லை. வித்தியாசமாக இருக்கிறதா, போடு பின்நவீனத்துவப் பட்டியை!

சரி, எனக்கும் ஒரு வாரிசு உருவாவதற்கான வாய்ப்பு இல்லையா? பின்நவீனத்துவம் என்ற சிந்தனைப் போக்கு வாரிசு என்ற கருத்தாக்கத்தையே மறுக்கிறது என்பதால் அந்தக் கேள்விக்கே இடமில்லாமல் போகிறது.

ஆனாலும் ஒரு அநுமானமாக யோசித்துப் பார்த்தால், யார் ஒருவர் தெரிதா, ரொலாந் பார்த், மிஷல் ஃபூக்கோ, லக்கான் ஆகியோரையும் அவர்களுக்குப் பிறகான ஹெலன் சிஸ்யூ (Hélène Cixous), ஜூலியா க்றிஸ்தவா (Julia Kristeva) என்ற இரண்டு பெண்ணியச் சிந்தனையாளர்களையும், தெல்யூஸ் – க்வத்தாரி (Gilles Deleuze, Pierre-Félix Guattari) என்ற இரட்டையரையும், ஃபூக்கோவுக்குப் பிறகான சிந்தனையாளரான ஸ்லாவோஜ் ஸிஸெக்கையும் (Slavoj Žižek) பயின்று வருகிறாரோ அவரே என்னுடைய எழுத்தின் தொடர்ச்சியாக வர முடியலாம். அதுவும், தத்துவத்தின் பக்கமே முழுமையாகச் சாய்ந்துவிடாமல் தான் பயின்ற தத்துவத்தைப் புனைவாக மாற்றக்கூடிய மனோலயம் அவரிடம் இயல்பாக இருந்தால்தான் அது சாத்தியம். இதை நான் ஒரு கருத்தளவிலான சாத்தியப்பாடாகத்தான் பார்க்கிறேனே ஒழிய அப்படி நடப்பதற்கான நடைமுறை சாத்தியம் மிகவும் கம்மி.

என்னில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் உங்களின் ‘வரம்பு மீறிய பிரதிகள்’. பாலியலைப் பற்றியும், காமத்தைப் பற்றியும் பல சிந்தனைகளை அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் ஃப்ராய்ட்போல் ஓர் உளவியல் அறிஞர் ஆகியிருந்தால், உலகப் புகழ் கிடைத்திருக்கும். ஏன் புனைவில், இலக்கியத்தில் அதைப் பதிவுசெய்ய விரும்பினீர்கள்? ஏன் கேட்கிறேன் என்றால் ஃப்ராய்டை மேற்கோள் காட்டுபவர் உங்களைக் காட்டுவதில்லை...

-லக்ஷ்மி நாராயணன்

அத்தனை சிரமமெல்லாம் இல்லை, மொழிபெயர்ப்பு இல்லாமல் நான் ஆங்கிலத்திலேயே எழுதியிருந்தால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய் அளவுக்கு உலகப் பிரசித்தம் ஆகியிருப்பேன். மொழிபெயர்ப்பின் மூலம் வெளியே செல்வதில் எந்தப் பயனும் இருப்பதில்லை. ஆனால், காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ் போன்றவர்கள் மொழிபெயர்ப்பின் மூலம்தான் உலகப் புகழ் அடைந்தார்கள். காரணம், அவர்கள் எழுதியது ஒரு ஐரோப்பிய மொழியில். தென்னிந்திய மொழிகளுக்கு – குறிப்பாக தமிழுக்கு - உலக இலக்கியப் பரப்பில் எந்த மதிப்பும் இல்லாமல் இருக்கிறது. நான் தமிழில் எழுதியதால் மட்டுமே இத்தனை குறைந்த அளவில் தெரிய வந்திருக்கிறேன்.

