கட்டுரை, விவசாயம், பொருளாதாரம், நிர்வாகம் 10 நிமிட வாசிப்பு

இந்திய வேளாண் சிக்கல் – மூன்றாவது வழி

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
09 Mar 2024, 5:00 am
1

ஞ்சாப், ஹரியானா மாநில உழவர்கள் 2024 பிப்ரவரி மாதத்தில் ஒரு போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். 23 வேளாண் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதை சட்டபூர்வமான உரிமையாக்க வேண்டும், வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த சூத்திரத்தின்படி விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை உழவர்களின் போராட்டக் குழு முன்வைக்கிறது. 

குறைந்தபட்சக் கொள்முதல் விலையை சட்டபூர்வமாக்க வேண்டும் என்னும் கோரிக்கை உழவர் நலனுக்கு எதிரானது என வாதிடுகிறார் பொருளியல் பேராசிரியர் அஷோக் குலாட்டி. அதேபோல எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த சூத்திரத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்தால், உணவுதானியங்களின் விலை 20% வரை அதிகரிக்கும். விலைவாசி உயர்ந்துவிடும் எனவும் எச்சரிக்கிறார்.

எல்லா வேளாண் விளைபொருட்களையும் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வது என்பது அரசின் மானிய பட்ஜெட்டை அதிகரிக்கும் எனச் சில அரசு ஆதரவுப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இவர்களில் பலர் வேளாண் துறையில் தனியார் முதலீடுகளை அனுமதிப்பதே வேளாண் துறையின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.

இரண்டு தரப்புகளும் முற்றிலும் எதிர்ரெதிர் வாதங்களைத் தீர்வுகளாக முன்வைக்கையில், இந்தக் கட்டுரை இந்த இரண்டு வாதங்களைத் தாண்டி மூன்றாவதாக ஒரு தீர்வை ஆராய முற்படுகிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

உணவு உற்பத்தியும் பால் உற்பத்தியும்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அண்மையில் 2024 - 2025க்கான தனது இடைக்கால நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தார். நிதிநிலை அறிக்கையில், 2,95,000 கோடி ரூபாய் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் பால் துறைக்கு ரூ.9,000 கோடி (3%) போக மீதி 97% வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்திய பால் உற்பத்தியாளர்கள் 2022 - 2023ஆம் ஆண்டில் 230 மில்லியன் டன் பாலை உற்பத்திசெய்திருந்தார்கள். அதே ஆண்டில், இந்த உணவு தானிய உற்பத்தியாளர்கள் 330 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்திசெய்திருந்தார்கள். பொருளாதார மதிப்பில் பால் துறை, உணவு தானியத்தைவிட அதிகம். இந்தியப் பொருளாதாரத்தில் 5% அளவுக்குப் பால் துறையின் பங்களிப்பு உள்ளது. இது 8 கோடி பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்கிறது. உணவு தானிய உற்பத்திசெய்யும் உழவர்களுக்கு வழங்கப்படுவதுபோல் பால் உற்பத்தியாளர்களுக்கு மானியங்கள் வழங்கப்படுவதில்லை. உணவு தானியங்களைப் போல குறைந்தபட்ச ஆதரவு விலையில் பால் அரசால் கொள்முதல் செய்யப்படுவதில்லை.

இப்படி எந்த அரசு ஆதரவும் இல்லையென்றபோதிலும், உணவு தானிய உற்பத்தியாளர்களைவிட, ஒப்பீட்டளவில், பால் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திக்கு ஓரளவு கட்டுபடியாகும் விலையை, சீராகப் பெறுகிறார்கள். 

பால் பொருட்களை நுகர்வோர் வாங்கும் விலையில், கிட்டத்தட்ட 80% மதிப்பு பால் உற்பத்தியாளர்களுக்கு இந்தியாவில் கொள்முதல் விலையாகக் கிடைக்கிறது. இது உலக அளவில் எந்த வேளாண் பொருட்களிலும் உற்பத்தியாளர்களுக்குக் கிடைப்பதில்லை. உலகின் மிகப் பெரும் பால் பண்ணைகள் இருக்கும் அமெரிக்காவில்கூட பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் தரும் விலையில் 30% அளவே தங்கள் பால் உற்பத்திக்குப் பெற்றுக்கொள்கிறார்கள்

இதை உணவு உற்பத்தித் துறையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மத்திய, மாநில அரசுகள் உணவு தானிய உற்பத்திக்குத் தேவையான இடுபொருட்களுக்கு (உரம், விதைகள்) மானியம் வழங்குகிறார்கள். பல மாநில அரசுகள் இலவச மின்சாரம் வழங்குகின்றன. அதன் பின்னர், உணவு தானியத்தைக் குறைந்தபட்ச ஆதார விலையில் அரசே கொள்முதல் செய்கிறது. ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி இதற்குச் செலவாகிறது.

இந்த மானியத்தை நிறுத்தினால், உணவு தானியங்களின் விலை பெருமளவில் வீழ்ச்சி அடைந்துவிடும் என்னும் பயம் அனைவரிடமும் உள்ளது. விலை வீழ்ந்தால், உழவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். இந்தப் பயத்திற்குக் காரணங்கள் உள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் அரசு, கிலோ 20 ரூபாய் என்னும் விலையில் நெல் கொள்முதல் செய்கையில், கொள்முதல் இல்லாத பிஹார் மாநிலத்தில், வெளிச் சந்தையில் நெல் கிலோ 10 - 12 ரூபாய்க்கு விற்கிறது.

நமது சாதனைகளும் படிப்பினைகளும்

இந்தியா, 1947இல் விடுதலை பெற்ற பின்னர் வேளாண்மையில் நிகழ்த்தப்பட்ட பெருஞ்சாதனைகள் பசுமைப் புரட்சியும், வெண்மைப் புரட்சியும் ஆகும். இந்தத் திட்டங்களின் வழியே, இந்தியா உற்பத்தியில் தன்னிறைவை அடைந்தது மட்டுமல்லாமல், உலகில் இரண்டாவது பெரும் உணவு தானிய உற்பத்தியாளராகவும், உலகின் முதலாவது பெரும் பால் உற்பத்தியாளராகவும் உருவெடுத்தது. இவையெல்லாம் மிகப் பெரும் சாதனைகள்.

ஆனால், இந்த இரண்டு திட்டங்களுக்கும் அடிப்படையில் ஒரு பெரும் வேற்றுமை உள்ளது. பசுமைப் புரட்சித் திட்டம் செயல்பட இன்றளவும் அரசு மானியம் தேவைப்படுகிறது. இதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் கோடியைச் செலவிடுகின்றன. ஆனால், வெண்மைப் புரட்சிக்கு எந்த மானியமும் தேவைப்படுவதில்லை.

பெரும்பாலான உணவு தானிய உற்பத்தியாளர்கள் பால் உற்பத்தியாளர்களாகவும் இருக்கிறார்கள். ஏன் உணவு தானியத்துக்கு மட்டும் இவ்வளவு மானியம் தேவைப்படுகிறது? அருண் மைரா என்னும் சிந்தனையாளர், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான தன் கட்டுரையில், உணவு தானிய உற்பத்தித் திட்டத்துக்கும் பால் உற்பத்தித் திட்டத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பசுமைப் புரட்சிக்கும் வெண்மைப் புரட்சிக்கும் என்ன வேறுபாடு? எனும் கட்டுரையில் விரிவாக அலசுகிறார்.  

பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சி திட்டங்கள் இரண்டுமே வெற்றிகரமான திட்டங்கள் என்றாலும், இரண்டின் குறிக்கோள்களும், அணுகுமுறைகளும் வேறு வேறாக இருந்தன என்பது அவரது முக்கியமான அவதானிப்பு. “பசுமைப் புரட்சியின் குறிக்கோள், நாட்டின் உணவு தானிய உற்பத்தியை அதிகரித்து, உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால், வெண்மைப் புரட்சியின் நோக்கமோ, சிறு பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதாக இருந்தது” என்கிறார் மைரா.

பசுமைப் புரட்சி, தொழில்நுட்பம், நீர்ப்பாசனக் கட்டமைப்பு, செயல்திறன் போன்றவற்றின் மூலம் அதிக உற்பத்தியைப் பெருக்குவதாக இருந்தது. ஆனால், வெண்மைப் புரட்சி என்பது அரசியல் தலைவர்களால் உந்தப்பட்ட ஒரு சமூகப் பொருளாதார அமைப்பு. அதன் அடிப்படை சமத்துவக் கொள்கைகளாலும், உற்பத்தியாளர்களுக்கு அதிக வருமானம் தர வேண்டும் என்னும் நோக்கங்களாலும் தொடங்கப்பட்டது. வெண்மைப் புரட்சித் திட்டச் செயல்பாட்டில், உழவர்களின் பங்களிப்போடு வணிக நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

மாறுபட்ட வணிகச் சங்கிலிகள்

ஜனநாயக வழிப்பட்ட பொருளாதார நிர்வாகம் என்றால் அந்த நிறுவனம் மக்களுடையதாக இருக்க வேண்டும், மக்களால் நிர்வகிக்கப்படுவதாக இருக்க வேண்டும், மக்களுக்கானதாகவே இருக்க வேண்டும். ஆனால், பசுமைப் புரட்சியில் உற்பத்தியைத் தாண்டி உழவர்களின் பங்களிப்பும் நிர்வாகப் பங்கேற்பும் இல்லை. அப்படியானால், வெண்மைப் புரட்சியின் வெற்றிக்கான இந்தக் காரணிகளை உணவு தானிய உற்பத்திக்கும் பொருத்தினால், உழவர்கள் வருமானம் உயருமா? 

பால், உணவு தானியம் இரண்டுமே ஒரே சூழலில் இருந்து உற்பத்தியாகிவந்தாலும் அவற்றின் வணிகச் சங்கிலிகள் வேறு வேறானவை. 2013ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இந்திய அரசுக்குப் பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்களுக்கு உணவு தானியத்தை இலவசமாக அளிக்க வேண்டும் என்னும் ஒரு கட்டாயம் இருக்கிறது. தவிரவும், தற்போதைய அரசு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

அதாவது, 80 கோடி மக்கள் என்பது இந்திய மக்கள்தொகையில் 57% ஆகும். இவ்வளவு பெரும் தொகை மக்களுக்கு உணவு தானியம் இலவசமாக அளிக்கப்படுகையில், வெளிச் சந்தையில் (Open Market) உணவு தானியத்துக்கான தேவை (demand) பெருமளவு குறைகிறது. இதனால், வெளிச் சந்தையில் உணவு தானியங்களின் விலை பெரும் வீழ்ச்சியை அடைகிறது.

கொள்கை வகுப்பாளர்களின் தடுமாற்றம் ஏன்?

குறைந்தபட்ச விலையில் கொள்முதல் என்னும் திட்டத்தைத் தொடங்கியபோது, அது உழவர்களை ஊக்குவித்து, உற்பத்தியைப் பெருக்கி, உணவுத் தேவையில் தன்னிறைவை அடைய வேண்டும் என்னும் இலக்குடன் தொடங்கப்பட்டது. ஆனால், இன்று நாட்டின் தேவைக்கு அதிகமான அளவு உணவு தானியம் உற்பத்தியாகும் நிலையில், தானியக் கொள்முதல் விலை வீழ்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது எனச் செய்யப்படுகிறது. இதன் விளைவாக, அரசின் இலவச உணவு தானிய திட்டங்களுக்குத் தேவைப்படும் அளவைவிட 2-3 மடங்கு அதிகமான உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. 