இப்போது உங்களுடைய கடைசி அவதானத்துக்கு வருகிறேன். ஃப்ராய்டை மேற்கோள் காட்டுபவர் சாருவின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. காரணம் இதுதான்: உலகம் முழுவதும் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் மானுடவியல், தத்துவம், உளவியல் போன்ற பல்வேறு முக்கியமான துறைகளில் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். பிரபலமாகவும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்குமே சமகாலத் தமிழ் இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியாது. ஓர் உதாரணம் சொல்கிறேன். ஒரு சர்வதேசப் பத்திரிகை இந்திய மொழிகளில் உள்ள இலக்கியத்துக்காக ஒரு சிறப்பிதழ் கொண்டுவந்தது. எல்லா இந்திய மொழிகளிலும் உர்தூ உட்பட எல்லோருமே மிக நவீனமான – இன்றைய தினம் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்திருந்தார்கள். ஆனால், ஜப்பானிலும் நியூயார்க்கிலும் மொழியியல் துறையில் நிபுணர்களாக விளங்கும் இரண்டு தமிழர்கள் ஆண்டாளை மொழிபெயர்த்திருந்தார்கள். ஏனென்றால், அவர்களுக்குத் தெரிந்த கடைசித் தமிழ் எழுத்தாளர் பாரதியாகத்தான் இருப்பார். அதற்குப் பிறகு வந்த ஒருவரைக்கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இப்படி உலகம் பூராவும் கல்விக்கூடங்களில் பணியாற்றும் தமிழ் புத்திஜீவிகள் சமகாலத் தமிழ் இலக்கியப் பிரக்ஞையே இல்லாமல் இருப்பதால்தான் நம்மைப் பற்றி வெளியுலகுக்குச் சொல்ல இயலாமல் இருக்கிறது.

உங்கள் உபகேள்விக்கு என் பதில்: நான் ஒரு புனைவிலக்கியவாதி என்பதால் புனைவில்தானே என் ஞானத்தையும் அறிவையும் இறக்கி வைக்க முடியும்?

சாரு, தொடர்ந்து எந்த ஓர் அதிகாரத்திற்கும் எதிராக குரல் கொடுத்து வருகிறீர்கள். “நான் அதிகாரத்திற்கு வந்தால்தான் நல்லது நடக்கும்!” என்று வருபவர்களின் அட்டூழியங்களை நம்மால் தொடர்ந்து வரலாற்றில் படிக்க முடிகின்றது. ஆனால், ஒரு சாமானியனின் எதிர்பார்ப்பும் அவ்வாறல்லவா இருக்கிறது? எனது சந்தேகமும் இதேதான். ஒரு நல்ல மனிதர் அதிகாரத்துக்கு வந்தால்தானே ஒரு நாடு என்கிற இப்போதைய கட்டமைப்பில் ஒரு நல்லது செய்ய முடியும்? அல்லது வேறு ஏதாவது வழி இருக்கிறதா? அல்லது ஏதேனும் உதாரணம் வரலாற்றிலோ அல்லது நடைமுறையிலோ அல்லது ஒரு கருத்தாக்கமாகவோ ஒரு வழி இருக்கிறதா? இதுதான் என்னுடைய கேள்வி. ஏனென்றால் இப்பொழுது நான் வேலை பார்க்கும் கார்ப்ரேட் கம்பெனியில் உயர்ந்த அதிகாரத்திற்குப் போகலாம் என்று இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்துள்ளேன். ஆனாலும் ஏதோ என் உள்ளே இருந்து ஒன்று அந்த அதிகாரத்திற்குச் செல்லும் வழியைப் பற்றி யோசிக்க வைக்கிறது. ஆகவே இந்தக் கேள்வி பிறந்தது!

வி.விக்னேஷ் குமார்

விக்னேஷ், தஸ்தயேவ்ஸ்கி எழுதி ரா.கிருஷ்ணையா மொழிபெயர்த்த ‘அழையா விருந்தாளி’ குறுநாவலைப் படித்துப் பாருங்கள். அந்தப் புத்தகம் கிடைக்காவிட்டால் இணையத்திலேயே அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘எ நாஸ்ட்டி ஸ்டோரி’ என்ற தலைப்பில் கிடைக்கும். அதைப் படியுங்கள். உங்கள் கேள்விக்குத் தகுந்த பதில் கிடைக்கும்.

எல்லா நல்ல மனிதர்களும் தங்களைச் சுற்றியுள்ளோருக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், அது தீங்கில்தான் முடிகிறது. இதைச் சொல்வதற்காகவே நான் ‘அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு!’ நாவலை எழுதினேன்.