இது அரசை ஒரு சங்கடமான நிலையில் கொண்டு நிறுத்தியுள்ளது. அரசு 57% மக்களுக்கு இலவச உணவு வழங்குவதை நிறுத்தினால், வெளிச் சந்தையில் உணவு தானியங்களின் விலை ஏறும். ஆனால், அது ஏழ்மையில் இருக்கும் மக்களைப் பட்டினியில் கொண்டு தள்ளிவிடும். ஊட்டச்சத்துக் குறைபாடுகள் வருங்காலச் சந்ததிகளைப் பெருமளவு பாதிக்கும். அதேவேளையில், 57% மக்களுக்கு இலவச தானியங்களை வழங்கினால், வெளிச் சந்தையில் உணவு தானிய விலை வீழ்ச்சி ஏற்படும்.

அப்போது உழவர்களிடம் இருந்து உணவு தானியம் கொள்முதல் செய்வதை நிறுத்தினால், அவர்கள் வெளிச் சந்தையில் குறைந்த விலைக்கு உணவு தானியத்தை விற்று நஷ்டமடைவார்கள். அது இந்தியாவை, பெரும் ஊரகப் பொருளாதாரச் சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். எனவே, இரண்டையும் விட்டுவிட முடியாமல் அரசுகளும் கொள்கை வகுப்பாளர்களும் தடுமாறுகிறார்கள்.

மொத்தத்தில் உற்பத்தி, நுகர்வு என உணவு தானிய வணிகச் சங்கிலியின் இரு முனைகளிலும் மானியங்கள் கொடுக்கப்பட்டு, இந்திய உணவு தானியச் சந்தை சிதைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், உணவு தானிய உற்பத்தி என்பது உற்பத்தியாளருக்கு ஒருபோதும் லாபம் அளிக்கும் தொழிலாக இருக்காது.

ஆனால், பாலில் அப்படி மானியங்கள் இல்லை. வெளிச் சந்தையில் விலைகள் உற்பத்தி நுகர்வு போன்ற விஷயங்களை ஒட்டி இருக்கின்றன. இதிலும் அரசின் தலையீடுகள் சில மாநிலங்களில் இருந்தாலும், உணவு தானிய அளவுக்கு அதீதமான கட்டுப்பாடுகள் இல்லை. மானியங்கள் பெரிதாக இல்லை. இது தவிர, உணவுக்கும் பாலுக்கும் இன்னொரு பெரும் வேறுபாடு இருக்கிறது. 

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

பால் துறையின் வேறுபாடுகள்?

பால் துறையில், மிகப் பெரும் வணிக நிறுவனங்களான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. இந்த வணிக நிறுவனங்கள், உற்பத்தியாளர்களிடமிருந்து பாலைக் கொள்முதல் செய்து, பதப்படுத்தி நேரடியாக நுகர்வோரிடம் கொண்டுசேர்க்கின்றன. உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையில், லாப நோக்கம் கொண்ட வணிக நிறுவனங்கள் / இடைத்தரகர்கள் என எவரும் கிடையாது.

இதனால், உற்பத்தியாளர்களால், குறைந்த விலைக்குப் பால்பொருட்களை நுகர்வோருக்கு கொண்டுசேர்க்க முடிகிறது. உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர் வாங்கும் விலையில் 80% கிடைத்துவிடுகிறது.

ஆனால், உணவு தானிய வணிகச் சங்கிலியில், உற்பத்தியில் 15-16%த்தை அரசே உழவர்களிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து, ஏழைகளுக்கு இலவசமாக அளிக்கிறது. இதனால், வெளிச் சந்தையில் பெரும்பாலான சமயங்களில், அரசுக் கொள்முதல் விலைகளைவிட, உணவு தானியங்களின் விலை செயற்கையாக மிகக் குறைவாக உள்ளது. 15% அரசுக் கொள்முதல் போக மீதி உற்பத்தியை உழவர்கள் வெளிச் சந்தையில்தான் விற்க வேண்டியிருக்கிறது. 

இந்த வணிகச் சங்கிலியில், உழவர்கள் தவிர, வணிகர்கள் / பதப்படுத்தும் ஆலைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் என 2 முதல் 3 லாப நோக்கம் கொண்ட நிறுவனங்கள் உள்ளன. வெளிச் சந்தையில், இலவச அரிசி விநியோகத்தின் விளைவாக ஏற்கெனவே விலை குறைவாக இருக்கையில், இந்த வணிகச் சங்கிலியில் கூடுதலாக 2-3 லாப நோக்குள்ள இடைத்தரகர்கள் இருப்பது பெரும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த 2-3 இடைத்தரகர்கள் நிதி பலம் கொண்டவர்கள். 

சராசரியாக 2.5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு உழவர்கள் நிதி பலம் இல்லாதவர்கள். அவர்கள் சந்தையில், நிதிபலம் வாய்ந்த வணிகர்களை எதிர்கொண்டு, தங்கள் உற்பத்திக்குச் சரியான விலையை நிச்சயித்துப் பெறுவது என்பது நடக்காத காரியம். மேலும், இந்தச் சிறு உழவர்களினால், தங்கள் உற்பத்திக்கு நல்ல விலை வரட்டும் எனக் காத்திருக்கவும் முடியாது.

எனவே வேறு வழியின்றி, அறுவடை செய்தவுடன், சந்தையில் வணிகர்கள் நிச்சயிக்கும் விலைக்கு விற்றுச் செல்லும் அவலநிலையே பெரும்பாலும் இருக்கிறது. இங்கே கொள்முதல் செய்பவர்களிடமே நிதி பலம் அதிகமாக இருக்கிறது. எனவே, அவர்கள் விலையை நிச்சயிக்கிறார்கள். அதனால்தான், உணவு தானியங்களில், அரசுக் கொள்முதல் விலையைவிட, வெளிச் சந்தை விலைகள் பெரும்பாலான சமயங்களில் குறைவாக இருக்கின்றன.

போதாத வருமானம்

அரசு அளிக்கும் இலவச உணவு தானியங்களால், வெளிச் சந்தை விலைகள் குறைவாக இருக்கும் சூழலில், உணவு தானிய உற்பத்திச் சங்கிலியில் உற்பத்தியாளரைத் தாண்டி மேலும் 2-3 லாப நோக்குள்ள நிறுவனங்கள் இருக்கும் சூழலில், உற்பத்தியாளருக்கு மேம்பட்ட விலை கிடைப்பது சாத்தியமில்லை.

எனவே, உணவு தானிய உற்பத்தியாளருக்கு மேம்பட்ட விலை கிடைக்க வேண்டுமானால், பால் கூட்டுறவு வணிகச் சங்கிலியைப் போல உணவு தானிய உற்பத்தியாளர்களும், தங்கள் உற்பத்தியைத் தாங்களே பதப்படுத்தி நுகர்வோருக்கு நேரடியாகக் கொண்டுசெல்லும் வணிகச் சங்கிலியை உருவாக்குவதுதான் ஒரே வழி. இதன் மூலம் உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையில் இருக்கும் 2 - 3 லாப நோக்கம் கொண்ட வணிக நிறுவனங்கள் விலக்கப்பட்டுவிடுகிறார்கள். இதனால் மிச்சமாகும் லாபம், உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

உற்பத்தியாளர்களே நேரடியாகத் தங்கள் உற்பத்தியைப் பதப்படுத்தி, நுகர்வோருக்கு எடுத்துச் செல்லும் மாதிரியில், எந்த அளவுக்கு அவர்களுக்கு விலை மேம்பாடு கிடைக்கும்? இதைத் துல்லியமாகச் சொல்லுதல் கடினம் என்றாலும், உத்தேசமாக நீண்ட கால நோக்கில் அவர்களுக்கான விலை மேம்பாடு 25 - 30% வரை அதிகம் கிடைக்கலாம். எடுத்துக்காட்டாக, குறைந்தபட்சக் கொள்முதல் விலையாக நெல்லுக்கு இன்று ரூ.21 கிடைக்கிறது என வைத்துக்கொண்டால், உழவர்களே நெல்லைப் பதப்படுத்தி அரிசியாக்கி நுகர்வோருக்கு நேரடியாக அளிக்கும் மாதிரியில், கிலோவுக்கு 5 - 6 ரூபாய் வரை அதிகம் கிடைக்கலாம்.

சராசரியாக 2.5 ஏக்கர் வைத்திருக்கும், இரண்டு போகம் நெல் உற்பத்தி செய்யும் நெல் உற்பத்தியாளருக்கு ஆண்டுக்கு 45-50 ஆயிரம் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த மேம்பாடு முக்கியமானது எனினும் போதுமானதா எனில் போதாது என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த 50 - 60 ஆண்டுகளில், அரசு மற்றும் தனியார் துறைகளின் ஊதிய உயர்வை ஒப்பிடுகையில், உழவர்களின் வருமானம் மிக மிகக் குறைவாகவே உயர்ந்துள்ளது. எனவே, 25 - 30% வருமான மேம்பாடு என்பது நல்லது எனினும், போதாது என்பதே உண்மை.

உழவர் கூட்டுறவு நிறுவனங்களின் சிக்கல்கள்

உழவர் உற்பத்தி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் என்றாலே, அவற்றில் உள்ள அரசியல் தலையீடுகளே பெரிதாகப் பேசப்படுகின்றன. மராத்திய மாநிலத்தின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் எப்படி அரசியலர்களின் விளைநிலமாக உள்ளது, கூட்டுறவு வங்கிகளில் எப்படி அரசியலர்களின் தலையீடுகள் உள்ளன என்பது போன்ற பிரச்சினைகளை முன்வைத்து, கூட்டுறவு நிறுவனம் என்பதே நடத்த சாத்தியமில்லாத ஒன்று என பல திட்ட வடிவமைப்பாளர்கள் வாதிடுகிறார்கள்.

பல கூட்டுறவு நிறுவனங்களில் இந்தப் பிரச்சினைகள் உள்ளன என்பதும், அதனால் பல கூட்டுறவு நிறுவனங்கள் நஷ்டத்தில் முடிகின்றன என்பதும் உண்மைதான். ஆனால், அது கூட்டுறவுத் துறையைப் பற்றிய முழுமையான சித்திரம் அல்ல. எடுத்துக்காட்டாக, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இருப்பதும், கரும்புக்கு மத்திய அரசே கொள்முதல் விலையை நிர்ணயிப்பதும், கரும்பு உற்பத்தியாளர்களுக்கு ஒரு நல்ல விலையைத் தருகிறது. ஆனால், அதுபோன்ற குறைந்தபட்சப் பாதுகாப்புகூட இல்லாத பயிர்களில், வெளிச் சந்தை விலைகள் பல சமயங்களில் மிகவும் வீழ்ச்சி அடைந்து, உற்பத்தியாளர்கள் தெருக்களில் அவற்றைக் கொட்டிச் செல்வதைக் காண்கிறோம்.