இருந்தாலும் இப்போது உங்களுக்கு சுருக்கமான என் பதில்: நீங்கள் உயர்ந்த அதிகாரத்துக்குச் செல்லுங்கள். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், முடிந்த வரை நாட்டைத் திருத்த வேண்டும், சமூகத்தைத் திருத்த வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்யாதீர்கள். அப்படிச் சொல்லிக்கொண்டு புறப்படுபவர்களெல்லாம் பெரும் ஃபாஸிஸ்ட்டுகளாகவும் சமூக நோய்களாகவும் மாறுவதையே நான் பார்த்துவருகிறேன்.

இயன்ற வரையிலும் சமூகத்துக்குக் கேடு செய்யாமல் இருப்போம். இன்றைய தினம் அரசியல்வாதிகளின் ஊழல் பற்றி எல்லோரும் எழுதுகிறார்கள். ஆனால், அரசு அதிகாரிகள் செய்யும் அட்டூழியங்கள் பற்றி யாருக்கும் தெரியாது. நான் பணிபுரிந்த அலுவலகத்தின் முதன்மை அதிகாரி தன் பிரம்மாண்டமான அறையில் உள்ள தரை விரிப்பை மாற்றுவதற்காக ஐந்து லட்சத்துக்கு மேல் செலவு செய்தார். இத்தனைக்கும் ஏற்கெனவே இருந்த கம்பளம் மிகவும் நன்றாகத்தான் இருந்தது. அவருக்கு அந்த வண்ணம் பிடிக்கவில்லை. அதனால் மாற்றினார்.

நட்சத்திர ஓட்டலிலிருந்துதான் அவருக்கு உணவு வரும். எல்லாம் நம் வரிப்பணம்தான். இந்த அநியாயத்துக்கெல்லாம் அரசு அனுமதி தருகிறது. கீழ் மட்டத்துப் பணியாளர்கள் மூன்று பேரை தங்கள் வீட்டு வேலைக்கு வைத்துக்கொள்வார்கள். ஞாயிற்றுக்கிழமை தன் ஓட்டுநரை வரவழைத்து சினிமாவுக்குப் போவார்கள். மாலில் காரை வைப்பதற்காக ரூ.200 கட்டணம் கட்ட வேண்டும் அல்லவா, அந்த ரசீதைக் கொண்டுவந்து திங்கள்கிழமை அலுவலகத்தில் கொடுத்து பணத்தை வாங்கிக்கொள்வார்கள். அந்த உயர் அதிகாரிகளின் சம்பளம் ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கும்.

சரி, இப்படிப்பட்ட ஊழல் பேர்வழிகளை விட்டுவிடுவோம். நாம் நல்லவர்களைப் பற்றிப் பேசுகிறோம். நல்லவர்கள் எங்கே தோற்கிறார்கள் என்றால், அவர்கள் சமூகத்துக்கோ அல்லது பிறருக்கோ எது நல்லது என்று நினைக்கிறார்களோ அது தீங்காகத்தான் முடிகிறது. அதாவது, எனக்கு எது நல்லது என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்? என்னை எடுத்துக்கொண்டால் எனக்கு எது நல்லது என்பதையே சதா நேரமும் யோசித்துக்கொண்டிருக்கிறாள் என் மனைவி. அது எல்லாமே எனக்குத் தீமையானது என்று எனக்குத் தெரிவதால் நான் அதிலிருந்து ரகசியமாக விடுபட்டு வேறு ஒரு ரகசிய வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் அவள் தன்னைப் பற்றி யோசிப்பதே இல்லை. யோசித்தால் அவளுக்கும் நல்லது; எனக்கும் நல்லது.

சமூக அளவில் எடுத்துக்கொண்டால், ஃபாஸிஸத்திற்குக் காரணமாக இருப்பதே சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பதுதான்.

அப்படியானால் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கவே கூடாதா? நினைக்கலாம். ஆனால், அப்படி நல்லது செய்வதற்கு நீங்கள் மட்டுமே நேர்ந்துவிடப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கக் கூடாது. அதுதான் சர்வாதிகாரத்தில் போய் முடிகிறது.