இதன் காரணம் கூட்டுறவு நிறுவனம் என்பது சட்டப்படி உற்பத்தியாளர்களின் நிறுவனம். அது அவர்களின் நலனைக் காக்கும் நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும்.  ஆனால், வெளிச் சந்தையில் அப்படியில்லை. அங்கே நுகர்வோர் தேவையும், வணிகர்களின் நிதி பலமுமே விலைகளைத் தீர்மானிக்கின்றன. அங்கே உற்பத்தியாளர்களின் நலனை யாரும் யோசிப்பதில்லை. சந்தையின் இயல்பே அதுதான். 

கூட்டுறவு நிறுவனம் என்னும் ஜனநாயக அமைப்பு

1950ஆம் ஆண்டு நம் நாட்டுக்கான அரசமைப்புச் சட்டத்தை மக்களின் பிரதிநிதிகள், மக்களின் சார்பாக உருவாக்கி அதை அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டோம். நம் அரசமைப்புச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சம், அனைத்து மக்களும் சமம் என்னும் கருதுகோளும், வயதுவந்தவர்கள் அனைவருக்கும் தலா ஒரு வாக்கு என்னும் சம உரிமையும். 

இது மாபெரும் புரட்சிகரமான அடிப்படை மாற்றம். இதுவே, அரசுகளுக்கு மக்கள் நலனை முன்னிறுத்தும் செயல்திட்டங்களை வகுக்கும் கட்டாயத்தை உருவாக்கியது. மக்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்களித்து அவர்களுக்கான ஆட்சியை நிர்வாகத்தில் அமர்த்துகிறார்கள். அரசியல் கட்சிகள் வாக்களிக்கும் மக்களுக்குத் தேர்தல் வாக்குறுதிகள் வழங்குகிறார்கள். அவற்றில் சில நிறைவேற்றப்படுகின்றன. இது வாக்களிப்பு ஜனநாயகம் (electoral democracy).

இதன் அடுத்த நிலைதான் கூட்டுறவு நிறுவனங்கள் என்னும் ஜனநாயக அமைப்பு. இதில் மக்கள் சம உரிமைதாரர்களாக மாறி, தங்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தை, நிர்வாக அமைப்பை உருவாக்குகிறார்கள். இது பங்கேற்பு ஜனநாயகம் (Participatory Democracy).

வாக்களிப்பு ஜனநாயகத்தில் வாக்களித்த பின்னர், ஆட்சியில் அமரும் கட்சியின் செயல்பாடுகளை மக்கள் கட்டுப்படுத்த இயலாது. ஆட்சியில் அமரும் கட்சியின் செயல்பாடுகள் சரியில்லை, எனில் அடுத்த தேர்தலில் அதை ஆட்சியில் இருந்தது அகற்ற முடியும். அவ்வளவே!

ஆனால், கூட்டுறவு நிறுவனம் போன்ற பங்கேற்பு ஜனநாயகத்தில், உறுப்பினர்கள் தங்கள் பங்கேற்பின் மூலம் நிறுவனத்தின் செயல்பாடுகளை மாற்ற முடியும். பயன் பெற முடியும். இது ஒரு செயல்திறன் மிக்க வாய்ப்பு.

கூட்டுறவு அமைப்பு என்பது, மக்கள் இணைந்து, மொத்த சமூகமும் மேம்பட உருவாக்கப்பட்ட நிறுவன முறை. பால், சர்க்கரை, வங்கி, நெசவு, நுகர்பொருள் விற்பனை என்னும் தளங்களில் இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் கூட்டுறவு நிறுவனங்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள பங்கு இன்னும் மிகச் சரியாக கொள்கை வடிவமைப்பு தளங்களில், மக்கள் மத்தியில் புரிந்துகொள்ளப்படவில்லை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

பசுமைப் புரட்சியின் முகம்

ஆர்.ராமகுமார் 30 Sep 2023

கொள்கை வகுப்பும், அரசின் செயல்பாடுகளும்

அரசுக் கொள்கை வகுப்பாளர்களில் இன்று பலரும் கொள்கைகள், வரிவிதிப்புகள், சலுகைகள் – இவற்றோடு அரசு நின்றுவிட வேண்டும் என்னும் மனநிலையில் இருக்கிறார்கள். மானியங்கள் தர வேண்டுமெனில், நேராக பயனாளிகளில் வங்கிக் கணக்கில் செலுத்திவிடுவதோடு அரசின் கடமை முடிந்துவிட வேண்டும் என்னும் மனநிலையை நாம் பார்க்க நேரிடுகிறது. 

இந்த அணுகுமுறை பெரும் தொழில்களுக்குச் சரியாக வரும். அங்கே அரசின் தொந்தரவுகள், தலையீடுகள் இல்லாமல் சாதகமான அரசுக் கொள்கைகள் இருந்தாலே தொழில்கள் ஆரோக்கியமாக வளர்ந்துவிடும். ஏனெனில், அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழில்முனைவோருக்குத் தொழிலில் உற்பத்திக் கட்டமைப்பை உருவாக்க, உற்பத்தியைச் சந்தைப்படுத்தும் நிறுவனத்தை நடத்தத் தேவையான நிதியாதாரம் உண்டு. ஒருவேளை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளும் திறனும் உண்டு. 

ஆனால் நுண்தொழில்களான வேளாண்மை, பால் உற்பத்தி, நெசவு போன்ற துறைகளில் அதன் உற்பத்தியாளர்கள் நிதியாதாரம் கொஞ்சமும் இல்லாதவர்கள். அவர்களால் உற்பத்திக்குத் தேவையான முதலீடு செய்வதே மிகக் கடினம் என்னும் நிலையே உள்ளது. அவர்களால் மதிப்புக் கூட்டும் உற்பத்தி, சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் அவர்களால் ஒருபோதும் முதலீடு செய்ய முடியாது. இங்கே அரசின் கொள்கை ஆதரவு மட்டுமே போதாது. அரசு களத்தில் இறங்கி, உற்பத்தியாளர்களுக்கான பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் போன்ற தளங்களில் தேவையான முதலீடுகளைச் செய்து, அவற்றை வெற்றிகரமாக நடத்தியே ஆக வேண்டும்.