வன்முறையை வழிமுறையாகக் கொண்ட எந்த ஓர் அரசியல் போராட்டத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களெல்லாம் சமூகத்தைத் திருத்த வேண்டும் என்றுதானே தங்கள் வாழ்க்கையையே இழக்கத் தயாராகிறார்கள்? தங்களின் உன்னத நோக்கத்திற்காக அவர்கள் தங்கள் உயிரையே துறக்கவும் செய்கிறார்கள், இல்லையா? அது எல்லாமே ஃபாஸிஸத்தில்தான் கொண்டுபோய்விடுவதை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறோம்.

ரஷ்யாவின் கம்யூனிஸம் தோற்றதற்கும் அதுதான் காரணம். நோக்கம் உன்னதமாக இருந்தது. ஆனால், அதிகாரம் ஒரு இடத்தில் குவிந்ததால் எல்லாம் நாசமாயிற்று.

அப்படியானால் வேறு என்னதான் வழி?

மேற்கு ஐரோப்பாவை உதாரணம் சொல்லலாம். அங்கெல்லாம் எந்த அரசியல்வாதியும் நாட்டுக்கு நல்லது செய்யப்போகிறேன் என்று கிளம்புவதில்லை. சொன்னால், ‘நீ யாரைய்யா?’ அதைச் சொல்வதற்கு என்று கேட்பார்கள் மக்கள். ஏனென்றால், அதிகாரம் அங்கே உண்மையிலேயே மக்கள் கையில் இருக்கிறது. அரசியல்வாதி தப்பு செய்தால் உடனேயே அவர் பதவியைப் பறித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் மக்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பது இன்னமும் அதன் குழந்தைப் பருவத்தில் இருக்கிறது. இங்கே இன்னமும் மன்னராட்சிதான் வேறு பெயரில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகாரம் பரவலாக்கப்பட்டிருக்கிறது. ஒரு உச்ச நீதிமன்றம் என்றால் அது அங்கே தேசத்தின் தலைநகரில் இருக்காது. தேசத்தின் மத்தியில் உள்ள ஏதாவது ஒரு சிறிய ஊரில் இருக்கும். எல்லாவற்றையும் அங்கே மையப்படுத்துவது இல்லை. அதிகாரக் குவிப்பு இல்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன். நகரவாசிகளின் போக்குவரத்துக்காக உலகிலேயே ஒரே ஒரு தொங்கும் ரயில்பாதைதான் உள்ளது. அது ஜெர்மனியின் வூப்பர்ட்டால் என்ற சிற்றூரில்தான் இருக்கிறது. ஜெர்மனியின் தலைநகரிலோ மற்ற பிரதான ஊர்களிலோ இல்லை. இந்தியா என்றால் அதை தில்லியில்தான் வைத்திருப்பார்கள். ஜெர்மனியில் நடப்பதைத்தான் அதிகாரப் பரவல் என்கிறேன்.

மக்களாட்சி என்பது உண்மையிலேயே மக்களிடம் அதிகாரம் இருப்பதுதான்.

நம்முடைய சொந்த வாழ்விலேயேகூட நாம் அதிகாரத்தைத் துறந்து வாழ முடியும். உதாரணமாக, நான் என் மகனை எதற்காகவும் அதிகாரம் செய்தது இல்லை. அவன் சுதந்திரத்தில் குறுக்கிட்டதே இல்லை. ஒரு நாள்கூட. அதேசமயம் அவனுக்கு நான் செய்ய வேண்டிய கடமை எதிலுமே குறை வைத்ததும் இல்லை. எனவே, நீங்கள் உங்களுடைய சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் அதிகாரத்தைத் துறந்த நிலையிலேயே நல்லது செய்ய முடியும். ஆனால், மற்றவர்களுக்கு எது நல்லது என்பதை நீங்கள் தீர்மானிக்கக் கூடாது. அதை அவர்களே தீர்மானித்துக்கொள்வதில் நீங்கள் குறுக்கிடவும் கூடாது.