இதை அரசே செய்யும்போது, அதற்குக் கூடுதல் பொறுப்புகள் உருவாகிறது. இந்த இடத்தில்தான் கூட்டுறவு நிறுவன அமைப்புமுறை கை கொடுக்கிறது. அரசு ஆதரவுடன் ஏற்படுத்தப்படும் இந்தக் கூட்டுறவு நிறுவனமுறைகள், அரசுக்கு அதிக நிதி, நிர்வாக பாரங்கள் இல்லாமல், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் நன்மை செய்ய முடிகிறது. தமிழ்நாட்டில் பால் (ஆவின்), நெசவு (கோ ஆப்டெக்ஸ், காதி கிராம நிறுவனங்கள்), நுகர்வு (சிந்தாமணி, அமுதம்), போன்ற வணிக நிறுவனங்கள் மிக வெற்றிகரமான உதாரணங்கள். இவை, பல லட்சம் நுண் உற்பத்தியாளர்களுக்கும், ஏழை மக்களுக்கும் பயன் தருவனவாக உள்ளன.

எனவே, கூட்டுறவு என்றாலே அரசியல் தலையீடு, நஷ்டம் எனப் பொதுப்புத்தியில் இருக்கும் உண்மை போன்ற செய்திகளை (factoids) விலக்கிவிட்டு, அந்த நிறுவனத்தின் உண்மையான சாத்தியங்களை அறிந்துகொண்டு அவற்றை சமூக நலனுக்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்க வேண்டும். அவற்றின் நிர்வாகத்தில், அரசு தலையீடுகளை எப்படிக் குறைத்து அவற்றை வெற்றிகரமாக மாற்றலாம் என்பதற்கான புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

கூடுதல் வருமானத்தை எப்படி உருவாக்குவது?

இதில் 1960ஆம் ஆண்டு தியோடர் லெவி என்பவர் ‘வணிகத்தில் குறுகிய பார்வை’ (Marketing Myopia) என்னும் புகழ்பெற்ற கட்டுரை ஒன்றை எழுதினார். ஒரு நிறுவனம் தன் குறிக்கோள்களைக் குறுகியதாக சுருக்கிக்கொள்வது நீண்ட கால நோக்கில் ஆபத்தானது என்பதைச் சொல்லும் கட்டுரை.

அந்தக் கட்டுரையில், அப்படிக் குறுகிய வணிக நோக்கத்தினால் ஆபத்தில் சிக்கிக்கொண்ட பல நிறுவனங்களைச் சுட்டுகிறார். அதில் முக்கியமாக, ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களைச் சுட்டுகிறார். 1950 - 1960களில் பல ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் மூழ்கின. காரணம் என்னவெனில், அப்போது புதிதாக எழுந்துவந்த தொலைக்காட்சித் துறை.

மக்கள் சினிமா பார்க்க தியேட்டர்களுக்கு வருவதைக் குறைத்துக்கொண்டு, வீட்டிலேயே தொலைக்காட்சியை அதிகம் பார்க்கத் தொடங்கினார்கள். இதன் விளைவாக திரைப்படங்களுக்கான வணிகம் குறைந்து, திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் மூழ்கின. அந்த வணிக நிறுவனங்கள், திரைப்படங்கள் தயாரிப்பதுதான் நம் தொழில் என்னும் குறுகிய வணிக நோக்கத்தை விடுத்து, கேளிக்கைத் தொழில் எனத் தங்கள் வணிக நோக்கைக் கொஞ்சம் விசாலமாக வைத்திருந்தால், தொலைக்காட்சித் தொழில் கேளிக்கையைப் புதிய வழியில் தருவதை உணர்ந்து, தங்கள் தொழிலின் குவிமையத்தை மாற்றிக்கொண்டு தொலைக்காட்சித் தொழிலில் இறங்கியிருப்பார்கள்.

சினிமா நிறுவனங்களும் நஷ்டத்தில் சென்றிருக்காது என்பது தியோடர் லெவி முன்வைக்கும் கருத்து. தமிழ்நாட்டிலும் இதுவே நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். ‘சன் டீவி’ போன்ற புதிய நிறுவனங்கள் எழுந்துவரும்போது, ஏவிஎம் போன்ற மரபான சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இந்தக் கருதுகோளைக் கொஞ்சம் வேளாண்மைக்குப் பொருத்திப் பார்த்தால், நமக்குப் புதிய வெளிச்சங்கள் கிடைக்கும். உழவர் ஏன் தன் நிலத்தில் வேளாண்மை மட்டுமே செய்ய வேண்டும்? என்று ஒரு கேள்வியை முன்வைத்து யோசித்தால், வேளாண்மையில் கூடுதல் வருமானம் வரும் புதிய வழிகள் தென்படலாம்.