மேலும், நீங்கள் சொல்வதுபோல், நான் அதிகாரத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பது இல்லை. குரல் கொடுப்பவர்களுக்கு முதலில் குரல் இருக்க வேண்டும். எனக்குக் குரல் இல்லை. அந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு அடையாளம் இல்லை. இருந்தால் குரல் கொடுக்கலாம். தெருவில்கூட இறங்கிப் போராடலாம். நீங்கள் யார் என்றே தெரியாத சூழலில் எப்படி அதிகாரத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பது? ஆனால் நான் என்ன செய்கிறேன் என்றால், அதிகாரத்தைத் துறக்கிறேன். நான் நினைத்திருந்தால் அதிகாரத்தின் தோளில் கை போட்டபடி இருந்திருக்கலாம். ஆனால், அதற்குக் கொடுக்க வேண்டிய விலை எனக்குத் தெரியும் என்பதால், நான் அதிகாரத்திலிருந்து ஒதுங்கியிருக்கிறேன்.

எல்லா விதமான அதிகாரங்களிலிருந்தும் ஒதுங்கியிருக்கிறேன். குடும்ப அதிகாரம், ஆண் என்ற அதிகாரம், எழுத்தாளன் என்ற அதிகாரம், மூத்தவன் என்ற அதிகாரம், ஆசான் என்ற அதிகாரம், படித்தவன் என்ற அதிகாரம் – இப்படி எல்லா விதமான அதிகாரத்தையும் மறுதலித்து, துறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதுதான் முக்கியம்.

அலுவலகத்தில் தன் ஜூனியர் பெண்ணிடம் செக்ஸ் சாட் செய்யலாமா என்று கேட்கிறார் அந்தப் பெண்ணின் மேலாளர். அவள் மறுத்தவுடன், ஒரு ‘சாரி’ சொல்லிவிட்டு அப்படி எதுவும் நிகழாதது போன்று கடந்துவிடுகிறார். இருவரும் தங்கள் வேலைகளை தொடர்கின்றனர். இது பாலியல் வறட்சியா? அயோக்கியத்தனமா? இல்லை, மானுட பரிணாமத்தின் ஒரு பகுதியா?

-இரா.திருவாசகம், குடந்தை.

ஆணோ பெண்ணோ எந்த விதமான அத்துமீறலும் தண்டனைக்கு உரியதுதான். செக்ஸ் சாட் செய்யலாமா என்று கேட்டு, அதற்கு அந்தப் பெண் கன்னத்தில் அறைந்தாலும் அதை வாய்மூடி வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். அத்துமீறல் அத்துமீறல்தான். அதிலும் நீங்கள் சொன்ன உதாரணம் மிகவும் கொடூரமானது.

ஹலோ சாரு சார், நான் உங்கள் எழுத்துக்களை விரும்பிப் படிப்பவன். உங்கள் பிளாக்கை தினந்தோறும் படிப்பவன். நாவல், சிறுகதை என நிறைய படிக்கிறேன். எனக்கு காமிக்ஸ் படிப்பதும் மிகவும் பிடிக்கும். உங்களுக்குக் காமிக்ஸ் பிடிக்குமா என்று தெரியவில்லை. காமிக்ஸ் மீதான உங்கள் பார்வை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்!

-வ.அரவிந்த்

உங்களின் ஆர்வமான கேள்விக்கு எதிர்மறையான பதில் தருவதற்காக வருந்துகிறேன். நான் காமிக்ஸே படித்தது இல்லை. சினிமாவில்கூட கார்ட்டூன் படம் ஒன்றோ இரண்டோதான் பார்த்திருக்கிறேன்.

சார், மற்றவர்களின் அந்தரங்கத்தில் நுழைவது வன்முறை என்று எழுதியிருந்தீர்கள். அப்படிச் செய்ததில் முதன்மையானவர் காந்தி. அவருடைய கொள்கைகளுக்காகத் தன் குடும்பத்தின் மீதும் (குறிப்பாக மகன்கள்), ஆசிரமவாசிகள் மீதும் சாத்வீகம் என்ற பெயரில் வன்முறையைத் திணித்தவர். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

-பாலா, பெங்களூர்.