புதிய வழிகளுல் ஒன்று

அவற்றுள் ஒன்று உழவர் சூரிய ஒளி உற்பத்திக் கூட்டுறவுகள் வழியே கூடுதல் வருமானம் ஈட்டுவது. குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள டுண்டி கிராமத்தில், பன்னாட்டு நீர்வள மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் துஷார் ஷா, ஒரு பரிசோதனையை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார்

டுண்டி கிராமத்தின் 6 உழவர்கள் ஒன்றிணைந்து, தங்கள் நிலத்தில் 1000 - 1500 சதுர அடி அளவில் சூரிய ஒளி மின் உற்பத்திக் கலங்களை நிறுவி உள்ளார்கள். தங்கள் விவசாயத்துக்குத் தேவையான மின்சாரம் போக மீதத்தை மின் பகிர்மானக் கட்டமைப்புக்குக் கொடுத்து ஆண்டுக்கு ரூ.60 - 70 ஆயிரம் வரை கூடுதலாக வருமானம் ஈட்டி உள்ளார்கள். அவர்களில் பலரது வருமானம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

  1. உழவர்களுக்கு மின்சாரம் பகலில் கிடைக்கிறது.
  2. மின்சார உற்பத்தியின் முக்கியமான பகுதி உற்பத்திசெய்யும் இடத்திலேயே நுகரப்படுவதால், மின் பகிர்மானத்தின் முக்கிய பிரச்சினையான பகிர்மான நஷ்டம் இல்லாமல் போகிறது.
  3. அரசுக்கு இலவச மின்சார மானியம் கொடுக்கும் சுமை இல்லாமல் போகிறது.
  4. உழவர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இது நிலையான வருமானம். வழக்கமாக விவசாயத்தில் இருப்பது போன்ற வறட்சி, பூச்சி, நோய்கள் என்னும் எந்த ஆபத்தும் இல்லாத வருமானம்.
  5. பெரும் சூரிய ஒளி மின் திட்டங்கள் போலில்லாமல், நிலம் வீணாவது தடுக்கப்படுகிறது. சூரிய மின் தகடுகளுக்குக் கீழே நிழலில் விளையும் பயிர்களைப் பயிர்செய்துகொள்ள முடியும்.
  6. இது சுற்றுச்சூழலைப் பாதிக்காத மின் உற்பத்தி.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

உழவர் எழுக!

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy 22 Sep 2021

தேவை கட்டமைப்பு மாற்றம்

உழவர் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்ற மிக முக்கியமாகத் தேவைப்படும் மாற்றம் என்பது மின்பகிர்மானக் கட்டமைப்பில் தேவைப்படும் மாற்றமாகும்.

தற்போது இந்தியாவில் மின் உற்பத்தி என்பது மையப்படுத்தப்பட்டுள்ள ஒன்றாகும். ஒரு மாநிலத்தில் 10 - 12 பெரும் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டு, சில கோடி நுகர்வோரைச் சென்று அடைகிறது. நமது மின்சாரப் பகிர்வுக் கட்டுமானம் இதற்கேற்றவாறு உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், உழவர் மின் உற்பத்தித் திட்டத்தில், மின் உற்பத்தி உழவர்கள் நிலங்களில் நடக்கும். அந்த மின்சாரம் உழவர்களின் உபயோகம் போக, அருகிலுள்ள நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும். அதைத் தாண்டிய உபரிதான் பெரும் மின்பகிர்வு கட்டுமானத்துக்குச் செல்லும். மையப்படுத்தாத உற்பத்தி, உள்ளூர் நுகர்வு அதன் உபரி வெளியே செல்லும் என்னும் வகையில் மின் பகிர்வுக்கட்டுமானம் மாற்றியமைக்கப்பட வேண்டும். 

இந்தக் கட்டமைப்பு மாற்றத்தை உருவாக்குவதில் உள்ள சிரமங்களைத்தான் முதலில் திட்ட வடிவமைப்பாளர்களும், அரசு அதிகாரிகளும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் சுட்டிக்காட்டி தடைகளைப் போட முயல்வார்கள்.

வெற்றிகரமான வங்கிக் கட்டமைப்பு மாற்றம்

இந்தியாவில் வங்கிகள், 1969ஆம் ஆண்டு தேசியமயமாவதற்கு முன்பு 8,200 வங்கிகள் இருந்தன. அவை பெரும்பாலும் நகர்ப்புறங்களில் அமைந்திருந்தன. மொத்த வங்கிக் கடனில், வேளாண்மைக்குக் கொடுக்கப்பட்ட கடன் 2.2% மட்டுமே. சிறுதொழில்களுக்குக்குக் கடன் பெறுவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. மக்கள், குறிப்பாக ஊரக மக்கள் தங்கள் சேமிப்புகளைப் பாதுகாப்பில்லாத வழிகளில் வைத்திருந்தார்கள். வங்கிகள் திவாலாவது மிகச் சாதாரண விஷயமாக இருந்தது.

ஆனால், வங்கிகள் தேசியமயமானதன் பின்னர், கிராமப்புறங்களில் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டன. வேளாண்மையும், சிறுதொழில்களும் முதன்மைப்படுத்தப்பட்டு அவைகளுக்கு அதிகமாகக் கடன் கொடுக்க இலக்குகள் தரப்பட்டன. 1980களில் கிட்டத்தட்ட 40% வங்கிக் கடன்கள் வேளாண்மைக்கு முன்னுரிமைக் கடன்களாக வழங்கப்பட்டன. அரசு வங்கிகள் என்பதால் மூழ்கிப்போகும் என்னும் பயமில்லாமல், அனைத்து மக்களும் வங்கிகளில் சேமிக்கத் தொடங்கினார்கள்.  அந்தச் சேமிப்பு திரண்டெழுந்து இந்திய தொழில் துறைக்கான முதலீட்டை வழங்கியது. இன்று உலகிலேயே மிக அதிகமான வங்கிக் கிளைகளைக் கொண்ட நாடு இந்தியாதான்.