கொள்கைக்காக வாழ்பவர்கள் திருமண பந்தத்தில் சிக்கலாகாது. ஆனால், காந்திக்குத் திருமணம் நடந்த வயதில் அவர் கொள்கைவாதியாக இல்லை. கொள்கை பின்னால் வந்தது. வந்த பிறகு மனைவியைவிட முடியாது. ஆனாலும் குடும்பத்தைப் பொருத்தவரை காந்தி ஒரு ஃபாஸிஸ்டாகத்தான் இருந்திருக்கிறார். தன் மனைவி கஸ்தூர் பாவின் நகைகளை விற்று இங்கிலாந்தில் சட்டப் படிப்பு படித்த காந்தி, தன் மகன்களை மட்டும் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் நடத்திய தரம் குறைந்த பள்ளியில் படிக்க வைத்தார். மாற்று ஜாதிக்காரர் பாத்திரத்தைச் சுத்தம் செய்ய மாட்டேன் என்று சொன்னதற்காக கஸ்தூர் பாவை அடித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில்.

ஹரிலால் இஸ்லாமைத் தழுவியதற்குக் காரணம் காந்திதான். ஹரிலாலை மிக மோசமாக அவமதித்துக்கொண்டே இருந்தார் காந்தி.

மற்றொரு முக்கியமான விஷயம், காந்தி பிரம்மச்சரியத்தைப் பின்பற்ற முடிவு எடுத்தபோது கஸ்தூர் பாவைக் கலந்துகொள்ளவில்லை. தன்னிச்சையாகவே முடிவு எடுத்தார். குடும்பத்தைப் பொருத்தவரை தன் வாழ்நாள் முழுவதுமே காந்தி ஒரு சர்வாதிகாரியாகவே நடந்துகொண்டார். அதிர்ஷ்டவசமாக அவர் பிரதம மந்திரியாக ஆகவில்லை. ஆகியிருந்தால் இந்தியா இப்போது இருப்பதைவிட இன்னமும் கீழான நிலையிலேயே இருந்திருக்கும். இதனால் காந்தியின் கொள்கைகள் கீழானவை என்று நான் சொல்லவில்லை. இன்றைய காலகட்டத்துக்கு அவருடைய கொள்கைகள் பெரும்பாலும் நடைமுறை சாத்தியம் இல்லாதவை. அவர் த்ரேதா யுகத்து மனிதர். ஒருவேளை, ஊரில் காவல் நிலையங்களே வேண்டாம், மனிதர்கள் குற்றம் செய்ய மாட்டார்கள் என்றுகூட அவர் சட்டம் போட்டிருக்கலாம். குவியல் குவியலாக முஸ்லிம்களும் ஹிந்துக்களும் ஒருவரை ஒருவர் கொன்று குவித்துக்கொண்டிருந்த நிலையிலும் “சே சே, மனிதர்கள் அவ்வளவு மோசமானவர்கள் இல்லை” என்று சொல்லி நேருவுக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்தவர் காந்தி.

கார்ல் மார்க்ஸ் சொன்னார், ஒரு காலத்தில் தேசங்களே இருக்காது, அரசாங்கமே இருக்காது என்று. அம்மாதிரி ஒரு கனவுலகவாதி காந்தி.

ஆனாலும் காந்தியைப் போல் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஒரு மகாத்மா பிறப்பார். காந்தி ஏன் மகாத்மா என்றால், அகிம்சையை வெறுமனே வார்த்தைகளால் சொல்லிக்கொண்டிருக்காமல் வாழ்ந்து காட்டினார். வன்முறையைக் கொண்டாடும் இன்றைய உலகில் காந்தி அந்த வகையில் தேவையானவர்.

இதுவரை இந்தப் பேட்டியைத் தொடர்ந்து வாசித்துவந்த உங்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்!