இந்தக் கட்டமைப்பு மாற்றம் இந்தியாவின் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சித் திட்டங்களுக்குப் பெரும் உந்துசக்தியாக இருந்தது. இதுபோன்ற கடன் வசதிகள் இல்லாத காலத்தில், உழவர்கள் அதீத வட்டி வாங்கும் உள்ளூர் கந்துவட்டிக்காரர்களையே நம்பிருந்தார்கள். அதீத வட்டி என்னும் சுமையினால் உழவர்கள் பாதிக்கப்படுவதை இந்தக் கட்டமைப்பு மாற்றம் பெருமளவு ஒழித்தது. 

மாற்றத்துக்குச் சரியான நேரம்!

உழவர்கள் மின் உற்பத்தித் திட்டம் என்பது அப்படி ஒரு கட்டமைப்பு மாற்றத் திட்டம். இதனால், உழவர் வருமானம் பெருகும். அரசுக்கான, மின் மானிய பாரம் குறையும். சுற்றுச்சூழல் மாசு குறையும். இத்துடன், உழவர் உற்பத்திக் கூட்டுறவு நிறுவனங்களும் உருவாக்கப்பட்டால், உழவர்கள் தங்கள் வணிகத்தைத் தாங்களே கவனித்துக்கொள்வார்கள். மானியங்கள் குறையும். தேவைக்கு அதிகமாக உணவு தானியத்தைக் கொள்முதல் செய்து கிடங்குகளில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. 

இந்த இரண்டு வழிகளும் ஒருங்கே செயல்படுத்தப்பட்டால், உழவர்களின் வருமானம் உண்மையாகவே இரட்டிப்பாகும். இந்தியாவின் 50% மக்கள் வேளாண்மையை நம்பியிருக்கிறார்கள். ஆனால், மொத்தப் பொருளாதார உற்பத்தி மதிப்பில் 15% மட்டுமே அவர்கள் பங்களிப்பாக இருக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும், அந்தப் பங்களிப்பு மதிப்பை அதிகரிக்க உதவும்.

ஊரகப் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியைக் கொண்டுவரும். ஊரகக் கல்வி, சுகாதாரம் பெருமளவு மேம்படும். ஊரக ஏழைகள், முறைசார் பொருளாதாரத்துடன் இணைவார்கள். அவர்களது நுகர்வு, முறைசார் பொருளாதார உற்பத்திக்கான சந்தையாக மாறும். அது மொத்த பொருளாதாரத்தையும் முன்னெடுத்துச் செல்லும் உந்து சக்தியாக இருக்கும். 

இந்தியா, 1991இல் அந்நியச் செலாவணிச் சிக்கலில் மாட்டிக்கொண்டது. அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, அன்றைய அரசு நிதி மற்றும் தொழில் துறைக் கொள்கைகளில் சீர்திருத்தம் கொண்டுவந்து இந்தியா தொடர்ந்து உயர் வளர்ச்சிப் பாதையில் செல்ல வழிவகுத்தது. 2020ஆம் ஆண்டின் உழவர் போராட்டமும், 2024 பிப்ரவரி மாதம் உழவர்கள் அறிவித்திருக்கும் போராட்டமும் அப்படி ஒரு சரித்திர வாய்ப்பை நமக்கு நல்கியிருக்கிறது.

வேளாண்மையின் அணுகுமுறையை மாற்றியமைத்து, வேளாண் வருமானத்தை அதிகரிக்கும் மாற்றங்களை, திட்டங்களை உருவாக்கி உழவர்களின் பங்கேற்புடன் அதைச் செய்து முடிக்க இது ஒரு பொன்னான தருணம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

பொருளாதார நிபுணர்களும் உண்மை போன்ற தகவல்களும்
விவசாயிகள் போராட்டம்: இரு தரப்பின் பிரச்சினைகள் என்ன?
விவசாயிகள் போராட்டம் ஏன் முக்கியமானது?
காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள தேர்தல் ஆயுதம்!
இந்திய வேளாண்மைக்குத் தேவை புதிய கொள்கை
நாட்டை திவாலாக்கிவிடுமா கு.ஆ.வி. நிர்ணயம்?
ஆள்வோரின் ஆணவத்துக்குக் கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி
மோடியின் அமெரிக்கப் பயணத்தின் பின்விளைவுகள்
மோடி பயணத்தின் பேசப்படாத கதைகள்
விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை தேவையா?
பசுமைப் புரட்சிக்கும் வெண்மைப் புரட்சிக்கும் என்ன வேறுபாடு?
நடந்தது பேராசைப் புரட்சி: எம்.எஸ்.சுவாமிநாதன் பேட்டி
பசுமைப் புரட்சியின் முகம்
உழவர் எழுக!
விவசாயிகளுக்கான சூரிய மின்சாரம்: துஷார் ஷா பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


3


செரட்டோனின்ஆர்வம் இல்லாத வேலைஎதிர்புரட்சிஅதிமுகவேலையில் பரிமளிப்புஅமைச்சர்சந்தையில் சுவிசேஷம்தேசிய எழுத்தறிவு அறக்கட்டளைபிற்படுத்தப்பட்டோர்பன்மைத்துவ நாயகர்தன்னிலைபாலஸ்தீனம்சிறை தண்டனைஐரோப்பிய நாடுகள்உயிர்த் திரவம்சைவம்போரும் உளவியலும்இடதுசாரிகளுக்குத் தேவை புதிய சிந்தனை!மின்வெட்டுஅரசியல் பழகு370ஆம் அரசியல் சட்டப் பிரிவு நீக்கம்சமூக நலப் பாதுகாப்புதனிப்பாடல் திரட்டுராஜாஜிவி.ரமணி கட்டுரைதிருநெல்வேலி அரசு மருத்துவமனைஇந்தியப் பொருளாதாரம்உயர் நீதிமன்ற தீர்ப்புநாடாளுமன்ற உறுப்பினர்வ.உ.சி. வாழ்க்கை வரலாறு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!