 

தொடர்புடைய பேட்டிகள் 

கமல் செய்தால் கிசுகிசு, நான் செய்தால் பொறாமை: சாரு
எழுத்துச் செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டி
தமிழ் லும்பனிஸத்தின் பிதாமகன் ரஜினி: சாரு
எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: சாரு
செக்ஸை எப்படி அணுகுவது? சாரு பேட்டி
டி20, ரீல்ஸ் மாதிரி எழுத்திலும் வரும்: சாரு
அதிசாகச நாவலுக்கானது கருணாநிதியின் வாழ்க்கை: சாரு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

5

4




1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

KILLIVALAVAN P.K   1 year ago

வணக்கம்! சாரு அவர்கள் இன்னும் தொடர்ந்து பேசியிருக்கலாம். மாணவர்கள். ஆசிரியர்கள், கல்விச் சூழல் பற்றி விளக்கம் இன்னும் எதிர்பார்த்திருந்தேன். மன்னராட்சி வேறுவகையில் ஜனநாயகத்தில் ஆங்காங்கே அலுவலகங்களில் உள்ளன எனத் தெளிவாக்கியமையும் பழுப்பு நிறப் பக்கங்கள் தமிழ் இலக்கியம் பற்றி நவீன எழுத்தாளர்கள் பலரை அறிமுகம் செய்திருப்பதும் பாராட்டுக்குரியது. வினாத் தொடுத்துச்சுவை குன்றாமல் ஒரு பேட்டி வழியாக உலக இலக்கியங்களை அறிமுகம் செய்ய வைத்திருக்கும் சமஸ் அவர்களுக்கும் இலக்கிய வரலாற்றில் அருஞ்சொல் பணியும் பேசப்படும் வாழ்த்துக்கள் /!!!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   1 year ago

யூடியூப் பேட்டிகள்/உரைகள் நீங்கலாக சாருவின் விரிவான பேட்டியை இப்பொழுதான் வாசிக்கிறேன். சமஸ் போன்ற ஒரு பத்திரிக்கையாளர் தொடுக்கையில் அதற்கு சமூக மதிப்பும் கூடிவிடுகிறது, அதாவது இலக்கியம் குறைவாகவும் இலக்கிய நுண்ணுணர்வுள்ளவரின் சமூக அவதானங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. எப்போதும்போல் சாரு இம்முறையும் தமிழ்ச்சமூகத்தின் சுரணையத் தீண்டியிருக்கிறார். பக்க வரைமுறை இன்றி வெளிவரும் இதுபோன்ற நேர்காணல்கள் முன்னர் பதாகை (நரோபா), தமிழ் மின்னிதழ் (சி. சரவணகார்த்திகேயன்) போன்றவற்றில் வெளிவந்தன. ஆனால் இதில் பேட்டி எடுப்பவர்-கொடுப்பவர் இருவருமே தட்டச்சு செய்திருப்பதும், பேட்டி கொடுப்பவரின் உழைப்பு அதிகமிருப்பதும், சில கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்திருப்பதும் மகிழ்வளிக்கிறது. இருவருக்கும் நன்றி.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   1 year ago

தமிழ்நாட்டில் எழுத்தாளர்களின் கருத்துக்கு உள்ள மரியாதை பற்றி சாரு சொல்லியிருப்பது உண்மைதான். மதுரை, திருநெல்வேலிக்கார ஆண்களின் வலிமை பற்றி அவர் சொன்ன கருத்தை ஒரு நடிகர் சொல்லியிருந்தால் தென்தமிழகமே கொந்தளித்திருக்காதா?

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சுவாரசியமான தேர்தல் களம் தயார்குஜராத் முதல்வர் மாற்றம்விபி சிங் சமஸ்போஃபர்ஸ் பீரங்கிஒகேனக்கல்தொழிற்சாலைஉத்தர பிரதேச தேர்தல்பகுத்தறிவுப் பாதைவிளிம்புசரியும் ஒட்டகங்களின் சந்தை மதிப்புவிஜயலட்சுமி பண்டிட்இளபுவ முகிலன் பேட்டிதமிழ் உரைநடையின் இரவல் கால்: ஆங்கிலம்காலை உணவுஉள்ளத்தைப் பேசுவோம்மாநில மொழிகள்ஒன்றிய நிதியமைச்சகம்விக்கிப்பீடியாபிராணர் – பிராமணரல்லாதோர் பிளவைக் கூர்மைப்படுத்துகடாடாசவால்மஹாராஷ்டிர அரசியல்பெட்ரோல்அஞ்சல் துறைகேட்கும் திறன்பி.சி.ஓ.எஸ்.சிறுநீர்க் கசிவுகோவிட் நோய் வரிநீரிழந்த உடல்திருவாரூர் தேர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!